கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 13 – கலாச்சாரம் காப்பாற்றப்பட்டது!

மித்ரா

பதிமூன்றாம் நாள். உலக நாயகன் வந்து உள் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நாள். வழக்கம் போல க்ளாஸாக மேடைக்கு வந்த கமல் தன் பாணியில் சிலவற்றைப் பேசினார். பின்னர் வீட்டின் பதிமூன்றாம் நாள் ஒளிபரப்பப்பட்டது.

பைரவா படத்தின் “பாப்பா பாப்பா…” பாடலோடு தொடங்கியது பிக் பாஸ் வீட்டின் பஞ்சாயத்து நாள். வனிதா தவிர வம்பு வளர்த்துக் கொண்ட அனைவரிடமுமே ஒரு விதக் கலக்கத்தைப் பார்க்க முடிந்தது. சாக்ஷியும் மதுமிதாவும் வெளியேற்றப்பட்டு விடுவோமோ என்ற பயத்திலேயே இருந்தனர். உண்மையில் இந்த பயம் இல்லாதவர்களே வீட்டிற்குள் கடைசி வரை இருக்க முடியும் என நினைக்கிறேன். மார்னிங் ஆக்டிவிட்டிக்காக அபிராமி வீட்டிலுள்ளோருக்கு நவரசங்களை வெளிப்படுத்துதல் குறித்து சொல்லிக் கொடுத்தார்.
07
பிறகு புதிதாக இணைந்திருக்கும் அதிரடிக் கூட்டணியான வனிதாவும் மீராவும் பேசிக் கொண்டிருந்தனர். மதுமிதாவும், பாத்திமாவும் ஏதோ மீராவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களாம். அதைக் கேட்ட வனிதா நேக்காக மீராவிடம் போட்டுக் கொடுத்தார். நீதி நேர்மையை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருப்பது போலக் காட்டிக் கொள்ளும் மீரா நேராக பாத்திமாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அதிர்ச்சியாக எதுவுமேயில்லை. எதிர்பார்த்தது தான். மீரா பக்கம் இருப்பவர்கள் அனைவருமே வயதானவர்கள். அவர்கள் எடுத்திருப்பது வனிதாவுக்கு எதிர்நிலை மட்டுமே தவிர மீராவுக்கான ஆதரவு அல்ல. மதுமிதா பேசும் தமிழ் கலாச்சாரம் மீராவுக்கே ஒவ்வாதது. தர்ஷனும்,லாஸ்லியாவும் தனி. இருக்க எடம் தெரியாம இருந்துரனும் வகையறா. 24 மணி நேரத்தை இந்தப் பக்கம் 12 மணி நேரம் அந்தப் பக்கம்12 மணி நேரம் எனக் கழிப்பவர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர்கள் அனைவரும் ஜோடி ஜோடியாக ” வெண்ணிலவே வெண்ணிலவே…” பாடலுக்கு நடனமாடிய போது தான் மட்டும் தனித்து ஆடிக் கொண்டிருந்தார் மீரா. அது தான் அவர் நிலை. அவர் வயதுக்கு ஏற்றபடி பேசிச் சிரிக்க, விளையாட ஒரு நட்பு அங்கே இல்லை. இங்கே பாத்திமாவோடும் மதுமிதாவோடும் உட்கார்ந்து கொண்டு அவர் என்ன செய்ய முடியும். என்னைப் பொறுத்தவரை மீரா எடுத்திருப்பது சரியான முடிவு.

பின்னர், அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்றார் கமல். எப்பவும் இயல்பாக இருப்பவர்கள் நேற்று ஒப்பனையுடன் இருக்க, எப்போதும் ஒப்பனையில் இருக்கும் பாத்திமா அதீத ஒப்பனையுடன் இருந்தார். வழக்கமாக சனிக்கிமைகளில் ஜாலியாக விளையாடி, பேசி பொழுதைக் கழித்து விட்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தான் பஞ்சாயத்தைப் பார்ப்பார் கமல். இன்று வந்தவுடனேயே ஆரம்பித்தார்.

