சிறுகதைகள்

தெய்வ வாக்கு – செல்வசாமியன்

சிறுகதை | வாசகசாலை

பெரிதும் இல்லாத சிறிதும் இல்லாத அடக்கமான வீடு. சுவருக்கு பால் நிறம் பூசி, பார்டருக்கு அடர்நீலம் கொடுத்திருந்தார்கள். சுப்பிரமணியின் கச்சிதமான குடும்பத்திற்கு போதுமான அளவு புழக்கமுடைய வீடாகத்தான் தெரிந்தது. சுற்றுச்சுவர் எழுப்பி தேவையான இடங்களுக்கு பூந்தொட்டிகள் அமைத்திருந்தால், மாடி கைப்பிடிச் சுவரின் மீது வைத்திருக்கும் திருஷ்டிப் பூசணிக்காயை ஒன்றுக்கு நான்காக வைத்திருக்க வேண்டும். அந்த அளவிற்கு லட்சணமான கட்டுமானம். ஆனால், வாசலில் ஒரு அழைப்பு மணி அமைக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தோன்றவில்லை என்பதுதான் ஆச்சர்யமாக இருந்தது. நான் வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்தேன். சுப்பிரமணியும், இன்னும் சிலரும் பூஜையறையின் முன்பு ஏதோ மும்முரமாக இருந்தார்கள். இடையூறு செய்ய வேண்டாமென்று, சாமியானா பந்தல் நிழலில் கிடந்த பிளாஸ்டிக் சேரில் போய் அமர்ந்தேன். விசேஷ வீட்டிற்கென்று இருக்கும் ஒருவித மணம், காயும் ஊமை வெயிலில் நிரம்பியிருப்பதை நுகர முடிந்தது. இமைகளை நன்றாக விரித்தால் கண்ணில் பட்டுவிடுவது போன்று அடர்த்தியாய் இருந்தது அந்த வாசம். இப்படி ஒருவன் தனியாக அமர்ந்திருப்பதை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும், பந்தல்காலில் கட்டப்பட்டிருந்த பசுங்கன்று, காய்ந்த கடலைச் செடியை முறுக்கு தின்பது போல மென்றுகொண்டே, தலை தூக்கி என்னைப் பார்த்தது.

எவ்வளவு நேரம் கன்று இரையெடுப்பதையே பார்க்க முடியம், வீட்டிற்குள் பார்வையைத் திருப்பினேன். சுப்பிரமணி பித்தளைத் தாம்பளத்தில் ஐந்து ரக பழங்கள், பட்டுத் துணிமணி வைத்து எதிரில் இருந்த இளைஞரிடம் நீட்டி, “சாமிக்கு முன்னாடி நின்னு சொல்றேன், நீங்க மட்டு இல்லன்னா இந்த வீட்டை எங்களால கெட்டியிருக்க முடியாது…” என்று தழுதழுக்கச் சொன்னான். அவன் வழங்கிய அந்த கலப்பிடமில்லாத பெருமையிலிருந்து சிறுதுளியையும் சிந்தவிடாமல் மென்புன்னகையை விரித்து அழகாக ஏந்திக்கொண்டார் அந்த இளைஞர். புதுமனை புகுவிழா நிகழ்ந்த மறுதினமே ஒருவரை வீட்டிற்கு வரவழைத்து, அவரிடம் இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறி சிறப்பு செய்கிறார்கள் என்றால், அவர் அந்த வீட்டைக் கட்டுவதற்கு எத்தகைய பங்காற்றியிருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் இஞ்சினியராக இருப்பார் என்றுதான் முதலில் நினைத்தேன்.  ஆனால், அவர் அணிந்திருந்த வேட்டியின் வண்ணமும், வெள்ளை சட்டையும், பிசிறில்லாமல் நெற்றியில் வரைந்திருந்த சந்தனக் கோடுகளும் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறின. ஒருவேளை மேஸ்திரியாக இருக்கலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் வெயில் அண்டாத மிணுமிணுப்பான கருத்த நிறம் அவர் மேஸ்திரி இல்லை என்பதை சொல்லியது. பிறகு, எந்த வகையில் அவர் இந்த வீட்டைக் கட்டுவதற்கு உதவி செய்திருப்பார்..? நிதி எதுவும் வழங்கியிருப்பாரோ..! இருக்கலாம், அப்படித்தான் தெரிகிறது என்று நினைத்தபடி இருந்தேன். சுப்பிரமணி  என்னைப் பார்த்துவிட்டான்.

“வா வா வா… எப்ப வந்த, மூச்சு விடாம வந்து உக்காந்துருக்க…” என்று பந்தலுக்கு இறங்கி வந்தான்.

“இப்பதான் வந்தேன்… சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தீங்க… அதான் பேசாம உக்காந்துட்டேன்…” என்று எழுந்தேன்.

