கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 43- 44- 45 – நான் ஏன் சரவணனை ஆதரிக்கவில்லை?

மித்ரா

கடந்த நாட்களின் ஹாட் டாபிக்கே ‘சரவணன் வெளியேற்றுப்படலம்’ தான். அதிரடியாக சரவணனை வெளியேற்றி மாஸ் காண்பித்தார் பிக் பாஸ். சாண்டியும், கவினும் ஒருபுறம் கதறிக் கொண்டிருக்க, இதுபற்றி சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துகளும் கோபாவேசக் கூச்சல்களும் பரவின. ” விஜய் டிவி என்ன பெரிய என்ன ஒழுங்கா?” , “ரியோவும் ஜெகனும் பேசாத பேச்சா?” என்றெல்லாம் சேனலைக் கழுவி ஊத்தினார்கள்.

‘உங்கள் கண்ணீரைக் கண்டவர்களுக்காக வீணாக்க வேண்டாம். அதற்கென ஒரு தகுதி இருக்கிறது.” என எங்கேயோ படித்த ஞாபகம். அவ்வப்போது சமூக வலைதளங்களில் நிகழும் இந்த ஆதரவு ஆரவாரங்களைப் பார்க்கையில் அது தான் தோன்றும். சரவணன் போன்ற மகாமனிதர்கள் எல்லாம் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவோடு வாழ்வதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் மட்டும் தான் அப்படியா நாம் எல்லாம் என்ன உத்தமர்களா எனக் கேட்டால், சத்தியமாகக் கிடையாது. மனிதன் மகா சல்லிப்பயல் தான். முதல் விஷயம் விஜய் டிவி அப்பாவிகளை ஏமாற்றுவது கிடையாது. அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக இருக்கும் ஆண்களும் பெண்களும் அதைத் தெரிந்து தான் செய்கிறார்கள். நம்மைப் பார்த்தே ஆக வேண்டும் என அவர்கள் கட்டாயப்படுத்துவதும் இல்லை. ஆனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் பொதுச்சமூகத்தின் பிரதிநிதிகள். இரண்டாவது, இதேபோல, “நான் கல்லூரிக் காலங்களில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் செல்வேன்.” என என் அப்பா என்னிடம் நாங்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவரை நான் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப் போவதில்லை. அவரிடம் பேசாமல் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் அவர் என் அப்பா. ஆனால், பொதுவெளியில் ஆயிரம் பேர் முன்னிலையில் அவர் அப்படிக் கூறினால் எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாகத் தான் இருக்கும். இது விளம்பத்திற்காகக் கிடையாது. அவர் எனக்கு அப்பாவாக இருக்கலாம். ஆனால், மற்ற பெண்களுக்கு யாரோ ஒருவர். இந்த யாரோ ஒருவர் நம்மை உரசுவதற்காகவே பேருந்தில் பயணப்பட்டவர் என்பதை எந்தப் பெண்ணாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதைக் கேட்கும் போது உடல் கூசித் தான் போகும். செய்த சில்றைத்தனங்களை ஒப்புக் கொள்வதால் மட்டுமே ஒருவன் உத்தமனாகி விட முடியாது.

“எப்பவோ நடந்தது இப்போ போய் எதுக்கு தண்டிக்கனும்?” எனக் கேட்டால், இப்போதும் பெண்கள் பேருந்துகளில் இடி வாங்கிக் கொண்டு தான் பயணிக்கிறோம். அது எதார்த்தமாகத் தான் நடந்திருக்கும் என நம்பிப் பழக்கப்பட்டிருக்கிறோம். ‘அப்டிலாம் இல்லைங்க எங்களை மாதிரி ஆளுக வேணும்னேவும் ஒரசுவோம்.” என்ற உண்மை எங்களுக்குக் கசக்கிறது. அதை ஆண்கள் இப்படி வெளிப்படையாக ஒப்புக் கொண்டு கைதட்டல் வாங்கும் சுதந்திரத்தை அவர்கள் மன்னிப்பே கேட்டாலும் நாங்கள் விரும்பவில்லை. அப்படி வேண்டுமென்றே உரசும் லட்சக்கணக்கான பேரின் பிரதிநிதியாக சரவணன் தண்டிக்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். அவ்வளவு தான்.

சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு கவினும் சாண்டியும் அழுத அழுகை கொஞ்சம் ஓவர் தான். சோசியல் மீடியா வாசிகளின் கண்ணீர் போல ஒட்டாமல் தெரிந்தது. அவர்கள் அழுகிறார்களே என பதறியடித்து மதுமிதா அழத் தொடங்க கண்ணீர் கூட அவரைக் கை விட்டது. வெகுநேரம் முயற்சி செய்து கண்ணீரை வர வைத்தார் பாவம். அதுவே ஒரு கடுப்பு. இதில் லாஸ்லியா, அபி வேறு ஒரு ஒப்பாரி. டேயப்பா இது ரியாலிட்டி ஷோவா இல்ல நாடகக் கம்பெனியாடா எனத் தோன்றியது. சாக்ஷி தான் கவின் அழுவதைத் தாங்க முடியாமல் அங்கு போய் சாண்டிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது. அடுத்தநாள் அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த அறிகுறியுமே இல்லாமல் அன்றாட நடவடிக்கைகளில் இறங்கினர். ஹவ்டா??

இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கும் கொஞ்சம் சுறுசுறுப்பான டாஸ்க் தான். போரடிக்கவில்லை. சாக்ஷி டாஸ்க்கில் முதலிடம் பிடித்து அடுத்த வார எவிக்சனில் இருந்து தப்பியிருக்கிறார். ஆனால் இந்த வாரம் யார் எவிக்ட் ஆவார்கள் என நினைத்தால் ஒரே பதட்டமாக இருக்கிறது. என் சிஸ்டம் வேறு ‘சா’ என்று அழுத்தினாலே ‘சாக்ஷி’ என சஜஸன் ஃபில் செய்யத் தொடங்கியிருக்கிறது. சரவணன் ரகசிய அறைக்கு சென்றிருக்காத பட்சத்தில், இந்த வாரம் எவிக்ட் ஆகும் யாரோ ஒருவரை பிக்பாஸ் ரகசிய அறையில் வைக்கலாம். அது அபியாக இருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. அவர் தான் எல்லாவற்றிற்கும் வினையாற்றி, அழுது புலம்பி கன்டென்ட் கொடுப்பார். சாக்ஷியை அனுப்பினாலும் பெரிதாக நஷ்டம் வந்து விடாது. ஆனால், பெரும்பாலும் நேரடியாக சண்டை செய்ய மாட்டார் சாக்ஷி. லாஸ்லியா எதற்கு அங்கு இருக்கிறார் என அவருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. ஸோ நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்.

டாஸ்க்கின் போது கவின் கால் இடறிக் கீழே விழுந்து விட அருகில் இருந்த சாக்ஷியும் லாஸ்லியாவும் பதறிப் போய் ஓடித் தேற்றினார்கள். ஆஹா, என்ன அற்புதமான காட்சி. ஆனால், கொஞ்சம் சரி ஆனதும், “எனக்கு நானே விழுந்தேனா இல்ல அவ தள்ளி விட்டாளான்னு சந்தேகமா இருக்குண்ணே..” என கவின் சாண்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சாக்ஷியை வில்லியாகவே முத்திரை குத்தி விட்டார் போல. உண்மையில் சாக்ஷிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பதறிப் போய் தான் ஓடி வந்தார். கடைசி வரை சாக்ஷியை கவின் புரிந்து கொள்ளவேயில்லை என்பது அவல நகைச்சுவை.

அபி-முகேன் உறவு வேறு, வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது. “நீ ஒன்னும் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டாம். எனக்கு உன்னை காதலிக்க உரிமை இருக்கிறது. ஐ லவ் யூ.” என சினிமா வசனங்களாகத் தட்டி விட்டுக் கொண்டிருக்கிறார் அபி. சொன்னா பத்தாதும்மா தாயே அது மாதிரி நடந்துக்கனும். பொசசிவ் சண்டை போட்றது, எதாவது ஒரு சின்ன பிரச்சனை வந்தாலும், “முகேன் ஏன் எனக்கு சப்போர்ட் பண்ணல?, முகேன் ஏன் நான் எந்திரிச்சு வந்ததும் என் பின்னாடியே வரல?, முகேன் ஏன் எனக்காகப் பேசல?” என்று டார்ச்சர் செய்து கொண்டு எதையும் எதிர்பார்க்கவில்லையாம். இந்த அன்பு, ஆதரவு தருதல், நேரம் செலவழித்தல் இதெல்லாம் நமக்காக செய்ய வேண்டும் என அவர்களுக்கே தோன்ற வேண்டும் ப்ரெண்ட். நீங்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து நிர்பந்தித்து அதைப் பெறக் கூடாது. நல்லவேளை கவின் அபியிடம் சிக்காமல் எஸ்கேப் ஆகி விட்டார்.


நேற்று கஸ்தூரி வீட்டிற்குள் சென்றிருக்கிறார் என ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. காத்திருப்போம்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close