நேர்காணல்கள்
Trending

“கடவு”ச்சொல்லின் கதையாடல்

நேர்காணல்: திலீப் குமார் நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி

40 ஆண்டுகளாக எழுதிவரும் திலீப் குமார் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் இவர், படைப்பிலக்கியம் தவிர மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறார். 2016இல் நூறாண்டு தமிழ் சிறுகதைகளின் தொகுப்பொன்றை ஆங்கிலத்தில் தொகுத்து வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வாழும் குஜராத்திகளின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்டு தனது கதைவுலகை கட்டமைத்துள்ளார். க்ரியா பதிப்பகம் வெளியிட்ட அவருடையகடவுசிறுகதைத் தொகுப்பை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட நேர்காணலில் சிறுகதைகளின் பல்வேறு வாசல்கள் திறக்கப்படுகின்றன. பதில்களில் தெரியும் அனுபவத் தெளிவு அவரது கதைமாந்தார்களின் கூற்றாக அமைகிறது


உங்களின் படைப்பூக்கம் அதிகமாக சிறுகதைகளில் வெளிப்பட்டிருக்கிறது. முன்னோடிகளின் சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் தொகுத்திருக்கிறீர்கள். உங்கள் தமிழ் தொடர்பு மற்றும் “சிறுகதை” எனும் வடிவம் குறித்து சிறிது கூறுங்களேன்…

சிறுகதை என்ற வடிவத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பின் காரணத்தை என்றுமே என்னால் சரியாகவோ கோர்வையாகவோ விவரிக்க முடிந்ததில்லை. தமிழ் மொழி குறித்த எனது ஆர்வம்தான் என்னை சிறுகதையை நோக்கி உந்தியது என்று சொல்லலாம். அதேபோல் சிறுகதைகளின் வாயிலாகவும் நான் எனது தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது என்பதையும் கூறவேண்டும். எனது தாய்மொழி தமிழ் அல்ல, குஜராத்தி என்பது உங்களுக்குத் தெரியும். நான் மிக மிக எதேச்சையாகத்தான் தமிழ் மொழியைக் கற்க நேர்ந்தது. நான் சிறுவனாக இருந்தபோது, இளம் விதவையான என் தாயார் எங்கள் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த பள்ளிக்கு என்னை அனுப்புவதில் இருந்த நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு அருகாமையில் இருந்த (தமிழும் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்ட) ஒரு தனியார் ஆரம்பப்பள்ளியில் என்னை சேர்த்துவிட்டார். அங்குதான் நான் மூன்றாம் வகுப்பு வரை தமிழ் கற்றுக்கொண்டேன். நான்காம் வகுப்பிலிருந்து நான் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இருந்த, குஜராத்தி குழந்தைகள் படித்த, பெரிய பள்ளியில் சேர்க்கப்பட்டேன். (ஆனால் முறையான கல்விக்கும் எனக்கும் ராசியே இருக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் நான் எட்டாம் வகுப்பை அடைந்தபோது எங்கள் குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகும்படி நேர்ந்துவிட்டது. முறையான கல்விக்கான வாய்ப்பை நான் முற்றிலும் இழந்துவிட்டேன். எனது பதினான்காம் வயதிற்குப் பின்பு நான் தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி ஆகிய எல்லா மொழிகளையும் சுயமாகவே கற்றுக்கொள்ளும்படி அல்லது மேம்படுத்திக்கொள்ளும்படி ஆனது.)

