சிறுகதைகள்

கோப்ரா – ராம்ப்ரசாத்

சிறுகதை | வாசகசாலை

Cobra

அப்படித் தான் அதை நான் கேள்வியுற்றேன். அதுவும் எங்கு? Fraiglistல்.

அமெரிக்காவில், பெரும்பான்மையான சட்டத்துக்குப் புறம்பான வஸ்துக்கள் இந்தத் தளத்தில் தான் விளம்பரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். மரிஜுவானா போன்ற போதை வஸ்துக்களாகட்டும், வெடி குண்டுகளாகட்டும், அணு ஆயுதங்களாகட்டும் எதுவாக இருப்பினும் இந்தத் தளம் தான். ஒரே ஒரு வித்தியாசம், அடைமொழி ஒன்று தந்து விடுவார்கள். வெளி ஆட்கள் பார்த்தால் ஏதோ மளிகைப் பொருள் போல் தோன்றும்.

அந்தக் குறிப்பிட்ட வஸ்துவைக் கள்ளச் சந்தையில் தொடர்ந்து அவதானிப்பவர்களுக்கு மட்டுமே புரியும் வகையினதான ஒரு பெயராக இருக்கும் அது. அப்படித் தான் ‘கோப்ரா’ என்று அடைமொழி தரப்பட்டு விளம்பரம் வெளியாகியிருந்தது.

என்னைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேன் பாருங்கள். என் பெயர் தஸ்லிமா. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவள். ஒரு ஐரோப்பியனுடன் கொஞ்ச காலம் வாழ்ந்ததின் பலனாக மூன்று மாதக் குழந்தை இருக்கிறது. குழந்தையின் தந்தையான அந்த ஐரோப்பியன் பி-வைரஸ் காவு வாங்கிய பல்லாயிரம் கோடி பேரில் ஒருவன். அவன் இழப்பும் இழப்புத் தான். ஆனால் அவனாவது பரவாயில்லை. தனக்கென்று ஒரு வாரிசை விட்டுச் சென்றிருக்கிறான் என்று சமாதானம் சொல்ல வைக்கும் சூழலைத் தான் பி-வைரஸ் உருவாக்கியிருக்கிறது என்பேன்.

ஆகவே, குழந்தையையும் நானே பார்த்துக் கொள்கிறேன், அதுவும் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்தபடி. அதற்கு வழி செய்து தந்தமைக்கு பி-வைரஸுக்கு நன்றிகள்.

ஜர்னலிசம் படித்திருக்கிறேன். ஒரு சுமாரான பத்திரிக்கையில் வேலை. சமயத்தில் வேலைக்கென கள ஆய்வு செய்ய வேண்டி இருக்கும். அப்போது மட்டும் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து வெளியே செல்வேன். அப்படிச் செல்லும் போதெல்லாம் என் அறையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் தோழி அமைராவிடம் என் மகளை விட்டுச் செல்வது வழக்கம்.

அமைராவுக்கு மலிவான விலையில் பொருட்கள் வாங்குவது இஷ்டம். அதை விடவும் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். இதன் காரணமாகவே  குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவெனவே பிரத்தியேகமாகப் படித்திருக்கிறாள். ஆயினும் பி-வைரஸ் புண்ணியத்தில் அவளுக்கும் அவ்வளவாக வேலை இல்லை. இருப்பினும் வேலை செய்த நாட்களில் அதிகம் சேமித்திருந்தபடியால், இப்போது வேலையில்லாமல் இருப்பது குறித்து அவள் அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. அது போக, அமெரிக்க அரசாங்கம் இந்த வினோதமான சூழ்நிலைக்காக வீட்டிலிருக்க நேர்ந்த அனைத்து அமெரிக்கப் பிரஜைகளுக்கும் உதவித்தொகை வேறு தருகிறது. வீட்டிலிருக்கும் வேளைகளில், பி-வைரஸின் பரவலால் விலை வீழ்ந்து சல்லிசாகக் கிடைக்கும் பொருட்களை வாங்கிச் சேர்த்த வண்ணம் இருக்கிறாள் அமைரா.

அவள் தாறுமாறாகச் செலவு செய்வதை வைத்து, இனி வாழ்வதற்கு ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு அவள் வந்து விட்டாளோ என்று எனக்கும் கூட இரண்டொரு முறை தோன்றியிருக்கிறது. ஆயினும், எனக்குள் நம்பிக்கை எஞ்சியிருந்தது.

என்ன தான் பத்திரிக்கைத் துறையில் வேலையில் இருந்தாலும், தொழில் ரீதியான வளர்ச்சி இல்லை. வளர்ச்சிக்கு, ஒரு தலைப்புச்செய்தி தேவை. ஒரே ஒரு தலைப்புச் செய்தி. அதைப் பார்த்ததுமே என் பத்திரிக்கை லட்சம் பிரதிகள் ஒரே நாளில் விற்று விடவேண்டும். அதற்கெனவே உழைத்துக் கொண்டிருந்தேன். அப்படியான ஒரு செய்தியைத் தேடிக் கொண்டிருந்தபோது இது என் கண்ணில் பட்டது.

