சிறுகதைகள்

டிடாட்டு  னக்கு  னக்கு – செல்வசாமியன்  

சிறுகதை | வாசகசாலை

       றையின் மெல்லிய இருளுக்குள் ஊதுபத்தியின் புகையைப்போல பரவிய கொட்டுச்சத்தம், ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த சேதுவின் காதுகளைப் போய்த் தொட்டது. அவன், கோழி இறகால் காதுக்குள் துளவியதுபோல சிலிர்த்துக்கொண்டு  எழுந்தான். கண்களைக் கசக்கியபடி இமைகளைத் திறந்தான். மூடப்பட்டிருந்த ஜன்னலில் பிளேடால் கோடு கீறியதுபோல் இருந்த  இடுக்கின் வழியே கருக்கலின் வெளிச்சம் கசிந்துகொண்டிருந்தது.  எழுந்து சென்று ஜன்னல் கதவுகளைத் திறந்தான். மென்மையாக ஒலித்துக்கொண்டிருந்த கொட்டுச்சத்தம் உரக்கக் கேட்டது. இரண்டு கைகளையும் அணை கட்டுவதுபோல் விரித்து… கண்களை மூடி…  தலையை லேசாக உயர்த்தி… நீளமாக சுவாசித்தான். காற்றோடு சேர்ந்து கொட்டுச்சத்தமும் அவனுக்குள் தீயாய்ப் பரவியது. அப்போது அவன் உதடு, “செத்துப்பொயித்துட தூக்குடா தூக்குடா… செத்துப்பொயித்துடா  தூக்குடா தூக்குடா…” என்று பறையின் தாளத்திற்கேற்ப முணுமுணுக்கத் தொடங்கியது.

 

சேது, பறையிசையைக் கேட்கும்போதெல்லாம்  தன்னை மறக்கத் தொடங்கினான். அவனுடைய கால்கள் அவனுக்கே தெரியாமல் ஆட்டத்தில் குதித்திறங்கின. அமைதியான  எறும்பின்  வரிசையில் துரும்பைப் போட்டது போல சீரான இரத்த ஓட்டத்தில் கலவரங்கள் உண்டாயின. நரம்புகளெல்லாம் முறுக்கிக்கொண்டு நிமிர்ந்தெழுந்தன. சேது தன்னிலை உணர்ந்து வெளியே தெரியாமல் கட்டுப்படுத்தினான். அப்படியே அந்த இசையை முழுதாக உள்வாங்கி தனக்குள் தேக்கி வைத்தான். வாய்ப்புக் கிட்டும்போது, கல்லூரியின் வகுப்பறை மேஜையில் நண்பர்கள் சூழ அந்த இசையை  இறக்கி வைப்பான். மாணவ நட்புகள் அவனை உற்சாகப்படுத்தி வெறியேற்றுவார்கள். ஆனால், அவனுக்கு அதெல்லாம் போதாது.  பறையில் வாசிக்க வேண்டும், பறையில் இருந்து எழும் இசைதான் உடம்பில் தீப்பிடிக்கவைக்கும்  என்பான். பறையை முறையாக கற்றுக்கொண்டு, காலில் சலங்கை கட்டி, ஆட்டத்துடன் வாசித்தால் எப்படியிருக்கும் தெரியுமா என்று தனக்குள் சொல்லிக்கொள்வான். அந்த வார்த்தைகள் அவனுக்குள் சுரந்து சுரந்து ஒரு கட்டத்தில்  தலையில்  பித்தேறி நின்றது.

 

பனையிலையில் கூரை வேய்ந்திருந்த குடிலின் முன்பு சேது மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கியபோது, கயிற்றுக் கட்டிலில் கால்களை நீட்டி அமர்ந்திருந்த கருப்பையன், ஆட்டுக்குட்டிக்கு புட்டிப்பால் கொடுத்துக்கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளின் அதிர்ந்த குரல் அவர் கவனத்தை ஈர்க்கவில்லை. குட்டிதான் மிடறு விழுங்குவதை நிறுத்தி அவனைத் திரும்பிப் பார்த்தது. வெயில் தின்றது போக மிச்சமிருந்த உடம்பிற்கு வேப்பெண்ணெய் தேய்த்திருந்தார். அவரின் கால்கள் முழங்காலுக்கு கீழே அடைப்புக்குறியைப் போல வளைந்திருந்தன.  சேது, அவர் அருகில் வந்து பவ்யமாக, “அய்யா..” என்று  அழைத்தான். அவர் மெதுவாக தலையைத் திருப்பி அவனைப் பார்த்தார். இமைகளை சுருக்கினார். அவன், “அய்யா, நான் தப்படிச்சு பழகனும்.. கத்துத் தருவியளா..?” என்றான். அவர், மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி நடுங்கிய குரலில், “நீ யாரூட்டு புள்ளப்பா..?” என்றார்.  சேது, தன்னைப் பற்றி விலாவாரியாகச் சொல்லி இன்னாரென்று புரிய வைத்ததும், “பொடுசா, சேதியக் கேட்டியா… காடவராயரு பேரனுக்கு தப்படிக்கனுமாம்..!” என்று வெற்றிலை எச்சில் தெறிக்க சிரித்தார். குடக்கல்லில் ஊற வைத்திருந்த புளிய விதைகளை ஆட்டிக்கொண்டிருந்த அவர் மனைவி பொடுவம்மாள் கிண்டலாக, “கொய்யாக் கொல்லையில அணிப்பிள்ளைக வெரட்டவா இருக்கும்..  சொல்லிதாங்குடுங்க..”  என்று பதிலுக்கு சிரித்தது. “அதுசரி..  அணிப்பிள்ளைக வெரட்றதுக்கு  தப்பு எதுக்கு..  தகரடப்பா பத்தாது..?”  என்று திரும்பியவர், சேதுவை ஆழமாகப் பார்த்து நிதானமாக  “நீங்கள்லாம் தப்பத் தொடக்கூடாதுய்யா..   நீங்க கும்புடுற சாமிக்கு ஆவாது..” என்றார். அவர் இது போன்றுதான் பதில் கூறுவார் என்று சேது முன்பே யூகித்திருந்ததால், பதில் எதுவும் பேசாமல் வண்டியை விருட்டென்று கிளப்பிக்கொண்டு போனான்.