எங்கள் பள்ளி பெரிய பள்ளி என்பதால் அங்கு தமிழ் மாணவர்களுக்காக தமிழ்ப் பிரிவுகளும் இருந்தன. விளைவாக எங்கள் பள்ளி நூலகத்தில் ஆங்கிலம், இந்தி புத்தகங்களோடு தமிழ்ப் புத்தகங்களும் பத்திரிக்கைகளும் இருந்தன. தமிழோடு ஓரளவு பரிச்சயம் கொண்டிருந்த நான் எங்கள் பள்ளி நூலகத்தில் வாங்கப்பட்ட தமிழ் பத்திரிக்கைகளை ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தேன். அப்போது கலைமகள் நிறுவனத்திலிருந்து நேர்த்தியான வடிவமைப்பில்கண்ணன்என்ற சிறுவர் இதழ் வெளியாகிக் கொண்டிருந்தது. அதை நான் தொடர்ந்து, அதாவது பள்ளியில் இருந்தவரை வாசித்துக் கொண்டிருந்தேன். அழகான தமிழில் கட்டுரைகளும் சிறுகதைகளும் அதில் வெளியாயின. அம்பை, மறைந்த எழுத்தாளர் ஆதவன் ஆகிய இருவரும் அதில்தான் எழுதத் துவங்கினார்கள் என்பதை நான் பின்னாளில் அறிந்து கொண்டேன். நான் எட்டாவது படிக்கும்போது எங்கள் வகுப்பு மாணவர் இதழுக்காக ஒரு தமிழ் சிறுகதையை எழுதினேன். நான் எழுதிய முதல் சிறுகதை என்று இதைச் சொல்லலாம். ’அசம்பாவிதம்என்ற தலைப்பில் 1962 இல் நடந்த இந்தியாசீனா போரை வைத்து எழுதப்பட்ட கதை. நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யும் போர் வீரனையும் அவனது இளம் மனைவி மற்றும் சின்னஞ்சிறு குழந்தையையும் பாத்திரங்களாகக் கொண்ட உருக்கமான கதை. எங்கள் வகுப்பில் பெரும்பாலும் குஜராத்தி மாணவர்களே இருந்ததால் எனது முதல் கதை யாராலும் வாசிக்கப்படாமலேயே போய்விட்டது. ஆனால் ஒரு குஜராத்தி மாணவன் தமிழில் ஒரு கதையை எழுதியது ஒரு சிலரை சற்று வியக்க வைத்தது.

நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த முதல் சில வருடங்கள் குடும்பத்தில் நிலவிய வறுமை மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்வதிலேயே கழிந்து விட்டன. எனது 18-வது வயதில் மனம் திடீரென்று வாசிப்பின் பக்கம் திரும்பியது. கடையில் எனக்கு டீ குடிப்பதற்கு கொடுக்கப்பட்ட சொற்பக் காசை சேமித்து, கோவையிலுள்ள பழைய புத்தகங்களை விற்கும் கடைகளிலிருந்து, தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை வாங்கி படிக்கத் துவங்கினேன். ஜெயகாந்தனிலிருந்து துவங்கிய நான், ஒரு சில ஆண்டுகளில் ரஷ்ய மொழிபெயர்ப்புகள், நவீன தமிழ் இலக்கியம், சிறந்த ஆங்கில நாவல்கள், கவிதைகள், என்று கணிசமான நூல்களைப் படித்து முடித்தேன். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகள் பெரும்பாலானவர்களின் படைப்புகளை (குறைந்தபட்சம் ஒரு முக்கிய படைப்பையாவது) நான் எனது 25-வது வயதுக்குள் படித்து முடித்திருந்தேன். இப்போது, நினைவுகூறும்போது, ‘இது எப்படி சாத்தியமாயிற்று?’ என்று மலைப்பாக இருக்கிறது. ஆனால், இப்படித்தான் நான் தமிழ் இலக்கியத்திற்குள் நுழைந்தேன்

குஜராத்திகளைப் பற்றிய என் கதைகளின் மூலம் நான், பிரதிபலிக்க விரும்பியதுஇடம்பெயர்ந்தஒரு சமூகத்தின் மதிப்பீடுகள், நம்பிக்கைகள், பதற்றங்கள், நெருக்கடிகள், ஏமாற்றங்கள் இவற்றைத்தான்.

