கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 36 & 37 – நட்புன்னா என்னானு தெரியுமா?

மித்ரா

இந்த வாரத்தின் முதல் பட்டாசை ஓப்பன் நாமினேசன் மூலம் கொளுத்திப் போட்டார் பிக் பாஸ். “அப்பாடா, வனிதாவும் இல்ல, மீராவும் இல்ல இனி சண்டையா நெவர்…!” என ஜாலி மூடில் இருந்த போட்டியாளர்களுக்கு இடி விழுந்தது போலிருந்தது. முதலில் சாக்ஷியைக் கூப்பிட அவர் சரவணனையும், கவினையும் நாமினேட் செய்து அடித்தார் முதல் பந்திலேயே சிக்ஸர்.

அடுத்தடுத்து வந்தவர்கள் பெரும் சிரத்தை எதுவும் எடுக்காமல் முந்தையவர்கள் சொன்ன பெயர்களையே ரிபீட் செய்ய அபி, சாக்ஷி, கவின், மதுமிதா, ரேஷ்மா ஆகியோர் எவிக்சன் நாமினேசன் பட்டியலில் வந்து சேர்ந்துள்ளனர். “அவ எப்டி என்னை நாமினேட் பண்ணலாம். அவளால Influence ஆகித் தான் எல்லாரும் என் பேரைச் சொன்னாங்க. கத்துனதுக்கு மன்னிச்சுட்டேன்னு சொல்லிட்டு இப்ப நாமினேட் பண்ணிட்டா..” என தாம்தூமெனக் குதித்துக் கொண்டிருக்கிறார் கவின். இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு இருக்கின்றன.

1) சாக்ஷி எந்த இடத்திலும் கவின் என்னிடம் கத்தியதற்காக நாமினேட் செய்கிறேன் எனச் சொல்லவில்லை. அவன் என்னுடனான உறவை குழப்பத்திலேயே வைத்திருக்கிறான். சிலநேரங்களில் என்னை முதுகில் குத்துகிறான் எனக் கூறித் தான் நாமினேட் செய்தார். முதுகில் குத்தியதாக அவர் குறிப்பிடுவது இப்போதும் லாஸ்லியாவுடனான உறவை முன்னை விட நெருக்கமாகத் தொடர்வது என நினைக்கிறேன். மற்றவர்கள் தான் கவின் சாக்ஷியிடம் கத்தியதைக் காரணம் காட்டி நாமினேட் செய்தனர்.

2) சென்ற வாரம் மீரா, சாக்ஷி குறும்படம் வெளியான போது, அது ஒன்றும் பெரிய கொலைக்குற்றமெல்லாம் இல்லை, இருந்தும் அதைக் காரணம் காட்டி சாக்ஷியை நாமினேட் செய்தார் கவின். அது கன்ஃபெசன் அறை என்பதால் தெரியவில்லை. இப்போது வந்து சாக்ஷி மீது குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார். அடேயப்பா…!

இதில் சரவணனும், சாண்டியும் வேறு “இனிமேல் அவ கிட்ட பேசுனன்னா அவ்ளோ தான்..” என கவின் மீது கரிசனம் காட்டிக் கொண்டிருந்தனர். மதுமிதா ஒரு அருமையான கேள்வியை முன் வைத்தார். “ஏன் ஆண்கள் யாரும் ஆண்களை நாமினேட் செய்வதில்லை?” என. அதற்கு சரவணன் கொடுத்த நேர்மையான பதில், “இன உணர்வு” இதைச் சொல்லி விட்டு, “எனக்கு என்ன நடந்ததுன்னே தெரியாது. அவுங்க ஒரு உறவில் இருந்தாங்க அது நமக்கு முழுசா தெரிஞ்சுருக்க வாய்ப்பில்ல. அதனால அதைப்பத்தி எந்த முடிவும் நம்ம எடுக்க முடியாது.” என சரவணன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில், வெளியே சேரன், “என்னதான் அப்பா போன்ற உறவில் பழகினாலும் லாஸ்லியா அடல்ட். அவளுக்குனு பர்சனல் இருக்கும். அதில் நான் தலையிடக் கூடாது.” என சேரன் சாக்ஷியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆண்களின் இந்தப் புரிதல் தான், பெண்களுக்கு ஒருபோதும் சாத்தியப்படாத நேர்மையான ஒரு நட்பை அவர்களு சாத்தியப்படுத்துகிறது. ஆண்கள், நண்பர் என்பதற்காக எந்த உரிமையும் எடுத்துக் கொள்வதில்லை, அவர்களாக சொல்லாத வரையில் எதையும் கேட்டுக் கொள்வதில்லை, சொந்த விஷயங்களில் தலையிடுவதில்லை, பிரச்சனை வந்தால் கை விடுவதுமில்லை. பெண்கள் அப்படி இல்லை. உன் பிரச்சனை என் பிரச்சனையும், உன் எதிரி என்றால் அவன்/ள் என் எதிரியும் என ஓவராக உரிமையெடுத்துக் கொண்டு களமாடுவது, பிறகு அதை வைத்தே, “உனக்காத் தான இதெல்லாம் செய்தேன்.” என எமோசனல் அட்டாக் செய்வது, வேலைக்காகவில்லையென்றால் விலகி வந்து ஏச வேண்டியது. ஏசப்பா…

