கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 19 – தனிமைப்படுத்தப் படுவாரா வனிதா?

மித்ரா

பதினெட்டாம் நாள் விட்ட இடத்திலிருந்து துவங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட். “கவினும் லாஸ்லியாவும் ஒரே தட்டில் சாப்பிட்டதைப் பார்த்து தான் சாக்ஷி ரியாக்ட் ஆனார்” என மீரா சொன்னதாக மதுமிதா சொல்லிக் கொண்டிருந்தார். மீரா “அப்படியொரு வார்த்தை என் வாயிலிருந்து வரவேயில்லை” என்ற பாணியில் பதறிக் கொண்டிருந்தார். யாரோ எப்டியோ போங்க என கவினும் சேரனும் சிறைக்குள் சென்று விட்டனர். இரவு முழுக்க சிறையில் கழித்த இருவரும் காலையில் தான் வெளியே வந்தனர்.

இடையில் மீராவைப் பற்றிச் சொல்ல சொன்னதற்கு தர்ஷன் பச்சோந்தி எனச் சொல்லி விட்டார். அதற்கு அவரை தனியே அழைத்துச் சென்று பேசினார் மீரா.

காலையில் “வாட்ட கருவாட்…” பாடலோடு பத்தொன்பதாம் நாள் துவங்கியது. இந்த லாஸ்லியா வேறு சலிக்காமல் எல்லாப் பாடலுக்கும் ஒரே ஸ்டெப்பை போட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு மார்னிங் ஆக்டிவிட்டிக்காக லாஸ்லியா ஹவுஸ்மேட்ஸிற்கு பட்டாம்பூச்சி பிடிக்கக் கற்றுத் தந்து கொண்டிருந்தார்.

பின்னர் லக்ஸரி பாய்ண்ட்ஸை அறிவித்த பிக் பாஸ், டாஸ்க்கின் மூலம் கிடைத்த 3000 புள்ளிகளில் 500 புள்ளிகள் போட்டியாளர்கள் ஆங்கிலம் பேசியதற்காக குறைக்கப் படுவதாக அறிவித்தார். அடுத்து கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு டேஞ்சர் காய்ன் கொடுக்கப்பட்டது. பஸர் தொடங்கியதும் அதை போட்டியாளர் மற்ற போட்டியாளர் மீது ஒட்ட வேண்டும். மீண்டும் பஸர் அடிக்கும் போது அது யார் கையில் இருக்கிறதோ அவர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்.

“ஒரு குறிப்பிட்ட ஏரியாவிற்குள் இருந்தால் பரவாயில்லை. முழு வீட்டிலும் ஓடினால் கஷ்டம்” எனக் கூறினார் வனிதா. ” அதெல்லாம் இல்ல எங்கே வேணாலும் ஓடலாம். ” எனக் கூறினார் மோகன் வைத்யா. இதற்கு பெயர் தான் சொந்த செலவில் சூனியம் வைப்பது. முதலில் மோகன் மீது வனிதா காயினை எறிந்து விட, நீச்சல் குளத்தை சுற்றி ஓடிய வனிதாவையோ சாக்ஷியையோ மோகனால் பிடிக்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில், “என்னால முடியல. நான் அவுட் ஆகிட்றேன். என்கரேஜ் பண்ணா பரவால்ல நான் ஜெயிக்க கூடாதுனு நெனைச்சா என்ன செய்றது” எனக் கூறி ஓரமாக உட்கார்ந்தார்.

அதாவது ஒரு பெரிய மனுசன் ஓடுறாரேனு அவுங்களே வந்து இவர் கிட்ட காய்னை வாங்கிட்டு அவுட் ஆய்ரனுமாம். அதுக்கு பேர் தான் என்கரேஜ் பண்றதாம். போட்டிக்கு அர்த்தம் தெரியுமா என்றே தெரியவில்லை. இதற்கே இப்படி மூச்சு வாங்கினால் நாள் போகப் போக பிக் பாஸ் வீடு ரத்த பூமி ஆகுமே அப்போது என்ன செய்வீர்கள் வைத்யா சார்.

