கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 18 – ஒரு வழியா மொக்க டாஸ்க் முடிஞ்சுருச்சே..!

மித்ரா

பிக் பாஸ் வீட்டின் டிஜே ரஜினி ரசிகராக இருப்பார் போல. ‘பேட்ட பராக்….’ பாடலோடு தொடங்கியது வீட்டின் பதினெட்டாம் நாள்.12
மார்னிங் ஆக்டிவிட்டிக்காக வீட்டில் இருப்பவர்களைப் பற்றிய பாடல்களை கவினும் சாண்டியும் பாட வேண்டும் என பிக் பாஸ் செய்தி அனுப்பியிருந்தார். ஏற்கனவே நமக்குத் தெரிந்த பாடல்களோடு, “எங்கள் வீட்டில் வீட்டில் எல்லா நாளும் சண்டை தான்…’ என்ற பாடலைப் பாடி அதகளப்படுத்தினர் கவினும் சாண்டியும்.

பின்னர் கவின், சாண்டி, மீரா மூவரையும் கன்ஃபெசன் ரூமிற்கு அழைத்தார் பிக் பாஸ். கவின், மீரா இருவரும் காவல்துறையைச் சேர்ந்தவர்களாகவும், சாண்டி ஆவிகளுடன் பேசும் சக்தி இருப்பவர்களாகவும் நடந்து கொண்டு வீட்டில் நடக்கும் கொலைகளைச் செய்வது யார் எனக் கண்டறிய வேண்டும் எனக் கூறவும் விசாரணை தொடங்கியது. சாண்டியும் ஒரு காவி உடையை அணிந்து கொண்டு சாமியாரானார்.

ஆவிகள் மதுமிதா, லாஸ்லியா மீது தான் சந்தேகம் இருப்பதாக உறுதியாகக் கூறின. அவர்களைத் தனியே அழைத்துச் சென்று விசாரித்தனர் காவலர்கள்.

படிக்கவே கடுப்பா இருக்குல்ல? எனக்கு பார்க்க எப்படி இருந்திருக்கும்னு யோசிங்க.

திடீரென வனிதாவை கைபேசியில் அழைத்த பிக் பாஸ், கவினின் துப்பாக்கியைத் திருடி அவரைக் கொலை செய்யுமாறு சொல்ல.. அதையும் வனிதா முகேன் அணி சிறப்பாக செயல் படுத்தியது. கவினுக்கு துப்பாக்கி காணாமல் போனது கூடத் தெரியவில்லை.

ஒருகட்டத்தில் டென்சனான சேரன், “இது என்ன கேம் எப்டி விளையாடுறாங்க எதுமே புரியல. எப்டி விளையாட முடியும். சம்பந்தமே இல்லாம இவுங்கலாம் மூணு நாளா வெயில்ல கெடக்குறாங்க. லக்ஸரி பாய்ண்டும் வேணாம் ஒன்னும் வேணாம் கேமை ட்ராப் பண்ணிருவோம்” என்றார். ” இத்தனை நாள் பட்ட கஷ்டம்(!) வீணாப் போய்ரும்” என வாதாடினார் கவின். வழக்கம் போல வனிதா வந்து, “நாமெல்லாம் பிக்னிக் வரல பிக்பாஸ் வீட்டுக்கு வந்துருக்கோம். எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு அக்ரிமெண்ட்ல சைன் பண்ணி அதுக்கு சம்பளமும் வாங்கிட்டு தான் வந்துருக்கோம். அப்டிலாம் புடிக்கலைனா போக முடியாது” எனச் சொன்னார். இருந்தாலும் சேரன் சென்று, “புரியாத கேமைத் தொடர முடியாது” என பிக் பாஸிடம் முறையிட்டார்.

சிறிது நேரத்தில், கவின் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மீராவிற்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பிறகு அனைவரும் லிவிங் ஏரியாவிற்கு வரச் சொன்ன பிக் பாஸ், ” கொலையாளி இவர் தான் என யார் மீதாவது சந்தேகம் உள்ளதா?” என மீராவிடம் கேட்க அவர், “சந்தேகம்லாம் இல்ல கண்டிப்பா மதுமிதாவும் லாஸ்லியாவும் தான்” எனக் கூறினார். உடனே வனிதாவின் கைபேசி அடித்தது. எல்லாரும் இருக்கையில் எப்படி எடுப்பது என முதலில் யோசித்த வனிதா, அடுத்த நொடி புரிந்து கொண்டு கைபேசியை எடுத்தார். “நீங்கள் யார் உங்கள் கூட்டாளி யார் என்பதை அறிவித்து விடுங்கள்” என்றதும் டாஸ்க் முடிந்தது. பின்னர், வனிதாவுக்கு எப்படி உத்தரவு கொடுக்கப்பட்டது அவர் எப்படி கொலை செய்தார் என வீடியோ ஒளிபரப்பினார் பிக்பாஸ்.

