சிறுகதைகள்
Trending

செல்ல மழையும்….. சின்ன இடியும்! – ரவிச்சந்திரன் அரவிந்தன்

சிறுகதை | வாசகசாலை

அழுக்குப்பிடித்த அந்த வணிக வளாகத்தின் முதல் மாடியிலிருந்தது கூரியர் அலுவலகம். நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக்குகிறேன் என்று சாலையின் இருமருங்கிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வளாகத்தின் மேல் தளத்திற்குப் போவதற்காக இருந்த மாடிப்படிகளை ‘புல்டோசர்’ மென்று துப்பிவிட்டது. முதல் தளத்திலிருக்கும் எட்டுக் குட்டிக் கடைகளுக்கும் செல்வதற்குத்  தற்காலிகமாக  ஒரு இரும்பு சுழல்படியை அமைத்திருந்தார்கள்.  நிதானமாகப் பார்த்து ஏறவேண்டும், அதைவிட எச்சரிக்கையாக இறங்கவேண்டும். அதில் பத்திரமாக ஏறி இறங்க ஒரு சர்க்கஸ்காரனின் லாவகம் அவசியம். சாலையின் இருமருங்கிலும் சோலையாய்  விரிந்து படர்ந்து எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர்காற்றும், நிழலும், ஆண்டுக்கு இரண்டுமுறை ‘டன்’ கணக்கில் புளியும் தந்த மரங்கள். மனிதர்களுக்கு மட்டுமல்லாது  ஆயிரக்கணக்கான பறவைகளின் வாழ்விடமாகவும்  இருந்த அத்தனை புளிய மரங்களையும் பெரும்பசி கொண்ட  ராட்சச ‘டைனோசர்கள்’ போன்ற பிரம்மாண்டமான ‘புல்டோசர்’கள் சில மணி நேரங்களில் வேரோட பறித்துப் பறித்து வீசி சாய்த்துக் கொண்டிருந்தன.. கூடவே மனிதக்கும்பல் ஒன்று மின்சார ரம்பங்களால் ‘வர்ர்ர்ர்ர்ரூம்……வர்ர்ர்ர்ர்ரூம்’ என மரங்களை அறுத்துத் தள்ளிக்கொண்டிருந்தன. ஒரு ‘க்ரேன்’ அதையெல்லாம் வரிசையாக நிற்கும் லாரிகளில் நிறப்பியது. அந்தப் பகுதியே ஒரு பெரிய போர்க்களம் போலவும், குறுக்கும் மறுக்குமாக, துண்டு துண்டாகக் கிடக்கும் புளிய மரத்தின் கிளைகள் எல்லாம் களத்தில் செத்து வீழ்ந்து கிடக்கும் வீரர்கள் போலவும்  காட்சியளித்தது மனதை என்னவோ செய்தது.. எப்படியோ தட்டுத்தடுமாறி இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நிதானமாகப் படியேறி மேலே சென்றேன்.  சில புத்தகங்கள் அனுப்ப வேண்டும்.

மிகப் பிரபலமான பெயர்கொண்ட கூரியர் நிறுவனம்தான் என்றாலும் ஒரு பத்துக்கு எட்டு கட்டிடத்தில்தான் அது இயங்கியது. ஒரு மேசை நாற்காலி…..பில் போட ஒரு கம்ப்யூட்டரும், பிரின்டரும் எதிரில் இன்னொரு நாற்காலி. அது வாடிக்கையாளருக்கு. மதியம் ஒன்றரைமணி. நிழல் தந்த மரங்களையெல்லாம்  நிர்தாட்சண்யமாக வெறிகொண்டு வெட்டி வெட்டி அழித்ததனால் அந்த அறையே அடுமனையின் அடுப்புபோல அனலடித்தது.  கூரியர் பெண்ணின் மேசையில் ஒரு ஓரத்தில் திறந்து கிடக்கின்ற ஒரு ’பிளாஸ்டிக்’ டப்பா.  அதில் கொஞ்சம் பழைய சோறும், பாதி கடித்த ஒரு பச்சை மிளகாயும்.  மேசைக்கு முன்பக்கமாக நின்றுகொண்டிருந்த நடுத்தர வயது மனிதர் அடுப்பில் விழுந்த காய்ஞ்ச மிளகாயெனப்  பொரிந்து கொண்டிருந்தார்.

