இணைய இதழ்இணைய இதழ் 71சிறுகதைகள்

அனுராதா பசு,  ஈமுக்கோழிகள் மற்றும் பீற்றர் பன்றிகள் – மோனிகா மாறன்

சிறுகதை | வாசகசாலை

ரு சின்ன மட்டடார் வேனில் அந்த பெரிய பறவைங்க ரெண்டும் அற்புதராஜ் ஐயா வீட்டுக்கு வந்து இறங்கிய போது ஊரே வேடிக்கை பார்த்தது

ஐயோ..நெருப்புக்கோளியா?”

இது இன்னாடி இத்தா தண்டி இருக்கு. எம்மாம் ஒசரம்” – நாலடி ஒயரமான பிடுகு தாத்தன் வந்து நின்னு அண்ணாந்து பாக்கறான்

ஈமுங்கோளின்னு காடையன் சொல்றான்.

இது என்னா துண்ணும் ஐயா?”

தீவனம் தனியா இருக்குடா. மக்காச்சோளத்தை அரச்சி போடணும். கீர கூட குடுக்கலாம்னு வரதனுக்கு ஐயா பதில் சொல்றார். அக்கம் பக்கத்து கொழந்தைங்க எல்லாம் வந்து வந்து பாத்துட்டுப் போறாங்கஐயா பொண்ணு ஐரினும், கொடிலாவும் மாட்டுக்குப் போடற தவுட்டுல கேவுறைக் கலந்து தாலா தட்டுல கொண்டுபோயி இரும்புக் கம்பி வேலிக்குள்ள வைக்கிறாங்க. ‘கொஞ்சம் தண்ணியும் வைங்கடீன்னு தங்கம்மை டீச்சர் சொல்லுதுரெண்டு மூனு நாளா வள்ளிக்கொட்டா, கோமட்டேரி, சாராமரத்தூரு குனிகாந்தூர்னு எந்தெந்த ஊருக்கோ போற ஜனமல்லாம் நிண்டு பாக்குறாங்கஇந்த ஜெவ்வாது மலையிலே இப்பிடியாபட்ட கோளியப் பாக்கலான்னு நடுப்பையங் கெழவன் சொல்றான். இத்தன பரபரப்புக்கும் காரணமான அந்த ரெண்டு ஈமுப் பறவைங்களும் நிதானமா அசையுதுங்க.பெரிய நெருப்புக் கோழி சைசுல கழுத்து மட்டும் பாம்பு போல வளைஞ்சு அஞ்சடி ஒசரமா மொட்டைத் தலையோட அதுங்களப் பாக்க நல்லாத்தான் இருக்கு. ரெக்கையெல்லாம் சாம்பல் நெறத்துல மயில்தூவ மாறி பளபளக்குதுவேடிக்க பாக்கற எல்லாரையும், ‘யாருடா நீங்கல்லாம்?’ அப்டின்ற தோரணையில பாக்குதுங்க. எங்கயோ ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு மணல்காட்டுல வாழ்ந்த தன் பூர்வீகத்த விட்டுட்டு மனுஷங்களோட கோமாளித் தனத்தால இந்த சின்ன ஜவ்வாது மலைக்காட்டுக்கு வந்திருக்கறோம்னு அதுங்களுக்குத் தெரியுமா?  ‘எங்க வீட்டுக்கு புதுசா வந்திருக்கிற இந்த ரெண்டு ஈமுக்களை ஆசிர்வதியும் ஆண்டவரேன்னு அற்புதராஜ் ஐயா ஜெபிக்கிறது அதுங்களுக்குப் புரியுமா?

