சிறுகதைகள்

அப்பா

லாவண்யா சுந்தரராஜன்

அப்பா, உங்களுக்கு உடம்புக்கு முடியலைன்னு போன் வந்ததுமே இந்தத்தடவ நீங்க வீட்டுக்குத் திரும்ப வரமாட்டீங்கன்னுதான் தோணுச்சு. சரியா சொல்லப் போனா வீட்டுக்கு வரவேண்டாம்னுதான் நெனச்சேன். ஒரு நிமிஷந்தான். அதுக்கப்பறம் அது தப்புன்னு புத்தி சொல்லுச்சு. உங்களுக்கு என்னன்னு தெரியாது. ஆனா எல்லா வேலையையும் அப்பிடியே போட்டுட்டு இப்ப பொறப்பட்டு வரும்போதுகூட இந்த நேரத்துல ஏன் இப்பிடி படுத்துறீங்கன்னு கோவமும் எரிச்சலுந்தான் வருது. இன்னும் பத்து நாள்ல எக்ஸாம் வேற இருக்கு. நீங்க தான் நான் நினைச்சத நினைச்ச போது படிக்க வைக்கல, இப்ப மோகன் படிக்க வைக்கிறார் அதையும் ஒழுங்கா முடிக்க விட மாட்டீங்க போலிருக்கே

ஏம்பா இப்பிடி?

எப்பிடி நம்ம ரெண்டு பேர்த்துக்கும் நடுவுல இப்பிடி ஒரு இடைவெளி? உங்க மேல எனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? உங்களைப் பத்தி நல்லதாவோ, சந்தோஷமாவோ நெனச்சுப் பாக்க என்கிட்ட ஒண்ணுமே இல்லை. இப்ப எனக்கு வயசு 29. அம்மாவுக்கு இந்த வயசுல மூணாவது பொண்ணா நான் பொறந்தாச்சு. ஆனா நான் பிள்ளை பெத்துகிற இந்த வயசுல, வீட்ட விட்டு, இங்க வந்து சின்னப் பசங்களோட போட்டிப் போட்டு படிச்சுட்டு இருக்கேன். உங்க வீட்டில இருந்த போதும் என்னை நான் நெனச்ச மாதிரி இருக்கவும் விடலை. இப்பவும் என் வீட்டிலிருந்துகிட்டு என்னை இப்படி அலைய விடறீங்க. உங்களுக்கு உடம்பு நல்லா இருந்துச்சுன்னா நாங்க எதுக்கு உங்களை என் வீட்டுக்கு கூட்டிட்டு வரப் போறோம்?

கல்யாணம் அதுவும் நீங்க தானே பார்த்துப் பண்ணி வைச்சீங்க. மாப்பிள்ளை எனக்கு பிடிச்சி இருக்கான்னு ஒரு வார்த்தை நீங்க கேட்டீங்களா, காதல் கீதல்ல மாட்டிக்குவேன்னு காலேஜ் முடிச்ச கையோட அவசர அவசர என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க. காலேஜ் முடிக்க ஒரு வாரம் இருக்கச்ச, நம்ம சொந்தக்காரர் ஒருத்தர் கம்பியூட்டர் சென்டர் வைச்சி இருந்தார்ன்னு தெரிஞ்சி வேலைக் கேட்க போறேன்னு சொல்லிப் போனோமே அப்பக் கூட தானே வந்தீங்க. அந்த மாப்பிள்ளைய எனக்கு பிடிச்சி இருந்தது நீங்க ஏன் கண்டுபிடிக்கல. இத்தனைக்கும் என்னோட சின்ன வயசுல இருந்தே உங்க கிட்டயோ அம்மா கிட்டயோ நான் எதுவும் வேணும்ன்னு கேட்டதே இல்லை. அப்ப இருந்தே நீங்க இப்படி தான் கொஞ்சம் அழகா இருக்குன்னு ஏங்கி பார்த்துகிட்டு இருந்தா கூட, நான் பார்க்கறது அது அல்பம் ஒரு வளையல்ல இருந்தா கூட வாங்கித் தந்தது இல்லை. எது உங்க செலவுக்குள்ள அடங்குமோ அது தான் வாங்கிக் கொடுத்து இருக்கீங்க. நான் எது ஆசைபடறேன்னு எப்போதும் ஏன் தெரிஞ்சிங்க நீங்களோ அம்மாவோ முயற்சியே பண்ணதில்லை. ஆசைப்படற சில பொருளை ஏன் வாங்கி தரலைன்னும் சொன்னதும் இல்ல. வாங்கி தரது பெட்டர்ன்னு சொல்லிப் புரிய வைச்சதும் இல்ல. என் கிட்ட கலகல எப்போதாவது பேசி இருக்கீங்க. கலகலன்னு விடுங்க எதாவது பேசி இருக்கீங்களா? என்னைப் பத்தி எப்போதாவது இவளுக்கு என்ன தான் வேணும்ன்னும் யோசிச்சிருக்கீங்களா? ஏன் இப்படி விலகியே இருக்காளேன்னு எதுவானும் செய்து சரி பண்ணனும்ன்னு எப்பாவது நினைச்சி இருக்கீங்களா?

