சிறுகதைகள்
Trending

பூமி – ராம்பிரசாத்

கண்ணாடி ஜன்னலினூடே வெளியே பார்ப்பது என்பது, ஒரு அல்ட்ரா ஹை டெஃபனிஷன் தொலைக்காட்சித்திரையில் காட்சிகளைக் கண்பதைப் போலக்கூட இல்லை என்பதால் இப்போதெல்லாம் ஜன்னலைத் திறப்பது கூட இல்லை. தொலைக்காட்சியில் முன்பே சேமிக்கப்பட்ட இயற்கைக் காட்சிகளைத்தான் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டி உள்ளது. ஜன்னலைத் திறந்தால், நச்சுக்காற்று சுவாசத்தை அரை  நொடியில் நிறுத்திவிடக்கூடும்.

 

பூமியில் எஞ்சியிருக்கும் கடைசி காலனி நாங்கள் தான். இப்போது வருடம் 2090. நாங்கள் சுமார் முன்னூறு பேர் இருக்கலாம். இந்த முன்னூறு பேரில் நான்கு பேர் தான் தீவிரமான ஆராய்ச்சியாளர்கள். நாற்பத்தாறு பேர் உதவியாளர்கள். இயந்திரங்களை இயக்க உதவுபவர்கள். எஞ்சியவர்கள் பொதுமக்கள். இந்த ஐம்பது ஆராய்ச்சியாளர்களில் முதன்மை ஆராய்ச்சியாளர்கள் ஐந்து பேர். நான் ஷிவ்.  நாடினி என்கிற நந்தினி, அவளது கணவன் ரிஷி, எங்களின் தலைவர் கிருஷ். இதில் நந்தினி என் முன்னாள் காதலியாக இருந்தவள். தற்போது ரிஷிக்கு மனைவியாக இருக்கிறாள்.   நான் அவளின் முன்னாள் காதலன் என்பது ரிஷிக்கும் தெரியும்.  ரிஷிக்கு வயது சுமார்  நாற்பத்து மூன்று இருக்கும்.  நாடினிக்கு வயது 21 தான். கொஞ்சம் வினோதமாக இருக்கிறதல்லவா இவர்களின் வேதியியல்? அதைப் பிற்பாடு விளக்குகிறேன்.

 

அந்த சந்திப்பு அறையில், எனக்கு எதிரால் ரிஷி அமர்ந்திருக்க, அவனுக்கு அருகில் நாடினி அமர்ந்திருந்தாள். நாங்கள் கிருஷுக்காகக் காத்திருந்தோம்.

 

பூமியில் முழுக்கக் கண்ணாடியால் ஆன ஒரு செயற்கை கூண்டு செய்து அதனுள்ளே ஒரு குடியிருப்பு உருவாக்கி அதனுள் வாழ்கிறோம். இந்த கூண்டுக்குள்ளே எங்களுக்கான பிராணவாயு, உணவுக்குத் தேவையான செடிகள், தாவரங்கள் என எல்லாமும் கிடைப்பது போல் செய்திருக்கிறோம். இப்போதைக்கு இந்தக் காலனி தான் எங்கள் வாழ்வாதாரம். ஆனால், ‘இது எத்தனை நாளைக்கு?’ என்பது தான் இப்போது எங்கள் முன் உள்ள கேள்வி.

 

சற்றைக்கெல்லாம் கிருஷ் வந்தார். அவர் முகத்தில் கவலையின் ரேகைகள் எதிர்பார்த்ததுக்கும் அதிகமாகப் படர்ந்திருந்தது.

 

“நாம் இனியும் தாமதிப்பது ஆபத்து” என்றவாறே எங்களுக்கு மத்தியில் இருந்த இருக்கையில் அமர்ந்தார் கிருஷ்.

 

“என்னாயிற்று” என்றேன் நான்.

 

“காற்றை சுத்திகரிக்கும் யூனிட் வேலை செய்யும் விகிதம் முப்பது சதமாகக் குறைந்துவிட்டது. இன்று காலையில் குடி நீர் லேசாகக் கசந்ததாக புகார் வந்திருக்கிறது. என்னதான் நம்முடைய காலனி தொழில் நுட்ப வசதி கொண்டது என்றாலும் அதிலிருக்கும் ஒவ்வொரு உதிரி பாகத்துக்கும் ஒரு காலாவதி தேதி இருக்கிறது என்பதை நம்மில் யாரும் மறுப்பதற்கில்லை” என்றார் கிருஷ்.

