சிறுகதைகள்

செக் மேட் – சுரேஷ் பரதன்

சிறுகதை | வாசகசாலை

சிதம்பரம், அவசரம் அவசரமாய் வந்திருக்கிறான் என்பதை அவன் தன் சைக்கிளின் ஸ்டாண்ட் போடும் அழகிலிருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. சைக்கிள் அவன் போட்ட ஸ்டாண்டில் நிக்காமல் அவனுக்கு எதிர்ப்க்கமாய்ச் சாய்ந்து விழப்போகும் சமயத்தில் அதைப் பிடித்து மீண்டும் நேராய் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் பாய்ச்சலும் ஓட்டமுமாய் வந்தான். வந்தவன் நேரே என்னிடம், “நல்லவேளை நீ இன்னும் வேலைக்குப் போகலை. நீ போறதுக்குள்ள வந்துறனும்ன்னு தான் அவதி அவதியா மிதிச்சுட்டு வந்தேன். லீவு சொல்லிரு வரதா. கோமா மறுபடியும் மோட்டு வளையையே பாத்துட்டு நிக்கான். நேத்து இராத்திரி சாப்பாடு சாப்பிட்டதுக்கப்புறம் அவனுக்கு மாத்திரையை நாந்தான் குடுத்தேன். முழுங்கிட்டு தான் படுத்தான். காலையில எழுந்திருச்சி பாத்தா மேலேயே பாத்துட்டு நிக்கான். எப்ப முழிச்சான், எப்பத்திலேர்ந்து நிக்கான்னே தெரியலை. யார் போய் கூப்பிட்டாலும் திரும்பியே பாக்க மாட்டங்கான். நிக்கிற இடத்தை விட்டு ஒரு அடி கூட நகர மாட்டேங்கான். தோட்டத்தில கிடந்த பெரிய கட்டை ஒன்னை வேற கையில பிடிச்சிகிட்டு நிக்கான். அப்பா பயத்துல அவன் பக்கத்திலேயே போக மாட்டேன்னுட்டா. அம்மா அடுப்பாங்கரைய விட்டு வெளியே வரலை. எல்லாருக்கும் பயமா இருக்கு வரதா.. நீ வா.. வந்து கூப்பிடு. வாரானா பாக்கலாம்”.

சொல்லும் சிதம்பரத்திற்குக் கண்ணீர் கண்களில் முட்டிக் கொண்டு நின்றது. வழிய காத்திருந்த கண்ணீரை அப்படியே அடக்கிக் கொண்டு பேசும் என்னை விட, சிறிய தம்பியின் மன தைரியம் கூட எனக்கு இல்லை என்று காட்டுகிற மாதிரி என் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென வடிந்தே விட்டது. கண்ணைத் துடைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து அகிலாவிடம் கூடச் சொல்லாமல், கொள்ளாமல் ஸ்கூட்டரைக் கிளப்பி சிதம்பரத்தைப் பின்னால் ஏற்றிக்கொண்டு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அப்பா வீட்டுக்கு வந்தேன்.

அப்பா வெளித் திண்ணையில் உக்கார்ந்திருந்தார். அழுதிருக்க வேண்டும். முகம் வீங்கியிருந்தது. என்னைப் பார்த்தும் பார்க்காதது போல இரண்டு கைகளையும் தன் தொடைகளுக்குக் கீழே வைத்துத் திண்ணையில் ஊன்றி,  கால்கள் இரண்டையும் பெருக்கல் குறிகளைப் போல வைத்து அவற்றையே பார்ப்பது மாதிரி கீழே குனிந்து உக்கார்ந்திருக்கும் அப்பாவைப் பார்த்ததும் எனக்கு, என் துக்கம் மேலும் அதிகமானது. கல்யாணமாகி ஏழு வருடங்களாய்ப் புத்திர பாக்கியமில்லாது கோயில் கோயிலாய் நடந்து விரதம் விரதமாய் இருந்து தவமாய்த் தவம் செய்து பிறந்த மூத்த பிள்ளை இப்படி மன நிலை சரியில்லாது புத்தி பிசகி மோட்டு வளையைப் பார்த்தபடி யாரிடமும் பேசாமல் விழித்த விழி மூடாமல் நிற்பதைப் பார்க்க வாய்த்த பெத்த மனம் என்ன பாடுபடும். அந்தக் கஷ்டத்தைத் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருத்தலில் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் அப்பாவிடம் என்ன கேட்க. எதைச் சொல்ல. அப்பாவே இப்படி என்றால் அம்மாவின் நிலை என்னவாயிருக்கும். என்னால் யோசிக்கவே முடியவில்லை.

கோமா இப்படி ஆனது இன்று நேற்றல்ல. அது ஆயிற்று ஒரு ஏழெட்டு வருடம். எத்தனை வருடமானாலும் பெத்த பிள்ளை இப்படி ஆனதை எந்தத் தாய் தந்தையால்தான் பொறுத்துக் கொள்ளமுடியும். அப்பல்லாம் கோமா இப்படி ஆவான்னு யார்தான் நெனைச்சு பாத்தா. நாள் கழிச்சு பிறந்த பிள்ளைன்னு அவனுக்கு எங்க இரண்டு பேரைக் காட்டிலும் செல்லம் அதிகம்தான். நாங்க எதாச்சும் கேட்டா  இல்லைன்னு சொல்ற அப்பா அவன் எது கேட்டாலும் மறுத்ததே இல்லை.