“கோப்ரா”.

முதலில் சர்ப்பம் தொடர்பான எதையோ தான் கள்ள சந்தையில் விற்கிறார்களோ என்று எண்ணினேன். செல்லப் பிராணிகளை விற்பது சட்டத்துக்குப் புறம்பானது இல்லை. சர்ப்பங்களைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். விஷப் பற்களைப் பிடுங்கி விட்டால், சர்ப்பங்கள், குளிருக்கு கழுத்தைச் சுற்றி இட்டுக் கொள்ளப் பயன்படும் உள்ளன் துணிகள் போலத் தான். எவ்விதப் பாதகமும் இல்லை. ஆகவே அதை நான் முதலில் சட்டை செய்யவில்லை.

ஆனால், உண்மையிலேயே அது சர்ப்பம் தானென்றால் ஏன் ஒன்று பத்தாயிரம் டாலருக்கு விற்கப்பட வேண்டும்? சர்ப்பம் அத்தனை விலை மதிப்பானது அல்ல. இது தான் அந்த விளம்பரத்தை உற்று நோக்க வைத்தது. அது மட்டுமில்லாமல், ஒரு விளம்பரம் வந்த பத்து நிமிடங்களுக்குள் அது விற்றும் விடுகிறது. அந்த வேகமும் சற்று வினோதமாகவேபட்டது. இதில் வேறு என்னவோ இருக்கிறது என்று உணர்ந்த உடனேயே அந்த விளம்பரத்தைப் பின் தொடரத் துவங்கி விட்டேன்.

கல்லூரியில் என்னுடன் படித்து என்னுடன் முதலில் டேட் வந்தவன் தாஹிர். அவன் ஒரு ஹேக்கர். அவனை அலைபேசியில் அழைத்தேன். Fraiglistல் மீண்டும் அந்த விளம்பரம் வரின், அது எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிந்து சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தேன். மீண்டும் ஒரு முறை அவனுடன் நான் டேட் செல்வதானால், உதவுவதாக பதிலளித்தான். அவனுடன் ஒரே ஒரு முறை தான் டேட் சென்றேன். அதன் பிறகு, டேட் செல்ல அவனை நான் தேர்வு செய்யவில்லை. ஆனால், இந்த காரியத்துக்கு ஒரு ஹாக்கரின் உதவி தேவை. தாஹிர் படுக்கையில் பிரமாதமானவன் இல்லை எனினும், அவனின் ஹாக்கிங் திறமையில் பிரமாதமானவன் தான். இயற்கை, எல்லாத் திறமைகளையும் ஒருவரிடமே திணிப்பதில்லை. ஆனால், பெண்ணுக்கு எல்லாத் திறமைகளும் தேவைப்படுகிறதே? இந்த இக்கட்டை எவ்விதம் எதிர்கொள்வது?

இதைச் சொல்லும் போது இன்னொன்றையும் சொல்ல வேண்டும். நான் மிக அதிகம் முறை டேட்டுக்குச் சென்றவன் ஒரு ப்ளம்பர். ப்ளம்பிங் வேலை செய்பவன். மண்டைக்குள் ஒன்றுமில்லை. ஆனால், சில நாட்கள் மட்டுமே நீள்வதான டேட்டுக்கு அது தேவையுமில்லை. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆண் என்று மாற்றிக் கொண்டே இருப்பதில் உள்ள பாதகமாக நான் பார்ப்பது என்னவென்றால், என்னைத் தவிர ஏனைய அனைத்தும் தற்காலிகம் என்கிற பிம்பம் உருவாவது தான்.

ஒரு குவி கண்ணாடி கொண்டு உலகைப் பார்ப்பதைப் போல, வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஒரு தனி மனிதனின் நிமித்தம் ஒருங்கிணைப்பது பலவற்றை அனர்த்தமாக்குகிறது.

தாஹிரிடம் வேலை முடிந்ததும் அவனுடன் டேட் செல்வதாகச் சொல்லி ஒப்புக் கொண்டேன். Fraiglistல் அந்த விளம்பரம் அடுத்த முறை வந்தவுடனே தன் திறமையைப் பயன்படுத்தி அந்த இணையக் கணக்கு எங்கிருந்து செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து, அது எந்த முகவரியைச் சேர்ந்தது என்பதையும் உருவித் தந்தான்.

