கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 5 – மார்கழித் திங்களல்லவா..? வீட்டுக்குள்ள சண்டையல்லவா..?

மித்ரா

மனித மனம் பல விந்தைகள் நிரம்பியது. சில சமயங்களில் தனக்காகவும் பல நேரங்களில் பிறருக்காகவும் அது சில சமாதானங்களைச் செய்து கொள்ளும். பிறகு அதற்காகத் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்யும்.

“சின்ன மச்சான் சொல்லு புள்ள…” என்ற அதிரிபுதிரியான பாடலோடு விடிந்தது ஐந்தாம் நாள் காலை. கருமமே கண்ணாக பிக் பாஸ் கடிதத்தை அனுப்பினார். யாரை என்ன செய்யச் சொல்லக் காத்திருக்காரோ என்ற ஆவலோடு சாண்டி கடிதத்தைப் பிரிக்க அது பாத்திமா பாபுவின் பெயரைத் தாங்கி வந்திருந்தது. போச்சுடா இவுங்களை எல்லாத்துக்கும் செய்தி வாசிக்கக் கத்துத் தரச் சொல்லப் போறாரு என நான் கதி கலங்கி போனேன். நல்ல வேளை, லாஃபிங் தெரபி கற்றுத் தரச் சொல்லியிருந்தார். அதாங்க வசூல் ராஜா படத்தில் பிரகாஷ்ராஜ் செய்யும் சிரிப்பு தெரபி. கோட்டானு கோடி நன்றிகள் ஏசப்பா.


அதாவது, குதூகலமா போய்ட்டு இருக்க குடும்பத்தில் கும்மியடிக்கவே விதி ஒரு பீஸ நம்ம வாழ்க்கைல கொண்டு வருமில்லையா?, பிக் பாஸ் வீட்டிற்கு அந்த விதி மீராவை அனுப்பியிருக்கிறது. பிக் பாஸின் செல்லாக்குட்டி ஆவதற்கான அனைத்து லட்சணங்களையும் கொண்டிருப்பவர் மீரா. மோகன் வைத்யா, மீரா, கவின் மூவரும் உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சாப்பிட்டு எழுந்த மோகன் வைத்யாவிடம் மீரா வெகு இயல்பாக “பின்னாடி ஹூக் கொஞ்சம் மாட்டி விடுங்க சார்” என்றார். அவர் ” தோ இரும்மா கை கழுவிட்டு வந்துட்றேன்.” என எஸ்கேப் ஆகி, கேப்டன் வனிதாவிடம் ” இதெல்லாம் எனக்கு அன்னீசியா இருக்கு. இப்டில்லாம் என் கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிருங்க.” எனக் கூறினார்.

வனிதா தன்மையாக மீராவை அழைத்து, (அப்போது மீராவுக்கு ஐஸ்வர்யா ஹூக் மாட்டி விட்டுக் கொண்டிருந்தார்.) ” மோகன் சாரிடம் இப்டி சொன்னியாமே… நீ எதார்த்தமா கேட்ருப்ப இனி அப்டிலாம் சொல்லாத. ” என ஆரம்பிக்க, “அதெல்லாம் சொல்லலாம் அவர் எனக்கு அப்பா மாதிரி நான் பொண்ணு மாதிரி” எனச் சொல்லி விட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டார். இந்த மேட்டரை மோகனிடம் கன்வே செய்த வனிதா, “நீங்களே சொல்லிக்கங்க சார். அவ நாங்க அப்பா பொண்ணு மாதிரி அதெல்லாம் சொல்லலாம்னுட்டு ஓடிட்டா” எனச் சொல்ல, அவரோ, “அப்பாவா??? அவ தான் வந்தன்னைக்கே நான் என் அப்பா அம்மாவைத் தவிர யாரையும் அப்பா அம்மானு கூப்பிட மாட்டேனுட்டாளே.” என நக்கலாகச் சிரித்தார்.

பின்பு லக்ஸரி டாஸ்க் தொடங்கியது. நானும் கையில் கர்சீப்போடு அழத் தயாரானேன். முதலில் வந்த வனிதா, தன் மகன் பிறந்த நாள் தான் வாழ்வில் மறக்க முடியாத நாள் எனக் கூறி தன் மகன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் மகன் அவருடன் இல்லை போலும். தந்தையுடன் இருப்பாராக இருக்கலாம்.

