கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 20,21 & 22 – வனிதாக்கள் ஓய்வதில்லை!

மித்ரா

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே கதை போலச் சொல்லாமல் இனி கொஞ்சம் பாணியை மாற்றி அமைக்கலாம் என இருக்கிறேன். இதுவும் வாசகர்களின் கருத்துகளினால் ஏற்பட்ட புரிதல் தான். பிக் பாஸ் வீட்டில் 3 வாரங்களைப் போட்டியாளர்கள் கடந்துள்ளனர். கேமரா இருக்கிறது என்ற கவனத்தை முற்றிலுமாக இழந்து இனி கமலிடமே பொய் சொல்லத் தொடங்குவார்கள். அதனால் மனிதர்களின் தீவிர உளவியல் சிக்கல்களைப் பற்றி பிக் பாஸ் போட்டியாளர்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு சற்று பேசலாம் எனத் தோன்றுகிறது. இனிமேல் வீட்டில் என்ன நடந்தது என்பதை வேறு ஏதேனும் கட்டுரைகளில் படித்து விட்டு ஏன் நடந்தது என உரையாட இங்கே வாருங்கள்.

முதலில் 20 ஆம் நாளான வெள்ளிக் கிழமை நடந்தவை ரத்தினச் சுருக்கமாக ஒளிபரப்பப் பட்டன. சென்ற வாரத்தின் முக்கியமான திருப்பமே நான் முன்பே கூறியிருந்தது போல தர்ஷனும், லாஸ்லியாவும் கன்டென்ட் தரத் தொடங்கியிருப்பது தான். ஆரம்பத்தில் முதல் வார நாமினேசனின் போது சேரன், “இந்த வீட்டின் சூழலுக்குப் பொருத்தமில்லாத குழந்தைகள்” என தர்ஷன், லாஸ்லியாவைக் குறிப்பிட்டு நாமினேட் செய்தார். ஆனால் உண்மையில் அவர்களை அத்தனை குழந்தைகள் எல்லாம் இல்லை. போர் சூழலில் வளர்ந்து, வேறு நிலத்தில் வந்து சிரமங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கேயான பாதுகாப்புணர்வு தான் அவர்கள் ஒதுங்கியே இருக்க காரணம். அஸ்திவாரத்தை பலமாக்க அதாவது தங்களுக்கென்று நண்பர்களை, ஆதரவாளர்களைக் கண்டு கொண்டு பிறகு தலையிடலாம் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்திருக்கும். இரண்டு வாரங்களைக் கடந்த பிறகு குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

தர்ஷனுக்கு பாத்திமா சொல்லி விட்டுப் போன ‘நீ ஃபைனல் வரை இருக்கப் போற பையன்’ என்ற வார்த்தைகள் உத்வேகத்தை அளித்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை லாஸ்லியாவும் மதுமிதாவும் ஏறத்தாழ ஒரே தட்டில் வைக்கப்பட வேண்டியவர்கள் தான். லாஸ்லியா பழைமைவாதக் கருத்துகளைக் கொண்டவராகவே தெரிகிறார். மதுமிதா வெளிப்படுத்தி விட்டார். லாஸ்லியா இன்னும் வெளிப்படுத்தவில்லை. அதுவே மற்ற இளைஞர்களிடம் இருந்து அவர் தனித்து இருக்கக் காரணமாக இருக்கலாம். “நீயும் நானும் பேசுவது லாஸ்லியாவிற்கு பிடிக்கவில்லை” என மீரா சொன்னதைக் கேள்விப்பட்டு லாஸ்லியா வந்து பேசிவிட்டுப் போனதே சாட்சி அவர் ஒன்னும் குழந்தை இல்லை என்பதற்கு.

21 ஆம் நாளில் கமலை அகம் டிவி வழியே சந்தித்தனர் ஹவுஸ் மேட்ஸ். முதலில் லாஸ்லியாவிடம் இருந்து பஞ்சாயத்தைத் தொடங்கிய அவர், “ஏன் தாமரை இலையில் நீர் போல இருக்கீங்க?” எனக் கேட்டார். இனி, லாஸ்லியா அப்படி இருக்க மாட்டார் என நினைக்கிறேன்.தொடர்ந்து மதுமிதா பேசிய ரேப், அப்யூஸ் பற்றிய பழைமைவாதக் கருத்துகளுக்கு, “எப்பவும் ஒரு தப்பு நடந்தா பாதிக்கப்பட்டவங்களைத் தப்பு சொல்லாதீங்க” என வன்மையாகக் கண்டித்தார். “ஏன் பிரச்சனை நடக்கும் இடத்தில் அமைதியாக இருந்து விட்டு வெளியே சென்று பாராட்டுகிறீர்கள்?” என தர்ஷனின் ரகசிய ஆதரவாளர்களைக் கொட்டு வைத்தார். ஆனால், Fish market என்பது கேவலமானதல்ல அதற்கு கோபப்படத் தேவையில்லை என வனிதாவிடம் சொன்ன கமல், அப்படி ஏன் சொன்னீர்கள் என அபிராமியிடம் கேட்க மறந்து விட்டார்.