அது ஒரு எளிமையான முகவரி. ஒஹையோவில் இருந்தது. இதற்கு கள ஆய்வு நான் மட்டும் தான் செய்ய இயலும். ஆதலால் ஓரிரு தினங்களில் திரும்பி விடுவதாகச் சொல்லி என் குழந்தையை அமைராவின் பொறுப்பில் விட்டேன். மூன்று மாதங்கள் தான் ஆவதால், குழந்தை இன்னமும் கிமிலாக் என்னும் ஃபார்முலா பால் தான் அதிகபட்சம் எடுத்துக் கொண்டிருந்தது எனக்கு வசதியாக இருந்தது.

நான் மட்டும் அடுத்த விமானத்தில் ஒஹையோவிற்கு ஒரு டஜன் முகமூடிகளுடனும், கையுறைகளுடனும், கிருமிக் கொல்லி மருந்துகளுடனும் சென்றேன். ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றேன். அந்த முகவரி இருந்த வீடு இருந்த தெருவின் மூலையில் மறைவாக இருளில் காரை நிறுத்தி விட்டு அந்த வீட்டை நோட்டமிட்டேன். அது ஒரு சாதாரண வீடு. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது. எடுபிடி வேலைகளுக்கென வெளியூர்களிலிருந்து வருபவர்கள் சொற்ப விலைக்கு வீட்டை வாங்கி, இருக்கும் வரை இருந்து விட்டு, ஊரை விட்டு வெளியேறும் போது விற்று விட்டுச் செல்வதுண்டு. அந்த விதமான பயன்பாட்டுக்கெனவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டது போலிருந்தது அந்த வீடு. அது நிச்சயம் தஸ்தாவேஜுகள் சார்ந்த வேலைக்கு மட்டுமென அவன் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது என் ஊகமாக இருந்தது.

அவன் என்னை அதிகம் காத்திருக்க வைக்கவில்லை. ஆறு மணி நேரம் கழித்து அவன் தன் பழைய ஃபியட் காரை எடுத்துக் கொண்டு சாலையில் விரைய, நான் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு அவனைப் பின் தொடர்ந்தேன். அது சுமார் முப்பது மைல் ஊருக்கு வெளிப்புறமாகச் சென்றது. நானும் பின்னாலேயே சென்றேன். அவன் ஒரு பழைய தொழிற்சாலையின் பின் புறம் மறைவாகத் தன் காரை நிறுத்துவதை நான் கவனித்து விட்டு, புதராகத் தெரிந்த ஒரு இடத்தில் என் வாடகைக் காரை நுழைத்து நிறுத்தினேன். பின் அவனை நோட்டமிட்டேன்.

அவன் அந்தப் பழைய தொழிற்சாலைக்குள் நுழைவது தெரிந்து, அவனைப் பின் தொடர்ந்தேன். அந்த வளாகத்தில் இருந்த கட்டிடம்  துருப்பிடித்து, பராமரிப்பின்றி, புதர்களிலிருந்து வெளிப்பட்ட கொடிகள் சுவற்றிலும், இரும்புச் சட்டங்களிலும் ஏறியிருக்க, காளான் சுவரெங்கும் பச்சையாகப் படர்ந்திருந்தது. சுவர்கள் ஆங்காங்கே விரிசலிட்டிருந்தன. அதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், அந்தக் கட்டிடம் மிகவும் பலவீனமாக இருப்பதாகப்பட்டது. அதையெல்லாம் வைத்து, அதை ஒரு மறைவான, தப்புக் காரியங்கள் பலவற்றுடன் தொடர்புடைய இடம் என்று ஊகித்துக் கொண்டேன். அது என் அட்ரினலினை உசுப்பேற்றியது. என் கையடக்கக் காமிராவில் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.

என்னை யாரும் பார்க்கவோ, தொடர்ந்து வரவோ இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு அங்கிருந்த ஒரு ஜன்னல் வழியே நான் உள்ளே எட்டிப் பார்த்தேன். அங்கிருந்து பார்க்க ஏதும் தெரிந்திருக்கவில்லை. எதையேனும் காண, முதலில் கட்டிடத்திற்குள் நுழைய வேண்டி இருக்குமென்று தோன்றியது. நான் மெல்ல, அந்த கட்டிடத்தின் உடைந்த ஜன்னல் வழியே நுழைந்தேன். கதவொன்று சமீபமாகத் திறந்தபடி ஒருக்களித்திருந்தது. நான் யாரைத் தொடர்ந்து வந்தேனோ அவன் தான் அதில் நுழைந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க அது போதுமானதாக இருந்தது. நான் அந்தக் கதவு வழியே உள்ளே பிரவேசித்தேன். உள்ளேயும் வெறும் ஜன்னல்களே இருந்தன. அவற்றில் ஒன்றில் இருந்த கண்ணாடி உடைந்திருந்தது. நான் அதன் வழியே எட்டிப்பார்த்தேன்.

