கட்டுரைகள்

அந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம் 

உன் தத்துவம்: எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.  

என் கேள்வி: யாருக்கு ?

உன் தத்துவம்: எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். 

என் கேள்வி: இதை மட்டும் நம்பி நாங்கள் எங்கள் நாட்களை நகர்த்த வேண்டுமா?

உன் தத்துவம்: உன்னுடையதை எதை இழந்தாய்? 

என் கேள்வி:  என் கல்வியை, என் மரியாதையை, என் உழைப்பின் பலனை, எனக்கான  உரிமையை…

உன் தத்துவம்: எதற்காக நீ அழுகிறாய்? 

என் கேள்வி:  இதையெல்லாம் இழந்துவிட்டோமே என்று… 

உன் தத்துவம்:  எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு? 

என் கேள்வி:  இங்கு யாரும் எதுவும் கொண்டுவரவில்லை. ஆனால், பிறப்பின் பலனை நீங்கள் கொண்டுவந்தாகக் கூறி, எங்களை உங்களிடம்                                   இழக்கச் செய்தீர்கள்.

உன் தத்துவம்: எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

என் கேள்வி: நீங்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, வசிக்கும் வீடு, உங்களை மட்டும் உயர்வாக படைத்த கடவுள் இருக்கும் கோயில்                          என்று எல்லாம் நாங்கள் படைத்ததது. எதுவுமே எங்களுக்கு கிடைக்காதபோது, நாங்கள் வீணாக்குவதற்கு என்ன இருக்கிறது?

உன் தத்துவம்: எதை நீ எடுத்துக்கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

என் கேள்வி:  இது ஒன்றுதான் உண்மை. ஆனால், இது எங்களை நோக்கி சொல்லப்படவேண்டிய ஒன்று அல்ல. உங்களுக்கே நீங்கள்                               சொல்லிக்கொள்ள வேண்டியது! 

உன் தத்துவம்:  எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.  

என் கேள்வி: இதில் உன்னுடையது என்பது எங்களை குறிக்கிறது. மற்றொருவர் என்பது யாரை குறிக்கிறது? 

உன் தத்துவம்: சரி, இப்போது என்ன செய்யலாம்?

என் பதில்: நீங்கள் உருவாக்கிய கேடுகெட்ட படிநிலைகளின் கடைசி படிநிலையில் இருக்கும் மனிதனின் வாழ்வை சில நாட்கள் வாழ்ந்து பாருங்கள். 

உன் தத்துவம்: வாழ்ந்தால்?

என் பதில்: ஒன்று தற்கொலை செய்துகொள்வீர்கள். இல்லையேல், எங்களுக்காக குரல் எழுப்புவீர்கள். 

பைத்தியக்காரனின் கோபம் 

ஆந்திரேய் எபீமீச்  என்ற மனநல மருத்துவர், இருபது ஆண்டுகளுக்கு மேலாக தலைமை மருத்துவராக இருந்துவருகிறார். இளமைப் பருவத்தில் அவர் மத அபிமானம் மிக்கவராக இருந்தார். அவர் தன்னுடைய கல்வி படிப்பு முடிவுற்றதும், மதத் துறை கல்லூரியில் சேர விரும்பினார். ஆனால், அவர் தந்தையின் கட்டாயத்தால் மருத்துவத் துறையில் சேர்கிறார். அவர் இந்த மருத்துவமனையில் வந்து பணியில் சேர்ந்தபோது, மருத்துவமனை சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. பயங்கர நாற்றமும், கரப்பானும், மூட்டைப்பூச்சியும், சுண்டெலிகளும் அங்கு இருந்த நோயாளிகளுக்கும், அவர்களுடன் தங்கி இருந்த குடும்பத்தினருக்கும் நரக வேதனையைத்  தந்தன. 