அந்த இளைஞரும் என்னை முன்பே அறிந்தவர் போல முகம் மலர்ந்தபடி அருகில் வந்து, “வாங்கண்ணே… நேத்தைய கிரஹப்பிரவேசத்துக்கு இன்னிக்கு வந்துருக்கீங்க… அதுசரி, டவுன்ல இருந்தா நெனச்ச நேரத்துக்கா ஓடியாற முடியும்..? அப்புறண்ணே, நல்லாருக்கீங்களா..?  ஊர காலி பண்ணிட்டு போனப்புறம் எங்களயெல்லாம் சுத்தமா மறந்துட்டீங்களண்ணே..?” என்று சரவெடியைப் பற்ற வைத்தது போல படபடவென்று பேசினார்.

இப்போதும் அவரை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.  சுப்பிரமணியிடம், “தம்பி யாரு…?” என்று கிசுகிசுப்பாகத்தான் கேட்டேன். அவன் “என்ன இப்டி கேட்டுப்புட்ட… தம்பிய தெரியலயா..?” என்று சாலையில் பூசணிக்காய் உடைப்பதைப் போல படாரென்று கேட்டுவிட்டான். நான் தர்மசங்கடமாய் இளைஞரைப் பார்த்து சிரிக்க, “சின்ன வயசுல பாத்ததுல்ல… அதான் இன்னாருன்னு தெரியல… நான் தெய்வான மவன் வனமூர்த்திண்ணே..” என்று இளைஞர் சொல்லவும், உள்ளுக்குள் பூ மலர்ந்ததுபோல, “அட, ஆமால்ல” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். தெய்வானையின் முகச்சாயல் வனமூர்த்தியின் முகத்தில் பதிந்திருந்தாலும், சுப்பிரமணி  சொன்ன வார்த்தைகளும், வழங்கிய மரியாதையும் அதை உணரவிடாமல் செய்துவிட்டது.

வனமூர்த்தியிடம், “செத்த இருங்க… ஓடிறாதிய… வீட்டச் சுத்திக் காட்டிப்புட்டு வந்துடுறேன்…” என்று அவனை இருக்கையில் அமர்த்திவிட்டு, என் கையைப் பிடித்து இழுத்தான் சுப்பிரமணி. ஹால், படுக்கையறை, சமையலறை என ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று காட்டினான். ஆனால் அவை எதுவும் என் கண்களைத் தாண்டி கடக்கவில்லை.

அப்போது, எங்கள் குடும்பம் இந்தக் கிராமத்தில்தான் வசித்தது. நான் கல்லூரிக்கு போய்க் கொண்டிருந்தேன். தம்பியும் தங்கையும் மருங்குளம் பள்ளியில் படித்தார்கள். அப்பா அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கம்பவுண்டராக இருந்தார். அம்மா மொத்த வீட்டையும் தலையில் தூக்கி வைத்திருந்தது. குடும்பத்துக்குத் தேவையான எரிபொருள் அப்பாவின் மாதச் சம்பளம் மட்டும்தான். ஆனால் அவருக்கோ அடிக்கடி உடல்சோர்வு ஏற்பட்டு வீட்டிலேயே படுத்துக்கொள்வார். மருத்துவரிடம் அழைத்துச் சென்றால், இரண்டு நாட்கள் தெம்பாக இருப்பார். பின் வழக்கம்போல ஏதாவது ஒரு தொந்தரவு தொற்றிக்கொள்ளும். அம்மாவிற்கோ வேண்டாதவர்கள் யாரோ செய்த செய்வினைதான் குடும்பத்தின் முதுகெலும்பைப் போட்டு நெரிக்கிறது என்கிற ஆழமான சந்தேகம். ஆனால் அப்பா உட்பட எங்களில் யாருக்கும் அதில் சிறிதளவும் நம்பிக்கை இல்லை. அம்மாவின் பிடிவாதத்திற்கு முன்பு, எங்களுடைய நம்பிக்கையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதுதான் எங்கள் குடும்பத்தின் நிலை. அம்மா ஒரு வெள்ளிக்கிழமையின் முன்மதியத்தில், என்னை வற்புறுத்தி துணைக்கு அழைத்துக்கொண்டு தெய்வானையை பார்க்கப் போனது.

இரண்டு ஊர்களுக்கிடையே இருக்கும் தைலமரக் காட்டின் நடுவில் இருந்தது தெய்வானையின் கோயில். மலைப் பாம்பென நீண்டுக் கிடக்கும் ஒற்றையடி குறுக்குப் பாதையில் அரை மணி நேரத்திற்கு நடந்து கோயிலை அடைந்தோம். அதே ஊரைச் சேர்ந்தவன் என்றாலும் முதல் முறையாக அப்போதுதான் தெய்வானையின் கோயிலுக்குள் நுழைந்தேன். தென்னையோலை வேய்ந்திருந்த குடிசையின் நடுவில் துணித்தடுப்பு கட்டப்பட்டிருந்தது. வெளிப்பக்கம் பார்வையாளர்கள் காத்திருக்க, உள்ளறையில் தெய்வானை யாருக்கோ ‘குறி’ சொல்லிக் கொண்டிருந்தது. எதிரில் இருந்த புளிய மரத்தடியிலும் ஆணும் பெண்ணுமாய் கொஞ்சம் கூட்டம் இருந்தது. தெய்வானைக்கு உள்ளுரில் பெரிய வரவேற்பு கிடையாது. வெளியூர்காரர்களிடம்தான் நல்ல மவுசு. வாடகை கார் எடுத்துக்கொண்டு வந்து இறங்குவார்கள்.

