கட்டுரைகள்

ஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர் 

கட்டுரைகள் | வாசகசாலை

ஆப்பிள் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் பல முகங்களில் ரெனே மாகரிட்டே முகமும் ஒன்று. அவர் வரைந்த பல ஓவியங்களில் ஆப்பிள் ஒரு குறியீடாக இருக்கும். குறிப்பாக, பச்சை நிற ஆப்பிள். அவர் வரைந்த ஒரு ஆப்பிள்தான் தற்போது இயங்கிவரும் ஆப்பிள் நிறுவனத்துக்கு, ‘ஆப்பிள்’ என்ற பெயர் வரக் காரணம் என்றால் ஆச்சரியம்தானே.

மார்கரிட்டே தனது கடைசி காலத்தில் வரைந்த ஓவியம் Le Jeu de Mourre (மோரா விளையாட்டு).மோரா என்ற இந்த விளையாட்டு கிரேக்க மற்றும் ரோமானிய காலந்தொட்டே இருந்து வருகின்றது. இந்த மோரா விளையாட்டு என்றால் என்ன?

morra game

 

இந்த விளையாட்டை விளையாடும் ஆட்டக்காரர்கள், ஏதேனும் எண்ணிக்கையில் விரல்களை நீட்ட வேண்டும். அதேசமயத்தில் ஒரு எண்ணையும் சொல்ல வேண்டும். அவர்களில் யார் சொன்ன எண், மொத்த விரல்களின் கூட்டுத்தொகையுடன் பொருந்திப் போகின்றதோ அவருக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இவ்வாறு மூன்று மதிப்பெண் பெற்றவர் வெற்றிபெற்றவர் ஆகிறார். நமது ஊரில் தாயம் உருட்டுவதை போன்றது. தாயம் உருட்டுவது என்றால், உடனே இந்த கொரோனா காலத்தில் இணைய விளையாட்டில் உருட்டிய தாயங்கள்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். 

மோரா விளையாட்டு

நம் கதைக்கு இப்போது வருவோம். தன் வாழ்வின் இறுதி கணிப்பாக இந்த ஓவியத்தை அவர் நினைத்திருக்க வேண்டும். இந்த ஒவியத்தை ஒரு காசை போல சுண்டுவதன் மூலம் விழும் `வாழ்வா  சாவா ?’ என்ற கணிப்பில் இந்த ஓவியத்தில் அவருக்கு விழுந்தது சாவே. அதைக் குறிக்கும் விதமாக இந்த ஓவியத்தில் அவர் எழுதிவைத்த, ‘Au Revoir’(பிரெஞ்சில் குட் பை) என்ற வாசகம்.

apple corps vs apple

பீட்டில்ஸ் குழுவை சேர்ந்த பால் மெக்கார்ட்னே 1966-ல் ஒரு புதிய பன்னூடக நிறுவனத்தைத் தொடங்கும் முயற்சியில் இருந்தார். பீட்டில்ஸ் இசைக்குழுவுடன் நட்பில் இருந்த ஓவிய வியாபாரியும், ‘க்ரூவி பாப்’ என்று பலரால் அழைக்கப்பட்டவருமான ராபர்ட் ஃபராசர், இந்த மாகரிட்டே ஓவியத்தை மெக்கார்ட்னேவுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். இதுவே பின்னாளில், ‘ஆப்பிள் கார்ப்ஸ்’ என்று பீட்டில்ஸ் தங்கள் புதிய நிறுவனத்துக்கு பெயரிட காரணமாக இருந்தது. இதை முதலில் மறுத்த மெக்கார்ட்னே, பின்னர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ஹாரி வைனர் 1999-ஆம் ஆண்டு ராபர்ட் பற்றிய எழுதிய ஒரு புத்தகத்தில், மெக்கார்ட்னேவின் கீழ்காணும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

`நான் வாங்கிய கேவென்டிஷ் அவென்யூவில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான வீட்டின் தோட்டத்துக்கு, ராபர்ட் அடிக்கடி வருபவர். ஒரு நாள் அவர் நான் விரும்புவேன் என்று நினைத்து, ஒரு மாக்ரிட்டே ஓவியத்தை கொண்டுவந்தார் . ராபர்டுக்கு மட்டுமே அதுபோல வாங்கிக்கொண்டு வருவது சாத்தியம். நான் சில நண்பர்களுடன் தோட்டத்தில் வெளியே இருந்தேன். நான் மேரி ஹாப்கினை ஒரு படக் குழுவினருடன் படமாக்கிக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். உக்கிரமான கோடையில், தோட்டத்தில் தேனீக்கள் மற்றும் ஈக்கள் ரீங்காரத்தின் இடையில் அவர் பாடல் பாடிக்கொண்டிருந்தார். நாங்கள் நீண்ட புற்களின் மேல் அமர்திருந்தோம். மிகவும் அழகாக ஒரு கிராமப்புறத்தை போன்றிருந்தது. நாங்கள் தோட்டத்தில் இருந்தபோத, ராபர்ட் எங்களை வேலையின் இடையில் குறுக்கிட விரும்பவில்லை. எனவே, நாங்கள் தோட்டத்திலிருந்து அறைக்குத் திரும்பிச் சென்றபோது, அங்கே மேசையில் அவர் இந்த சிறிய மாக்ரிட்டே ஓவியத்தை விழாதபடி முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அது ஒரு பச்சை ஆப்பிள். அதுதான் ஆப்பிள் கார்ப்ஸ் சின்னத்தின் அடிப்படையாக மாறியது. ஓவியத்தில் மாக்ரிடே ‘Au revoir’ என்று தன் அழகிய கையெழுத்தில் எழுதியிருந்தார். ராபர்ட் பிரிந்துவிட்டார். அதுதான் இதுவரையில் யாரும் எனக்காக செய்த மிகச் சிறந்த செயல் என்று நினைக்கிறேன்.’

