சிறுகதைகள்

அமிலம்

அரிசங்கர்

அந்தச் சிறிய அறை முழுக்க அவள் பொருட்களால் மட்டுமே நிரம்பி, அது அவள் உலகம் என்பதை பறைசாற்றியது. கட்டில் முழுக்க அவளின் புகைப்படங்களாக நிரம்பியிருந்தது. மூலையில் இருந்த கணினியில் அவளின் பழைய புகைப்படங்கள் ஸ்கிரீன் சேவராக ஓடிக்கொண்டிருந்தது. அவள் நீண்ட நேரமாகக் கண்ணாடி முன்பாகவே அமர்ந்திருந்தாள். அசையவேயில்லை. கண்களைச் சிமிட்டவில்லை. கண்ணாடியையேப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குக் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. நீண்ட பெருமூச்சு விட்டு தன்னை இலகுவாகிக்கொண்டாள். ஆனாலும் கண்ணாடியை விட்டு அவள் அகலவேயில்லை. கண்ணாடியையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஜன்னலுக்கு வெளியே இருந்து பார்த்தால் தெரியாதவாறு அறைக்குள் அமர்ந்திருந்தாள். அறையின் மற்ற இடத்தைவிட அவள் அமர்ந்திருந்த இடத்தில் வெளிச்சம் சற்றுக் குறைவாகவே இருந்தது. இருந்தாலும் அவள் அங்கு அமர்வதையே விரும்பினாள். வெளிச்சம் அவள் முகத்தில் ஒரு பக்கம் மட்டுமே படர மறுபக்கம் இருள் சூழ்ந்திருந்தது. வெளிச்சம் பட்டு மின்னும் தன் முகத்தின் ஒரு பகுதியை மட்டும் அவள் மெல்ல தன் விரல்களால் தடவிக்கொண்டாள்.

“வினோ… வினோதினி…”

கதவு லேசாகத் தட்டப்பட்டது. அவளுக்கு அது உறைக்கவேயில்லை. சிறிது காத்திருப்புக்குப் பிறகு கதவு பலமாகத் தட்டப்பட, சுயநினைவுக்கு வந்த அவள் எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

இவளைப் பார்த்தும் தான் வெளியே நின்றிருந்த அவள் அம்மாவின் முகத்தில் பதட்டம் நீங்கியது.

“என்னடி பண்றா”

“என்னம்மா…?”

“உங்கப்பா கூப்பிட்றாரு வா”

மீண்டும் அவள் தன் அறைக்குள் சென்று கட்டிலின் மேல் இருந்த தன் துப்பட்டாவை எடுத்து தலையில் முக்காடுப்போட்டுக் கொண்டு துப்பட்டாவின் ஒரு பகுதியால் தன் முகத்தை மூடிக்கொண்டு சமையலறையை கடந்து வீட்டின் முன்பக்கம் நோக்கிச் சென்றாள்.

அவளுக்கு முன்பாகவே அவள் அம்மா அங்கு நின்றிருக்க, அவள் நின்றிருக்கும் விதத்திலேயே வேறு யாரோ உடன் இருக்கக்கூடும் என தெரிந்துகொண்டு தன் நடையில் இருந்த வேகத்தைக் குறைத்து தன் அம்மாவின் அருகில் வந்து நின்று அறையை நோட்டம்விட்டாள்.

அறையின் ஒரு மூலையில் இருந்த சோப்பாவில் கான்ஸ்டேபிலும் வக்கீல் குமாரசாமி அமர்ந்திருக்க, பக்கவாட்டில் இருந்த ஒரு பிளாஸ்டிக் ச்சேரில் வினேதினியின் அப்பா அமர்ந்திருந்தார். அவள் அப்பா அமைதியாக இருக்க வக்கில் அவளைப் பார்த்து லேசாகச் சிரித்தவாறு,

“வினோதினி கொஞ்சம் கிளம்பிவாம்மா, ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்துடலாம், சின்ன வேளை இருக்கு”

அவள் தன் அப்பாவைப் பார்த்தாள்.

அவர் ‘போய்க்கிளம்பு’ என்பதுபோல் தலையசைத்தார். அவள் மீண்டும் வக்கீலைப் பார்க்காமல் அறைக்குச் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அந்த வக்கீலை எப்போதும் பார்த்தாலும் அவளுக்கு ‘அவர் சரியில்லை’ என்பது போலவே தோன்றிக்கொண்டிருந்தது. இருந்தாலும் இதிலெல்லாம் தலையிட தனக்கு உரிமையில்லை என்பதாகவே அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். அவள் அறைக்குள் வந்த சில நிமிடங்கள் கழித்து அவள் அம்மாவும் பின்னால் அறைக்குள் நுழைந்தாள்.