ஐயா அப்படித்தான் ஒலகத்துல சொகமில்லாம கெடக்கற மாடு, குருவி, பூனை, வாடிப்போன ரோசாப்பூ செடி, காய்க்காத பப்பாளி மரம் எல்லாத்துக்காகவும் மனசார ஜெபம் பண்ணுவார். தலைமையாசிரியரா இருந்தாலும் அவருக்கு இந்த மாறி கோழி, ஆடு, மாடு, புறா, கிளின்னு வளக்கறதுல ரொம்ப பிரியம். ஆளு பாக்க நல்லா ஆறடி ஒசரத்துல தாட்டமா மொரட்டுத்தனமா இருப்பாருஇப்படி உருவம் உள்ளவங்க எப்பவுமே கொழந்த மனசாத்தான் இருப்பாங்க

ஆலாஞ்சனூர் மேட்டுல சரக்கொன்றை பூத்திருக்கு பாக்கப் போகணுமுன்னு அவர் சொல்றதைக் கேக்கையில வனத்துறை வாத்தியானுங்க முளிப்பானுங்க.   பச்சைப்பசேல்னு இலைங்களுக்குள்ள பொதிஞ்சி மரம் முழுக்க தங்கமா பூத்து சொரியற கொன்னை மரத்த பாக்கறத விட உலகத்துல வேற என்ன பெரிய வேலைன்ற மாதிரி தான் ஒவ்வொரு கோடையிலும் அவரு பிள்ளைங்கள புல்லட்டுல ஏத்திக்கிட்டு மெனக்கெட்டு அஞ்சு மைல் போவாரு. அப்பிடி ஒருதரம் கூட்டாத்தூர் காட்டுல பெரிய ஆலமரத்த பாக்க போனாங்க. நடுக்காட்டுல செம்பச்சை தளிர்களும் செகப்பு பழங்களுமா நெறஞ்சி நிக்குது ஆலமரம். மரத்தடி குளுகுளுன்னு பறவைங்க சத்தத்தோட பாக்கவே அத்தனை அற்புதமா இருக்கு. .பிள்ளைங்க ஆலம்பழங்களப் பொறுக்கி கிட்டு இருந்தப்ப சருகுகளில் மஞ்சளும் கருப்புமா பளபளன்னு ஒரு பாம்பு ஊர்ந்து போச்சுசாம் ஒரு குச்சி எடுத்து, ‘அப்பா, அடிங்கப்பா.. அடிங்கப்பான்னு கத்தினான். அய்யா இவங்கள தூரமா கூட்டிட்டு வந்து, ‘அது பாட்டுக்கு போகுது. ஏன் அடிக்கனும்?’னு சொல்லிட்டார்.

அவர் இந்த ஜவ்வாது மலைக்கு வந்து புதுசுல அப்ப அறிமுகமான வொயிட் லெகான், பிளாக் மைனார்க்கா அப்டின்னு புது கோழிங்களை பெங்களூர்ல இருந்து வர வச்சி வளத்தாரு. அதுல ஒரு கோளி காலை பதினோரு மணிக்கு அய்யா போயி கூண்டு பக்கத்துல ஒக்காந்தா அவரு லுங்கியில ஏறி உக்காந்து முட்டை உடும். இதுபோக பச்சைக்கிளிங்க, மணிக்குருவிங்க, லவ் பேர்ட்ஸ், முயலுங்க, கினிக்கோளி, வான்கோளின்னு எல்லாமே அவங்க வீட்ல இருந்துச்சு. அதுங்களுக்கெல்லாம் மனுசங்களப்போல பேர் வச்சிருந்தாங்க. சாம்பல் கலர்ல ஒரு குண்டு பெண் முயல் எப்பவும் மத்த முயலுங்களுக்குப் போடற கோஸ் தழை, புல்லு எல்லாத்தையும் அராஜகமாத் தின்னுட்டு திரியும். அது பேரு ஜெயலலிதா. வீட்டுல வளத்த எல்லா நாய் பேரும் டைகர் தான். ஒரு டைகர் செத்தா அடுத்த வர நாயும் டைகர் தான். செம்மறி ஆட்டுக்குட்டிங்க பேரு ஜேம்ஸ். ஆஜான்னு ரண்டு வான்கோளிங்களும் சுத்திக்கிட்டு திரியும்.