சிறுகதைபற்றி யோசிக்கும்போது இவ்வாறு சொல்லத் தோன்றுகிறது : மேற்கிலிருந்து (வங்கத்தில் இருந்தும்) நாம் பெற்ற உரைநடை புனைவு வடிவங்களான நாவல் மற்றும் சிறுகதை ஆகியவற்றில் நமது அதிகபட்ச சாதனைகள் சிறுகதையில்தான் சாத்தியமாகி உள்ளன. இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் இவ்விரு வடிவங்களும் தோன்றிய காலமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளது. ஆனால் நாவலோடு ஒப்பிடும்போது சிறுகதை முதிர்ச்சியடைய எடுத்துக்கொண்ட கால அவகாசம் மிக மிகக் குறைவு. இது அனேகமாக எல்லா இந்திய மொழிகளுக்கும் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால் சிறுகதைக்கு நாவலைப் போன்று ஒரு இருண்ட காலம் இருந்ததே இல்லை. அது தோன்றிய அல்லது அறிமுகமாகிய ஒரு சில வருடங்களிலேயே மிக உயர்ந்த இலக்கியத் தரத்தை அடைந்துவிட்டது. நாவலைப் பற்றி இவ்வாறு நம்மால் கூறமுடியாது.  ‘பிரதாப முதலியார் சரித்திரத்திற்கும் (வேதநாயகம் பிள்ளை) ‘தண்ணீருக்கும் (அசோகமித்திரன்) அல்லதுஅம்மா வந்தாள்க்குமான (தி ஜானகிராமன்) கால இடைவெளி மிக மிக அதிகம். ஆனால் வடிவத்திலும் நுட்பத்திலும்கண்ணன் பெரும் தூதுக்கும் (. மாதவையா) ‘சாபவிமோசனத்திற்கும் (புதுமைப்பித்தன்) இடைவெளியே கிடையாது. நவீன இந்திய இலக்கியத்தின் மாபெரும் சம்பத்து சிறுகதைதான் என்று சொல்லிவிடலாம்

மேற்கிலிருந்து வந்த ஒரு வடிவம் விரைவாகவும் எளிதாகவும் நமக்கு வசமானதற்கு பத்திரிகைகள் தவிர, நம் வாழ்க்கை சூழ்நிலையும் வாழ்க்கை குறித்த நமது கண்ணோட்டமும் கூட ஒரு முக்கிய பங்காற்றியிருக்கவேண்டும். ‘சிறுகதைகுறித்த எனது ஆர்வத்திற்கு இவையும் கூட  காரணங்களாக இருந்திருக்கலாம்ஆனால், துவக்கத்திலிருந்தே என் மனதுக்கு உகந்த இலக்கிய வடிவமாக சிறுகதைதான் இருந்துள்ளது. தமிழில் எனது ஆதர்ச எழுத்தாளர்களாக ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், மௌனி, கு..ரா, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி தி.ஜானகிராமன் என்று பலரையும் கூறவேண்டும்.

தமிழகத்தில் வாழும் குஜராத்திகளையும், வட இந்தியர்களையும், அவர்களின்    வாழ்க்கையையும் உங்களின் கதைகள் பிரதானமாக்குகின்றன. அவையே தமிழ் இலக்கியத்தில் உங்கள் புனைவின் இடத்தை அழியாத ஒன்றாக மாற்றுகிறது. இந்நிலையில் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு தூரம் இலக்கியத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்று உணர்கிறீர்கள் ?

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். தமிழகத்தில் வாழும் வட இந்தியர்களைப் பற்றி நான் பல கதைகள் எழுதி இருக்கிறேன். அதே சமயம்வட இந்தியர்கள்அல்லாதவர்களின் வாழ்க்கை குறித்தும் என் கதைகள் பேசுகின்றன. என்கடவுதொகுப்பில் சரிபாதி கதைகள்வட இந்தியர் அல்லாதவர்களைப் பற்றியவை. தமிழ் நாட்டுக்கு பல்வேறு காலகட்டங்களில் புலம் பெயர்ந்த வட இந்தியர்கள்குஜராத்திகள் உட்படஅனேகமாக, எல்லோருமே பிழைப்புத் தேடி வந்தவர்கள்தான். தங்கள் தாய் நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளில் மொழி, வழிபாட்டு நெறிமுறைகள், சடங்கு சம்ப்ரதாயங்கள் இவற்றையே அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள் என்று சொல்லலாம். அதாவது, தொழில்களிலும், வியாபாரத்திலும் வெற்றியடைந்து தங்களை நிலைப்படுத்திக்கொண்ட பின்பும், அவர்களது பண்பாட்டு நடவடிக்கைகள், கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள், சமூக சேவை சார்ந்த பணிகள், சடங்கு சம்ப்ரதாயங்கள், விழாக்கள், இவற்றை மையப்படுத்தியே இருந்துவந்துள்ளன. பொதுவாக இலக்கியத்தின் மீதும். தங்களது மொழி இலக்கியத்தின் மீது அவர்களது அபிமானம் மேலோட்டமானதாகவே இருந்து வந்துள்ளது. இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டியவர்கள் மிகக் குறைவு