எல்லார்த்துக்கும், குறிப்பா பொண்ணுங்களுக்கு அவங்க அப்பாதான் மொதல் ஹீரோ. சின்ன வயசுலேர்ந்தே கூட படிக்கிற பொண்ணுங்க நெறைய பேரு அவங்க அப்பாவைப் பத்தி நெறைய பெருமையா சொல்லிருக்காங்க. எத்தனை பேர் காலைல ஸ்கூல்ல கொண்டு வந்து விட்டுட்டு டாட்டா காட்டிட்டு போறதை நான் பாத்துருக்கேன். எனக்கு தெரிஞ்சு நீங்க ஒரு நாளும் என்னோட ஸ்கூலுக்கோ காலேஜூக்கோ வந்ததில்லை. அப்பிடி என்ன நீங்க பிஸியா இருந்தீங்கன்னு எனக்கு இப்ப கூட தெரியலை. உங்க ஸ்கூல்ல பிரேயர் பெல் அடிக்கும் முன்ன போயிட்டு எல்லோரும் கிளம்பின பின்னர் வீட்டுக்கு வரதும், பணத்தை பாங்கில போடறதும் எடுக்கறதும், வீட்டுச் செலவு கணக்கு எழுதறதும் தவிர நீங்க வேற பெரிசா எனத்த செய்தீங்க. கொஞ்சம் நல்லா சப்புக் கொட்டி சாப்பிடுவீங்க. அதை வைச்சி தான் உங்களுக்கு நரம்பு மண்டலம்ன்னு ஒன்னும் அதுல சில உணர்வு சம்மந்தப்பட்ட வஸ்துவும் இருக்குன்னு நாங்க நம்ப வேண்டியிருந்தது.

மூணாவதா நானும் பொண்ணா பொறந்துட்டதால என்னை உங்களுக்கு புடிக்கலையோன்னு யோசிச்சிருக்கேன். அக்கா மேல நீங்க காட்டற பாசத்துல கொஞ்சத்தையாச்சும் என்மேல காட்டிருக்கலாம். மூணாவதா பொறந்தது என் தப்பில்லையே, நானும் உங்க ரத்தந்தானே அப்பா? ஆனா நீங்க நிறைய குழந்தைங்க கூட நல்லா பேசி பார்த்திருக்கேன். ஜோக் அடிச்சி சிரிக்க வைச்சி இருக்கீங்க. ஆனா அதை என் கிட்ட பண்ணனும் எப்போவுமே நீங்க ஏன் ட்ரை பண்ணல? நான் அப்படி உங்களுக்கு என்னதான் தப்பு பண்ணேன்?

இங்க பாருங்க. ரோட்டை கிராஸ் பண்ற அந்த சின்னப் பொண்ணோட கையை எத்தனை பத்திரமா அவங்கப்பா புடிச்சுட்டுப் போறார்? எதுவுமே சொல்ல வேணாம். அந்தப் பொண்ணு இப்பிடி அவங்க அப்பாவோட கையைப் புடிச்சுட்டு எங்க வேணா போவா. அப்பிடித்தான் எனக்குத் தோணுது. நீங்க நடக்கும் போது எப்பவுமே உங்க கையை பின்னாடிதான் கட்டிருப்பீங்க. என் கையைப் புடிச்சு அழைச்சிட்டு போனதே கிடையாது. பின்னாடி நான் வரேன்னா என்னான்னு கூட பெரிசா கவனிப்பீங்களான்னு கூட தெரியாது, விறு விறுன்னு நீங்கபாட்டுக்கு நடந்து போயிட்டேல்ல இருப்பீங்க. அப்பெல்லாம் உங்க கூட வெளில கிளம்பி வரக்கூடாதுன்னு எத்தனையோ முறை நினைச்சி இருக்கேன். ஒருமுறை நாய் தொரத்திட்டு வந்த போது எவ்வளவு பயந்து ஓடிவந்து உங்க கைய பிடிச்சேன். அப்பக் கூட நீங்க பத்திரமா என் விரலை பிடிச்சிக்கல. ஏதோ ஒரு எக்ஸ்டாரா பிட்டிங் போல வேண்டா வெறுப்பா கொஞ்ச தூரம் உங்க கைய பிடிக்க அனுமதிச்சீங்க அப்பறம் தட்டி விட்டுட்டீங்க.

