சிறுகதைகள்
Trending

அறைகளின் இருவகைக் கதவுகள்

இளஞ்சேரல்

ஒவ்வொரு நாளும் காணக்கிடைக்கிற அதிர்ச்சியில் பல குழப்பமான சித்திரங்கள் வரைபடங்கள் சுவற்றின் மூலைகளில் தொங்கிக் கொண்டிருப்பதைப் போன்றதாக உணர்வேன். சில சமயம் கதவுகளை அடைக்காமல் வைக்க வேண்டும். அல்லது பெயர்த்து வைத்து விடவேண்டும் எனத் தோன்றும். வீட்டிற்கு வருபவர்கள் முதலில் வீட்டு மூலைகளில் படிந்திருக்கிற ஒற்றடைகளைப் பார்த்துதான் அந்தவீட்டில் லட்சணத்தை அறிந்து கொள்வார்களாம்.

”உங்க வீட்ல இத்தனை புஸ்தகங்கள் வெச்சிருந்தா எலிகள் ஒற்றடை ஊஞ்சலாம் படைகள் சிறு சிறு புழுக்கள் வந்துருமே..” எனப் பெண்கள் டிப்ஸ் கொடுப்பதைக் கேட்டிருக்கிறேன்.

என்ன செய்வது எனக்கு கைகள் துழாவுகிற இடத்தில் எதாவது ஒரு புஸ்தகம் இருக்கவேண்டும். ”கேந்தி” என்பார்கள் எங்க பக்கம்.

ஆனால் சில நாட்களாக  கேந்தி மீது இடி விழுகிறதோ எனும் பயம்.

அறைக்குள் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாய் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. காம்பவுண்ட் சுவரையொட்டிய கொய்யா மாதுளை மரங்களில் நாளை பறிக்கலாம் என்றிருந்த பழங்கள் யாரோ அபகரித்துப் போனது போல. சிரட்டைக் கூட்டிலிருந்த குஞ்சுகளில் சில பறந்து  போனது போல. அலமாரிகளில் இருந்த அரிய நூல்களில் பல காலியாகிக் கொண்டுவிட்டதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வகையில் வாசிப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள் என்பதில் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.  குறிப்பாக அபகரித்துக் கொண்டுபோய் வாசிக்கிற பழக்கம் துவங்கியிருப்பதையும் வரவேற்கிறேன். மகிழ்ச்சிதான். நல்ல புத்தகங்களை கைவசம் இருக்கிற புத்தகங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் வந்துவிட்டது. ஆனால் அரிய பல பொக்கிசங்களாக ஆசை ஆசையாக சேகரித்து வைத்த புத்தகங்கள் காணாமல் போவதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

புத்தகங்களைக் காப்பாற்ற எடுக்கவேண்டிய முக்கிய பணிகள் என்பதை யோசிக்கத் துவங்கினேன். படுக்கை அறையையும் புத்தக அறையையும் ஒன்றாகவே வைத்திருந்தேன். அது எல்லாவகையிலும் சௌகரியமாக இருந்தது. இந்த அறைகளில் இருக்கும் பொழுது பெரும் படைபலங் கொண்ட ராணுவக்கிடங்கில் வசிப்பதைப் போன்ற உணர்வு தத்தளிப்பதை அனுபவித்துள்ளேன்.

இன்றும் அப்படித்தான். யாரிடம் போய் வெளிப்படையாகச் சொல்லமுடியும்.. என் புத்தகங்கள் திருட்டுப் போய்க்கொண்டிருக்கிறது என..இப்படித்தான் ஒரு முறை நெருங்கிய நண்பனுடன் குடித்துக் கொண்டிருக்கிற பொழுது போதையில் சொல்லிப்  பார்த்தேன். யாரிடமாவது சொல்லியாக வேண்டும். அதற்கும் முன்பே என்னை கிண்டலாவோ கேவலமாகவோ பார்Lக்கவோ அசூசையாக நிராகரிக்கவோ கூடாது எனக் கேட்டுக்கொண்டு சொன்னேன்..