 

“ரிஷி, நீ என்ன சொல்கிறாய்?” என்றார் அவர் தொடர்ந்து.

 

“இந்தப் பூமி இதுகாறும் ஐந்து பேரழிவைச் சந்தித்திருக்கிறது.  இன்னும் கோடி ஆண்டுகளுக்காவது இந்த சூரியன் சூரியனாவே நீடிக்கும் எனில், பூமிக்கு இன்னும் ஆயுசு இருக்கிறது என்றே கணிக்கிறேன். இது உண்மை எனில், பூமி தற்போது சந்தித்துக்கொண்டிருப்பது ஆறாவது பேரழிவாகத்தான் இருக்க முடியும் என்றே கணிக்கிறேன்” என்றான் ரிஷி.

 

“அப்படியானால்?”

 

“அப்படியானால், இந்த பூமி இந்தப் பேரழிவிலிருந்தும் மீண்டும் மீளும். ஆனால், அந்த மீட்சிக்கு கால அவகாசம் எடுக்கலாம். நமக்கு வேறு வழி இல்லாமல் இல்லை. இந்த கால அவகாசத்தை, நாம் நீள் உறக்கத்தில் உறங்கி கழித்துவிட்டால், பூமி பழைய நிலைக்குத் திரும்புகையில் நமக்கு வாழ ஒரு கிரகம் கிடைக்கும்”

 

“கால அவகாசமெனில், எத்தனை கால அவகாசம்?”

 

ரிஷி தன் மடிக்கணிணியில் சில பொத்தான்களைத் தட்டிவிட்டு,

 

“சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள்” என்றான்.

 

“ஒரு லட்சம் ஆண்டுகளா?” என்று வாய் பிளந்தார் கிருஷ். நாடினி கூட சற்றே அதிர்ந்துவிட்டாள்.

 

“ஆம். ஒரு லட்சம் ஆண்டுகள்”

 

“அத்தனை நீண்ட நீள் உறக்கத்திற்கு நம்மிடம் தீர்வு இருக்கிறதா?”

 

“அதற்குத்தான் ஷிவ் இருக்கிறானே. நம் குழுவிலேயே அதீத மூளைக்காரன். அவன் ஒரு தீர்வு சொல்லட்டும்” என்றான் ரிஷி. குரலில் லேசாகத் தெரிந்த எகத்தாளத்தை நான் கண்டும் காணாதவன் போல் அமர்ந்திருந்தேன்.

 

எந்த அழகான பெண்ணுக்காவது முன்னாள் காதலனாக இருந்து, அவளது  நிகழ் கால கணவனின் சுற்றத்தில் இருக்க  நேர்ந்தால் இப்படியெல்லாம் சூழல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்குமோ என்னவோ? நாடினியும் ரிஷி என்னை வம்புக்கிழுப்பதை கவனித்திருக்க வேண்டும். தன்னிடம் இருந்த மடிக்கணிணியில் எதையோ தேடுவதான பாவனையில் அவள் அமர்ந்திருந்தாலும், ரிஷியின் அத்துமீறலை நான் எவ்விதம் கையாள்கிறேன் என்று அவள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருப்பதை நான் உணர்ந்தே இருந்தேன்.

 

அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில்  நாடினியுடன் சேர்ந்தபோதிலிருந்தே, என் அதீத தீர்வுகளால் நிறுவனத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதில் வெகுவாகக் கவரப்பட்டு காதலியானவள் தான் நாடினி. ‘எப்படி இதில் தேரப்போகிறாய்?’ என்பது போல் அவள் அமர்ந்திருந்தாள்.

 

அவர்களிடையேயான வேதியியலைப் பின்னால் விளக்குகிறேன் என்றேன் அல்லவா? அதீத தீர்வுகளால் ஈர்க்கப்பட்டு உருவான காதலுக்கு என் அதீத தீர்வுகளுக்கான உழைப்பே வினையாகிப்போனது. பெண்களிடம் அதீதமான காதல் இருக்கிறது. ஆனாலும், தனக்கான அன்பில் ஒரு துரும்பளவு கூட பிற எதற்கும் விட்டுத்தர விரும்பாத கருமித்தனமும் சேர்ந்தே இருக்கிறது என்று நான் புரிந்து கொண்ட தருணங்களில் ஒன்றில் தான் அவள் என்னிடமிருந்து விலகி, அதனால் விரக்தியுற்று அந்த விரக்தியிலேயே ரிஷியைத் துணையாகத் தேடிக்கொண்டிருந்தாள்..

