கட்டுரைகள்
Trending

“ஆட்டம், பாட்டம், கலாய், காதல் – பிக் பாஸ் வீட்டின் கொண்டாட்டமான முதல் நாள்”

மித்ரா

ஆரம்பித்து விட்டது துபிச்சிக்கு துபிச்சிக்கு பிக் பாஸ். இனி யாருக்கும் புறணி பஞ்சம் இருக்காது. இணைய போராளிகளுக்கு கன்டென்ட் பஞ்சம் இருக்காது. அடுத்த 100 நாட்களுக்கு சமூகவலைதள மனிதர்கள் இரண்டே ரகம் தான். ஒரு புறம் பிக் பாஸ் பார்த்து ஆர்மி ஆரம்பிப்பவர்கள் , இன்னொரு புறம்  பிக் பாஸ் பார்ப்பவர்களைக் கேலி செய்பவர்கள். நம் சமுதாயத்தின் பிரதிபலிப்பென பிரச்சாரம் செய்யப்படும் பிக் பாஸ் பொழுது போக்கு நிகழ்ச்சியின் முதல் நாள் நேற்று.

“எத்தனை சந்தோஷம் வந்து கொட்டுது முன்னால…” என்ற தலைவர் பாடலோடு விடிந்தது போட்டியாளர்களின் முதல் நாள். முதல் நாளாவது சந்தோஷமா இருக்கட்டுமே என்ற பரந்த மனதில் பிக் பாஸ் பாடலைத் தேர்வு செய்திருப்பார் போல. வழக்கம் போல அனைவரும் பாட்டு கேட்டவுடன், சாவி கொடுத்த பொம்மை போல ஆடத் தொடங்கினர். சாண்டி தான் கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவசப்பட்டு ஆடி  தண்ணீர் இல்லாத நீச்சல் குளத்திற்குள் விழுந்து தாடையில் தையல் போட்டுக் கொண்டார்.

25

பின்பு போட்டியாளர்களை லிவிங் ஏரியாவிற்கு வர சொன்ன பிக் பாஸ் சமூகப் பொறுப்புடன், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு திட்டத்தை அறிவித்தார். அதாவது, உலக பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, சமூகம் சந்தித்து வரும் சூழலியல் சவால்களைக் கருத்தில் கொண்டு பிக் பாஸ் வீட்டில் தண்ணீருக்கும், எரிவாயுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என அறிவித்தார். அனைவரும் இந்த ஆக்கப்பூர்வ முன்னெடுப்பை கை தட்டி வரவேற்றனர். இந்த மீட்டர் திட்டத்தின் படி, இனி பிக் பாஸ் வீட்டின் சமையல் மற்றும் சுத்தம் சார்ந்த தேவைகளுக்கென ஒரு நாளுக்கு 1000 லிட்டர் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படும். இது போக கழிவறைத் தேவைகளுக்கு  ஒரு நபருக்கு 100 லிட்டர் மட்டுமே. கூட்டிக் கழித்துப் பார்த்தால் 15 நபர்கள் கொண்ட வீட்டிற்கு ஒரு நாளுக்கு சுமார் 2500 லிட்டர் தண்ணீர். பிறகு வாரத்திற்கு 5 கிலோ எரிவாயு மட்டுமே. எந்த ஊரில் மக்கள் ஒவ்வொரு கழிவறைக்கு மட்டும் 100 லிட்டர் தண்ணீர் செலவு செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.

இதில், ” இதற்கெல்லாம் நாம் கை தட்டக் கூடாது. வெட்கப்பட வேண்டும்.” என பாத்திமா பாபுவும், ” இப்போவாவது இந்த விழிப்புணர்வு ஏற்பட்டதே என்று தான் கை தட்டினேன்.” என சேரனும் வாக்குவாதம் வேறு. ஆஹா! என்னே சூழலியல் அக்கறை?

பின்பு மோகன் வைத்யாவை கன்ஃபெசன் அறைக்குள் அழைத்த பிக் பாஸ் வீட்டின் கேப்டன் மற்றும் குழுவினரை தேர்வு செய்வதற்கான டாஸ்க்கை கொடுத்தார். அதன் படி தனித்தனி அட்டைகளில் குழுவின் பெயர் எழுதப்பட்டிருக்கும். யார் எந்த அட்டையை எடுக்கிறார்களோ அதில் எழுதியிருக்கும் இருக்கும் குழுவில் அவர்கள் இணைவார்கள். அதிலேயே கேப்டன் அட்டையும் இருக்கும். சரவணன், மோகன் வைத்யா போன்றோர் சமையல் குழுவிலும், சாண்டி, மதுமிதா, சேரன் உள்ளிட்டோர் பாத்திரம் கழுவும் குழுவிலும், கவின், தர்ஷன், ஷெரின், சாக்ஷி  ஆகியோர் கழிவறையை சுத்தம் செய்யும் குழுவிலும் இணைந்தனர். வனிதா வீட்டின் கேப்டன் ஆனார், அதை வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டார்.