அனுராதான்னு ஒரு கெழட்டு பசுவை கொதல்லோ ஃபாதர் பண்ணையில் இருந்து வாங்கிட்டு வந்து வளத்தாரு. அது பாதிநாள் ஒடம்பு சரியில்லாம நடக்க முடியாம நடந்து மாட்டாஸ்பத்திரிக்கு அலையும். நாலு கிலோ புண்ணாக்கையும் ரெண்டு கட்டு சூபா புல்லையும் தின்னுட்டு அரைப்படி பால் கறக்கும். ஒருதரம் வரதங்கிட்ட இருந்து நாலு நாட்டுப்பன்னி குட்டிங்களக் கொண்டாந்து வீட்டு பின்னால படல் போட்டு வளத்தாரு. அதுங்களுக்கு பீற்றர்னு தன்னோடு தாய்மாமன் பேரை வச்சாரு. அதுங்களாலயும் செலவு தான் தவிர எதுவும் சரியா வளரலை. நாத்தம் வேற தாங்கல. தங்கம்மை, ‘ஊருல கெடக்கற எல்லாத்தையும் புடிச்சிட்டு வந்துடுறீங்கன்னு ஏசுது.

அய்யாவோட மூத்த பேரன் ஜோ ஒருதரம் ஓசூர் பஸ் ஸ்டாண்டில பன்னிக்குட்டிங்களப் பாத்துட்டு, ‘அம்மா, பீட்டர் பீட்டர்னு சந்தோஷமா கத்தியிருக்கான். பன்னிக்குட்டின்னாலே பீட்டர்னு ஜோ மனசுல பதியற அளவுக்கு ஐயா அவனுக்கு பன்றிங்க கதைங்கள சொல்லியிருக்காரு. தங்கம்மை டீச்சரும் அய்யாவுக்கு ஏத்த சோடி தான். ஊர்ல போற வர்ற அத்தனை பேத்துக்கும் சோறு போடும். உதவின்னு .யார் வந்து நின்னாலும் மனசாற செய்யும். .எடுத்ததுக்கெல்லாம் சண்டை போட்டாலும் உள்ளுக்குள்ள ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அத்தனை பாசத்தோட இருப்பாங்க.

யோவ் மனுசா, ரெண்டு வாயி சாப்பிட்டு போயி உக்காருமேன்னு அந்தம்மா சொன்னா இவரு மறுபேச்சு பேசமாட்டாரு. அதே போல  டீச்சருக்கு கைக்கும் காலுக்கும் வேலை செய்யறதுக்கும் வீடு நெறய வேலையாட்கள் வச்சிருப்பாரு. பள்ளியோடத்துலயும் வீட்டுலயும் தங்கம்மையக் கேக்காம எதையும் முடிவு பண்ண மாட்டாரு.

இருவதுக்கு இருவது கம்பி வலை கூண்டுக்குள்ள ரெண்டு ஈமுவும் ஐயா வீட்டுக்கு வாழ வந்து ஒரு மாசமாச்சு. அதுங்க பாட்டுக்கு போடற தீனிய தின்னுகிட்டு பகலெல்லாம் நிக்குதுங்க. எப்பவாவது  தொண்டையில விநோதமா மயில் போல சத்தகங்குடுத்துட்டு ராத்திரியில தொம் தொம்முன்னு நடந்துகிட்டு கெடந்ததுங்க. மத்தபடி அந்த வீட்டு செவப்பு சேவல் மட்ட மத்தியானத்துல கூவி, ‘அடி அறிவுகெட்ட கோளியே..அந்தப்பக்கமா போயேன்னுதங்கம்மை டீச்சர் கிட்ட வசவு வாங்கற அளவுக்கு கூட அதுங்களால எந்த தொந்தரவும் இல்ல