பீட்டில்ஸ் குழுவின் ஆப்பிள் கார்ப்ஸ் லோகோவை வடிவமைத்தவர் கிரான்னி ஸ்மித். ஒரு பச்சை நிற ஆப்பிள். அதுதான் அந்த லோகோ. ஆப்பிள் ரெக்கார்ட்ஸ் மூலம் அவர்கள் வெளியிட்ட இசைத் தட்டுகளில் முன்புறம் கிரான்னி ஸ்மித்தின் ஆப்பிளும், பின்புறம் இரு துண்டாக வெட்டப்பட்ட ஆப்பிளின் ஒரு பகுதியும் இருக்கும். இது ஒரு பன்(Pun).

ஆப்பிள் ரெகார்டஸ்

பின்னாலில் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது கம்ப்யூட்டர் நிறுவனத்துக்குப் பெயர் சூட்டும்போது, தான் கதாநாயகர்களாக கருதும் பீட்டில்ஸின் ஆப்பிள் கார்ப்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்திக்கொள்கிறார். ஆப்பிள் நிறுவனம் இதனால் பல வழக்குகளையும் சந்திக்க நேர்கிறது. பீட்டில்ஸ் குழுவின் மேலாண்மை திறன் குறித்து பல இடங்களில் பேசியுள்ளார் ஸ்டீவ் ஜாப்ஸ். குறிப்பாக, 2003-ல் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்.

abbey road

 

“எனது வணிக மாதிரி பீட்டில்ஸ். அவர்கள் எதிர்மறையான போக்குகளை கட்டுக்குள் வைத்திருந்த நான்கு திறமையானவர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் சமநிலைப்படுத்திக்கொண்டனர். மொத்த படைப்பும் அவர்களது தனிப்பட்ட பங்களிப்பின் கூட்டுத்தொகையவிட அதிகமாக இருந்தது. நான் வணிகத்தைப் பார்ப்பது அப்படித்தான். வியாபாரத்தில் பெரிய விஷயங்கள் ஒருபோதும் ஒருவரால் செய்யப்படுவதில்லை. அவை ஒரு குழுவினரால் செய்யப்படுகின்றன. நாங்கள் அதை பிக்சர் மற்றும் ஆப்பிளில் செயல்படுத்தியுள்ளோம். அவர்களின் உதாரணத்தால்தான் என்னால் இதை செய்முடிந்தது. உங்களுக்குத் தெரியும், பீட்டில்ஸ் ஒன்றாக இருந்தபோது, அவர்கள் உண்மையிலேயே புத்திசாலித்தனமான, புதுமையான படைப்புக்களை வெளியிட்டார்கள். அவர்கள் பிரிந்தபோது நல்ல படைப்புகளை வெளியிட்டார்கள். ஆனால், அவை ஒருபோதும் குழுவாகச் செய்தவற்றை போல இல்லை. நான் வியாபாரத்தையும் அந்த மாதிரிதான் பார்க்கிறேன். எப்போதும் ஒரு குழுவாக செயல்படுவது.”

ஆப்பிள் நிறுவனம் சந்தித்த வழக்குகள் பின்வருமாறு…

1978— ஆப்பிள் ரெக்கார்ட்ஸ் வர்த்தக முத்திரை மீறலுக்காக ஆப்பிள் கம்ப்யூட்டருக்கு (தற்போது ஆப்பிள் இன்க்) எதிராக வழக்குத் தொடர்ந்தது. 1981 ஆம் ஆண்டில் ஆப்பிள் கார்ப்ஸுக்கு, $80,000 செலுத்தியதன் மூலம் இந்த வழக்கு தீர்க்கப்பட்டது. தீர்வின் நிபந்தனையாக, ஆப்பிள் கம்ப்யூட்டர் இசை வணிகத்திலிருந்து விலகி இருக்க ஒப்புக்கொண்டது.

1989— ஆப்பிள் கார்ப்ஸ் வழக்குத் தொடர்ந்தபோது ஒரு சர்ச்சை எழுந்தது. ஆப்பிள் கம்ப்யூட்டரின் இயந்திரங்களின் மிடி (MIDI) வகை இசையை ஏற்கும் திறன், 1981 தீர்வு ஒப்பந்தத்தின் மீறல் என்று குற்றம் சாட்டியது. 1991 ஆம் ஆண்டில் சுமார் $26.5 மில்லியன் தொகை கைமாற்றபட்டதன் மூலம் தீர்வு எட்டப்பட்டது.

2003— ஆப்பிள் கம்ப்யூட்டர் மீண்டும் ஆப்பிள் கார்ப்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தது. இந்தமுறை ஐடியூன்ஸ் மியூசிக் ஸ்டோர் மற்றும் ஐபாட் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதால் ஏற்பட்டது. இசையை விநியோகிக்க கூடாது என்ற ஒப்பந்தத்தை ஆப்பிள் மீறுவதாகக் கூறியது. 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், ஆப்பிள் கார்ப்ஸின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

2007— ஆப்பிள் இன்க் மற்றும் ஆப்பிள் கார்ப்ஸ் ஆகியவை தங்கள் வர்த்தக முத்திரை தகராறின் தீர்வை அறிவித்தன. இதன் அடிப்படையில் ஆப்பிள் இன்க், `ஆப்பிள்’ தொடர்பான அனைத்து வர்த்தக முத்திரைகளின் உரிமையையும் பெற்றது; மற்றும் அந்த வர்த்தக முத்திரைகளில் சிலவற்றை தொடர்ந்து பயன்படுத்த ஆப்பிள் கார்ப்ஸுக்கு உரிமம் வழங்கியது.

 

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close