“எங்கிட்ட ஒரு நூறு ரூபாயும் ஒரு அம்பது ரூபாயும்தான் இருக்கு. இப்ப என்ன பண்ணச் சொல்ற?”

“சார் உங்க பில் 105 ரூபா,   நாப்பத்தஞ்சு ரூபாய் சில்லரைக்கு நான் எங்க சார் போவேன்?”.

“அது எனக்குத்தெரிய வேண்டியதில்ல. காலைலேர்ந்து புக்கிங் பண்ணிட்டு இருக்கிற உங்கிட்ட  நெஜம்மாவே சில்லரையில்லையா?”

“சார் வெச்சுகிட்டு உங்களுக்குக் குடுக்காம நான் என்ன சார் பண்ணப்போறேன்.  இங்க கீழ மரமெல்லாம் வெட்றதால காலைலேர்ந்து யாருமே வரல சார்.  நீங்கதான் சார்  மூணாவது கஸ்டமர்…”

“அதுக்கு நான் பொறுப்பில்ல. நீதான் சில்லரை வெச்சுக்கணும். இல்லேன்னா உன்னோட பில்லு 105 ஆகுது, மீதி 45 கொடுக்க எங்கிட்ட சில்லரையில்லேன்னு மொதல்லயே நீ சொல்லியிருக்கணும்.”

“சார் உங்க டீடெய்ல்ஸ் முழுக்க அடிச்சாதான் பில் வரும். அப்பறம் எப்படி சார் நான் மொதல்லயே சொல்ல முடியும்?  அன்னன்னிக்கு ஆகற கலக்சனை சாயந்தரம் எட்டு மணிக்கு பைசா பாக்கியில்லாம கட்டிடணும். இங்க பெட்டி கேஷ்னு எதுவும் குடுக்க மாட்டாங்க.  நூறு எரநூறு சில்லரை வெச்சுக்க நான் எங்க சார் போவேன்?” (இத்தனை பதில்களும் மிகவும் மரியாதையான அடக்கமான தொனியிலேயே…)

“சரி! அப்ப ஒண்ணு பண்ணு அந்த அம்பது ரூபாயைக்குடு அஞ்சு ரூபாயை நான் அடுத்த தடவை வரும்போது குடுக்கறன்.”

“சார் சாயந்தரம் நான் கணக்கு குடுக்கும்போது சில்லரையில்லேன்னு ஒரு ரூபா கம்மியாக்குடுத்தாக்கூட கேஷியர் வாங்க மாட்டாரு சார்.  உங்களை மாதிரி நாலு பேரு அஞ்சஞ்சு ரூபா நிறுத்தினா ஒரு  நாளைக்கு இருபது முப்பதுன்னு துண்டு விழுந்தா? நான் என்ன சார் பண்ணுவேன் நான் வாங்கற சம்பளத்தை வெளிய சொன்னா கேவலம் சார்…” (கண்ணீர் மல்க மன்றாடுகிறார் அந்தப் பெண்)

அந்தக் கல்லுளி மங்கன் அதற்கெல்லாம் துளிகூட அசையவில்லை. “ஒண்ணு பண்ணு பில்லைக் கேன்சல் பண்ணிடும்மா . நான் வேற கூரியர்ல அனுப்பிக்கறேன்.”

“கேன்சல் பண்ணினா என் மேல என்கொயரி வரும் சார்.. ப்ளீஸ் சார். புரிஞ்சுக்கங்க சார்.”

எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த நான், தாங்க முடியாமல் என் கைப்பையைத் திறந்து 45 ரூபாய் சில்லரையை எடுத்து மேசையின் மீது வைத்து “அவருக்குக் கொடுத்து  விடுங்கம்மா…” என்றேன்.

“ரொம்ப தேங்க்ஸ் ஸார்” என்று என்னிடம் சொல்லிக்கொண்டு அவரது கவருக்கு சீல் வைத்து அதைப்பெட்டியில் தள்ளி விட்டு பில்லையும் மீதி 45 ரூபாயையும் மேசையின் மீது வைத்து நகர்த்தினாள் அந்தப்பெண்.