நீங்க என்னை என்னன்னு சொல்லி கூப்புடுவீங்கன்னு இப்ப யோசிச்சாக்கூட சொல்ல முடியலை. பாப்பான்னா? இல்லை. நீங்க என்னைக் கூப்பிட சந்தர்ப்பமே வந்ததில்லை. ஏதானும் சொல்லனும் சொல்லி தரணும் இப்படி எதுவுமே இருந்ததில்லையா உங்களுக்கு. இத்தனைக்கும் வேற பிள்ளைங்க எல்லாம் சேரும் போது நிறைய வேடிக்கைக் காட்டுவீங்க. சிரிக்க வைப்பீங்க. ஆனா எந்த சின்ன குழந்தையையும் கூட நீங்க தூக்கி வைச்சிக்கிட்டது போல எனக்கு நினைப்பே இல்ல. உங்களுக்கு பலமில்லன்னு நீங்களா நினைச்சி கிட்டீங்களா. கடை கண்ணிக்குப் போனா சாமான் எல்லாம் வாங்கி அம்மாகிட்ட தானே எடுத்துட்டு வர சொல்லுவீங்க?

அப்பான்னா திடமா இருக்க வேணாமா?

நீங்க என் பக்கத்துல வராததினாலயோ என்னவோ கொஞ்ச நாள்ல உங்களை என் பக்கத்துல வர விடாம பாத்துக்கிட்டேன்ங்கறதையும் சொல்லணும். தப்பு என் மேலயுந்தான். என்னத்தையோ படிச்சி எதை எதையோ குழப்பிகிட்டு, யார் கிட்டயும் கேட்டு தெரிஞ்சிக்க முடியாம நான் அப்படியே யாரோ போல இருந்துட்டேன். ஆனா நீங்களா கேட்டு இருக்கனும் என்னடா உன் பிரச்சனைன்னு. இதுக்கு எல்லாம் அம்மாவும் ஒரு காரணம். அவங்க கோவம் ஆங்காரம் இது என்னாலேயே சகிச்சிக்க முடியாதே மத்த சொந்தக்காரங்க எப்படி சகிச்சிப்பாங்க. அம்மா இவ்வளவு கோபபடறது கூட உங்களா தான்.

பேச வேண்டிய இடத்தில் அம்மாவுக்கு பதில் நீங்க பேசி இருக்க வேண்டாமா?

யார்கிட்டயும் நீங்க எதுத்து பேசமாட்டீங்க. சண்டை போட மாட்டீங்க. அன்னிக்கு பக்கத்து வீட்லேர்ந்து அத்தனை சத்தம். அம்மா சரிக்கு சரி நிக்கறாங்க. நீங்க என்னடான்னா பார்த்துட்டு பயந்தது போல நகந்து வந்தீங்க. எனக்கு எத்தனை கோவம் தெரியுமா? என்னப்பா அப்பிடியொரு அசமந்தத்தனம். நம்ம பேர்ல தப்பு இருந்தா பரவால்லே. தப்பு செஞ்சது அவங்க. நீங்கதான் தலையை ஆட்டிட்டு நகர்ந்து வந்தீங்க. இங்க தான் அடுத்த வீட்டுக்காரங்க, உங்க சொந்த அக்கா, தம்பிக்கிட்ட நீங்க என்னிக்கி எதுக்காக கேட்டு இருக்கீங்க. எந்த விஷயமென்றாலும் நீங்க கேட்க மாட்டீங்கன்னு அம்மா முந்திகிறாங்க. அதனாலதான் அன்னிக்கு பெரிய(த்தை) மாமா நக்கலா சொன்னார் “என்னைய என்ன ராஜமணி புருஷன்னு நெனச்சியா. எல்லாத்துக்கும் சிரிச்சிட்டே இளிச்சவாயனா நிக்கறதுக்கு?” எல்லார்த்துக்குமே நீங்க லாபிங் ஸ்டாக்தான். அதப்பத்தி உங்களுக்குப் பெருமை வேற.

