சிறார் இலக்கியம்
Trending

அருணம் – சிறார் கதை

விழியன்

மாடிப் படிக்கட்டுக்கு கீழே இருந்த பழைய சைக்கிளை தூசி தட்டிக்கொண்டிருந்தாள் வைனா. அவளிடம் ஏற்கனவே ஓடும் நிலையில் ஒரு சைக்கிள் உள்ளது. இது தன்வினுக்கு. அதுவும் ஒரே ஒரு இரவிற்கு மட்டும். ஆமாம் அடுத்த வாரம் சனிக்கிழமை நவிரம் பூங்காவில் ஒரு நிகழ்ச்சிக்காக இதனை ஏற்பாடு செய்கின்றாள் வைனா. ஆமாம் அப்படி என்ன நிகழ்ச்சி பூங்காவில்?

நவிரம் பூங்காவில் நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும். மாலை முழுக்க குழந்தைகளின் சத்தத்தால் அலங்கரிக்கும். சனி, ஞாயிறுகளில் பெற்றோர்களுக்கும் நிகழ்வுகள் இருக்கும். தினமும் வைனா, தன்வின் மற்றும் அவர்கள் நண்பர்கள் அனைவரும் அங்கே சென்று விளையாடுவது வழக்கம். கடந்த சனிக்கிழமை ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். ”சைக்கிளில் ஒரு சுற்றல்”. அதுவும் இரவு 8 மணி முதல் விடியற்காலை 2 வரையில். தேவை இரவு உணவு மற்றும் ஒரு சைக்கிள். வைனாவிற்கும் தன்வினுக்கும் இருப்புகொள்ளவில்லை. ஆனால் தன்வினிடம் இன்னும் சைக்கிள் இல்லை. பணம் சேர்த்துக்கொண்டு இருக்கின்றான். ஆனால் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் அல்லவா அது தான் வைனா சைக்கிளை தயார் செய்கின்றாள்.

அந்த நாள் வந்தது. சுமார் 20 சைக்கிள்கள் 23 குழந்தைகள். சிலர் அக்கா அல்லது அண்ணனுடன் டபுள்ஸ் வருவதாக சொல்லி இருந்தார்கள். பூங்காவை நடத்தும் மதன் அண்ணன் எல்லோரின் பெயர் மற்றும் பெற்றோரின் அலைபேசி எண்ணை பதிவு செய்துகொண்டார். அன்று என்ன செய்யப்போகிறோம் என்று விளக்கினார். இரவு எல்லோரும் ஒன்றாக சாப்பிடப்போறோம், அப்புறம் இந்தியா முழுக்க சைக்கிளில் சுற்றிய குமார் அண்ணன் வரப்போறார், அவரோட கொஞ்ச நேரம் பேசிட்டு இரவு நகரை ஒரு சுற்று சுற்றிவிட்டு வீட்டுக்கு போகப்போறோம். உங்க கூட நம்ம பூங்கா ஆர்வலர்கள் வருவாங்க, பயப்படாதீங்க”. “பயமா, அப்படின்னா என்ன”என்று எல்லோரு கத்தினார்கள்.

சாப்பிட்டு முடிக்கும்போது குமார் அண்ணன் நுழைந்தார். வித்தியாசமான சட்டை அணிந்துகொண்டிருந்தார். குழந்தைகள் மத்தியில் வந்து அமர்ந்தார். அமர்ந்ததும் தான் அவர் தோள் பட்டையில் இருந்த இரண்டு அணில்களை குழந்தைகள் கவனித்தார்கள். டூரோ சிங்கா இறங்கி விளையாடிட்டு வாங்க என அனுப்பி வைத்தார். கொஞ்சம் நீளமான தாடியும் இருந்தது. குமார் அண்ணனைப் பற்றி அறிமுகம் கொடுத்துவிட்டு மதன் அண்ணன் கிளம்பிவிட்டார். அன்றைய தினம் பெளர்ணமி. பூங்காவும் பிரகாசமான விளக்குகளால் வெளிச்சமாகவே இருந்தது.

”நாம ஒரு பதினோரு மணி வரை வானத்தை பார்க்கலாம். எதுவும் யாரும் பேசிக்க வேண்டாம். பூங்காவில் இருக்கும் விளக்குகளை நிறுத்திவிட்டு வானத்தை பார்ப்போம். ஆனா… தூங்கிடக்கூடாது” என்றதும் ஒரே சிரிப்பலை. மணி ஒன்பதரை இருக்கலாம். நகர சாலையில் ஓடும் வாகனங்களின் இரைச்சல் மெல்ல மெல்ல குறைந்தது. வைனாவிற்கு வானத்தை இப்படி பார்ப்பது மிகவும் பிடித்து இருந்தது. குழந்தைகளிடையே நிலவிய குசுகுசு பேச்சும் மெல்ல அடங்கியது. வானம், நிலா, மேகம், நட்சத்திரங்கள்.. அது ஒரு தியானம் போல இருந்தது.

