கவிதைகள்

கவிதைகள் – சந்திரா தங்கராஜ்

கவிதைகள் | வாசகசாலை

மரையா!

பவளமல்லி கமழும் யாமத்தில்
ஒவ்வொரு கூடலின் பின்னும்
சிறுகச்சிறுக உதடுகளில் நீயிட்ட
பனிநீர் முத்தங்களை ஏந்தினேன்.
அவ்வமைதியில் மனம் நிறைந்து
சுந்தர ஒளி மேகத்தைத் தழுவி
வெண்ணிலவை மறைக்கும் போது,
எங்கிருந்தோ பனிக்கத்தியொன்று பாய்ந்துவந்து
என் நெஞ்சினில் இறங்குகிறது.
தலை கிறுகிறுத்து பைத்தியம் பிடிக்க
உன் நெஞ்சினைப் பிளந்து காட்டென்றேன்
ரத்தம் பீறிட அதைச் செய்கிறாய்.
ஏன் இத்தனை கலக்கம்
உனக்கு என்மேல் அன்பில்லையா என்கிற
வழமையான சொற்களில் நான் ஏங்க,
என் கண்களை விடாது பார்த்தபடி
அதரங்களைக் கடித்துக் குருதி பரியும்
முத்தங்களைப் பொழிந்தாய்.
உடனே சமாதானமடையும் கிறுக்குப்பிடித்த
என் கண்களைத் தாழ்த்திக்கொண்டு,
திறந்திருக்கும் உன் மார்பினை
இழுத்துப் பிடித்து
வெள்ளை நூல்கொண்டு மூட்டினேன்.
துயில்கொள்ளும் உன் முகத்தினை
உற்றுப்பார்த்தபடி
விடியவிடிய விழித்திருந்தேன்.
விடிந்ததும் உனக்கு
என்மேல் காதலில்லை என்றேன்.
உனக்கோ தலைக்கேறியது பித்தம்
என்னை இழுத்துக்கொண்டு கானலுக்குள் மறைகிறாய்.
குறிசொல்லும் கட்டுவிச்சியை கூவியழைக்கிறாய்
தாழம்பூவைச் சூடியிருக்கும் அவள்
தன் குறிக்கோலால்
நம் கைரேகைகளை அளந்து
‘தொடமுடியாத் தூரத்தில் அலையும்
இணைபிரியா வரையாடுகள் நீங்கள்’ என்கிறாள்.
அப்போதே வலுவேறிய நம் கால்கள்
நீள‌ப்பாறைகளில் தாவித் தாவி
மலையின் அதியுச்சியில் நின்றன.
இனி அப்படியே பள்ளத்தில் தலைகீழாகப் பாயவேண்டியதுதான் என்றேன்.
மரையா, வரையாடுகள் ஒருபோதும் மலையிலிருந்து குதிக்காது என்றுசொல்லி
என் உதடுகளை உறிஞ்சினாய்
அப்போது அந்திச்சூரியன்
மலையென எண்ணி
நம் தலைகளிலிருந்து இறங்கிச் சென்றது.

(நிலம் – குறிஞ்சி.
பெரும்பொழுது – முன்பனி.
சிறுபொழுது – யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை.)

*****

வெள்ளிக்காடு

எப்போதும் இல்லாத அளவு பனி
கேளையாடு சத்தமெழுப்பி
குரைத்தபடி
சரிவில் இறங்குகிறது
கம்பளிக்குள்ளே நடுங்கிய அம்மா
ஒருமுறை கண்களை அகலத்திறந்து
பனிக்காலத்தில் ஏன் இலைகள் யுதிர்கின்றன
என்கிறாள்
முழுதும் நினைவு தப்பிய முகம்
காலம் குழம்பிய காட்டுப்பன்றியாய்
நாள்திசையும் உயிர்தேடி
மண்ணை முட்டி முட்டிப் பேத்தெடுக்கிறது
நாங்கள் தொலைதூரமாய் நகர்ந்து
இருமலைகளெனப் பிரிந்தோம்
இனி நான் நடக்கும்போது
சரிந்து சரிந்து பள்ளத்தில் விழுவேன்
உன்னிச்செடியின் புதர்களுக்குப் பின்னே
நரி நின்றிருப்பதைக் கண்டு
மயங்கிச் சரிவேன்
சாகுருவி என் போர்வையை
வாயில் கவ்விச் செல்ல
மலைப்பனி முழுதும்
என் தலையிலேயே கொட்டும்
வீட்டுச் சுவர்களில்
பச்சைநிறப்பாசி படியும்
சிம்னி விளக்கில் கறுத்தஒளி பரவும்.