 

குடிலின் பின்புறமிருந்த இலந்தை மரத்தடியில்,  ஆட்டுத்தோலை விசுவாக இழுத்து  ஆணி அடித்து, அதில் அரைத்து வைத்திருந்த புளிய விதைகளை அள்ளிப் பூசிக்கொண்டிருந்தார் கருப்பையன். அப்போது, வாசல்பக்கம் தப்புச் சத்தம் கேட்கவே,  கையில் இருந்ததை அப்படியே போட்டுவிட்டு அந்தப்பக்கம் போனார். அங்கு சேது, கைக்கு வந்தபடி தப்பை தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தான். “இதென்ன கூத்தாருக்கு… கள்ளோட்டு புள்ளைக்கு கிறுக்கு கிறுக்கு புடிச்சுப்போச்சா… இந்தாய்யா தம்பி… நிறுத்துய்யா நிறுத்து…” என்று குறுக்கே விழுந்து தடுத்தார்.  அவன், “நீங்க தப்படிக்க கத்துத் தர்றன்னு சொல்லுங்க.. அப்பதான் நிறுத்துவேன்..” என்று தட்டிக்கொண்டே இருந்தான்.  கருப்பையாவிற்கு தர்மசங்கடமாக இருந்தது.  அவனது பிடிவாதமும் பறையின் கதறலும் அவரை அப்போதைக்கு இணங்கச் செய்தது.  “சரிய்யா, நீ சொல்றபடிக்கு செய்றன்… நீ தட்டுறத நிப்பாட்டு…” என்றார்.

அவன், நினைத்ததை சாதித்துவிட்டதுபோல் நிறுத்தற்குறிக்கான தாளத்தை ஓங்கி அடித்து நிறுத்தினான்.  அவர் அழுத்தமாக அவன் முகத்தைப் பார்த்து, “நான் சொல்லித்தாறேன்..  ஆனா, அதுக்கு முன்னாடி நாங்கேக்குறதுக்கு பதில சொல்லுங்க.. நீங்க தப்பு கத்துக்கிட்டு என்னா செய்யப்போறிய..?”  கருப்பையாவின் கேள்விக்கு சேதுவிடம் பதில் இல்லை. ஆனால், அதைக் கேட்டதும் சேதுவுக்கு ஏதோ ஒரு உணர்வு  சட்டென்று குடையை விரித்ததுபோல உள்ளுக்குள் மலர்ந்து, வார்த்தைகள் எழாதபடி காற்றடைத்தது, “அதான் எனக்கும் தெரியல.. ஆனா, கத்துக்கனும்..” என்றான். கருப்பையா அவனை அப்படியே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, வேகமாக வீட்டுக்குள் போய் கஞ்சி குடிக்கும் தட்டில் சூடத்தையேற்றியபடி வெளியே வந்தார். “பொது எடத்துல நாலு பேருக்கு முன்னாடி தப்ப தொடமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க..  சொல்லித் தர்றேன்..” என்றார்.  அவன்,  ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் சூடத்தை அணைத்தான்.

 

இலந்தை மரத்தடி. சேது கைகளைக் கட்டியபடி பார்த்துக்கொண்டிருக்க, கருப்பையா வைக்கோல் கூழத்தில் நெருப்பை மூட்டி பறையை காய வைத்தார்.  கடிகார முள் சுத்துவது போல் பறையை சுத்தவிட்டு குச்சியால் தட்டிக்கொண்டே இருந்தார். அவர் எதிர்பார்த்த, கண்ணாடி உடைவது போன்ற சத்தம் எழுந்ததும், காலால் மண்ணைத் தள்ளி நெருப்பை அணைத்துவிட்டு நிழலுக்குள் வந்தார்.  சேது ஆர்வமானான். அவர் பறையை  இடது தோளில் மாட்டி “நான் அடிக்கிறத நல்லா பாத்துக்கிடுங்க..” என்று வாசிக்க ஆரம்பித்தார். சேது அவர் வாசிப்பதை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.  வாசித்து முடித்தவர், “பாத்துக்கிட்டீங்கள்ல..  இந்தா, இப்ப நீங்க அடிங்க..” என்று பறையைக் கழற்றினார். அவன், “இப்படி பேருக்கு அடிச்சிக் காட்றதுக்கு நீங்க எதுக்கு..?  உங்க காலத்துல இப்படித்தான் நீங்க  கத்துக்கிட்டீங்களா..?  மொறைப்படி சொல்லிக்குடுங்க,  அதுக்குதான் உங்கள்ட்ட வந்துருக்கேன்..”  என்றான்.  கருப்பையாவுக்கு அவனை ஏமாற்ற முடியாது என்று தோன்றியது. யோசித்தவர், “அப்ப நாளைக்கு வாங்க.. வரும்போது வெறுங்கையோட வராம வெத்தலையும், பாக்கும் வாங்கிட்டு வாங்க..” என்றார்.

