கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 41 & 42 – மக்களின் பிரதிநிதியாக நடந்து கொள்ள நீங்கள் எதற்கு கமல்?

மித்ரா

ஆண்டவர் அப்படி இப்படியென்று கடந்த வாரங்களில் தான் புகழ்ந்து தள்ளியிருந்தேன். உண்மையிலேயே மீரா-சேரன் விவகாரத்தை அத்தனை பக்குவமாகக் கையாண்டார். ஆனால், இந்த வாரம் அவர் பேசிய் நிறைய விஷயங்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒருவேளை அப்படிப் பேசியதற்கு இது மாதிரியான காரணங்கள் இருந்திருக்கலாம் என ரசிக மூளை சமாதானம் செய்தாலும் அது உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது.


சென்ற வாரத்தின் பெரும் பிரச்சனையே சாக்ஷி-கவின்-லாஸ்லியா விவகாரம் தான். என்ன தான் கசகசவென்று அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது அயர்ச்சியைத் தந்தாலும் அதை அவ்வளவு அசட்டையாக முழு தவறையும் சாக்ஷியின் பக்கம் போட்டது போலப் பேசியிருக்கத் தேவையில்லை என்றே தோன்றியது. அந்தப் பிரச்சனையின் காரணமே சாக்ஷி கவினை நாமினேட் செய்தது தான். அதைத் தான் அங்கங்கே பேசி கவின் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அதுவே கேள்வியாகவும் வந்தது. அதனால் தான் பிரச்சனை தொடங்கியது. தன்னை நாமினேட் செய்ததால் குழப்பத்திற்கு ஆளான, மனவுளைச்சலுக்கு ஆளான, தனக்கு சாக்ஷி துரோகம் செய்து விட்டார் எனக் கருதிய கவின் முந்தைய வாரம் சாக்ஷியை நாமினேட் செய்தது அங்கிருக்கும் யாருக்குமே தெரியாது. குறைந்தபட்சம் அந்த நியாயத்தையாவது கமல் கேட்டிருக்கலாம்.

எவிக்சன் நேரத்தில் அழுவாச்சி நாடகம் போடுகிறீர்களா? என்ற கமலின் கேள்விக்கு சாக்ஷி கொடுத்தது சாட்டையடி பதில். அவர் நடிக்கிறாரா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது தான். யார் மனதிற்குள்ளும் போய் நாம் பார்க்க முடியாது. ஆனால், சாக்ஷி இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என நம்மால் பொருத்திப் பார்க்க முடியும். அந்த உணர்வுகளையெல்லாம் நாம் நிரூபிக்க முடியாது. அதையெல்லாம் யாரிடமும் நாம் நிரூபிக்கத் தேவையுமில்லை. சாக்ஷி கட்டுப்படுத்த முயலாமல் வெளிப்படுத்தியிருக்கலாம். எதற்கு கட்டுப்படுத்திக் கொண்டு நாம் மட்டும் அனுபவிக்க வேண்டும். ஊரைக் கூட்டுவோம் அவனும் அனுபவிக்கட்டும் என வேண்டுமானால் நினைத்திருக்கலாம். ஆனால், ஒருவரின் உணர்வை அப்படி அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்னிலையிலேயே கேள்விக்குட்படுத்துவது அவரை இன்னும் மற்றவர்கள் ஏளனமாக நினைக்கவே வழிவகுக்கும். மற்றவர்கள் மீது தவறேயில்லை என்ற பிம்பம் உருவாகும்.

பிறகு இதிலிருந்து வெளிவருவதற்கு வீட்டிலிருப்பது தான் சிறந்த வழி என்றும், அதுவும் அதற்கு ரேஷ்மாவைக் காரணம் காட்டி சொன்ன உதாரணமும் கமலா இப்படிப் பேசுகிறார் என ஆச்சரியப்பட வைத்தன. கூட்டுக் குடும்பத்தில் இருந்ததால் தான் அந்தக் காலத்தில் விவாகரத்துகள் நடைபெறவில்லையாம். இந்த வீட்டை கூட்டுக் குடும்பம் போல சாக்ஷி நினைத்துக் கொள்ள வேண்டுமாம். எந்தக் கூட்டுக் குடும்பத்தில் பிரிய நினைக்கும் தம்பதிகள் ஒரே வீட்டில் இருப்பார்கள். அதிலும் ஒருவர் வேறொருவரிடம் சதாசர்வகாலமும் மொக்கை போட்டுக் கொண்டிருப்பார்கள். ரேஷ்மா மகனைப் பிரிந்த துக்கத்திலிருந்து மீண்டு விட்டாராம். அது நடந்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டன. இன்னமும் மகன் என்ற வார்த்தையை யாரும் சொன்னால் கூட பட்டனை அழுத்தியது போல அழுது கொண்டு தான் இருக்கிறார். எதைக் கொண்டு போய் எதில் முடிச்சுப் போடுவது. அய்யோ ஆண்டவா…

சென்ற வாரத்தில் ஓவராக பெர்ஃபார்ம் செய்தது லாஸ்லியா தான். ஆனால், இந்த விஷயத்தில் கமல் லாஸ்லியாவைப் பெரிதாக எதுவுமே கேட்டுக் கொள்வதில்லை. மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார் போலும். மக்களைப் பிரதிபலிக்க கமல் எதற்கு?

ஆனால், ஒரு கோணத்தில் சிந்தித்தால், சாக்ஷி பக்கமே பேசினால் இன்னும் தான் பிரச்சனை செய்வார் என சற்று கமல் அதட்டி வைத்திருப்பது போலவும் தோன்றுகிறது. அழுதுகொண்டேயிருக்கும் குழந்தையை அதட்டினால் சற்று அமைதியாகும் இல்லையா அதுபோல. கவினை டீல் செய்த விதத்தைப் பார்த்தால் எதிலோ கவின் சிக்கியிருக்கிறார் போலத் தெரிகிறது. வரும் காலங்களில் குறும்படமோ, கன்ஃபெசன் அறை விசாரணையோ நடக்கலாம்.

சேரன்-சரவணன் சண்டையையும் மய்யமாக நின்று தான் பேசினார். தன்னை யாராவது எதாவது சொல்லி விட்டால் உடனே அவர்களை மட்டம் தட்டி அவமானப்படுத்தும் சரவணனின் குணத்தைப் பற்றிப் பேசவேயில்லை. வயதிற்கு மரியாதையாக இருக்கலாம். ஆனால், எதற்கு? ஆனால் அதற்கே சரவணன் சென்று சேரனிடம் மன்னிப்புக் கேட்டதெல்லாம் அடேங்கப்பா ரகம். என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னால் நான் இந்த வீட்டை விட்டே போய்ருவேன் எனச் சொன்ன மானஸ்தன் எங்கப்பா?

போட்டி கடுமையாகிக் கொண்டேயிருக்கிறது. வீட்டில் எஞ்சியிருக்கும் அனைவருமே கடின போட்டியாளர்கள். பார்க்கலாம் யார் உள்ளே? யார் வெளியே?

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close