கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 15 – மீன் மார்க்கெட் அத்தனை கேவலமா மிஸ்.அபிராமி ஐயர்?

மித்ரா

“வேணாம் மச்சா வேணாம் இந்த பொண்ணுக காதலு…” என்ற அரிய பெரிய தத்துவப் பாடலோடு தொடங்கியது பிக் பாஸ் வீட்டின் 15 ஆம் நாள்.

விடிந்தும் விடியாததுமாக மீண்டும், ” உனக்காக நாங்கள் சண்டை போட்டோம் நீ ஏன் மதுமிதாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை” என அபிராமியைத் தாளிக்கத் தொடங்கியிருந்தனர் ஷெரினும், சாக்ஷியும். அபிராமி எத்தனை டிசைன் டிசைனாக சமாதானம் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராகவேயில்லை. கட் செய்தால் அங்கு, “ஆண்டவா இந்த வீட்ல நடக்குற அநியாயங்களை நான் தட்டிக் கேட்கனும். அதுக்கான தைரியத்தை எனக்கு கொடு” என்று ஸ்பீக்கரில் கேட்கும் படி சத்தமாக கடவுளுக்கு மனுப் போட்டுக் கொண்டிருந்தார் மதுமிதா. முதலில் கலாச்சாரக் காவல் மட்டும் தான் இப்போது அநீதிக்கு எதிராகப் பொங்குதலும் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது.


கேப்டன் பொறுப்பிற்கான போட்டியாளர்களான அபிராமி, சாண்டி, தர்ஷன் மூவருக்குமான போட்டியை அறிவித்தார் பிக்பாஸ். மூவரும் ஒரே பெல்ட்டில் தங்களை இணைத்துக் கொண்டு வேலைகளைத் தொடர வேண்டும். யார் கடைசி வரை தொடர்கிறாரோ அவரே கேப்டன். மதுமிதா அவர்கள் மூவரிடமும் சென்று, “யார் கேப்டனா வந்தாலும் சரி லைட் ஆஃப் பண்ணப்றம் பேசிச்சிரிக்க வேணாம்னு சொல்லுங்க. டிஸ்டர்பா இருக்கு” என்றார். நல்லவேளை லைட் ஆஃப் பண்ணப்றம் பொண்ணுகளும் பசங்களும் பேசிக்க வேணாம்னு சொல்லுங்கனு சொல்லாமல் விட்டார். இப்போது என் பயமெல்லாம் இந்த மீடியாக்காரர்கள் மதுமிதா எவிக்ட் ஆகி வெளியேறியதும் அவரிடம் சென்று, “ராத்திரியில் பிக்பாஸ் வீட்டில் நடப்பது என்ன?” எனக் கேட்பார்களே அதற்கு மதுமிதா என்ன சொல்வார் என்பது தான். கடைசியில் தர்ஷனும், சாண்டியும் விட்டுக் கொடுத்து அபிராமியை கேப்டன் ஆக்கினர்.

வீட்டின் பிரச்சனைகளைக் களைவதற்கான பேச்சு வார்த்தையை முதலில் மதுமிதாவில் இருந்து தொடங்கலாம் என நினைத்த அபிராமி அவரிடம் அமர்ந்து பேசத் தொடங்கினார். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை மதுமிதா பேசிய அனைத்துமே உச்சகட்ட அபத்தங்கள். ” நிறைய ரேப் அப்யூஸ் எல்லாம் கேள்விப்படுறோம். நம்ம தான் பத்ரமா இருந்துக்கனும். மீரா கிட்ட கூட ஒழுங்கா உக்காரு ஒழுங்கா உக்காருனு சொல்லிட்டே இருப்பேன். அவ எனக்குத் தெரியும்னு சொல்லுவா. ஆனா சொல்ற கடமை எனக்கு இருக்கு. ஷெரின், சாக்ஷி அணியும் ஆடைகள் சரியில்லை. நான் செஞ்சது கரெக்ட் தான் மக்கள் சொல்லிட்டாங்க” என ஆத்தினார். மதுமிதா பேச்சில், தான் செய்வதெல்லாம் சரி மக்கள் தனக்கு ஆதராவாக இருக்கிறார்கள் என்ற ஆணவம் தொனித்தது. அத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அபி, ” நீங்கள் பேசுவது மற்றவர்களை டீக்ரேட் செய்வது போல் உள்ளது. சொல்லும் விதத்தை மாத்திக்கங்க ” என அபி சொல்ல, “எனக்கு மக்கள் தீர்ப்பு சொல்லிட்டாங்க” என மீண்டும் கூறினார் மதுமிதா.