 

“உடனே கேட்டால் எப்படி? எனக்கு யோசிக்கக் கால அவகாசம் வேண்டும்?” என்றேன். வேறென்ன சொல்ல முடியும்? நான் என்ன மந்திரவாதியா? ரிஷி லேசாக புன்னகைப்பது தெரிந்தது. நாடினியும் வேறெங்கோ பார்ப்பது போல் பாசாங்கு செய்தாள்.

 

“சரி ஷிவ். வழக்கம் போல் இந்த முறையும் நிறுவனம் மட்டுமல்ல, முன்னூறு உயிர்களும் உன்னை நம்பித்தான் இருக்கிறது.  நமக்கு மிக அதிக கால அவகாசம் இல்லை. சீக்கிரம் ஒரு தீர்வைக் கொண்டுவா. நீங்கள் கலையலாம்” என்றார் கிருஷ்.

 

“சரி. நான்  நீரை சுத்திகரிக்கும் யூனிட்டிற்குச் செல்கிறேன். நாம் இங்கிருக்கும் காலம் வரை சுத்தமான  நீர் கிடைக்க வேண்டும். அதற்கு சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி பார்க்க வேண்டும்” என்றுவிட்டு ரிஷி அந்த அறையை விட்டு வெளியேற,

 

“இரு நானும் வருகிறேன்” என்றுவிட்டு கிருஷும் அவனுடன் இணைந்துகொண்டார்.

 

“ஷிவ், என்னை என் யூனிட்டில் விடு” என்றாள் நாடினி.

 

“தீர்வை யோசிக்க வேண்டும் நாடினி.. நீயே சேஃபாய் வீட்டுக்குப் போயேன்” என்றேன் நான்.

 

“ஷிவ்.. என்னை தனியாக அனுப்புகிறாயா?” என்றாள் சற்றே கோபமாக.

 

நானும் அவளும் அவளது யூனிட்டிற்கு நடந்தே வந்தோம். யூனிட்டின் கதவைத் திறந்து நுழைந்தவுடன் அவள் சோர்வாகப் போய் படுக்கையில் தொப்பென்று விழுந்தாள். அந்தப் படுக்கை அவளை ஒருமுறை தூக்கிப்போட்டு காட்ச் பிடித்துக்கொண்டதைப் பார்க்க அழகாக இருந்தது. இந்த அழகான பெண்கள் திட்டமிட்டே எல்லாவற்றையும் அழகாகக் செய்கிறார்களா அல்லது அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் அழகு தானாக வந்து ஒட்டிக்கொள்கிறதா தெரியவில்லை.

 

“சரி நான் கிளம்பறேன் நந்து” என்றேன் கதவை ஒரு கையால் பிடித்தபடி.

 

சட்டென்று எழுந்து வந்து என் கையைப் பிடித்து இழுத்தாள். அந்த அறுநூறு சதுர அடி யூனிட்டில் கதவிலிருந்து இரண்டடி நகர்ந்ததிலேயே அவளது படுக்கையை அண்டியிருந்தேன். எங்களுக்கிடையில் சரியாக இரண்டடி இடைவெளி இருப்பதை அவதானித்தேன். அவள் அறையின் கதவு என் முதுகின் பின்னால் தானாகவே மூடிக்கொண்டது. சமையலறை பக்கம் சென்றவாரே திரும்பி,

 

“ஏதாச்சும் சாப்பிட்டுட்டு போ. அட்லீஸ்ட் ஒரு டீ” என்றாள்.

 

“வேணாம் நந்து.. இட்ஸ் ஓகே” என்றேன் நான்.  என் கண்கள் அவளின் படுக்கையில் மேய்ந்தது. அது எனக்கு, ரிஷியை நினைவூட்டியது.

 

ஏதோ அரவம் தோன்றி திரும்ப, அவள் அருகாமையில் வந்து நிற்பதை உணர்ந்தேன். இந்த முறை, எங்களுக்கிடையில் இருந்த இடைவெளி ஆறேழு-இன்ச்சுகளாகக் குறைந்திருந்தது.  அதற்குக் காரணம் அந்த யூனிட்டின் அறு நூறு சதுர அடி பரப்பளவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. செயற்கைக் கண்ணாடிக் கூண்டிற்குள் ஒரு கணவன்-மனைவி குடும்பத்திற்கு அதற்கு மேல் ஒதுக்க பூமி கிரகத்தில் இடமில்லை என்பது எனது அவதானமாக இருந்தது.