பின்னர் வனிதாவிற்கும், தர்ஷனுக்குமான பஞ்சாயத்தைப் பற்றிப் பேசிய கமல் இருதரப்பு நியாயங்களையும் கேட்டுவிட்டு, ” நீங்கள் பேசுவதைப் போலவே மற்றவர் பேசுவதைக் கேட்கவும் கற்றுக் கொள்ளுங்கள்” என வனிதாவிடம் அறிவுரை சொல்லி விட்டு, நேற்று முளைத்த காளான், ஆண் பெண்ணிடம் குரலுயர்த்திப் பேசக் கூடாது போன்ற வார்த்தைகளை விட்டதையும் கண்டித்தார்.

இதில் முக்கியமான விஷயம், தர்ஷனுக்கு ஆதரவாக எழுந்த கைதட்டல்களும், ‘தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை’ என கமல் அவரைப் பாராட்டியதும் தான். பொதுவாக மக்களிடையே சுயமாக சிந்திக்கும், சுதந்திரமாக இயங்கும், ஆண்களை எதிர்த்துப் பேசும் பெண்களை அடங்காதவர்களாகவும், வில்லிகளாகவும் பார்க்கும் குணம் உண்டு. நம் சினிமாக்கள் அந்த நல்ல காரியத்தை அச்சுப் பிசகாமல் செய்துள்ளன. அப்படிப்பட்ட பெண்களை தனி ஆளாக எதிர்க்கும் ஆண் அவர்களைப் பொறுத்தவரையில் ஹீரோ. சும்மாவா ரஜினி சூப்பர்ஸ்டார் ஆனார். இதே மனநிலை தான் இப்போது பரவலாக தர்ஷனுக்கு ஆதரவாக எழும்பும் குரல்களுக்குப் பின்னாலும் உள்ளது. இதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு தர்ஷன் வரும் நாட்களில் களமாடுவார் எனத் தோன்றுகிறது.

பிறகு ஒருவரைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக இன்றே வெளியேற்றிவிடலாம் எனக் கூறிய கமல். கார்டை உள்ளேயே அனுப்பி வைத்தார். அதில் மோகன் வைத்யா பெயர் இருக்க, அழுது கொண்டே பெண்களை கட்டிப்படித்து முத்தம் தந்து விடைபெறத் தொடங்கினார். கமலே கடுப்பாகி, “போதும்யா நீங்க வெளியேல்லாம் போகல. நிறுத்துங்க” எனக் கூறி மோகன் காப்பற்றப்படுவதாக அறிவித்தார். மருத்துவ முத்தம் போல இவரது ஆறுதல் தடவல்களும், முத்தங்களும் என்று பெரிதாக வெடிக்கப் போகிறதோ தெரியவில்லை. இதெல்லாம் அப்யூஸ் என்று அவருக்கு தயவு செய்து புரிய வைங்க பிக் பாஸ்.

22 ஆம் நாளில் நேரடியா தர்ஷன்-மீரா காதல் (!?) பஞ்சாயத்துக்கு வந்தார் கமல். ஆமாம், அப்படி ஒரு கதை நடந்திருக்கிறது. நமக்கு கதைக்குதவாத கவினை மட்டும் காட்டிவிட்டு மெய்ன் பிக்சரை ஒளித்து வைத்திருக்கிறார்கள். வழக்கம் போலத் தான். வெளியே காதலி காத்துக் கொண்டிருக்கும் ஆண். உள்ளே காதலில் கசிந்துருகும் பெண். கடந்த இரண்டு சீசன்களிலும் பார்த்த அதே கதை தான். ஆனால், எப்படி இவ்வளவு சீக்கிரமாக ஒருவரோடு காதல் கொள்ளத் தோன்றுகிறது? அதுவும் பெண்களுக்கு மட்டும்? பெண்கள் பொதுவாகவே பாதுகாப்போடு இருக்க விரும்புபவர்கள். எந்தச் சூழலிலும் தனக்குத் துணை நிற்க, தன்னைப் பாதுகாக்க, நினைப்பதை நம்பிக்கையாகப் பகிர்ந்து கொள்ள ஒரு ஆண் உறவு அவளுக்குத் தேவைப்படுகிறது. இது தான் அவசரஅவசரமாக பெண்கள் ஒரு உறவில் இறங்கத் துடிக்கும் காரணம். அதுவும் பிக் பாஸ் வீடு போன்ற குறுகிய வட்டத்தில் தனக்காகப் பேசும் ஒருவர் பக்கம் மனம் சாய்வது இயல்பு தானே.

