கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 6 – நாட்டாமையை நோக்கித் திரும்பிய கேள்விகள்

மித்ரா

போட்டியாளர்கள் நாட்டாமையைச் சந்திக்கும் வார இறுதி நாட்களில் பிக் பாஸ் சற்று ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்தே ஒளிபரப்பப்படும். ஒரு மணி நேரத்தில் முந்தைய நாளையும் காட்டி சனிக்கிழமையையும் காட்ட வேண்டும். இதில் கணிசமான நேரத்தைக் கமல் வேறு எடுத்துக் கொள்வார். நாமும் அதே வேகத்தில் போவோம்.


நேற்றைய எபிசோடில் நிகழ்ச்சி அதற்கு முந்தைய நாளின் தொடர்ச்சியாகவே தொடங்கியது. அறிவுரை சொல்ல வந்த சரவணனை மீரா வழக்கம் போல மூக்குடைக்க, மற்றொரு புறம் யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே கவின் அனைவரிடமும் இனிக்கப் பேசுகிறார் என பெண்கள் அணி புறணி பேசிக் கொண்டிருந்தது.

ஏதோ பஞ்சாயத்தில் கோபப்பட்ட மோகன் வைத்யா, “இனி என்னை அப்பானு கூப்டாத அங்கிள்னே கூப்டு” என தர்ஷனிடம் சொல்லி விட, தர்ஷன் பாவம் அழுதே விட்டார். பின்பு பாத்திமா பாபுவும் வனிதாவும் மோகனை சமாதானம் செய்து, கையைக் கொடு கட்டிப்பிடி என இருவரையும் சேர்த்து வைத்தனர்.

அடுத்த நாள், “ஒத்தையடிப் பாதையில தாவி ஓடுறேன்…” என்ற அருமையான பாடலோடு விடிந்தது. அப்போது, எரிவாயு சிலிண்டருக்கான மீட்டர் கடைசி புள்ளியில் இருப்பதைச் சுட்டிக் காட்டிய பிக் பாஸ், கவனமாக இருக்கும் படி அறிவித்தார். மீண்டும் லக்ஸரி டாஸ்க் தொடங்கியது. ஸ்ஸ்ஸ்ஸப்பா. மீரா டாஸ்க் நடக்கும் அறைக்கு வருவதற்கு லேட் ஆக டென்சனின் உச்சிக்குப் போனால் வனிதா. அரக்கப்பறக்க மீரா கடைசி நேரத்தில் ஓடி வந்ததும் டாஸ்க் தொடங்கியது. லாஸ்லியா தன் வாழ்வின் மறக்க முடியாத சம்பவமென, சிறு வயதில் தன் அக்கா தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்த நாளைத் தெரிவித்தார். பின் தன் தந்தையைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். லாஸ்லியாவின் தந்தை சேரனைப் போலவே இருப்பாராம். அதனால் என்ன நானும் உன் தந்தை தான் அவரை அரவணைத்துக் கொண்டார் சேரன்.

பிறகு, முகேன் தன் தாய் தந்தையிடையே ஏற்பட்ட பிணக்கால் தான் அனுபவித்த துயர்களையும், மீரா தன் தந்தையை இழந்த கதையையும் பகிர்ந்து கொண்டனர். சாண்டியிடம் அப்பா அம்மாவைப் பற்றிச் சொல்லச் சொன்ன கேள்விக்கு, “அவர் எனக்கு அப்பா அம்மா எல்லாம் இல்ல. நான் ஒரு அனாதை. ஆஸ்ரமத்தில் தான் வளந்தேன்” எனக் கூற அனைவரும் கண் கலங்கத் தொடங்கினர். உடனே சாண்டி, “அப்டிலாம் சொல்லுவேன்னு நெனைச்சீங்களா? அதெல்லாம் எனக்கு எல்லாரும் இருக்காங்க” எனக் கூறி சேட்டை செய்து தன் அம்மாவிடம் அடி வாங்கிய கதையை ஜாலியாகப் பகிர்ந்து கொண்டார். ஆனால், ஜாலியான கதைகள் தான் பிக் பாஸுக்குப் பிடிக்காதே. போட்டியாளர்கள் சோகத்தைப் பிழிய வேண்டும். பார்வையாளர்கள் அழுது வடிய வேண்டும். நிகழ்ச்சியின் டிஆர்பி எகிற வேண்டும். எவனும் சந்தோஷமா இருக்கக் கூடாது. நம்மள் எல்லாம் உசார் ஆய்ட்டா பிக் பாஸ் வட நாட்டுக்கே ஓடீ போய்டும். ஆனால், ஆக மாட்டோம். ஆகவும் விட மாட்டார்கள். சாண்டி பதில்கள் ஒரே கேள்வியோடு முடித்து வைக்கப்பட்டன.