ஒரு மாசத்துல முட்டை உடும், ஒரு முட்டை ஆயிரம் ருவானு நாங்களே வாங்கிக்கறோம்னு வித்த ஈமு பண்ணைக்காரனுங்க சொல்லியிருந்தானுங்க. ஆனா, ஆறுமாசமாகியும் அதுங்க விட்டைதான் போடுதுங்க. இதுக்குள்ள டெய்லி ஈமுக்கூண்டை பெருக்கி தீனி வைக்கிற காண்ட்ராக்டை காடையன் வாங்கியிருக்கான். ‘ தூர நவுந்து போ பெருக்கனும்னு அவன் சொன்னா கோளிங்க புரிஞ்சி தள்ளி நிக்குதுங்க.

டீச்சர் ஒவ்வொரு சீசனுக்கும் தகுந்தாப்புல இப்பிடி நெறய அசிஸ்டன்ட்டுங்க வச்சிருக்கும். தென்னை மட்டை கழிக்கற கொல்லக்கொட்டா ராஜேந்திரன், இரும்பு பட்டற தீனன், தேக்க மரக்கட்டை விக்கற வேலு, திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட்ல பெருக்கற ஜோசப் அருளப்பன், சத்துணவு ஆயாவா இருக்கற அன்மர்தி விக்டோரியான்னு நெறய பேர் ரொம்ப சின்சியரா டீச்சர் கிட்ட வந்து எதாவது வேலை செய்வாங்க

டீச்சர், உங்களுக்கு எத்தனை மூட்டை ரேஷன் சர்க்கரை வேணும் நான் வாங்கித் தரேன்.கெரோசின் ஒரு முப்பது லிட்டர் வாங்கிடட்டுமாவெறும் ஐம்பது ருபா கட்டுங்க தீபாவளிக்கு நாலு கிராம் தருவான், நல்ல இருவடி மரத்து கட்டை நாலாயிரம் ஆகும். ஐநூறு ருவா தாங்க டீச்சர். நைட்டே எடுத்தாந்து போட்டுடறேன்.பாப்பா கல்யாணத்துக்கு கட்டுலு செய்ய ஆகும். ஒரு கிலோ பீர்க்கங்காய் பாஞ்சிருவாய்க்கு மார்க்கெட்ல வித்து தரேன். இங்க ஏம்மா எட்ருவாய்க்குத் தரீங்க, இந்த பழைய பாத்தரமெல்லாம் ஆலங்காயத்துல ஒரு பாய்கிட்ட வித்தா ரண்டாயிரம் தருவான்னு பலவிதமா சொல்வாங்க. இவங்க எல்லாருமே ஏதோ பெரிய ராணுவ ரகசியம் மாறி தான் சாயந்திர நேரம், காலங்காத்தால ஆறுமணி இல்லன்னா ஸ்கூலுக்கு கெளம்பிட்டு இருக்கற எட்டரை மணியின்னு முக்கியமான நேரத்துல தான் பேசுவாங்க. கொஞ்ச நாள் எதாவது வேலையும் செய்வாங்க. ஆனா, கரெக்டா ஒரு மூட்டை பீர்க்கங்காய், இருவடி கட்டை தரேன்னு சொல்லி வாங்கற துட்டு, கடைசி தவணை சீட்டு பணம், வீட்டுல இருக்கற பளைய பித்தாள அண்டா, சாரோட டைட்டான சஃபாரி செட், ஷு, பழைய கேரம் போர்டு எல்லாத்தையும் எடுத்துட்டு போற அன்னிக்கு திரும்ப வர மாட்டானுங்க. தங்கம்மை டீச்சர் அவனுங்க பரம்பரையையே இளுத்துவச்சி நாரோயில் பாஷையில, ‘ நீக்காம்புல போவான், அட சண்டாளா, அவன அடிச்சி சாவடிக்க, அடியம்மா அநியாயத்தன்னு  கண்ட வசவு வையும்.    ஐயா, ‘ஏட்டி ,ஒனக்கு இதே பொளப்பா போச்சி.அவனுவ மொகரயப் பாத்தா தெரியலயான்னுட்டு எல்லார்கிட்டயும் ஏமாந்த கதையச் சொல்லி சிரிப்பாரு

