சிறுகதைகள்
Trending

அவன் ஏன் நரமாமிச பட்சணியாக மாறினான்?

எம் எம் நெளஷாத்

என் பெயர் ஸிம்மி துஷானி. பர்மிங்ஹாம் நகரில் வசிக்கும் நான் அதே நகரிலிருந்து வெளிவரும் பர்மிங்ஹாம் ‘பிரயாணிகள் வார இதழ்’ (Birminham Travellers Weekly) என்ற சஞ்சிகைக்கு சுயாதீனமாக கட்டுரைகள் எழுதி அனுப்புகிறேன். அதன் வலைப்பூவின் ஆசிரியரும் நானே. (மேலும் உலகம் என்னைத் திரும்பிப் பார்த்து என் திறமையைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். மிக விரைவில் மிக முக்கியமான மனிதர்கள் வசிக்கும் உயர்குடியிருப்பொன்றில் அடுக்ககம் ஒன்று வாங்குவது, நானும் அழகி என்பதால் என் மனசுக்கேற்ற மணவாளனுடன் குலாவிச் செல்லத்தக்க காரொன்றை வாங்குவது போன்ற உதிரி ஆசைகளும் உண்டு).  மேலும் மானிடவியலிலும், மொழியியலிலும் பட்டப்பின் கற்கை நெறியைப் பூர்த்தி செய்துள்ள நான் என் பாட்டனாரின் தொடர்ச்சியான வற்புறுத்தல் காரணமாகவே வானவில் கிராமத்திற்கு ஒரு சுயாதீன ஊடகவியலாளராக வந்துள்ளேன். தவிரவும் என் பத்திரிகை நிறுவனமும் என் பயணத்தை ஒழுங்கு செய்யத் தயாராக இருந்தது.

வானவில் கிராமவாசிகள் அழகிய கறுப்பு நிறத்தை உடையவர்களென்றும், விருந்தோம்பலில் அதி உச்சத்தை அடைந்தவர்களென்றும், மற்ற மனிதர்களோடு அந்நியோன்னியமாகப் பழகக் கூடியவர்களென்றும், அபூர்வமான சடங்குகளையும், விழாக்களையும் அடிக்கடி நடத்துபவர்களென்றும் என் பாட்டனார் அதீத வார்த்தைகளைக் கூறியது மாத்திரமல்லாமல், அவர் ஏற்கனவே பலதடவை இந்தக் கிராமத்திற்கு வந்திருந்த போது எடுத்த நூற்றுக் கணக்கான புகைப்படங்களையும், ஞாபகச் சின்னங்களையும், குறிப்புகளையும் என் முன்னால் பரப்பி பெரிய விரிவுரை ஒன்றையும் நிகழ்த்தி என்னைத் திக்குமுக்காடச் செய்தார்.

அவ்வாறே நானும் மிகமிக அழகாகவும் அலங்காரத்துடனும் இந்தக் கிராமத்தைப் பற்றி எழுதி  உங்களைத் திக்குமுக்காடச் செய்யப் போகிறேன். ஏனென்றால், பாட்டனார் கூறியதைப் போல் உண்மையில் அவர்கள் அப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தார்கள். ‘பர்மிங்ஹாம் பிரயாணிகள் வாரஇதழ்’ (Birminham Travellers Weekly) 180வது சஞ்சிகையை வாசிக்குமாறு நான் சிபாரிசு செய்கிறேன். (ஓரளவு விளம்பரம் மாதிரி தான்). ‘மறைந்திருக்கும் உலகக் கிராமங்கள்’ (World’s Hidden Villages) என்ற தலைப்பில் இதுவரை பன்னிரண்டு கிராமங்களைப் பற்றி எழுதியுள்ள நான் பதின்மூன்றாவது கட்டுரையாக வானவில் கிராமத்திலுள்ள பின்வரும் விஷயங்களை பற்றி விரிவாக எழுதப் போகிறேன்.

முதலாவது காட்டுப்பாதையினூடாக சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் மலைக்குன்றுகளைச் சுற்றிச் சுற்றி நான் நடந்த பாதையைப் பற்றிச் சொல்லுவேன். (சுமார் பதினைந்து கிலோமீட்டர் நீளமான, அதிகளவு கற்பாறைகளைக் கொண்ட வாகனத்தில் பயணிக்கக் கூடிய இன்னுமொரு மணல் பாதையும் இருக்கிறது. அந்தப் பாதையின் இரு மருங்கிலும்  திறந்த வாகனங்களில் செல்லும் பயணிகளைத் திடீரென்று தாக்கக் கூடிய பிரமாண்டமான கரடிகள் வாழ்வதால் அந்தப் பாதையைத் தவிர்த்துக் கொள்ளும்படி பாட்டனார் எச்சரித்திருந்தார். இரண்டாவது காரணம் என் கட்டுரைக்குப் பெறுமானம் சேர்க்கக் கூடிய இயற்கையின் அழகை அனுபவித்தவாறே செல்வதென்றால் எப்போதும் எனக்கு நடந்து செல்வதே பிடிக்கும்) இக்கிராமத்திற்கு வருகை தருவதாக இருந்தால் அதீத குளிரைத் தாக்குப் பிடிக்கக் கூடிய கம்பளித் துணியாலான ஜெர்சி ஆடையொன்றைக் கொண்டு வருதல் நல்லது.

இந்த மலைப்பாதை முடியுமிடத்தில் காணப்படும் அடர்த்தியான சிவந்த கொக்கோப் பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் கொக்கோ மரங்களால் சூழப்பட்ட முச்சந்தி தான் வானவில் கிராமம் ஆரம்பிக்கும் இடம்  ஆகும். முச்சந்தியில் மிகவும் பழமை வாய்ந்த ஒரு தேநீர்க்கடை இருக்கிறது. உங்களைக் கண்ட மாத்திரத்திலேயே மேற்சட்டை போடாத ஒரு கிழவர் வந்து ‘ வானவில் கிராமத்திற்கா வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்பார். வானவில் கிராமத்தை  உயர்வாகச் சிறப்பித்து, ‘என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இதுதாண்டா அந்தக் கிராமம்’ என்று ஆரம்பித்து ‘பர்மிங்ஹாம் ‘பிரயாணிகள் வார இதழ்’ பர்மிங்ஹாம் ‘பிரயாணிகள் வார இதழ் சஞ்சிகையிலே நான் எழுதவிருக்கும் அனுபவங்களில் இந்தக் கிழவருக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. புதிதாக அக்கிராமத்திற்கு யார் வந்தாலும் ‘ வானவில் கிராமத்திற்கா வந்திருக்கிறீர்கள்?’ என்றொரு கேள்வியைக்கேட்டு இலவசமாக சுடச்சுட தேநீர் கொடுத்து, வயிறு நிறைய சாப்பாடும் கொடுத்து, தன்னிடமுள்ள பைசிக்களையும் பிரயாணத்திற்காகக் கொடுத்து வரவேற்று உபசரிப்பார் அந்தக் கிழவர். என்னிடமும் அவ்வாறு கேட்டதுடன் அவருடைய கடமை ஆரம்பமாயிற்று.