 

“இருக்கட்டும்..இன்னொரு நாள்..” என்று நான் சொல்லிக்கொண்டே திரும்ப, அவள் என்னை சமாதானம் செய்யும் விதமாக என் சட்டையைப் பிடித்து இழுக்க முயல,  நாங்கள் தடுமாற, முதலில் அவள் படுக்கையில் விழ, நான் அவள் மீது விழுந்தேன்.

 

அவள் லேசாகச் சிரித்தாள். நான்,

 

“என்ன?” என்றேன். தொடர்ந்து சிரித்தாள். பின்,

 

“அது கொஞ்சம் கஷ்டம் தான். அதிகபட்சம் ஒரு நூறு வருஷம் சாத்தியம். ஆனா, ஒரு லட்சம் வருஷத்துக்கு நீள் உறக்கம் என்பது டெக்னிக்கலா சாத்தியம் இல்லைதான்.” என்றாள்.

 

அந்தக் கேள்விக்கு ஒரு தீர்வு காண நான் திணறுவது தனக்கும் தெரியுமென்று அவள் காட்டிக்கொள்ளும் ஸ்திதி அந்த வார்த்தைகளில் இருந்தது. நாளை அப்படி ஒரு தீர்வே என்னால் காண முடியாவிட்டாலும் அது என் இயலாமை அல்ல என்று தான் அங்கீகரிப்பதான ஸ்திதியும் இருந்தது. ஒரு பெண், அதுவும் முன்னாள் காதலி இதை விட வேறெப்படியும் ஒரு ஆணைத் தாங்கிவிட முடியாது என்றே தோன்றியது. அதில் ஏதோவொரு நெருக்கத்தை உணர்ந்தேன். அப்போதுதான் அவள் மேலிருந்து நான் இன்னும் எழவில்லை என்பதே எனக்கு உறைத்தது.

 

நான் எழுந்துகொண்டேன். அவள் எழவில்லை.  அதற்கென்ன அர்த்தம்?

 

அவள் அப்படியே தான் கிடந்தாள். மல்லாந்து. வானத்து மழையை ஏந்திக்கொள்ள இதழ் விரித்துக்காத்திருக்கும் மலர் போல.

 

நான் கதவை அண்டி, யோசனையாய் அவளைத் திரும்பிப் பார்த்தேன் . அவள் படுக்கையில் கிடந்தபடியே என்னைப் பார்த்தாள். லேசாக சிரித்தாள். அவள் விழிகள் இமைக்கவில்லை. அந்தப் பார்வை! அதில் ஏதோ இருந்தது. அது என்ன?

 

எங்களுக்கிடையே அவளது யூனிட்டின் கதவு மூடியது.

 

 

***************************************************

 

அன்றிரவு எனக்கு உறக்கமே இல்லை. நாடினி சொன்னது போல் ஒரு நூறு ஆண்டுகளுக்கு வேண்டுமானால், நீள் உறக்கத்தைச் சாத்தியப்படுத்தலாம். கொஞ்சம் முயற்சிக்கின் அதையே ஆயிரம் ஆண்டுகளாக்கலாம். ஆனால் ஒரு லட்சம் ஆண்டுகள் என்பது மிக மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட கால அவகாசம். ஒரு ஆறடி மனிதனை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு நீடிப்பதான காலம் நீள் உறக்கத்தில் வைக்க ,  மின்சார சக்தி வேண்டும். ஆனால், பூமிக்குள் சூரிய ஒளி புகுவது ஏற்கனவே நின்றுவிட்டது. வளி மண்டலத்தில் பெரும்பகுதி அண்டத்தின் வெற்றிடத்தில் கரைந்துவிட்டது.

 

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு விண்வெளி ஓடத்திலேயே நீள் உறக்கம் கொள்ளலாம் என்று வைத்தாலும், ஒரு மனித உடல் அத்தனை நீண்ட காலம் உறக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை. மனித உடலுக்கு என்று ஒரு திட்டவட்டமான எல்லை இருக்கிறது. அதைத்தாண்டி அதை நீடிக்க வாய்ப்பில்லை.

 

எல்லாவற்றையும் சீர் தூக்கி யோசிக்குங்கால், ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு நீள் உறக்கம் சாத்தியமில்லை என்ற முடிவுக்கு மறு நாள் காலையிலேயே வந்துவிட்டிருந்தேன்.

 

அன்று சந்திக்கும் அறையில், நான் நின்றிருக்க, என் முன்னே கிருஷ், ரிஷி மற்றும் நாடினி அமர்ந்திருந்தார்கள்.