கோமா ஸ்கூல் கிரிக்கெட் டீமில சேரனும்ன்னா, நல்ல பேட் வேணும்டா அப்பாகிட்ட சொல்லி வாங்கித் தர்ரியான்னு சிதம்பரம் அவங்கிட்ட சொன்னா அவன் உடனே அப்பாகிட்ட கேப்பான். அப்பாவும் அதை உடனே வாங்கித் தருவார். இவ்வளவுக்கும் கோமாவுக்கு கிரிக்கெட் விளையாட்டுல இஷ்டமே இல்லைன்னு அப்பாவுக்கும் நல்லாத் தெரியும்.

கோமாவுக்கு செஸ் விளையாடத்தான் பிடிக்கும். சர்வசதா காலமும் செஸ் போர்டும் கையுமா இருப்பான். ஒத்தையாளா உக்காந்து செஸ் கேம் ஆடுவான். அவன் கூட இருந்து இருந்து அவன் ஆடுவதைப் பார்த்து பார்த்து நானும் கொஞ்சம் விளையாடக் கத்துக்கிட்டேன். குதிரை இரண்டு கட்டம் முன்னாலேயோ பின்னாலயயோ அல்லது இடமோ வலமோ போய் அதுக்கடுத்த ஒரு கட்டம் குறுக்குவாக்கில போகும். யானை ஸ்ட்ரெயிட்டா அல்லது சைடு வாக்கிலே நேர் கோட்டில போகும். ஆனா குதிரையைக் குதிரைன்னு சொன்னாலோ  யானையை யானைன்னு சொன்னாலோ கோமாவுக்குக் கோபம் வரும். குதிரையை நைட்டுன்னும் யானையை ரூக்குன்னும் சொல்லனும்பான். எல்லாம் அவங்கிட்ட கத்துக்கிட்டது தான். மொதத் தடவை அவங்கூட ஒரு கேம் ஆடினப்ப ஆட்டம் ஆரம்பிச்ச மூனாவது மூவ்ல என்னோட கிங்கை அரஸ்ட் பண்ணிட்டான். கேட்டா இது தான் ஸ்காலர்ஸ் மேட் அப்படின்னான். புதுசா படிக்கிறவங்க இப்படித்தான் ஆரம்பிப்பாங்கன்னான். அதுக்கப்புறம் அவன் எனக்கு சிஸிலியன் டிஃபென்ஸ், லெவன்பிஷ் வேரியேஷன் எல்லாம் சொல்லித் தந்தான். இதையெல்லாம் அவன் எங்கேயிருந்து கத்துக்கிட்டான்னு தெரியாது.  ஆனா கோமா ரொம்ப அழகா செஸ் ஆடுவான்னு மட்டும் எல்லாருக்கும் தெரியும்.

நாம ஒரு  மூவ் பண்ணினா கோமா அதைத் தொடர்ந்து ஏழு அல்லது எட்டு மூவ் யோசிப்பான். அதைச் சொல்லவும் செய்வான். அவன் செஸ் மூவ் சொல்வது கூட வித்தியாசமா இருக்கும். ஒவ்வொரு காய்க்கும் அதன் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்தையும் அது அடுத்து நகரப் போகிற கட்டத்தின் பெயரையும் சொல்லுவான்.  இப்படித்தான் ஒரு நாள் ஒரு ஆட்டத்தின் நடுவில் வரதா இன்னும் ஆறு மூவில் நீ தோத்துட்டே  என்று சொல்லி எழுந்து போனான். எப்படி என்று கேட்டதற்கு

க்யூ க்ராஸ் ஈ டூ ..

ஆர் க்ராஸ் எஃப் எய்ட் .. செக் ..  கே க்ராஸ் எஃப் எய்ட் …

ஆர் எஃப் ஒன்… செக்..  கே ஜி எய்ட்..

க்யூ  எஃப் செவன்… செக்..  கே ஹெச் எய்ட்..

க்யூ எஃப் எய்ட் … செக்..  ஆர் க்ராஸ் எஃப் எய்ட் …

ஆர் க்ராஸ் எஃப் எய்ட் .. செக் மேட்…

என்று சொல்லி முடித்தான். அவன் சொன்னதையெல்லாம் ஒரு தாளில் எழுதி வைத்து ஒவ்வொரு மூவையும் வைத்துப் பார்த்தேன். அவன் சொன்னது மிகச் சரி. அவன் சொன்னதைத் தவிர வேற காய் நகர்த்தலே இல்லாமல் அத்தனை கச்சிதமாக அந்த ஆட்டம் முடிந்தது. அந்தத் தாளை வெகு காலம் நான் பத்திரமாய் வைத்திருந்தேன். அவனுக்கிருக்கும் அறிவுக்கு நல்ல வாய்ப்பும் வசதியும் இருந்திருந்தால் பெரிய செஸ் சாம்ப்பியனாகி இருப்பான். ஆனால், காலம் அவனைப் பித்தாக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

