இணைய இதழ்இணைய இதழ் 72கட்டுரைகள்

ALL THAT BREATHES – ப(பா)டம் – கிருபாநந்தினி

கட்டுரை | வாசகசாலை

யற்கை (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு) அனைவருக்குமானது என நமது சட்டம் சொல்கிறது. ஆனால் தற்போது இவை வேகமாக தனியுடைமை ஆக்கப்பட்டு, வியாபார நோக்கில் விற்கப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமானது காற்று. என்ன, காற்று விற்கப்படுகிறதா என்று யோசிக்கிறீர்களா? சமீபத்தில்தான் நடந்தது. ஆனால் நாம் மறந்திருப்போம். அதனால் கொஞ்சம் பிளாஷ் பேக் போவோமா?

 நாம் இலவசமாக சுவாசிக்கும் ஆக்சிஜனை, கொரோனா காலத்தில் விலை கொடுத்து வாங்கினோம். அப்படியும் கிடைக்காமல், லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனதை நினைத்துப் பார்த்தால் காற்று விற்பனை பற்றிப் புரியும். “அது பெருந்தொற்று காலத்தில் நடந்தது, சாதாரண நாட்களில் நல்லாத்தானே இருக்கு?” என்று கேட்பவர்களுக்கான பதில்தான் இந்தப் படம்!

காற்று மாசினால் டெல்லிக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன, அதில் பறவைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய படம்தான், ’ALL THAT BREATHES’ (அனைத்தும் சுவாசிக்கும்) எனும் ஆவணப் படம். இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு நியமனமாகி வெற்றி பெறாமல் போனது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கும் என்னுடைய ஆய்வுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதால் இதை அவ்வளவு எளிதாகக் கடந்துபோக முடியவில்லை. 

இந்த பூமியில் பல்லுயிரினத்தில் ஒரு உயிரினம் பாதிக்கபட்டாலும் உணவுச் சங்கிலியில் உள்ள அனைத்தும் ஏதாவதொரு வகையில் பாதிப்புக்குள்ளாகும்.  அதில் மனிதர்களும் அடக்கம். இருப்பினும் காற்று மாசினால் பாதிக்கப்படும் பறவைகளைப் பற்றியும் அவற்றுக்கு எவ்வாறு சிகிச்சை அளித்து மீண்டும் இயல்புநிலையில் பறக்கவிடுவது என்பது பற்றியும் இப்படம் பேசுகிறது. 

ஒரு பாதிக்கபட்ட கரும்பருந்தை இளைஞர் ஒருவர் மீட்டு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கின்றார். “இது மாமிசம் உண்ணும் பறவை. அதனால் இங்கு சிகிச்சை அளிக்கமாட்டோம்“ என மறுத்துவிட்டனர். இளைஞர் கால்நடை மருத்துவர் என்பதால் சொந்தமாக பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றைத் தொடங்குகின்றார். பிறகு அவருடன் இரு இளைஞர்கள் இணைந்து செயல்படுகின்றனர். 

அவர்களே சிறிய இடத்தில் வசித்து வந்த நிலையில், பறவைகளுக்கான மருந்துகள் முதல் மாமிச உணவைச் சேமித்து வைக்கும் குளிரூட்டி வரை அனைத்தையும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில் சமாளிக்கின்றனர். மருத்துவமனை கட்டுவதற்கான பணம் வேண்டி Funding Agencyக்கு அனுப்புகின்றனர். இவர்களது மனு ஆறு மாதங்களுக்குப் பிறகு காரணமின்றி நிராகரிக்கப்படுகின்றது. இரண்டாவது முறை அனுப்பினால் மீண்டும் பதில் கிடைக்க ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவும் பணம் கிடைக்கும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. 

இதற்கிடையில் மாமிசம் அரைக்கும் மோட்டார், குளிரூட்டி என ஒவ்வொன்றாகப் பழுதடைந்து அவர்களுக்கு மேலும் புதிய பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்குகின்றன. இந்நிலையில் கரும்பருந்துக்கான இனப்பெருக்க காலத்தில், புதிதாகப் பிறந்து முதன்முறையாக சுதந்திரமாகப் பறக்க முயற்சி செய்து பறக்க முடியாமல் தவறி கீழே விழும் குஞ்சுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.