அப்புறம் ஒரு ஆறு மாசம், ஒரு வருசம் கழிச்சி கெளவிக்கு பைத்தியம் புடிச்சிடுச்சி, சின்ன புள்ளய மொதல முழுங்கிடுச்சி ,ஏரோப்ளேன் மோதிடுச்சு, ரயிலு ஏறி காலு நசுங்கிடுச்சின்னு நெறய நெறய சோகங்களாச் சொல்லிகிட்டு வந்து டீச்சர் கிட்ட அழுவாங்க. மறுபடியும் பேச்சுவாரத்தைங்க தொடரும். அப்பிடித்தான் காடையனும் இஷ்டமிருந்தா மாடு மாறி வேல செய்வான்..இல்லன்னா ஐயா தூங்கறப்ப சட்டைப்பையில இருந்து பணத்தை களவாடிட்டு, லவ் பேர்ட்ஸ் கூண்டுல இருந்து ரெண்டு கலர் குருவியப் புடிச்சிட்டு ஓடிப் போயிடுவான். இப்போதைக்கு எப்படா ஈமு முட்ட உடும் ஒரு முட்டையை லவட்டிக்கிட்டுப் போனா ஆயிரம் கெடைக்குமேன்னு பாத்துட்டு இருக்கான். அது எங்க நடக்குது?

இப்ப ஈமுக்கோளி முட்ட உடலைன்றது ஊருல பெரிய பேச்சா போயிடுச்சு. இதுக்குன்னே இருக்கற வரதராஜன் சார், ஆனந்தன் போல சில தீக்கொளுத்திங்க டெய்லியும் வண்ணாந்தொற ஆத்துல பேண்டுட்டு களுவாம அரக்கி அரக்கி நடந்து போகையில இவங்க வீட்டுகிட்ட நின்னு இன்னிக்கு முட்ட உட்ருச்சான்னு ரொம்ப அக்கறையா கேக்கறமாறி தங்கம்மை டீச்சருக்கு பீபி ஏத்துறானுங்கஒவ்வொரு வாரமும் சர்ச்சுக்கு போவயில ஆம்ஸ்ட்ராங்க்   வேதமுத்து, ஏப்ரிஸ்ட் சாலமன் சந்திரகுமார் எல்லாம் இவங்க கிட்ட ஈமு முட்ட வுட்டுடுச்சான்னு குதூகலமா கேப்பானுங்க. தப்பித்தவறி கூட அதுங்க முட்ட போட்டுறக்கூடாதுன்னு ஆல்டர்ல காணிக்கை வச்சி பிரார்த்தனை பண்ணியிருப்பானுங்கன்னு தோணும். இந்தக் கெழட்டுக் கபோதிங்களுக்குப் போயி இத்தன அறிவான பேர் எவன் வச்சான்னு ஐரினும் சாம்வேலும் சொல்லி சிரிக்கறாங்க. வழக்கம்போல் ஐயா, தங்கம்மை டீச்சர் கிட்ட வசவு வாங்குறாரு.