 

சேதுதான் பறையை அனலில் காய்ச்சினான். அதைப் பூரிப்பாய் பார்த்துக்கொண்டிருந்த கருப்பையா, “பதம் போதும்.. வாங்க..” என்றார். அவன் “போதும்னு எப்படி சொல்றீங்க..?” என்று கேட்டபடி, அவர் அருகில் வந்தான். “அத போகப்போக தெரிஞ்சுக்குவீங்க..” என்று, வெற்றிலையை மடித்து கடைவாயில் வைத்தபடி, “தப்ப நெருப்புல காச்சியாச்சுனா எக்காரணங்கொண்டும்  எறக்கி வைக்கக்கூடாது… துண்டு மாரி தோள்லதான் கெடக்கனும்..” என்று, அவருடைய பறையை எடுத்துக்கொண்டார். கையிலிருந்த தடிமனான குச்சியைக் காட்டி, “இதுக்குப் பேரு அடிக்குச்சி..” மெல்லிய குச்சியைக் காட்டி “இது சிம்புக்குச்சி..” என்று சொல்லி, இரண்டு குச்சிகளையும் சேர்த்து மேல் நெற்றியில் வைத்து வணங்கிவிட்டு, “எடுத்தாப்புல சாமிக்கொட்டுதான் கொட்டனும்.. சாமிக்கொட்டுக்கு டிடாட்டு னக்கு னக்கு’னு பேரு.. அடிக்குச்சியில டிடாட்டு, சிம்புகுச்சியில னக்கு னக்கு.. புரிஞ்சுதா..?” என்று வாசித்துக் காட்டி  “டிடாட்டு னக்கு னக்கு.. டிடாட்டு னக்கு னக்கு’னு மனசுக்குள்ளாற சொல்லிக்கிட்டே அடிக்கனும், அவ்ளதான்..  அடிங்க..” என்று வாசிக்க ஆரம்பித்தார். சேதுவும் மனசுக்குள் “டிடாட்டு னக்கு னக்கு.. டிடாட்டு னக்கு னக்கு..” என்று உச்சரித்துக்கொண்டே வாசித்தான். சேதுவுக்கு நன்கு பரிச்சயமான தாளம் என்பதால், அவனால் எளிதாக வாசிக்க முடிந்தது. ஆனால், அந்த தாளத்தை முதன்முறையாக பறையில் வாசிக்கிறான். அதுதான் அவனை என்னவோ செய்தது.  பறையிசை..! அதுவும் அவனே வாசித்து எழும் இசை… ஒருவித கிரக்கம்… மயிர்க்கால்கள் றெக்கைகளாக விடைத்துக்கொண்டன. பறையோடு சேர்ந்து பறப்பதுபோல் இருந்தது அவனுக்கு.

 

“சாமிக்கொட்டு, தண்டராக்கொட்டு, சம்பந்தக்கொட்டு, கேதக்கொட்டுனு ஏகப்பட்ட கொட்டு இருக்கு.. பொதுவான ஆளுகதான் ‘கொட்டு’ன்னு சொல்லுவாக.. செட்டு வச்சிருக்க ஆளுக “சொல்லு”னு சொல்லுவாக.. அதாவது சொற்கட்டு..!”

 

அவர் கூறியதைப் புரிந்துகொண்ட சேது ஆர்வமாக, “மொத்தமா எத்தன சொற்கட்டு இருக்கும்..?” என்று கேட்டான்.

 

“இத்தனதான்னு கணக்கு இல்ல.. சங்கீதத்துக்கு ராகம் மாரி, பறைக்கு சொல்லு..  இப்ப நீங்ககூட புதுசா ஒரு சொல்லக் கண்டுபிடிச்சு வாசிக்கலாம்.. அப்ப எங்க செட்டுல நாங்க முப்பத்தெட்டு சொல்லு வாசிச்சோம்..” என்று சொல்லி, “அடுத்தாப்புல, கேதக்கொட்டு… அத செத்துப்பொயித்துடா தூக்குடா தூக்குடா’னு சொல்லுவோம்..” என்று வாசித்துக் காட்டினார். சேது, ஒவ்வொரு சொல்லையும் மனசுக்குள் பதிந்துகொண்டான்.

 

ஒருநாள், “தாத்தா.. ரொம்ப நாளா ஒங்ககிட்ட கேக்கனும்னுட்டு இருந்தேன்.. மாட்டுத்தோலுலதான் தப்பு செய்வாங்கன்னு கேள்விபட்ருக்கேன்.. நீங்க ஆட்டுத்தோல்ல செய்றீங்க..?”