குஜராத்திகளைப் பற்றிய என் கதைகளின் மூலம் நான், பிரதிபலிக்க விரும்பியதுஇடம்பெயர்ந்தஒரு சமூகத்தின் மதிப்பீடுகள், நம்பிக்கைகள், பதற்றங்கள், நெருக்கடிகள், ஏமாற்றங்கள் இவற்றைத்தான். அதே சமயம், எனது இத்தகைய படைப்புகள், குஜராத்திகளின் வாழ்வியலோடு மட்டும் சுருங்கி விடாமல் அதற்கப்பாலும் மிக விரிவான ஒரு தளத்தில் பொருள்பட வேண்டுமென்பதில் எப்போதுமே நான் கவனமாக இருந்திருக்கிறேன்.

காமம் – மீதமிருக்கும் வாழ்க்கை – மரணம் எனும் முக்கோணத்திலேயே உங்களுடைய பெரும்பாலான படைப்புகள் உழல்கிறதே அதற்கு பிரத்யேக சித்தாந்தப் பின்புலம் உண்டா ?

 நீங்கள் குறிப்பிட்டு சொல்லும் வரை இப்படி ஒரு கோணத்திலிருந்து என் கதைகளைப் பார்க்க முடியும் என்று எனக்குத் தோன்றியதில்லை. மிக மோசமான வறுமை, காமம், மரணம், இவற்றை உள்ளடக்கிய அல்லது அவை சார்ந்த அனுபவங்களை நான் சந்தித்திருக்கிறேன். இவற்றையெல்லாம் குறித்து தீவிரமாக யோசித்துமிருக்கிறேன். ஆனால், ‘சித்தாந்தப் பின்புலம்என்று எதுவும் நிச்சயம் கிடையாது. எனது எழுத்துக்கள், முதன்மையாக, எனது அனுபவங்களை மட்டுமே சார்ந்தவை. இது எனக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்ல முடியாது. கடுமையான வாழ்க்கை நெருக்கடிகள், பாலியல் சார்ந்த நிராசைகள், மரணம், இவையனைத்துமே ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த நமது இந்திய சூழ்நிலையில் அடிப்படையான அனுபவங்கள்! எனவே இது எல்லா இந்திய எழுத்தாளர்களுக்கும் பொருந்துமென்று நான் நினைக்கிறேன். வாழ்க்கை குறித்த தங்களது கண்ணோட்டத்திற்கு ஏற்ப மேற்குறித்த மூன்று கூறுகளில் ஏதாவது ஒன்றையோ, இரண்டையோ அல்லது மூன்றையுமோ கூட அவர்கள் தங்கள் படைப்புகளில் வலியுறுத்தக்கூடும். என் எழுத்துக்களும் அப்படித்தான்

உங்கள் கதைகளில் உரையாடல்கள் அதிகமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆண்கள் அதிகம் பேசுகிறார்கள். பெண்கள் மௌனமாகவே இருக்கிறார்கள். இது தற்செயலானதா அல்லது முன் தீர்மானத்துடன் புனையப்பட்டதா?

 முதலில், “உரையாடல்கள்பற்றி கூறிவிடுகிறேன். பொதுவாக, புனைவு சார்ந்த படைப்புகளில் உரையாடலுக்கு ஆசிரியர் கூற்றாக வரும் பகுதிகளைவிட ஒரு கூடுதலான முக்கியத்துவம்/சிறப்பு உண்டு. ஆசிரியர் கூற்றாக பக்கம் பக்கமாக எழுதப்படும் பகுதிகள் சொல்ல முடியாததை பாத்திரங்கள் பேசும் ஓரிரு வாக்கியங்கள் சொல்லிவிடும். இந்த உரையாடல் வாக்கியங்களை நம்பகத்தன்மையுடன் அமைப்பதும் சற்று கடினமானதுதான். குறிப்பாக, நீண்ட உரையாடல் வாக்கியங்களை விட சுருக்கமான உரையாடல் வாக்கியங்களை உருவாக்குவதுதான் உண்மையான சவால்

இந்த இடத்தில் தமிழைப் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பாக சொல்லலாம் என்று நினைக்கிறேன். பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடைவெளி அதிகமுள்ள மொழிகளில் தமிழும் ஒன்று. (நான் வட்டாரவழக்கை குறிப்பிடவில்லை). எனவே புனைவுகளில் நகர்ப்புற பாத்திரங்களிடையே நடைபெறும் நுட்பமான விஷயங்கள் குறித்த உரையாடல்களை அமைப்பது இந்த சவாலின் ஒரு கூடுதல் பரிமாணம். இது ஒரு வகையில் போதாமைதான். இதை நவீன எழுத்தாளர்களும் நாடகாசிரியர்களும்தான் எதிர்கொண்டு வெற்றி கொள்ளவேண்டும்.