 டெய்லியும் நைட்ல ஈமுக்கூண்டுக்கு வெளிய சேர் போட்டு உக்காந்துகிட்டு, ‘வாரும் எமது வறுமை நீக்க வாரும்..தேவனே மழை தாரும் தேவனேன்னு பாடி ஜெபம் பண்ணுறாரு. வெட்னரி டாக்டர் இலஞ்சியன ஒருநாள் அய்யா கூட்டிட்டு வந்தாரு. அவுரு ஈமுங்க றெக்கைங்களத் தடவிப் பாத்துட்டு, ‘சார், இது ரெண்டும் சின்ன குஞ்சுங்கமுட்ட போட இன்னும் ஒரு வருசம் ஆகும்னுட்டாரு.  ‘அடீ ஆயி  இது என்னாடி கூத்துன்னு  அவங்க வூட்டுக்கே பெரிய மன ஒளச்சலா போச்சி. அவங்க குடும்பத்துல சாயர்புரம் பெரியத்தை ஒரு ஜெப வீரி. ஜெபிக்கறதுல பிஎச்டி வாங்குன எவாஞ்சலிஸ்ட். ஊருல யாருக்காவது வயத்தால போனா, கைக்கொழந்தைங்க மலச்சிக்கல் வந்து பேளாம போனா, யாருக்காவது வயித்துல காத்து அடச்சு கேஸ் ட்ரபுள் வந்தா, சீரியல் பாக்கறப்போ கரண்ட் போனா, இந்தியா கிரிக்கெட்ல விக்கெட்டே எடுக்கலன்னா, போளூர் பஸ் சரியான டயத்துக்கு வரலன்னா, மகேஸ்வரி வூட்டுக்காறன் தொரக்கண்ணு நாலு குவாட்டர ஓட்டுக்கா சாத்திட்டு வண்டிய வண்ணாந்தொற ஆத்துல நொழச்சிட்டு குண்டியில அடிபட்டு கெடந்தா, கோமட்டேரி ரோஸி எட்டாவது தடவையா டென்டத் இங்கிலீஷ் அட்டம்ட் எழுதறதுக்கு பவுடர் பூசி ஆறு மாசத்துக்கு ஒருக்கா திருப்பத்தூர் போனாஎல்லாத்துக்கும் உடனே அத்தைக்கு போன் பண்ணிடுவாங்க. அதுவும் ஆவிக்குள்ள இருந்து ஜெபிக்கும். ரிலையன்ஸ்காரன் போன் பிரீயா பேச உட்டது இவங்களுக்கெல்லம் பெரிய காச்சாரமா பொயிடுச்சி.

மரியா மவனே நானெல்லாம் உண்மையா ஒழச்சி ஒழுங்கா மனசார ஜெபிச்சா காதுல கூட வாங்காம, ஒலகத்துல இல்லாத பாடெல்லாம் பட வக்கிற ,இப்ப பேளறதுக்கும் மோளறதுக்கும் உம்மைக் கூப்பிடறாங்க. நல்லா அனுபவி. ஏசப்பா உனக்கு இது தேவை தான்னு ஐரின் மனசுல சிரிச்சிக்கறா.

இப்ப இந்த அவுஸ்திரேலிய வனாந்தர பறவைங்க முட்ட போட வேண்டி ஜெபக்கனி அத்தையம்மா தலைமையில் ஜெபங்கள் நடக்குது. ‘அடேய்களா ஆகாயத்துப் பறவைகளைக் கவனித்துப் பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை. களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லைன்னு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வில் பற்றற்று   கவிதையாய் பேசிய அந்த ஞானியை, தேவகுமாரனை மாட்டு வைத்தியன் ரேஞ்சுல டீல் பண்றீங்களேன்னு சாம் வையறான்.   ஐரினுக்கும் அய்யாவுக்கும் அதுங்கள கோளின்னு சொல்லவே புடிக்கல. எவ்வளவு கம்பீரமான பறவைங்க. ஒரு ராசாவப்போல ஒலாத்திகிட்டு, அதுங்க ஒசரத்துக்கு எல்லாரையும் கீழக்கண்ணால அற்ப மானிடர்களேன்ற பாவனையில் பாத்துகிட்டு திரியுதுங்கஇதுங்கள எவன் கோளின்னு சொன்னான்னு தெரியல. ஐரினும் சாமும், ‘அதுங்க முட்ட உடலன்னா போதும்மா. நம்ம வீட்ல ஒரு ஆளா இருக்கட்டும்னு சொல்றாங்க. அய்யாவும் டீச்சரும் புள்ளைங்க இப்பிடி எதையாவது சொன்னா பூரிச்சுப்போவாங்க.