“ஏய்… கிளம்பாம என்னடி பன்ற…?

“இப்ப எதுக்கு ஸ்டேஷனுக்கு கூப்பிடறங்க?”

“எனக்கு என்னடி தெரியும், போலீஸும், வக்கீலும் வந்து கூப்பிடறாங்க, வரமாட்டேன்னா சொல்லுவ. போ… போய் கிளம்பு… எல்லாம் தலையெழுத்து……”

அதற்கு மேல் அவள் அம்மா புலம்புவதை கேட்க விரும்பாமல் குளியலறைக்குள் சென்று தாழிட்டு, முகம் கழுவ தண்ணீர் குழாயை திறந்து தன் இரண்டு கைகளாலும் நீரை நிரப்பி தன் முகத்தில் இறைத்துக்கொண்டு தன் முன்னால் இருந்த கண்ணாடியை பார்த்தாள். இப்போது முகத்தில் முன்பு இருள் சூழ்ந்திருந்த பகுதில் அதிகப்படியான வெளிச்சம் பாய்ந்துகொண்டிருந்தது. அவள் தன் முகத்தின் மற்றொரு பகுதியை தன் விரல்களால் தடவிக்கொண்டாள்.

வேறு உடைகளை மாற்றிக்கொண்டு, தன் முகத்தில் கண்களைத் தவிர அனைத்துப் பகுதிகளை மறைத்தவாறு தன் துப்பட்டாவைச் சுற்றிக்கொண்டு வாசலில் தயங்கியவாறு நின்றாள். வெளியே வாடகைக்கார் ஒன்று நின்றிருக்க முன்பக்கம் வக்கில் அமர்ந்திருந்தார். கான்ஸ்டேபில் தன் இருசக்கர வாகனத்தில் தயாராக அமர்ந்திருக்க, காரின் பின்பக்க கதவை திறந்துவைத்தபடி அவள் அப்பா நின்றிந்துந்தார்.

வெளியே யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றிப்பார்த்துவிட்டு வேகமாகச் சென்று காரில் ஏறிக்கொண்டாள். அவள் அப்பாவும் காரில் ஏறிக்கொள்ள கார் மெதுவாக நகரத்தொடங்க, அவள் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். யாரும் இல்லை என்று அவள் நினைத்துக்கொண்டிருந்தாலும் சில ஜன்னல்கள் அவளைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. போகும் வழியில் டிரைவர் ஒருமுறை ரிவர்வியூ மிரர் வழியாக வினோதினியைப் பார்த்தான். டிரைவர் பார்ப்பதை உணர்ந்த வினோதினி தலையை குனிந்துகொண்டாள்.

இருபது நிமிடங்களில் கார், காவல் நிலையத்தை அடைந்தது. வினோதினியையும், அவள் அப்பாவையும் காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு வக்கிலும், கான்ஸ்டேபிலும் இறங்கிக் காவல் நிலையத்திற்குள் சென்றனர். வினோதினி அவள் அப்பாவைப் பார்த்தாள். அவள் தலை குனிந்தவாறு ஏதோ சிந்தனையில் இருந்தாள். அவள் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் சுற்றிப்பார்த்தாள். ஆங்காங்கே சிலர் குழுக்களாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் எவரையுமே அவளுக்கு பார்க்கப் பிடிக்கவில்லை. தூரத்தில் தெரிந்த சாலையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு கல்லூரி பெண் அந்த சாலையைக் கடந்து செல்ல வினோதினிக்கு அழுகை வருவது போல் இருந்தது. கடந்த இரண்டு செமஸ்டர்கள் எழுதவில்லை. இனி தன் நிலை என்னாகுமோ என்று பயம் அவள் நெஞ்சில் குடிகொண்டது. அவள் அந்த பெண்ணையேப் பார்த்துக் கொண்டிருக்க, அதை மறைத்தவாறு ஒரு வெள்ளை நிற கார் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது.

அந்த காரைப் பார்த்ததுமே வினோதினிக்கு கோவமும் அச்சமும் கலந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. எரிந்துகொண்டிருக்கும் தன் உடலுக்கு மேலும் அமிலத்தைப் பாய்ச்சியதை போல் அவள் உணர்ந்தாள். கார் நேராகக் காவல் நிலைய வாசலுக்கே சென்று நிற்க, காரின் கதவைத் திறந்துகொண்டு அவர்கள் இறங்கினார்கள். காரின் பின்ப் பக்க கதவைத் திறந்துகொண்டு அவன் இறங்குவதைப் பார்த்ததும் அவள் வேகமாகப் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் அப்பாவை உலுக்கினாள். அவர் என்ன என்று அவளைப் பார்க்க, அவள் தூரத்தில் அவனை மிரட்சியோடுப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்ப்பதை பார்த்த அவள் அப்பா, அது தனக்கு முன்பே தெரியும் என்பது போல் மீண்டும் தலைகுனிந்து கொண்டார்.

