கவிதைகள்

அனுராதா ஆனந்த் கவிதைகள்

அனுராதா ஆனந்த்

  • சின்னுவை முத்தமிட்டவன்.

சின்னு இறந்து விட்டாள்.
ஐந்து மணி நேர போராட்டம்
சொட்டு சொட்டாக உயிர் இறங்கி
வடிந்து விட்டாள் இந்த நள்ளிரவில்.
தன் பாதங்களையும் முகத்தையும் எந்த
வித்யாசமும் இல்லாமல் நக்கி குதூகலிக்கும் சின்னுவிற்கு
செயற்க்கை சுவாசம் கொடுக்க முயற்சித்தான்.
அவள் வாயின் மீது தன் வாய்வைத்து
தன் உயிர் அனுமதிக்கும் வரை ஊதினான்.
எதற்கும் அசைந்து கொடுக்காது
தொடர்ந்து உறங்கினாள்.
உலகத்திடம் முதுகு காட்டி
மூடிய அறைக்குள் இருந்த இருண்ட காலங்களில்
தன்னை புரிந்து கொண்ட ஒருத்திக்காக,
யாருக்குமே அழாத அழுகையை அழுதான்.

பல வருடம் கழித்து
அவனுள் இருந்த ஞாயங்களை இவ்வாழ்வு மென்று துப்பி,
அதற்கு கைமாறாக
ஒரு காதலியை தரும் போது
அவளிடம் கூறுவான்
நான் முதன் முதலில் முத்தமிட்டது
ஒரு நாய் ,
அதுவும் அது இறந்த பிறகு.

  • தோசை கணக்கு

அவள் சுடும் 2,83, 432 ஆவது தோசை இது
தின்னும் வாய்களால் மட்டுமே ஆன இந்த பகாசுர வீடு
கொண்டா கொண்டாவென்று
கணக்கில்லாமல் பீய்த்து பீய்த்து தின்று செரித்து பெருத்திருந்தது.
ஒவ்வொரு தோசை சுடும் போதும்
உள்ளே ஏதோ ஒன்று சத்தம் காட்டாமல் எண்ணிக்கொண்டேயிருந்தது.

பதினெட்டு வயதில் இந்த வீட்டிற்கு வந்து பெருங்காதலை ஊற்றி
ஆசையாய் சுட்ட முதல் தோசையிலிருந்து இன்று வரை விடாமல் .
பசி நேரம் மட்டுமே உறவுக்கொண்டாடும் பூனைப்போல
தோசை சுடும் நேரம் மட்டும் விழித்துக்கொள்ளும் அக்கருவி.
குழந்தைக்கு சுடும் குட்டி தோசைகளைக்கூட விடாது துல்லியமாக எண்ணும்.
கிழிந்தவை, கல்லில் ஒட்டி எடுக்கமுடியாமல் கருகினவை,
துண்டுகளாகிப் போனவை எல்லாமே கணக்கில் சேர்த்தி.

இந்த பொல்லாப்பித்தை உதறித்தள்ள முயன்றபோதெல்லாம்
மருந்துண்ணும் நேரக் கருங்குறங்குப் போல மண்டைக்குள்
வாட்டாமாக அமர்ந்து க் கொண்டு
டிக் டிக் டிக் என்று குதூகலமாய் எண்ணும்
மற்ற நேரங்களில் கால் மாற்றி கால் மாற்றி பொருமையின்றி காத்திருக்கும்.

அவள் பிரசவிக்கும் ஒவ்வொரு தோசையும் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறோம்
என்கிற ஞானத்தில் முளைத்த கதைகளை சன்னக் குரலில் சொல்லும்.
ஓயாமல் உம் கொட்டச்சொல்லி அடம் பிடிக்கும்.
ஒரு எண்ணாகிறோம் என்ற செருக்கில் முறுகி விறைக்கும்.
கருங்கல்லாய் அவளை சூடேற்றும்.
இலகுவான மாவாய் தன்னை ஊற்றிக்கொள்வாள்.
மொறு மொறுப்பான ஓரங்களில் பல ஊர்களைச்சுற்றி வந்தாள் .
வெந்து பூக்கும் குழிகளில் முங்கி முத்தெடுப்பாள்.
அவ்வப்போது தன்னையே திருப்பிப் போட்டுக்கொண்டு களிப்பு தாங்காமல் திணறுவாள்.
காலத்திரையின் சுருக்கங்களை சட்டகப்பையால் நீவி
பின் தன்னையே பிய்த்து தின்று ஆசுவாசப்படுத்திக் கொள்வாள்.

அவளது இடது புருவத்திற்கு
மேலே உள்ள தழும்பை ஏற்படுத்திய தட்டில் இருந்தது
சற்றே கிழிந்த 1,23987 ஆவது தோசை.

பரிசாகக் கிடைத்த ஒரு ஜோடி வெள்ளை சிவப்பு பச்சைக் கல் பதித்த கம்மலை,
வெங்காயம் தக்காளி கொத்தமல்லி தூவிய ஊத்தப்பம் போல இருந்ததென்று
(விளையாட்டாய்தான்)
சொல்லியதில்
இதுவரை அவளுக்கான செலவுக் கணக்கு வாசிக்கப்பட்டது .
அப்போது 2 38 232 யில் இருந்தது தோசை கணக்கு .

கோபிப் பொட்டுகள் மட்டுமே நெற்றியில் வைத்து,
வாசலில் சதுர ,நீள் சதுர, முக்கோண கோலங்கள் வரைந்து,
முடிந்த வரையில் வட்ட புட்டா சீலைகளை தவிர்த்து,
தன் அம்மாவின் முகம் போல கன்னங்களில் சதை போட்டு
வட்டமாகி விடுமோ என்ற பயத்தில்
ஒட்ட ஒட்டப் பட்டிணி கிடந்தவள்,

அடுத்த தோசை பாதி ஊற்றும் போதே வலது கை பலம் குன்றி செயலிழந்தது

2,83,432.5 ……..

 

  • எச்சில் பிள்ளைகள்

உன் வார்த்தைகளை எனக்கு
மெல்லக் கொடுத்தாய்
மென்று விழுங்கினேன்.

என் வார்த்தைகளை உனக்கு உண்ணக் கொடுத்தேன்
உண்டு செரித்தாய்

பின் பருகக் கொடுத்தவைகளை
ஒருவர் மீதொருவர் விசையோடு
துப்பிக்கொண்டோம்.

துப்பிய எச்சிலினின்று தோன்றிய  நம் குழந்தைகள் புழுதியை தின்று களிக்கின்றன.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close