ஆம்பிளைன்னா கொஞ்சம் நிமிர்ந்தில்ல இருக்கணும்?

அம்மாவால நம்மகிட்ட யாருமே ஒட்டாம போனதுக்கு நீங்க தான் காரணம். எனக்கு அந்தரங்கமா பேசிக்க ஒரு தோழிய கூட சொந்தபந்தத்தில் விட்டு வைக்கல நீங்க. எல்லோரும் என் கிட்ட பேசினா அவங்க அம்மா அப்பா திட்டுவாங்கன்னு ஓடிப் போயிடுவாங்க. சின்னவயசிலிருந்தே அப்படி தான். அதான் கல்யாணம் முடிஞ்சி அவரை தனிமையில் சந்தித்த போது “இதை சொல்லக்கூடாவா உனக்கு ஆள் இல்ல” ன்னு சொன்னப்ப ரொம்ப அவமானமா இருந்தது. அப்ப கூட எனக்கு உங்க மேல ரொம்ப கோவமா வந்தது. ரொம்ப அழுகையாவும் வந்தது. ஆனா உங்களுக்கு அம்மா பண்ணறது எல்லாமே நியாயம் தான்னு தோணும்.

வீடுன்னா, நல்லது கெட்டதுக்கு நாலு சொந்தம் வேணுமேன்னு நினைக்கனுமில்ல அம்மா தான் நினைக்கல நீங்க நினைச்சிருக்கனும் இல்லயா?

சரி சொந்தகாரங்க கிட்ட அங்கபக்கத்துல இருக்கவங்கட்ட யார் கிட்டயும் எப்போதும் சண்டையோ குரல் உசத்தித்தியோ பேச வேணாம். எவனோ ஒரு பொறுக்கிப்பய லெட்டர் குடுத்தான் பின்னாடியே வந்து கலாட்டா பண்ணான்னு வந்து சொன்னப்போ ஏன் என்னான்னு கேட்டீங்களா, அப்படி என்ன தான் பயம் உங்களுக்கு? இந்த விஷயத்துல பெத்த பொண்ணுக்காக அவனை ஒரு அடி அடிச்சி இருந்தா, அவன் திரும்ப இரண்ட அடிச்சா கூட வாங்கிக்கலாமே, அப்ப உங்களை நான் சலூட் பண்ணி இருப்பேன் அப்பா. ஆனா நீங்க என் பிரண்ட் அப்பா அவளை கூட்டிட்டு வரும் போது என்னையும் கூட வர சொல்லிட்டீங்க. அவ அப்பா பார்க்க கம்பீரமா இருப்பார்.

நீங்க ஏன் அப்படி கம்பீரமா வீரமா இல்ல?

இப்போ காலைல உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தப்ப ரொம்ப சீரியஸ்ஸா இருந்தீங்கன்னு சொல்றாங்க. இந்த ஐசியுல ஏதோ சினிமால வரது போல இந்த பீப் பீப் சத்தங்களுக்கு நடுவுல, மெலிஞ்ச உங்க உடல் ஒயர் எல்லாம் சுத்தி இருக்கு,. இப்ப கூட நீங்க இப்படி கிடக்கிறீங்களேன்னு உங்க மேல இரக்கம் வரல. முதலுதவிக்கு நல்ல பலன் இருந்துச்சி, ஆனா கண்டிப்பா பிழைச்சிடுவீங்கன்னு உத்தரவாதமெல்லாம் கொடுக்க முடியாதுன்னு சொல்றாங்க. அதைக் கேட்டு எனக்குப் பயமெல்லாம் வரல. இந்த உடம்போட நீங்க இவ்வளவு நாள் இருந்தததே பெரிய விஷயம் தான்னு தான் தோணுச்சி. ஒன்னு இரண்டு பல்லு விழுந்திருந்தப்ப சிக்கனம் பார்த்து ஒரே செலவுன்னு சொல்லி எல்லாப் பல்லையும் பிடிங்கிட்டு கட்டினீங்க. அதுக்கு அப்பறம் போன உடம்பு தான் அப்பறமா தேரவே இல்லை. எல்லாதுக்கும் நீங்க தான் காரணம். இப்போ இப்படி இவ்வளவு சின்ன வயசுல ஹாஸ்பிடல் ஹாஸ்பிட்டலா அலைஞ்சி, இப்படி கிடக்க கூட உங்க பொறுப்பிலாததனம் தான் காரணம். இதனால எங்களுக்கு தான் கஷ்டம். ஏன்ப்பா இப்படி படுத்தறீங்க கேட்க தான் தோணுது.