இதற்கிடையில், மதுமிதாவிற்கு பார்வையாளர்களிடம் இருந்த வரவேற்பைப் பார்த்துத் தான் அபிராமி இப்படி கட்சி மாறி விட்டார் என நினைக்கத் தொடங்கி விட்டனர் ஷெரின் மற்றும் சாக்ஷி. பாத்ரூமில் மீராவும் சாக்ஷியும் பேசிக் கொண்டிருப்பதை அபி பார்த்து விட, மதுமிதாவுடன் அபிராமி பேசிக் கொண்டிருப்பதை சாக்ஷி பார்த்து விட ஒரு மந்தையிலிருந்த ஆடுகள் இரு வேறு கோணத்தில் சிந்திக்கத் தொடங்கின.

பின்பு மதுமிதா கூறிய லைட்டை அணைத்தவுடன் பேச வேண்டாம் பிராதைத் தூக்கிக் கொண்டு வனிதா அணியிடம் சென்றார் அபிராமி. அதற்கெனவே காத்திருந்தது போல ” அதெல்லாம் முடியாது. அப்டில்லாம் பிக்பாஸ் ரூல்ஸ்ல கிடையாது.” என்றார் வனிதா. உடனே மதுமிதாவிடம் பேசிய விசயத்தை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள எத்தனித்தார் அபி. ” இதெல்லாம் தேவையில்லாத டாபிக். அவ கிட்ட அட்வைஸ் கேட்டுக்கிற அளவுக்கு ஆகிப் போச்சா” என வரிந்து கட்டினார் வனிதா. எஸ்கேப் ஆக நினைத்த அபி, “நான் என் ஃப்ரண்ஸ் கிட்ட தான் பேசனும். நீங்க ஃப்ரீயா இருக்கப்ப வாங்க பேசலாம்” என சாக்ஷி ஷெரினிடம் சொல்லி விட்டு நடையைக் கட்டினார். “அதெப்டி போவ நீ. நானும் தான கேட்டுட்ருந்தேன்” என வனிதா கத்தத் தொடங்க, “இப்டியே பேசிட்ருந்தா வீடு Fish market மாதிரித் தான் இருக்கும்” என அபி சொல்ல, வனிதாவுக்கு வந்ததே கோபம் “எது Fish market ஆ? உனக்காக பேசுறப்போ தெரிலயா இது மீன் மார்க்கெட்னு?” எனக் கட்டியேறத் தொடங்கினார். அபி வேறு வழியே இல்லாமல் அந்த வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டதும் தான் ஓய்ந்தார்.