எப்படியும்உரையாடல்கள்ஒரு படைப்புக்கு சேர்க்கும் வலுவும் அழகும் அலாதியானவை. மேலும், உள்ளடக்கத்தின் போக்கை ஆற்றுப்படுத்தும் உரையாடல்கள் வடிவரீதியாகவும் கதைக்கு ஒருவித நேர்த்தியை வழங்கிவிடும். ஒரு கதையில் நீண்ட (பெரும்பாலான சமயங்களில் சலிப்பூட்டும்) ஆசிரியர் கூற்றுக்குப் பின் ஒரு பாத்திரம் ஓரிரு வார்த்தைகள் பேச நேர்ந்தாலும் கூட அது வாசகருக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்துவிடும். படைப்புக்கு உயிர்ப்பை வழங்குவதோடு வாசகர் படைப்போடு ஒன்றுவதற்கான வெளியையும் மனஅவகாசத்தையும் இது சாத்தியமாக்குகிறது

அடுத்ததாக, “ஆண்கள் அதிகமாகப் பேசுகிறார்கள்என்று நீங்கள் கருதுவது, அநேகமாகநிகழ மறுத்த அற்புதம்கதையை மனதில் கொண்டுதான் என்று நினைக்கிறேன். என் கதைகளில் வரும் பாத்திரங்கள் (ஆண்களானாலும் பெண்களானாலும்) கதைக் கருவுக்கும் பாத்திர வார்ப்பிற்கும் ஏற்பவே பேசுகின்றன. எடுத்துக்காட்டாக, “கடவுகதையில் முழுக்க முழுக்க பெண் பாத்திரங்கள்தான் பேசுகின்றனநீங்கள் சொல்வது போல், இதில்தற்செயல்மற்றும்முன்தீர்மானம்இரண்டுமே ஓரளவுக்கு செயல்பட்டுள்ளன

சில சமயம் எனது கதைகளில் வரும் உரையாடல்கள்உத்திசார்ந்தும் அமைந்ததுண்டு. ‘நிகழ மறுத்த அற்புதம்கதையில் வரும் பெண் பாத்திரத்திற்கு மௌனம்தான் ‘’மொழியாகசெயல்பட்டுள்ளது. அப்பாத்திரத்திற்கு பெயரும் கிடையாது; குரலும் கிடையாது என்பதை வலியுறுத்தவேதிருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசவில்லைஎன்ற வாக்கியத்தை பல முறை பயன்படுத்தியுள்ளேன். இது இருபதாம் நூற்றாண்டு, நடுத்தர வர்க்க வாழ்வியல் யதார்த்தத்தை பிரதிபலிக்க வேண்டும் என்பதோடு, இக்கதையில், புனைவுகளில் தமிழ் உரையாடல்மொழியின் எல்லையையும் விரிவடையச் செய்ய முடியுமா என்பதைப் பரிசீலிக்க முற்பட்டுள்ளேன்.

மேலும் இதில், தனிமை, முதுமை, பாலியல் குறைபாடுகள், ஏமாற்றங்கள், உளவியல் இறுக்கங்கள் போன்ற பல்வேறு விஷயங்களை ஆங்கில வார்த்தைகள் கலக்காமல், ஆசிரியர் கூற்றாக சொல்லாமல், நல்ல தமிழில், முழுக்க முழுக்க உரையாடல்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பதும் எனது நோக்கமாக இருந்தது

திலீப் குமார்

மேற்குறிப்பிட்ட ஆணின் உரையாடலும் பெண்ணின் மௌனமும் வேறொரு இடத்திலும் முரண் கொள்கிறது. வாழ்வின் முடிவெடுக்கும் தருணங்களில் பெண்ணின் மௌனமே வெற்றியடைகிறது. உங்கள் கதைகளில் வெளிப்படும் இத்தன்மைக்கு பிரத்யேக காரணிகள் உண்டா ?

