கட்டுரைகள்

பொய்களின் விலை பேரழிவு – செர்னோபில்

மித்ரா

மாற்றம் ஒன்றே மாறாதது. எது ஒன்று தன்னை காலத்தின் மாற்றங்களுக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொள்ள விரும்பவில்லையோ, அல்லது எது ஒன்றை மாற்ற இயலவில்லையோ அது காலவோட்டத்தில் தடயங்களை மட்டும் விட்டுவிட்டு கரைந்து போகும். இந்நிலை கலைக்கும் பொருந்தும். நம் தாத்தா பாட்டி காலங்களில் ஒரு திரைப்படத்தை விடிய விடிய பார்த்து விட்டு வீடு திரும்புவார்கள். தியாகராஜ பாகவதர் திரைப்படங்களில் 30 பாடல்கள் கூட இருக்குமாம். ஆனால், இப்போதேல்லாம் 2.50 மணி நேர திரைப்படம் என்பதே நமக்கு நீளமானதாகத் தெரிகிறது. 1.40 மணி நேர திரைப்படங்கள் விருப்பத்திற்குரியவையாக இருக்கின்றன

ஆனால், எல்லா நேரங்களில் இந்த எல்லைகளுக்குட்பட்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியாது. இவை போன்ற பல பிரச்சனைகளுக்கான தீர்வைத் தான்இணைய தொடர்கள்தருகின்றன. ஒரு கதையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற வசதி ஒரு புறமிருக்க, சினிமா என்றொரு கனவு ஊடகம் தனியே இயங்கிக் கொண்டிருக்கும் போது , அதன் துணை ஊடகமான இணைய தொடர்  ஏராளமான கலைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வந்த வரப்பிரசாதம். அது பரவலாக தனக்கென்ற ரசிகர் கூட்டத்தையும் வென்றெடுத்துள்ளது ஆரோக்கியமான ஒன்று

இப்படிப்பட்ட இணைய தொடர்கள்  துறையில், சமீப காலத்தில் பலரையும் அதிர வைத்து, அஞ்ச வைத்து, கேள்வி எழுப்ப வைத்து, பாராட்டுகளை அள்ளியுள்ள தொடர் தான்செர்னோபில்இதை வாசிக்கும் போது ஒரு திகில் இசையைப் பின்னால் பரவ விட்டுக் கொள்ளுங்கள். ஆம், மனித குலம் சந்தித்த ஒரு மாபெரும் பேரிடரை, இன்னும் வடுக்கள் மறையாத பேரிழப்பை 5 அத்தியாயங்கள் மூலம் தத்ரூபமாக ஆவணப்படுத்தி இருக்கிறது செர்னோபில் தொடர். ஹெச்பிஓ தொலைக்காட்சியில் வாரமொரு முறை 5 வாரங்கள் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்திய செர்னோபில் தொடரை ஹாட் ஸ்டார் வெளியிட்டுள்ளது.

அணுசக்தி ஆயுதங்களின் பலமே நாட்டின் பலமாக கருதப்படும் சூழலில், அணு உலைக்கு எதிராக குரல் எழுப்புவோர் தேச விரோதிகளாக சித்தரிக்கப்படும் நிலையில் இந்த இணையத் தொடர் மிகமிக முக்கியமான சில கேள்விகளை காத்திரமாக முன்வைக்க நமைத் தூண்டுகின்றன.

ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவின் அப்போதைய அங்கமான உக்ரைனின் செர்னோபில் பகுதியில் நான்கு அணுமின் உலைகள் செயல்பட்டு வந்தன. அவற்றின் நான்காவது உலையில் தான் 1986 ஏப்ரல் 26 அதிகாலை 1.20 மணியளவில்  நிகழ்த்தப்பட்ட பாதுகாப்புச் சோதனை, பெரும் அணு உலை விபத்துக்கு வித்திட்டது.

செர்னோபில் பேரழிவின் பின்னணியை ஆராய்ந்து உலகுக்குச் சொல்ல முயன்ற அணு இயற்பியல் விஞ்ஞானி வெலெரி லெகஸோவ், தானறிந்த உண்மைகளை குரல் பதிவுகளாக்கிய கையோடு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதுடன் தொடர் தொடங்குகிறது.