உள்ளே ஒரு ஆள் நிற்குமளவிற்கு, கண்ணாடிப்பேழைகள் வரிசையாக இருத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில், ஒவ்வொன்றிலும் பாதியளவிற்கு நீர் நிரம்பியிருந்தது. பேழையின் நீர் படாத பகுதிகளில் அடர்த்தியாக பனி போல் படர்ந்திருந்தது. அந்தப் பனியை ஊடுருவி என்னால் பார்க்க முடியவில்லை. நான் கண்களைச் சுருக்கிக் கூர்ந்து அவதானிக்க முயன்றேன். அப்போது என் மண்டையில் எதுவோ பலமாக மோத, கண்களில் பூச்சி பறந்து நான் மயங்கி விழுந்தேன்.

நான் கண் விழித்த போது, என் தோள் வரையிலான நீரில் நான் மூழ்கியிருந்தேன். நான் வெளியிலிருந்து பார்த்த கண்ணாடிப் பேழை ஒன்றுக்குள் இப்போது நானே இருந்தேன். அந்த நீர் சற்று ஜில்லென்று இருந்தது. மேலும் அதில் ஏதேதோ ரசாயன வாடையும் வீசியது. என் மூச்சுக் காற்றின் வெம்மையில் கண்ணாடிப் பேழையின் மீது பனி போல் படர்ந்தது. ஆதலால் உள்ளிருந்து வெளியே அத்தனை தெளிவாகப் பார்க்க சற்றே குனிந்து நிமிர்ந்து, உடலை வளைக்க வேண்டியிருந்தது..

ஒருவாறாகச் சிரமப்பட்டுப் பார்த்ததில், ஏனைய பேழைகளிலும் பெண்களின் உடல்களே கிடப்பது தெரிந்தது. பெரும்பாலும் நிர்வாணமாகவே. அவர்களின் மார்பகங்களிலிருந்து செயற்கையாகப் பால் உறிஞ்சும் மின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்தப் பெண்கள் ஏதோவொரு மயக்கத்தில் தானிருந்தார்கள். அந்தப் பேழைக்குள் இயந்திரக் கரங்கள் இருந்தன. அவைகள் அவ்வப்போது தாழ்ந்து அவர்களின் உடலில் ஊசி போல் ஒன்றைச் செருகின.

எனக்கு என் மகளின் நினைவு வந்தது. என் கை கால்களை நான் பலமாக அசைத்து, தத்தளித்தேன். அப்போது தான் நானும் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தேன். அப்போது ஒருவன் அங்கு வந்தான். அவனை எனக்கு அடையாளம் தெரிந்தது. அவனைப் பின் தொடர்ந்து தான் நான் அவ்விடம் வந்திருந்தேன்.

“பொறு! பொறு.. உன் பெயர்….” என்று விட்டு அவன் தன் கையிலிருந்த காகிதத்தை ஒருமுறை பார்த்து விட்டு,

“பொறு தஸ்லிமா…இத்தனை வேகம் வேண்டாம்” என்றான். என் பெயரை அவன் சரியாகச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. என்னை அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அது எப்படி?

“என்னை உனக்குத் தெரியுமா? நாம் சந்தித்திருக்கிறோமா?” என்றேன் நான்.

“சந்தித்ததில்லை. ஆனாலும் தெரியும்” என்றான் அவன்.

“எப்படித் தெரியும்?”

“புண்ணிய ஆத்மாக்கள் எல்லோரையும் தெரிந்து கொள்ள வேண்டியது எங்கள் வேலை”

“உங்களை எனக்கு இதற்கு முன் தெரியாதே ”

“தெரியும். தெரியாமலா எங்கள் விளம்பரத்தைத் தொடர்ந்து நீ இங்கே வந்தாய்?”

நான் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்க்க,

“சமீபத்தில் பிள்ளை பெற்ற ஆரோக்கியமான தாய்மார்களின் மடிக்கணிணிகளில் மட்டுமே எங்கள் விளம்பரங்களைத் தோன்றச் செய்யுமாறு ப்ரோக்ராம் செய்திருக்கிறோம் நாங்கள்” என்றான் அவன்.

“ஏன்? எதற்கு? இங்கே என்ன செய்கிறீர்கள்? யார் இந்தப் பெண்கள்? இது சட்டத்துப் புறம்பான நடவடிக்கை போல் தோற்றமளிக்கிறது” என்றேன் நான்.

“நீ நிறைய கேள்விகள் கேட்கிறாய் தஸ்லிமா” என்றுவிட்டு அவன் ஒரு பட்டனைத் தட்ட, ஒரு இயந்திரக்கரம் ஒரு ஊசியை என்னுள் செலுத்தியது. அதன் மேல் எழுதப்பட்டிருந்த வரிகளை நான் வாசிக்க முயற்சித்தேன்.

‘பி-வைரஸ்’ என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்ணுற்று லேசாகப் பீதியடைந்தேன்.