“பெண்கள் போடும் சண்டை உங்களுக்கு எப்படி இருக்கிறது?” என ஆண்களிடம் கேட்க, அந்த மகான்கள் ” நாராசாமாக உள்ளது. தொல்லையாக உள்ளது, கேனைத்தனமாக உள்ளது” எனக் கூறினர். இத்தனை வேதனை தெரிவிக்கும் ஆண்கள் சண்டையைத் தீர்க்க ஏதேனும் முயற்சி எடுத்தார்களா என்றால் இல்லை. அதை விட்டுவிட்டு மிக்சர் சாப்பிட்டுக் கொண்டே வேடிக்கை பார்த்து விட்டு நமட்டுச் சிரிப்போடு நகர்வது சுயநலமேயன்றி வேறில்லை. ஆண்கள் பொதுவாக வம்புகளை விரும்புவதில்லை. பொரணி பேசுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அப்படி மீறி சண்டையானால் அது கைகலப்பில் போய் முடியும். அதனால் அமைதியாக இருந்து விட்டு இங்கு வந்து புத்தர்களின் வாரிசுகள் போல சீன் வேறு.

பின்பு மோகன் வைத்யாவின் தலைமைப் பதவி பற்றிய கேள்விக்கு மதுமிதா தவிர அனைவருமே நன்றாக இருந்ததாகவே சொன்னனர். பிறகு அந்த மீரா-முகேன் விவகாரம் சம்பந்தமேயில்லாமல் சண்டையானது குறித்து விசாரித்த கமல், அது முழுக்க முழுக்க பிழையாகப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட தேவையற்ற சண்டை என்பதைப் புரிய வைத்தார்.

பின்னர் வீட்டின் உறிப்பினர்கள் அனைவரும் முன்னே வந்து கமல் சொல்லும் நபர் பற்றி நல்லதையும், கெட்டதையும் மாறி மாறிப் பேச வேண்டும். இதை மாற்றுவதற்காக கை தட்டுமாறு சாண்டி பணிக்கப்பட்டார். ஒவ்வொருவருக்கும் யாருடன் கருத்து வேறுபாடு இருக்கிறதோ அவரின் பெயரையே கூறினார் கமல். அனைவருமே ஓரளவிற்கு நேர்மையாகத் தான் பேசினர். இது ஒவ்வொருவரும் தங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ள உதவும் என பிக் பாஸ் நினைத்திருக்கலாம். அது உண்மையும் கூட.

கடைசியாக, ஒரு போர்டில் எவிக்சனுக்கு நாமினேட் ஆனவர்களின் புகைப்படங்களை வைத்து போட்டியாளர்கள் யார் வெளியேற வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்கள் புகைப்படத்தின் கீழ் குறியிடச் சொன்னார் கமல். பெரும்பாலோனோர் மதுமிதாவைச் சொல்ல, சிலர் மீராவைச் சொல்ல வழக்கம் போல ஆண்கள் அணி சரவணனைச் சொன்னது. காரணம் அவர் குழந்தையைப் பார்க்காமல் அழுகிறாராம். அதனால் வெளியே போய் நிம்மதியாக இருக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் சரவணன் வெளியே போக விரும்புகின்றனராம். அடேங்கப்பா என்ன ஒரு நல்ல எண்ணம். இது தான் இவர்களின் நமக்கெதுப்பா வம்பு புத்தி. கமல், “இந்த பாசநேச சீனெல்லாம் வேண்டாம். உண்மையிலேயே யார் போனா நிம்மதியா இருக்கும்னு நெனைக்குறீங்களோ அதைச் சொல்லுங்க” எனக் கூறவும் அந்த வாக்குகள் மதுமிதாவுக்கும் மீராவுக்கும் அணி பிரிந்தன.