நீங்கள் நினைப்பது போல, ஆணின் உரையாடல் மற்றும் பெண்ணின் மௌனம் ஆகிய அம்சங்கள் என் கதைகளில் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை என்றுதான் நான் கருதுகிறேன். ஒரு சில கதைகளில் இது சாத்தியமாகியிருக்கலாம் (அக்ரஹாரத்தில் பூனை). ‘நிகழ மறுத்த அற்புதம்கதையில் பெண்ணின் மௌனம் வெற்றி பெறவில்லையே !!ஆனால், என் வாழ்க்கையில் என் தாயார் உட்பட நான் நிறைய மனஉறுதி மிக்க, கண்ணியமும் பெருந்தன்மையும், சுயகௌரவமும் மிகுந்த பல பெண்களை சந்தித்துள்ளேன். அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும்தான் என் கதைகளில் வரும் பெண் பாத்திரங்களில் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு கதையிலும் நுணுக்கமான தகவல்களைக் கொண்டு கதாபாத்திரங்களை வடிவமைக்கிறீர்கள். சில கதைகளில் அந்த விவரிப்புகளே கதையாகின்றன. நவீன சிறுகதை வடிவத்தில் விவரிப்புகளின் இடத்தை என்னவாக உணருகிறீர்கள் ?

ஒரு சிறுகதையின் உருவாக்கத்தில்சூழ்நிலை உருவாக்கம், பாத்திர அறிமுகம், வார்ப்பு, கதைக்கரு, முரண் மற்றும் தீர்வு, ஆகிய அம்சங்களை நாம் எளிதாக இனம் கண்டுவிடமுடியும். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் வலு சேர்ப்பது அல்லது ஆதாரமாகத் திகழ்வது உரையாடல்கள், அனுபவத்தரவுகள் மற்றும் விவரிப்புகளும்தான். இவை எவ்வாறு நம்பகத்தன்மையுடன் முன்வைக்கப்படுகின்றன என்பது ஆசிரியரின் பார்வைதீட்சண்யத்தையும் தொனியையும் பொறுத்து மாறுபடும். ஒரு கதையில் விவரிப்புகளின் பங்கு என்பது கதைகருவுக்கு அல்லது அது முன்வைக்க விரும்பும் கருத்து நிலைக்கு ஏற்ப குறைவாக அமையும். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு கதையின் மூலம் ஆசிரியர் ஏற்படுத்த விரும்பும் இலக்கிய விளைவை கருத்துகள் வாயிலாக வியாக்கியானப்படுத்தாமலேயே விவரிப்புகளின் மூலம் மட்டுமே கூட அடைந்துவிட முடியும். அடிப்படையில் இது ஒரு உத்தி சார்ந்த அணுகுமுறை. கதையின் உள்ளடக்கம் கோரும் ஒரு அம்சம். இதற்கு திட்டவட்டமான இலக்கணம் கிடையாது. கற்றும் கண்டும் உணர வேண்டிய ஒன்று. எனவே, ஒரு படைப்பாளிக்கு அனைத்து இலக்கிய அம்சங்களும் சமமான முக்கியத்துவம் கொண்டவையாகத்தான் இருக்க முடியும். ஒரு ஞானியின் நேயமிக்க தீட்சண்யத்தையும், ஒரு குழந்தையின் நுண்மையான கண்களையும் கொண்டிருந்தால் ஒரு நல்ல சிறுகதையை படைத்துவிட முடியும்

என் கதைகளில்நகைச்சுவைஎன்பதை விட, ‘அபத்தம்தான் அதிகம் என்று கருதுகிறேன். என் வளரிளம் பருவத்தில் பசி, பட்டினி, சிறுமைகள், அவமானங்கள், வன்முறை, நோய் என்று பலதரப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஆளாகியிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு சோகத்தின் போதும், கூடவே ஒரு அபத்தமும் சேர்ந்ததே நிகழ்ந்துள்ளது.

நான் முன்பு கூறியது போல, சிறுகதையில் பழையது புதியது என்ற பாகுபாடு அதிகமில்லை. எங்கிருந்தும் நாம் கற்றுக்கொள்ளமுடியும். என்னைக் கேட்டால் அன்டன் செகாவிடம் செல்லுங்கள். சிறுகதைக்கான எல்லாக் கருவிகளையும் அவனிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்!! 