பிறகு டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட இரண்டு பேரைத் தேர்வு செய்யும்படி ஹவுஸ் மேட்ஸிடம் கேட்டுக் கொண்டார் பிக் பாஸ். சந்தேகம் வராமல் கொலைகளை அரங்கேற்றிய வனிதாவும், முதல் நாளில் இருந்து மயானத்தில் வசித்த சாக்ஷியும் சிறப்பாக செயல்பட்டாதாகச் சொல்லப்பட சின்னப்புள்ளத் தனமாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார் மோகன் வைத்யா. பிறகு சேரன், சீனியர் சிட்டிசன் என்பதால் அவரைத் தேர்ந்தெடுக்கலாம் எனச் சொன்ன பிறகு பால் விளம்பரத்திற்கு வரும் பசுமாடு போலச் சிரித்தால் மோகன். மொத்தமாக இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளராக சாக்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் மூவரும் அடுத்த வாரத்திற்கான கேப்டனாகப் போட்டியிடுவார்கள் என அறிவித்தார் பிக்பாஸ். உடனே இந்த மோகன் வைத்யா சந்தோஷத்தில் குதித்தார் பாருங்கள். அதுக்கு மொத இந்த வாரம் நீ எவிக்ட் ஆகாம இருக்கனும் பெருசு.

அடுத்ததாக, இந்த வாரம் மோசமாகச் செயல்பட்ட இரண்டு பேரைத் தேர்ந்தெடுக்கும் படி கூறினார் பிக் பாஸ். சேரன் தானாக முன் வந்து கடைசி நேரத்தில் நான் சரியாக ஒத்துழைக்கவில்லை என வண்டியில் ஏறினார். இன்னொருவராக சரவணனைத் தேர்ந்தெடுத்தார் அபிராமி. “எப்பயும் போல அமைதியாவே தான் இருந்தீங்க. ஆக்டிவா இல்ல” என அதற்குக் காரணம் சொன்னார் அபிராமி. ஆனால், சரவணன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பிரச்சனையைக் கையிலெடுத்த வனிதா, “அவர் ஆக்டிவாகத் தான் இருந்தார். சேரன் கூட நடந்த பிரச்சனைக்குக் காரணம் கவின் தான். அவன் எமோசனலா அட்டாச் ஆய்ட்டதால தான் பிரச்சனை வந்துச்சு. ஒரு போலிஸ் காரனா இருந்துட்டு துப்பாக்கியை நான் திருடுனதை கூட கண்டுபிடிக்க முடியல. அதனால அவன் தான் மோசமா செயல்பட்ட இன்னொரு ஆள்” எனச் சொன்னார். கவினும் அதை ஒப்புக் கொண்டார். ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்ல என்ன செய்வதென்று குழம்பிப் போன அபிராமியை அழைத்த பிக் பாஸ், “வீட்டிலுள்ளவர்கள் ஒரு மனதாக என்ன சொல்கிறார்களோ அதைச் செய்யுங்கள்” என்றார்.

“கவினுக்குப் பதிலாக நான் போகிறேன். நான் தான் எல்லாத்துக்கும் காரணம்” என சாக்ஷி களமிறங்க, நான் மட்டும் என்ன தக்காளித் தொக்கா என லாஸ்லியா சேரனுக்குப் பதிலாக போவதாக நிற்க, வனிதா, “அப்டியெல்லாம் யாரையும் திடீர்னு நல்லவராக விட மாட்டோம். இது ஒன்னும் யாரு தியாகினு பாக்குற கேம் இல்ல. அடங்குங்கடா டேய்” என்ற ரீதியில் முடித்து விட்டார். “அவளைப் பேச விடுங்களேன் ப்ளீஸ்” என லாஸ்லியாவிற்காகக் கத்தினார் அவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருந்த மதுமிதா.

பெருசா எதுமில்லைங்க இதுல தேர்ந்தெடுக்குற ரெண்டு பேரும் அடுத்த அறிவிப்பு வரும் வரை வெளியே இருக்கும் ஜெயிலில் இருக்கனும். அதுக்கு எதுக்கு சரவணன் அந்தமான் சிறை ரேஞ்சுக்கு ஃபீல் பண்றாருனு உங்களுக்கு தோணலாம். சரவணனுக்கு நம்ம வேலை செய்யலைனு சொல்லிட்டாங்க அப்டிங்குறதை விட சேரன் கூட ஜெயில்ல இருக்கனும் அதான் பிரச்சனை.

பின்னர் சம்பந்தமேயில்லாமல் லாஸ்லியா கோபித்துக் கொண்டு சென்றது. அதான் பின்னால் சென்று உப்புச்சப்பில்லாமல் சமாதானம் செய்தது கவின். “யாருக்குமே நான் கேம்ல தான் இருந்தேன்னு எனக்கு சப்போர்ட் பண்ண தோணலைல” என கோபமாக வருத்தப்பட்டார் சரவணன். இந்த நிலைமை நமக்கும் வந்தாலும் வரும் என நினைத்து, “ஆமா ஏன்டா யாருமே சப்போர்ட் பண்ணல” என சரவணன் பக்கம் பேசினார் மோகன் வைத்யா.

நேற்றைய கோபத்தின் மூலம் பிக் பாஸ் வீட்டில் தன் இருப்பை மேலும் சில வாரங்களுக்கு நீட்டித்திருக்கிறார் சரவணன். டாஸ்க் நேற்றோடு முடிந்து விட்டது. இன்றைய எபிசோடில் கன்டென்டை எதிர்பார்க்கலாம். காத்திருப்போம்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close