அணு மின் நிலையத்தில் தீ பற்றி எரியத் தொடங்குகிறது. ஆம், சாதாரண  தீ பற்றி எரிவதாகத் தான் அனைவரும் நினைக்கின்றனர் அங்கிருக்கும் அதிகாரிகள் உட்பட எவரும் . அணு உலை வெடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே நம்பவில்லை. அந்தப் பகுதி மக்கள் ஆர்வமாக தீ ஜ்வாலைகளை வேடிக்கை பார்க்க ரயில்வே மேம்பாலத்தின் மீது கூடுகின்றனர். தீயணைப்பு வீரர்கள் நீர் பாய்ச்சி தீயை அணைக்க முயற்சிக்கத் தொடங்குகின்றனர். கதிர் வீச்சு மெதுவாக தன் நச்சு நாவுகளால் உயிர் குடிக்கத் தொடங்குகிறது

இதுவரையில் ஏராளமான புள்ளி விவரங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், பேட்டிகள் செர்னோபில் பேரழிவு தொடர்பாக வெளியாகியிருந்தாலும், ஆதியிலிருந்து விபத்து ஏற்படக் காரணங்கள், விபத்தின் பின்னணியை ஆராய முற்படும் வல்லுநர்கள், உண்மையை மறைக்க முயலும் அரசு, காரணமான அதிகார மையங்கள் எனப் பல தரப்புகளில் இருந்தும்செர்னோபில்லை அணுகி, நுட்பமான பின்னணி இசையோடு காட்சிப்படுத்தி விபத்து நடந்த காலத்தை கண் முன் நிறுத்தியிருக்கிறது இத்தொடர்.

உண்மையில், அணு உலை தான் வெடித்துள்ளது இது சாதாரண தீ இல்லை என உணர்வதற்குள்ளாகவே 31 பேர் மரணித்திருந்தனர். ஆனால், இன்று வரை செர்னோபில் விபத்தில் அதிகாரப்பூர்வமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆகவே இருக்கிறது. உண்மையில் இந்த விபத்தில் அல்லது விபத்தினால் ஏற்பட்ட விளைவுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை என்ன தெரியுமா? ஏறத்தாழ 90,000. இதில் கணிசமான மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தொடரின் தொடக்கத்தில் மிக அழகான, ஆனால் நம்மை பதைபதைப்புக்குள்ளாக்கும் காட்சி ஒன்று இருக்கிறது. அதிகாலையில் ரயில்வே மேம்பாலத்தில் நின்று அப்பகுதி மக்கள் தீயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அல்லவா ? அவர்கள் அருகில் காற்றில் பனித்துளிகள் மிதந்து வருவது போல கதிரியக்கத் துகள்கள் மிதந்து வரும். அது குறித்த விழிப்புணர்வில்லாத மக்கள் அதைக் கைகளில் பிடித்து விளையாடுவார்கள், இந்தப் பாலம் தான் தற்போது : சாவிற்கான பாலம்என்று அழைக்கப்படுகிறது. அந்த மக்கள் அனைவரும் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை.

அரசு உடனடியாக என்ன செய்தது தெரியுமா ? விபத்து ஏற்பட்டு பணியாளர்களும், தீயணைப்பு வீரர்களும் கொடூர பாதிப்புகளுக்கு உள்ளாகி வரும் நிலையில், அப்பகுதியில் பறக்கும் பறவைகள் செத்து வீழும் நிலையில் அரசு, அந்நகரின்  தொலைபேசி இணைப்புகளைத் துண்டிக்கிறது. விபத்து குறித்த விஷயம் வெளியில் கசியாமல் இருப்பதற்கான ஏற்பாடு. காற்றில் பரவிய கதிர்வீச்சு அண்டைநாடு வரை பரவி அவர்கள் கேள்வி எழுப்பிய பின்னர் தான், விபத்து நடந்த அடுத்த நாள் சோவியத் யூனியன் அணு உலை வெடித்ததை ஒப்புக் கொள்கிறது,

செர்னோபில் அணு நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரும் அடுத்த 36 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்தப் படுகின்றனர். கால்நடைகள், விலங்குகள் அனைத்தும் கொல்லப் படுகின்றன. இந்த இரு சம்பவங்களின் அடர்த்தியை  அதி அற்புதமான காட்சிகள் மூலம் கடத்தியிருப்பார்கள். எந்த ஒரு கூச்சலும் இல்லாமல், மிகைப்படுத்தப்பட்ட பக்கம் பக்கமான வசனங்கள் இல்லாமல், அமைதியாக வலியை படர விட்டிருப்பார்கள்

துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டும் தன் இடத்தை விட்டு வெளியேற மறுக்கும் பாட்டியும், கால்நடைகளை கொல்ல அனுப்பப்பட்ட இளைஞனும், கணவன் இறக்கும் வரை காதல் வழிய அவனுடனேயே இருக்கும் கர்ப்பிணி மனைவியுமென தொடர் முழுக்க உணர்வுப் பூர்வமான மனிதர்களால் நிரம்பியிருக்கிறது. அவர்கள் நிகழ்ந்து முடிந்த ஒரு கோர சம்பவத்தின் சாட்சிகளாக உலா வருகின்றனர். இத்தகைய காட்சிகள் சினிமாத்தனம் கொஞ்சம் கூட இல்லாமல் இயல்பாக இருப்பதினாலேயே தொடர் உச்சம் தொடுகிறது.