பிறகு பாத்ரூமில், தாடை கிழிந்து சரவணன் மடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சாண்டியை கவின் பேட்டியெடுக்க, அதை நமக்கு ஒளிபரப்பிக் கொண்டிருந்தார் லாஸ்லியா. இந்தப் பக்கம் கிச்சனில், “டாய்லெட் ஈஸ் எ வேர்ட், கக்கூஸ் ஈஸ் எ எமோஷன்” என பாடமெடுத்துக் கொண்டிருந்தார் சாண்டி. எது எப்படியோ போகட்டுமென லைட்டாக கண்ணயர்ந்த நம் கேப்டனை துப்பாக்கியால் சுட்டு எழுப்பி விட்டார் பிக் பாஸ். ஆம், இந்த முறை பகலில் தூங்கினால் நாயெல்லாம் குரைக்காது. நேரடியாக துப்பாக்கி தான்.

மோகன் வைத்யா மட்டுமல்ல நாங்களும் பாடுவோம் என தர்சன் மற்றும் முகென் ஆகியோர் லாஸ்லியாவிற்கு பாடிக் காண்பித்தனர். பிறகு மதுமிதாவுடன் சேர்ந்து நால்வரும் ” சாப் சலி சாப் சலி சாப் சாப் சாப் ” எனும் புது வித மெமரி கேமை விளையாடத் தொடங்கினர். இந்த கேமை கற்றுக் கொண்டு அடுத்த வாரம் ” குழந்தைகள் கொண்டாட்டம் ” நிகழ்வில் விளையாடலாம் என்றிருக்கிறேன்.

இப்படி ஆட்டம், பாட்டு, விளையாட்டு எனப் போய் கொண்டிருக்கையில், பிக் பாஸ் முதல் டாஸ்க்கை போட்டியாளர்களுக்கு அறிவித்தார். அதன்படி, போட்டியாளர்கள் ஒரு குழுவாக இருப்பர். போட்டி தொடங்கியதும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக முன்னால் சென்று நிற்க வேண்டும். மற்றவர்கள் அவர்கள் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு கேள்வி கேட்க வேண்டும். அதற்கு பொறுமையிழக்காமல் நிற்பவர் பதில் சொல்ல வேண்டும். பதில் திருப்தி அளித்தால் அணியினர் மாலை அணிவித்து மீண்டும் தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளலாம்.

விவகாரமான விளையாட்டாக இருந்தாலும் யாரும் பொறுமையை சோதிக்கும் அளவிற்கெல்லாம் யாரையும் கேள்வி கேட்கவில்லை. ஒரு மாதிரி ஜாலியாக சென்றது. ஆனால், அந்தப் போட்டியின் முடிவில் நாம் ஒரு சில முடிவுகளை எடுக்க முடிந்தது. அது தானே பிக் பாஸிற்கும் தேவைப்பட்டிருக்கும். அதன்படி சிறிது சிறிதாக போட்டியாளர் தங்களுக்கான நண்பர்களைக் கண்டறியத் தொடங்கியுள்ளனர். இந்த முறை வீட்டின் பிளே பாய் போட்டியில் தர்சனும், கவினும் மோதுவர் எனத் தெரிகிறது. வீட்டின் சமர்த்துப் போட்டியாளராக சாண்டி அனைவரையும் கவர வாய்ப்புள்ளது. சரவணன் இளைஞர்களின் மனம் கவரும் சித்தப்புவாக இருக்கலாம். வனிதாவும், பாத்திமா பாபுவும், மதுமிதாவுக்கு ஆரம்ப கட்ட கன்டென்ட் உபயதாரர்களாக இருக்கலாம். டாப் 10 மூவிஸ் பாணியில் “இது முதல் நாளின் நிலைமை தான்”.

கடைசியாக, வாணலியில் சாப்பாட்டை போட்டு பிசைந்து மோகன் வைத்யா அனைவருக்கும் ஊட்டி விட, “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என முதல் நாள் முடிவடைந்தது.

அப்புறம், இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். முதல் நாளிலேயே ஒரு காதல் மலர்ந்திருக்குங்க. அபிராமி தான் கவினை காதலிக்கத் தொடங்கியிருக்காங்க. இந்த விஷயத்தை ஷெரின், சாக்ஷி கிட்ட சொல்லி ஐடியா கேட்டுட்டு இருக்காங்க. எது எப்டியோ… இந்த கவின் மருத்துவ முத்தத்தை கொடுத்து ஏமாத்தம இருந்தா சரி தான்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close