“என்ன செய்கிறீர்கள்? இது இது…” என்று நான் ஊர்ஜிதமில்லாமல் இழுக்க,

“கவலைப்படாதே.. இது பி-வைரஸ் தான். உனக்குள் செலுத்தப்படுகிறது. இரண்டு நாளில் இந்த வைரஸின் தாக்கத்தை உன் உடல் உணர ஆரம்பிக்கும்.”

அவன் இப்படிச் சொன்னதும் நான் பீதியில் உறைந்தேன்.

“கவலை வேண்டாம். எங்களிடம் மருந்துகள் உள்ளன. எந்த வைரஸும் ஒரு உடலுக்குள் முழுமையாக ஆட்கொள்ளக் கால அவகாசமெடுக்கும். இந்த வைரஸ் உன் உடலுக்குள் அபாயகரமான அளவில் பெருகி விடும் முன் உன்னை குணமாக்கி விடுவோம். ஆனால் இது துவக்கம் தான். ஒவ்வொரு முறை ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படும் போதும் இந்த வைரஸ் மாறுபாடடைந்து புதிய உருக்கொள்கிறது. நாங்கள் மீண்டும் மருந்து கண்டுபிடிக்கிறோம். குணப்படுத்துகிறோம். இது ஒரு சுழற்சியாகச் செயல்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த வைரஸுக்கான ஆன்டிஜென்கள் மாறுகின்றன. ஒவ்வொரு ஆன்டிஜென்னையும் மருந்தாக்கி மீண்டும் மனித உடலுக்குள் செலுத்த வேண்டி இருக்கிறது” என்றான்.

எனக்குக் குழப்பமாக இருந்தது.

“சரி. அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்றேன் நான்.

“நீ காட்டிற்குச் சென்றிருக்கிறாயா?”

“ம்”

“அங்கே மூலிகைகளைப் பார்த்திருக்கிறாயா?”

“ம்”

“காடு காட்டுத்தனத்தில் கர்வம் கொள்வது. காட்டுத்தனம் என்பதையே ஒரு ஒழுங்கெனக் கொள்வது. ஒரு பெண்ணின் கர்ப்பப்பையைப் போல காட்டுத்தனத்தைத் தன் மடியில் வைத்து சூல் கொள்வது. காடு, அந்தக் காட்டுத்தன்மையை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையாகச் செயல்படுகிறது.

பல வகைகளில், பற்பல விதமான தாவரங்களின், மரங்களின் கூட்டு முயற்சியாக ஒன்று திரட்டப்படும் இந்திரியங்களை, தன் சிக்கலான ஒருங்கிணைப்பால், ஒன்றன் மீது ஒன்றாகச் செலுத்தி, இந்தக் கிரகத்தின் ஆகச் சிறந்த வேதியியல் சாத்தியங்களின் உச்சத்தை, உலகின் எத்தனை நவீன ஆய்வகத்திலும், எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் உருவாக்க முடியாத அரூபமான வேதியியல் சாத்தியங்களின் உச்சத்தைப் பச்சிலைகளாக, மூலிகைகளாக, பூக்களாக, விதைகளாக, வேர்களாக, தண்டாக, பட்டையாக உருவாக்கக் கூடியது. அந்த அரூபமான கிடைத்தற்கரிய வேதியியலை உருவாக்க, காட்டின் காட்டுத்தனம், அதன் சிக்கலான, ஆழமான அமைப்பு இன்றியமையாததாகிறது. வரமாகிறது.”

‘சரி. அதற்கு?’ என்பது போல் நான் அவனையே பார்த்தேன்.

“மனித உடலானது காட்டின் இயற்கைத் தன்மையையொத்த சிக்கலானதும், ஆழமானதும் ஆகும் தஸ்லிமா. எவ்விதக் கலப்படமும் இன்றி, மிகவும் ஆரோக்கியமான முறையில் வளர்த்தெடுக்கப்பட்டு, முறையாகப் பேணப்பட்டு, உடற்பயிற்சிகள் மூலம் சக்தி மிகுவிக்கப்படும் உடலானது, மனித உடலின் இந்திரியங்களைத் தன் சிக்கலான ஒருங்கிணைப்பால் ஒன்றன் மீது ஒன்றாகச் செலுத்தி, மனித உடலின் வேதியியல் சாத்தியங்களின் உச்சத்தை உருவாக்க வல்லது. ஒரு காட்டைப் போலவே.“

“இவ்விதமாக வளர்ந்த ஒரு தாயின் ஆரோக்கியமான, ஆற்றல் பொதிந்த உடலானது, ஒரு வைரஸ் தாக்குதலை எதிர் கொள்கையில், தன் சிசுவுக்குத் தரும் தாய்ப்பாலில் அந்த வைரஸுக்கான எதிர்ப்பு சக்தியை ஆன்டிஜென்களாகத் தருவதைச் சமீபத்தில் தான் கண்டுபிடித்தோம். உலகமே ஒரு வைரஸுக்கான மருந்திற்கென பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்க, ஆரோக்கியமான தாயின் உடலானது தன் சிசுவுக்கென அந்த வைரஸின் எதிர்ப்புச் சக்தியான ஆன்டிஜென்களை உருவாக்கி அனுப்புகிறது என்பதைக் கண்ணுற்று வியந்தோம்.”