அடுத்து வந்த கவின், துயரங்களில் தோள் கொடுத்தவர்கள் பற்றிய கேள்விக்கு, தன் உறவினர்கள் அனைவரும் கை விட்ட நிலையில் நண்பர்கள் தன் குடும்பத்தைத் தாங்கிய கதையைப் பகிர்ந்து கொண்டார். நல்ல வேளை அத்துடன் நேற்றைய லக்ஸரி டாஸ்க் பகுதியை முடித்து விட்டார்கள்.

பின்பு வனிதா மீராவை அழைத்து பாத்திரம் துலக்கச் சொல்ல, அவர் “நைட் எல்லாம் நான் மூணு மணி நேரமா பாத்திரம் துலக்குனேன்” எனக் கூறி சாண்டியை அழைத்து துலக்கச் சொன்னார். அப்படியே விட்டிருக்கலாம். கொஞ்ச நேரம் கழித்து, “எனக்கு தூக்கமா வருது. எதாச்சும் வேலை இருந்தா கொடுங்க.” எனக் கேட்க பஞ்சாயத்து கூடியது. பாத்திரம் துலக்கும் அணியைச் சேர்ந்த சேரன், ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் மீராவை அழைத்துப் பேசினர். ” நைட் டைம்ல மூணு மடங்கு பாத்ரம் சேருது ” எனப் புலம்பிய மீராவிடம் மற்றவர்கள், “எல்லா நேரமும் சமைக்குற மாதிரி தான் நைட்டும் சமைக்குறாங்க. அதெப்டி மூணு மடங்கு சேரும் நாங்க எல்லாம் இதுவரைக்கும் நைட் துலக்குனதே இல்லாத மாதிரி பேசுற” எனக் கேட்டனர். நியாயமான கேள்வி தானே. மீண்டும் ” ஒரு நாள் நைட் பாத்திரம் துலக்கி பாருங்க அப்போ தெரியும்” என்றார் மீரா. பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கேப்டன், “சரிம்மா அவ்ளோ கஷ்டமா இருந்தா நீ டாய்லட் க்ளீன் பண்ற டீமுக்கு போய்டு” என்றார் மீராவிடம். உடனே மீரா, “நோ நோ நோ நோ….” என டாக்கிங் டாம் போல ரியாக்ட் செய்ய பிரச்சனை தொடங்கியது.

நம் அநேகம் பேரிடம் இருக்கும் பெரிய பிரச்சினை என்ன தெரியுமா? அடுத்தவர் பேசுவதை, அடுத்தவரின் கருத்தை காது கொடுத்துக் கேட்க நாம் விரும்புவதேயில்லை. அப்படிப்பட்டவர்களுடன் உரையாடுவது மிகுந்த அயர்ச்சியை ஏற்படுத்தி தலைவலியை வர வைக்கும். மீராவின் பிரச்சினை அது தான். யார் பேசுவதையும் காது கொடுத்துக் கேட்க அவர் தயாராகவே இல்லை. அவர் பிடித்த முயலுக்கு மூன்று கால் அவ்வளவு தான். காலையிலேயே மோகன் விசயத்தை சொல்லச் சென்ற போதே மீராவின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வனிதா, “தயவுசெஞ்சு நான் என்ன சொல்ல வரேன்னு கேட்டுட்டு பேசு” என குரலை உயர்த்தினார். உடனே மீரா, “என் கிட்ட இப்டில்லாம் கத்தாதீங்க என் கிட்ட கத்திப் பேச நீங்க ஒன்னும் என் அப்பா அம்மா இல்ல” எனச் சொல்ல, ” அப்போ உன் அப்பா அம்மா கூடவே இருக்க வேண்டி தான எதுக்கு வந்த?” எனக் கேட்டார் வனிதா.

இதற்குள் மீராவை வெளியே தள்ளிக் கொண்டு போன ஒரு குழு, அழத் தொடங்கியிருந்தவரை ஆற்றுப்படுத்தத் தொடங்கியிருந்தது. அதில் முதல் ஆள் சாக்ஷி. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆறுதல் சொல்ல வந்தவர்களைக் கூட மீரா முழுதாகப் பேச விடவில்லை. ஆனால், தன்னை வனிதா பேச விடவில்லை எனக் கூறி அழுதது தான் நகைமுரண். உள்ளே சேரனும், பாத்திமா பாபுவும் கத்திப் பேச வேண்டாம் என வனிதாவிற்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தனர். ” நிலைமை கை மீறிப் போனால் குரல் உயர்த்தத் தான் வேண்டும். அது கத்துவது இல்லை. சத்தமாகப் பேசுவது.” எனக் கூறிக் கொண்டிருந்தார் வனிதா.