 

சிரித்தவர், “எல்லா ஆளுவலும் அப்பிடித்தான் நெனைச்சிக்கிட்டு இருக்காங்க.. பறைய மாட்டுத்தோலுல இல்ல, மனுசத் தோலுலகூட செய்யலாம்.. ஆனா, கெடைக்கனுமே… இதான் ஏம்பதிலு..” என்றார்.

 

அவன் “புரியலயே..” என்பதுபோல் பார்த்தான்.

 

“தப்புக்கு ஆட்டுத்தோலு, மாட்டுத்தோலெல்லாம் தெரியாது.. அதுக்கு தேவை ஒரு தோலு அவ்ளதான்… ஆளாளுக்கு ஒவ்வொன்னு சொல்லுவாக… பசுமாட்டுத் தோலுல தப்பு செஞ்சாத்தான் கின்னு கின்னுனு எசை வரும்பாக… என்னையக் கேட்டா, தோலுல ஒரு மசுரும் இல்ல… எல்லாம் நெருப்புலதான் இருக்கு..! மத்த வாத்தியங்களப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது.. ஆனா, பறைங்கறது நெருப்புல வாசிக்கிற வாத்தியம்.. நாம கேக்குற எசை நெருப்போட நாக்கு பாடுற எசை.. நான் சொல்றத நீங்க நம்பலன்னா காச்சாத தப்பு அடிச்சிப்பாருங்க.. கொளத்து தண்ணில தேங்கா மட்ட விழுவுற மாரி தொப்பு தொப்புனு கேட்கும்.. அதே தப்ப, நெருப்புல நல்லா பழுக்க காயவச்சு அடிங்க.. சும்மா கினீர் கினீருன்னு கேக்கும்.. அப்ப அந்த எசை எங்கேருந்து வந்துச்சு..? நெருப்புல இருந்துதான..! தப்புல நெருப்பு எரியிற வரைக்குந்தான் அந்த எசை கேக்கும்.. அணைஞ்சிருச்சின்னா கேக்காது.. பறைங்கறது நெருப்புல வாசிக்கிற வாத்தியம்யா..” என்றார்.

 

சேது கண்கள் விரிய கேட்டுக்கொண்டிருந்தான். பறையிசையை கேட்கும்போது தன் உடலில் தீப்பற்றிக்கொண்டது போல் உணர்வதற்கு இதுதான் காரணமோ என்று நினைத்தான்.

 

சேது, பத்து சொற்கட்டு வரை பழகியிருந்தான். ஆனால், வெறுமனே வாசிப்பது அவனுக்கு போதவில்லை. பறையை வாசித்துக்கொண்டே ஆட வேண்டும் என்று தோன்றியது. அந்த ஆசையை கருப்பையாவிடம் எப்படி சொல்வதென்று தயங்கினான். “தாத்தா” என்று அவரை அழைக்கத் தொடங்கியிருந்தாலும் மனதில் படுவதை தயங்காமல் கேட்கும் அளவிற்கு இன்னும் நெருக்கம் உண்டாகவில்லை. “கேட்பதா.. வேண்டாமா.. கேட்டால் என்ன சொல்வார்..? வாசிக்க கற்றுத்தருவதையும் நிறுத்திவிடுவாரா..?” என்று பலவாறு யோசித்து குழம்பிப்போனான். முழுக்கவனத்தையும் குவித்து வாசிக்க முடியாமல் தடுமாறினான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த கருப்பையன்,  ஒருகட்டத்தில்  “நிறுத்துங்க..  நிறுத்துங்க..  இது சுத்தப்பட்டு வராது..  ஒங்க மனசு குமியாம அங்க இங்கன்னு தாவுது..  என்னான்னு பாருங்க..”  என்று பறையைக் கழற்றி மரக்கிளையில் தொங்கவிட்டு,  வேர்கட்டையில் அமர்ந்தார்.  சோர்வான சேது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  “எனக்கு பறையாட்டம் ஆடனும்.. கத்து தாங்க..?” என்றான்.

 

“எங்க புள்ளையெல்லாம் தப்பக் கண்டாலே ஒக்காளிச்சிக்கிட்டு ஓடுதுவோ.. நீங்க என்னடான்னா பறயாட்டம் ஆடனுங்கிறிய்ய.. நெனச்சா சிரிப்பாத்தான் இருக்கு..”

 

“ஏன் சிரிப்பா இருக்கு..? பறைன்னா கேவலமா..?”