பத்து நிமிடத்திற்குப் பிறகு அந்த கான்ஸ்டேபில் நேராக வினோதினியின் அப்பாவிடம் வந்து உள்ளே அழைப்பதாக சொல்லிவிட்டு, வலுக்கட்டாயமாக வினோதினியை பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு வெளியே தனக்கு இடப்பட்ட வேறு வேலையைக் கவணிக்க சென்றார்.

வினோதினி தயங்கியவாறு இறங்கி தன் அப்பாவின் பின்னால் சென்றார். இருவரும் காவல் நிலையத்திற்குள் நுழைந்து எங்கே செல்வது என்று தெரியாமல் சுற்றிப் பார்த்தனர். வாக்கிடாக்கியின் கரகரப்பான குரல் விட்டுவிட்டுக் கேட்டவாறு இருந்தது.

காவல் உடையணிந்த உருவங்கள் சில அமர்ந்திருக்க, சில நடந்தவாறு இருந்தன. எவரும் முகமும் வினோதினியின் கண்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை. அவளுக்குத் தெளிவாக தெரிந்ததெல்லாம் தனக்கு இடப்பக்க மூலையில் நீல ஜீன்ஸும், கருப்ப சட்டையும் அணிந்து ஒயரில் பின்னிய நாற்காலியில் சாய்ந்தவாறு அமர்ந்து செல்போனை நோண்டிக்கொண்டிருந்தவன் மட்டும் தான். அவன் கையசைவையும், கண்ணசைவையும் பார்க்கும் போது அவன் ஏதோ கேம் விளையாடிக்கொண்டிருக்கிறான் என்று சுலபமாக தெரிந்தது.

வினோதினி அவனையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்க, ஆய்வாளரின் அறை வாசலில் இருந்து வக்கீல் குமாரசாமி அழைத்தார்.

“சார்…. இங்க வாங்க….”

அவர் குரல் கேட்ட திசையை இவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் பார்த்துவிட்டு, மெல்ல அந்த அறையை நோக்கி நடந்தனர்.

அறைக்குள் அந்தக் காவல் நிலையத்தின் ஆய்வாளரும், இரண்டு தரப்பு வக்கீல்களும், வேறு இருவரும் இருந்தனர். வினோதினிக்கு அதில் ஒருவரை அடையாளம் தெரிந்தது. அவர் வெளியே இருப்பவனின் அப்பா. இவர்கள் அறைக்குள் நுழைந்ததும் ஒரு அசாதாரணமான அமைதி ஏற்பட்டது. மேலும் ஒரு நாற்காலி காலியாக இருந்தும் யாரும் இவர்கள் அமரச்சொல்லவில்லை.

வக்கீல் குமாரசாமி முதலில் பேச ஆரம்பித்தார்.

“இதோ பாருங்க சார், அவங்க பேசி காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம்னு சொல்றாங்க. கேஸ் போட்டு வருஷ கணக்குல அலையருத்துக்கு ஈசியா பிரச்சனைய முடிச்சிக்கலாம். என்ன சொல்றீங்க.”

வினோதினியின் அப்பா அமைதியாக நின்றிருந்தார். அமர்ந்திருந்த அனைவரையும் ஒருமுறை சுற்றிப்பார்த்தார். தன் வக்கீலைப் பார்க்கும் போதும் மாட்டும் முகத்தில் கோவத்தை கொண்டுவந்தார். பிறகு பொதுவாக அனைவரையும்ப் பார்த்து,

“காம்ப்ரமைஸ்னா…?

இப்போது அந்தப் பையனின் அப்பா மெல்லப் பேச ஆரம்பித்தார்.

“சார், பையன் ஏதோ தெரியாம பண்ணிட்டான். இரண்டு பேருக்குமே சின்ன வயசு. கேஸ்லாம் போட்டா இரண்டு பேரு லைப்பும் ஸ்பாயில் ஆயிடும். எதுக்கு சொல்லுங்க. பொண்ணுக்கு ஒண்ணும் முகம் ரொம்பலாம் சிதையலையே. இப்பலாம் ஆசிட் பட்ட காயத்தெல்லாம் ஈசியா பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சி மாத்திடலாம். மொத்த செலவயும் நான் ஏத்துகிறேன். பாப்பா படிப்பு செலவுகூட நானே ஏத்துகிறேன். கேஸ மட்டும் வாப்பஸ் வாங்கிடுங்க. என்ன சொல்றீங்க”