அதற்குள் மீராவை ஆற்றுப் படுத்திய குழு உள்ளே வந்து வனிதாவைக் கேள்வி கேட்கத் தொடங்கியது. வனிதாவிற்கு ஆதரவாகக் களம் இறங்கினார் மதுமிதா. “ஆறுதல் சொல்றேங்குற பேர்ல தப்பு செய்தவங்க கிட்ட போய் சப்போர்ட் பண்ற மாதிரி பேசுறது நல்லால்ல” எனத் தொடங்கிய மதுமிதாவுக்கு, “ஒருத்தங்க அழுதுட்டு இருக்கும் போது கன்சோல் பண்ணனும் அதான் ஹ்யுமானிட்டி” எனக் கூறினர் சாக்ஷியும் அபிராமியும். அடேங்கப்பா. மனித மனம் தான் எத்தனை விந்தையானது. ” ஓ அப்போ வந்த உடனே நீங்க ரெண்டு பேரும் அவளை கார்னர் பண்ணீங்க. அவ சீட்டர். என்னைய ஏமாத்திட்டா என் ப்ரண்ட்ஸ ஏமாத்திட்டானு குதிச்சீங்க. அப்போ எங்க போச்சு உங்க ஹ்யுமானிட்டி. உங்களால அவ அழுதப்போ நாங்க போய் அவளுக்கு சப்போர்ட் பண்ணோமா?” என்றொரு நியாயமான கேள்வியை முன் வைத்தனர் வனிதாவும் மதுமிதாவும். சிம்பிளாக, உங்களுக்கு நியாயம் எது சரி எதுனு தோணுதோ அதன் பக்கம் ஸ்ட்ராங்கா நில்லுங்க. தப்பு பண்ணவங்க அழுதா அழட்டும். வெறுப்போ அன்போ முழுசா கொடுங்க. ரெட்டை குதிரை சவாரி வேண்டாம் என்பது தான் வனிதா தரப்பின் கருத்து.

வெளியே தர்ஷனிடம், “என்னைக் கார்னர் செய்றாங்க” எனப் புலம்பிக் கொண்டிருந்த மீராவை தனியே அழைத்து வந்த பாத்திரம் துலக்கும் குழு தன்மையாக அவருக்கு புரிய வைக்க முயன்றது. பொரிந்து தள்ளத் தொடங்கிய மதுமிதாவைத் தடுத்து பேசத் தொடங்கிய சேரன், ” மத்த மூணு பேரும் வேறெதோ வேலைல இருக்கும் போது உன்னை கூப்ட்டு ஒரு தட்டுக் கழுவா சொன்னா அதை ஏன் பெருசு பண்ற?” எனக் கேட்டார். ” எனக்கு முடியல சார் உடம்பு சரியில்ல கோல்டு” என்றார் மீரா. ” நேத்து மழைல நனைஞ்சயே அப்போ கோல்ட் இல்லையா?” என்ற சேரனின் கேள்விக்கு, “என் விருப்பம் சார் என் இஷ்டம்” என பதில் சொன்னார் மீரா. சேரன் டென்சனாகத் தொடங்கினார். ” சரி மொத நீ கூட கூட பேசாத பொறுமையா கேட்டுப் பழகு. எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிப் போனாத் தான்………” என சேரன் முடிக்கும் முன்பே, “சார் அட்ஜஸ்ட்லாம் பண்ண முடீயாது சார். நீதி சார் நேர்மை நியாயம் சார் ” என மீரா ஆற்றத் தொடங்க, “டேய் யப்பா முடில டா டேய் நான் ராத்திரி பாத்திரம் கழுவிக்குறேன் டா அந்த பொண்ணு எப்போ கழுவுதுனு கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்க டா” எனக் கடுப்பாகி எழுந்து சென்று விட்டார் சேரன்.

பாத்ரூமில், சாண்டி, மோகன் வைத்யா, தர்ஷன் மற்றும் கவின் குழு கச்சேரியைத் தொடங்கியிருந்தது. வாளியின் தாளத்தோடு பாடல் பட்டையைக் கிளப்பியது.

“மார்கழித் திங்களல்லவா
வீட்டுக்குள்ள சண்டையல்லவா
இது பத்திக் கொள்ளும் நேரமல்லவா….”

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close