இவ்வளவு பெரிய வெளியில்
நீ தொலைந்து போயிருக்கக்கூடாது
என் வெள்ளிக்காடே,
உன்னைத் தேடும் திசையறியா
சின்னஞ்சிறு முயல்குட்டி நானென்றறிவாய்தானே
கண் முழித்துப் பார்த்தால்
நீ இல்லாத நாளை
அவ்வளவு எளிதாகவா நினைத்தாய்
உருண்டுவரும் பாறைக்கு நேராக
நடுங்கும் இதயத்துடன் நிற்பதது
‘ஒவ்வொரு முறையும்
என் கண்ணீர் துடைக்க
பூமி பிளந்து வருவாயா அம்மையே…’
என உரக்கக் கத்தினேன்
வரையாடு ஏறா மலையின் அதிஉச்சியில்
நின்ற மூப்பன் சொன்னான்,
“மேலே வந்து பார்
எவ்வளவு போர்வைகள்
காற்றில் பறக்கின்றன என்பதை”.

*****

மஞ்சி

வாசலில் நின்று பார்க்கிறேன்
வெள்ளை நிற பஞ்சுப்பொதியாய்
காட்டை முழுதும் மூடியிருக்கிறது மஞ்சி மூட்டம்.
மழைபோல் பொழியும் பனியில்
அம்மா பீன்ஸ்காய்களை பறித்துக் கொண்டிருக்கிறாள்.
அவள் வெறும்கால்களில் சொதசொதப்பான ஈரம்.
காய்ச்சலில் என் உடல் நடுங்கிக்கொண்டிருக்க,
இனி சூரியனே வராது என்று கத்தியபடி கம்பளிக்குள் நுழைகிறேன்.
சிறகுகளை அடித்தபடி உள்நுழைகிறது ஒரு பறவை.
அது மஞ்சிக்காட்டுக்குள்
என்னைப் போர்வையோடு தூக்கிச் செல்கிறது.
வெயில் தேசத்தில் விட்டுவிடென்று
அதனிடம் மெதுவாக முணுமுணுக்கிறேன்.
அது திரும்ப என் காதில் சொல்கிறது
“பனிதேசத்தில் விடச்சொல்லி
முன்பு நீதானே வேண்டினாய்.
சற்று அமைதியாக வா
இப்போது நான் தூக்கிச் செல்வது உன்னையல்ல,
உன் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் குரங்குக்குட்டியை”

*****

எவ்விடம் சென்றாய் வசந்தமுல்லையே

என்னைத் தெரிகிறதா தங்கமலரே
கனத்த வயிற்றில் நீ ஆடிக்கொண்டிருந்தாய்
அப்போது நாம் உரையாடினோம்
அன்று உன்தாய் சொன்னாள்
தாளமிடும் கைகள் உனக்கென்று.
நீ யாரைக்கண்டு முதலில் சிரிப்பாயென்று
எங்களுக்குள் ஒரு போட்டி
அப்போதெல்லாம் உன் தந்தை சொல்வார்
முதலில் உன் அம்மாவின் சேலையில் இருக்கும் பூக்களைப் பார்த்தே நீ சிரிப்பாயென்று.
யாரைக்கண்டு சிரித்தபடி சென்றாய் மகளே,
நீ எவ்விடம் போனாய்?
காற்றிடமா?
மலையிடமா?
தூரத்துக் கடலிடமா?
இல்லை
உன் தாயின் கருவறைக்குள்ளா?
உன்னை எங்கு வந்து பார்ப்பேன்
பேரின்ப வசந்தமுல்லையே.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button