“ஒரு வைரஸ், ஒவ்வொருமுறை எதிர்ப்பு மருந்தை எதிர்கொள்ளும் போதும், அது உடனே mutate செய்து வேறொரு உருவம் எடுத்துக்கொள்கிறது. ஆக, ஒவ்வொரு variantக்கும் எதிர்ப்பு ஆன்டிஜென்கள் உருவாகின்றன. ஒரு வைரஸின் எல்லா variantகளையும் எதிர்கொள்ளும் ஒரு தாயின் உடல் எல்லாவற்றுக்குமான ஆன்டிஜென்களையும் படிப்படியாக உருவாக்குகிறது. ஒரு கட்டத்தில் அந்தத் தாயின் மார்புகள் சுரக்கும் தாய்ப்பாலில் எல்லா வைரஸ் variantகளுக்குமான ஆண்டிஜென்கள் ஒன்றிணைந்து கிடைக்கலாம் என்று ஊகிக்கிறோம். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது”

“என்ன சிக்கல்?”

“இப்படியாக வெளிப்படும் ஆன்டிஜென்களின் எண்ணிக்கை தாய்ப்பாலில் மிகவும் குறைந்த அளவில் தான் இருக்கிறது. ஒரு சிசுவுக்கு அந்த எண்ணிக்கை போதுமானதாக இருக்கலாம். வளர்ச்சியடைந்தவர்களுக்கு அது போதாது”

“அப்படியானால், கோப்ரா என்பது?”

“COmmon BReastmilk Antigen என்பதன் சுருக்கமே கோப்ரா. அது, ஆரோக்கியமான தாய்மார்களின் தாய்ப்பாலைக் குறிக்கிறது.”

“சரி. ஆனால், நான் மட்டுமா சமீபமாக பிள்ளை பெற்றிருக்கிறேன்? எத்தனையோ தாய்மார்கள் இருக்கிறார்களே? என்னை விட்டு விடுங்கள்.  நான் பாலூட்டி வளர்க்க எனக்கும் ஒரு குழந்தை இருக்கிறது” என்றேன் நான் கெஞ்சும் குரலில்.

“அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது தஸ்லிமா. உடல் என்பது ஒரு மாபெரும் சிக்கலான இயற்கை. உடலில் நோய் என்பது இந்திரியங்களின் சம நிலை குலைவதே.  உடலின் ஆன்ம மற்றும் இந்திரிய பலத்தை மிகுவிக்க நவீன உலகின் நுகர்வு மனப்போக்கு உதவாது. அதற்கு மது, புகை, போதை வஸ்துக்களை தவிர்க்கும் அதே நேரம் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களால் மிகுவிக்கப்படும் இந்திரியங்களை உடற்பயிற்சியின் மூலம் பன்மடங்காகப் பெறுக்கும் இயல்புடைய உடல்கள் தேவைப்படுகின்றன. இந்த விதமான, ஒரு காட்டையொத்த சிக்கலான இயங்கு இயல்பைக் கொண்ட உடல்களாலேயே வேதியியல் சாத்தியங்களின் உச்சத்தை உருவாக்க இயலும். அந்த உடல்களால் தான் வீர்யமிக்க ஆன்டிஜென்களையும் உருவாக்க முடியும். ஒரு ஆப்பிரிக்கப் பழங்குடியினத்தவர்களுக்கு எய்ட்ஸ் வைரஸுக்கும் கூட எதிர்ப்பு சக்தி இருப்பதை வைத்து வேறெப்படிப் புரிந்து கொள்ள முடியும்? ஆனால், அப்படியானவர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். உன்னை அப்படித் தான் தெரிவு செய்தோம்.” என்றான் அவன்.

“நீ சொல்வது புரிகிறது. ஆனால், உடல்களை ஆரோக்கியமான முறையில் பேணிக் காக்காத பலருக்காய் என்னையும், என் தாய்மைக்குண்டான கடமையையும் புறக்கணிக்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று எனக்குப் புரியவில்லை. நீ எதை விதைக்கிறாயோ அதையே தான் அறுவடை செய்வாய் என்பது எனக்கு மட்டுமே போதிக்கப்பட்ட ஒன்றா என்ன? மற்றவர்கள் செய்யவில்லை என்பதற்காய், அவர்களுக்கான கடமையையும் எனக்கானதாய் விதிப்பது தான் உங்கள் தர்மமா?” என்றேன் நான்.