துளிகூடக் கூச்சமேயில்லாமல் ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்டதுபோன்ற ஒருவித மிதப்புடன் ‘பொம்பளைங்களை  வேலைக்கு வெச்சாவே இப்படித்தான் ஒரு வேலையும் விளங்காது….’ என்று முணகியபடி இறங்கிச் சென்றார் அந்த மனிதர். பின்னாடியே சென்று செவுளில் ஒன்று விட வேண்டும் போல இருந்தது…..

நான் கொடுத்த பார்சலுக்குப் பில் அடித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணுக்கு 25 வயதுதான் இருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக எப்போதாவது இங்கு வரும்போது பார்த்து வருகிறேன். புத்தகங்களாக அனுப்புவதால் நான் எழுதுபவன் என்பது அவளுக்குத் தெரியும். சாதாரணமான ஒப்பனைகள்கூட இல்லாத மிகமிக  எளிமையான ஒரு பெண். எப்போதும் வண்ணங்கள் மங்கிப்போன  பழைய உடைகள்தான்.  இதையெல்லாம் கூட இன்றுதான் கவனித்தேன். அவளது முகத்தில் அடிபட்ட பறவையின்  ஒரு வலி தெரிந்தது மனசை என்னவோ செய்தது. அங்கு நிலவிய அந்த இறுக்கத்தைக் களைப்பதற்காக

“எங்கப்பா மகன் அரசுவைக் காணோம்..?”

“அட! உங்களுக்கு அவன் பேரு ஞாபகம் இருக்கா சார்?”

“போன தடவை வந்தபோது என்னோட புக்குல இருந்த என்னோட ஃபோடோவைப் பார்த்துட்டு ‘தாத்தா இது நீங்கதான, எதுக்கு இதுல உங்க ஃபோடோ போட்டிருக்குண்ணு என்னைக் கேட்டான். சட்னு பேரன் ஞாபகம் வந்துச்சு. வெளி நாட்டில இருக்கிற என் பேரனைப் பார்த்து ஒரு வருஷம் ஆச்சு. கொரோனாவால நாங்க அங்க போக முடியல.  அவனும்  இதேபோல என் புக்குல இருக்கற என் படத்தைக் காட்டி என் மகன் கிட்ட அப்புச்சி அப்புச்சின்னு சொல்வானாம். அதுதான் ஞாபகம் வந்துச்சு. அதுனால உன் மகனைப் பார்க்கும்போது என் பேரன்  ஞாபகம் வரும்.   உன் மகன்தான் பெரிய மனுசன் மாதிரி எனக்குப் பேரு வெச்சானே ‘ரைட்டர் தாத்தா’ன்னு….அப்பத்தான் அவன் பேரைக் கேட்டேன் . நீ  ‘அரசு’ன்னே. நான் கூட வித்தியாசமான பேரா இருக்கேன்னேன். குடியரசு நாளன்னிக்குப் பொறந்ததால அந்தப் பேருன்னு சொன்னேப்பா..அதனால  மறக்கல..”

அவளையும் அவள் மகனையும் ஒரு பொருட்டாக நினைத்ததாலோ என்னவோ கண்களில்  ஒரு  கனிவு தெரிய…

“ஊர்ல அம்மா வீட்ல விட்டுட்டேன் சார். ஸ்கூல் அடைச்ச பின்னாடி இங்க ஆஃபீசும் பூட்டினதால நாலு மாசம் நானும் வீட்ல இருந்தேன். ஆனா, இன்னும் ஸ்கூல் தெறக்கல. வீட்ல பாத்துக்க ஆளில்ல.  இங்க கொஞ்சநாள் வெச்சுப் பார்த்தேன்..அவன் ரொம்ப கஷ்டப்பட்டான்.”

‘’ஆமாம்ப்பா….அன்னிக்கு ஒரு நாள் நான் வந்தப்போகூட பெட்ஷீட்ல படுத்துத் தூங்கிக்கிட்டிருந்தான்..   நாங்கூட அவங்கிட்ட பேசல.”