நீங்க இப்போ கிடக்கிறது போல, நாலு நாள் கெடந்து செத்து போயிருந்தா கூட பரவல்ல. அவ்வளவு சின்ன வயசுல அக்கா அகாலமா செத்து போனா. ஹார்ட் அட்டாக்ன்னு சொன்னாங்க. ஏன் ஹார்ட் அட்டாக் என்ன ஆச்சுன்னு ஒரு வார்த்தை கூட நீங்க கேட்கல. இத்தனைக்கும் அக்காவ எவ்வளவு பிடிக்கும் உங்களுக்கு அவ கிட்ட எவ்வளவு பேசுவீங்க. அவ ஊர்க்கு வந்த கால்கடுக்க பஸ்ஸாண்டுலையே நின்னு வீட்டுக்கு கூட்டிட்டு வருவீங்க. எந்த முடிவு எடுக்கனும்னாலும் அவளை போன் போட்டு போட்டு கேட்டு எடுப்பீங்க. அம்மாவும் அவள தான் எப்போதும் பெருமையா பேசுவாங்க. என் மக மாதிரி வருமான்னு எவ்வளவு தடவ சொல்லி இருக்கீங்க. ஆனா அவ செத்து போனப்ப நீங்க சொட்டு கண்ணீர் விடலையே. ஒரு வார்த்த வாய தெரிந்து பேசலையே. அந்த சமயத்துல கூட ஏதுவும் பேசமா கோவப்படாம இருந்துட்டு என்ன சாதிக்க இருந்தீங்கன்னு உங்க மேல வெறுப்பே வந்துருச்சி அப்ப. ஆனா மறுநாள் பெரிம்மா எங்கன்னு கேட்ட உங்க குட்டிப்பேரன் கிட்ட “பெரிம்மா இனி வர மாட்டாட” சொல்லி வாய் கொளரி அழுதீங்களே அப்ப கொஞ்சம் பாவமா இருந்தது. அதுவும் கொஞ்ச நேரத்துக்கு தான்.

இப்போ ஐசியு உள்ள உங்க பக்கதுல உக்காந்து கிட்டு, உங்க கைய பிடிச்சி தைரியம் சொன்னா உங்க மனசுக்கு கேட்கும்ன்னு சொல்றாங்க. அப்ப நீங்க சீக்கிரம் பொழச்சி வந்துடுவீங்கன்னு சொல்றாங்க. அம்மாவுக்காக நீங்க பொழச்சிகிட்டிங்கன்னா நல்லா இருக்கும். ஆனா கைய பிடிச்சிக்கனும்ன்னு எனக்கு தோணல. உங்களை பக்கத்துல நெருங்கிப் பார்க்க கூட பிடிக்கல. இதுவரை நான் எவ்வளவு பேசி இருக்கேன். சின்ன வயசுல இருந்தே என் மனசுகுள்ள உங்க கிட்ட நிறைய பேசி இருக்கேன். அப்ப எப்போவுமே கேட்காத உங்களுக்கு இப்போ நான் பேசினா மட்டும் எப்படி கேட்கும்? ஒருவேளைக் கேட்டாலும் அதை உணர்ந்தாலும் எல்லாமே கேட்டுட்டு எப்போதும் போல அசட்டையா தான் இருக்க போறீங்களா?

ஆனா உங்க மேல அன்பு இல்லாதது போலவே ரொம்ப வெறுப்பும் கிடையாது. அம்மா மாதிரியே நானும் உங்களுக்காக பஸ்ல சண்டையெல்லாம் போட்டு இருக்கேன். அதுக்கும் நீங்க தான் காரணம். பஸ் நின்னா உடனே பஸ்ஸ விட்டு எறங்கி போயிடனுமா? பாட்டி செத்திருந்த சமயம் மொட்ட வேற போட்டு இருந்தீங்க. பஸ் எடுத்ததும் ஓடி வந்து ஏறினது பார்த்த எனக்கே கோவம் தான் வந்துச்சி. கண்டக்டர் “மொட்ட சீக்கிரம் படியிலர்ந்து மேல ஏறுன்னு” சொன்னப்ப அந்த கண்டக்டர திட்டினேன் பாருங்க. அப்பவும் நீங்க பயந்து தான் போனீங்க. ஆச்சரியமா பார்த்தீங்க. என்னை திட்ட வேண்டாம்ன்னும் சொல்லல. மத்தவங்க தான் விடு பாப்பான்னு சொன்னாங்க