நான் கோமா நின்றிருந்த ஹாலை அடைந்தேன். நடு வீட்டில் சாமி படம் வைத்திருந்த இரண்டடி உயரமுள்ள அந்த மேடைக்கருகில் கையில் ஒரு கனத்த கட்டையுடன் மூலை உத்திரத்தைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான் கோமா. சட்டையணியாமல், உடுத்தியிருந்த கைலி இப்போதோ அப்போதோ என எப்போது வேண்டுமானாலும் அவிழ்ந்து விழ தயாராய் இருந்தது. அந்தக் கைலிக்கு மேலே தெரிந்த வெற்றுடம்பில் எலும்புகளுக்கு மேல் ஒரு துணியைச் சுற்றி வைத்திருந்ததைப் போல தோல் ஒட்டிக்கொண்டிருக்க, விலா எலும்புகள் அத்தனையையும் ஒவ்வொன்றாய் எண்ணிவிடலாம் போல் துருத்திக் கொண்டிருந்ததன. கோமா முன்பெல்லாம் நல்ல வாளிப்பான உடல்வாகுடன் அழகாக இருப்பன். என்றைக்கு அவன் மனசு பேதலித்துப் போனதோ அன்றிலிருந்து வேளாவேளைக்கு ஒழுங்காகச் சாப்பிடாமல் இருப்பதினாலும், தேவையான அளவுக்குத் தூக்கமில்லாமல் இருப்பதினாலும், தினசரி அவன் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அதிதீவிர வீரியங்களினாலும் அவன் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாய் மெலிந்து நலிந்து போய் இருந்தது. கோமாவிடம் நான் பேச்சுக் கொடுத்தேன்.

கோமா.. இங்க பாருடா.. வரதன் வந்திருக்கேன்.

கோமாவிடம் துளி அசைவும் இல்லை. சிலை மாதிரி நின்றிருந்தான். கண் இமைகூடத் தட்டவேயில்லை. திரும்பவும் கூப்பிட்டேன்.

கோமா… கோமா.. என்னடா ஆச்சு உனக்கு.. கட்டையைக் கீழே போடுறா..

கோமா அதற்கும் அசையவில்லை. அவன் கட்டையைப் பிடித்த கையையும் அசைக்கவில்லை. பிடி தளரவும் இல்லை. இறுகவும் இல்லை.

என்னடா வேணும் கோமா.. என்கிட்ட சொல்லுடா.. இப்படியே நின்னுகிட்டு இருக்கியாமே.. நேத்து இராத்திரியிலேர்ந்து.. கால் வலிக்கலையா.. வாடா.. இங்க வந்து உக்காரு.. அம்மா எதுனாச்சும் சொன்னாளா.. இல்ல அப்பாவா.. டேய்.. கோமா… எனக்குப் பயம்மா இருக்குடா நீ இப்படி நிக்கிறதைப் பாத்து.. வாடா.. கட்டையைக் கீழே போட்டுட்டு வா.. ஒரு வாய் காப்பி தரச் சொல்லவா.. அம்மா நீ காப்பி போட்டு எடுத்துட்டு வா.. கோமா நேத்து ராத்திரி சாப்பிட்டது.. அவனுக்குப் பசிக்கும்ல்ல.. கோமா.. கோமா ..

என்றவாறு அவன் பக்கத்தில் போக முயன்றேன். சிதம்பரம் வராண்டாவில் நின்று கொண்டு என்னை நோக்கி கண்ணாலேயே “பக்கத்திலே போகாதே..” என்று சைகை காட்டினான். அவன் அப்படி குறிப்பாய்ச் சொன்னதைக் கோமா பார்த்தானா இல்லையா என்று தெரியவில்லை. அவனிடம் தான் துளி அசைவும் இல்லையே.. எனக்கும் கோமாவின் அருகில் போகக் கொஞ்சம் பயமாகவே இருந்தது. அம்மாவின் விசும்பல் சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லாமல் வீடு நிசப்தமாய் இருந்தது. வீட்டின் அந்தப் பேரமைதி இன்னும் பயங்கூட்டுவதாய் இருந்தது. அப்பா திண்ணையை விட்டு எழுந்திருக்கவே இல்லை. எனக்கோ சிதம்பரத்திற்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. திரும்பவும் ஏதாவது பேசு என்று சிதம்பரம் கண்ணைக் காண்பித்தான்.

என்ன பேசுவது என்று தெரியாமல் நானும் நின்றபோது வராண்டாவில் சிதம்பரம் தான் படுத்திருந்த, இன்னமும் மடிக்காமல் விட்டிருக்கும் போர்வையைக் கண்ணாலேயே காண்பித்தான். இரண்டொரு மாதங்களுக்கு முன்னால் கோமா வராண்டாவில் இப்படித்தான் நின்ற இடத்திலேயே கிட்டத்தட்ட மூன்று நான்கு மணி நேரம் அசையாமல் நின்று விட்டான். அப்பா வேலைக்குப் போயிருக்க  சிதம்பரம் காலேஜில் இருந்தான். நான் ஆபிஸில் இருந்த சமயம் அம்மாவிடமிருந்து போன் வந்தது. நான் அகிலாவிடம் ஸ்கூல் முடிந்ததும் ஆட்டோ பிடித்து அப்பா வீட்டிற்கு வரச் சொல்லி போன் செய்து விட்டு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு வர ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. வந்து பார்த்தால் ஏற்கனவே இரண்டு மணி நேரமாய் நிற்பதாய் அம்மா சொன்னாள்.  அப்போதும் இப்படித்தான் எல்லாரும் மாறி மாறி அவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தோம். அவனும் இன்றைக்குப் போலவே அன்றைக்கும் எதற்கும் அசைந்து கொடுக்காமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு மேலேயே பார்த்துக் கொண்டிருந்தான். இன்றைக்குப் போதாத காலமாய்க் கையில் ஒரு கட்டையை வேறு வைத்துக் கொண்டிருக்கிறான்.