அந்த நேரத்தில் இந்திய ஒன்றியத்தில் CAA சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவரில் ஒருவர் தனது மனைவியை மட்டும் போராட்டத்திற்கு அனுப்பிவிட்டு, மருத்துவமனையில் பறவைகளுக்கான சிகிச்சையைத் தொடர்கிறார். இன்னும் கூடுதலாக இவர்களின் மகனுக்கு எற்கனவே இருந்த இருமல் அதிகரித்து உடல் நிலை பலவீனமடைகிறது. சில பறவைகள் இறக்கின்றன. இந்தக் காட்சிகள் அனைத்தும் ஒரே புள்ளியில் இணைகின்றன. 

இவ்வளவு பிரச்சனைகளையும் அவர்கள் எப்படிக் கடந்து வருகிறார்கள் என்பதுதான் படத்தின் இறுதிக் கட்டம். ஆனால் உண்மையில் பிரச்சனைகள் இனிதான் ஆரம்பம். காரணம் இதை வைத்துதான் காற்று வியாபாரம் தொடங்குகிறது. காற்று மாசு ஏற்படும் பகுதிகளில் பணம் இருப்பவர்கள், ஆக்சிஜன் சுத்திகரிப்பான் வைத்து சுவாசித்துக் கொள்கின்றனர். 

ஆனால் ஏழைகளின் நிலை இருமல், மூச்சுத் தினறல், நுரையீரல் பாதிப்பு எனத் தொடர்கின்றது. நேரடியாக மாசுக் காற்றை மட்டுமே சுவாசிக்கும் கூலித் தொழிலாளிகள், சாலையோரங்களில் குடியிருப்பவர்கள், நடுத்தரக் குடும்பங்கள் இப்படி காற்றுக்கு விலை கொடுக்க இயலாத ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கிறது. 

“சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என்று சொன்னார் கவிஞர் பழநிபாரதி. ஆனால் தற்போது இங்கு சாதி மட்டுமல்ல, கடவுள், மதம், பாலினம், பொருளாதாரம் என அனைத்து விதமான பாகுபாடுகளும் இச்சமூகத்தில் நடைமுறையில் உள்ளதால் மிக வேகமாக காற்றில் விசம் பரவிக்கொண்டிருக்கிறது, பரப்பிக்கொண்டிருக்கிறோம். 

இந்தப் படத்தில் வரும் கழுகைக் கூட பத்து வருடங்களுக்கு முன்பு வரை பறையா கழுகு (Paraiyah Kite) என்றுதான் அழைத்து வந்தனர், பல போராட்டங்களுக்குப் பின் தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ’கரும் பருந்து’ என்று அழைக்கப்படுகிறது. இன்னும் Brahmini Kite, Brahmini starling, Brahmini Duck எனப் பல சாதிப் பெயர்கள், பறவைகளின் வகைப்பெயர்களில் நடைமுறையில் உள்ளன. இது சமூகத்தின் மிக மோசமான அப்பட்டமான சாதிய மனநிலையைக் குறிப்பதாகும். 

ஒரு குறிபிட்ட சாதி மட்டுமே மனிதக் கழிவை சுத்தம் செய்ய வேண்டும், சாலையோரக் குப்பைகளை அள்ள வேண்டும் என்ற சூழல் இன்னும் தொடர்ந்து வருகிறது. அவற்றைப் பதிவு செய்யும், ’witness’ போன்ற படங்களைப் பொதுச் சமூகம் எப்போதும் போல் கண்டுகொள்வதில்லை. 

கிராமங்களில் அனைத்து சாதியினரின் வீட்டுக் குப்பைகளை கொட்டும் இடம், பிணங்களை எரிக்கும் இடம், புதைக்கும் சுடுகாடு மற்றும் இறந்தவர்களின் பொருட்களை வீசும் இடுகாடு போன்ற இடங்களால் நீரும், நிலமும் தினமும் மாசுப்படுத்தப்படுகிறது.

இன்னும் சில குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே வாழும் நிலையில்தான் இச்சமூகம் உள்ளது. இதே சுற்றுச்சூழல் மாசு, அதனைத் தொடர்ந்து காலநிலை மாற்றம் காரணமாக ஆந்தரப்போசீன் (Antropocene – ஆறாம் அழிவான மனிதர்களின் அழிவுக்காக, மனிதர்களே திட்டமிடும்)  காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இவையனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய. அதனால்தானோ என்னவோ இப்படம் ஆஸ்கராலும் நிராகரிக்கப்பட்து. 

kirubhanandhini@yahoo.in

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close