அடுத்ததாக பஸர் சத்தம் கேட்டதும் நேக்காக வனிதா மீது காய்னை ஒட்ட வைத்து விட்டு ஓடி விட்டார் சாக்ஷி. கொஞ்ச நேரம் துரத்திப் பார்த்த வனிதா, “திஸ் கேம் ஈஸ் நாட் ஃபேர்” என டென்சனாகி உட்கார்ந்து விட்டார். “காயினில் காந்தம் கிடையாது. அருகில் போய்த் தான் ஒட்ட வேண்டும். இவ்ளோ பெரிய வீட்டில் அது சாத்தியமேயில்லை. ” என வனிதா வழக்கம் போலக் கத்திக் கொண்டிருக்க, “நான் அப்டி தான வச்சேன் அவுங்க மேல” எனச் சொல்லி கேமில் இருந்து விலகாமல் நின்றார் சாக்ஷி.

இடையில் தலையிட்ட தர்ஷன், “என்ன நாட் ஃபேர் அப்பாவை அவுட் பண்ணப்போ தெரியலையா நாட் ஃபேர்னு” என ஆர்டரில்லாமல் ஆஜரானார். “தோ பாரு நான் ஒன்னும் உன் கிட்ட பேசலை தேவையில்லாம தலையிடாத. நீ போட்டியாளரா இல்லைல” என்றார் வனிதா. ” நான் என் கருத்தை சொல்லுவேன். போன வாரம் நாங்க போட்டியில் இருந்தப்போ நீங்க தலையிட்டீங்க தான. பாத்ரம் கழுவ வா னு” என பதிலுக்கு கத்தினார் தர்ஷன். தன் முன்னால் யாருமே குரலுயர்த்துவதை விரும்பாத வனிதா, வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார் பிக் பாஸ் அழைத்து இவன் பேசியதைக் கண்டிக்காத வரையில் நான் போட்டியில் இல்லை என மைக்கை கழட்டி வைத்தார். “ஆம்பளைத் திமிரில் பேசுறான். நேத்து மொளைச்சவன். உன் சவுண்ட் வெளியே வரனும்னா என் கிட்ட வம்புக்கு வருவயா?” என வார்த்தைகளை அள்ளி வீசினார்.

உள்ளே வனியக்கா வனியக்கா எனப் பேசி விட்டு வெளியே சென்று அவ இவ எனப் பேசினார் தர்ஷன். நீ செய்தது சரி தான் என தர்ஷன் பின்னால் ஒரு அணி திரண்டது. ஷெரின் வேறு கொஞ்சு தமிழில் அவரை சமாதானம் செய்யத் தொடங்கினார். எதையுமே கண்டு கொள்ளாத பிக் பாஸ், சாக்ஷி வென்று விட்டதாகவும் அவர் தான் வரும் வார கேப்டன் எனவும் அறிவித்தார்.

வீட்டில் இன்னொரு எதிர் குரல் ஒலிக்கத் தொடங்கியிருப்பது நல்லது தான். தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆரம்பத்தில் இருந்தே வனிதாவிற்கு எதிரானவர்கள். அதனால் தர்ஷன் எதிர்த்ததில் எந்த வித ஆச்சர்யமும் இல்லை. உண்மையில் இப்படியான வாய்ப்பைத் தான் அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். லாஸ்லியா இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சட்டென பாட்ஷாவாக மாறிய மாணிக்கத்திற்கு கையில் முத்தம் கொடுப்பது போல தர்ஷன் பின்னால் அனைவரும் அணி திரண்டது தான் ஆச்சர்யப் படுத்தியது. அதுவும் உள்ளே எதுவும் சண்டை என்றால் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டியது. வெளியே வந்து நீ பேசியது சரி எனக் கை கொடுக்க வேண்டியது. உனக்கு நியாயம் எனத் தோன்றும் ஒரு விஷயத்திற்காக அப்போதே பேசலாமே. பேச விடாமல் எது தடுக்கிறது? அது தான் சூது.