உங்கள் கதைகளில் தென்படும் நகைச்சுவைத் தன்மையை எங்கிருந்து பெறுகிறீர்கள்? இலக்கியத்தில் நகைச்சுவை சவாலான ஒன்றா?

என் அனுபவங்களிலிருந்துதான். வேறு எங்கிருந்து!!! என் கதைகளில்நகைச்சுவைஎன்பதை விட, ‘அபத்தம்தான் அதிகம் என்று கருதுகிறேன். என் வளரிளம் பருவத்தில் பசி, பட்டினி, சிறுமைகள், அவமானங்கள், வன்முறை, நோய் என்று பலதரப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஆளாகியிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு சோகத்தின் போதும், கூடவே ஒரு அபத்தமும் சேர்ந்ததே நிகழ்ந்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். என் 14-வது வயதில், நான் ஒரு கடையில் மாதம் 35 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை கடுமையான வேலை. தினமும் மதியம் 12 மணிக்கு எங்கள் கடை மேலாளரின் குழந்தைகளுக்கு மதிய உணவை எடுத்துக்கொண்டு 4 மைல் தொலைவிலிருந்த அக்குழந்தைகளின் பள்ளிக்கு சைக்கிளில் செல்லவேன்டும். அன்று சற்று தாமதமாகி விட்டதால் ஒருவழி பாதயில் சென்று, ஒரு காவலரிடம் மாட்டிக்கொண்டேன். அவர் என்னைத் தடுத்து நிறுத்தி, மூன்று மாதம் சிறையில் தள்ளிவிடுவதாக மிரட்டினார். நான் அழ ஆரம்பித்துவிட்டேன். அது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. என்னை ஒரு மூலையில் நிற்க வைத்துவிட்டு, அந்தக் காவலர் கைவண்டிக்காரர்களையும், தொழிலாளிகளையும், காய்கறி கடைக்காரர்களையும் தமிழின் மிக மிக ஆபாசமான வார்த்தைகளால் திட்டி போக்குவரத்தை ஒழுங்கு செய்துகொண்டிருந்தார். வாட்டமாக காணப்பட்டாலும் நான் பார்ப்பதற்கு சற்று பளிச்சென்று இருந்ததாலோ என்னவோ, என்னிடம் மட்டும் அவருக்கு ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று தோன்றிவிட்டது. ஒரு புறம் தாய் மற்றும் சகோதரியைக் குறிக்கும் கடுமையான தமிழ் வசைசொற்களை கூறிக்கொண்டே, அவ்வப்போது என் பக்கம் திரும்பி ஆங்கிலத்தில் என்னைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். அன்று அவர் சுமார் 30 கேள்விகள் கேட்டிருப்பார். எல்லாமே ஆங்கிலத்தில்தான். ஆங்கிலத்தில் பதில் சொன்னால் என்னை விட்டு விடுவார் என்று எண்ணி நானும் அழுதுகொண்டே ஆங்கிலத்தில் பதில் சொன்னேன். ஆனால் அவர் என் கடையிலிருந்து ஒருவரை வரவழைத்து 50 பைசா பெற்றுக்கொண்டுதான் என்னை விடுவித்தார்

இலக்கியத்தில் நகைச்சுவை என்பது சவாலானதா என்றால், அது எழுத்தாளர்களின் மன அமைப்பையும் பார்வையையும் பொறுத்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, நல்ல இலக்கியத்தில் நகைச்சுவை என்பது மிக மிக இயல்பானது. நகைச்சுவை உணர்வு இழையோடாத சிறந்த இலக்கியங்களே இல்லை என்று கூறிவிடலாம். வாழ்க்கையில் முரண்கள் இருக்கும்வரை இலக்கியத்தில் நகைச்சுவை இழையோடிக்கொண்டேதான் இருக்கும்

உங்கள் கதைகள் அதனதனளவில் செறிவாக இருக்கின்றன. அதற்கு உங்களுடைய பரந்துபட்ட வாசிப்பை காரணமாகக் கொள்ளலாமா ?

என் கதைகள் செறிவாக அமைந்திருப்பதற்கு எனது அனுபவங்கள் தவிர, எனது வாசிப்பிற்கும் ஒரு முக்கிய பங்கு நிச்சயம் உள்ளது. ஆனால், எனது வாசிப்பை பரந்துபட்ட வாசிப்பு என்று கூறிக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. வாழ்க்கையின் பாதகமான சூழ்நிலைகளையும் மீறி என்னால் இயன்ற அளவு நான் வாசித்திருக்கிறேன் அவ்வளவுதான்.