திருப்தியான முகக்கலையுடன் துணித்தடுப்பை விலக்கிகொண்டு ஒரு தாயும் மகளும் வெளியேற, புற்றுக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் நாகப்பாம்பாக தலையை வெளியே நீட்டிய தெய்வானை, பார்வையை அரை வட்டத்திற்கு உலவவிட்டு கண்களை மூடி, “நீ வா…” என்று அம்மாவை உள்ளே அழைத்தது. அம்மாவுடன் எழுந்து நானும் உள்ளே போனேன். குங்குமமும், மஞ்சளும் தூவியிருந்த பாம்புப் புற்றின் ஓரம் சாணம் மெழுகியத் தரையில் சணல் சாக்கு விரித்து அமர்ந்திருந்தது தெய்வானை. சிவப்பு நிற பாவாடையை மார்பு வரைக்கும் ஏற்றிக் கட்டியிருந்தது. மொட்டைத் தலைக்கு சந்தனம் குழைத்து பூசியது போல முகத்தில் மஞ்சள் பூசியிருந்தது. நெற்றியில் பெரிய வட்ட குங்குமம் வைத்து தலைமுடியை விரித்துப் போட்டிருந்தது. அருகில் தரையோடு தரையாக பூசி மெழுகிய மண்சமாதி. அதன் கழுத்தில் அணியப்பட்டது போன்று தடிமனான இரும்புச் சங்கிலி. பின்புறத் தரையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த பெரிய பெரிய அம்மன் படங்கள், வேப்பிலைக் கொத்துகள் என அந்த இடமே அச்சமூட்டுவதாக இருந்தது.

நான் சற்றுப் பின்தள்ளி அமர்ந்துகொண்டேன். அம்மா குடும்பத்தின் சூழலையும், அப்பாவின் உடல்நிலையையும் பற்றி சற்று விரிவாகவே கவலை தோய்ந்த குரலில் ஒப்பித்தது. தெய்வானை அனைத்தையும் கவனமாய் உள்வாங்கிக்கொண்டு, கண்களை மூடி ஏதோ மந்திரம் போல முணுமுணுத்து பின், மூன்று முறை சோழி போட்டுப் பார்த்தது. கடைசியாக, சங்கிலியைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு நிதானமாகவும் திருத்தமாகவும், “உன் விரோதிக யாரோதான் மந்திரிச்சத் தகட, குடியிருக்குற மனையில கொண்டுவந்து பொதைச்சிருக்கவோ… அதான், புளியம்பழம் உலுக்குற மாரி குடும்பத்த உலுக்கு உலுக்குனு உலுக்குது… வர்ற செவ்வாக் கெழம தகட நீக்கிரலாம்… இதுல குறிச்சிருக்குற சாமான வாங்கி வையுங்க…” என்று அருகில் இருந்த ஓலைக்கூடையில் இருந்து ஒரு நீளமான காகிதத்தை எடுத்து நீட்டியது.

தைலமரக் காட்டில் திரும்பி வரும்போது “நான் அப்பவே சொன்னேன்… நீங்கதான் நம்ப மாட்டியன்ட்டியெ… சுத்தி இருக்க எந்த குச்சிக்காரியளோ சேந்துதான் இந்த வேலைய பண்ணிருக்காளுவோ… இல்லன்னா நல்லாருந்த குடும்பத்துக்கு எங்கேருந்து வரப்போவுது சீக்கு…”  என்று அம்மா புலம்பியபடியே வந்தது. அடிக்கும் உச்சி வெயிலும், அம்மாவின் பேச்சும் எனக்கு எரிச்சலாக இருந்தது. அம்மாவைப் பார்த்து, “செத்த பேசாம வர்றியா… இந்த காலத்துலயும் போயி பில்லி சூனியம்னுட்டு… அதுவும் உக்காந்த எடத்துல இருந்துகிட்டு வீட்டுல பொதைச்சு வச்சிருக்கத கண்டுபுடிருச்சாம்… யாராவது இளிச்ச வாயி கெடைச்சா, நல்லா புடிங்கி திங்கலாம்னு பாக்குது… லிஸ்ட்ட பாத்தேல்ல… சேவக்கோழி, துணிமணி, பழவகைனு… ஊர ஏமாத்துற மாதிரி  நம்மளயும் ஏமாத்தப் பாக்குது… நீயும் நம்புற…”

