தொடர்கள்

”பிம்பக் காடு ”- அயல் சினிமா தொடர் – 3

சுந்தர் காந்தி

பெருங்காதலின் துயரிசை

மனித மனம் கட்டவிழ்க்க முடியாத வினோதங்களும், மர்மங்களும் நிறைந்த புதிரான வெளிகளினால் உருப்பெற்ற ஒன்று. அதன் ஆழமும், விரிவும் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. ஒவ்வொரு கணமும் வெவ்வேறு உணர்வுநிலைகளுக்குள் ஆட்பட்டு அவை காட்டுகின்ற திசைகளின் கரைகளை நோக்கி விரைதலும், திரும்புதலுமாய் அலைச்சலுறும் மனதின் உள்ளோட்டங்களையும் அதன் அர்த்தங்களையும் துல்லியமாகக் கண்டறிவது கடினமானது. அதிலும் அதீத அன்பின் விளைவான காதலில் தங்களை பிணைத்துக் கொண்டு திளைப்புறும் இரு உளங்களின் உட்பரப்புகள் மிகுந்த நுட்பமான அடுக்குகளால் நெய்யப்பட்டவை. ஒரு சமயத்தில் அதிகக் காதலுடன் இறுகப் பிணைந்து கொள்வதும் மற்றொரு சமயத்தில் விலகி மறைவதும் காரணமற்ற அதன் தொடர் விளையாட்டுகளாகும். அப்படியான மனங்களை புனை மையங்களாக்கி பலதரப்பட்ட படைப்புகள் பல்வேறு கால கட்டங்களில் பல படைப்பாளர்களால் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அத்தகைய புனை வெளிகளில் படைப்பாளரின் தனித்த ஆளுமையும் இணையும் போது அப்படைப்பு பத்தோடு பதினொன்றாக எஞ்சி விடாமல் தனித்துவப் படைப்பாக ஒளிர்ந்து மேலெழுகிறது. இக்கூற்றை நிரூபிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது “கோல்ட் வார்” (Cold War) திரைப்படம். போலாந்து நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் பாவல் பாவ்லிகோவ்ஸ்கி (Pawel Pawlikowski) இயக்கியிருக்கும் சமீபத்திய திரைப்படம் தான் “கோல்ட் வார்”.

காதலேறிய இரு மனங்களின் கூடலும் ஊடலும் பிரிவேக்கமும், பரிதவிப்புமே படத்தின் களமாக வியாபிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்ட ஐரோப்பிய நிலத்தில் நிகழும்படியாக அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் 1940’களின் பிற்பகுதியில் துவங்கி நீண்டு 1960’களின் முற்பகுதியில் வந்து நிறைவடைகிறது. போருக்கு பிறகான காலநிலையில் கதை நிகழ்வதால் படம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நகர்கிறது. மேற்கத்தியத் திரையுலகில் போர்ச்சூழலை பின்புலமாகக் கொண்ட படங்கள் தொடர்ச்சியாகப் படைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. கோல்ட் வார் திரைப்படத்தையும் அத்தகைய போர்ச்சூழலை அடித்தளமாகக் கொண்டு புனையப்பட்ட ஒரு எளிய காதல் கதை என வகைப்படுத்தி விடலாம் என்றாலும் இப்படத்தில் போர் ஒரு சக பயணியைப் போல் மௌனமாக உடன் பயணிப்பதோடு நின்று விடுகிறது.