கிராமத்திலுள்ள அதியுச்ச விருந்தோம்பல் மனிதர்களைப் பற்றி இரண்டாவது எழுதுகிறேன். அவர்கள் வீதியின் இரு மருங்குகளிலும் நிற்பார்கள், ‘உங்களைப் போன்றவர்களை எந்த ஊரிலும் கற்பனையிலும் கண்டிருக்கவில்லை, ஏன் என் ஊராகிய பெர்மிங்ஹாமிலும் இல்லை’ என்று நான் வாய்விட்டு புகழக் கூடிய பெண்களும், சிறுசுகளும், பெண்களின் கணவன்மார்களும் அவர்கள். புதிதாக வரும் விருந்தாளியிடம் அவர்கள் சரமாரியாகத் தொடுக்கும் கேள்விகள் பூங்கொத்துகளை  அன்பளிப்பது போல் அன்பின் மிகப்பெரிய வெளிப்பாடாக இருக்கும். நடந்து வருவதன் மூலமே இந்த சுகானுபவத்தை அனுபவிக்க முடியும் என்பதை ஞாபகம் வைத்தல் நல்லது, வாகனங்களில் வருபவர்கள் தங்குமிடத்திற்குச் சென்று குளித்தபின் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் செய்யவியலாது.

புதிய விருந்தாளியுடனான குலாவலான விசாரிப்புகள் சிறிய வேறுபாடுகளுடன் ஆவலுடனும், ஆர்வத்துடனும், வாய் நிறைய பற்கள் தெரிந்த சிரிப்புடனும் பின்வருமாறு அமையும்.” தங்கையே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”, “தங்கையே, நீங்கள் மிக அழகாக பளிச்சென்று இருக்கிறீர்கள்.”  , “தங்கையே, நடந்து வந்த உங்களுக்கு களைப்பு ஏற்படவில்லையா?” ,  “தங்கையே, ஓய்வெடுப்பதற்க்கு என் வீட்டிற்கு வாருங்கள்.” , “தங்கையே, உங்களுக்கு விருப்பமான சாப்பாட்டைச் சொல்லுங்கள், முதலில் சாப்பிடுவோம்.” , “தங்கையே, நீங்கள் வரும் வழியிலே காட்டு மிருகங்களை காணவில்லையா?” , “தங்கையே, காட்டுவழி உங்களுக்கு பயத்தை உண்டாக்கவில்லையா?” , “தங்கையே, முதலில் முகம் அலம்பிவிட்டு, என் வீட்டில் சிறிது தூங்கி, ஓய்வெடுத்துவிட்டுச் செல்லுங்கள்.” , “தங்கையே, அருகில் அழகான நீரோடை ஒன்று இருக்கிறது, இப்போதே குளித்துவிட்டுச் செல்லலாம். அதிர்ஷ்டசாலிகள் அனுபவிப்பார்கள்.”

அவர்களின் வீடுகள் என்பது எந்த படவரைக்கலைஞனாலும் வரையப்படாதது, கூரைகள் காட்டுப் புற்களால் வேயப்பட்டு, கற்களோடு சேர்த்து, களிமண்ணோடு குழைத்து வரிச்சுக் கட்டப்பட்டதாய் இருக்கும். உதாரணமாக நான் தங்கும் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வீட்டில் மேலதிகமாக சுவர்களில் தேனீக்களும், கூரையில் குருவியும் கூடு காட்டியுள்ளன.

நான் தொழில் நிமித்தம் சென்ற எந்தக் கிராமத்திலும் அன்பை உச்ச அளவில் வெளிப்படுத்தும் இத்தகையதொரு விருந்தோம்பலை ஒருபோதும் அனுபவித்ததில்லை. அதிர்ஷ்டவசமாக அன்றைய தினமே எனக்கு அற்புதமான தோழி ஒருத்தியும் கிடைத்து விட்டாள். பெயர் ஷிலோமியா, பத்தொன்பது வயது. நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருக்கிறாள். வானவில் கிராமத்தின் யாருக்கும் தெரியாத எல்லா இரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள அவள் தயாராக இருந்தாள், அத்தோடு தன்னுடைய சொந்த இரகசியங்களையும். முதல் நாளன்றே நாங்கள் நிறையப்பேசி இவ்வாறானதொரு அன்பின் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டோம்.

பலாச்சோலை என்று சொல்லக் கூடிய நிறையப் பலாமரங்கள் நிறைந்த (பூரண நிலவு நாளில் நிலத்தில் ஒன்றாக அமர்ந்து பலாச்சுளைகளைப் பிரித்து சாப்பிடுவார்களாம், நானும் ஏற்கனவே பலாச்சுளைகளை ருசித்துவிட்டேன்). ஜேக் பேர்கர் தோட்டம் (Jak Burger Garden) என்றழைக்கப்படும் விசாலமான தோட்டமொன்றின் மத்தியிலிருந்த சிறிய வீடு தான் எனக்காகத் தங்கத் தரப்பட்ட இடம். காடு சூழ்ந்திருப்பதால் அடிக்கடி பாம்புகளையும் காணலாம் என்று ஷிலோமியா என்னிடம் கூறினாள். ஒருமுறை கூரையிலிருந்து தலைக்கு மேல் பாம்பு தவறி விழுந்ததாம் அல்லது நடுநிசியில் பிசாசு கூவுமாம். இப்படி முசுப்பாத்திக் கதைகள் பலவும் உலாவும் இடம்.  தோட்டத்தின் எல்லையில் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையில் அதிகாலை ஐந்து மணிக்கு ஆண்களும் பெண்களும் ஒன்றாகச் சேர்ந்து நீராடுவார்களாம் (நான் பலதடவை அவதானித்திருக்கிறேன்). சிலவேளை அங்கே திருமணங்களும் பேசப்பட்டு முடிவாகுமாம்.

முற்றத்தில் போடப்பட்டிருந்த சாக்குக் கட்டிலில் எப்போதும் குடியிருந்த பாட்டி ஒருத்தி இரவில் எங்களுக்கு தேவதைக் கதைகளையும், கிராமத்திலுள்ள மிகப் பழமையான ஆலமரத்திலும், பாதையின் இருமருங்கிலுமுள்ள புளியமரங்களிலும் குடியிருக்கும் பிசாசுகளின் கதைகளையும் சொல்வதோடு பகலில் தொணதொணத்துக் கொண்டிருப்பாள்.

மூன்றாவது, உங்களை ‘வானவில் கொண்டாட்டம்’ நடக்கும் மைதானத்திற்கு அழைத்துச் செல்கிறேன். என்னை அழைத்துச் சென்றவள் ஷிலோமியா. அவள் தான் இந்த ஊருக்கு ஏன் வானவில் கிராமம் என்ற பெயர் வந்தது என்ற விஷயத்தையும் சொன்னவள், அதாவது இங்கு வானவில் அடிக்கடி தோன்றுகிறது என்ற விஷயம் மற்றும் அதன் தொடர்ச்சியாக மிகவும் கோலாகலமாக நடைபெறும் வானவில் கொண்டாட்டம். (நான் அப்போது அவளுக்கு ஞாபகப்படுத்தினேன், ஹவாய் தீவுகளிலும் இவ்வாறான தோற்றப்பாடு அவதானிக்கப்பட்டுள்ளது என்ற விஷயத்தையும், அதன் காரணமாக வானவில் தேசம் என்ற புனைபெயர் அதற்கு சூட்டப்பட்டுள்ளது என்ற விஷயத்தையும்).