கேட்டவன் பலமாகச் சிரித்தான். “விட்டுத்தொலை .. உன்னிடம் இருக்க வேண்டியது தங்க வேண்டியது தங்கும். காலம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது..அவனவன் பிளாட் கார் தங்கம் டெபாசிட் வெளிநாட்டு வேலை லக்சுரி லைப். வோர்லட் டுர்.. ன்னு மினிஸ்ட்ரிகளே சுத்திட்டு இருக்கற காலத்துல புத்தகம் இலக்கியம் வாசிக்கறதுன்னு பேசிட்டு இருக்கற.. ஏம்ப்பா நீ மட்டும் இப்படிப் போறே.. நல்ல மூட கெடுத்துட்ட..போ..”

“என்னடா இப்படிச் சொல்லிட்டே.. இந்தப் புத்தகங்களை என் தாத்தாவோட தாத்தா.. தாத்தா அப்பா ன்னு வம்சாவழியில வந்தவங்க பத்திரப்படுத்துன்னு கொடுத்துட்டுப் போனது இந்தப் புத்தகங்கள்..அப்படிப் பட்ட சொத்துக்களை நான் பறி கொடுத்துட்டு இருக்கறன்..அதுதான்..”

“சரிய்யா.. அந்தப் புத்தகங்கள் படிக்க இனியொருத்தருக்குத்தான போயிருக்கு.. அப்பறம் ஏன் பயந்துக்கறே..”

“படிக்கத்தான் எடுத்துப் போயிருந்தா பரவாயில்ல.. அழிக்கவோ எரிக்கவோ பழைய காகிதங்களோட அரைக்கவோ போயிருந்தா என்ன பண்றது…”

“ஆமா.. அப்ப நீ ஒண்ணு செய்.. இனிமேல யாரையும் உன் வீட்டுக்கு வரவழைக்காதே.. உன்னோட பெட் ருமை மாத்திடு.. அந்த புத்தக அறைய சாத்திரு.. அடைச்சு லாக் செஞ்சிடு. கொஞ்ச நாள்.. என்ன நடக்குதுன்னு பாரு..”

பாவம் அவன் வேறுமாதிரி பேச்சுத் துவங்கினான். வீட்டிலிருந்தபடியே மாதம் முப்பதாயிரம் சம்பாதிக்கலாம். உங்களிடம் நெட் கனெக்சன் மற்றும் கம்ப்யுட்டர் உள்ளதா அதுமட்டும் போதுமே. இந்த விளம்பரம் சம்பந்தமாக இது உண்மையா பொய்யா..ஆன்லைன் ஷேர் டிரெடிங்க் ன்னா என்ன என்றே துவங்கிய பேச்சை புஸ்தக கதை பேசி திருப்பிய கோவத்தில் என்னை உதைக்கப் பயந்து பைக்கை உதைத்துக் கிளம்பினான்.