 

“யாரு சொன்னா கேவலம்னு..? பறைன்னா நெருப்பு..! பறைன்னா ‘பேசு’ன்னு அர்த்தம்.. பண்ட காலத்துல ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் சண்ட நடந்து முடிஞ்சதும், காயம்பட்டுக் கெடக்குற ஆளுகள்ல யாருக்கு உசுரு இருக்கு.. யாருக்கு உசுரு போச்சுன்னு தெரியாதாம்.. அப்ப என்ன பண்ணுவாகளாம்,  தப்ப  எடுத்துகிட்டு வந்து நல்லா பழுக்கக் காச்சி “பற.. பற”ன்னு சொல்லிக்கிட்டே அடிப்பாகளாம்.. பறயெசையக் கேட்டாத்தான் பொணம்கூட நரம்ப முறுக்கிக்கிட்டு எந்திருக்குமே.. அப்படி பறயெசைக் கேட்டும் முண்டமா கெடக்குறவங்கள அங்கயே போட்டு பொதைச்சிட்டு, மிச்சம் பேர அள்ளிக்கிட்டு வருவாகளாம்.. இது பொய்யா பொரளியான்னு தெரியாது… ஆனா, வழிவழியா சொல்லிட்டு வர்ற கத…  இது தெரியாமத்தான் எங்க புள்ளைங்க பறையன்னு சொல்றதுக்கே வெக்கப்படுதுவோ… நீங்கள்லாம் கள்ளோடுனு சொல்லிக்கிறதுக்கு கூச்சமாப்படுறிய..?” என்று சொல்லி, ஓரப்பார்வையால் கேலியாக சிரித்து, “வெறுஞ்சோத்துல ஏது ருசி.. கொழம்ப ஊத்தி பெசஞ்சாத்தானே திங்க முடியும்.. அதுமாரி, கொட்டோட  ஆட்டமும் சேந்தாத்தான் நச்சொரணையா இருக்கும்.. இருங்க வறேன்..” என்று வீட்டுக்குள் சென்று சலங்கையைக் கட்டிக்கொண்டு “சலக்.. சலக்” என்று நடந்து வந்தார். நடை  நிமிர்ந்திருந்தது. ஓங்கி அடித்தார்.

 

“ஜன்ஜன் னகுடி னக்கா.. ஜன்ஜன் னகுடி னக்கா..”

 

வளைந்த கால்கள் காற்றில் துள்ளின.   இடுப்பு நளினமாக வளைத்து நெளிந்தது.  சேது மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்.  ஒரு பாட்டம் ஆடி நிறுத்தினார்.  சலசலவென்று வேர்த்துக் கொட்டியது.

 

“எத்தன வருசமாச்சு தெரியுமா கால்ல சதங்க கட்டி.. அப்ப எங்க செட்டுல நான், வெள்ளக்குட்டி, மொட்டையமுட்டு, கலியன் மூனு பேருந்தான் பெரிய ஆட்டக்காரங்கெ..” மூச்சிறைத்தது. “நம்ம பகுதில எந்த ஊருல எழவுன்னாலும்  எங்க செட்டுதான்… கேதம் கட்டிக்கிற பொம்பளய கூட, அடிச்சிகிறத நிறுத்திப்புட்டு எங்களதான் வேடிக்க பாப்பாக… வெள்ளக்குட்டி மல்லாக்க படுத்துக்கிட்டு தப்படிச்சிக்கிட்டே சோடாக் குடிப்பான்… நான் எமையால குண்டூசி எடுப்பேன்… கலியன் ரூவாத்தாளு எடுப்பான்… ஒரே கொண்டாட்டமாத்தான் இருக்கும்… அவ்வளவு ஏன், ஒங்க அம்மாச்சி வீட்டு தாத்தா சேது கண்டியரு சாவுக்கு எங்க செட்டுதானே எறங்குச்சு… அப்ப உங்க அம்மா நெறமாசமா பொறந்தவூட்டுல இருந்துச்சு… நாங்க இந்தப் பக்கம் ஆடிக்கிட்டு இருக்கோம்… அந்த பக்கம் உங்க அம்மாவுக்கு இடுப்பு வலி எடுத்துருச்சு… பிளசரு காருக்கு சொல்லி அது வர்றதுக்குள்ள நீங்க அங்கய பொறந்துட்டியே..”

 

சேதுவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. தாத்தா இறந்த அன்றுதான் தான் பிறந்தோம் என்று சேதுவுக்கு விவரம் அறிந்த முதலே தெரியும். ஆனால், அன்று கருப்பையாவின் செட்டுதான் வாசித்தது என்கிற விசயம் தெரியாது. சேதுவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கருப்பைய்யா ஆடிய ஆட்டத்தை ஆடிப் பார்த்தான். அவருடைய நளினம் அவனுக்கு கைகூடவில்லை.

 

“என்னா ஆடுறீங்க..? காலு ஆடும்போது எதுக்கு, கைய்யி தப்படிக்கிறத நிறுத்துது…? களத்துல எறங்கிட்டா காலு ரெண்டும் சும்மா காத்துல பறக்க வேணாம்..?” என்று ஆடத் தொடங்கினார். சேதுவும் சேர்ந்துகொண்டான். அவனுக்கு காலில் சலங்கை கட்டிவிடலாம் என்று நம்பிக்கை பிறந்தது.

 

அந்த உற்சாகம், வீட்டில் சாப்பிட உட்கார்ந்திருக்கும்போது சாப்பாட்டுத்தட்டில் வாசிக்க வைத்தது.

 

“ஜன்ஜன் னகுடி னக்கா.. ஜன்ஜன் னகுடி னக்கா..”