நான் அங்கு அவதானித்த விடயங்களைக் கூறுகிறேன்.  ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என்று கிராமவாசிகள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர்களின் கைகளில் வானவில்லின் ஏழு வர்ணங்கள் கொண்ட குடைகள் இருந்தன; அத்தனை பேரும் ஏழு வர்ண ஆடைகளை விதம் விதமாக அணிந்து வந்தார்கள் (பார்ப்பதற்கு சிறுவர்களின் ஒரு பலூன் திருவிழா போல் இருந்தது); அத்தனை பேரும் ஒரே கோரஸில் ஒரே நேரத்தில் ‘வானவில்லே நாங்கள் உன்மீது அன்பைச் சொரிந்தோம்’ என்று தொடங்கும் பாடலைப் பாடினார்கள்; வானவில் மறையுமட்டும் ஆடல், பாடல், நடனம் என்று மைதானம் களைகட்டியது. கிராமத்தின் பெரிய மனிதர்கள் என்று சொல்லக் கூடியவர்களும், வயதால் கூடியவர்களும் அல்லது ஞானிகள் போல் தோற்றமளித்தவர்களும் மோனத்தவநிலையில் இருப்பதைப் போல் வெறும் புல்தரையில் சம்மணமிட்டு அமர்ந்து வானத்தை மேல்நோக்கிப் பார்த்தவாறே வானவில்லை துளித்துளியாக ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

‘வானவில் கிராமத்தின் மறைந்திருக்கும் இரகசியங்கள்’ என்ற தலைப்பில் ஒரு  புத்தகம் எழுதுவேனாக இருந்தால் வானவில் கிராமவாசிகளின் முகங்களில் எப்போதும் துலங்கிக் கொண்டிருக்கும் புன்னகையையும் அதன் இரகசியங்களையும் நிச்சயம் எழுதுவேன். ஷிலோமியா அந்த இரகசியத்தைச் சொன்னாள். முன்னொரு காலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் கடுமையான உடல் உபாதைக்கு மத்தியிலும், அதன் வேதனையை மறைத்து புன்னகைக்க கடும் பிரயத்தனம் எடுத்தாள். அவளுடைய அந்தப் புன்னகைகள் அவளுடைய கருப்பைக்குள் நுழைந்ததாகவும், உள்ளே வளர்ந்த சிசு இலட்சக் கணக்கான புன்னகைகளின் சாற்றை உறிஞ்சிக் கொண்டதாகவும் அதன் விளைவாக அது பிறந்ததிலிருந்து புன்னகைக்கவும், மற்றவர்களை நேசிக்கவும் கற்றுக் கொண்டதாகவும் ஓர் ஐதீகம் உண்டு.

சவப்பெட்டி தூக்குவோர் நகரத்திலே (Pall Bearers City-PBC) வாழ்ந்து வரும் சோபியா நொசுமி என்பவள் வானவில் கிராமவாசிகளை முற்றாக வெறுக்கிறாள்; மேலும் அவர்களுடைய வானவில் மொழியை வெறுக்கிறாள்; மிகவும் முக்கியமாக அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்வதையும், அவர்களுடைய அழகிய கறுப்பு மேனியையும், அவர்களுடைய சடங்குகளையும் வெறுக்கிறாள்; மொத்தத்தில் அவர்களுடன் எரிச்சலோடு இருக்கிறாள். இந்த விஷயத்தை அவள் என்னைத் தன்னுடைய பங்களாவுக்கு அழைத்து வைத்துச் சொல்லுகிறாள். ‘இதைக் கூறத்தானா ஹெலிகொப்டர் அனுப்பி என்னை இங்கே கூட்டி வந்தீர்கள்?’  என்று நான் கேட்டேன். அத்தோடு அவள் எனக்கு தயாராக வைத்திருந்தது, முழு ஆட்டு வறுவலுடன் பரிமாறப்படும் பிரமாண்டமான மதிய உணவு, அதனையும் சாப்பிட்டேன் (அபூர்வமான புதிய அனுபவம் இப்படியான உணவுப் பந்திகளில் ஒன்றாக இருந்து சாப்பிடுவது).

‘ஸிம்மி துஷானி அன்பு வந்தனங்கள், நான் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்’ என்று எழுந்து நின்று என்னை அவள் வரவேற்றதும், கைகுலுக்கியதும் சங்கோஜமாக இருந்தது. மேலும் அங்கே என்னுடன் ஒன்றாக இருந்து விருந்துண்டவர்களின் பட்டியல் எனக்கு பிரமிப்பை உண்டாக்கிற்று. தத்துவவியல் பேராசிரியர், காலைத் தொடும் வெளிர்நீல நிறமான அங்கி அணிந்து நீண்ட தாடி வைத்திருந்த மதகுரு, இருபத்து மூன்று காவல் நிலையங்களை மேற்பார்வை செய்யும் காவல்துறை ஆணையாளர், பதினெட்டு அதி சிறந்த புத்தகங்களை (அவற்றில் விருது பெற்ற நூல்களும் அடங்கும்) எழுதிய எழுத்தாளர், முழு அதிகாரங்களையும் தன்னுடன் வைத்திருக்கும் ஆள்புல ஆளுநர், ஒழுக்கவியல் சட்டக்கோவையையும், சம உரிமைக் கோட்பாட்டினையும் நிறுவிய நீதிமான், பிரசித்திபெற்ற ஈரல் மற்றும் குடல் சத்திரசிகிச்சை நிபுணர். ‘விஷேட மனிதர்களான இவர்களெல்லாம் ஏன் இங்கே வந்திருக்கிறார்கள்?’ என்று நான் சோபியாவிடம் கேட்டேன். இவர்கள் தனக்குப் பின்னால் பித்துப் பிடித்து அலைவதாகவும், தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளக் காத்திருப்பதாகவும், தான் எதைச் சொன்னாலும் செய்யத் தயாராக இருப்பதாகவும் (கிட்டத்தட்ட தன்னுடைய அடிமைகள்) என்றும் அவள் என் காதுக்குள் கிசுகிசுத்தாள்.

விருந்து முடிந்து விருந்துக்கு வந்த அத்தனை பேரும் இடத்தைக் காலி செய்ததும் சோபியா நொசுமி உரையாடலை ஆரம்பித்தாள்.

‘Birminham Travellers Weekly நான் விரும்பி வாசிக்கும் ஒரு பருவ இதழ் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதுவும் உங்கள் கட்டுரைகள் என்றால் எனக்கு கொள்ளை ஆசை. மிகவும் ஆர்வத்தோடு வாசிப்பேன். அண்மைக்காலமாக நீங்கள் எழுதி வரும் உலகின் மறைந்துள்ள கிராமங்கள் (World’s Hidden Villages) என்ற தொடர் மிகமிக அற்புதமாக இருக்கிறது. இதுவரை சுமார் பன்னிரண்டு கிராமங்களைப் பற்றி எழுதிவிட்டீர்கள், அப்படித்தானே’

நான் (இத்தனை ஆயிரம் மைல் கடந்து எனக்கு ஒரு வாசகர் என்ற மிதப்புடன்) ‘ஆமாம்’ என்றேன்.