அவன் சொன்ன பிறகு அறைகளைத் தனித்தனியாக்கிக் கொண்டு படுக்கையறையை வேறொரு அறைக்கு மாற்றிக் கொண்டேன். மன உளைச்சலுடன் அன்றைய இரவில் அறையை மாற்றிக் கொண்டு போய்த் தூங்க முற்பட்ட பொழுது உறக்கமே வரவில்லை. அடிக்கடி அறைக்குள் வந்து எட்டு அலமாரிகள் நிறைந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வாசம். அட்டை பென்சில்களால் கோடிட்டது. பல வண்ணத்தில் பிளாப்கள் ஒட்டிக் குறித்து வைத்த குறிப்புகள். எத்தனையோ லெட்டர் பேட்கள். பேனாக்கள். துண்டு துண்டான பாராக்கள். கிறுக்கப் பட்ட ஓவியங்கள். வரைந்த படங்கள். இந்த ஓராண்டில் மட்டும் பல நூறு புத்தகங்கள் காணாமல் போய் மூன்று அலாமாரிகள் காலியாக இருக்கிறது. பயம் காரணமாகவே மேலும் குடித்தால் என்ன . மனம் பரபரத்தது. இரண்டு வகையான வலி ஒன்று.. குடியை மறக்க முடியவில்லை. புத்தகங்கள் களவு போவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இரவு மணி பணிரெண்டரைதான் ஆகிறது. ஒரு மணிநேரம் கூட தூக்கம் பிடிக்கவில்லை. எவ்வளவு நேரம் புரண்டு கொண்டிருக்கிறது. மனைவியும் குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில். உறங்குகிறவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என அதனால்தான் பெரியவர்கள் சொல்லிச்சென்றார்களோ.. புத்தக அறைக்குள் வந்தேன். அலமாரிகளைப் பார்த்தேன். வழக்கமாக வருகிற ஆய்வு மாணவர்களை வாசலிலேயே நிறுத்தி வராண்டாவில் அமர்த்திக் கட்டாயமாகச் சொல்லிவிட்டேன். அவர்களுக்குத் தேவையானவற்றை முன்பே ஒரு குறிப்பு பெற்றுக் கொண்டு எடுத்து வைத்துக் கொண்டு பிறகு அழைத்துத் தருகிறேன். தம்பி நீ…உங்களிடம் சொல்வதற்கென்ன.. இனிமேல் புத்தகங்களை வெளியே தருவதில்லை..இங்கேயே வாசித்துவிட்டு குறிப்புகளை எடுத்துக் கொண்டு செல்லவும்..

அலமாரிகளைப் பார்த்த பொழுது ஒரு அலமாரியில் இருந்த இரண்டு தட்டுகளில் கவிதை என ஒட்டப்பட்ட பகுதிகளில் ஒரு புத்தகத்தையும் காணோம். அதிர்ச்சியில் தலைசுற்றியது. பல தட்டுகளில் அலமாரி அடுக்குகளில் வைத்து விட்டேனோ.. ஊகும்.. எங்கும் இல்லை. எத்தனை கவிதை நூல்கள் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்களைக் காணோம். என்னதான் மாணவர்கள் வாசிக்க வருகிறவர்கள் எடுத்துக் கொண்டு போனாலும் இவ்வளவும் காணாமல் போகுமா என்ன.. எத்தனை  அரிய சேகரிப்பு..ஆங்கிலம் தமிழ் தமிழ் ஆங்கில கவிதைகள். உலக கவிதைகள் இந்திய மொழிகளின் கவிதைகள். வேற்று மொழிக்கு மொழிபெயர்க்கப் பட்ட தமிழ்க்கவிதை நூல்கள். சமகாலத்தில் எழுதிவருகிற முக்கியமான கவிஞர்களின் கவிதைகள். ஓன்றையும் காணோம். அதற்குப் பதிலாக மிகவும் சாதாரணமான துவக்க நிலையில் எழுதப்படுகிற எழுதிப் பழகிக் கொண்டிருக்கிற கவிதை நூல்கள் அப்படியே இருக்கிறது. முதல் நூல்கள்..புதிய நூல்கள். போகப் போகச் சிறப்பாக எழுதுவார்கள் என அனுமதித்து ஆதரித்த கவிதை நூல்கள்.

குறிப்புகள் கட்டுரைகள் பேசுவதற்கு என்று தயார்செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் என ஒன்றையும் காணோம். சரியான உறக்கம் இல்லாத காரணமாக ரத்தநாளங்கள் வேகமாகத் துடிக்கிறது. மனைவியையோ குழந்தையையோ கேட்க முடியுமா. மாணவர்களிடம் வாங்கிய குறிப்புகள் அடங்கிய நோட்டையும் காணோம். எங்கே போனது. மனம் என்பது எல்லாருக்கும் உள்ளது போலவே நமக்கும் சராசரியானதுதான். இழப்பு என்றால் எல்லாம் ஒன்றுதான். யாரிடமும் கேட்க முடியாது. புத்தகம் படிக்கிற எழுதுகிற அறிவுஜீவி எனப் பெயர் பெற்றாயிற்று. இப்பொழுது போய் என் அறையிலிருந்து புத்தகங்கள் திருட்டுப் போகிறது. அதை எப்படிப் பாதுகாப்பது என யாரிடம் யோசனை கேட்பது.  புத்தகங்களை இழக்காமல் இருப்பதற்கு எதாவது செய்துதான் ஆகவேண்டும்.