“நீ பேசாத… தெய்வானை சொன்னா சரியாத்தான் இருக்கும்… எந்த நாடுமாடு சிறுக்கியோதான் கழிப்பு கழிச்சு என் வீட்டுக் கொல்லையில எறிஞ்சிட்டு பொயிருக்காளுவோ… செவ்வாக் கெழம நீயும் பாக்கத்தான போற, அன்னிக்கு இருக்கு… அவளுக மசுற இழுத்து வச்சு அறுக்குறனா இல்லியா பாரு…” என்று பொருமியபடியே வந்தது. எனக்கு எரிச்சல் போய், அச்சம் தொற்றிக்கொண்டது. தெய்வானை சொன்னது போலவே வீட்டில் தகடு கிடைத்துவிட்டால், அன்று தெருவே நாறிப் போகும் அளவிற்கு அம்மா சண்டைக்குப் போகும். ஒருத்தியையும் விட்டு வைக்காது. எனக்கு யோசனையாகவே இருந்தது. வீட்டிற்குள் வந்து யாரும் தகடு பதிக்கப் போவதில்லை. அது அம்மாவின் கற்பனைதான். தெய்வானையைப் போன்ற சூனியக்காரிகளுக்கு அம்மாவைப் போன்ற பலவீனமானர்கள்தான் இலக்கு. நாம் மட்டும் கவனிப்பாக இருந்தால் தெய்வானையின் தந்திரத்தை தடுத்துவிடலாம் என்று தோன்றியது.

செவ்வாய் கிழமை நான் கல்லூரிக்குப் போகவில்லை. அப்பா, தம்பி, தங்கை மூவரும் விடுப்பு எடுத்துக்கொண்டார்கள். நான் சுப்பிரமணியை துணைக்கு அழைத்துக் கொண்டேன். அவனிடம், “தெய்வான சொல்றமாரி வீட்ல எந்த எடத்துலயும் தகடு பொதைக்கல… அது வந்துதான் நம்மள மட மாத்திவிட்டு எங்குனயாவது வைக்கும். நாம உஷாரா இருந்தாப் போதும், கையோட புடிச்சிப்புடலாம்…” என்றேன். சுப்பிரமணி ஆர்வமாய் தலையாட்டினான். தகடு கிடைத்த பின்பு நிகழப்போகும் விளைவை விட, கண்ணுக்கு முன்பு ஒரு பெண்மணியிடம் ஏமாந்து போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. சுப்பிரமணியிடம், “நீ தெய்வானயோட கண்ணையே பாத்துகிட்டு இரு… சாமியாடி சத்தம்போட்டு கவனத்த திசை திருப்பலாம்னு பாக்கும்… நீ என்ன கலவரம் நடந்தாலும் கண்ணுலருந்து மட்டும் பார்வைய வெலக்கிறாத… மத்தத நான் பாத்துக்குறேன்.  நம்மள மீறி எப்டி தகடு வக்கிதுன்னு பாத்துறலாம்…” என்று திட்டத்தோடு இருந்தேன்.

தெய்வானை வந்தது. உடன் பத்து பனிரெண்டு வயதுடைய மகன் வனமூர்த்தி, குட்டிசாமியார் போல அப்பவே சிவப்புத் துண்டும், சிவப்பு சட்டையும் அணிந்திருந்தான். தெய்வானை கொடுத்த பட்டியல்படி வாங்கிய பொருட்களையெல்லாம் எடுத்து அதன் முன் பரப்பிவிட்டு, சுப்பிரமணியைப் பார்த்து கண் ஜாடையில் ‘கவனமாக இரு’ என்றேன். அவனும் ‘சரி’ என்பதுபோல் தலையசைத்தான். தெய்வானையின் மகன், தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து அம்மன் போட்டோவையும் இரும்புச் சங்கிலியையும் எடுத்து வெளியில் வைத்து பூஜைக்கு ஆயத்தமானான். தெய்வானை கையோடு கொண்டு வந்திருந்த சிவப்பு நிறப் பாவாடையை எடுத்துக்கொண்டு உடை மாற்றுவதுபோல, பின்வீட்டிற்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டது. சுப்பிரமணி என்னை ஏமாற்றமாகப் பார்த்தான். நான் சொன்னேன், “கசாலைலருந்து தகடு எடுத்துச்சுன்னு வச்சுக்க, இப்ப உள்ள போயி வச்சதாதான் இருக்கும்… அத அப்றம் பேசிக்கலாம்… நீ அசால்ட்டா இருந்துடாத…” என்று அவனை உற்சாகமாக்கினேன்.