சடாரென்று அனைத்தும் மாறிப் போய் தனியாக உள்ளே அமர்ந்திருந்த வனிதாவைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆனால் என்றைக்காக இருந்தாலும் அது தான் அவர் நிலைமை. தனக்கு நியாயமெனப்படும் ஒன்றிற்காக லாபநஷ்டக் கணக்கெல்லாம் பார்க்காமல் குரல் கொடுக்கும் ஒருவருக்கு அது தான் நிலைமை. தன் விருப்பு வெறுப்புகளைக் கூட சுற்றும் முற்றும் உற்று நோக்கித் தீர்மானிக்கும் சமூக விலங்கான மனிதனுக்கு ஒரு போதும் வனிதாக்களோடு ஒத்துப் போக முடியாது. இந்த வீட்டிலேயே எவிக்சனைப் பற்றி கவலைப் படாமல் இருக்கும் ஒரே ஆள் வனிதா தான். அவரின் பலமும் பலவீனமும் அது தான்.

பிறகு ஒருவாறு தன்னைத் தேத்திக் கொண்ட வனிதா, மைக்கை மாட்டிக் கொண்டு தர்ஷனிடம் பேசச் சென்றார். மீண்டும் “நீங்க மட்டும் நான், சாண்டி, அபி கேப்டன் போட்டில இருந்தப்போ இடைல தலையிட்டீங்க” என அனைவரும் தரமான பாய்ண்ட் எனப் பாராட்டிய பாய்ண்ட்டை தூக்கி வந்தார் தர்ஷன். “நல்லா புரிஞ்சுக்கோ. நீங்க போட்டியில விளையாடிட்டு இருந்தப்போ தான் நான் தலையிட்டேன். நீ விட்டுக் கொடுத்துட்டு போறப்போ இல்லை நீ விளையாடித் தான் ஆகனும்னு நான் சொன்னேனா?” என அந்தப் பாய்ண்டை உடைத்தார் வனிதா. பிறகு சேரன் வந்து, “உன் உருவத்துக்கும் குரலுக்கும் நீ சத்தமாக பேசும் போது மரியாதைக் குறைவா பேசுறா மாதிரி இருக்கு. அதை மாத்திக்கோ. இப்போ சாரி சொல்லு” என நிலையை சுமூகமாக்க இருவரும் கை கொடுத்துக் கொண்டனர்.

ஆனால், “ஆம்பளைத் திமிரில் பேசுறான்” எனும் வனிதாவின் இந்த எண்ணம் ஆதரிக்கத்தக்கதல்ல. பெண் கத்தும் போது ஆண் அமைதியாகத் தான் இருக்க வேண்டும். மீறி ரியாக்ட் செய்தால் ‘பெண்ணென்றும் பாராமல்…’ எனத் தொடங்குவதெல்லாம் பாகவதர் காலத்துக் கதை. ஆண் பேசும் போது பெண் அடங்கியிருக்க வேண்டும் என்றால் வனிதா ஏற்றுக் கொள்வாரா? அப்படித் தான் இதுவும். பாகுபாடின்றி அனைவரும் கருத்தைப் பகிரலாம். அதில் கண்ணியம் இருக்க வேண்டியதே முக்கியம்.

பிறகு “வனியக்கா அப்டி தான். கோபமா இருக்கும் போது நம்ம எதும் சொன்னா ரொம்ப ஹைப் ஆகி வார்த்தையை விடுவாங்க. ஆனா, அப்றம் அவுங்களே சாரி சொல்லி அதுக்கப்றம் அதெல்லாம் மறந்துட்டு ரொம்ப பாசமா பாத்துப்பாங்க” என மீரா தர்ஷனுக்கு சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையில் இதை சாக்ஷியோ ஷெரினோ செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தனியாகச் சென்று கவினுடன் சேர்ந்து வனிதாவைப் பற்றி புறம் பேசிக் கொண்டிருந்தார்கள். மனித மனம் எத்தனை விந்தையானது.

இன்றைய நாளின் Moment of the show, விளையாட்டில் இருந்து விலகுகிறேன் எனச் சொல்லி மைக்கை கழட்டிய பிறகு யாருமின்றி வனிதா தனியே அமர்ந்திருந்தது தான். இது வனிதாவை இனி கொஞ்சம் யோசிக்க வைக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் அசரும் ஆள் அவர் இல்லை என்பது வேறு விஷயம்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close