பொயிங்.. பொயிங். நகரைவிட்டு சென்ற கடைசி பேருந்து சத்தமிட்டபடியே கிளம்பியது. “குட்டீஸ் வாங்க சைக்கிளை எடுங்க” என்றார் குமார் அண்ணன்.  குமார் அண்ணனின் சைக்கிள் விளையாட்டு சைக்கிள் போல இருந்தது. பார்க்கவே ஆசையாக இருந்தது. நிறைய வண்ணங்கள். முன்னிருக்கையில் குட்டி பையன் சங்கர் அமர்ந்துகொண்டான். “வேகமா வேண்டாம் மெதுவா ஓட்டுங்க” என்றார். எல்லோரும் அவரை பின் தொடர்ந்தார்கள். சைக்கிள்கள் பள்ளியின் மைதானத்தில் நின்றன. சிமெண்ட் இருக்கையில் எல்லோரையும் அமர்த்தினார். “இப்ப ஒரு சின்ன செயல்பாடு. கண்ணை மூடிகிட்டு நீங்க கேட்கும் சத்தங்களை எல்லாம் கேட்டு என்னென்ன கேட்குதுன்னு சொல்லணும் என்றார்.

தூரத்தில் குறைக்கும் நாய், காற்றில் ஆடும் இலை, எங்கோ செல்லும் லாரி, வெகுதூரத்தில் திரையரங்கிலிருந்து ஒரு சன்னமாக பாடல் என எண்ணிக்கை முப்பதை தொட்டது. சர்கிள் இன்ஸ்பெக்டர் மார்த்தாண்டம் அங்கே வந்து சேர்ந்தார். அவரும் சைக்கிளில் வந்திருந்தார். அவர் மகனும் அந்த குழுவில் இருந்தான். அவன் தான் அவனுடைய அப்பா சைக்கிளில் வரவேண்டும் என சொல்லி இருக்கின்றான். அங்கிருந்து அவர்கள் ரயில் நிலையத்திற்கு சென்றார்கள். பகலில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நிலையம் அது. இரவு அவ்வளவு அமைதியாக இருந்தது.

இந்தியா முழுக்க சைக்கிளில் பயணித்தபோது சந்தித்த அனுபவங்களை சொல்லிக்கொண்டே அந்த ஊரில் இருந்த சின்ன மலையை சாலை வழியாக சுற்றி வந்தார்கள். வைனா குமார் அண்ணனிடம் பல கேள்விகளை கேட்டபடியே வந்தாள். மலையை சுற்றிவிட்டு திரும்ப நவிரம் பூங்காவின் வாசலில் குழுமினார்கள். எல்லோருக்கும் இஞ்சி டீயை ஏற்பாடு செய்திருந்தார் இன்ஸ்பெக்டர். காவலர்கள் மற்றும் பூங்காவின் ஆர்வலர்கள் துணையுடன் ஒவ்வொரு குழந்தையின் வீட்டு வாசலிலும் குழந்தைகள் விடப்பட்டனர்.

மறுநாள் காலை எட்டரை.
வைனா அப்பாவின் சத்தத்தை கேட்டு வீட்டிற்குள் இருந்து எல்லோரும் ஓடிவந்தனர். “யார் இதை இப்படி செய்தது?” என கத்தினார். வைனா அப்பாவின் இருசக்கர வாகனத்தின் ஹார்ன் மீது செல்லோடேப் போட்டு ஒட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த தெருவில் அவர் ஹார்ன் அடிக்க பிரபலம். தெருவின் முனையில் வரும்போதே ஹாரன் அடித்தபடி வருவார்.

முன்னிரவு நடந்ததை வைனா கூறினாள். “முடிந்த அளவுக்கு இயற்கையை அப்படியே வெச்சுக்குவே அப்பா. சத்தமில்லாம நகரம் அவ்வளோ அழகா இருந்துச்சு தெரியுமாப்பா”

”சரிம்மா..”

வைனாவின் முகத்தில் சில்லென்ற தென்றல் அடித்தது. அது மரம் அனுப்பிய அன்பு பரிசு.

(அருணம் – அமைதி. நவிரம் பூங்கா – திருவண்ணாமலையில் உள்ளது. அற்புதமான பூங்கா. குமார் அண்ணன் – குமார் ஷா)

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close