‘அடுத்த இதழில் வானவில் கிராமத்தைப் பற்றி எழுதப் போகிறீர்கள், என்ற அறிவித்தல் வெளிவந்துள்ளது’

‘வாஸ்தவம் தான்’ என்றதும் அவள் சொன்னாள்.  ‘நீங்கள் வானவில் கிராமத்தைப் பற்றி எதுவும் எழுதக்கூடாது’

நான் திடுக்கிட்டவளாக ‘ஏன்?’ என்று கேட்க அதன் பின்னால் சோபியா நொசுமி நான் நினைத்திருந்த வானவில் கிராமத்தின் வெளித்தோற்றம் மற்றும் அது பற்றிய மயக்கம் முற்றாக மாறிப்bபோகும் வகையில் சொன்ன கதை விளக்கம் காரணமாக நான் குழம்பிப் போனேன்.

‘ஸிம்மி துஷானி நீங்கள் வானவில் கிராமத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் பிம்பங்கள் எல்லாம் போலியானவை. அது ஒரு கிராமமாகவே இருக்கவில்லை. அது சாமான்யர்கள் வாழும் இடமும் அல்ல; அவர்கள் அன்பினால் கட்டுண்டவர்களும் அல்லர். சுத்தமான மொழியில் சொல்லப்போனால் அவர்கள் விஷக் கிருமிகள். நீங்கள் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த மலைக் குன்றுகளுக்கிடையான அந்த இடம் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் (Hideout) ஒளிந்து கொள்ளும் இடமாக இருந்தது. தீவிர மூளைக்காய்ச்சல் ஒன்றினால் பாதிக்கப்பட்ட ஒருவனின் மூளையின் முன்பகுதி மோசமாக  சேதத்துள்ளாகியதால் அவனின் பரம்பரையில் வந்த அத்தனை பேரும் பைத்தியக்காரர்கள் போல் நடக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படிப் பைத்தியமாகி துரத்தப்பட்டவர்கள் தான் வானவில் கிராமத்தில் வாழ்கிறார்கள்’ என்று பேசிக் கொண்டே போனாள், சோபியா நொசுமி.

‘கோபம் தலைக்கேறிய நேரத்தில் ஒருவன் புன்னகைப்பானா? செத்த வீட்டில் ஒருவன் புன்னகைப்பானா? பிரசவ வேதனையின் போது ஒருத்தி புன்னகைப்பாளா? கணவனின் சடலத்துக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு மனைவி புன்னகைப்பாளா? இப்படியெல்லாம் எதிர்பார்க்கின்ற கூட்டத்தை பைத்தியக்காரர்கள் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பதாம், என்ன நான் சொல்லுவது சரி தானே’

‘சரி தான்’

‘இந்த முட்டாள்களைப் பற்றி வீணாக எழுதி உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு எங்கள் தொலைக்காட்சியை ஏற்பாடு செய்து தருகிறேன். ஸிம்மி துஷானி உங்களிடம் போதியளவு திறமை இருக்கிறது. உங்களைப்  பெரிய  ஆளாக நிச்சயமாக மாற்றிக் கொள்ள முடியும். தவிரவும் ஏற்கனவே வானவில் அபாயகரமான சின்னம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெயரை இப்போது உச்சரிப்பதுவும் குற்றமாகும். வானவில்லைப் பற்றி நீங்கள் எழுத ஆரம்பித்தீர்களென்றால் சட்டம் உங்களைச் சும்மா விடாது’ என்றாள், நொசுமி.

அவள் விவேகமாகவும், நுட்பமான சொற்களைப் பிரயோகித்தும், நுண்ணறிவுடனும், யாராலும் இடையீடு செய்ய முடியாதபடி தர்க்கத்திறனுடனும், கண்களை ஊடுருவியும் பேசியதால் நான் பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நின்றேன். உண்மையில் நான் என்னை ஊடகவியலாளர் என்று சொல்லுவதைக் காட்டிலும் சோபியா நொசுமியைத் தான் சொல்லுவேன்.

தனது கையில் அற்புதமான சொல்லாடல்களைக் கொண்ட அகராதி ஒன்றை வைத்திருக்கும் தோரணையில் பொருத்தமான சொற்களைத் தெரிந்தெடுத்து என் மூளையின் ஒவ்வொரு நியூட்ரோன் கலங்களையும் வசீகரிக்கும் விதத்தில் (ஆனால் அந்தச் சொற்கள் மென்மையான அன்பின் வெளிப்பாடு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்) அவள் பேசியதன் அர்த்தம், நான் அதிகாரம் செய்யப் பிறந்தவள் என்ற தொனியை மிகவும் உறுதியாக வெளிப்படுத்துவது தான். யாரும் மீற நினைக்கக் கூடாது என்ற அர்த்தமும் தான்.

அவள் அமர்ந்திருக்கும் இருக்கையைப் பார்ப்பதன் மூலம் அவளை விளங்கப்படுத்தலாம். அது Ekones Stressless Magic office Chair எனப்படும் சுமார் 3500 டாலர்கள் பெறுமதியான ஓர் ஆடம்பர இருக்கை. அதன்மீது சோபியா நொசுமி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறாள். சவப்பெட்டி தூக்குவோர் நகரத்தில் அவள் வியப்பூட்டும் அழகி என்று செல்லமாக அழைக்கப்படுகிறாள். வியப்பூட்டும் அழகி என்பதன் பொருள், தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக சோபியா நொசுமி சகல அழகுராணிப்  போட்டிகளிலும் வெற்றிவாகை சூடி வருகிறாள்.

அவளுடைய முகம் மிக்க கவர்ச்சியானது என்பதையும், அவளிடம் உள்ளத்தைச் சுண்டியிழுக்கும் விழிகள் இருக்கின்றன என்பதையும், மந்திரவாதிகளுக்கே மட்டும் உரித்தான நீண்ட நாசிக்கு அவள் சொந்தக்காரி என்பதையும் ஏற்கனவே அவளைச் சுற்றிச் சுற்றி வரும் அந்த ஏழு மனிதர்களும் அடிக்கடி ஞாபகப்படுத்தி வருவதாக சோபியா என்னிடம் சொல்லியிருந்தாள்.

என்னுடைய பெறுமதி வாய்ந்த கட்டிளமைப் பருவத்தை சவம் தூக்குவோர் நகரத்தில் கழிப்பது குறித்து நான் பெருமையடைகின்றேன். என்னுடைய நேர்காணலை PBCTV என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது குறித்தும் நீங்கள் அமோகமான ஆதரவை அதற்கு தந்தது குறித்தும் நான் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். வானவில் என்பது மழை பெய்த பின் வானத்தில் தோன்றும் ஓர் இயற்கை நிகழ்ச்சியாகும். அதனை அண்ணாந்து பார்த்தவாறு மணித்தியாலக் கணக்கில் நேரத்தை வீணாக்குவது மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு மட்டுமே முடியுமாக இருக்கும். இந்த நவீனம் கோலோச்சும் காலகட்டத்தில் நவீனத்தை நிராகரிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை தரிசித்ததின் பின்னரே இக்கட்டுரையை எழுதுகிறேன். வானவில் கிராமம் என்பது விஷக்காளான்களின் பூமியாகும். கிராமத்தைக் காப்பாற்றுவதற்காக அதனை அழித்துவிடுதல் (destroying the village in order to save it) என்ற பிரசித்தமான பொன்மொழியைக் கூறி என் கட்டுரையை முடிக்கிறேன்.

