இணைய இதழ்இணைய இதழ் 72குறுங்கதைகள்

(அவ)சர மழை – ரமீஸ் பிலாலி (குறுங்கதை)

சிறுகதை | வாசகசாலை

பித்தன் மழைக்காகப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினான்என்று ஒரு கவிதையைத் தொடங்குவார் கவிக்கோ அப்துல் ரகுமான்

இறைவேதமும் நபிபோதமுமாக அறபி மொழி மேற்கோள்களுடன் ஞான மழையாகப் பொழியும் என் குருநாதர் சொல்வார்கள்: “நான் மழைக்காகக் கூட மதறஸாவில் ஒதுங்கியவன் அல்லன். எல்லாம் என் குருநாதரின் ஃபைஜான் (ஆசிகள்). “ 

மழைக்காக எங்கே ஒதுங்கினாலும் இவ்விரண்டும் எனக்கு நினைவு வந்துவிடும். இன்று மாலையும் நான் மழைக்காக ஓரிடத்தில் ஒதுங்கினேன். ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருக்கும்போது தூறல் சட்டென்று வலுத்துவிட்டது. இடதுபக்கம் அவ்விடத்தில் இருந்தது மஹாராம்ஸ் பலகாரக் கடை. ஏற்கனவே அதன் முற்றத்தில் ஒரு கும்பல் ஒதுங்கிவிட்டது. ஸ்கூட்டரை நிப்பாட்டிவிட்டு அவசரமாகப் பையை எடுத்துக்கொண்டு ஒதுங்கினேன். சும்மா நிற்பானேன் என்று மனசாட்சி உறுத்துமே? ஆவி பறக்கும் தேநீரையும் காப்பியையும் வெறுமனே பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் நிற்பது? ஒவ்வொருவராக டோக்கன் வாங்கி மழையை ரசித்துக்கொண்டே (?) சீப்ப ஆரம்பித்தார்கள். இன்று மாலைக்கு எக்ஸ்ட்ராவாக இருநூறு உளுந்து வடை போட்டார்களாம். எனக்கு மனசாட்சி ரொம்பவுமே உறுத்த ஆரம்பித்துவிட்டது. கண்ணாடிப் பெட்டிக்குள் சரிக்கப்பட்ட சூடான வடையில் நான்கை வாங்கினேன். சாம்பாரும் சட்னியும் அலுமினியம் பையில் கட்டிக் கொடுத்தான், கையில் வங்காள மொழியில் பச்சை குத்தியிருந்த இளைஞன். மழை விடுவதாக இல்லை. கடைக்குள் நுழைந்து கருப்பட்டி மைசூர்பாக், சோன்பப்படி, காராபூந்தி ஆகியவற்றையும் வாங்கிக்கொண்டு மழை விடுகிறதா என்று பார்த்தபடி நின்றேன்

சகதர்மினி கைப்பேசியில் அழைத்தாள். ரெய்ன்கோட் போட்டுக்கொண்டேனா என்று விசாரித்தாள். அது ஸ்கூட்டரின் டிக்கிக்குள் இருந்தது. நான் பலகாரக் கடையில் ஒதுங்கி நிற்பதைச் சொன்னேன். வெளியே வந்து மீண்டும் முற்றத்தில் நின்றபோது பக்கத்தில் இருந்த ஒருவர் பேச்சுக்கொடுத்தார்: “நீங்கதானே ரெய்ன்கோட் போடணும்னு பேசுனீங்க? “ 

ஆமாங்க. ஸ்கூட்டர்ல இருக்கு. இப்ப எப்பிடிப் போயி எடுத்துப் போட முடியும்? “

நனஞ்சா சேராதுங்களா? எனக்கும் சேராது. முன்னாடியெல்லாம் ஒன்னுஞ் செய்யாது. இப்பல்லாம் ஒத்துக்க மாட்டேங்குது. “

நான்உம்கொட்ட ஆரம்பித்தேன். சற்று உருண்டையாக இருந்தவர் தொடர்ந்து சரளமாகப் பேசினார் : “வீட்ல அப்பாவப் படுக்க வச்சு ரூம்ல .சி போட்டு விட்டுட்டுதான் வந்தேன். இன்னிக்குப் பகல்ல நல்ல வெயில். எனக்கு ஒடம்பு சூடு ஏறிக்கும். அதுனால ஏசீலதான் இருப்பேன். ரூம விட்டு வெளீல வந்தப்ப ரொம்ப உஷ்ணமா இருந்துச்சு. “