“தஸ்லிமா, இந்தக் கேள்விகளுடன் நீ எங்கு செல்கிறாய் என்பது புரிகிறது. ஆனால், அதற்கெல்லாம் காலம் கடந்து விட்டது. இப்போது உயிருடன் இருக்கும் உடல்களில் பெரும்பாலானவை, ஆரோக்கியமற்ற உடல்களே. அவைகளால் எவ்விதப் பலனும் இல்லை. அவைகள் வெறும் உடற்கூடுகள். நுகர்வு கலாச்சாரம், மனித இனத்தின் ஒட்டுமொத்தச் சக்திகளையும் ஒட்டு மொத்தமாக உறிஞ்சிச் செல்லாக் காசாக்கிவிட்டது. மனித உடல்களைச் சோம்பல் கொள்ளச் செய்து வீழ்த்தி விட்டது.  மனித உடல்களின் சிக்கல்களை நெகிழ்த்தித் தளர்த்தி விட்டது. இயற்கையை விலக்கி வைக்க, விதைகளற்ற பழங்களை உருவாக்க முனைந்து, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, மானுட மேன்மைக்கு ஒவ்வாதவைகளை உருவாக்குவதில் மனிதனைக் கொண்டு வந்து நிறுத்தியது இந்தத் தளர்வு.”

“உலகின் பெரும்பான்மை மனிதர்கள் இந்தத் தளர்ச்சி தந்த சுகத்தில், விட்டில் பூச்சிகள் போல் ஈர்க்கப்பட்டு வீழ்ந்ததன் வாயிலாக இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மானுட வீழ்ச்சிக்குத் தங்களை மிக எளிதாக ஒப்புக் கொடுத்து விட்டார்கள். கிருமிகளுக்கு எதிரான போரில் மானுட இனம் துளிக் கூடப் போராட்டம் இன்றி, போராடக் கூடத் திராணியின்றிப் புறமுதுகு காட்டி, வெட்கித் தலை குனியும் தோரணையில் தோல்வி கண்டுவிட்டது.“

“இப்போதிருக்கும் உயிர்களைக் காப்பாற்றினால் தான் இந்த வைரஸை எதிர்த்துப் போராடிப் பிழைத்து, மனித இனம் நீடிக்க முடியும். இல்லையென்றால், காற்றில் பரவக் கூடிய இந்த வைரஸால் நாளை நீயும், உன் பிள்ளையும் கூடப் பாதிக்கப்பட நேரலாம். யாருக்காக இல்லாவிட்டாலும் உன் பிள்ளைக்காகவாவது, நீ இந்தக் காரியத்தில் எங்களுக்கு உதவ வேண்டும் என்று நான் எல்லோர் சார்பாகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லிக் கை கூப்பினான் அவன்.

“ஆனால், நீங்கள் கோப்ராவை மிக அதிக விலைக்கு அல்லவா விற்கிறீர்கள்? அப்படியானால் சாமான்யனுக்குப் போய்ச் சேராதா? அவ்விதம் போய்ச் சேராத போது ஒட்டுமொத்த உலகமும் எப்படிப் பிழைக்கும்? என்னை ஏமாற்றி என் உடலைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்காதீர்கள். அது போல் ஒரு ஈனத்தனம் வேறு இருக்க முடியாது. உனக்கு முதுகெலும்பு இருக்கிறதென்று  நம்பும் என் நம்பிக்கையில் மண் அள்ளிப் போட்டு விடாதே” என்றேன் நான்.

“இந்த ஒட்டுமொத்த முயற்சிக்கு மிகவும் அதிகமாகச் செலவாகிறது தஸ்லிமா. அதனால், முதலில் கிடைக்கும் மிகக் குறைவான அளவிலான கோப்ராவை மிக அதிக விலைக்கு விற்பதன் மூலமாக எங்கள் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. மேலும், இந்த ஐடியாவைப் பெரிய அளவில் செயல்படுத்த அரசாங்கங்கள் முயலலாம். ஆனால், பிரச்சனையே அங்கு தான் துவங்குகிறது. அணுகுண்டுகளை வைத்து அவர்கள் செய்த உலக அரசியல் இப்போது உயிரியல்-போர் என்று பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பி-வைரஸை உருவாக்கி உலவ விட்டதே ஒரு பகை நாடு தான் என்றொரு சதியாலோசனைக் கோட்பாடும் உலவிக் கொண்டிருப்பதை நீ அறிந்திருப்பாய் என்று நம்புகிறேன். இந்தத் தீர்வை அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றால், அது மக்களின் நலனுக்காய் பயன்படாமல் அரசுகளின் நலனுக்காய் முடியத் தான் வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் அரசுக்குத் தெரிவிக்காமல், இப்படி ரகசியமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதுவுமில்லாமல், சல்லிசான விலைக்கு விற்றால், அதுவே சமூகத்தில் ஒரு பெரிய அலையை உருவாக்கி அதுவே அரசாங்கங்களின் காதுகளுக்கும் சென்று விடலாம். அதைத் தவிர்க்கவே இந்த உத்தி” என்றான் அவன்.