வானவில் வேண்டாம் (No More Raibow) என்ற தலைப்பிலான அதிரடி நடவடிக்கையின் முதற் கட்டத்தை இன்று பூர்த்தி செய்தோம். மதகுரு, அழைக்கப்பட்ட ஏனைய மதகுருக்களோடு வட்டமாகக் கூடி நின்று ‘ஹேய் ஹேய்’ என்று மீண்டும் மீண்டும் சப்தமிட்டவாறே (அவ்வாறே ஒவ்வொருவரும் மற்றவர் தலையில் வேகமாகக் குட்டிக் கொள்வதும் சவப்பெட்டி தூக்குவோர் நகரவாசிகளின் மதச் சடங்காகும்) மதச் சடங்குகளை முடித்ததும் வானவில் வேண்டாம் என்ற சுலோகம் பொறிக்கப்பட்ட பிரமாண்டமான பலூனை வானில் பறக்கவிட்டபின் திடுதிடுப்பென்று வானவில் கிராமத்தில் போய் இறங்கினோம். மொத்தம் மூன்று வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சென்றன. சோபியா நொசுமி அதிரடி நடவடிக்கையை வழிநடத்தினாள். அவள் Jaguar XF மாடல் ஆடம்பர வாகனத்தில் சொகுசாக அமர்ந்திருந்தாள். அதற்குப் பக்கத்து இருக்கையில் நான் வீடியோ உபகாரணங்களோடு அமர்ந்திருந்தேன். இரண்டாவது ஆடம்பர வாகனத்தில் அந்த ஏழு விஷேட மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள். மூன்றாவது வாகனம் வெள்ளையுடை அணிந்த சிப்பாய்களுக்கான ட்ரக் வண்டி.

முதலில் பாடசாலை சென்று கொண்டிருந்த ஒரு மாணவன் சிக்கிக் கொண்டான். அவன் மாணவன் என்பதாலும், அவனுடைய முகத்தில் புத்திசாலித்தனத்தின் சாயல் தென்பட்டதாலும் பேராசிரியர் அவனைப் பொறுப்பெடுத்துக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.

‘வானவில் கிராமத்தின் மாணவனே, வானவில்லில் எத்தனை நிறங்கள் அடங்கி இருக்கின்றன என்று சொல்ல முடியுமா?’

‘ஏழு, ஏழையும் விட அதிக நிறங்கள் இருக்கக் கூடும்.ஆனாலும் கண்களுக்கு வெளிப்படையாகத் தெரிபவை ஏழு நிறங்களாகும். (இப்படியான ஒரு விடையை அதி புத்திசாலித்தனமான மாணவன் ஒருத்தனால் மட்டுமே சொல்லமுடியும்)

‘மிகவும் நல்லது.அந்த ஏழு நிறங்களையும் சொல்ல முடியுமா?’

மாணவன் பதிலளித்தான்.

‘ஒரு குழூஉக்குறி (Pnemonic) இருக்கிறது. அதனைச் சொல்கிறேன். Richard Of York Gave Battle In Vain அதாவது சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா’ என்றான் பையன்.

‘வானவில் கறுப்பு நிறமானது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டார் பேராசிரியர்.

‘நீங்கள் சொல்வது தவறானதும் முட்டாள்தனமானதுமான கூற்று’ என்றான் பையன் இலேசான கோபத்துடன்.

‘சந்தேகமேயில்லை, உன்னுடைய மூளை சரி செய்ய முடியாத அளவுக்கு பிறழ்வு நிலையை அடைந்து விட்டது’ என்று கூறிய பேராசிரியர் கண்ஜாடை காட்டவும் முற்றிலும் வெண்ணிற ஆடை அணிந்த சிப்பாய்கள் அவனுடைய கைகள் இரண்டையும் பின்னால் பிணைத்து கைவிலங்கை மாட்டி ஒலிவ் நிற ட்ரக் வண்டியில் ஏற்றினார்கள். எங்கள் முதலாவது அதிரடி நடவடிக்கை மிகவும் வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்தது. இவ்வாறான மனப்பிறழ்வுள்ள இருபத்தைந்து நபர்களை இன்று கைது செய்தோம். அவர்களில் ஏழு பெண்களும் அடங்குகிறார்கள்.

அன்றிரவு விருந்துபசார வைபவமொன்றில் கலந்து கொண்டிருந்த போது பேராசிரியர் சொன்னார். ‘மாணவனைப் பிடித்துக் கொண்டு போனது பற்றி நீங்கள் சஞ்சலம் அடைய வேண்டியதில்லை  (அவ்வேளை நான் சஞ்சலம் அடைந்ததை அவர் அவதானித்திருக்க வேண்டும்) ஏனென்றால் வானவில் கிராமம் என்பது விஷக்காளான்களின் பூமியாகும்’. பேராசிரியர் மேலும் சொன்னார், ‘வானவில் கிராமம் என்பது விஷக்காளான்களின் பூமியாகும். இது நீங்கள் எழுதிய வசனம் தான். நான் அந்த வசனத்தை மிகவும் விரும்புகிறேன். உங்களைப் போன்ற புத்திசாலியான ஒரு பெண்ணால் தான் இப்படி எழுத முடியும். நான் உங்களுக்கு ஒரு ஆல்பம் பரிசளிக்கிறேன். அழகாகத் தோற்றமளிக்கும் விஷமுள்ள காளான்களின் புகைப்படங்கள். காளானின் குடை பூமியில் தோன்ற ஆரம்பிக்கும் போதே அழித்து விடவேண்டும். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்’.

சின்ன வயதில் நான் யாராகவோ வாழ்க்கையின் உச்சத்துக்கு வர வேண்டுமென்று நிறைய கனவுகளோடு வளர்ந்தேன் என்று சொன்னேன் அல்லவா, .இப்போது நான் யாராக வர விரும்புகிறேன் என்றால் சோபியா நொசுமியைப் போல் ஒரு பெண்ணாக. ஆளுமை மிக்க பெண்ணாக. அவளை நான் இலேசுப்பட்ட பெண்ணாக நினைத்தது தப்பாகப் போய்விட்டது. அவள் அதிரடி நடவடிக்கைகளை கச்சிதமாக திட்டமிடுகிறாள்; அவளிடம் அற்புதமான அதிகார தோரணை இருக்கிறது. யாரையும் அவள் பார்க்கும் போது அவளுடைய விழிகளை எதிர்கொள்ள முடியாது எத்துணை பெரிய மனிதர்களும் தலையைக் குனிந்து கொள்கிறார்கள். தவிரவும் மிகவும் கறாரான பேர்வழியாகவும் இருக்கிறாள். அந்த ஏழு நபர்களைத் தவிர வேறு யாரையும் தன்னுடைய படுக்கை அறைக்குள் அனுமதிக்காத அவள் என்னை மட்டும் அனுமதித்தாள்; தான் அலமாரிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்த அத்தனை இளமைக்கால ஆல்பங்களையும் என்னிடம் புரட்டி புரட்டிக் காட்ட என்னால் பிரமிப்பிலிருந்து மீளவே முடியவில்லை, பாடசாலைப் பருவம் தொடக்கம் கட்டிளமைப் பருவம் வரை இப்போது இருப்பதை விடவும் பன்மடங்கு அழகில் அவள் ஜொலித்துக் கொண்டிருந்தாள். மிகவும் ஆச்சரியமூட்டக்கூடிய சமாச்சாரம் என்னவென்றால் அப்போதெல்லாம் அவள் நூற்றுக்கணக்கான வானவில் நிறத்து ஆடைகளை அணிந்து போஸ் கொடுத்தவாறே நிறையப் புகைப்படங்களை எடுத்திருந்தாள்.