அலமாரியின் பின் புறத்தில் வைத்திருந்த அந்த பாட்டிலை எடுத்தேன். கைகள் நடுங்கியது. நூலாசிரியர்கள் முகங்கள் அலாமரிகளில் தோன்றியது. குழுவாகச் சொல்கிறார்கள். ”அதை எடுக்காதே..” உள்ளிருந்த திரவம் பாதியாகக் குறைந்திருந்தது. அதன் வசீகரமிக்க தங்கமுலாம் வண்ணமும் பல வகை வண்ணக்குழைவுகளால் ததும்பும் அதன் துவர்ப்பு வாசமும் ஈர்க்கத் துவங்கியது. பற்றியெடுத்துக் கொண்டபொழுது உடலில் ஏற்பட்ட உணர்ச்சி இன்பத்தைச் சொல்லி மாளாதது. சாப்பிடக் கொஞ்சம் பழங்களை வெட்டி வைத்துக் கொண்டு குவளையில் கொஞ்சம் ஊற்றி தண்ணீர் கலந்து முதல் சுவையை அனுபவித்துவிட்டு அலமாரிகளைப் பார்க்கிறேன். நூலாசிரியர்களின் முகங்களுக்கிடையில் குமிழிகள் போல அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறவள் தோன்றினாள்.  முந்தைய சம்பவங்களில் சில மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்து அந்த மாணவியை நிறுத்திவைத்து சில கேள்விகளைக் கேட்கத் துவங்கினேன்.

“வணக்கம் சார்.. நான் உங்க எழுத்துகளைப் படிச்சிருக்கேன்.. நிறைய இலக்கியக் கூட்டங்கள் விழாக்கள்ல பாத்துருக்கிறேன்..”

“நன்றி..ம்மா..நானும் உங்களோட செயல்பாடுகளை கவனிச்சிட்டு வர்றேன்..ரொம்ப ஆக்டிவா சில சமயம் ஆக்ரோசமா செயல்படுறீங்க.. கடுமையா விமர்சனம் பண்றீங்க.. சந்தோசம் ஆனா..நம்ம அரசியல்வாதிங்க.. இப்ப மனிதாபிமானம் பார்க்கறது இல்லை..நம்ம பாதுகாப்பும் முக்கியமில்லையா..”

“நன்றிங்க..சார்;. .நாங்க ஒரு பொது நூலகம் ஆரம்பிக்கறோம்.. நம்ம ஊர்ல இருக்கற நூலகத்துக்கு இப்பல்லாம் புதிய புத்தகங்கள் வர்றதில்லை. ரொம்ப தூரமாப் போக வேண்டியிருக்கு.. அதனால நம்ம குடியிருப்பு காலனியில இருக்கற பூங்காவிலயே ஒரு அறை ஒதுக்கி அங்க புத்தகங்கள் வைக்கலாம்னு இருக்கறோம்.. சோ…உங்க கிட்ட இருக்கற நூல்கள் கொடுத்து உதவினா நல்லா இருக்கும்..”

“அடடா.. எவ்வளவு நல்ல விசயம். உங்களப் போல இருக்கறவங்கதான் புத்தகங்களை புத்தகவாசிப்பை அடுத்து தலைமுறைக்கு எடுத்துட்டுப் போறீங்க.. நிச்சயம்.. நான் உங்க புத்தக சேகரிப்புக்கு புத்தகங்கள் கொடுப்பேன்..சில நாட்கள் ஆகும்.. அதுவரைக்கும் பொறுங்க.. உங்க எண் இருக்கா.. “

“உங்க எண் சொல்லுங்க சார் .ம்..ம்… இது என்னோட எண்.. நீங்க புத்தகங்கள் எடுத்துவெச்சிட்டு அழைங்க நாங்க எங்க நண்பர;களோட வந்து கலெக்ட் பண்ணிக்கறம்..’