“ஆமாம் சார், அன்னிக்கு நல்ல காய்ச்சல் அவனுக்கு. உடம்பு சரியில்லேன்னா கூட வீட்ல பார்த்துக்க ஆளில்ல.  நான்  இங்க லீவும் போட முடியாது. எனக்குத்தான் விதி. ஒரு நாளைக்குப் பதினோரு மணி நேரம் இதுக்குள்ளயே  ஜெயில் மாதிரி அடைஞ்சு கெடக்கறேன். அவன்  நாலு வயசுப் பையன், வெளையாடற கொழந்த.. பாவமா இருந்துச்சு. அதான் கொண்டுபோயி விட்டுட்டேன். இப்ப அவனை விட்டுட்டு இருக்கவும் கஷ்டமாத்தான் இருக்குது… என்ன பண்றது சொல்லுங்க… இந்த மாசம் அவனோட ‘பர்த்டே’ வரும்போதுதான் போய்க் கூட்டிட்டு வரணும்”  சொல்லும்போது அவளது  கண்கள் கலங்கின.  மேசையின் ஓரத்தில் பழைய சோறும் பச்சமிளகாயும்  ஏனென்ற காரணம் இப்போது புரிந்தது.

என்னுடைய பில்லுக்குச் சரியான சில்லரையைக் கொடுத்துவிட்டுப் பில்லை வாங்கிக் கொண்டு

“வர்றேம்மா…” என்றேன்.

என்னிடம் பாரத்தை இறக்கி வைத்ததாலோ என்னவோ சற்று இளகிப் போனவளாகப் “புதுசா ஷார்ட் ஃபில்ம் ஒண்ணும் நடிக்கலையா சார்?” என்றாள்.

“இல்லப்பா! ரெண்டு படத்துல நடிக்கறதா இருந்துச்சு… எல்லாத்தையும் கொரோனா கபளீகரம் பண்ணிடுச்சு”  என்று சொல்லிச் சிரித்தபடி நிதானமாக, கவனமாகப் பார்த்துப் படியிறங்கினேன். யோசனை செய்து பார்த்தேன். இது என்ன ஒரு கொடுமையான வேலை பாவம். பதினோரு மணி நேரம் உணவு இடைவேளையோ,  இயற்கை உபாதைகளைப் போக்கிகொள்ளவோகூட இடைவேளை கொடுக்கப்படாத ஒரு வேலை.

அன்றொரு  நாள் நல்ல மழை நேரம். இதுபோலத்தான் ஒரு புத்தகம் பார்சல் அனுப்பிவிட்டு இறங்கிவர முடியாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். மாலை நேரம்  வேறு. எனக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும்.  ரொம்பவும் தயங்கி

“ஏம்ப்பா இங்க பக்கத்துல பாத்ரூம் இருக்குமா?”

ஒரு நிமிசம் தயங்கின பிறகு… “ரைட் சைடுல இருக்கிற சந்துல போனா பின்னாடியிருக்கு சார்..  ரொம்ப மோசமா இருக்கும் சார்…” என்றாள்.

வேறு வழியில்லாமல் போனேன் அந்த அழுக்குப்பிடித்த வளாகத்தின் ஆபாசமான பாத்ரூம் மாநகராட்சிக் கழிவறையைவிடக் கேவலமாக இருந்தது.  இதில் ஒண்ணுக்குப் போனால் ஆண்களுக்கே நிச்சயமாக  சிறுநீர்த் தொற்று ஏற்படலாம், பெண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அந்த வரிசையிலுள்ள கடைகளில் மொத்தம் எப்படியும் ஏழெட்டுப் பெண்கள் வேலை செய்வார்கள். ஆண்கள்,  பெண்கள் என்கிற பால்பேதமில்லாது  எல்லாருக்கும் ஒரே கழிப்பறைதான். ‘மன் கீ பாத்’தில ‘”ஸ்வச்ச பாரத்” எந்த மலக்குழிக்குள்ள பதுங்கியிருக்குன்னு யாருமே கேட்பதில்லையா? சொரணை கெட்ட ஜென்மங்களா என்று தோன்றியது.

தோழர் ஒருவர் முகநூலில் விமர்சனமெழுதின பிறகு இரண்டு மூன்றுபேர்கள்   புத்தகம் கேட்டிருந்தார்கள்.  நாளை குடியரசு தின விடுமுறை என்பதால் இன்றே அனுப்பிவிடலாமென கூரியர் அலுவலகம் சென்றேன். படியேறப் போகும்போதுதான் நினைவு வந்தது. ‘அட அந்தக் குழந்தை ‘அரசு’க்கு நாளைதான் பிறந்தநாள்’. அருகிலிருந்த பேக்கரிக்குப்  போய் அஞ்சு ‘கேக்’ வாங்கிக்கொண்டு அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிக் கொடுக்கலாமென முடிவுசெய்து உற்சாகமாகப் படியேறினேன். அங்கே கூரியர் அலுவலகத்தில் யாரோ ஒரு புதிய பெண் உட்கார்ந்திருந்தாள்.