கதவைத் திறந்துகொண்டு தெய்வானை வெளியே வந்தது. பளபளக்கும் சிவப்பு பாலியெஸ்டர் பாவாடையை மார்பு வரைக்கும் ஏற்றிக் கட்டியிருந்தது. உடம்பில் வேறு துணியில்லை. கழுத்தில் ஒரு தாலிக்கயிறும் ஒரு பாசிமாலையும் மட்டும் வெளியே தெரியும்படி போட்டிருந்தது. முகத்தில் மஞ்சளும், நெற்றியில் வட்டக் குங்குமம் ஈரமாக இருந்தது. அவிழ்த்துவிடப்பட்ட தலைமுடி தோள்களில் கிடந்தது. எனக்கு புரிந்துவிட்டது. சுப்பிரமணியை அருகில் அழைத்து கிசுகிசுப்பாக, “தல முடிக்குள்ளதான் தகட சொருவி வச்சிருக்கா… சாமியாடுற மாறி தலமுடிய சிலுப்பி தகட தள்ளி விட்ருவா… இல்லன்னா, பாவாட நாடாவ சுருட்டியிருக்க எடத்துல சொருவி வச்சிருப்பா… இத நான் பாத்துக்குறேன்… நீ தலைமுடியிலயும் ஒரு கண்ண வச்சிக்க…” என்று சொல்லிவிட்டு, தெய்வானையின் கைகள் எங்கெங்கெல்லாம் போகிறது என்று உன்னிப்பாக பார்க்கத் தொடங்கினேன்.

அம்மன் போட்டோக்கள் முன் அமர்ந்த தெய்வானை, அப்பாவை எதிரில் கைகாட்டி உட்காரச் சொன்னது. அப்பா உட்கார்ந்ததும், அதற்காகவே காத்திருந்தது போல அம்மா  ஒரு குடம் தண்ணீரை எடுத்து அவர் தலையில் ஊற்றியது. அப்பா சிறுவனைப் போல என்ன நடக்கிறதென புரியமால் விழித்துக்கொண்டிருந்தார். நான் தெய்வானையின் கைகளில் கவனமாக இருந்தேன். அந்தக் கைகள் ஊதுபத்தியை ஏற்றி வைத்தது. சாம்பிராணி புகை போட்டது. சூடம் ஏற்றியது. எழும்பிச்சம்பழத்தை அரிந்து குங்குமம் தடவி காகம் விரட்டுவது போல் எதிரெதிர் மூலையில் வீசியது. சேவலை கரகரவென்று அறுத்தது. தம்பியும் தங்கையும் பக்தியும் பயமுமாக வெறித்துப் பார்த்தபடி இருக்க, இரத்தம் சொட்டும் சேவலை தூக்கிய வனமூர்த்தி வீட்டைச் சுற்றி மூன்று வட்டம் போட்டான். தம்பியும் தங்கையும் அவன் பின்னால் ஓட, நானும் சுப்பிரமணியும் அசையாமல் தெய்வானையை பார்த்தபடி இருந்தோம். தெய்வானை எங்களிருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, சாமியாட்டம் ஆடத் தொடங்கியது.

குளவிக்கல்லில் இட்லிக்கு மாவு ஆட்டுவதுபோல, அமர்ந்தபடியே சாமியாடிய தெய்வானை, “அக்னி மூலையில… எரியிற அடுப்புக்கு மேல… ஓட்டு ஓரமா… முடிஞ்சு வச்சிருக்கா… அள்ளியாந்து நெருப்புல போடுறி…” என்று நாக்கைக் கடித்து உரக்க கத்தியபடி சமையலறைக்கு ஓடியது. அப்பாவைத் தவிர எல்லோரும் பின்னால் ஓடினோம். கரி படர்ந்திருந்த தாழ்வாரத்து சுவரின் மேற்பரப்பில் கை வைத்து தடவிப் பார்த்தது. என் கவனம் சற்று பிசகிவிட்டது. தெய்வானையின் கையில் தகடு இருந்திருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் தடவிப் பார்த்துவிட்டு சிறிய வட்டம்போல சுவரில் போட்டு, “இந்த எடத்தை இடிங்க..” என்றது. அந்த இடத்தை கடப்பாறையால் இடித்து மாவாக்கி ரவை சலிக்கும் சல்லடையால் சலித்தோம். எல்லோருக்கும் ஏமாற்றம். தெய்வானையின் முகத்தில் மட்டும் எவ்வித சலனமும் இல்லை. இனிமேல்தான் சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்று உன்னிப்பாக கண்காணிக்கத் தொடங்கினோம்.

அடுத்ததாக, பாவாடை மாற்றிக்கொண்ட பின் வீட்டிற்குள் வந்து சாமியாடத் தொடங்கியது. நானும் ஒரு முடிவோடுதான் இருந்தேன். தெய்வானை தலைமுடியை சுழட்டி ஆடியபடியே ஒவ்வொருவராய் நோட்டமிட்டு வர, சுப்பிரமணியின் விரிந்த கண்களைப் பார்த்துவிட்டது. அங்கிருந்து சாமியாடியபடி வெளியே வந்து, வேண்டுமென்றெ குளியலறை கழிவுநீர் வெளியேறும் இடத்தில் வட்டமிட்டது. முகம் சுழிக்க சுப்பிரமணியும் நானும் தோண்டி பீராய்ந்தோம். அங்கும் எதுவும் கிட்டவில்லை. இப்படியாக அது குறிப்பிட்ட அடுத்தடுத்த இடங்களிலும் தகடு கிடைக்காமல் போக அம்மாவிற்கும் மற்றவர்களுக்கும்தான் ஏமாற்றமாய் இருந்தது. தெய்வானைக்கும் எங்களுக்கும் சத்தமில்லாமல் ஒரு போர் நடந்துகொண்டிருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