“தாராளமா.. உங்களோட நண்பர;களும் இணைந்து செயல்படுகிறீர;களா..”

“ஆமாங்க சார்;.. அரசு ஆரம்பப் பள்ளிகள் உயர;நிலைப்பள்ளிகள்ல இருக்கிறவங்களோட திறமைகளைக் கண்டறிஞ்சு அவங்களுக்கு வாசிப்பு எழுத்து ஓவியம் பாரம்பரியமான சிறார் விளையாட்டு கைவினைக் கலை. சுகாதாரச் செயல்பாடுகள் பற்றின சிறப்பு வகுப்புகள் எடுக்கறோம்..”

“ஓ.. மகிழ்ச்சி..செய்ங்கம்மா.. எப்படிப்பட்டப் புத்தகங்களைத் தேர்வு செய்கிறீர்கள்..”

“எல்லா வகையான புத்தகங்களையும் சேரிக்கிறோம். குறிப்பாக சமகாலத்தின் மிகச் சிறந்த படைப்புகள் எனப் பேசப்படுகிற படைப்புகள் உள்பட பல நூல்களைச் சேகரிக்கிறோம். அதுபோன்ற நூல்கள் உங்களைப் போன்றவர்களிடம்தான் கிடைக்கும். ஆகவே நீங்கள் உதவவேண்டும்..”

“தாரளமாக..வாங்கம்மா.. “

அடுத்தச் சுற்றுக்கான திரவத்தை ஊற்றி வைத்துவிட்டு மிதப்பாகச் சுற்றும் உடலின் வாதையைக் கடத்தினேன். ரத்தஅழுத்தம் அதிகமாயிருக்கலாம். விதையில்லாத பச்சை திராட்சைப் பழங்கள் சிலவற்றைச் சாப்பிட்டுக் கொண்டே அலைபேசியில் முகநூலில் தற்காலிக பரபரப்பின் ஊடே கவனத்தைத் திருப்பினேன். இலக்கியச் சண்டைகளில் பலருக்கும் இருக்கும் ஆர்வத்தைக் காணமுடிந்தது. இதே சிற்றிதழ் காலமாக மரபாக இருந்திருக்குமானால் பல முக்கியமான கட்டுரைகள் வாசித்திருக்கலாம். ஆனால் இப்பொழுதோ நாயே பேயே.. எனத்துவங்கி சகட்டு மேனிக்கு ஆபாச வசவுகள் இலக்கியவாதிகளிடம் புழங்குகிறது. சில கவிதைகள் நம் நெருங்கிய நண்பர்கள் பதிந்திருந்தார்கள். வாசித்துவிட்டு விருப்பம் தெரிவிக்கிறேன். சென்ற ஞாயிறன்று சந்தித்த அந்தப் பெண்ணின் முகநூல் பக்கத்தில் தான் சேகரிக்கும் புத்தக சேகரிப்பு பற்றிய விபரங்களும் இருந்தது. அந்தப் பெண்ணின் முகநூல் பக்கம் சென்று படித்தபொழுது அவருடைய செயல்பாடுகள் ஆச்சர்யம் மிக்கதாகவே இருக்கிறது. சமகாலத்தின் புதினங்கள் கவிதைகள் சமூக செயல்பாடுகள்  இயக்கங்கள் எனத் தன் நண்பர்களுடன் இணைந்து இயங்கிவருவதைச் சொல்கிறது அவருடைய பக்கம். இந்த புகழ் அபகரிப்புச் சண்டைகள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தன் இயக்கப்பணிகளில் ஈடுபட்டுச் செயலாற்றுகிறவராகவே அறிய முடிந்தது. சில சமூக அரசியல் கவிதைகள் கூட எழுதியிருப்பதை வாசித்துப் பார்த்தேன்.. இந்த இளம் வயதில் சமூகத்தின் இயல்புகள் எழும் கோபத்தைக் காணமுடிந்தது.