 

தமிழின் முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறீர்கள். அதன் பணியிலும், புத்தகமாக முடித்த பிறகும் தமிழின் சிறுகதை வளர்ச்சி குறித்த உங்கள் வரையறையைப் பற்றி சொல்ல முடியுமா?

இந்த ஆங்கிலத் தொகுப்புமுன்னோடிகளின் சிறுகதைகள்மட்டுமல்ல. கிட்டத்தட்ட தொன்னூறாண்டுகால சிறுகதை இயக்கத்தை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது

நான் ஏற்கனவே கூறியதுபோல், மேற்கிலிருந்து நாம் வரித்துக்கொண்ட இலக்கிய வடிவங்களில் நமது அதிகபட்ச ஈடுபாடும் சாதனையும் சிறுகதைத் துறையில்தான் காணப்படுகிறது. தமிழ் சிறுகதையின் இந்த வரலாறையும் வளர்ச்சியையும் ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்ட விரிவான தொகுப்பு இது. 1913-2000 வரை தமிழ் சிறுகதைத் துறையில் பல்வேறு அழகியல் மற்றும் கருத்து நிலைகளிலிருந்து வினையாற்றிய முக்கியமான ஆளுமைகளின் 88 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக, ஆங்கில வாசகர்களிடையேயும் மற்ற இந்திய மொழியினரிடையேயும் தமிழின் அதிகபட்ச சாதனைகள் சங்க இலக்கியத்தில்தான் நிகழ்ந்துள்ளன என்ற கருத்து நிலவுகிறது. விளைவாக, தமிழின் தற்கால இலக்கியத்தின் மேன்மை உரிய வகையில் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்தத் தொகுப்பு தமிழ் சிறுகதையின் வரலாற்றைக் கூறுவதோடு, நூறாண்டு தமிழ் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் முன் வைக்கிறது. கூடவே, தமிழிலும் ஒரு காத்திரமான நவீன இலக்கிய மரபு உள்ளது என்பதையும் நிறுவ முற்பட்டுள்ளது. இத்தொகுப்பிற்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பை பார்க்கும்போது இந்நோக்கம் நிறைவேறியுள்ளது என்றே கூறலாம். இது மிகவும் முக்கியமென்று நான் கருதுகிறேன்

குறைந்த அளவிலேயே எழுதுவதற்கு ஏதேனும் காரணமிருக்கிறதா?

தோன்றும்போது மட்டும் எழுதவேண்டும் என்று நினைப்பவன் நான். அதோடு, உற்சாகமும் விரக்தியும் மாறி மாறி தோன்றும்படியான மன அமைப்பைக் கொண்டவன் நான் என்று வேண்டுமானால் சொல்லலாம். தற்போதுள்ள சூழ்நிலையில் என் போன்றவர்களின் எழுத்துக்கு பெரிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை

கிருஷ்ணமூர்த்தி

உங்களின் சிறுகதைகள் சமகால கதைபோக்குகளுக்கும் சவாலானதாய் அமைந்திருக்கிறது. இதில் சமகாலச் சிறுகதைகள் குறித்த உங்கள் மதிப்பீடு?

உண்மையைச் சொல்வதானால், சமகாலச் சிறுகதைகளை நான் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன் என்று கூற முடியாது. ஆனால், சிறுகதைக்கான இலக்கியக் களம் சுருங்கி வருவதாகத் தோன்றுகிறது. தற்போதுள்ள pod தொழில்நுட்பத்தை முன்னிட்டு ஏராளமான சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகின்றன என்றாலும் நாவல் குறித்து இருக்கும் வாசக ஈடுபாடும் அங்கீகாரமும் சிறுகதைகளுக்கு இல்லையென்றுதான் கருதுகிறேன். ஆனால், எனது இந்தக் கருத்து கேள்விக்குறியதுதான்

உங்களின் அடுத்த படைப்புகள் குறித்து சில வார்த்தைகள்…

பாதியிலேயே நின்றுவிட்ட ஒரு படைப்பை முடிக்கும் முயற்சியிலிருக்கிறேன். முடிப்பேனா என்று தெரியவில்லை

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close