எபீமீச் முதன்முறையாய் மருத்துவமனையைச் சுற்றி பார்வையிட்டதுமே, இது நெறிமுறையற்ற நிலையம். சமுதாயத்தின் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார். எல்லா நோயாளிகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மருத்துவமனையை மூடுவதுதான் சாலச் சிறந்ததெனக் கருதுகிறார். ஆனால், பொதுவாக எதற்கும் போராடும் குணம் இல்லாத, சூழ்நிலைக்குத் தகுந்தபடி தன்னை ஒப்புவித்துக்கொள்ளும் எபீமீச், தன் மனதை மாற்றிக்கொள்கிறார். அதாவது, மருத்துவமனையை மூடுவதால் எந்தப் பயனும் இல்லை. அழுக்குகளை ஓரிடத்திலிருந்து துடைத்து அகற்றியதும், நிச்சயம் அது இன்னொரு இடத்தில திரளவே செய்யும். தாமாகவே அவை மறைந்து ஒழிவதற்காகக் காத்திருப்பதுதான் நல்லது என்பதாய் தன்னுள் வாதாடிக்கொள்கிறார். உலகிலுள்ள நல்லவை யாவும் ஆதியில் தீமையிலிருந்து உதித்தவையே. அது மட்டுமின்றி, மருத்துவமனையில் வசிக்கும் இந்தப் பாவப்பட்ட மக்கள் இதைவிட இன்னும் மோசமான நிலையில்தான் தங்கள் வீடுகளில் வாழ்ந்து வந்தார்கள் என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொள்கிறார்.

அந்த மருத்துவமனையின் ஆறாவது வார்டில் ஐந்து நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் அரசுப் பணியில் செயலாளராகப் பணியாற்றி, அடக்குமுறை அச்சுப்பிணிக்கு ஆளாகி, இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவானும் ஒருவர். சிறுவயதில் மிகக் கடினமான வாழ்வை எதிர்கொண்ட இவான், ஓரளவுக்கு மற்றவர்கள் மதிக்கிற நிலைக்கு உயர்கிறார். நிறைய புத்தகங்கள் வாசிக்கும், மற்றவர்களுக்கு உதவிசெய்யும் மனிதனான அவருக்கு, ஒரு நாள் திடீரென்று போலீஸ் தன்னைக் கைது செய்யப்போகிறது என்ற எண்ணம் வருகிறது. நம் எல்லோருக்குமே ஏதோ ஓர் அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்ற எண்ணம் வருவதுண்டு. ஆனால், சிறிது நேரத்தில் அந்த எண்ணம்  நம்மைக் கடந்துவிடும். ஆனால், இவானுக்கு அந்த எண்ணங்கள் தொடர் நினைவாக துரத்திக்கொண்டு வருகின்றன. அவருடைய அச்சங்கள் அபத்தமானதும், அவசியமற்றதும் என்பது அவருக்கு நன்றாக விளங்குகிறது. ஒருவேளை கைது செய்யப்பட்டாலோ, சிறையில் அடைக்கப்பட்டாலோ அது ஒன்றும் அவ்வளவு பெரிய ஆபத்தல்ல. நாம் எந்தத் தவறும் செய்யாதபட்சத்தில் அதைப்பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை என்று தன் மனதை சமாதானப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்கிறார். ஆனால், அவரின் எல்லா முயற்சிகளும் தோல்வியில்தான் முடிகின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு தெளிவாகவும் தர்க்கவாத நியாயத்தோடு அவரது சிந்தனை இதைத் தெரியப்படுத்திற்றோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவருடைய பரபரப்பும் தவிப்பும் கடுமையாகிச் சென்றன. ஊரில் எங்கு குற்றங்கள் நடந்தாலும் தன்னைத்தான் கைது செய்யப்போகிறார்கள் என்று அஞ்சுகிறார். வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறார். சிறு சத்தம் கேட்டாலும் பதற்றமாகிறார். வீட்டைவிட்டு வெளியே ஓடிய அவருக்கு, உலகிலுள்ள வன்முறை அனைத்தும் தமது முதுகுக்கு பின்னால் ஒன்றுசேர்ந்து தம்மை  விரட்டுவதாய் தோன்றுகிறது. அதே நாள் அவர் மனநல காப்பகத்தின் ஆறாவது வார்டில் அடைக்கப்படுகிறார்.