இந்த விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய ஏராளமான கற்பிதங்கள் வலம் வருகின்றன. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் யார் வல்லரசு என்கிற போர் தொடங்கி நடந்து கொண்டிருந்த காலம் அது. அப்போது ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்தது. இருவரும் தங்கள் வலிமையைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய அதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். புதுப்புது ஆராய்ச்சிகள், புதுப்புது ஆயுதங்கள் என போட்டி போட்டு அறிவியலைக் கூறு போட்டுக் கொண்டிருந்தன இரு நாடுகளும். இந்நிலையில் தான், அணு சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களை கேள்வியின்றி தன் நகரங்களில் நிர்மாணித்து ரஷ்யா.

தொடரின் இறுதி அத்தியாயத்தில், சிறிதே நாடக பாணியில் நகரும் நீதிமன்றக் காட்சிகளில் வரும் வசனங்கள்  தொடர் முடிந்த பின்பும் நமைத் துரத்துபவை. அந்த வசனங்கள்பொய்களுக்கு நாம் தரும் விலை என்ன ?” என்று தொடங்கும். முழுதாக கட்டி முடிக்கப்படாத உலை வேலைகள் நிறைவு பெற்றதாக இடும் பொய் கையெழுத்து, அணு உலை வெடிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று தரப்பட்ட நம்பிக்கைகள் பொய், ” நாம் என்ன வேலை செய்கிறோம்? இதன் விளைவுகள் என்ன ? ஆபத்துகள் என்ன? ” போன்ற எந்த புரிதல்களும் இல்லாதவர்களை தங்கள் தேவைக்காக உபயோகப்படுத்திக் கொள்ளும் அதிகாரிகளின் பொய், பெரிதாக எந்த ஆபத்தும் வந்து விடாது என்ற மெத்தனத்தில் பணியாளர்களுக்கு  அணு உலை பற்றி எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல் உண்மையை மறைத்தது என முழுக்க முழுக்க பொய்களுக்கு கொடுத்த விலை தான் இத்தனை பெரிய செர்னோபில் பேரிழப்பு

இந்த அணு உலை வெடிப்பால், இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல் புற்று நோய், தோல் சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் இன்றும் அப்பகுதியில்  வாழ்ந்த மக்களின் குழந்தைகளுக்கு இருக்கிறதாம். செர்னோபில் தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பு வீரர்களின் உடைகள் இன்றும் அங்குள்ள மருத்துவமனையில் தான் வைக்கப்பட்டுள்ளதாம். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழிந்த பின்னும் அதிலிருந்து கதிர்வீச்சு வெளிப்படுகிறதாம். செர்னோபில் மனிதர்கள் வாழத் தகுதியுடைய நிலமாக மாற இன்னும் 20,000 ஆண்டுகள் ஆகுமாம்

தங்களுடைய ஆட்சியை, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள, தேசத்தை வலிமை வாய்ந்ததாகக் காட்டிக் கொள்ள  ஆட்சியாளர்கள், “இவர்களுக்கென்ன தெரியவா போகிறது?” என்று ஏராளமான பொய்களைக் காலம்காலமாகக் கூறி வருகின்றனர். ஆனால், தேசம் எனது வெற்று நிலமல்ல தேசம் என்பது அங்கிருக்கும் மக்கள். தேச நலன் என்பது மக்களின் நலன் என்பதை அவர்கள் உணர்வதில்லை. மிகச்சாதாரணமாக அவர்கள் சொல்லி விடும் பொய்களின் விலைகள் என்ன என்பதற்கு செர்னோபில் சாட்சி.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. A very good review. I have translated Nobel laureate Svetlana Alexievich’s `Voices from Chernobyl’ into Tamil as `செர்னோபிலின் குரல்கள்” (Ethir Veliyeedu). The book recorded the voices of the people regarding Chernobyl disaster…very gruesome incident in the history of the world… I was feeling suffocation while doing the translation and continued even after 3 months… unforgettable moments…!! A lot of things were hidden from the world since 1986 was not advanced like now…no social media or the internet to spread the news… so whatever Soviet Union said the World believed. Thanks to the reviewer for spreading the awareness about this docu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close