உறக்கம் கண்களைச் சுருட்டியபோன்ற உணர்ச்சி. தளர்வாக உணர்கிறேன். ஒருவாறு தள்ளாடியபடியே எழுந்து பாட்டிலை அதற்குரிய பத்திரமான புத்தக அலமாரியின் பின்புற இடத்தில் வைத்துவிட்டு குவளையை கழுவிவைத்துவிட்டு இரு தலையணைகளையும் உபயோகித்துக் கொண்டு அலமாரிகளைப் பார்த்துக் கொண்டே கண்களை மூடுகிறேன். களைப்படைந்திருந்த ஞானம் உறக்கத்தின் விழிப்பை உயிர்க்கிறது.

ஆச்சர்யமா உண்மையாகவா ..அதிர்ச்சியாவெனத் தெரியவில்லை.

அலமாரிகள் முழுக்கவும் நூல்கள் நிரம்பியிருப்பதைக் காண்கிறேன். ஆறு அலமாரிகள் முழுக்க அடைத்து வைக்கப்பட்ட புத்தகங்கள். காலியாகியிருந்த தட்டுக்களில் காணோமே என வருந்திய நூல்கள் அடுக்கில் இருக்கிறது போன்ற காட்சிகள். உள்ளத்தில் பொங்கிய உற்சாகமும் அசாத்தியமான வெற்றியை அடைந்த குதூகலமும் கொண்டு அலமாரிகளுக்குஅருகில் போனால் ஆம்..அதே நூல்கள். எழுதிய காகிதங்கள். காகிதங்கள். ஆமாம் என் அலமாரிகளில் இருந்த நூல்கள் அதே இடத்தில்தான் இருக்கிறது. தேவையில்லாமல் நான் குழம்பிப்போய்க்கிடந்தேன். மேலும் சில மிடறுகள் குடித்தேன். ஆசையாக எனக்குப் பிடித்த நூல்களை ஒரு முறை எடுத்துப்பார்த்துவிட்டு அந்த மகிழ்வில் களைப்பிலேயே ஆனந்தக் கூத்தாடுகிறேன். இதே எல்லாம் உள்ளது.. ஒரு இரவில் என்னென்னவோ நடக்கும் என்பார்களே..இதுதானா அது. சித்த பிரமையோ இது.

அலைபேசி அழைத்த எண்கள் அந்தப் பெண்ணுடையது. ஆம். நூல்கள் சேகரிப்பதாக கேட்டது நினைவுக்கு வருகிறது.

“வணக்கம்மா..சொல்லுங்க..நலமா..”

“நலம் சார;.. இன்று உங்கள வீட்டுல வந்து சந்திச்சிட்டு நீங்க கொடுக்கிற நூல்களை வாங்கிட்டுப் போகலாம்ணு இருக்கோம் சார;.. வரலாங்களா..”

“ஓ..தாரளமா வாங்கம்மா..”

இரண்டு வாகனங்களில் நான்கு பேர் வந்தார்கள். இரண்டு ஜோடிகளாக. இந்த இளம் வயதில் புத்தகம் வாசிப்பு நூல்கள் என பேசுகிறவர்களைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. போதும் இவர்கள் நான்கு பேர். போதாதா..வாசிப்பு நீடிப்பதற்கு. நவநாகரீக உடை அணிந்திருக்கிறார்கள். நிச்சயமாக தமிழ்மொழியின் வளத்தையும் நாட்டையும் தேசத்தையும் நேசிக்கிறவர்களின் குடும்பங்களிலிருந்து இவர்கள் வந்திருக்கவேண்டும். ஒரு இளைஞன் சேகுவாராவின் உருவம் பொதித்த கருப்பு பனியன் அணிந்துள்ளான்.