சோபியா நொசுமியிடம் நான் ரசிக்கும் அவளை அண்ணாந்து பார்த்தும் அடக்க முடியாத ஆளுமையின் இரகசியம் என்ன தெரியுமா, இதுதான், இப்படித் துணிச்சலுடன் பேசுவது. என்னிடம் திரும்பி வலதுபக்க பெருவிரலையும், சுட்டுவிரலையும் சொடுக்கி, சுண்டிக் காட்டினாள்.

‘இதன் அர்த்தம் என்ன தெரியுமா?’

‘தெரியாது’

‘எப்பேர்ப்பட்ட ஆண்களும் இவ்வளவுதான். ஒரு கண் சிமிட்டலில் அடங்கி விடுவார்கள்’ என்று சிரிக்கத் தொடங்கினாள் சோபியா நொசுமி.

‘புன்னகையை நான் வெறுப்பவள்’ என்று கர்ணகடூரமான குரலில் உறுமும் இவள், எப்போதும் முகத்தை உம்மென்றும், உர்ரென்றும் வைத்திருக்கும் இவள் இப்படி வாய்விட்டுச் சிரிப்பதை இன்று தான் பார்க்கிறேன்.

அடுத்த அதிரடி நடவடிக்கை சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு ஆரம்பமானது. வெள்ளை நிற அடையணிந்த சிப்பாய்கள் வானவில் கிராமவாசிகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்கள். முதல் வீட்டில் ஓரிளம்பெண் கதவைத் திறந்தாள். சிப்பாய் டார்ச் விளக்கை அவளின் ஆடை மீது பாய்ச்சியதும் ஏழு வண்ணங்களால் பொறிக்கப்பட்டு கிமோனா போன்று தோற்றமளித்த அவளுடைய ஆடை வெளிச்சத்தில் பளபளத்தது.’கண்டுபிடித்து விட்டோம்’ என்று சிப்பாய் கூவினான். ‘வானவில் ஆடையைக் கழற்று’ என்று உத்தரவிட்ட சிப்பாய் கறுப்பு நிறப் போர்வையொன்றை அவளிடம் நீட்டினான். ‘எனக்கு கறுப்பாடை வேண்டாம் வேண்டாம்’ என்று அவள் கூச்சலிட்டாலும் அதனைப் பொருட்படுத்தாத இரண்டு பெண் சிப்பாய்கள் அவளுடைய வானவில் ஆடையைக் கழற்றி, அவளை கறுப்புப் போர்வையால் போர்த்தி ட்ரக் வண்டியில் ஏற்றினார்கள். இப்படி அன்றைய அகால இரவில் சுமார் நூறு பெண்களுக்கு கைவிலங்கு மாட்டினோம்.

புத்திசாலித்தனம் சற்றுக் குறைந்த ஷிலோமியா (அப்படிக் கூறுவதற்கு அவள் என்னை மன்னிக்க வேண்டும், கலங்களின் கருவிலுள்ள நிறமூர்த்தங்களை யாராலும் மாற்ற முடியாது தானே.) எனக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தாள்.

அன்புத் தோழி ஸிம்மி துஷானிக்கு,

நீ இங்கு வந்து சென்றபின் நிறைய விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுவிட்டன. சுருக்கமாகச் சொல்லப்போனால் வானவில் கிராமவாசிகளான நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முதலாவது விஷயம் என்னுடைய திருமணம் நின்று போய்விட்டது.  எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டவரைப் பற்றிய விபரங்களை நான் உன்னிடம் கூறியிருக்கவில்லை. இப்போது கூறுகிறேன். அவன் என் பால்ய வயது நண்பன். எனது குடும்பமும் அவனுடைய குடும்பமும் அருகருகே வாழ்ந்து வந்தோம். இருவரும் சின்ன வயதிலிருந்தே கொய்யா மரத்திலேறி பழங்கள் பறித்துச் சாப்பிட்டோம்; காடுகளில் விளையாட்டுத் துப்பாக்கியால் குருவிகள் சுட்டுத் திரிந்தோம்; நாவல் பழங்களும், பலாச்சுளைகளும் உண்டு மகிழ்ந்தோம்; அருகிலிருந்த ஓடையிலே ஒன்றாகவே நீராடினோம்; ஒரு சைக்கிளிலேயே இருவரும் பாடசாலை சென்று வந்தோம்; இத்துணை அன்புப் பிணைப்புடன் வாழ்ந்து வந்த எங்களுக்கிடையில் காதல் உண்டானதில் வியப்பில்லைத்தானே. ஒருநாள் என்னுடைய பெற்றோர் என்னிடம் அவனைத் திருமணம் முடிக்கிறாயா என்று கேட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.

அவர் அண்மையில் தான் பல்கலைக்கழகத்திலே அழகியல் பட்டப்படிப்பை முடித்து பொருத்தமான தொழிலொன்றிற்காக காத்திருந்தார். பல்கலைக்கழகம் செல்லும் முன்பாகவே வானவில் ஓவியங்கள் வரைவதில் அவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்த காரணத்தால் வானவில் கிராமத்தில் என்ன கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக இருந்தாலும் அவருடைய ஓவியங்களால் அந்நிகழ்வுகள் களைகட்டின. எந்தளவுக்கு அவர் புகழ் பெற்றிருந்தார் என்றால் ‘வானவில் அதிஉயர் கதாநாயகன்’ என்ற செல்லப் பெயரிட்டு கிராமவாசிகள் அவரை அழைத்தார்கள்.

அவர் வீட்டிலே சிறிய ஓவியக் கூடமொன்றை வைத்து அதற்குள்ளே தானும் தன்பாடுமாக நாள் முழுவதும் ஓவியம் வரைவதிலேயே தன் வாழ்க்கையை கழித்து வந்த அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் ஒருநாள் திடீரென்று துரதிர்ஷ்டம் பீடித்துக் கொண்டது. இது அவரை மட்டும் பீடித்த கஷ்டகாலம் அல்ல, எங்கள் மொத்தக் கிராமத்தையே பீடித்த கொடிய சோதனை.  நிம்மதியாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த நாங்கள் இப்போது நிம்மதியற்று நாங்கள் இறந்துவிடுவோமோ என்று துடித்துக் கொண்டிருக்கிறோம். சவப்பெட்டி தூக்குவோர் நகரத்தில் வாழ்ந்து வரும் சோபியா நொசுமி என்பவள் தன்னுடைய ஆட்களுடன் வந்து அவரைப் பிடித்துக் கொண்டு போய்விட்டாள். அதுமட்டுமல்ல ஓவியக்கூடத்தில் இருந்த தூரிகைகள், வர்ணப்பெட்டிகள், படவரைபுப் பலகை, கான்வாஸ் துணிகள், ஓவியம்தாங்கிக் கம்பி, அக்ரிலிக், எண்ணெய்கள், மைகள், பெலட்டுகள் (palettes), வார்னிஷ், நீர் வர்ணங்கள், மஸ்கனைட் பலகை   என்று அவர் நீண்ட காலமாக சேகரித்து வைத்த அத்தனை உபகரணங்களையும், வரையப்பட்டிருந்த அத்தனை ஓவியங்களையும் தீக்கிரையாக்கி விட்டுச் சென்றிருக்கிறாள். மிகவும் முக்கியமாக வெளிநாட்டிலிருந்து வரவழைத்த How to paint like Turner என்ற அற்புதமான ஓவியப் புத்தகமொன்றையும் எரித்து விட்டாள். அவரை எங்கு அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று இன்று வரை யாருக்குமே தெரியாது. என் திருமணமும் நின்று போயிற்று.