 

அருகில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அவனுடைய அண்ணன், தட்டை சோற்றுடன் தூக்கி சுவற்றில் அடித்தான். சமையலறையில் இருந்த அம்மா ஓடிவந்தாள். “சோறு திங்கிற தட்டுல தப்படிக்கிறான் ஓம்புள்ள.. ஒழுங்கா இருக்கமாட்டானாம்மா.. ஊருக்காரங்கெ சொன்னப்பயே கைய்ய முறிச்சிருக்கணும்..  நாந்தான் நம்பல..” என்று கொதித்தான். உக்கிரமாக சேதுவைப் பார்த்த அம்மா, பின் குரலைத் தாழ்த்தி  “நாமப் போயி தப்பத் தொடலாமாய்யா.. சுத்தியிருக்கவுக பாத்தா என்ன நெனைப்பாக.. படிக்கிறபுள்ள நீ, ஒனக்கே தெரியவேணாம்..  போ, போயி குளிச்சிட்டு வந்து சாப்பிடு..” என்று சாப்பாட்டுத் தட்டை எடுத்துக்கொண்டாள். சேது, தாம்தான் பொது இடங்களில் வாசிக்கப்போவதில்லையே… பின்னெதற்கு இவர்கள் கோபப்படுகிறார்கள்..? என்று நினைத்தபடி தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டான்.

 

விடிந்ததும் கருப்பையன் வீட்டிற்குதான் போனான். சேது வந்திருப்பதைப் பார்த்த பொடுவம்மாள், “ஏங்க, தம்பி வந்துருக்கு பாருங்க..” என்று வேப்ப விதைகளை கிண்டிவிட்டாள்.  வீட்டினுள்ளே படுத்திருந்த கருப்பையன் எழுந்து வெளியே வந்து, சேதுவின் கையைப் பிடித்து இலந்தை மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

 

“ராத்திரி பாதிசொத்தியம் இருக்கும்.. உங்க அம்மாவும் அண்ணனும் வந்திருந்தாக..” என்று அமைதியானார். கண்கள் கலங்கியது.

 

சேது, “என்னா சொன்னாங்கே, கத்துத் தரக்கூடாதுன்னு சொன்னாங்கெளா..?” என்று குரலை உயர்த்தினான்.

 

“அதெல்லாம் கேக்காதிய.. அவங்க சொல்றதுதான் சரி.. நீங்க பறையத் தொடுறத இத்தோட நிறுத்திக்கங்க..” என்று கும்பிட்டார்.

 

சேது, கும்பிட்டு நின்ற கைகளைப் பற்றி கீழே இறக்கிவிட்டு, அமைதியாகத் திரும்பினான். ஆனாலும், அவனுள்ளே காய்ச்சிய பறை அதிர்ந்துகொண்டேதான்  இருந்தது.

 

“உள்ளூரில் பறைக் கற்றுக்கொண்டால்தானே தடுப்பார்கள்..” என்று வீட்டுக்குத் தெரியாமல் தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் ரெங்கராசு நினைவு  பறை பயிற்சி வகுப்பில் சேர்ந்தான்.  அந்தோனி மாஸ்டர்தான் பயிற்றுநர். அவரிடம் கருப்பையாவிடம் பறைப் பயின்றதைப் பற்றி கூறினான். அவர் ஆச்சர்யமாகி, கருப்பையாவின் நலம் விசாரித்து, தமிழ் பல்கலைக்கழகம் பறை பயிற்சி வழங்கிய போது ரெட்டிப்பாளையம் ரெங்கராசு அண்ணனுடன் பயின்ற ஒன்பது பேர்களில் கருப்பையாவும் ஒருவர் என்ற தகவலை சொன்னார்.

 

சேது, தன் குடும்பத்தினர் கொடுத்த இடையூறால் கருப்பையாவிடம் தொடர்ந்து பறை கற்றுக்கொள்ள முடியவில்லை என்று வருத்தமாக சொன்னான். அதைக் கேட்டதும் நகைத்த மாஸ்டர், “இங்க பறை பயில்ற ஸ்டூடண்ட்ஸ்ல பாதி பேரு உங்கள மாதிரி ஆளுங்கதான்… தமிழ் யுனிவர்சிட்டில படிக்கிற பசங்களும் இருக்காங்க… சாவு பந்தல்ல மட்டுமே வாசிச்சிட்ருந்தத, இன்னைக்கு  கல்யாண மண்டமத்துல தொடங்கி சங்கீத கச்சேரி நடக்குற அரங்கம் வரைக்கும் எல்லா எடத்துலயும் நிகழ்ச்சி பண்ணுறோம்…  பறை எல்லோருக்குமானது.  கவலையே படாதீங்க,   நீங்க முழுசா கத்துக்கிட்டு போகலாம்…”  என்றார்.

 

சேதுவுக்கு சீருடை வழங்கப்பட்டது. முதல்முறையாக காலில்  சலங்கையைக் கட்டினான். பறை அதிர்ந்தது.

 

“தக்கோக்கோ தா.. தக்கோக்கோ தா..”

“தக்குக்கு தகதீம்.. தக்குக்கு தகதீம்..”

“தினுக்கு தக்குக்கு தா.. தினதின.. தினுக்கு தக்குக்கு தா.. தினதின..”