மழை விடுகிறதா என்று பார்க்க என் கவனம் திரும்பிற்று. சிலர் இறங்கிப் போய் வாகனங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். மழையின் அளவறிய ஒருவர் கையை நீட்டிப் பார்த்தார். பின்னர் எல்லோரையும் பார்வையால் வட்டம் வரைந்து அளந்தார். இறங்கி தலைக்கு மேல் கையால் குடை பிடித்துக்கொண்டு நடந்து போய் பைக்கைக் கிளப்பினார். மழை எவ்வளவு பெய்கிறது என்று பார்க்க ஏதேனும் வாகனத்தின் ஹெட்லைட் கிடைக்கிறதா என்று பார்த்தேன். அப்போது பேருந்து ஒன்று நிறுத்திற்கு வந்தது. அதன் தலைவிளக்குகள் இரண்டும் நூந்துக் கிடந்தன (அல்லது ஓட்டுநர் இன்னும் விளக்கேத்தவில்லை போலும்.) பலகை மீது படர்ந்துசத்திரம் பேருந்து நிலையம்என்று காட்டிய விளக்கின் சன்ன வெளிச்சம் மழையைச் சோதித்துப் பார்க்கத் தோதாயில்லை. இந்த இடைவெளியில் பக்கத்து (ண்)பரின் உரையாடலைக் கொஞ்சம் தவறவிட்டுவிட்டேன்

“… … … பய வந்தப்பத்தான் வெளீல வந்தேன். அவன் மூஞ்சியெல்லாம் வேத்து வடிஞ்சதப் பாத்தப்பத்தான் இன்னிக்கு வெயிலோட கடுமெ தெரிஞ்சுது. இந்த மழ அவசியம் வேணும் சார். “

நானும் தலையாட்டி ஆமோதித்தேன்.

போன வாரம் குற்றாலம் போயிருந்தேன். மழை இருக்குறதால தண்ணி நல்லா வருது. குளுகுளுன்னு இருந்துச்சு. மே மாசத்துல ரெண்டு வாரமா மழெ பெய்யுதே!? இப்படி இருந்ததே இல்லெ சார். இன்னும் பெய்யுமாம். புயல் உருவாயிருக்குன்னு நியூஸ்ல சொன்னான். மழெ விட்டிருச்சே. போலாம் சார். “ 

சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு இறங்கி இடது பக்கம் நடக்க ஆரம்பித்தார். நான் வலது பக்கம் நிறுத்திய ஸ்கூட்டரை நோக்கிப் போனேன்.

பத்து நிமிடங்கள் சுவாரஸ்யமாகத்தான் போய்விட்டது. முன்னே பின்னே தெரியாதவர்கள்தாம். ஆனால், நிகழ்கணத்தில் ரொம்பவும் தெரிந்தவர்கள் ஆகிவிட்டோம் போலும். இல்லையென்றால் தங்கு தடை இல்லாமல் இப்படி எப்படிப் பேச்சு ஓடும்? அவர் முகமும் அதற்கு ஏற்றதாகத்தான் இருந்தது. நல்லவர் இவர் என்று நெஞ்சு சொல்லிற்று. இல்லை, கோடை மழைதான் இப்படியெல்லாம் ஆற்றுகிறதா? மனிதர்களை ஆற்றிக்கொள்ள வைக்கிறதா?

இதை ஏன் எழுதுகிறேன்? நாலைந்து நாளுக்கு முன்னால் மகனை அழைத்துக் கொண்டு வரும்போது இப்படித்தான் மழை பிடித்துக்கொண்டது. எங்கே ஒதுங்குவது என்று யோசித்து விரட்டி ராஜா பதிப்பக புத்தகக் கடையில் ஒதுங்கிவிட்டோம் (நான் இலக்கியவாதி என்பதற்கு இதை ஓர் எளிய சான்றாகக் கொள்ளலாமே?) இன்று பலகாரக் கடையில் பேசியவர் நிச்சயமாக இலக்கியப் பிரதியில் பதிய வேண்டியவர் என்று உணர்கிறேன். தி.ஜாவின் சிறுகதை உலகத்துப் பிரஜை என்று உணர வைத்துவிட்டார். நான் எழுதுகிறவன் என்று தெரிந்தா என்னிடம் பேசினார்? இல்லை; ஆனால், அவரை எழுத்தில் பதிந்து வைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறதே. இதோ செய்துவிட்டேன். அவரும் அவர் அப்பாவும் மற்றும் எல்லோரும் இன்புற்றிருக்க பிரார்த்தனைகள்.

*******

trameez4l@gmail.com

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close