அதோடு இவ்வாறான காதல் கதைகளுக்கே உரிய தேய் வழக்கான விடயங்களிலிருந்து விலகி படமாக்கப்பட்டிருப்பதால் கோல்ட் வார் திரைப்படம் தனிச்சிறப்பு பெறுகிறது. இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி காட்சிக்குத் தேவையான ஒவ்வொரு கூறுகளையும் தனக்கேயுரிய பிரத்தியேக பாணியில் மிக நுணுக்கமாக வடிவமைத்துப் படத்தைக் கலை நேர்த்தியுடன் படைத்திருக்கிறார். இயக்குநரின் நுட்பமான படமாக்கலும், பிரதான பாத்திரங்களின் செறிவான நடிப்பும், காட்சிக் கோணங்களே ஒரு தனிக் கதையைச் சொல்லும் விதமாகக் கையாளப்பட்டிருக்கும் ஒளிப்பதிவும் படத்தைப் பார்வையாளனிடம் ஒரு மகத்தான அனுபவமாகக் கொண்டு சேர்கின்றன. படத்தில் இசை மிக முக்கிய பங்காற்றுவதோடு படத்தின் உயிரோட்டத்திற்கு பெரும் வலுவூட்டுகிறது.

படத்தின் பிரதான இரு பாத்திரங்களில் ஒருவனான விக்டோர் ஒரு இசையமைப்பாளன். தன் சகாக்களுடன் இணைந்து வெவ்வேறு இடங்களுக்குப் பயணப்பட்டு எளிய மக்களிடம் புதைந்திருக்கும் நாட்டுப்புற இசைப்பாடல்களைச் சேகரிக்கிறான். அதன்படி ஊரின் இரு கிழவர்கள் வாசிக்கும் பழமையான நாட்டார் இசையை விக்டோர் பதிவு செய்து சேகரிக்கும் காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. ஓர் இசைக்குழுவை உருவாக்கும் முனைப்பிலிருக்கும் விக்டோர் அதற்கான இசைக்கலைஞர்களைத் தேர்வு செய்கையில் ஸுலாவை சந்திக்க நேர்கிறது. அவள் பாடிய விதமும், அவள் குரலிலிருக்கும் இயல்பானவொரு மயக்கத் தன்மையும் விக்டோரை ஈர்க்கிறது. மெல்ல இருவரும் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்தபடி காதலில் தங்களை கரைத்துக் கொள்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர்களைக் கொண்டு விக்டோரும் அவனுடைய சகாக்களும் உருவாக்கிய இசைக்குழு தொடர்ந்து இசை நிகழ்வுகளை மக்கள் மத்தியில் நடத்திய வண்ணமிருக்கிறார்கள். ஸுலாவின் திறமை அவளை குழுவின் மிக முக்கியமான பாடகியாக இடம்பெறச் செய்கிறது. ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் பார்வை அவ்விசைக் குழுவின் செயல்பாடுகள் மீது படர்கிறது. அரசின் கொள்கைகளை மக்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையிலும், கம்யூனிச தலைவர் ஸ்டாலினை போற்றும்படியான இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றும்படியும் அரசாங்கம் விக்டோரின் இசைக்குழுவை நிர்ப்பந்திக்கிறது. விக்டோருக்கும் ஸுலாவிற்கும் இதில் விருப்பமில்லாவிட்டாலும் இவ்விடத்திலிருந்து அவர்கள் இருவருக்குமிடையேயான உறவில் சிறு விரிசல் விழத் துவங்கி படத்தின் மீது ஒரு துயரார்ந்த நிழல் கவிழ்ந்து காட்சிகளில் இருண்மை ஏறுகிறது.


