கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 9 – எதிரிக்கு எதிரி நண்பன்… வீட்டிற்குள் எழும் உறவுச் சிக்கல்கள்

மித்ரா

தான் ஓர் கூட்டத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் அந்நியப்படுத்தப்படும் பொழுது, தன்னைப் போலவே ஏதோ ஓர் கட்டத்தில் தனியாக்கப்படும் இன்னொருவருடன் கேள்விகளின்றி விரும்பி சென்று அமர்ந்து கொள்கிறது மனித மனம். எதிரிக்கு எதிரி நண்பன் என அணி திரளத் தொடங்குகின்றனர். எல்லாம் ஒரு பாதுகாப்புணர்வுக்குத் தானே.
“இங்கி பிங்கி இங்கி பிங்கி போட்டுப் பாப்போம் கண்ணே….” பாடலுடன் தொடங்கியது 9 ஆம் நாள். லாஸ்லியாவும் சேரனும் சேர்ந்து செம்மையாக ஆடினர். சேரன் வர வர கும்பலுடன் ஐக்கியமாகிக் கொண்டே வருகிறார். ஆடுகிறார், விளையாடுகிறார், டாஸ்க்குகளில் சுறுசுறுப்பாக செயல் படுகிறார். அவரின் ஒரே எதிரியாக இருப்பது சீனியர் மனப்பான்மை மட்டுமே. ஆனால், அதையெல்லாம் விட்டுக்கொடுப்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. ஆனா, எனக்கு ஒன்னும் மட்டும் தாங்க புரியல. நல்லா தூங்கிட்டு இருக்காங்க. திடீருனு பாட்டு போட்டதும் எப்டி எந்திருச்சு தைய்யத்தக்கனு ஆட முடியுது.

அடுத்து மார்னிங் மோட்டிவேசனுக்காக மதுமிதாவை ‘வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு ஊக்கப்படுத்தும் விதமாகச் சொற்பொழிவாற்ற வேண்டும்’ எனச் செய்தி அனுப்பினார். இந்தச் சூழலில் அவர் எப்படி சொற்பொழிவாற்றுவார் என நமக்கே தெரிந்திருக்கும் போது, பெரிய முதலாளிக்கு தெரியாமல் இருக்குமா? எதிர்பார்த்த சம்பவம் அச்சுப்பிசகாமல் அப்படியே நடந்தது.

வாழ்க்கையில் முன்னேற வழி சொல்லச் சொன்னால் தன் வாழ்க்கை அனுபவங்கள் என நான் ஆண்களிடம் கை கொடுக்க மாட்டேன், பெண்களைக் கூட கட்டிப்பிடிக்க மாட்டேன், பார்ட்டிகளுக்குச் செல்ல மாட்டேன், ஆடியோ லான்ச் உள்ளிட்ட விழாக்களுக்குக் கூட செல்ல மாட்டேன், நான் பெரிதாக வெற்றி பெறாததற்கு அது கூட ஒரு காரணம் எனக் கூறத் தொடங்கினார். குறிக்கிட்ட வனிதா, “உன் சுயபுராணத்தைப் பாடாதே… வாழ்க்கையில் உருப்பட வழி சொல் ” என்றார். சேரனும், ” நீ அப்படி எல்லாம் செய்ய மாட்டன்னா மத்தவங்க பார்ட்டிக்கு போய் தான் ஜெய்க்கிறாங்கனு சொல்ல வரயா பாத்து பேசு” எனக் கூறினார். மீரா மட்டும் ” அவுங்கள முழுசாப் பேச விடுங்களேன் ப்ளீஸ்” என புது பார்ட்னருக்காகக் கெஞ்சினார்.