 

புதிய புதிய சொற்கட்டுகளையும் அதற்கேற்ற ஆட்டத்தையும் சேது கற்றுக்கொண்டான். பயிற்சி வகுப்பில், முன்னத்தி ஏர் போல முதல் பறையை சேதுதான் வாசித்தான். மாஸ்டர் தலைமையில் கலைக்குழு வாரத்திற்கு இருமுறை கேரளா, இலங்கை, அந்தமான் எனப் பல இடங்களுக்கும் சென்று நிகழ்ச்சி செய்தது. சேதுவுக்கு அதில் கலந்துகொள்ள வேண்டுமென்கிற விருப்பம் இருந்தாலும் அதைத் தவிர்த்தே வந்தான்.

 

தஞ்சையில் விமரிசையாக நடைபெறும் ’சலங்கை நாதம்’ நிகழ்ச்சிக்கான அறிவிப்பை அரசு அறிவித்தது. அதில் கலந்துகொள்ள மாஸ்டர் விண்ணப்பித்தார். சேதுவுக்கு சலங்கை நாதம் நிகழ்ச்சி பற்றி நன்றாகத் தெரியும். இந்தியாவின் பல மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பல்வேறு வகையான கலைக்குழுக்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். சேதுவுக்கு  மேடையேற  வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதை மாஸ்டரிடம் சொன்னபோது அவர்  புன்னகை செய்தார்.

 

சலங்கை நாதம் தேர்வுக்குழு இவர்களின்  குழுவை ஒத்திகைக்கு அழைத்திருந்தது. சேது ஆர்வமாக கிளம்பிப்போனான். முதல்முறை தங்களது குழுவைச் சாராத வெளியாட்களின் முன்பு வாசிக்கிறான். உத்வேகமான வாசிப்பும் உற்சாகமான ஆட்டமுமாக ஒத்திகை களை கட்டியது.  தேர்வுக்குழு சிறப்பாக நிகழ்ச்சி பண்ணுவதாக பாராட்டி, மேடையேறலுக்கான தேதியையும் நேரத்தையும் குறித்துத் தந்தார்கள். மாஸ்டர் தன் சந்தோசத்தை குழுவினரிடம் பகிர்ந்துகொண்டார். சேது, பெரிய அரங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் மேடை ஏறப்போவதை எண்ணி உவகை கொண்டான். அன்றிரவு அவனால் சரியாக தூங்கக்கூட முடியவில்லை. தன்னுடைய பெருங்கனவு நிறைவேறப்போவதை எண்ணி புரண்டு புரண்டு விழுந்து, ஒரு கட்டத்தில் உறங்கிப்போனான்.

 

அறையின் மெல்லிய இருளுக்குள் ஊதுபத்தியின் புகையைப் போல பரவிய கொட்டுச்சத்தம், ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த சேதுவின் காதுகளைப் போய்த் தொட்டது. அவன், கோழி இறகால் காதுக்குள் துளாவியதுபோல சிலிர்த்துக்கொண்டு  எழுந்தான். கண்களைக் கசக்கியபடி இமைகளைத் திறந்தான். மூடப்பட்டிருந்த ஜன்னலில், பிளேடால் கோடு கீறியதுபோல் இருந்த  இடுக்கின் வழியே கருக்கலின் வெளிச்சம் கசிந்துகொண்டிருந்தது.  எழுந்து சென்று ஜன்னல் கதவுகளைத் திறந்தான். மென்மையாக ஒலித்துக்கொண்டிருந்த கொட்டுச்சத்தம் உரக்கக் கேட்டது. இரண்டு கைகளையும் அணை கட்டுவதுபோல் விரித்து.. கண்களை மூடி…  தலையை லேசாக உயர்த்தி… நீளமாக சுவாசித்தான். காற்றோடு சேர்ந்து கொட்டுச்சத்தமும் அவனுக்குள் தீயாய்ப் பரவியது. அப்போது அவன் உதடு, “செத்துப்பொயித்துடா… தூக்குடா தூக்குடா…  செத்துப் பொயித்துடா  தூக்குடா தூக்குடா…”  என்று பறையின் தாளத்திற்கேற்ப முணுமுணுக்கத் தொடங்கியது.

 

தன் கனவு நிறைவேறப் போகிற இந்த நாள், இப்படியான கொட்டுச்சத்தத்தோடு விடிந்தது அவனுக்கு நல்ல சமிக்ஞையாகப் பட்டது. மாலையில்தான் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் மதியமே பயிற்சிப் பட்டறைக்கு வந்துவிட வேண்டுமென்று மாஸ்டர் உத்தரவிட்டிருந்தார். அதை நினைத்தபடி, இப்பவே கிளம்பினால்தான்  சரியாக இருக்கும் என்று மாடிப்படி இறங்கி கீழே வந்தான். அவனுடைய அம்மா, தெருவில் டீ வாங்கிக்கொண்டு போகிறவரைப் பார்த்து, “தெக்கித்தெரு பக்கம் கொட்டுச்சத்தம் கேக்குது.. செத்தது யாராம்..?” என்று கேட்டார். அவர், “காலனி தெருவுல தப்பு செய்வாருல்ல கருப்பையா..  அந்தாளுதான். தூங்குன மேனிக்கு செத்துக் கெடந்தாராம்.. நல்ல சாவுதான்..” என்று போகிறபோக்கில் சொல்லிப்போனார். அதைக்கேட்ட சேதுவுக்கு தூக்கிவாரிப் போட்டது. கடைத்தெருவுக்கு சென்று மாலை ஒன்றை வாங்கிக்கொண்டு ஓடினான்.