வினோதினி அவள் அப்பாவையே பார்த்துக்கொண்டிருக்க, அவர் தீவிர யோசனையில் இருந்தார். பையனின் அப்பா அவர் என்ன சொல்லப் போகிறாரோ என அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, அவர் கூட வந்தவர்,

“இதோ பாருங்க சார், ரொம்பலாம் யோசிக்காதீங்க. ஏற்கனவே எங்களுக்கு ஏகப்பட்ட செலவு. போராட்டம் பண்ண அமைப்புகளையும், மீடியாவையும் சரிக்கட்டவே ரொம்ப செலவாயிடுச்சு. இதுல போலிஸ் வக்கீலுனு இன்னும் செலவு இருக்கு. இல்ல கேஸ் தான் போடுவோம்னு சொன்னீங்கனா கூடக் கொஞ்சம் செலவு பண்ணி உங்களையும் ஆஃப் பண்ண வேண்டியிருக்கும். நல்ல யோசிச்சிக்குங்க”

அவர் இப்படிச் சொன்னதும் சுற்றி இருந்த அனைவரும் ஒரு நிமிடம் பதறினார்கள். வினோதினியின் வக்கீல்,

“என்னங்க காம்ப்ரமைஸ்னு கூப்புட்டு இப்படி பேசறீங்க”

எதிர்த்தரப்பு வக்கீல் பேசியவரைப் பார்த்து,

“யோவ்…. சும்மா இருக்க மாட்டியா நீயீ”

ஆய்வாளர் இது எதுவும் காதிலேயே விழாதது போல் அமர்ந்திருந்தார்.

அந்தப் பையனின் அப்பா வினோதினியின் வக்கீலிடம்,

ஒண்ணும் அவசரம் இல்ல டைம் எடுத்து யோசிச்சி சொல்லுங்க. இரண்டு பேரோட லைப். பாத்து முடிவெடுங்க”

இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர். குமாரசாமி தொடர்ந்து அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். வினோதியின் அப்பாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பலவித யோசனையில் இருந்தார் அவர். தன் பெண் வாழ்க்கையைப் பார்ப்பதா, கேசை தொடர்ந்து நடத்துவதா, இவர்களை எதிர்ந்து தாக்குப்பிடிக்க முடியுமா, ஆள்வைத்து எதாவது செய்துவிடுவார்களா என பலவித குழப்பங்களில் இருந்தார்.

வினோதியின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார். வினோதினி ஓரக்கண்ணால் அவனையேப் பார்த்துக்கொண்டு நடந்தாள். சட்டென தன் அப்பாவிடமிருந்து தன் கையை உதறிக்கொண்டு அவனை நோக்கிச் சென்றாள். தன்னை நோக்கி அவள் வருவதைக் கவனித்த அவன் மெல்ல எழுந்து நின்றான்.

அவன் அருகில் சென்ற அவள் சில நொடிகள் அவனையே உற்றுப்பார்த்தாள். கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த தன்னை வழிமறித்து தன் முகத்தில் ஆசிட் அடித்த காட்சி விட்டு விட்டு நினைவுக்கு வந்தது. வலியால் துடித்துக்கொண்டிருந்த தன்னைப்பார்த்து ‘இனிமே உன்ன எவன் கட்டிக்கிறானு பார்க்கறேன்’ என்று சொல்லி தன்மேல் காறியுமிழ்ந்ததும் கண்முன் வந்து போனது.

தன் முகத்தை மூடியிருந்த துப்பட்டாவை மெல்ல அவிழ்த்தாள். முழுவதும் துணிவிலகிய தன் முகத்தை அவன் நன்றாகப் பார்க்கும் படி காண்பித்தாள். ஒரு பக்கம் முழுவதும் வெந்து சிதைந்துப்போயிருந்தது அவள் முகம். அதைப் அவனால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. சட்டென்று தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான். அவன் முகத்தில் இருந்த அருவருப்பை அவள் கடுங்கோபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் மீண்டும் அவள் பக்கம் தன் முகத்தைத் திருப்பவேயில்லை. லேசாகச் சிரித்த அவள் தன் துப்பட்டாவால் மீண்டும் தன் முகத்தை மூடாமல் தன் தோல்களில் போட்டுக்கொண்டு தன் அப்பாவின் கையை பிடித்துக் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினாள். வாக்கிடாக்கியில் கரகரப்பான குரல் மெல்ல குறைந்துக்கொண்டிந்தது.

இருவரும் சென்று காரில் அமர்ந்ததும், வினோதினி அவள் அப்பாவிடம்,

“அப்பா வேற நல்ல வக்கீலாப் பாருங்கப்பா”

அவர் சரி என்பது போல் தலையசைத்தார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close