 

“இரவெல்லாம் ஆராய்ந்ததில், ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு நீள் உறக்கம் கொள்வது என்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது” என்றேன் நான்.

 

ரிஷி நாடினியைப் பார்த்தான். அந்தப் பார்வையில் இருந்த விஷமத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நாடினி,

 

“ஆம்..  என்னதான் ஷிவ் ஜீனியஸ் என்றாலும், அதற்காகக்  கடவுளையே கண் முன் வரச்சொல்ல முடியுமா என்ன?” என்றாள் என்னை ஆறுதலடையச்செல்லும் தொணியில். ரிஷியின் முகம் மாறியதை நான் அவதானித்தேன்.

 

“அதற்காக, தீர்வே இல்லை என்றும் சொல்ல  மாட்டேன்” என்றேன்.

 

இப்போது, ரிஷி, கிருஷ், நாடினி மூவரும் என்னைக் கேள்வியாய்ப் பார்த்தார்கள்.

 

“லட்சம் ஆண்டுகளுக்கு நீள் உறக்கம் சாத்தியமில்லைதான். ஆனால், அதற்கு வேறொரு குறுக்கு வழி இருக்கிறது. அதன் படி நாம் ஒளியின் வேகத்தில் 99 சதம் பயணிக்கக்கூடிய ஒரு கிரகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பின் அந்த கிரகத்தை நாம் ஒரு கேரியராகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிச்செய்தால், அந்தக் கிரகத்தில் சுமார் எட்டு மாதங்கள் நீள் உறக்கத்தில் இருந்தால் போதுமானது. பூமியில் ஒரு லட்சம் ஆண்டுகள் கடந்துவிடும்.” என்றேன் நான்.

 

மூவரிடமிருந்தும் உடனடியாக பதில் இல்லை. சற்று  நேர யோசனைக்குப் பின்,

 

“அப்படியான கிரகத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?” என்றான் ரிஷி.

 

“அது சுலபமல்ல. ஆனால், கடினமுமல்ல. அகண்ட பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒரு கிரகம் அண்டவெளியில் ஒரு ஒற்றையடிப்பாதை போலொன்றை உருவாக்கும். இது கிட்டத்தட்ட மனிதர்கள் காட்டுக்குள் நடக்கையில் மனிதர்களின் கால் தடம் பட்ட இடங்களில் மட்டும் புல் வளராமல் போய், ஒரு பாதை உருவாவதைப் போலத்தான். அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவுதான்” என்றேன் நான்.

 

சற்று யோசித்துவிட்டு,

 

“வாவ்… நீ உண்மையிலேயே ஒரு ஜீனியஸ் ஷிவ்” என்றார் கிருஷ்.

 

ரிஷி எதுவும் பேசாமல் அமைதியாக தன் மடிக்கணிணியையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். நாடினியின் விழிகள் என்னைப்பார்த்தபடி ஒளிர்ந்துகொண்டிருந்தது.

 

கேன்டீனில் மடிக்கணிணியுடன் அகண்ட பிரபஞ்சத்தின் வெற்றிடத்தில் ஒற்றையடிப்பாதையை நான் கண்டுபிடிக்க, எங்களிடமிருந்த சர்வர்களில் இருந்த சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு ஆணைகள் பிறப்பித்துக்கொண்டிருந்தபோது ரிஷி என்னை அண்டினான்.

 

“எனக்கு உன்னைப்பார்த்தால் பொறாமையாக இருக்கிறது” என்று தான் துவங்கினான்.

 

நான் அவனை என்ன என்பதுபோல் பார்த்தேன்.

 

“உன் தீர்வு நாடினியை மிகவும் ஈர்த்துவிட்டது.” என்றான்.

 

“அவளை ஈர்க்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல.” என்றேன் நான் அழுத்தம் திருத்தமாக. உண்மையிலேயே அது என் நோக்கமில்லை என்பதை வேறெப்படி உணர்த்துவது?

 

“நீ நேற்று அவளுடன் எங்கள் யூனிட்டிற்கு வந்தாய் என்பதும் எனக்குத் தெரியும்”  என்றான் ரிஷி.

 

நான் ஏதும் பேசாமல் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவனும் அதற்கு மேல் ஏதும் பேசாமல் எழுந்து போனான். அவன் எதற்காக என்னை அண்டினான், நாடினி என் தீர்வில் ஈர்க்கப்பட்டது குறித்து ஏன் அவனாக என்னிடம் பகிர்ந்தான், பின் அவனாக ஏன் எழுந்து போனான்,  அவன் மனதுக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதெல்லாம் என்னால் ஊகிக்க முடியாததாக இருந்தது.