அன்றைக்கு வெறுங்கையாய் நின்று கொண்டிருந்தான் என்பதால் நானும் சிதம்பரமும் ஒரு கணத்த போர்வையை எடுத்துக் கோமாவைச் சுற்றித் தரையில் போட்டு ஆளுக்கொரு பக்கமாய் மெல்லத் தூக்கி அவனைக் கட்டி விட்டோம். கட்டியதும் கோமா பெருங்கூச்சல் போட ஆரம்பித்தான். போர்வையை உதறித் தள்ளிவிட முயன்றான். நாங்கள் போர்வையை மேலும் இறுக்கினோம். கைகளைக் கட்டிவிட்டதால் கால்களைக் கொண்டு என்னையையும் சிதம்பரத்தையும் உதைக்க ஆரம்பித்தான். கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை, அம்மாவை, அப்பாவை, சிதம்பரத்தை எல்லாரையும் திட்டினான். என்ன காரணத்தினாலோ அகிலாவை அவன் திட்டவே இல்லை. அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவே இல்லை. அவனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் எங்களுக்குப் போதும் போதும் என்றாகிப் போனது. கோமாவின் கையைக் கட்டி காலைக் கட்டி அவனை ஒரு ஆட்டோவுக்குள் தூக்கிப் போட்டுத்தான் அவனை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போனோம். அதை ஞாபகப் படுத்தியே சிதம்பரம் போர்வையைக் கண்ணால் ஜாடை காட்டுகிறான் என்று எனக்குப் புரிந்தாலும் கோமாவின் கையில் இன்று அவன் வைத்திருக்கும் உருட்டுக் கட்டை எனக்கும் சிதம்பரத்திற்கும் பெரும் பயத்தினைத் தந்திருந்தது.

பேசி பேசித்தான் கோமாவைச் சுய நினைவை அடைய வைக்க ஒரே வழி என்பது தெரிந்தும்கூட அவனிடம் இப்போது எதைப் பேசுவது என்பது மட்டும் தெரியாமல் நான் அவனையே பார்த்துக் கொண்டு நின்றேன். அழுதபடிக்குப் பேசுவதில் பலனில்லை என்று மட்டும் தோன்றியது. வழியும் கண்ணீரைத் துடைத்தேன். கோமா தான் இவ்வாறு நிற்கிறோம் என்பது தெரியாமல் தானே நின்று கொண்டே இருக்கிறான்,  அதனால் நானும் அவன் நின்று கொண்டிருக்கிறான் என்பது தெரியாமல் இருக்கிறேன் என்றே அவனிடம் காட்டிக் கொள்ள விரும்பினேன். அதனால் சகஜ நிலைக்கு வந்தாற் போலக் காட்டிக்கொண்டு அவன் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து ஒரு அடி தள்ளி தரையில் அமர்ந்து கோமாவுடன் பேச ஆரம்பித்தேன்.

கோமா.. என்னையை ஆபீஸ்ல ஆடிட் செக்சன்ல போட்டிருக்காங்கடா. ஓங்கிட்ட சொன்னேனா.. எனக்கு ஞாபகமே இல்லை. இப்பதான் ஒரு ரெண்டு மாசமாச்சு. கிட்டத்தட்ட இது ஒரு ப்ரோமோசன் மாதிரி தான். கொஞ்சமா இன்க்ரிமெண்டு உண்டுன்னாலும் இனிமே வேலை அதிகமா இருக்கும். இப்ப இருக்குறதை விட ரெஸ்பான்ஸிபிள் அதிகம். ஒரு மாசம் ஹெட் ஆபீஸ்ல போய் ட்ரெயின்ங் எடுத்துக்கச் சொல்லியிருக்காங்க. ட்ரெயின்ங்குன்னா ஒரு பதினைஞ்சு நாளாச்சும் இருக்கும் போல. சென்னையில தான். இது ரீட்டெயில் ஆடிட்டிங். கார்ப்பரேட் ஆடிட்டிங்குன்னா அதுக்கு மும்பையில தான் ட்ரெயின்ங். அது இதைவிட பெரிய டிவிஷன். அதுக்கு எனக்கு இப்ப எக்ஸ்பீரியன்ஸ் போதாதுறா. இன்னும் கொஞ்ச வருஷமாகும். இந்த போஸ்டிங்கையே நான் ஹெட்டாஃப்தி ஆபீஸுக்கு ஜால்ரா போட்டு தான் வாங்கிட்டேன்னு ஆபீஸ்ல எல்லாரும் ஜாடை மாடையா பேசுறானுங்க. ப்ரெயின்லெஸ் ஃபூல்ஸ். நான் உழைச்சேன்டா. நாயா உழைச்சேன். எத்தனை நாள் மிட் நைட்டு வரைக்கும் ஆபீஸ் வேலையைப் பாத்துட்டு வீட்டுக்கு லேட்டா வந்திருப்பேன். எத்தனை தரம் அதுக்காக அகிலாகிட்ட திட்டெல்லாம் வாங்கியிருப்பேன். ஐ டிஸர்வ்ட் இட் யூ நோ. கடைசி வரை இந்த ப்ரோமோஷன் எனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோன்னே இருந்துச்சு. பட் என்டாஃப் தி டே ஐ காட் இட்.  ஐயாம் ஹாப்பி கோமா.. ஆர் யூ..