பிறகு, மீராவிடம் வனிதா, ” உனக்கு அப்பா இல்லைனு எனக்கு தெரியாது. தெரியாம உன் அப்பா அம்மா வீட்டுக்கே போ’னு சொல்லிட்டேன் சாரி” எனக் கூறி சில வாழ்வியல் தத்துவங்களைக் கூறினார். என்ன ஆச்சர்யம் மீரா பொறுமையாகக் கேட்டுக் கொண்டார்.

ஊரே ஒரு பிரச்சனையில் இருந்தால் கவினுக்கு ஒரு பிரச்சனை. லாஸ்லியா கவினை அண்ணன் என சொல்லி விட்டாராம். அதைத் தாங்க முடியாத கவின் லாஸ்லியாவின் தண்ணீர் பாட்டிலைத் திருடி விட்டார். அதை காலை வரை லாஸ்லியாவால் எடுக்க முடியவில்லை எனில் இனிமேல் அவரை அண்ணன் என கூப்பிடக் கூடாதாம். லாஸ்லியா எவ்வளவோ முயற்சி செய்தும் கவினிடம் இருந்து பாட்டிலைக் கைப்பற்ற முடியவில்லை. அவர் பாத்ரூம் போனால் கூட அதைக் கையில் எடுத்துக் கொண்டே போனார் கருமம். தூங்கும் போது அந்த பாட்டிலை கவின் கையோடு சேர்த்துக் கட்டி விட்டார் சாண்டி. நண்பேன்டா. ஆனால், நடுராத்திரிக்கு மேல் பஞ்சாயத்துக் கூடி, “உலகத்தில் யாரை வேணாலும் அண்ணானு சொல்லுவேன் ஆனா நீ என் அண்ணா இல்ல” என கவின் சொன்னதை லாஸ்லியா சொல்ல பாட்டில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. “இதை மொத நல்லா கழுவனும்” என்ற லாஸ்லியாவிடம் கவின், “இனி இந்த பாட்டிலைப் பாக்குறப்போ எல்லாம் என் ஞாபகம் தான் வரும் என்ஜாய்” என்றார். அதற்கு தர்ஷன், “ஒரு பைத்தியக்காரன் உன் பாட்டிலை எடுத்துட்டுப் போய்ட்டு திரும்ப கொடுத்துட்டான்னு நெனைச்சுக்க” என ஆறுதல் சொன்னார்.

ஏழாம் நாளில் பளபளவெனப் போட்டியாளர்கள் கமலைச் சந்திக்கக் காத்திருக்க, அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்றார் கமல். எப்போதும் சனிக்கிழமை சற்று டம்மியாகத் தான் இருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் தான் பஞ்சாயத்து எல்லாம். எனவே மரியாதைநிமித்த நலம் விசாரிப்புகள் முடிந்த பிறகு, “அந்தக் கிண்ணத்தில் இருந்த சீட்டுகளை ஒவ்வொருவராக எடுத்து அதில் இருக்கும் கேள்விகளை என்னிடம் கேளுங்கள்” என்றார் கமல்.

கமலிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எப்படி இருக்கும் என நமக்கே தெரியும். அந்தக் கேள்விக்கு அப்படி ஒரு பதிலை சொல்ல முடியும் என நாம் யாரும் யோசித்திருக்கவே மாட்டோம். நேற்றும் அப்படித் தான், மறக்க முடியாத நாள் எது என்றால் நாளை என்றார். முதன்முதலில் வாங்கிய சம்பளத்தைக் கேட்டால், இவர் களத்தூர் கண்ணம்மாவில் நடிப்பதற்காக ப்ளைமவுத் காரும் அல்சேஷன் நாயும் கேட்ட கதையைச் சொன்னார். இது கூடப் பரவாயில்லை. உங்கள் மகளை முதன்முதலில் கையிலேந்திய தருணம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதிலைச் சொல்லி விட்டு, அந்த தருணத்தைத் தான் ஒவ்வொரு முறை முறை உங்களப் பார்க்கும் போதும் உணர்கிறேன் என நம்மை நோக்கிக் கை காட்ட….. கமல் ரசிகையான என்னாலேயே அதைத் தாங்க முடியவில்லை. ஆண்டவரே, கேள்விகளுக்கு உண்மையாக பதில் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான்.

ஒரு வழியாக கேள்வி பதில் செஷன் முடிந்து நம் அவர் சென்று விட நிகழ்ச்சியும் முடிந்தது. இன்று என்ன செய்யக் காத்திருக்காரோ…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close