இந்த சண்டை மார்னிங் மோட்டிவேசன் முடிந்து வீட்டிற்குள்ளும் தொடர்ந்தது. வனிதா ஒரு பெக்கூலியர் கேரக்டர். தனக்கு நியாயம் எனப்படும் ஒன்றிற்காக எந்தக் காரணத்திற்காகவும், யார் சொன்னாலும் விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை வாதிடுகிறார். அதனாலேயே அவர் வெளியுலகிலும் சண்டைக்காரியாகப் பார்க்கப்படுகிறார். தொடர்ந்து மதுமிதாவிடம் “நீ உன்னை நல்லவளாகக் காட்டிக்க மத்தவங்களைக் கேவலப்படுத்துற. நீ தான் சரி மத்தவங்க எல்லாம் தப்புனு சொல்ற” எனக் கத்திக் கொண்டிருந்தார். “நான் சொல்ல வந்ததை முழுசாக் கேக்காம இடைல பேசிட்டீங்க” என மதுமிதாவும் பதிலுக்குக் கத்த வீடே சண்டைக் காடானது.

பின்பு பிக் பாஸ் இந்த வாரத்திற்கான லக்ஸரி டாஸ்க்கை அறிவித்தார். அதன் படி, போட்டியாளர்கள் சிங்கம், யானை, ஓநாய், அன்னப்பறவை என நான்கு அணிகளாகப் பிரிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது டாஸ்க்குகள் அறிவிக்கப்படும் என்றார். ஆக்டிவிட்டி ஏரியாவில் ஒவ்வொருத்தருக்கும் நடக்கும் டாஸ்க்குகள், லிவிங் ஏரியாவில் இருக்கும் டிவியில் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. முதலில் சிங்கம் அணியில் இருந்து வனிதா செல்ல, அவருக்கு போட்டியின் விதிமுறைகளைப் படித்துக் காட்ட மோகன் வைத்யா சென்றார். கூடை போன்ற ஒரு வண்டி மட்டும் இருந்தது. அப்போது திடீரென கையில் வாழைப்பழத் தாரோடு உள்ளே நுழைந்தார் ஒரு பல்க்கான ஜிம் பாய். போட்டியின் விதிமுறைகள் அடங்கிய அட்டையை மோகனின் கையில் கொடுத்து விட்டு போய் அந்த வண்டியில் அமர்ந்து கொண்டு பழம் தின்னத் தொடங்கினார். அந்த வண்டியோடு சேர்த்து அந்த பீம் பாயையும் பின்னிருந்து வனிதா மேலே தூக்க வேண்டுமாம். பஸர் அடிக்கும் வரை பீம் பாயின் கால் தரையில் படாமல் இருந்தால் 1000 பாய்ண்டுகள். முதலில் தடுமாறிய வனிதா சிறிது நேரத்தில் சூப்பராகத் தூக்கி விட்டார். வெற்றி பெற்று வீட்டிற்கு 1000 பாய்ண்டுகளை மட்டுமல்லாது அந்த வாழைப்பழத் தாரையும் கொண்டு வந்தார். சிங்கம் என்பதால் பலம் தேவைப்படும் டாஸ்க்.

அடுத்து ஓநாய் அணியில் இருந்து சாக்ஷி, தர்ஷனும் அவர்களுக்கு விதிமுறைகள் வாசிக்க மீராவும் சென்றனர். கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சி விளம்பரப்படம் ஒரு புறம் வைக்கப்படிருக்க, மற்றொரு புறம் அது கலைத்துப் போடப்பட்டிருந்தது. பஸில் கேம். விதிமுறைகளை வாசித்த மீரா அவர்கள் விளையாடத் தொடங்கியதும் உற்சாகப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு தொடர்ந்து “கமான் கமான் ஃபோகஸ் ஃபோகஸ்” எனைக் கத்தத் தொடங்கினார். இதை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்கே கடுப்பானது. கடைசி நேரத்தில் டாஸ்க்கை முடிக்க முடியாமல் 600 பாய்ண்ட்ஸை இழந்தனர் ஓநாய் அணியினர்.