கோமாவிடம் எந்த வித சலனமும் இல்லை. அப்படியே சிலை மாதிரி நின்றான். அம்மா நான் கோமாவிடம் பேசுவதைப் கேட்டவுடன் அடுப்பாங்கரையை விட்டு வெளியே வந்தாள். அழுதழுது வீங்கிப் போயிருந்த தன் முகத்தை சேலைத் தலைப்பால் துடைத்திருப்பாள் போல. வந்தவள் கோமாவிடம்

கோமா.. ஏண்டா இப்படியே மரம் மாதிரி நிக்குற.. கட்டையைக் கீழே போட்டுட்டு இப்ப நீ வரப் போறீயா இல்லையா.. ஏன் இப்படி எல்லாரையும் பாடாப்படுத்துற.. இப்படி நீ ஒரு மாதிரி நிக்கத்தானா நா அத்தனை கோயில் கோயிலா ஏறி இறங்கினேன். எந்தெய்வமே.. என் புள்ளையோட கதியைப் பாத்தியா.. பாத்தும் பேசாம இருக்கியே நீ நெசம்மாவே தெய்வம் தானா..

என்று சாதாரணமாகப் பேச ஆரம்பித்தவள் மீண்டும் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினாள். சிதம்பரம் அம்மாவின் அருகில் வந்து அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். பெத்தமனம் எதற்கும் சமாதானமாகிறதாகத் தெரியவில்லை. கண்ணீருடன் கோமாவைத் தாண்டி அப்பா அமர்ந்திருந்த வெளித் திண்ணைக்குப் போய் அப்பாவுக்கருகில் அமர்ந்து தன் அழுகையைத் தொடர்ந்தாள் அம்மா. நான் இன்னமும் கோமாவின் கால்களுக்கருகிலேயே அமர்ந்திருந்தேன்.

சிதம்பரம், மீண்டும் நானும் கோமாவும் இருக்கும் ஹாலுக்கு வந்தவன் என்னிடம் மெல்லமாய் வரதா போன தடவை போன ஹாஸ்பிடலுக்குப் போன் பண்ணவா.. அங்கேருந்து ஆம்புலன்ஸ் கொண்டு வரச் சொல்லி அவங்க ஆட்களை வச்சே கோமாவை ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போயிரலாம். லெட் தெம் ஹாண்டில் ஹிம்.

வேணாண்டா. போன முறை இவன் இப்படி ஆனப்பவே இவனை அவங்க அவங்களோட ஹோம்ல சேக்கச் சொன்னாங்கன்றதை மறந்துட்டியா.. இப்பவும் அதையேதான் சொல்வாங்க. நான் போய்ப் பாத்தேன். ஹோமாடா அது.. லிட்டரலி இட்ஸ் அ ப்ரிஸன். இன் பேஷண்டட்க்கு செவன் பை ஃபோர்ல்ல ஒரு ரூம். அதுல சின்னதா ஒரு காட். காத்தே இல்லாம.. வெளிச்சமே இல்லாம.. இருட்டா.. புளுக்கமா.. ரொம்பக் கொடுமைடா.. நம்ம கோமா பாவம்டா. கொஞ்ச நேரம் பேசிப் பாப்போம்.  இப்ப மணி என்ன.. எட்டரையா..  இன்னும் ஒரு ஒன்னவர் பாப்போம்.

மணி எட்டரை என்றதும் எனக்கு என் ஆபீஸின், அகிலாவின், அகிலாவின் ஸ்கூலின் ஞாபகங்கள் வந்தன. சிதம்பரம் வந்து கூப்பிட்டதும் அகிலாவிடம் சொல்லிக் கொள்ளாமல்கூட வந்து விட்டதை அப்போதுதான் நினைத்தேன். அரக்க பரக்கச் சமைத்துக் கொண்டே பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பிக் கொண்டிருப்பாள். கோமாவுக்கு இப்படி என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டு வந்திருக்கலாம். செய்யவில்லை. இப்படித்தான் என் எல்லாக் காரியமும். ஆனால், அகிலா அப்படியில்லை. அகிலாவுக்கு விசயம் தெரிய வருமானால் அவள் நிதானமாய் யோசித்து நல்ல முடிவாய் எடுத்திருப்பாள். என்ன இருந்தாலும் அவளைப் போலப் புத்தியால் எதையும் யோசிக்கிறவனாய் நானில்லாது போனது குறித்து எனக்கு அவ்வப்போது எழும் சின்ன மன வருத்தம் இப்போதும் வந்தது.

அகிலா எங்களுக்கு அத்தை மகள். அப்பாவின் தங்கை மகள். சிறு வயதிலேருந்தே அகிலா இப்படித்தான் எல்லா விசயங்களிலும் ஒரு நிதானமாய் இருப்பாள். அதிர்ந்துகூடப் பேச மாட்டாள். இப்போதும் அப்படித்தான். கோமாவும் அப்படித்தான். அதிரப் பேச மாட்டான். அதனால் தானோ என்னவோ சிறு வயது முதலேயே கோமாவுக்கு அகிலா என்றும் அகிலாவுக்கு கோமா என்றும் அப்பாவும் அத்தையும் பேசி வைத்திருந்தார்கள். ஆனால், காலத்தின் கணக்கு வேறு மாதிரி இருந்திருக்கிறது. கோமாவைப் பித்தாக்கியும் அகிலாவை எனக்கு மனைவியாக்கியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