மதிய சாப்பாட்டு நேரம் கடந்துவிட்டது. தெய்வானைக்கு எங்களிருவரின் கண்ணிலும் மண்ணைத்  தூவ முடியாது என்று தெரிந்துவிட்டது. பசியேறிய நிலையில் உடல் நடுங்க, “இதெல்லாம் சும்மா ஏமாத்துடி… நானும் காலையில இருந்து பாத்துகிட்டுதான் இருக்கேன்… தகடும் இருக்காது ஒரு மண்ணும் இருக்காது… நம்மள நல்லா ஏமாத்தப் பாக்குறா…” என்று தெய்வானையின் காதில் விழுவது போல அப்பா கத்தினார். “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது… பேசமா இருக்கணும் எல்லாம் எங்களுக்குத் தெரியும்…” என்று அம்மா அவர் வாயை அடைத்தது. இதற்குப் பின், தெய்வானை ஏதோ ஒரு தீர்க்கமான முடிவோடு அம்மன் போட்டோ முன் அமர்ந்தது போல் இருந்தது. கண்களை மூடி உக்கிரமாக மந்திரங்கள் சொல்லத் தொடங்கியது. சுப்பிரமணி உட்பட அனைவரும் சற்று மிரட்சியாக பார்த்துக்கொண்டிருக்க, தெய்வானை வேப்பிலைக் கொத்தால் அடித்தபடி சாமியாடத் தொடங்கியது. என்ன நடந்தாலும் விடுவதாக இல்லை என்று நான் விழிப்பாக இருந்தேன். தெய்வானை உரத்த குரலில், “எல்லாரும் எந்திரிச்சு வெளியே போங்கடா…” என்று அலறியது. எல்லோரும் வெளியேப் போக, நான் சுப்பிரமணியின் கையைப் பிடித்தேன். அவன் என் கையை உதறிவிட்டு வெளியேறினான். நான் மட்டும் நிற்பதைப் பார்த்து வனமூர்த்தி “அண்ணே… சாமி சொல்லுதுல்ல… வெளியே போங்க…” என்றான். குரலை உயர்த்திய தெய்வானை, “அவன் நிக்கட்டும்… நீ வெளியே போ… போவும்போது கதவ சாத்திட்டுப் போ…” என்று ஆட்டத்தை நிறுத்தாமல் உறுமியது. அவன்  மிரண்ட விழிகளுடன் கதவைச் சாத்திவிட்டு வெளியேறவும், தெய்வானை வெறிகொண்டது மாதிரி குதித்து குதித்து ஆடத் தொடங்கியது. முதல்முறை ஒரு பயம் எனக்குள் பரவத் தொடங்க, “நடிக்கிறாடா… ஏமாந்துறாத… உஷாருடா உஷாரு…” என்று தேற்றிக்கொண்டேன். உக்கிரமாக ஆடிய தெய்வானை சட்டென ஆட்டத்தை குறைத்து சாமி சிரிப்பது போல கலகலவென்று சிரித்தது. நான் எதுவும் புரியமால் அது முகத்தைப் பார்த்தேன். அதன் கண்கள்  கூர்மையாக என்னை பார்த்தபடி இருக்க, கைகள் ரெண்டும் பாவாடை நாடாவின் முடிச்சை சட்டென அவிழ்த்துவிட்டு முழுநிர்வாணமாய் நின்றது. நான் வெடுக்கென பார்வையைத் திருப்பிக்கொண்டேன். தெய்வானையின் சிரிப்பு சத்தம் அடங்கியிருந்தது.

அம்மாவுக்கு தகடு கிடைத்துவிட்டதில் அப்படியொரு மகிழ்ச்சி. உள்ளங்கை அளவிற்கு இருந்த தகடு, ஏதோ நெடுநாட்களுக்கு முன்பு புதைத்து வைத்தது போன்று விளிம்புகளில் துருவேறி இருந்தது. பழையத் துணியை தரையில் வீசி மண்ணெண்ணெய்யை ஊற்றிய அம்மா “எங்குடியில பில்லி வச்சவ வூட்டுல, வண்ணப் புத்துதான் மொளைக்கும்…” என்று தகடை இடது கையால் நெருப்பில்  எறிந்தபடி கச்சேரியைத் தொடங்கியது.