இது நிகழ்ந்து பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் மருத்துவர் எபீமீச் ஆறாவது வார்டுக்கு வருகை தருகிறார். இடைப்பட்ட காலத்தில் அந்த வார்டில் அடைபட்டுக் கிடக்கும் நோயாளிகளைப் பார்க்கவோ, அவர்களுக்குத் தரப்படும் சிகிச்சையில் மாற்றத்தையோ, திருத்தத்தையோ கொண்டுவர அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. உண்மையில் அவர்களுக்கு மனநோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதில்கூட அவர் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. அவரைப் பார்த்தவுடன் இவான் மிகுந்த கோபத்திற்குள்ளாகி, “இவனைக்  கொல்லுங்கள். இவன் ஒரு திருடன், வேடதாரி, கொலைகாரன்” என்று  கத்தத் தொடங்குகிறார். மருத்துவர் அமைதியாக,  “நீங்கள் நீண்ட காலமாக இங்கே இருப்பதால் என் மீது ஆத்திரம்கொள்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நீங்கள் நோயுற்றவர் என்பதால்தான் இங்கே இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடுகிறீர்கள்” என்கிறார். 

அதற்கு இவான், “ஆம்! நான் நோயுற்றவன்தான். ஆனால், நூற்றுக்கணக்கான பைத்தியக்காரர்கள் சுதந்திர மனிதர்களாய் வெளியே இருந்து வருகிறார்கள். பைத்தியத்துக்கும் பைத்தியம் இல்லாதவர்களுக்குமான வேறுபாட்டை அறிந்துகொள்ள முடியாத மூடர்களாய் நீங்கள் இருப்பதால், அவர்கள் சுதந்திரமாகவும், நாங்கள் இங்கே அடைபட்டும் கிடக்கிறோம். ஏனையோர் செய்யும் குற்றங்களுக்கு எங்களை ஏன் பலிகடா ஆக்குகிறீர்கள்? உண்மையில் எங்களைவிட நீங்களும் இங்கு பணிபுரியும் மற்றவர்களும்தான் ஒழுக்க நெறியில் படுமட்டமானவர்கள். பிறகு, நீங்கள் வெளியே இருக்க, நாங்கள் ஏன் இங்கே இருக்கவேண்டுமே? இது என்ன தர்க்க நியாயம்?” என்கிறார்.

இதுபோன்ற கேள்விகளை மனநோயாளி என்று அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவரிடம் சற்றும் எதிர்பார்க்காத மருத்துவர், காலம் காலமாக இந்து மரபில் சொல்லப்படுவது போன்று “நீ எதைக் கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எது நடந்ததோ அது நல்லதற்கே, நடக்கபோவதும் நல்லதற்கே” என்ற தொனியில் பதில் அளிக்கிறார். அதாவது, “சிறைக்கூடங்கள், மனநல விடுதிகள் போன்றவை இருப்பதால், அடைக்கப்படுவதற்குரிய ஆட்களும்  இருந்தாக வேண்டுமே!  நீங்கள் காத்திருங்கள்… நெடுங்காலம் கழித்துப் பிறக்கப்போகும் வருங்காலத்தில் இதுபோன்ற விடுதிகள் இல்லாமல் போய்விடும். அதனால், நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். நீங்கள் படித்தவர் இல்லையா? உங்களால் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு கிடக்கும்போதுகூட இன்பமாய் இருக்கமுடியும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உங்களுடைய சிந்தனையின் வாயிலாக நீங்கள் மனநிறைவு பெறமுடியும். சுதந்திரமாக ஆழ்ந்த சிந்தனையின் மூலம் வாழ்க்கையை முழு அளவில் புரிந்துகொண்டு, உலகின் அசட்டு பரபரப்பை உங்களால் வெறுத்து ஒதுக்க முடியும். இவையெல்லாம் உங்களுக்கு கிடைத்த பேறுகள். கம்பி அடைக்கப்பட்ட சிறைக்குள் இருந்தும் உங்களால் இதை செய்யமுடியும்” என்கிறார்.