கோமா இப்படி ஆனவுடன், மாமா அப்பாவிடம் சின்ன வயசுல பேசினோம்.. அதனால என்ன.. கண்டிப்பா அதே மாதிரி தான் நடக்கனும்ன்னு எதுவும் கட்டாயம் இல்லையே.. தட்டு மாத்தின கல்யாணங்களே நின்னு போகுது.. இது பேசி வச்சது தானே.. என்று பேச ஆரம்பித்தார். ஆனால் அத்தையோ, அகிலாவுக்கு வரன்களை மாமா அழைத்து வந்த நேரங்களிலெல்லாம் தன் கண்களைக் கசக்கிக் கொண்டு நிற்கத் துவங்கவே, வரதனுக்கு வேணா கட்டி வைக்கிறேன். அதுவும் உங்க தங்கச்சிக்காக.. அதுக்கு இஷ்டம்ன்னா சொல்லுங்க.. இல்லையா, இப்படி அழுதழுது வர்ற வரனையெல்லாம் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்றதுல ஒரு அர்த்தமும் இல்லைன்னு உங்க தங்கச்சிக்குப் புரியவைக்கப் பாருங்க… என்று ஒரேயடியாய் சொல்லிவிட, தன் தங்கையின் மேல் உள்ள பாசத்தினாலும் அகிலாவை வேறு குடும்பத்திற்கு விட்டுக் கொடுக்க மனமில்லாமலும், சொந்தம் விட்டுப் போய்விடாமல் இருக்கவும் எனக்கும் அகிலாவுக்கும் இந்தக் கல்யாணத்தில் இஷ்டமா இல்லையா என்றுகூடக் கேட்காமல் ஆறு மாதங்களுக்கு முன் எங்களிருவருக்கும் மணமுடித்து  வைத்தனர்.

எங்கள் கல்யாணத்தன்று என்னைவிடக் கோமா சந்தோசமாக இருந்தான். எப்போதும் யாரிடமும் முகம்கொடுத்துப் பேசாதவன் அவனுக்கு எடுத்திருந்த பட்டு வேட்டி சட்டையில் ஜம்மென்று முதல் வரிசைச் சேரில் உட்கார்ந்து கல்யாண நிகழ்வுகளை ஒரு சிறு குழந்தையைப் போலச் சிரித்த முகத்துடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா அவன் அருகில் அமர்ந்து வந்திருக்கும் சொந்தங்களில் யாரேனும் கோமாவின் மனம் நோக எதுவும் பேசி விடாமல் இருக்க பெரும் பிரயத்தினம் செய்து கொண்டிருந்தாள். எனக்குத் தான் ஒரே கில்ட்டியாக இருந்தது. கோமா நன்றாய் இருந்திருந்தானெனில் அவன் மப்பிள்ளையாய் இருந்து நடக்க வேண்டிய கல்யாணம் இது. ஆனால் மாப்பிள்ளையாய் நான் இருக்கிறேன்.

அகிலாவுக்கும் கோமாவையே கல்யாணம் கட்டிக் கொள்ளும் எண்ணம் முதல்லேயே இருந்திருக்கலாம்தான். சிறு பெண்ணாய் இருந்த போதிலிருந்தே கோமாவை நினைத்து நினைத்தே அவள் வளர்ந்திருக்கலாம் தான். அதை அவள் ஒரு போதும் காட்டிக் கொள்ளவே இல்லையென்றாலும், எத்தனை முறை பெரியவர்கள் பொது இடங்களில் சொல்லிச் சொல்லி வளர்த்தார்கள். இப்படி பொசுக்கென்று எல்லாமும் மாறிப் போனதில் ஏதேனும் வருத்தம் இல்லாமலா இருந்திருக்கும்..

ஆனால், அகிலாவிடம் அது குறித்துக் கேட்கும் தைரியம் எனக்கு இன்று வரை இல்லாமலே போய்விட்டது. ஒரு வேளை ஆழ் மனதில் எனக்கும் அகிலா மீது  ஆசை இருந்ததுகூட ஒரு காரணமாய் இருக்கலாம். நான் அகிலாவிடம் ஏதாவது கேட்கப் போய், அவளும் ஆமாம் நான் கோமாவைத்தான் கட்டிக்க ஆசைப்பட்டேன் என்று சொல்லி விட்டால்.. அது இன்னமும் கொடுமையாய் அமைந்துவிடும் என்றுதான் நான் அவளிடம் இது பற்றி ஒரு வார்த்தைகூடக் கேட்காமலேயெ காலத்தைக் கடத்தி வருகிறேன்.

ஒரு ஹால், வரண்டா மற்றும் அடுப்பங்கரை என்றிருந்த எங்கள் வீடு புதிதாய் கல்யாணமான எங்களுக்குப் பத்தாமல் போகவே இரண்டு தெரு தள்ளி வாடகை வீட்டில் குடியேறியதும் அகிலாவுடன் நான் தனித்திருக்கும் நேரங்களைக் குறைக்கவே ஆபீஸில் நாயாய் உழைக்கிறேன் பேர்வழியென்று லேட்டாய் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அகிலாவுடன் கூடும் போதெல்லாம்கூட கோமாவின் அகிலாவை அவனது மனப் பிசகைக் காரணம் காட்டி அபகரித்த குற்ற உணர்வு மனதை அரித்து கொண்டு தான் இருந்தது. அதை ஒரு கடமையாய்த் தான் செய்கிறேனா அல்லது இளமையின் உந்துதலில் செய்கிறேனா என்பதையெல்லாம் யோசிக்கக் கூட நான் தயாராய் இல்லை. ஆனால், அகிலா எங்கள் மண வாழ்வில் துன்பத்தைத் தரும் விசயங்களைப் பேசவோ அல்லது செய்யவோ இல்லாமலேயே இருக்கிறாள்.