 

**********************************************

 

நான் கொடுத்த கச்சிதமான ஆணைகளை சூப்பர் கம்ப்யூட்டர்கள் நிறைவேற்ற, ஒளியின் வேகத்தில் 99 சதம் பயணிக்கும் ஒரு கிரகத்தை நான் கண்டுபிடித்தேன். பிறகு நடந்தவைகள் அசுர வேகத்தில் நடந்தன அல்லது எனக்கு அப்படித் தோற்றமளித்தது.

 

அந்த கிரகத்தில் ஈர்ப்பு விசை சற்று மிகுதியாக இருந்தது. ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தது. தாவரங்களேதும் வளர ஏதுவான நிலப்பரப்பாக இல்லை.

 

அந்த சூப்பர் கிரகம் சுமார் நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தது. நாங்கள் முன்னூறு பேரும் ஒரு விண்களனில் நீள் உறக்கத்தில் சுமார் பத்து ஆண்டுகள் பயணித்து அந்த கிரகம் வந்தடைந்தோம்.  துவக்கத்தில் அந்த கிரகத்தில் எங்களுக்கு உடல் வலி ஏற்பட்டது.  அங்கே உணவுக்கும் வழியிருக்கவில்லை. காற்று மண்டலமும் ஸ்திரமாக இல்லை. ஆதலால் உடனடியாக நீள் உறக்கத்தில் ஆழ்வதுதான் ஒரே வழியாக இருந்தது. எட்டு மாதங்கள் நீள் உறக்கத்தில் இருந்துவிட்டால் போதும், பூமியில் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் கடந்துவிடும். பிறகு பூமிக்குத் திரும்பிட வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் பூமியில் மீண்டும் சோலைகள், கடல்கள், பள்ளத்தாக்குகள் எல்லாம் உருவாகிவிடும். கிட்டத்தட்ட வாழ்ந்த வீட்டை புதுப்பிப்பது போலத்தான். ஒரே வித்தியாசம் என்னவென்றால், இயற்கையையே புதுப்பிக்க விட்டுவிட வேண்டும்.

 

நாங்கள் அனைவரும் எங்களுக்கான நீள் உறக்கக் குடுவைக்குள் உறக்கத்தில் ஒரு சேர ஆழ்ந்தோம். சரியாக எட்டு மாதங்கள் கழித்து தானியங்கி கம்ப்யூட்டர் எங்களை எழுப்பிவிட்டது.

 

நாங்கள் கண் விழித்தபோது விண்களனின் தானியங்கிக் கம்ப்யூட்டர் ‘மொத்தமாக இருந்த இரு நூற்று தொண்ணூற்றொன்பது பேரும் உயிரோடு இருக்கிறார்கள்’ என்றது. எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பதை உணர்ந்து நாங்கள் கணக்கெடுத்ததில், ரிஷியைக் காணவில்லை என்பது புரிந்தது. விண்களன் முழுவதும் தேடியும் ரிஷி எங்கும் இருக்கவில்லை. ஆனால், அவன் நீள் உறக்கத்தில் இருந்திருக்க வேண்டிய குடுவைக்குள் ஒரு கடிதம் இருந்தது. நான் தான் கண்டெடுத்தேன். பிரித்துப் படித்தேன்.

 

‘அன்பு ஷிவ்,

 

இந்தக் கடிதத்தை நீ படிக்கையில் நான் உன்னருகே இருக்க மாட்டேன். பூமியில் ஒரு லட்சம் ஆண்டுகள் கடந்திருக்கும். என்னை நீங்கள் தற்சமயம் புதிய கிரகத்தில் தேடிக்கொண்டிருக்கலாம். உடனடியாகத் தேடலைக் கைவிட்டு, பூமி திரும்பும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நான் ஏன் உங்களுடன் வரவில்லை என்கிற கேள்வி உங்களுக்குள் இருக்கலாம். அதன் காரணம் சற்று சிக்கலானது.

 

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், நீ தான் நான். நான் தான் நீ.  ஒரு லட்சம் ஆண்டுகளைக் கடத்த வேறொரு கிரகம் செல்வது என்கிற தீர்வை  நீ முன்வைத்தபோதுதான் எனக்கு அது ஊர்ஜிதமாயிற்று.