இப்புடியே ரெண்டு வருசமா அவங்க வீட்டுல வளர்ந்த அதுங்களப் பாக்க ஊருல உள்ள சின்ன புள்ளைங்க பூமாவுங்க எல்லாம் சனி ஞாயிறுல பிக்னிக் போல வரது வளக்கமா ஆயிடுச்சுதீவன செலவு அதிகமாகவும் சாதாரணமா வீட்டுல கோளிங்களுக்கு போடற அரிசி, சோறு, இட்லி எல்லாத்தையும் டீச்சர் இதுங்களுக்கும் போடுதுஅப்புறம் நல்ல பனி பெய்யற ஒரு டிசம்பர் மாசத்துல கரும்பச்சை கலர்ல பெரிய முட்டைங்கள ஈமு உட்டுச்சி. கடைசி வரைக்கும் அந்த சோடியில சேவல் எது, பெட்டை எதுன்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியல.

அற்புதராஜ் அய்யாவோட வழமையான ராசியைப் போலவே இந்த ஈமு முட்டைங்களையும் பண்ணைக்காரங்க வாங்க மாட்டேன்றானுங்க. ரொம்ப சண்டை போட்டதும் முட்டையை வாங்கிட்டு பணமே தரலை. மாசாமாசம்  தீவன செலவு கட்டுபடி ஆகல. ஈரோடு, பெருந்துறை, பள்ளிகொண்டா, கரூர்னு ஒவ்வொரு எடமா ஈமுப்பண்ணைக்காரனுங்க ஏமாத்துன நியூசா வருது. இவங்களால தாள முடியல. இதுக்கு மின்னாடி வளத்ததெல்லாம் சின்ன உசுருங்கவேணாம்னா யாருகிட்டயாவது குடுத்துடுவாங்க. இல்லைன்னா கறி வச்சி தின்னுடுவாங்க. இதுங்களை என்ன செய்யறதுன்னே தெரியல. ஒருநாள்  பொறுக்க முடியாம எல்லாரும் சேர்ந்து காட்டுக்குள்ள வெரட்டி விட்டுடலாம்னு முடிவு பண்ணாங்க. கூண்டைத் தெறந்ததும் ரெண்டு ஈமுவும் தத்தி தத்தி நடந்து போகுதுங்க. காடையனும் வரதனும்ஏய்..ஏய்னு வெரட்டிக்கிட்டே போயி அதுங்கள கூட்டாத்தார் காட்டுல விட்டுட்டாங்க.

ராத்திரி பன்னண்டு மணி வரைக்கும் ஐயா காலிக் கூண்டுக்கு வெளியில் உக்காந்துட்டு இருந்தாரு. டீச்சர் வந்து எழும்பி வந்து படுமேன்னு அதட்டுது.

மறுநாள் விடியவும் வீட்டுப் பின்னாடி ஏதோ சத்தங்கேக்குது. கதவத் தெறந்தா ரெண்டு ஈமுக்கோளிங்களும் நின்னுட்டிருக்கு.ராத்திரியெல்லாம் நடந்து திரும்ப வந்துடுச்சுங்க. தங்கம்மை டீச்சர் பழைய சோத்தை ஒரு தட்டுல பிளிஞ்சி கொண்டாந்து வைக்குது. ரெண்டும் ஆவலாதியா அவுக்கு அவுக்குன்னு திண்ணவும் அய்யா ஸ்பென்சருன்னு சத்தம்போட்டு டீச்சர் அழுகுது.    கைகால் வெளங்காம பல வருசமா படுக்கையில இருந்த தன்னோட மூத்த மகன் ஸ்பென்சர் செத்த அன்னிக்கு அழுத பொம்பள இன்னிக்குத்தான் மறுபடியும் கதறி அளுகுது.

காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்’ – அற்புதராஜ் ஐயா ஈமுங்களத் தடவிகிட்டே பாடுறார்.

********

maranmoni@gmail.com – 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close