முதல் சீசனில் “சேரி பிஹேவியர்” என்றொரு வார்த்தை சர்ச்சைக்குள்ளானது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அதைப் போன்றது தான் இந்த “மீன் மார்க்கெட்” கூட. சமூகவலைதளங்களில் பரவலாக வனிதாவை மட்டும் திட்டி வருகின்றனர். “ஏன் மீன் மார்க்கெட் அத்தனை கேவலமா? எதற்குக் கோபப்படுகிறார்” என. ஆனால், அதைப் பிரயோகித்த அபிராமியும் கண்டிக்கப்பட வேண்டியவர் தான். இதை இங்கு சொல்லலாமா எனத் தெரியவில்லை. ஆனால், மறுப்பதற்கு வழியே இன்றி அந்த வார்த்தை பார்ப்பனிய சமூகத்தின் பொது புத்தியையே குறிக்கிறது. அதைக் கேவலமாகக் கட்டமைத்து அருவறுக்கத்தக்க ஒன்றாக மாற்றி வைத்திருப்பது அவர்கள் தான். அதற்காக வனிதா கோபப்பட்டதும் தவறு தான். ஆனால், அங்கே விஷயம் ‘மீன் மார்க்கெட்’ அல்ல ‘திருவிழா சத்தம்’ எனச் சொல்லியிருந்தால் கூட வனிதா அப்படித் தான் ரியாக்ட் செய்திருப்பார். வனிதாவை ரியாக்ட் செய்ய வைத்தது தனக்கெதிராக குரல் எழுப்புகிறாள் என்ற ஈகோ தானே தவிர அந்த வார்த்தை அல்ல. ஆனால், தன் வார்த்தைக்காக அபிராமி ஐயரை வனிதா மன்னிப்புக் கேட்க வைத்தது சற்று ஆறுதலாக இருந்தது. கடைசியில் சேரன் வந்து, “மீன் மார்க்கெட் ஒன்னும் கேவலமான விசயம் இல்ல சரியா” எனச் சொன்ன போது வனிதா ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் சாந்தமான முகத்தோடு மதுமிதாவிடம் சென்று, “நீ அபி கிட்ட என்ன பேசின?” என விசாரித்தார் வனிதா. உடனே நம்ம மேடம் ஒரு மாதிரியாக சென்ஸார் கட் செய்து இரண்டு நாட்களாக அபியுடன் பேசியவற்றைத் தொகுத்து பொதுவான விஷயங்களைத் தான் பேசியதாகச் சொன்னார். “சரி அவ அவளோட ஒபீனியனைப் பொதுவா சொல்லிருக்கா யாரையும் டார்கெட் பண்ணல” எனத் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு அபிராமியைப் பிரதான எதிரியாகத் தேர்ந்தெடுத்தார் வனிதா. ஆனால், மீண்டும் சரியா உக்காரு, இழுத்து போத்தி ட்ரெஸ் பண்ணு என மதுமிதா யாரிடமாவது சொல்லத் தொடங்கினால்… தொடங்கினால் என்ன தொடங்குவார். அப்போது மீண்டும் மெய்ன் டார்கெட் ஆவார் மதுமிதா.

இடையில் இந்த வார எவிக்சனுக்கான நாமினேசன் நடந்தது. ஆண்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வனிதாவை நாமினேட் செய்ய, வனிதா அணி மதுமிதாவை நாமினேட் செய்ய, பொதுவாக இரண்டாவது ஆளாக மீரா நாமினேட் செய்யப்பட மூவரும் சமமாக வாக்குப் பெற்று நாமினேசன் பட்டியலில் இடம் பிடித்தனர். இவர்களுடன் மோகன் வைத்யா மற்றும் சரவணனும் நாமினேசன் பட்டியலில் உள்ளனர். இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேறவே வாய்ப்பதிகம். வனிதாவும், மதுமிதாவும் 50 நாட்களாவது இருப்பார்கள். மீரா நான் கணித்த வரையில் இறுதி வரையில் வரப் போகும் வாய்ப்பு மிகுந்தவர். பெரிய பஞ்சாயத்து எதிலும் சிக்கிக் கொள்வதற்கு முன் வெளியேற்றப் போவதற்காக மோகன் பிக் பாஸுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நேற்றைய Moment of the show, இத்தனை நாட்கள் நமக்கெதுக்கு வம்பு என அமைதியாக இருந்த ஆண்கள் அணி வனிதாவிற்கு எதிராக வாயைத் திறக்கத் தொடங்கியிருப்பது தான். அபிராமிக்கு பரிந்து பேசி தங்கள் கணக்கைத் தொடங்கியுள்ளனர் சாண்டி மற்றும் தர்ஷன். (இந்த தர்ஷன் லாஸ்லியாவைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. ஒரு நாள் கன்டென்ட் இல்லாத போது பேசலாம். ஆனால் அதற்குள் அவர்களே கன்டென்ட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.)

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close