இப்போது நாங்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாடப் புத்தகங்களிலிருந்து வானவில் ஏழு நிறங்களைக் கொண்டது என்று வரும் கூற்றுகளெல்லாம் எடுக்கப்பட்டுப் போயிற்று. ஆசிரியர்கள் அச்சத்தின் காரணமாக வானவில் கறுப்பு என்று வகுப்புகளில் கற்பிக்கிறார்கள். மாணவர்கள் யாருமே இப்போது சித்திரப்பாடங்களுக்குச் செல்வதில்லை. ஏனென்றால் வர்ணப்பெட்டிகள் வைத்திருக்கும் அத்தனை மாணவர்களிடமும் அவர்கள் சிறுவர்களாயிருந்தால் கூட தடாலடியாக கேள்விகள் கேட்டு அவர்களின் பிஞ்சுக் கரங்களில் விலங்குகளை மாட்டுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக வானவில் தோன்றும் நாட்களில் இப்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதையும் கிராமவாசிகள் தவிர்த்து வருகிறார்கள். ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்த வானவில் களியாட்டம் முற்றாக நின்று போயிற்று.

வானவில் களியாட்டம் நடைபெறும் மைதானத்தில் இப்போது இறைச்சி மடுவம் ஒன்றைக் கட்டுகிறார்கள். வானவில் கிராமவாசிகள் ஒருபோதும் இறைச்சி சாப்பிடுவதில்லை. கிராமவாசிகள் ஆட்சேபித்தபோது யாரும் அதனை லட்சியம் செய்யவில்லை. யாராவது கிறுக்குப் புத்தியுள்ளவர்கள் கட்டடத்தை நிர்மாணித்துக் கொண்டிருக்கும் கட்டடத் தொழிலாளர்களிடம் போய்க் கேட்டால் ‘நீங்கள் கவலைப்பட வேண்டாம். அறுத்த இறைச்சியை அவர்கள் தங்கள் ஊருக்குக் கொண்டு போய் விடுவார்கள்’ என்ற இறுமாப்பான பதில் அவர்களிடமிருந்து வருகிறது.

போன வாரம் ஊருக்குள் நுழைந்த சிப்பாய்கள் யாரும் புன்னகைக்கக் கூடாது என்று அரசாங்கம் சட்டம் போட்டிருப்பதாகவும் யாராவது அதனையும் மீறிப் புன்னகைத்தால் பிளேடுகளால் உதடுகள் அறுத்தெறியப்படும் என்று எச்சரித்து விட்டுப் போயிருக்கிறார்கள். நீங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும். இந்த விதியை ஒருபோதும் வானவில் கிராமவாசிகளால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இடுப்பெலும்பு உடைந்து படுத்த படுக்கையில் இருப்பவர்கள் கூட புன்னகைக்காமல் இருப்பதில்லை. கணவனை இழந்த விதவைப் பெண்கள் பின்பற்றும் சம்பிரதாயம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள் மக்கள் மரணத்தை எப்போதும் களியாட்டம் போல் கொண்டாடப் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

கணவன் இறந்தவுடன் விதவைப் பெண்னைச் சுற்றி தோழிகள் அமர்ந்து கொள்வார்கள். அமர்ந்து கொண்ட தோழிகள் இறந்து போனவரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தனை புகைப்படங்களையும், நினைவுச் சின்னங்களையும் ஓரிடத்தில் சேகரித்து காட்சிக்கு வைத்து நீ ஓர் அற்புதமான மனிதனுடன் வாழ்க்கை நடத்தியிருக்கிறாய் என்று ஆரம்பிக்கும் தோழிகள் அவனுடைய நற்குணங்களையும் குணாதிசயங்களையும் குறித்து புகழ்ந்துரைப்பார்கள், எந்தளவுக்கென்றால் விதவையின் முகத்தில் மந்தஹாஸமான புன்னகை பூக்குமட்டும். இத்தனையையும் மீறி அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் பீறிட்டு வரக்கூடிய தருணங்களில் கண்ணீர்த் துளிகளைத் துடைத்து விடுவதற்காக அருகிலே  உறவினர்கள் தயாராக இருப்பார்கள்.

‘மரணம் என்பது இன்னுமொரு புது வாழ்க்கைக்கான ஆரம்பம்’ என்ற எங்கள் மரபு நொறுக்கப்பட்டு எங்கள் கண்களில் பொலபொலவென்று வடியும் கண்ணீரைக் காண்பதற்காக சிப்பாய்கள் இப்போது இங்கே வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரவில் எந்த நேரமும் கதவைத் தட்டுகிறார்கள்; விடியும் வரை தூக்கக் கலக்கத்தில் இருக்கும்போதே விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?

சவப்பெட்டி தூக்குவோர் நகரத்தில் மிகவும் முக்கியமான மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் சோபியா நொசுமியும் அவளுக்குப் பின்னால் பித்துப் பிடித்தலையும் அவளுடைய அந்த ஏழு சீடர்களும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஒரு தந்தையும் மகனும் இருக்கிறார்கள், அவர்கள் தான் மிகவும் முக்கியமான மண்ணின் மைந்தர்கள். அவர்கள் பரம்பரை பரம்பரையாக மக்களால் புகழப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகிறார்கள்.

நகரத்தின் எல்லா வரலாற்றுப் புத்தகங்களிலும் அவர்களின் பிரசித்தி பெற்ற உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு உரையாடலும் தந்தை மகனைப் பார்த்து பின்வருமாறு முடிவுறுத்தப்படும். ‘மகனே, கீர்த்தி வாய்ந்த எங்கள் பரம்பரையின் இரத்தம் உன் இரத்தத்தில் ஓடுகிறது. அது மிகவும் தூய்மையானது. அந்தத் தூய்மை தூய்மையான திருமணத்தால் மட்டுமே நிச்சயிக்கப்படும். நீ எப்போதாவது திருமணம் செய்துகொள்ளப் போகும் உன் மனைவியின் இரத்தம் என்னுடையதைப் போலவும் உன்னுடையதைப் போலவும் தூய்மையாகவே இருக்க வேண்டுமேயன்றி இரத்தம் அழுக்கான அல்லது முன் மூளையில் நோய் பீடித்த பெண்களை (முக்கியமாக வானவில் கிராமவாசிகளை) திருமணம் செய்து பாவத்தைத் தேடிக்கொள்ளாதே’ என்று முடியும்.  இந்த உபதேசம் பரம்பரையாக சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