 

புரியவில்லையா? தெளிவாகச் சொல்கிறேன். இப்போது நீங்கள் பூமிக்குத் திரும்பினால், அங்கே உங்களைப் போல் உருவம் கொண்ட மனிதர்கள் உலவிக்கொண்டிருக்கலாம். அவர்களுடன் நீங்கள் இரண்டரக் கலந்து விடுவது தான் நல்லது என்பதே உங்களுக்கு நான் தரும் ஆலோசனை. பூமி குறித்த என் அவதானம் இதுதான். பூமி செக்குமாட்டுத்தனமாக எத்தனை முறை அழிவைச் சந்தித்தாலும், மீண்டும் பூக்கும் கிரகமாகத்தான் துவக்கத்திலிருந்தே இருந்திருக்கிறது. அதனால் தான், பூமியால் ஐந்து பேரழிவுகளைச் சந்தித்தும் நீள முடிந்திருக்கிறது. இக்காரணத்திற்காய் பூமி போன்ற ஒரு பிரத்தியேகமான கிரகத்தைப் பிரபஞ்சத்தில் பார்ப்பது அரிது என்றே கணிக்கிறேன்..

 

நான் துவக்கத்தில் பூமியில் பிறந்து வளர்ந்த இடம் தற்போது கடலுக்கடியில் மூழ்கிவிட்டது. பூமியின் துருவங்கள் மாறிவிட்டன. இது ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை. அப்போது, இப்போதிருப்பது போல் நிலப்பரப்புகள் இல்லை. கண்டங்கள் இல்லை. சிறு சிறு தீவுகள். நூற்றுக்கணக்கில். அப்போது உலகையே கடல் கொண்டது. பேரழிவு தான்.

 

ஒரு லட்சம் ஆண்டுகளை வேறொரு கிரகத்தில் கழித்துவிட்டு நான் பூமிக்குத் திரும்பியபோது கூட இயற்கையே உயிர்களை மீட்டிருவாக்கம் செய்திருந்தது. ஆயினும், பூமி அழிவை நோக்கித்தான் போய்க்கொண்டிருந்தது. என் அவதானத்தில் பூமியில் அழிவு என்பது ஒரு விதமான சுழற்சியாகத்தான் இயங்குகிறது. நான் பூமியை விட்டு வெளியேறிய போது எனக்கு வயது 23. அப்போது நாங்கள் எங்களுக்கு பரிச்சயமான தொழில் நுட்பத்தை பாறைகளில் கல்வெட்டுக்களாக, கற்சிலைகளாக காலத்தால் அழிந்து போகா வண்ணம் செதுக்கிவைத்துவிட்டுச் சென்றோம். ஆனால், அவைகள் உங்களுக்குப் பயன்படவில்லை.  நீங்கள் அதையெல்லாம் ஏலியன் ஆர்டிஃபாக்ட் என்றீர்கள். நீங்கள் உங்களுக்கு கைவந்த அறிவியலைப் பயன்படுத்திக் களன்கள் உருவாக்கிக்கொண்டீர்கள். உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. பூமியின் காஸ்மிக் ப்ளேஸ்மென்ட் அப்படி.

 

சுமார் பத்தாண்டுகள் நீள் உறக்கத்தில் வேறொரு கிரகம் பிரயாணித்து அடைந்து 8 மாதங்கள் நீள் உறக்கத்தில் இருந்து பின் மீண்டும் பத்தாண்டுகள் பயணித்து பூமி வந்தேன். ஆக என் வாழ் நாளில் சுமார் இருபதாண்டுகள் நீள் உறக்கத்திலேயே கழித்திருக்கிறேன். இப்போது உங்களுடன் இந்தக் கிரகம் வந்ததையும் கணக்கில் கொண்டால் முப்பதாண்டுகள். இந்தப் பின்னணியில் என் வயது உண்மையில் என்ன என்று யோசித்துப் பார்த்தால் குழப்பமாக இருக்கிறது. என் வயது  ஐம்பத்து மூன்றா அல்லது லட்சத்து ஐம்பத்து மூன்றா அல்லது அதற்கும் மேலா? என் வயதை யாரேனும் கேட்டால் நான் என்னவென்று சொல்ல வேண்டும்?