 

சாமியானா பந்தல் நிழலில் கயிற்றுக் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார் கருப்பையா. அவருடைய வளைந்த கால்களை இணைத்து பெருவிரலில் முடிந்திருந்தார்கள். தலைமாட்டில் பறை தொங்கிக் கொண்டிருந்தது. சேது செருப்பைக் கழற்றிவிட்டு மாலையைப் போட்டு கும்பிட்டான். கண்கள் கலங்கியது. துடைத்தபடி பொடுவம்மாளைப் பார்த்தான். அவர் அழுவதை நிறுத்திவிட்டு அவனை வெறித்துப் பார்த்தபடி இருந்தார்.  சேது கவலை தோய்ந்த முகத்துடன்  அவர் அருகில் போய் அமர்ந்தான்.

 

“என்னாச்சு.. தாத்தா நல்லாத்தானே இருந்தாரு..” என்றான்.

 

பொடுவம்மாள் பதிலேதும் சொல்லாமல், அவனின் கையைப் பிடித்து வீட்டின் பின்புறமிருக்கும் இலந்தை மரத்தடிக்கு அழைத்துச் சென்றார். சேதுவுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை.   பொடுவம்மாள் இலந்தை மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த  கயிற்றைக் காட்டினார்.

 

“நேத்து சாயந்தரம் அரிசி வாங்குறதுக்காக அங்காடியில தாத்தாவும் நானும் அட்டைய குடுத்துட்டு குந்தியிருந்தோம். அங்க வந்த உங்க அண்ணனும் அம்மாவும் என்ன ஏதுன்னு சொல்லாம செருப்பக் கழட்டிக்கிட்டு அவர அடிக்க ஆரம்பிச்சிட்டாக..  அடி தாங்க முடியாம கீழ விழுந்தவர ஒதைச்சு.. வேட்டிய உருவி…” சொல்ல முடியாமல் அழுதார். சேது அதிர்ந்துபோனான். “சுத்தி இருந்தவங்கள்ல ஒருத்தரு கூட வெலக்கலய்யா.. நான் ஒருத்தி என்ன பண்ணுவன்.. நாங்க யாருக்கு என்ன பண்ணம்.. எதுக்காக அடிச்சாக..? எதுவும் தெரியல..     வீட்டுக்கு வந்த மனுசன் ஒரு வார்த்த பேசல.. பச்சத்தண்ணி கூட குடிக்காம சுருண்டு படுத்துகிட்டாரு..  பாதி சொத்தியத்துல கண்ணு முழிச்சுப் பாக்குறன், ஆளக் காணும்..” சேலை முனையால் கண்ணீரைத் துடைத்தப்படி, ”ஒத்தையாளா கயித்த அறுத்து, இழுத்துக்கிட்டு வந்து தின்னையில போட்டேன்..” என்று மீண்டும் அழத் தொடங்கினார். சேது உறைந்துபோய் நின்றுகொண்டிருந்தான்.

 

அலைபேசி ஒலித்தது. மாஸ்டர்தான் அழைத்தார்.  தாமதமாகிவிட்டதால் குறிப்பிட்ட நேரத்தில் அரங்கத்தில் இருக்கும்படி சொல்லித் துண்டித்தார். அப்போது, அவனுடைய விரல்கள் தவறுதலாக தொட்டதில் வாட்ஸ் அப் குழுவில்  வந்திருந்த காணொலியொன்று  ஒளிர்ந்தது. அதில், சலங்கை நாத தேர்வுக்குழு முன்னிலையில் சேது உள்ளிட்ட குழுவினர் பறையாட்டம் ஆடினர். சேதுவுக்கு புரிந்துபோனது. ரத்தம் தலைக்கேற அலைபேசியை ஓங்கித் தரையில் அடித்தவன், அங்கிருந்து ஆவேசமாக வாசலுக்கு வந்து கருப்பையாவின் தலைமாட்டில் தொங்கிக்கொண்டிருந்த பறையை எடுத்தான்.

 

“ஜன்ஜன் னகுடி னக்கா.. ஜன்ஜன் னகுடி னக்கா..”

 

தரை அதிர பறையாட்டம் ஆடத்தொடங்கினான். துக்கத்திற்கு வந்தவர்கள் ஆச்சர்யமாக பார்க்க, பொடுவம்மாள் எந்த உணர்ச்சியுமில்லாமல் கருப்பையாவின் காலடியில் அமர்ந்திருந்தார். சேது, பறையடித்து ஆடிக்கொண்டே கருப்பையாவின் உடலைப் பார்த்தான். அவரின்  வளைந்த கால்கள் காற்றில் நடனமாடுவதுபோல் அவனுக்குத் தோன்றியது. அப்போது, அவர் கழுத்தை  தூக்குக் கயிறு நெறித்துக்கொண்டிருந்தது.

 

 

 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close