முடிவில் “வீட்டில் பெரும்பான்மையானோர் மதுமிதா வீட்டிலிருப்பதை விரும்பவில்லை. ஆனால் மக்கள் விரும்புகின்றனர்.” எனக் கூறி மதுமிதாவைக் காப்பாற்றினார் பிக் பாஸ். அப்போது மதுமிதா உருண்டு பிரண்டு அழுதார் பாருங்கள் ஒரு அழுகை. சில நாட்களுக்கு முன்பு அவர் அழும் போது கூட அழகாக இருந்தார் எனச் சொன்னதற்காக என் தலையில் நானே அடித்துக் கொண்டேன். ஏன்? எதற்காக இந்த வீட்டில் அப்படி இருந்தேயாக வேண்டும் அவர் விரும்புகிறார்? என்ற கேள்விக்கு தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்பாத குணமே காரணமாக இருக்கலாமெனத் தோன்றியது. முதல் இரண்டு சீசன்களிலும் வெளியேறும் போது நண்பர்களைப் பிரிவதற்காக அழுவார்களே தவிர, தனக்கென யாருமேயில்லாத வீட்டைப் பிரிவதற்காக யாரும் அழுததில்லை. இந்த குணம் என்ன செய்யுமென்றால் “நாம் எடுத்த கலாச்சாரப் பாடம் பிடித்துப் போய்த் தான் மக்கள் நமக்கு வாக்களித்திருக்கின்றனர்.” என்ற எண்ணத்தைக் கொடுக்கும். மீண்டும் மீண்டும் அப்படியே பேசச் சொல்லும். கமல் மதுமிதா காப்பாற்றப்பட்டார் என அறிவித்ததும், அவர் அழுகையோடு பாத்திமாவிடம் ” எத்தனை வலி இருந்தது தெரியுமா எனக்கு?” என்று கேட்ட கேள்வி தான் பிக் பாஸின் அடுத்தடுத்த எபிசோடுகளுக்கான டிஆர்பி.

உண்மையில் மக்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையில் தான் எவிக்சன் நடைபெறுகிறது என்பதை நான் நம்பவில்லை. மதுமிதா காப்பற்றப்படுவார் என்பது நாம் எதிர்பார்த்தது தான். ஆனால் நேற்று அவருக்காக அரங்கில் எழுந்த கைதட்டல் தான் வருந்த வைத்தது. உண்மையில் மதுமிதா பொதுச் சமூகத்தின் பிரதிநிதி. கலாச்சாரமெல்லாம் நமைக் கட்டிப்போடச் சொல்லப்பட்ட கட்டுக்கதை மட்டுமே. சுய ஒழுக்கமே பிரதானமானது என்ற புரிதலையெல்லாம் பொதுச்சமூகத்திடம் நாம் எதிர்பார்க்க முடியாது. ” 8 ஆம்பளைப் பயலுக இருக்க வீட்ல டவுசரோட சுத்துறாளுக பாரு..” , ” எப்டி ஆணும் பொண்ணும் ஒரே கட்டில்ல படுத்து கூத்தடிக்குதுக ஒரு கூச்சநாச்சம் வேணாம்” எனப் பேசுபவர்கள் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பெரும்பான்மையான பார்வையாளர்கள். அவர்களிடம் மதுமிதா செல்வாக்குப் பெறாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

” எந்த விஷயம் ட்விஸ்ட் பண்ணி விட்றக் கூடாதுனு சண்டை போட்டோமோ அதான் ட்விஸ்ட் பண்ணிருக்கு” என்ற கவினின் கருத்தே தான் எனக்கும்.

நேற்றைய எபிசோடில் “யார் வெளியேற விரும்புகிறீர்கள்?” எனக் குறியிடச் சொன்ன போது அபிராமி, மதுமிதாவை விடுத்து மீராவைச் சொன்னது தான் Moment of the show. இந்த விஷயத்தில் தான் தன் அணியிரையே பகைத்துக் கொண்டார் அபி. வனிதா உள்ளிட்ட மற்றவர்களுக்கும் மதுமிதாவுக்கும் உண்மையில் எந்தப் பிரச்சனையுமே கிடையாது. அபிராமிக்கு ஆதரவாகப் பேசித் தான் பகை வளர்ந்தது. இப்போது வனிதா ரேஷ்மா உள்ளிட்டோர் ஒரு மாதிரி மீராவிடம் நல்லபடியாக நடந்து கொள்வது அபியின் ஈகோவைத் தூண்டி விட்டிருக்கும். “உங்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை?” என்ற கேள்விக்கு அபியிடம் பதில் இல்லை. சும்மா மீராவைப் பிடிக்காது என்று காரணமில்லாமல் பிடிவாதமாக மதுமிதாவை விடுத்து மீராவை. எதிர்ப்பது இனி விரிசலை உருவாக்கும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close