சவப்பெட்டி தூக்குவோர் நகரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற உற்சவமான ‘சவப்பெட்டிச் சடங்குக் கொண்டாட்டம்’ எப்படி நடைபெறும் என்பதை விவரிக்கிறேன். நூற்றுக் கணக்கான நகரவாசிகள் பிரமாண்டமான சவப்பெட்டிக் கொடியைத் தாங்கிய வண்ணம் சுலோகங்களையும் சத்தமாகக் கூச்சலிட்டுக் கொண்டே முன்னே நடக்க பின்னால் நூற்றுக் கணக்கான நகர வாசிகள் சவப்பெட்டிகளைத் தூக்கியவாறு பின்னே செல்வார்கள். எல்லோரும் சரிவான பாதையிலே மலையுச்சியை நோக்கி ஏற வேண்டும்.வயோதிகர்கள் அல்லது தாடி வளர்த்து ஞானவான்கள் போல் தோற்றமளிப்பவர்கள் மலையடிவாரத்தில் தங்கிக் கொள்ளலாம். ஆனால் அது நகர ஆண்மைத்தன்மைக்கு அழகல்ல என்ற பொதுவான அபிப்பிராயம் இருப்பதால் மூச்சிரைக்க மூச்சிரைக்க அத்தனை பேரும் உச்சியை அடையவே விரும்புவார்கள்.

தடித்த இரும்பினாலான சப்பாத்தும், வெளிர் நீலநிற நீண்ட அங்கியும் அணிந்து வரும் மதகுருமார்கள் மெளனமாகத் தலையைக் குனிந்தவாறும் கண்களை மூடியவாறும் ஒருவிதமான மோனநிலையில் நடந்து செல்வார்கள் (கண்களை மூடி நடக்கும் பயிற்சி மூன்று வருடங்களுக்கு ஆசிரமங்களில் வழங்கப்படுகிறது. கண்களை மூடி நடக்கும் போது சவப்பெட்டி தூக்கும் நகரத்தைச் சாராத கெட்ட இரத்தமுள்ள ஆத்மாக்களை அடையாளங்கண்டு கொள்ளமுடியுமென்பது அங்குள்ள ஐதீகம்.).

மலையுச்சியை அடைந்ததும் கிழக்குத் திசையில் காணப்படும் மிகவும் ஆழமான சவப்பெட்டிப் பள்ளத்தாக்கின் உயரத்தை வந்தடைந்ததும் இனித்தான் உண்மையான உற்சவம் ஆரம்பமாகப் போகிறது. அதுவும் மிகப் பயங்கரமான கூச்சலோடும் ஆரவாரத்தோடும் உற்சவம் ஆரம்பமாகும். இப்போது தான் நடனப் பெண்களும் பாட்டோடு  கும்மாளமிட்டு இடுப்பை அசைத்து அசைத்து ஆடுவார்கள். உச்சிக்கு ஏற்றப்பட்ட அத்தனை சவப்பெட்டிகளையும் ஒவ்வொரு சவப்பெட்டியாக பள்ளத்தாக்கில் தள்ளிவிடுவார்கள். டொங் என்ற சப்தத்துடன் அது பள்ளத்தாக்கின் அடியை அடையும் ஓசையை எல்லோரும் மிகவும் சந்தோசத்துடன் கேட்பார்கள். எல்லா சவப்பெட்டிகளும் பள்ளத்தாக்கின் ஆழத்தை அடைந்ததும் பிரமாண்டமான விருந்துபசாரம் நடைபெறும்.

தந்தையின் மகனிடம் வினோதமான பொழுதுபோக்கு ஒன்று இருந்தது. அவன் ஒவ்வொருமுறையும் பள்ளத்தாக்கில் எறியப்படும் சவப்பெட்டிகளின் எண்ணிக்கையை ஒரு குறிப்பேட்டில் எழுதி வந்தான். ஒருநாள் தந்தைக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. மகன் பதறிப் போனான். அயலவர்கள் ஓடோடி வந்து பார்த்தபோது தந்தை மரணத் தருவாயில் இருப்பதை உணர்ந்து கொண்டார்கள். தந்தை மகனின் குறிப்பேட்டைக் கொண்டு வரச் சொல்லி இவ்வருடம் சவப்பெட்டிக் கொண்டாட்டத்தின் போது எறியப்பட்ட மொத்த சவப்பெட்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டச் சொன்னார். மகன் ‘ஒன்பதினாயிரத்து ஐநூறு’ என்று சொன்னதும் தந்தை பேச வந்ததைப் பேச முடியாமல் விட்டாலும் மகிழ்ச்சியுடன் கண்ணை மூடினார். (தந்தை பேச நினைத்தது இதுதான், ‘மகனே உனக்குத் தெரியாத இரகசியம் ஒன்றைச் சொல்கிறேன். முன் மூளை வளர்ச்சி குன்றிய வானவில் கிராமவாசிகளின் சவப்பெட்டிகளைத் தான் நாங்கள் ஆழமான பள்ளத்தாக்கில் இதுவரையில் எறிந்து வந்தோம். அவர்கள் இப்போது முற்றாக அழிந்துவிட்டார்கள். இனி உனக்கு வரக்கூடிய மனைவி தூய இரத்தத்தைக் கொண்டவளாக இருப்பாள்)

சோபியா நொசுமி தான் திருமணம் செய்யப் போவதாகவும் அவசியம் என்னைக் கலந்து கொள்ளுமாறும் செய்தி அனுப்பியிருந்தாள். திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. The Croquembouche என்ற பிரான்சின் மிகவும் பிரபலமான கேக், பிரான்ஸிலிருந்து திருமணத்திற்கென்று வந்த சமையல்காரனால் தயாரிக்கப்பட்டு விருந்தாளிகளுக்கு வழங்கப்பட்டது.  நான் எனக்கு வழங்கப்பட்ட அந்த ஒரு துண்டையும் ரசித்து ரசித்து உண்டேன். அதனை வாழ்க்கையில் ஒரு தடவையேனும் ரசித்துச் சாப்பிடுவதற்கு அதிர்ஷ்டம் வாய்த்திருக்க வேண்டும் என்று நான் உறுதியாகச் சொல்லுவேன். அவ்வளவு ருசியாக இருந்தது.

நான் சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் சவப்பெட்டி தூக்குவோர் நகரத்திற்கு வந்திருந்தேன். திரும்பிச் செல்லும் வழியில் தந்தை- மகனின் வீட்டைக் கண்டதும் உள்ளே நுழைய வேண்டுமென்று என் உள்ளுணர்வு சொன்னது. மகன் என்னைப் பார்த்து புன்னகைத்து வரவேற்றான்  என்றாலும் அது அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கவில்லை. உண்மையில் அது புன்னகையே அல்ல. பார்க்கும்போது வீடு முற்றிலும் வெறுமையாக இருந்தது. உள்ளே தளபாடங்களோ, கட்டிலோ அல்லது சமையலறை உபகாரணங்களோ இருக்கவில்லை. நான் வியப்புற்றவளாக அவனைப் பார்த்து, ‘வீட்டிற்குள் எதையுமே காணவில்லையே. நீ காலை உணவாகவும், பகல் உணவாகவும், இரவுணவாகவும் எதனைச் சாப்பிடுகிறாய்?’ என்று கேட்டேன். ‘நரமாமிசம்’ என்று பதில் சொன்னான் அவன்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close