“வாங்க..உள்ள வாங்க..” காலனிகளைக் கழற்றிவிடும் இடங்களில் கூட மலைமலையாக குவிந்திருக்கிற பழைய நாளிதழ்கள் புத்தகங்கள் காலாண்டு மாத பருவ இதழ்களைக் காண்கிறாரகள். வரவேற்பு அறை தாண்டி என் நூலகம் ஒட்டிய படுக்கையறையில் இருக்கிற நாற்காலிகளில் அமர்ந்து கொள்கிறார்கள். காற்றாடியை வேகமாக வைத்தேன். வீட்டில் இருந்த மனைவியை அறிமுகம் செய்து வைத்தேன். தேநீரும் சாப்பிடப் பிஸ்கட்டுகள் கொண்டு வந்து வைத்தார்;. மனைவியின் முகத்தில் பாவம் இவர்கள் என்பது போன்ற பாவனை.

ஓவ்வொருவரும் நிகழ்த்திக் கொண்ட எளிய உரையாடல்களுக்கும் மத்தியில் நடப்பு சமூகப்பிரச்சனைகள் பற்றியும் பொதுவிவாத தளங்கள் பற்றிய முரண்களும் வராமல் இல்லை. பேச்சு நகர்ந்தது. நூல்கள் சேகரிப்பில் உள்ள சிரமங்களை அவர்கள் விவரித்தார்கள். பல முக்கியமான இலக்கியவாதிகள் தங்களிடம் இருக்கிற மிக நல்ல நூல்களைத் தாங்களே வைத்துக் கொண்டு மிக சாதாரணமான நூல்களைத் தருகிறார்கள் என்றார்கள். தங்களிடம் இருக்கிற அருமையான நூல்களைத் தருவதில்லையே ஏன் என்கிறாள் அந்தப் பெண்..

“எங்களுக்குத் தரவேண்டிய நூல்களைப் பிரித்து வைத்துவிட்டீர்களா சார;..”

“ அப்படியாக நான் எதையும் பிரித்துவைக்கவில்லை. நீங்கள் இங்கிருக்கிற அலமாரிகளில் உங்கள் ஆர்வத்திற்கும் வாசிப்புக்கும் தேவையான நூல்களை எடுத்துக் கொள்ளுங்கள்..”

“உண்மையாகவா சொல்கிறீர்கள். எதற்கும் நீங்களே எடுத்துக் கொடுத்தால் சௌகரியமாக இருக்கும்..உங்களுடைய வாசிப்புக்கு என தேர்வு செய்து வைத்திருப்பீர்கள்..அதை நாங்கள் எடுத்துக் கெர்ண்டு போய்விடக் கூடாதல்லவா..”

“பரவாயில்லை நண்பர்களே..எடுத்து வையுங்கள் பார்க்கலாம்.. உங்கள் தேர்வுகள் மூலமாக உங்கள் வாசிப்பு ஆர்வத்தையும் கண்டு கொள்ளலாம் அல்லவா..”

அவர்களுடைய தேர்வே ஆச்சர்யமாக இருந்தது. சமீபத்தில் வெளிவந்து பரபரப்பாக சிறப்பாக அறியப்பட்ட நூல்களில் பல என்னிடம் இருந்ததும் அந்த நூல்களை அவர்கள் தேர்வு செய்து எடுத்துக் கொண்டதும் ஆச்சர்யம்தான். ஆம் நாம் வாசித்து விட்டோம் மற்றவர்களும் வாசிக்கட்டுமே..

அன்றைய தினத்திலிருந்து அறைகளின் இருவகைக் கதவுகளிலிருந்து அலமாரிகள் நகர்ந்து செல்வதையும் பிற்பாடு காலையில் அவை அதனதன் இடங்களில் வந்து சரியாக நின்று கொள்வதையும் உணரத்தலைப்பட்டேன். புத்தகங்கள் காணாமல் போவதைப் போலவே அலமாரிகள் நகர்ந்து செல்வதையும் யாரிடமும் சொல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். இதனால் குப்பிகளை, குவளைகளை அலமாரிகளின் பின்னால் ரகசியமாகப் பாதுகாப்பதும் இயலாமல் போனது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button