 அதுவரை அமைதியாக இருந்த இவான் கொதித்தெழுகிறார். “நீங்கள் ஒரு முட்டாள். நான் வாழ்க்கையை நேசிக்கிறேன். ஆவேசமாய் நேசிக்கிறேன்! ஓயாமல் படுத்தி எடுக்கும் அச்சங்களால் நான் சித்திரவதைக்கு உள்ளாகிறேன். ஆயினும், வாழ்க்கையை வாழவேண்டுமென்ற தாகம் எனக்கு இன்னும் இருக்கிறது. நான் பைத்தியம் இல்லை. ஆனால், உங்களை போன்றவர்களால் நான் பைத்தியமாகிவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்கிறார். 

அன்று இரவு வீட்டுக்குக் திரும்பும்போது மருத்துவருக்கு இவானின் நினைப்பாகவே இருக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு நான் விரும்பிப் பேச நினைக்கிற ஒரு மனிதரை சந்தித்திருக்கிறேன். நிச்சயம் அவர் அறிவாளிதான். நாளையும் அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உறங்குகிறார்.

அடுத்த நாள் இவானை சந்தித்தபோது, இவான் மிகவும் சோர்வுற்றவராய் இருக்கிறார். என்ன காரணம் என்று கேட்டதற்கு குளிர் தன்னை தூங்கவிடவில்லை என்றும், விரைவில் வசதியான, கதகதப்பான தன் அறைக்கு திரும்ப நினைப்பதாகவும் சொல்கிறார். அதற்கு மருத்துவர், “வசதியான கதகதப்பான அறைக்கும், இந்த வார்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. அமைதியையும் நிறைவையும் மனிதர்கள் தம் அகத்துக்குள் தேடிக்கொள்ள வேண்டுமே ஒழிய, வெளியே தேடிப் பயனில்லை. வேறு எந்த வலியையும் போல குளிரையும் மதியாது ஒதுக்கிவிட முடியும். வலி என்பது வலியைப் பற்றிய ஓர் எண்ணமே ஆகும். உங்கள் மனவலிமையின் துணைக்கொண்டு நீங்கள் இந்த எண்ணத்தை மாற்றமுடியும்” என்கிறார். 

அதற்கு இவான், “ஒரு நாள் வந்து இங்கே தங்கிப் பாருங்கள். அதற்கு பிறகு உங்கள் உதவாத தத்துவத்தைச்  சொல்லுங்கள் கேட்கிறேன்” என்கிறார். மருத்துவரோ, “இது சரியல்ல. நீங்கள் இன்னும் ஆழமாய் சிந்தித்துப்  பார்த்தால் இவை யாவும் அர்ப்பமானவையே என்பதை நீங்கள் உணர்வீர்கள். வாழ்க்கையை புரிந்துகொள்ள முயலவேண்டும். அது ஒன்றுதான் மெய்யான பேறு” என்கிறார். அதற்கு இவான்,  “சூடான  ரத்தத்தையும் நரம்புகளையும் கொண்டவனாய் கடவுள் என்னைப் படைத்திருக்கிறார். வலிக்கும்போது கண்ணீர்விட்டு, கூச்சலிட்டு எதிர்வினை புரிகிறேன். கயமையைக் காணும்போதும் அருவருப்புகொண்டு எதிர்வினை புரிகிறேன். என் கருத்துப்படி இதுதான் வாழ்க்கை. மற்றவர்களின் துன்பத்தையும் அவலமான வாழ்வையும் கண்டு கோபம் கொள்கிறவன்தான் மனிதத் தன்மையில் உயர்ந்தவன். குறைந்தபட்சம் தனக்கு ஏற்பட்ட அவலத்தைக் கண்டு எதிர்வினை புரிகிறவன்தான் மனிதன். அதைவிடுத்து துன்பத்தைக் கண்டு மரத்துப்போய்த் துன்பத்தை உணரும் திறனற்றவனாய் இருக்க, நான் ஒன்றும்  நடைப்பிணம் இல்லை. இப்படி நடைப்பிணமாய் இருப்பதுதான் தத்துவ ஞானிகளின், மகான்களின் மனநிலை என்று நீங்கள் சொன்னால், நான் தத்துவ ஞானியுமல்ல மகானுமல்ல, நான் ஒரு சாதாரண மனிதன். செல்வத்தையும் வசதியையும் அலட்சியப்படுத்தி, துன்பத்தையும் மரணத்தையும் பொருட்படுத்தாமல் இருக்கவேண்டும் என்று கூறும் உங்கள் போதனைகளை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களைப் போன்று வாழ்வின் எல்லா வசதிகளையும் பெற்று, பசியையோ துன்பத்தையோ எதிர்கொள்ளாதவர்களுக்கு வேண்டுமென்றால் இந்தத் தத்துவங்கள் பொருந்தலாம். எங்களுக்கு பொருந்தாது. ஏனென்றால், நாங்கள் செல்வத்தையும் வசதிகளையும் அறியாதவர்கள். துன்பத்தை பொருட்படுத்தாமல் இருப்பதும், வாழ்வை பொருட்படுத்தாமல் இருப்பதும் எங்களுக்கு ஒன்றுதான்.  உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் யதார்த்தத்தைப் பற்றிய தத்துவார்த்த ஞானம்தான். துன்பத்தை மதியாது அலட்சியம் செய்கிற உங்களின் சிறுவிரல் கதவு இடுக்கில் அகப்பட்டு  நசுக்கப்படுமேயானால், தொண்டைக் கிழிய உச்சக்குரலில் கத்துவீர்” என்கிறார்.