பிரதான பாத்திரங்களான விக்டோராகவும், ஸுலாவாகவும் நடித்திருக்கும் இரு நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். எவ்வகையான சூழலோடும் தன்னை பொருத்திக் கொள்கிற ஸுலா தன் ஒளிரும் கண்களின் ஊடாக பகிர்ந்து கொள்ளவியலாத ஏதோவொரு துயரத்தைக் கசியவிட்டபடி இருக்கிறாள். காதலில் கசிந்துருகி லயிப்பதும், உறவுநிலைகளில் ஏற்படும் காரணமற்ற முரண்பாடுகளினால் காதலனை விட்டு விலகி நகரவும் முடியாமல் சேர்ந்து இணைந்து வாழவும் இயலாமல் பரிதவிப்பதும், எப்பேர்ப்பட்ட துயரத்தையும் குறும்பான சிறு புன்னகையின் வழியே கடப்பதுமான ஒரு ஜீவனாய் ஸுலா பாத்திரம் வடிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய ஒரு கதாபாத்திரத்திற்கு தன் தேர்ந்த நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் Joanna Kulig. துயரமும் குதூகலமும் ஒருங்கே முயங்கும்படியான முக அமைப்பைக் கொண்ட Joanna Kulig வெளிப்படுத்தும் வெவ்வேறு உணர்ச்சிகளுக்கான பாவனைகள் ஸுலா கதாபாத்திரத்தின் தன்மையைக் காட்சிகளில் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன. விக்டோராக வரும் Tomasz Kot ஆர்ப்பாட்டமற்ற தன் மிகையல்லாத கச்சிதமான நடிப்பால் திரையில் விக்டோர் பாத்திரத்தை உயிர்க்கச் செய்கிறார். கதை வெவ்வேறு காலகட்டங்களுக்குள் ஊடுருவி விரிகிறது. அவை உண்டாகின்ற சூழல்கள் கதைமாந்தர்களின் மீது செலுத்துகின்ற தாக்கத்தையும், அதனால் அவர்களின் நடவடிக்கைகளிலும், குணயியல்புகளிலும் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களையும் நுட்பமான சித்தரிப்புகளின் வாயிலாகக் காட்சிப்படுத்தியிருப்பதில் இயக்குநரின் நிபுணத்துவம் புலனாகிறது.

கதையின் ஆழத்தை விசாலப்படுத்தி பார்வையாளனின் மனவெளிகளை தொட்டெழுப்புவதில் இசை மிகச் சிறப்பான பணியை இப்படத்தில் செய்திருக்கிறது. பார்வையாளனின் உணர்வுகளை வலிந்து கோரும் வகையிலான இசையாக அது பயன்படுத்தப்படவில்லை. மாறாக, இசையும் ஒரு கதாபாத்திரம் போல் கதைமாந்தர்களுடன் ஊடாடிக் கிடக்கிறது. படத்தில் ஒரு நாட்டார் இசைப்பாடல் இடம்பெறுகிறது. அப்பாடல் கதை நிகழும் வெவ்வேறு சூழல்களில் பல்வேறு வகையில் தொடர்ந்து இசைக்கப்பட்டு ஸுலாவால் பாடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு தருணத்தில் வாழ்வின் வசந்தத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் காதலும் நம்பிக்கையும் நிறைந்த ஒரு மனதின் வெளிப்பாடாகவும், வேறொரு தருணத்தில் அதிகாரத்தின் கைப்பாவையாகவும், இன்னொரு சமயத்தில் வெறுமையாலும், துயரத்தாலும் சூழப்பட்டு விட்டேற்றியான மனநிலையுடன் உழலும் ஒரு இளம் பெண்ணின் அனுபவ பகிரலாகவும் அந்த நாட்டார் இசைப்பாடலை ஸுலா பாடியபடியே இருக்கிறாள். அத்தகைய தருணங்கள் நிரம்பிய காட்சியைக் காணும் பார்வையாளனுக்குள் நிகழும் உணர்வெழுச்சியை வார்த்தைகளில் வார்ப்பது கடினம். படத்தைப் பார்த்து சில தினங்கள் கழிந்துவிட்ட பிறகும் அப்பாடல் உள்ளுக்குள் ஒலித்தபடியேயிருந்தது.