வனமூர்த்தி தாம்பளத்தட்டில் இருந்த தட்சனைப் பணத்தையும், பூஜை பொருட்களையும் மூட்டை கட்டினான். தெய்வானை கழுத்து வரை புடவையைச் சுற்றிக்கொண்டு எதிரில் இருந்த சுவரை வெறித்துபார்த்தபடி இருந்தது. நான் வனமூர்த்திக்கு உதவியபடி தெய்வானையைப் பார்த்தேன். அதன் முகத்தில் ஒரு வெளிச்சம் மௌனமாய் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எனக்குதான் உள்ளுக்குள் ஒரு குற்றவுணர்ச்சி, தெய்வானையை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம் என்று. அதன்பிறகு,  சில வருடங்களிலேயே தஞ்சாவூருக்கு இடம்பெயர்ந்துவிட்டோம். அப்பா மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் வரை முன்புபோல் உடல்நலிவுறாமல் நிம்மதியாக வேலைக்கு போய் வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மாடிப்படிகளில் இறங்கி,  சாமியானா பந்தலுக்கு வந்தோம். நிழல் உள்ளுக்குள் சற்று ஒடுங்கியிருந்தது. சேரை தள்ளிப்போட்டு அமர்ந்தோம். இந்த வீட்டைக் கட்டுவதற்கு வனமூர்த்தி எந்த வகையில் உதவினான் என்ற கேள்வி எனக்குள் அரித்துக்கொண்டே இருந்தது. அதை நேரடியாகக் கேட்காமல், “வீடு கட்ட எவ்ளோ புடிச்சது சுப்பு..?” என்றேன். “பதினஞ்சுன்னு சொல்லிதான் ஆரம்பிசோம்… முடிக்கும்போது பதினெட்ட தொட்ருச்சு…” என்று குறைபட்டுக் கொண்டானென்றாலும், அதில் ஒரு தற்பெருமை தெரிந்தது. வனமூர்த்தி விடைபெற்றுக்கொள்ள எழுந்திருக்க, “காபி போடுறாங்க, குடிச்சிட்டு போவலாம்… இருங்க…” என்று அவன் கையை பிடித்து அமர்த்திவிட்டு, “தம்பிய சின்ன புள்ளயில பாத்த மாதிரி நெனச்சிறத… இப்ப ரொம்ப பெரிய இடம்… இவ்ள நேரம் இங்க இருந்ததே பெருசுதான்… தம்பி மட்டு இல்லன்னா, என்னால இந்த வீட்ட கட்டியிருக்க முடியும்னு நெனைக்கிறியா…?” என்று அவனாகவே வீடு கட்டிய வரலாற்றை சொல்லத் தொடங்கினான்.

“ஒரு வருசத்துக்கு முன்னாடி, பழய வீட்டு திண்ணையில தெருவ பாத்தமாரி உக்காந்துருந்தேன்… அக்னி வெயிலு,  தெருவுல பேருக்கு கூட ஆளு நடமாட்டத்த காணும்… காத்து முண்டல… எனக்குனா ஒரே யோசன… சின்னவளுக்கு சடங்கு சுத்தி வருஷம் ஒண்ணாச்சு… குடியிருக்கிற வீடு கரையான் அரிச்சு கெடக்கு… பொண்ணா பொறந்த புள்ளைக கழுத்துல காதுல கெடக்குறது போக பொட்டு நகை இல்ல… பயல வெளிநாட்டுக்கு தள்ளிவிடலாம்னா, விக்கிறதுக்கு பாலு கறக்குற மாட்டத் தவிர சொல்லிக்கிற மாரி ஒண்ணும் இல்ல… எனக்கு மூச்சு முட்டுற மாரி மாறி இருந்துச்சு… அப்ப பாத்து தம்பி கார்ல இந்த பக்கமாக போவுது…   எனக்கு ஒரு யோசன பட்டுனு தோனுச்சு… தம்பிய பாக்க எங்கெங்கெ இருந்தெல்லாம் வர்றாங்கெ… கட்சிக்காரய்ங்கெ வர்றாங்கெ… ஆபீசருங்க வர்றாங்கெ… காரு போட்டு வந்து ஒருநா முச்சூடும் உக்காந்து பாத்துட்டு போறாங்கெ… வர்ற எல்லாருக்கும் ஆளுக்கு தக்கனம் வார்த்த சொல்லி, வாவு வழி பண்ணிவிடுதே… நாம போயி நின்னா என்னன்னு எனக்கு தோனுது…