கவின் சேரனை தனக்குக் கடுமையான போட்டியாளராக நினைக்கிறாரா என்னவெனத் தெரியவில்லை, அவர் மீது பெரும் வன்மத்துடனேயே சுற்றி வருகிறார். லக்ஸரி டாஸ்க்கில் கூட ரஜினி போல சேரன் சரியாகச் செய்யவில்லையெனக் கூறி இந்த வாரம் அவரை ஜெயிலுக்கு அனுப்ப திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். தன்னை நாமினேட் செய்து விட்ட கடுப்பில் சாக்ஷியும், ஷெரினும் கூட தமன்னா, குஷ்பூ போல செய்யவில்லையெனக் கூறி வருகிறார். சேரன் ரஜினி போலத் தான் நடிக்கிறார் என்பது வேறு, ஆனால், தமன்னா போல் எப்படி நடந்து கொள்வது என எனக்குப் புரியவில்லை. அப்படிப் பார்த்தால் த்ரிஷா வேடமிட்டிருக்கும் லாஸ்லியா ஒரு மாடர்ன் மகேஷ்பாபு. ஆனால், அதெல்லாம் கவின் கண்ணுக்குத் தெரியாது பாவம். இந்த டாஸ்க்கின் சிறந்த போட்டியாளர் என்னைக் கேட்டால் மதுமிதா தான்.

முதன்முதலாக நாமினேசனைச் சந்திக்கும் ரேஷ்மா சற்றுக் கலங்கிப் போயிருக்கிறார். “என்னை நாமினேட் செய்ய எப்படி மனசு வந்தது?” எனக்கேட்டு தானும் அழுது முகேன் குழந்தையையும் அழவைத்து விட்டார். இப்போதைக்கு வீட்டில் நட்புக்கு நேர்மையாக இருப்பது இரண்டே பேர் தான். பெண்களில் ஷெரின், ஆண்களில் முகேன். ஆனால், ஷெரின் எதற்கோ கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். கடைசி வரை எதற்கென்றே புரியவில்லை. அப்றம், இந்த வீட்டில் இதுவரை நாமினேட் ஆகாமலேயே பாதுகாப்பாக சிலர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது அவர்களை நாமினேசனுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ங்க பிக்பாஸ் ப்ளீஸ்.

இடையில் சரவணனை கன்ஃபெசன் அறைக்கு அழைத்த பிக்பாஸ், பெண்களை இடிப்பதற்காகவே கல்லூரிக் காலங்களில் பேருந்தில் செல்வேன் என கமலிடம் கூறியதற்காக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கச் சொன்னார். சரவணனும், “நான் சின்ன வயசுல நிறைய தப்பு பண்ணிருக்கேன். அதை யாரும் பண்ணக்கூடாதுனு சொல்றதுக்காகத் தான் அன்னைக்கு சொல்ல வந்தேன். அதுக்குள்ள கட் ஆய்டுச்சு. மன்னிப்பு கேட்டுக்கிறேன்.” எனக் கூறினார்.

அந்தப் பேச்சு எதனால் கட் ஆனது என ஞாபகம் இருக்கிறதா மக்களே… அவர் சொன்னதும் பார்வையாளர்கள் கை தட்டியதால் கட் ஆனது. எதற்கு கை தட்ட வேண்டும் என்ற யோசனையே இல்லாமல் தட்ட வேண்டியது. கமல் சொல்வது போல உங்களையெல்லாம் திருத்தவே முடியாது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close