புத்தகப் பார்சலைக் கொடுத்து பில்லை வாங்கிக்கொண்டு பணத்தையும் கொடுத்தபிறகு அந்தப் பெண்ணிடம் கேட்டேன்  “முன்னாடி இருந்த பொண்ணு இன்னிக்கு லீவாம்மா?”

“இல்லை சார். அந்தக்கா இப்ப வேலைல இல்லை….”

“ஏன்ம்மா வேலைய வேண்டாம்னுட்டுப் போயிடுச்சா?”

“இல்ல சார்… அது வந்து….”

“பரவால்லம்மா….எங்கிட்ட சொல்லலாம். நான் இங்க ரெகுலரா வர்றவன். அந்தப்பொண்ணு எனக்குத் தெரிஞ்ச பொண்ணு, நல்லா பழக்கம்.  அதுனாலதான் கேக்கறன்…அவங்க பையனுக்கு நாளைக்கு ‘பர்த்டே’ன்னு சொல்லி,  பாரு கேக்கெல்லாம் வாங்கிட்டு வந்தேன்…”

“ரெண்டு நாளைக்கு முன்னாடி அவங்க பையனை இங்க வெச்சுட்டு இருந்தப்போ  அவனுக்கு வயிறு செரியில்லேன்னு ரெண்டு மூணு தடவை பாத்ரூம் கூட்டிட்டுப் போயிருக்காங்க. அப்ப ஏதோ ஒரு தடவை ‘ட்ராவை’  சரியாப் பூட்டாம மறந்து போயிட்டாங்க போல, எப்படியோ யாரோ கலக்ஷன் பணத்துல மூவாயிரம் ரூபாயைத் திருடீட்டாங்க. ஈவனிங் கணக்குக் குடுக்கும்போதுதான்  தெரிஞ்சுது. ஒரு மணி நேரத்துக்குள்ள  யார் யாருகிட்டயோ கைமாத்து வாங்கி எப்படியோ  கேஷை கட்டிட்டாங்க. இருந்தாலும் கூட ‘கேஷ் மிஸ்ஸானதால எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணிக் கட்டீட்ட.  இதே கஸ்டமரோட  டாக்குமென்ட்ஸ் ஏதாவது மிஸ்ஸாயிருந்தா கம்பெனியோட பேரு என்ன ஆகறது?. இவ்வளவு பொறுப்பில்லாதவங்களையெல்லாம்  வேலைக்கு வெச்சுக்க முடியாது’ன்னு சொல்லி  மேனேஜர், அந்தக்காவை வேலைய விட்டு நிறுத்திட்டாங்க சார்.”

பதில் எதுவும் சொல்லாமல், பில்லையும் மீதி பணத்தையும் வாங்கிக்கொண்டு படியிறங்கி வந்தேன். அந்தப் பெண்ணின் பெயரைக் கூட இதுநாள் வரையில் கேட்கவில்லை. அவள் எங்கே குடியிருப்பாள்? அந்தக் குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஆசையில்  ஊரிலிருந்து அவனை அழைத்து வந்ததால் அவன் காரணமாக வேலையும் போயிற்று. வண்டியை ஸ்டார்ட் பண்ணும்போது  அந்தக்குழந்தை அரசுக்கு வாங்கின  கேக் டப்பாவை அந்த மேசையின் மேலேயே விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அந்தப் புதிய பெண் மேலேயிருந்து “சார்…சார்…”  என்றழைக்கிற சப்தமும் காதில் விழுந்தது. இது என்ன அவலமானதொரு வாழ்க்கை? களவாடியவனுக்கு ஒரு நாள் கைச்செலவு, பறிகொடுத்தவளுக்கு எற்கனவேயுள்ள கடனோடு மேலும் சுமை, வாழ்வாதாரமான வேலையும்போனது… அந்தப் பிஞ்சுக் குழந்தையின் பிறந்த நாளில் இத்தனையும்…… அந்த நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த நூற்றுக் கணக்கான வாகனங்களின் கும்பலில் கரைந்துபோய் நான் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன்.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close