அன்றிலிருந்து தொடர்ந்து இவானை சந்திக்க மருத்துவர் ஆறாவது வார்டுக்கு வருகை தருகிறார். சகமனிதனின் மீது அவர் காட்டும் கரிசனமும், கயமையின் மீது அவர் கொள்ளும் கோபமும், மருத்துவரை சிந்திக்க வைக்கின்றன. தினமும் இவானுடன் பேச வேண்டும் என்று பேராவல் கொள்கிறார். ஆனால், இது அங்கே பணிபுரியும் பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை மருத்துவர் எபீமீச்சும் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டாரோ என்று சந்தேகிக்கின்றனர். தொடர் பணியின் காரணமாக மருத்துவருக்கு அலுப்பு தட்டி இருப்பதால் இப்படி நடந்திருக்கலாம் என்று கருதி, அவரைப் பணியில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி மருத்துவரின் நண்பர் மூலமாக தூது அனுப்புகின்றனர். பணி ஓய்வு பெற்றுக்கொண்டு சிறிது காலம் வெளி இடங்களுக்கு பயணம் போகலாம் என்று நண்பர் வற்புறுத்துகிறார். மருத்துவருக்கு இதில் உடன்பாடில்லை. ஆனால், எதையும் உறுதியாய் மறுக்கும் வலிவு இல்லாத மருத்துவர், வேண்டா வெறுப்புடன் பணி ஓய்வு பெற்றுக்கொண்டு வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். ஆனால், இதுநாள் வரை மனச்சலனம் ஏற்படாத மருத்துவருக்கு தொடர் மனஉளைச்சல் ஏற்படுகிறது. வெளியுலகில் அவர் சந்திக்கும் மனிதர்களை இவானுடம் ஒப்பிட்டு பார்க்கிறார். வெளியில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் திறிகிற மனிதர்களைவிட, உள்ளே அடைபட்டு கிடக்கும் இவான் மிகவும் மேம்பட்ட மனிதராய் அவருக்குத் தெரிகிறார். யார் உண்மையில் பைத்தியம் என்று அவர் மனசாட்சி கேள்வி கேட்கிறது. பதில் சொல்லமுடியாமல் தவிக்கிறார். பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய பிறகும் அந்தக் கேள்விகள் அவரைத் தொடர்கின்றன. மற்றவர்களுடன் பேசுவதைத் தவிர்க்கிறார். மருத்துவரின் அவஸ்தையைக் கண்ட நண்பர் மருத்துவரிடம், ” நீங்கள் ஏன் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்று கேட்கிறார். அதற்கு மருத்துவரோ, “எனக்குள்ள நோய் என்னவென்று எனக்குத் தெரியும். கடந்த இருபது ஆண்டுகளில் நமது நகரில் அறிவுடைய மனிதர்  ஒருவரை மட்டுமே நான் சந்தித்தேன். ஆனால், அவரை நாம்  பைத்தியம் என்று கூறி மனநல காப்பகத்தில் அடைத்து வைத்திருக்கிறோம்” என்கிறார்.