துவக்கத்தில், கோப்ரா என்ற அந்த மர்மப்பொருள் தயாரிக்கப்படுவது நிச்சயமாக அந்த ஒதுக்குப்புறமான தொழிற்சாலையிலாகத் தான் இருக்க வேண்டும் என்பது என் ஊகமாக இருந்தது. ஆனால், நிஜமான தொழிற்சாலை, என் போன்ற ஆரோக்கியமான தாய்மை அடைந்த பெண்களின் மார்பகம் சார்ந்த உடல் தான் என்பது புரிய வந்த போது சற்று அதிர்ந்து தான் போனேன்.

உடலே ஒரு தொழிற்சாலை என்கிற பதம் எண்ணிப் பார்க்க கவர்ச்சியாகவும், புதிதாகவும் இருந்தது. ஒரு குறிப்பிட்ட மருந்தை உருவாக்க மருந்தகம் வேண்டாம், தொழிற்சாலை வேண்டாம், ஆய்வகம் வேண்டாம், உடலே போதும் என்கிற வாதம் புதிதாக இருந்தது. மனித இனம் அழிந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த வாதம் புதிதாகப் பழக நேர்வது துரதிருஷ்டவசமானதாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது. மனித இனம் கடந்த காலத்தில் எத்தனையோ நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடியிருக்கிறது. ஆனால், எக்காலத்திலும், ‘உடலே ஒரு தொழிற்சாலை’ என்கிற பதமோ, புரிதலோ ஏன் பரிச்சயமாகவில்லை என்ற சிந்தனை போனது எனக்கு. அனிச்சைச் செயலாக ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று என் சுவாசப்பைக்குள் நிரம்பித் தளும்பியது.

அவன் சொன்னது புரிந்து விட்ட பிறகு, அவர்கள் என்னை விட மாட்டார்கள் என்பது புரிந்து விட்டிருந்தது. ஆனால் அது அவனது வேண்டுதலுக்கு என்னை அடிப்பணிய வைக்கப் போதுமான சத்துள்ளதாக இல்லை. ஒரு வேளை நான் ஒத்துழையாமல் போனால், என் உடல் அந்த வீர்யமிக்க ஆன்டிஜென்னை உருவாக்காமல் புறக்கணிக்கலாம். பலவீனமான உடல்களால் நிறைந்திருக்கும் வெளியானது காற்றில் பரவக்கூடிய வைரஸுக்கு மிக எளிதான ஆட்படலாம். மனிதர்களிடமிருந்து கால் நடைகளுக்கும் பறவைகளுக்கும் அந்த வைரஸ் பரவக் கூடியது. அது உலகம் முழுக்கவும் பரவ நேர்ந்தாலும் நானும் என் குழந்தையும் பிழைக்க நாளை ஓர் உலகம் எஞ்சியிருக்கவும் போவதில்லை என்பதே அவனது வேண்டுதலுக்கு என்னை அடி பணிய வைத்த ஒரே உந்து விசை என்றே சொல்ல வேண்டும்.

“நான் சம்மதிக்கிறேன். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” என்றேன் நான்.

“என்ன? என்ன செய்ய வேண்டும்?” என்றான் அவன்.

“நான் ஒரு முகவரி தருகிறேன். அந்த முகவரிக்கான ஐ.பியை உங்களால் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். என் குழந்தை இன்னமும் ஃபார்முலா பால் அருந்துகிறது. கிமிலாக் என்பது அதன் பெயர். விலை மலிவாக என் தாய்ப்பாலை நீங்கள் கிமிலாக் பொத்தல்களில் நிரப்பி உங்களின் Fraiglistல் விளம்பரம் செய்தால் போதும். விலை மலிவாக எது கிடைத்தாலும் வாங்கிச் சேர்க்கும் வழக்கமுள்ள என் அறைத்தோழி நிச்சயமாக என் தாய்ப்பாலை என் குழந்தைக்குக் கொண்டு சேர்த்து விடுவாள்” என்றேன் நான்.

“உடனே செய்கிறோம்” என்றான் அவன்.

தான் பெற்ற பிள்ளைக்கு உணவூட்டுவதும், வளர்ப்பதும், போன்ற செயல்பாடுகளால் தாய்மையை உணர்வதும், வெளிப்படுத்துவதும் தான் தாய்மை என்றால், அப்படிப்பட்ட தாய்மைக்கு ஒரு குழந்தைக்கும், ஒரு பாரிய உலகுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்து விடப் போகிறது என்பதே என் அவதானமாக இருந்தது.

****

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close