அகிலா குறித்த யோசனைகள்  மனதை அழுத்தும் வேளையில் சிதம்பரத்திடம் இருந்து அவனது மொபைலை வாங்கி அகிலாவை அழைத்தேன்.

அகிலா கோமா திரும்பவும் இப்படி நின்னுட்டு இருக்கான். நான் இன்னிக்கு ஆபீஸுக்குப் போக முடியும்ன்னு எனக்குத் தோணலை. என்னோட மொபைலை வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன். ஒண்ணு பண்றியா.. அதிலேருந்து கிறிஸ்டோஃபர் சாருக்கு போன் பண்ணி நான் இன்னிக்கு லீவுன்னு சொல்லிடு. ஹீ வில் மானேஜ். நீ ஸ்கூலுக்குப் போறப்ப இந்த வழியா வந்து என் போனை எங்கிட்ட கொடுத்துரு.

போனை வைத்தேன். அப்போது ஹால் அலமாரியில் இருந்த கோமாவின் செஸ் போர்ட் கண்ணில் பட்டது. அதை எடுத்து கோமா நின்று கொண்டிருந்த திசையில் அவன் கண்களுக்குப் படுமாறு விரித்து வைத்து, போர்டுக்குப் பக்கத்தில் செஸ் காயின்ஸ் போட்டு வைத்திருந்த டப்பாவில் கையை விட்டு கைக்குக் கிடைத்த காய்களைக் கண்ணுக்குத் தெரிந்த கட்டங்களில் சும்மாவேணும் அடுக்கி, சட்டென செஸ் எண்ட் கேம் ப்ராப்ளம் ஒன்றை உருவாக்கினேன்.  “கோமா… ஒயிட் டூ மூவ் அண்ட் வின்” என்று சொல்லி கோமாவைப் பார்த்தேன். அப்போதும் அவனிடம் அசைவே இல்லை.

அம்மாவும் அப்பாவும் உள்ளே வந்தனர். அப்பா மெதுவாய்க் கோமாவிடம் பேசத் துவங்கினார்.. “எப்போவ்.. கோமா.. இங்க பாருய்யா.. யார் மேலே உனக்குக் கோவம்.. சொல்லு.. அப்பா மேலேயா.. எதுனாச்சும் தப்பா பண்ணீட்டேனாய்யா.. அப்படி எதுவுமிருந்தா மன்னிச்சுருய்யா.. அதுக்காக இப்படி எங்களைத் தண்டிக்காதப்போவ். வாய்யா.. அந்த இடத்தை விட்டுட்டு வா. இங்கன அப்பாகிட்ட வந்து உக்காரு.. அப்பா வேணா உனக்குச் சாப்பாடு தரட்டுமா. வாப்பா வா” என்று கோமாவைப் பார்த்து கெஞ்சவும் கொஞ்சவும் ஆரம்பித்தார் அப்பா. கோமா அதற்கும் அசைபவனாய்த் தெரியவில்லை.

அம்மா அழுதபடியே என்னிடம் சொன்னாள்.  டேய் வரதா.. இவன் அசையற மாதிரியே தெரியலயே.. பேசாம அந்த ஆஸ்பத்திரிக்காரனுக்குப் போனப் போடு. அவன் வந்து ஊசியோ மருந்தோ கொடுத்துக் கூட்டிட்டுப் போகச் சொல்லு. இன்னும் எத்தனை நாழி தான் இவன் இப்படி நிக்கிறதையே பாத்துக்கிட்டு இருக்க.. சொல்லு.. அவன் அந்த இடத்தைவிட்டு நகந்து வந்தாப் போதும்டா.  வரச் சொல்லுடா

வேண்டாம்மா… அந்த ஹோம் சரியில்லைம்மா.. இப்பவே கோமா பாதியாளாத் தான் இருக்கான். அங்க போனா இன்னும் உருக்குலைஞ்சு போயிடுவான்.  வேண்டாம். நாமளே பாத்துக்கலாம். இவன் இங்கேருந்து நகந்து வந்துட்டான்னா அப்புறம் கவலையில்லை. வழக்கம் போல மருந்து மாத்திரை கொடுத்துப் பாத்துக்கலாம் என்று அம்மாவுக்குப் பதில் சொன்ன நான் கோமாவிடம் திரும்பி, டேய் கோமா.. நீ எங்கூட வந்து உக்காருடா. நீ முன்ன மாதிரி வெறும் கோமா இல்ல தெரியுமா. இப்படில்லாம் யூஸ்லெஸ்ஸா நின்னுட்டே இருக்கக் கூடாது..  யூ ஹாவ் அ லாட் ஆஃப் ரெஸ்பான்ஸிபிலிட்டி நவ்.. ஏன்னா நீ.. ஆக்சுவலா நானும் அகிலாவும் இந்த விசயத்தை இன்னமும் யாருகிட்டேயும் சொல்லவே இல்லை. அப்பா அம்மாகிட்டகூடச் சொல்லலை. அத்தை மாமாவுக்குக் கூடத் தெரியாது. உங்கிட்ட தான் முதன் முதலா சொல்றேன். அதுவும் அகிலாவோட பெர்மிஷன் இல்லாம தான் சொல்றேன்.. ஆமாடா.. நீ பெரியப்பா ஆகப் போற.. நான் அப்பா ஆகப் போறேன்டா..

