கட்டுரைகள்

Banana? At this time of night?- திரைப்பட விமர்சனம்

-பிரசாந்த் கார்த்திக்

          “ இந்த ராத்திரி நேரத்தில் வாழைப்பழமா?” படத்தின் தலைப்பை பார்க்கையில் ஏதோ 18+ சமாச்சார படம்போல தெரியலாம். ஆனால், இந்த படத்தைப் பற்றி பார்க்கும் முன்னர், இந்திய சினிமாவில் உடல் குறைபாடுடையவர்கள் எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பார்க்கவேண்டும்.
          பெரிய ஹீரோக்கள், உடலில் குறைபாடு உள்ளவர்களாக நடித்தால் “ஆஹா! இந்த நடிகர் எவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார் பாருங்கள்!” என ரசிகர்கள் கைதட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறார்களே தவிர, அந்த கதாபாத்திரத்துக்கான முக்கிய பிரச்சனைகளை பேசுவதிலோ, அவர்களது வாழ்க்கையில் நெருங்குவதிலோ ஆர்வம் காட்டமாட்டார்கள்.
          அறிமுகமில்லாத நடிகர் நடித்தால் சொல்லவே தேவையில்லை. எப்போது அந்த கதாபாத்திரம் இறந்துபோகும், என கண்ணீர்மல்க காத்திருக்க வேண்டியதுதான். உடல்குறைபாட்டை கழிவிறக்கத்தோடு பார்த்து பழகிப்போன நமக்கு ‘உங்களை யார் இரக்கப்பட சொன்னது?’ என கேள்வியெழுப்புகிறார் யஷீவாகி கனோ.
               இந்த திரைப்படம் உண்மை மனிதர் ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவலின் திரைப்படமாகும். யஷீவாகி கனோ, Muscular Dystrophy என்னும் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவன். Stephen Hawking போல தலையை தவிர வேறு எந்த உறுப்பும் செயல்படாது. விரல்கள் மட்டும் எழுதுமளவு அசைவு தரும்.
                இதனால் யஷீவாகியை எப்போதும்  கவனித்துக் கொள்ள யாராவது உடனிருக்க வேண்டும். அப்படி அவனை பராமரித்துக் கொண்டு நண்பராகிறான், ஹிஷாலி டனாகா. யஷீவாகியுடன் உண்டான நட்பால் தனது காதலியை கூட கண்டு கொள்ளாமல் சர்வநேரமும் யஷீவாகியுடனே இருக்கிறான் டனாகா. இதனால் டனாகாவை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே யஷீவாகியை கவனித்துக் கொள்ளும் பராமரிப்பாளர்களுள் ஒருவராக இணைகிறாள் டனாகாவின் காதலி மிசாகி.
               யஷீவாகி, டனாகா மற்றும் மிசாகி மூவருக்கும் இடையிலான காதல், மோதல், நட்பு இவற்றின் மூலம் இதுவரை காணாத உலகத்தின் காட்சிகளை கண்முன் கொண்டு வருகிறது இந்த திரைப்படம். பராமரிப்பு பணியில் சேரும் மிசாகி மற்ற பராமரிப்பாளர்களை யஷீவாகி தொடர்ந்து வேலை வாங்குவதையும், திட்டுவதையும் கண்டு கோபமடைந்து
 “இரக்கப்பட்டு உனக்கு உதவினால் திமிர்த்தனமாக நடந்து கொள்ளாதே?” என்று சொல்கிறாள். அதற்கு யஷீவாகி சொல்வான்,
 “உன்னை யார் இரக்கப்பட சொன்னார்கள்?”
              இதுபோல படத்தின் பல இடங்களில் வரும் வசனங்களும் இதுவரை உடல்குறைபாடு உள்ளவர்களை பார்த்துவரும் கழிவிரக்க பார்வையை குறித்து கேள்வி கேட்பவையாக உள்ளன.
              இதைய்யெலாம் தாண்டி யஷீவாகி கதாபாத்திரம்தான் என்னை மிகவும் ஈரத்தது. தன்னால் செயல்படமுடியாது என்பதற்காக எதையும் முயற்சிக்காமல் திரியும் ஆள் அல்ல அவன்! தனக்கு ஒன்று தேவை என்றால் அதை எப்படியும் சாதித்தே தீர வேண்டும் என்ற விடாப்பிடியான குணம் அவனுடையது. இரவு 2 மணி என்றாலும், வாழைப்பழம் வேண்டும் என மிசாகியை ரோடு ரோடாக அலையவிடும்போது, உயிரேபோகும் சூழலிலும் A ஜோக் அடிப்பது என வாழும் யஷீவாகியோடு நாமும் நண்பராகிவிட முடிகிறது.
            மூவருக்கும் அவர்கள் வாழ்வில் லட்சியம் என்று சொல்லிக் கொள்ள ஏதாவது ஒன்று இருக்கிறது. யஷீவாகிக்கு அமெரிக்கா சென்றுவிடுவது லட்சியம். டனாகாவுக்கு மருத்துவர், மிசாகிக்கு ஆசிரியர். ஆனால், மற்ற இருவரும் அவர்கள் லட்சியங்களை அடைய யஷீவாகியே காரணமாக இருக்கிறான். அவர்களுக்கு அவன் எந்த வகையிலும் நேரடியாக உதவாவிட்டாலும், யஷீவாகியுடனான அனுபவங்கள் அவர்களுக்கு நிறைய கற்று தருகிறது.
            ஒருகட்டத்தில் யஷீவாகியை அறுவை சிகிச்சை செய்யாமல் காப்பாற்ற முடியாது என்ற நிலைமை வருகிறது. அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய பிறகு யஷீவாகிக்கு பேச்சுதிறன் போய்விடுகிறது. பேச்சை திரும்ப கொண்டு வர வழியில்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்ட நிலையில், மிசாகி பேச்சு வரவழைக்க ஒரு திட்டத்தை கண்டுபிடிக்கிறாள். மற்ற பராமரிப்பாளர்கள் மறுக்கும்போதும் அதை தன்மேல் சோதித்து பார்க்க யஷீவாகி ஆர்வம் காட்டுகிறான். முடிவில் பேச்சுதிறனும் பெறுகிறான். அதுதான் யஷீவாகி!
                தன்னால் முடியாது என்று எதையும் புறக்கணிக்காமல் இயங்கிக் கொண்டிருப்பான். தான் தொடர்ந்து இயங்குவதன் மூலம் உலகத்திற்கு தன் இருப்பை உணர்த்தவே அவன் விரும்புகிறான். அதனால்தான் மற்றவர்களைபோல் மருத்துவமனைக்குள் முடங்கி கிடக்காமல் தொடர்ந்து பொதுவெளியில், சாலைகளில், பூங்காக்களில் சக்கர நாற்காலியில் பயணித்துக் கொண்டே இருக்கிறான்.
                    தன் வாழ்நாள் முழுவதும் 500 பராமரிப்பாளர்கள் பராமரிப்பில் வாழ்ந்து, இறந்துபோன உண்மையான யஷீவாகியும் இதைத்தான் சொல்ல முயன்றிருப்பார்போல!
குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close