மருத்துவர் எப்போது இவானை அறிவுடைய மனிதர் என்று கூறினாரோ அப்போதே மற்றவர்களுக்கு ஒரு விஷயம் உறுதியாவிட்டது. அது, மனநிலை மருத்துவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது என்பது. என்ன ஏதுவென்று மற்றவர்களுக்கு விளக்குவதற்கு முன்பாகவே, மருத்துவரும் ஆறாவது வார்டில் அடைக்கப்படுகிறார். மருத்துவரை எப்போதும் வெறுப்புடன் பார்க்கும் இவான், முதன்முதலாக சற்றே கனிவுடன் பார்க்கிறார். “தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மற்றவர்களது ரத்தத்தை நீங்கள் உறிஞ்சுவதற்கு பதில், இனி உங்கள் ரத்தத்தை மற்றவர்கள் உறிஞ்சுவார்கள். அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான்” என்கிறார்.

வெளியேறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மருத்துவர் எடுத்தும் பயனில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் புலம்ப ஆரம்பிக்கிறார். சில நாட்களுக்கு முன் தனக்கு மருத்துவர் கூறிய ஆலோசனைகளையும், முக்கியமாக தத்துவ ஞானங்களையும் மருத்துவரிடமே சொல்கிறார் இவான். மருத்துவரோ இவானிடம்,” என்னை மன்னித்துவிடுங்கள் நண்பரே. வாழ்வில் எனக்கான தேவைகள் எல்லாம் தேவைக்கு அதிகமாய் கிடைக்கும்போது மற்றவர்களின் வலிகளை மதியாமல், பொருட்படுத்தாமல் இருந்தேன். ஆனால், வாழ்க்கையின் முரட்டு கரம் பட்ட முதற் கணத்திலேயே உள்ளம் குலைந்து போய்விட்டேன். பலமில்லாதவனாக, பரிதாபத்திற்குரியவனாக உணருகிறேன்” என்கிறார். இந்த நரகத்தில் இருந்து வெளியேறினால் போதுமென்று அவருக்கு தோன்றுகிறது. பலவந்தமாக வெளியேற முயற்சிக்கையில், காவலனால் பலமாக தாக்கப்படுகிறார். தன்னுடன் பணியாற்றிய எல்லா மருத்துவர்களையும் கொன்றுவிட்டு, முடிவில் தன்னையும் கொன்றுபோட விரும்புகிறார். அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. அவர் கைகால்கள் அவர் சொன்னபடி கேட்கவில்லை. கடைசியில் தன் உடைகளை பிடித்து இழுத்து கிழிக்கிறார். அடுத்த நாள் தன் உயிரை இழக்கிறார். மனநல மருத்துவர் தன் கடைசி காலத்தில் பைத்தியம் பிடித்து இறந்துவிட்டதாக எல்லாரும் பேசிக்கொண்டனர்.

இந்நாவலை படிக்கும்போது எனக்கு நினைவில் வந்த மற்றொரு நாவல் மச்சடோ டி ஆசிஷ்’ன் `மனநல மருத்துவர்’.  (இந்நாவலை பற்றி ஏற்கனவே வாசகசாலை இணையதளத்தில் விரிவாக எழுதி இருக்கிறேன் – http://www.vasagasalai.com/psychiatrist-book-review/ ). 