நான் இதைச் சொல்லும் போது என் கவனம் கோமாவின் மீது இருந்து விலகி  அப்பா மீதும் அம்மா மீதும் சிதம்பரத்தின் மீதும் இருந்தது. அப்பாவுக்கு வந்தது சந்தோசமா இல்லையா என்று தெரியாத மாதிரியான ஒரு உணர்வை அவர் முகம் காட்டியது. அம்மா, கோமா இந்த நிலையில் இருக்கும்போது இப்படி ஒரு விசயத்தைச் சொல்கிறேனே என்று எண்ணும்படி வாய் பொத்தி அழுதாள். சிதம்பரம் மட்டும் கொஞ்சமாய்ப் புன்னகைத்தான்.  சிதம்பரம் தாண்டி என் கவனம் வாசல் பக்கம் சென்றபோது அங்கே அகிலா வந்து கொண்டிருந்தாள். காம்பவுண்ட் கேட்டைச் சாவகாசமாகத் திறந்தவள் கையிலிருந்த தன் கைப்பையை அப்படியே போட்டுவிட்டு “அய்யோ.. கோமா வேண்டாம்…” என்று கத்தியவாறு வீட்டிற்குள் ஓடி வந்தாள். அதற்குள் என் தலையில் இடி மாதிரி அடி ஒன்று விழுந்தது.

கோமா தான், தன் கையில் வைத்திருந்த கட்டையால் அடித்துவிட்டான். அதைப் பார்த்துதான் அகிலா கத்தியிருக்கிறாள். அவள் வாசலிலிருந்து ஹாலுக்கு வருவதற்குள் கோமா அடித்துவிட்டான். அவன் அடித்த வேகத்தில் எனக்குள் பொறி கலங்கிக் கண்களுக்குள் இருள் கவிந்தது. மீண்டும் நான் கண் திறக்கையில் அகிலா வராண்டாவைத் தாண்டி கோமாவின் அருகில் வந்திருந்தாள். ஒரு அரை நொடி நேர இருட்டுதான் என்பது புரிந்தது. நான் கீழே படுத்திருந்தேன்.

கோமா அம்மணமாய் நின்றிருந்தான். அவன் என்னை அடிக்க தன் முழு பலத்தையும் உபயோகித்திருப்பான் போல. அந்த வேகத்தில் அவன் இடுப்பில் ஒட்டிக் கொண்டிருந்த கைலி அவிழ்ந்திருக்க வேண்டும். அகிலா நேராய் கோமாவின் அருகில்தான் போனாள். கீழே விழுந்து கிடந்த அவனது கைலியை எடுத்து அவன் இடுப்பில் சுற்றிக் கட்டிவிட்டாள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சிதம்பரத்திற்கும் அப்போதுதான் என்ன நடந்தது என்று விளங்கியிருக்க வேண்டும். அம்மா என் அருகில் ஓடி வந்தாள். நான் என் தலையில் கையை வைத்து அழுத்திப் பிடித்திருந்தேன். அவ்விடத்தில் வலியேதும் தெரியாதது மாதிரி மரத்துப் போயிருந்தது. தலையிலிருந்து கையை எடுத்துப் பார்த்தால் கையெல்லாம் சிவப்பாய் இரத்தம் பிசுபிசுத்தது. அடிபட்ட இடத்திலிருந்துதான்  வந்து கொண்டிருந்தது.

கோமா என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அகிலா, கோமாவுக்கு அவன் கைலியை உடுத்தி விட்டபின் என்னருகில் வந்து என் தலை முடிகளை விலக்கி எவ்வளவு தூரம் அடிபட்டிருக்கிறது என்று பார்த்தாள். சிதம்பரம் என் தலையில் வழியும் இரத்தத்தைப் பார்த்து, ஏதோ ஒரு ஆஸ்பத்திரிக்குப் போன் செய்து டாக்டர் இருக்கிறாரா என்று விசாரித்துக் கொண்டிருந்தான். அப்பா ஓடிப்போய் கோமாவை அடிக்கப் போனார். சிதம்பரமும் அகிலாவும் அப்பாவைத் தடுத்து நிறுத்தினார்கள். அம்மா இப்போது என் பக்கம் அமர்ந்து எனக்காக அழத் துவங்கினாள்.

கோமா தான் நின்று கொண்டிருந்த அந்த இடத்திலிருந்து மெது மெதுவாய் நகர்ந்து நடந்து நான் அடுக்கி வைத்திருந்த செஸ் போர்டை நோக்கிப் போனான். போர்டையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான். பின் மெல்ல பேசத் துவங்கினான்.

வரதா வொயிட் டூ மூவ்ன்னா சொன்ன…  அப்ப மேட் இன் த்ரீ மூவ்ஸ்..

ஆர் ஈ ஒன் …

ஆர் க்ராஸ் ஈ ஒன் ..  ஆர் க்ராஸ் ஈ ஒன்…

க்யூ க்ராஸ் ஈ ஒன்..  க்யூ ஜீ டூ  …

தேட் ஈஸ் எ செக் அண்ட் மேட்.

**********

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close