ஆச்சு. உங்க உடம்புநிலை ஏற்கனவே மோசமா இருந்ததாலே காப்பாத்த முடியலன்னு சொல்லிட்டாங்க. அக்கா வெளிநாட்டிலிருந்து வரவரைக்கும் உங்கள மார்சுவரில வைக்கனும்ன்னு சொல்றாங்க அய்யோன்னு இப்படி ஆயிடுச்சேன்னு தோணல. இப்ப நீங்க இல்லை. உத்தரவாதமா தெரிஞ்சிருச்சு. உள்ளபடி நான் அழணும். ஆனா அழுகையே வர்லை. இது தப்பான்னு தெரியலை. நீங்க இல்லாததை தெரிஞ்சிட்டதும் உண்மையில அப்பாடான்னுதான் இருந்துச்சு. இப்பிடி சொல்றது சரியில்லைதான். நான் போய் என்னோட பைனல் எக்ஸாமானும் எழுதுவேன். ஆனா ரெண்டு சொட்டு கண்ணீர் வந்துச்சுன்னா தேவலைதான்.  அதுவும்கூட மத்தவங்களுக்காகத்தான். எனக்கு நீங்க போனதை நெனச்சு அழறதுக்கு ஒண்ணும் இல்லைன்னுதான் சொல்லணும்.

ஏம்பா இப்பிடி என்னை பண்ணீங்க?

கொஞ்சம் பாசமா இருந்துருக்கலாம். என்னோடவும் விளையாடிருக்கலாம். செல்ல பேர்ல கூப்பிட்டிருக்கலாம். கொஞ்சி இருக்கலாம். கிச்சி கிச்சி மூட்டி இருக்கலாம். எப்போதாவது சாப்பாடு ஊட்டிருக்கலாம். பாட்டு க்ளாஸ் அனுப்பி இருக்கலாம். எவனாவது கிண்டல் பண்ணா பயப்படாத, திருப்பி அடி சொல்லி கொடுத்து இருக்கலாம். நல்ல நல்ல புத்தகமெல்லாம் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லி இருக்கலாம். நல்ல விஷயங்கள் எல்லாம் சொல்லி கொடுத்திருக்கலாம். நல்லது கெட்டதுக்கு பக்கத்துல இருந்து பாத்துருக்கலாம். அன்பா அறுதலா பேசி இருக்கலாம். இல்லான்னா உலக அறிவு வளரட்டும்ன்னாவது சினிமா, அரசியல் எல்லாம் பேசி இருக்கலாம். ஊர்ல யார் யார் வெட்டி பயல்களோட எல்லாம் எவ்வளவு பேசுவீங்க. என்னோட கொஞ்சம் கொஞ்சூண்டானும் பேசி இருக்கலாம்.

நீளமான பொட்டலமா சுத்தி தான் உங்கள வீட்டுக்கு கொண்டு வந்தாங்க. முகம் கூட சேர்த்து தான் கட்டி இருந்தாங்க. அம்மாவும் அக்காவும் முகத்த பாக்கனும் பிடிவாதமா சொன்னாங்க. அதுக்காக மெதுவா பிரிக்கும் போது உங்க வத்தி போன முகம் கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சது. கண்ணெல்லாம் ரொம்ப உள்ள போய், இருக்கா நொண்டி எடுத்துட்டாங்கலாகிறது போல இருந்துச்சி. கோணலா இருந்த உதடு ஏதோ சொல்ல வர்து போல இருந்ததே.  இவ்வளவு நாள் இல்லாம இப்போ உயிரு போன அப்பறமா என் கிட்ட பேச போறீங்களா. போங்கப்பா. அம்மாவும் அக்காவும் கதறி அழறாங்க.  இப்பிடி வெறும் உடம்பா கெடக்கும்போது கொஞ்சம் அழற அளவுக்காவது எனக்கு நீங்க அப்பாவா இருந்திருக்கலாம்.

போங்கப்பா எனக்கு உங்கள இப்பவும் பிடிக்கல.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close