இறுதியாக எவிக்சன் ப்ராசசில் யாரும் எதிர்பாராத விதமாக வனிதா எவிக்ட் செய்யப்பட்டார் சென்ற வருடங்களின் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை வைத்துப் பார்த்தால் கூட வனிதா எவிக்ட் ஆக வாய்ப்பேயில்லை. காயத்ரியும், ஜூலியும் எத்தனை நாள் இருந்தனர். ஐஸ்வர்யா எப்படி இறுதி நாள் வரை நீடித்தார் என்பதெல்லாம் நாம் அறிந்தது தான். எனக்கென்னவோ வனிதா அவரது சொந்தப் பிரச்சனைகளின் காரணமாகவே வெளியேற்றப்பட்டிருப்பார் எனத் தோன்றுகிறது. ரேஷ்மா, சாக்ஷி, ஷெரின் மூவரும் உண்மையிலேயே வனிதாவுக்காக கண்ணீர் விட்டனர். மோகன் அழுபவர்களை மீண்டும் கட்டிப்பிடிக்கத் தொடங்கினார்.

வெளியே வந்தவுடன் வனிதாவை மக்களோடு அமர வைத்து, அவரைப் பற்றி ஹவுஸ் மேட்ஸ் என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்க வைத்தார். பெரும்பாலும் வீட்டில் பிரச்சனை நடக்க வனிதா தான் காரணம் என்ற கருத்து நிலவியது. அதில் ரேஷ்மா கூறிய கருத்து யோசிக்க வைத்தது. “தனியாக யாருடைய ஆதரவுமின்றி ஆண் துணையின்றி சமூகத்தில் போராடி வரும் பெண்ணின் குரல் அப்படித் தான் சத்தமாக இருக்கும் அதுவே எங்களுக்கான பாதுகாப்பு. ஆமாம், வனிதா தவறு செய்வார். ஆனால் அதை எல்லோரும் தான் செய்வார்கள். ஆனால் வனிதாவின் வாழ்க்கை வேறு” என்றார் ரேஷ்மா.

பின்பு உங்களைப் போன்ற தாய்மார்களுக்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு வனிதா அளித்த பதில் மிக முக்கியமானது. ” வாழ்க்கை என்பது கடமை அதை நாம் செய்து தான் ஆக வேண்டும். எந்தக் கலாச்சாரங்களிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒரே ஒரு திருமணம் செய்து என்ன பிரச்சனை வந்தாலும் சண்டை நடந்தாலும் அந்த பந்தத்தைக் கட்டாயத்தால் நீடித்து எந்தப் பயனும் இல்லை. சொல்லப் போனால் உங்கள் குழந்தைகளை அது பாதிக்கவே செய்யும். அதை விடப் பிரிந்து சென்று மனதுக்கு பிடித்தபடி வாழ்வது நல்லது. யாருக்கும் எதற்கும் பயப்படாமல் மனதிற்குத் தோன்றுவதை செய்யுங்கள். இரவு நிம்மதியாகத் தூங்க முடியும். என் குழந்தைகளுக்கு நான் சொல்வது அது தான். படிப்பு வரவில்லையா கவலைப்படாதீர்கள் அது மட்டுமே வாழ்வல்ல. காதலியுங்கள். திருமணம் செய்து கொள்ளுங்கள். பிடிக்கவில்லையென்றால் தைரியமாகப் பிரிந்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையை நிம்மதியாக வாழுங்கள்.” இது தான் வனிதா பேசியதன் சாராம்சம்.

இந்த உலகம் வனிதாக்களைப் புரிந்து கொள்ள, ஏற்றுக் கொள்ள இன்னும் பல யுகங்கள் பிடிக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் ஒரு போதும் அவர்கள் கவலைப்படப் போவதில்லை.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close