 

பிற்பாடு உனக்கும் நாடினிக்கும் இடையில் பிளவு ஏற்பட்டபோது அவள் என்னைச் சேர்ந்தாள். உன்னை விடுத்து வேறொரு துணை தேடியது தவறு என்பதை அவள் என்னுடன் இருந்தபோது புரிந்துகொண்டிருந்தாள். இது எப்படி எனக்குத் தெரியும் என்று நீ கேட்கலாம். பூமியை விட்டு வேறு கிரகம் பயணப்பட்டபோது என் முன்னாள் காதலியின் கணவனுடன் தான் நான் தொழில் நிமித்தம் இயங்கிக்கொண்டிருந்தேன். அவளது அறைக்கு அவள் கணவன் இல்லாத நேரத்தில் நானும் சென்றிருக்கிறேன். எதுவும் செய்யாமல், குழப்பத்தில் வெளியேறியிருக்கிறேன். அப்போதும், ஒரு லட்சம் ஆண்டுகளை வேறொரு கிரகத்தில் கடத்திவிட்டு பூமிக்குத் திரும்பும் யோசனையை அளித்தது நான் தான்.  இப்போது புரிகிறதா? நான் தான் நீ. நீ தான் நான். நீ  நாடினியுடன் எங்கள் அறைக்கு வந்தபோது உன் மனம் எப்படியெல்லாம் அலைபாய்ந்திருக்குமென்று என்னால் ஊகிக்க முடிகிறது.

 

என் வாழ்வின் பெரும்பகுதியை உறக்கத்தில் செலவிட்டுவிட்டேன். எதற்காக? பூமியைப் புதுப்பிக்க. புதுப்பிக்கப்பட்ட பூமியில் நானா வாழ இருக்கிறேன். இல்லை. வாழ்பவர்கள் யார்? இயற்கையாகப் பார்த்து உருவாக்கிய உயிர்களே. இயற்கையை மீறி, நம்மை பூமியின் இயக்கங்களோடு பிணைத்துக்கொள்ளும் முயல்வில் தான் நாம்  நம்மை வீணடித்துக்கொள்கிறோமோ என்று கூடத் தோன்றுகிறது. பூமியில் உன் வயது 23. பத்து ஆண்டுகள் நீள் உறக்கம் கொண்டு இக்கிரகம் வந்திருக்கிறாய். இனி நீ பூமி போய்ச் சேர பத்தாண்டுகளாகும். நீ பூமியில் இறங்குகையில் உன் வயது 43 ஆகும். நாடினி போல் ஒருத்தி துணையாவாள். வாழ வேண்டிய காலத்தை எல்லாம் உறக்கத்திலேயே கழிக்க இருக்கிறாய். இதற்கு மாறாக நீ பூமியிலேயே தேங்கியிருப்பின், வாழ இருந்த வாழ்வையேனும் வாழ்ந்திருப்பாய்.

 

என் கேள்வி என்னவென்றால், இந்த ஓட்டம் நமக்குத் தேவையா? இந்த ஓட்டத்தை வைத்து நாம் என்ன சாதிக்கிறோம்? எப்படியும் பூமிக்கிரகம் வாழ்வதற்கு லாயக்கற்ற கிரகமாக ஆக லட்சங்கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதுவரை, அது செத்து செத்துப் பிழைப்பது போல் போக்குகாட்டுமே ஒழிய ஒவ்வொரு முறையும் அது தானாகவே துளிர்க்கும் இயல்புடையதாகத்தான் ஆதிகாலம் தொட்டே இருந்திருக்கிறது என்று எண்ணிக்கொள்வதில் தான் மானிடர்களுக்கான தீர்வு இருப்பதாக நான் நம்புகிறேன். இல்லையென்றால் ஐந்து பேரழிவுகளுக்குப்பின்னும், ஆறாவது பேரழிவுக்குத் தயாராகுமா?  நாமும் அதனூடே வெவ்வேறு வடிவில் உயிர் பிழைப்போம் என்று தான்  புரிந்துகொள்கிறேன். அப்படியானால், இந்த ஓட்டம் எதற்காகிறது? நாமெல்லோரும் செக்குமாட்டுத்தனமாக துளிர்த்தபடியே இருக்கும் இந்த கிரகத்தில் சும்மா வெறுமனே இருப்பதைப் பகிர்ந்து உண்டு, ‘வாழ்ந்தால்’ தான் என்ன?

 

ரிஷி’

 

ரிஷியின் மனதுக்குள் என்ன ஓடிக்கொண்டிருந்திருக்குமென்று, அவன் எங்கே போயிருப்பானென்று என்னால் இப்போது ஊகிக்க முடிந்தது. ஏனெனில், அவன் தான் நான். நான் தான் அவன்.

** ** **

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close