இயக்குநர் பாவல் தன்னுடைய முந்தைய படமான இடாவில் (Ida) கையாண்ட ஒளிப்பதிவு முறையையே கோல்ட் வாரிலும் பயன்படுத்தியிருக்கிறார். கறுப்பு வெள்ளை நிறத்தில் 4:3 aspect ratio’வில் கோல்ட் வார் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காட்சிச் சட்டகமும் ஓர் ஓவியம் போலப் பளிச்சிடுகிறது. ஓர் ஓவிய சட்டகத்தின் ஏதோவொரு மூலையில் ஓரமாய் சிறு இலைகளைப் பரப்பி நிற்கும் மரக்கிளையைப் போல கதாபாத்திரங்களைக் காட்சி சட்டகத்திற்குள் கிளைக்க விடுகிறார் பாவல். கதைமாந்தர்களைக் காட்சி சட்டகத்தின் குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தி அவர்களைச் செயலாற்ற விடுகையில் காட்சியின் அடர்த்தி கூடுவதோடு அதன் தன்மை வேறொரு பரிமாணத்தை எட்டி அது கடத்த வேண்டிய உணர்வுகள் சிதறாமல் கூர்மையாகப் பார்வையாளனுக்குள் வந்திறங்குகின்றன.

குறிப்பாக, விக்டோரும் அவனுடைய இசைக்குழுவின் முக்கிய அங்கமான ஒரு பெண்ணும் மிகப் பிரம்மாண்டமான ஒரு கண்ணாடி சுவற்றின் மீது சாய்ந்தபடி அவர்களுடைய இசை நிகழ்ச்சியைக் கண்டு திருப்பதியுற்ற ஒரு பெருமக்கள் கூட்டம் அவர்களுக்கு முன்பாக மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இக்காட்சியில் விக்டோருக்கும் அப்பெண்ணுக்கும் முன்பாக திரண்டிருக்கும் ஜனக்கூட்டத்தை நேரிடையாக காட்டாமல் விக்டோருக்கும் அப்பெண்ணுக்கும் பின்னாலிருக்கும் கண்ணாடியில் பிரதிபலிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கதைக்களத்தின் யதார்த்தத்தில் இருவருக்கும் முன்பாக பரந்து விரிந்திருக்கும் மக்கள் திரளை காட்சிப்படுத்தும் விதத்தில் அவ்விருவருக்கும் பின்பாக இடம்பெயர்த்து காட்சியில் ஓர் அழகிய மாயத்தை நிகழ்த்தியிருப்பார்கள். பார்வையாளனுக்கு ஓர் அபாரமான காட்சி அனுபவத்தை நல்கக் கூடிய இப்படியான காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநரின் படைப்பாற்றல் வியப்புக்குரியது.

இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி இத்திரைப்படத்தை தன் பெற்றோர்களின் வாழ்கையை தழுவி எடுத்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஆழ்துயரில் தன்னிலை துறந்து இசையை மீட்டும் ஒருவனைப் போல “கோல்ட் வார்” திரைப்படத்தை ஒரு பெருங்காதலின் துயரிசையாய் தன்னியல்பில் காட்சிகளாய் மீட்டுகிறார். அதில் காதலின் அலைக்கழிப்பில் சிறைப்பட்ட இரு மனங்களின் தத்தளிப்புகள் ஆழ ஒலிக்கின்றன.

படத்தின் இறுதிக்காட்சியில் விக்டோரும் ஸுலாவும் தாங்கள் இருவரும் சேர்ந்தெடுத்த முடிவை நிறைவேற்றி விட்டு எதிரேயிருக்கும் பெரும் நிலப்பரப்பில் பார்வையை அலையவிட்டபடி அமர்ந்திருக்கிறார்கள். அப்போது ஸுலா விக்டோரிடம் அவர்களின் அப்போதைய நிலையை விவரிக்கும்படியான அர்த்தம் பொதிந்த ஒரு வசனத்தைக் கூறுகிறாள். அடுத்த நொடி மறுபுறத்தை நோக்கி விரைந்து காட்சி சட்டகத்திலிருந்து இருவரும் விலகி மறைகிறார்கள். அக்கணத்தில் துயரேறிய ஓர் ஆழ்ந்த அமைதி பார்வையாளனின் மனதிற்குள் புகுந்து கனம் கூட்டுகிறது.

இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் முந்தைய படமான “இடா” சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. கோல்ட் வார் திரைப்படமும் சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது. கான் திரைப்பட திருவிழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்றிருக்கிறது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close