ஆறாவது வார்டு கதையைப் போலவே செக்காவ் எழுதிய இன்னொரு கதை, `மகிழ்ச்சியான மனிதன்’. பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து மாஸ்கோ செல்லும் ரயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டியில், ஆடம்பர உடை அணிந்த ஒரு மனிதன் அவசர அவசரமாக ஏறுகிறான். அவன் பெயர் இவான். தவறுதலாக அந்தப் பெட்டியில் ஏறியவனை, ஏற்கனவே பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் வித்தியாசமாக பார்க்கிறார்கள். அந்தப் பெட்டியில் தனது பால்யகால நண்பனை சந்திக்கிறான் இவான். இருவரின் பரஸ்பர விசாரிப்புகள் முடிந்தவுடன், தான் இந்தப் பெட்டியில் தவறுதலாக ஏறிய காரணத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறான். “என்னை போல மகிழ்ச்சியான மனிதனை நீ பார்க்க முடியாது. இன்றுதான் எனக்குத் திருமணம் நடந்தது.  என் அழகிய மனைவியுடன் தேனிலவுக்கு சென்றுகொண்டிருக்கிறேன். பிராந்தி வாங்கலாமென்று இறங்கினேன். வாங்குவதற்குள் ரயில் கிளம்பிவிட்டது. நானும் என் மனைவியும் பயணித்துக்கொண்டிருந்த பெட்டியில் ஏறமுடியாதாதல் இந்தப் பெட்டியில் ஏறிவிட்டேன். பரவாயில்லை இன்னும் சிறுது நேரத்தில் என் மனைவியைச் சந்தித்துவிடுவேன். சொல்லும்போதே எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஒரு கவலையில்லை. ஒரு சிந்தனை இல்லை. தன்னுடைய மகிழ்ச்சியை ஒரு மனிதனே உருவாக்கி கொள்கிறான். அப்படி உருவாக்கிக்கொள்ள முடியாதவர்களை நான் வெறுக்கிறேன்” என்கிறான். 

நண்பர்களின் பேச்சை மற்ற பயணிகளும் கவனிக்கத்  தொடங்கினர். அதில் ஒரு பயணி இவானைப் பார்த்து, ” நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால், ஒரு மனிதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியுமா?” என்று கேட்கிறான். அதற்கு இவான், “ஏன் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது? நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் அது உங்கள் குற்றமே. ஆம்! மனிதன்தான் தன் மகிழ்ச்சியை உருவாக்குபவன். ஒருவன் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், அவனால் எந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என்கிறான். அதற்கு அந்தப் பயணி, “ஒரு மனிதனே தனது மகிழ்ச்சியை உருவாக்கிக்கொள்கிறான் என்று சொல்கிறீர்கள். அப்படிப்பட்டவனுக்கு பல்வலி வந்தாலோ, மோசமான மாமியார் கிடைத்துவிட்டாலோ அவன் மகிழ்ச்சியெல்லாம் எங்கோ காற்றில் பறந்து போய்விடுகிறதே. எல்லாமும் சமயசந்தர்ப்பத்தைப் பொறுத்துதான்” என்கிறார். 

அதற்கு இவான் கோபமாக, ” நான்சென்ஸ்! மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். ஆனால், நீங்கள் பிடிவாதமாக மகிழ்ச்சிக்கு எதிராக முகத்தைத் திருப்பிகொள்கிறீர்கள்” என்கிறான். பேச்சை மாற்ற விரும்பிய இவானின் நண்பன் இவானிடம், “தேனிலவுக்கு எந்த ஊருக்கு பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கிறான். தானும் தன்னுடைய அழகிய இளம் மனைவியும் பீட்டர்ஸ்பர்க்குக்கு சென்றுகொண்டிருப்பதாக இவான் கூறுகிறான். அதற்கு நண்பன், “அடக்கடவுளே! என்ன சொல்கிறீர்கள்? இந்த ரயில் மாஸ்ககோவை நோக்கி அல்லவா சென்றுகொண்டிருக்கிறது. பிராந்தி குடிப்பதற்காக உங்கள் பெட்டியில் இருந்து இறங்கிய நீங்கள், பிராந்தியை குடித்ததும் தவறுதலாக எங்கிருந்து கிளம்பினீர்களோ அதை நோக்கி செல்லும் ரயிலில் ஏறிவிட்டீர்கள்” என்கிறான். 