வெளியே வந்த மீராவிடம், “என்ன மச்சா இப்டி பண்ணிட்ட. யாரும் ஹெல்ப் பண்ணக் கூடாதுனு ரூல்ஸ்ல இருக்குல்ல. நீ ஏன் கத்திட்டே டிஸ்டர்ப் பண்ற?” என கவின் கேட்க டென்சன் ஆனார் மீரா. உள்ளே வந்ததும் அனைவரும் அதையே கேட்க, ஏதோ சொல்ல வந்த மோகனை, “ஐயோ போதும்பா விடுங்க விடுங்க என் கிட்ட பேசாதீங்க” எனக் கோபப்பட்டார். சிறிது நேரம் கழித்து மோகன் , ” வயசுக்கு மரியாதை கொடும்மா. எல்லார் கிட்டயும் பேசுற மாதிரி என் கிட்டயும் பேசாத ” எனக் கோபப்பட்டார். இடையில் கவினுக்கும் மீராவுக்கும் வேறு வாக்குவாதம் ஆனது. “நான் மட்டும் மோட்டிவேட் பண்ணலைன்னா இந்தளவுக்குக் கூட வந்துருக்கமாட்டாங்க தெரியுமா?” எனக் க்ரெடிட்ஸை தனக்கு எடுத்துக் கொண்டார் மீரா.

வெளியில் மீரா, “என்னை யாருமே இதுவரை திட்ட மாட்டாங்க. நான் இருந்த சொஸைட்டியே வேற” என அழத் தொடங்க அவருக்கு மதுமிதா ஆறுதல் சொல்ல, பின்பு மதுமிதா அழ அதற்கு மீரா ஆறுதல் சொல்ல மெல்ல மெல்ல அவர்களைக்கென ஒரு அணியும் உருவாகத் தொடங்கியது. பின்பு தான் கத்தியதற்காக மோகன் , மீராவை முத்தமிட்டு கட்டியணைத்து சமாதானம் செய்தார். இதுக்கு சினேகனே பரவால்ல. கட்டி மட்டும் தான் பிடிப்பாரு.

பின்பு முகேனை அழைத்த மீரா, ” முன்பு போல நாம் இப்போது நண்பர்களாயில்லை. நீ யாருடன் பேசினாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் ஒரு சிலர் என்னோடு இணக்கமாக இருப்பவர்களைப் பிரிக்க நினைக்கிறார்கள்” எனச் சொல்ல, ” நான் யாருடன் பேச வேண்டும். பேசக் கூடாது என்பதை யாரும் முடிவு செய்ய முடியாது ” எனச் சொல்லிக் கொண்டிருந்தார். தர்ஷன் அளவுக்குக் கூட முகேனுக்கு மீரா மீது பெரிய நல்ல அபிப்ராயம் இல்லை என்பதே உண்மை. மீராவை நாமினேட் செய்தவர்களில் முகேனும் ஒருவர். தர்ஷனைப் பொறுத்தவரை அவருக்கு யார் மீதும் பெரிதாக எந்தக் குற்றச்சாட்டுகளும் கிடையாது. இருந்தாலும் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவருமே அதை வெளிக்காட்டிக் கொள்வதே கிடையாது. ஒருவேளை அவர்கள் வளர்ந்த சூழல் அவர்களை அப்படிப் பழக்கியிருக்கலாம்.

மீரா முகேனிடம் பேசுவது அபியுடனான நட்பைப் பற்றித் தான். மனங்கவர்ந்தவர்களுக்கு இதயத்தைக் கொடுக்கச் சொல்லும் போது, அபி முகேனுக்குத் தான் கொடுத்தார். முகேனும் மீராவும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட அபி ,சாக்ஷி ஆகியோர் வனிதா, ரேஷ்மா போன்றோருக்குச் சொல்ல அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகினர்.

வேறு வேலை எதுவுமில்லாத 15 பேர் மட்டுமே தங்கியிருக்கும் ஒரு வீட்டில் எழும் உறவுச் சிக்கல்கள் பெரும் சண்டைகளுக்கு வழி வகுக்கும். முந்தைய சீசன்களில் பார்த்தது தானே. இதிலும் அதை தாராளமாகப் பார்க்கலாம்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close