கோயிலுக்கு ஓடுனேன். அங்க ஒரே கூட்டம் கும்பல்… தம்பி இன்னும் வரலன்னு வேற சொன்னானுவோ… நேரா வீட்டுக்கே பொயி ஆள புடிச்சிட்டேன்.   இன்னன்ன மாறி பிரச்சன. குடும்பம் கவுத்துப் போட்ட தட்டுக்கூடயா கெடக்கு… என்ன ஏதுன்னு பாத்து நீதான் எனக்கு ஒரு நல்ல வழி பண்ணிவுடணும் அப்டினேன். தம்பி தாடைய தடவின மேனிக்கு யோசிச்சுட்டு, ‘நாளக்கி காலமர வீட்டுக்கு வர்றேன்’னு சொன்னுச்சு. சொன்ன மாறியே, விடிஞ்சதும் வந்துருச்சு. வீட்ட ஒரு வாட்டி சுத்தி பாத்துச்சு.  என்ன நெனச்சுச்சோ தெரியாது, அன்னிக்கு அந்திலயே ஒரு கோழிய பலி  குடுத்து பூசய போட்டு ‘வீட்ட இடிச்சிப்புட்டு புது மனை போடுங்க… மத்தபடி நீங்க நெனக்கிறதெல்லாம் தானா நடக்கும்…’ அப்டினு சொல்லி பொறப்புட்ருச்சு. கைய புடிச்சி நிறுத்தி, ‘பொழுது விடிஞ்சா என்ன பண்றதுனு தெரியாம முதுவ சொறிஞ்சிகிட்டு நிக்கிறேன்… நீங்க அசால்ட்டா மனைய போடுன்னு சொல்றீங்கனு’ கேக்கவும், பதிலுக்கு அவரு என் கைய இறுக்கி புடிச்சி ‘நானா சொல்றேன்… சாமி சொல்லுது… வர்ற தை மாத்தையில புது வீட்டுல பாலு காச்சுவியனு’ அடிச்சு சொல்லி, சுத்தியம் முத்தியும் பாத்துட்டு, தனியா இழுத்துட்டு போயி, ‘‘இத சொல்லக்கூடாதுன்னுதான் நெனச்சேன்… நீங்கன்றதால சொல்றேன்…” என்றபடி, “இன்னிலேருந்து சரியா நாப்பத்தெட்டாம் நாளுக்குள்ள வீட்டுல இருக்க ஒரு உசுரு ஜீவன முடிச்சிக்கிரும்… எழுதி வச்சிக்கங்க… அப்டி நடந்தா மனைய போடுங்க… இல்லன்னா ஏம்பேச்ச நம்ப வேண்டாம்…” அப்டினு சொல்லிட்டு கௌம்பிருச்சு.

அப்பக்கி எனக்கு திக்குனு இருந்தாலும், ‘வண்டிக்கு பெட்ரோல் ஊத்த காசில்லாம இருக்குறேன், வீடு கட்டணுமாம் வீடு…’ அப்டின்னு நெனச்சிக்கிட்டு நாம்பாட்டுக்கு இருந்துட்டேன். அத மறந்துட்டேன்னே வச்சுக்கங்களேன். ஆனா, தம்பி சொன்ன மாறி கரெக்ட்டா நாப்பத்தெட்டாம் நாளு, தூங்கி எழுந்திருச்சு வாய் கொப்பளிக்கலாம்னு தொட்டிப் பக்கம் போறேன், நாயி கெடந்து கொலக்கிது, என்னான்னு போயி பாத்தா, வெள்ளக்கல்லுல கட்டிக்கெடந்த பசுமாடு வாயில நொரை தள்ளி செத்துக் கெடக்கு. எனக்கு உசுரே போயிருச்சு. என்னப் பாத்ததும் கன்னுக்குட்டி வேற பாலுக்கு தவ்வ ஆரமிச்சிருச்சு. செத்தமாடு கண்ணுல படாத மாரி கன்னுக்குட்டிய தனியா கொண்டு வந்து கட்டிப்புட்டு, தம்பிய பாக்க ஓடுறேன். போயி ஆளப்புடுச்சு வெவரத்த சொன்னா, தம்பி “சங்கிலியப்பா…”ன்னு கோயிலு தெசையப் பாத்து கும்பிடுது.

சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க, தம்பி மொத செங்கலு எடுத்து வக்கயில எங்கையில சொல்லிக்கிற மாரி காசு இல்ல… ஆனா, ஒரு நம்பிக்க வந்துருச்சு… இப்ப வீடு எந்திருச்சு நிக்கிறத பாக்கயில எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு…” என்று சொல்லி முடித்தான்.

நான் அமைதியாக இருந்தேன். எனக்குள் ஒரு கனத்த மௌனம் பெருகியது. அப்போது, எனக்கு ஏன் அப்படித் தோன்றியது என்று தெரியவில்லை. வனமூர்த்தியைப் பார்த்தேன். அவன் பார்வை எங்கோ தூரத்தில் நிலைத்திருந்தது. அப்போது, அவன் முகத்தில் அன்று தெய்வானையின் முகத்தில் படர்ந்திருந்த அதே பிரகாசம் சுடர்ந்துகொண்டிருந்ததை உணர முடிந்தது. என் பார்வை இயல்பாக அருகில் கட்டிக்கிடந்த கன்றுக்குட்டியிடம் திரும்பியது. கன்றுக்குட்டி, தொண்டையில் இருந்து ஒரு உருண்டையை வாய்க்கு கொண்டு வந்து அசைபோடத் தொடங்கியது. அது என்னிடம் எதையோ விவரிப்பது போலத்  எனக்குத் தோன்றியது.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close