இதுவரை மகிழ்ச்சியாக இருந்த இவானின் முகம் வெளுக்கிறது. தலையை பிடித்துக்கொள்கிறான். கணநேரத்தில் இதுவரை அவரிடம் இருந்து மகிழ்ச்சி காணாமல்போகிறது. பெட்டியின் உள்ளே அங்குமிங்கும் நடக்கிறான். “முட்டாள், மடையன். நான் நாசமாய் போக. என்ன செய்வேன் இப்போ? ஐயோ, என் மனைவி அந்த ரயிலில் இருக்கிறாள். தனியாக இருக்கிறாள். என்னை எதிர்பார்த்து கவலையுடன்…சே, என்ன வடிகட்டின முட்டாள் நான். அவளுக்கு தந்தி கொடுப்பதற்கோ, வேறு ஒரு பயணச்சீட்டை வாங்குவதற்குகூட தன்னிடம் பணமில்லை. நான் கொண்டுவந்த பணமெல்லாம் என் மனைவியிடம்தான் இருக்கிறது” என்று தன்னையே நொந்துகொள்கிறான். மற்ற பயணிகள் எல்லாம் சிரித்துக்கொண்டே, தங்களுக்குள்  மெதுவாகப் பேசியபடி பணத்தை திரட்டி, மகிழ்ச்சியன மனிதனிடம் கொடுப்பதாகக்  கதை முடியும். ‘எம்.எஸ்’ மொழிபெயர்ப்பில், ‘அண்டன் செகோவ் சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் இக்கதை வெளியாகி இருக்கிறது.

எளிமையாக அதேசமயத்தில் மிகக்  காட்டமாக தான் சொல்ல நினைக்கிற கருத்தை, தன் கதைகளின் ஊடே சொல்லுகிற வழியை அறிந்தவர் செகாவ். அவருடைய பெரும்பான்மையான கதைகள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்திலிருந்து பேசுவதாக இருக்கிறது. வறட்டு தத்துவங்கள் பேசி, மனிதர்களின் துன்பங்களை கடந்துபோகிறவர்களை எந்தத் தயவு தாட்சண்யமுமின்றி அவர் விமர்சிக்கிறார். தமிழில் ‘ஆறாவது வார்டு’ குறுநாவலை ரா.கிருஷ்ணையா மொழிபெயர்த்திருக்கிறார்.

வலி, துன்பம், உணவுக்கான பசி எல்லோருக்கும் பொதுவானது என்று சில வறட்டு தத்துவங்கள் நமக்கு போதிக்கின்றன. ஆனால், நிஜம் அப்படியானதாக இல்லை. பசியில் இரண்டு விதமான பசிகள் இருக்கின்றன. உண்பதற்கு விதவிதமான உணவுகள் இருந்தும், ஏதோ காரணத்தினால் அதை உண்ணாமல் இருக்கும் ஒருவனின் பசியையும், உண்பதற்கு ஒரு பருக்கை சோறுகூட கிடைக்காமல், எப்போது அடுத்த உணவு கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கும் ஒரு மனிதனின் பசியையும் ஒப்பிடுவது போன்ற அபத்தம் ஏதும் இல்லை. பிறப்பின் காரணமாக எல்லாம் கிடைக்கப்பெற்றவன், அதே பிறப்பின் காரணமாக எதுவும் கிடைக்காதவனை தான் கற்ற உருப்படாத தத்துவங்கள் மூலம் ஆறுதல் படுத்துவதைவிட இழிவானது எதுவுமில்லை. இதையெல்லாம் மீறி உங்களையும் உங்கள் எஜமானர்களையும் கேள்வி கேட்கிறவர்களை நீங்கள் பைத்தியக்காரன், மனநலம் குன்றியவன் என்று முத்திரை குத்தினால்…. ஆம்! நாங்கள் மனநலம் குன்றியவர்கள்தான். 

மனநலம் குன்றியவர்கள் பரிசுத்தவான்கள். அவர்களை நியாயத் தீர்ப்பிலிருந்தும் பாவம் செய்வதிலிருந்தும் இறைவன் விலக்கி வைத்திருக்கிறார் – குரான்  

 

ஆறாவது வார்டு (Ward No. 6)

நூல் ஆசிரியர்:  அந்தோன் செகாவ் (Anton Chekhov)

தமிழில்: ரா. கிருஷ்ணையா 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close