கட்டுரைகள்

மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ நூல் அறிமுகம் – ந.பெரியசாமி

கட்டுரை | வாசகசாலை

“இயற்கை கவிதைமயம். உறவுகள் கவிதைமயம். இந்தக் கவிதைமயத்தை ஸ்வீகரிப்பவர்கள் களிப்பூட்டக் கூடிய கவிதை அனுபவத்தை அடைகிறார்கள். எல்லா அனுபவங்களும் கவித்துவத்தில்தான் சங்கமிக்கின்றன. இயற்கை, காதல், நேசம், நட்பு எல்லாவற்றிலும் கவிதை இருக்கிறது.”  – யூமா வாசுகி 

எல்லோருக்கும் இப்படித்தான் தோன்றும், ஒன்பது வயது பையனுக்கு இது சாத்தியமாவென. சாத்தியம்தான். குழந்தைமை மனநிலையை தக்கவைத்துள்ளவர்கள் இதை உணர்வர். என், ‘குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம்’ தொகுப்பிலிருக்கும் கவிதைகள் அனைத்தும் குழந்தைகளோடு உரையாடியபோது கிடைத்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்டவை. எனவே மகிழ் ஆதனின், ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ தொகுப்பு என்னை ரொம்பவுமே வசிகரித்தது.

சிறார்கள் சிலந்தியாக மாற்றம் கொண்டு மொழியால் வலை பின்னிக்கொண்டிருப்பார்கள். நாம் பூச்சிகளாக உருமாற்றம் கொண்டு அதில் சிக்கிக் கொள்வோம். விளக்குமாற்றைக் கொண்டு வலையை சுத்தம் என்ற பெயரில் அழிப்பவர்களே சூழலின் துயரம். சொற்பமானவர்களே வலையில் பூச்சியாக சிக்கிக்கொள்கிறார்கள்.

நாம் யாராலோ வரைஞ்சு அனுப்பப்பட்டவர்கள் எனச் சொல்லும் மகிழன் ஏசப்பாவும் வரைஞ்சு அனுப்பப்பட்டவர் என்கிறார். நிஜமான ஏசப்பா இன்னும் சிலுவையில் மட்டுமே இருக்கிறார் எனும் உண்மையே சிறார்கள் அறிந்த ரகசியம்.

“மழை ஒரு பூமி
ரவுண்டு பூமி”

எனும் இக்கவியில் மழையை மழைத்துளி எனக் கொண்டால் துளியில் இருக்கும் ரவுண்ட் நம்மை வசீகரிக்கும். ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு பூமி. மழைப் பூமி மண் பூமியை குளிரச் செய்யும். இரண்டு வரிகள்தான். நம்மை வேறு தளத்தில் சிந்திக்கச் செய்திடுகிறார் மகிழ் ஆதன்.

நம் வாழ்வு சிறைபட்டது. என்ன சிறையின் நீளம் அதிகம். இந்த நீளமே நம்மை சுதந்திரமானவர்களாக நம்ப வைக்கிறது.

“பறவை நம்ம உயிர்
உயிர் நம்ம மனசு
மனசு நம்ம ஊரு”

எனும் கவிதை நமக்குள் இருக்கும் விடுதலை உணர்வை எட்டிப்பார்க்கச் செய்கிறது. ஞாயிறு மற்றும் விடுப்பு நாட்களில் நம் மனம் பறவையாவதையும் காட்சிபடுத்துகிறது கவிதை. “என் பட்டத்திலே” எனத் தொடங்கும் கவிதையும் விடுதலை உணர்வையும், காற்றுக்கும் நமக்குமான காதலை காட்சிப்படுத்துகிறது.

என் வெயில், என் முகம், என் நினைவு, என் குருவி, என் மஞ்சள் வெளிச்சம், என் போர்வை, என் புல்லாங்குழல், என் சட்டை என பிடிக்கும் எல்லாவற்றையும் தனக்கானதாகக் கொள்ளும் விசாலமான மனம் சிறார்களுடையது என்பதை பிரதிபலித்துக்கொண்டே இருக்கும் சொற்கள் தொகுப்பில் நிறைய்யவே.

ஆதி வண்டொன்று ஆதி மூங்கிலொன்றைத் துளையிட காற்று இசையானது. உலகம் புல்லாங்குழலைப் பிறப்பித்தது. நாமே புல்லாங்குழலாகி நம்மை இசையால் கரைத்துக்கொள்ளும் தருணம் அலாதியானது. அது எல்லோருக்கும் ஏதோவொரு சூழலில் அமையும். அது சிறார்களுக்கும் கிட்டும் என்பதற்கு சாட்சியாக நிற்கிறது இக்கவிதை.

“என் புல்லாங்குழல்
புல்லரிக்கும் புல்லாங்குழல்
மனசுக்குள்ளே போய் பாட்டு பாடும்
புல்லாங்குழல்
என் காத்துலே
பூக்கும் புல்லாங்குழல்
உன் நெஞ்சில்
பாடும் புல்லாங்குழல்.”

சொட்டுத் தண்ணீரில் மனசைத் தெரிந்து கொள்பவனால் இது சாத்தியம்தான். அவனிடம் இருக்கும் ஏணியால் மழையிலே ஏற முடியும். இப்படியொரு ஏணியை எதன் பொருட்டோ வளர வளர தொலைத்துவிடுகிறோம். சிறார் பருவத்தில் நம்மிடமும் அந்த ஏணி இருந்திருக்கும். அதைப் பாதுகாத்து நம்மோடு கொண்டுவரத் தெரியாது போய்விட்டோம். மகிழ் ஆதன் நம்மைப் போன்று தொலைத்திடாது உடன் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது இத்தொகுப்பு.

மகிழ்வின் அடையாளம் முத்தம். சிறார்கள் தங்களுக்கு விரும்பியது கிடைத்துவிட்டால் அவர்களின் மகிழ்வு முத்தமாக வெளிப்படும். வானம் முத்தமாதல், முத்தம் தொங்கிச் சொட்டும் தேன்,  கண்ணீர் தரும் முத்தம், வெளிச்ச முத்தம், சிறகடிக்கும் முத்தம்,  கண்முத்தம், பனியாகும் முத்தமென நீளும் மகிழ் ஆதனின் முத்தப் பட்டியல் நம்முள் வியப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. முத்தம் தொங்கிச் சொட்டும் தேன்  என்பதை வாசிக்கையில் நினைவு தித்திப்பாகி உடலை மணக்கச் செய்தபடி இருந்தது.

வரைதல் சிறார்களின் கவசகுண்டலம் எனச் சொல்லலாம். தங்களின் மனப்போக்கை சுவற்றில்  வரைவதன் மூலம் வெளிப்படுத்திவிடுவார்கள். அவர்களுக்கு எல்லாவற்றையும் வரையத் தெரியும். சரியா தவறா என்பது குறித்தெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. அந்தக் கணத்தின் ஆனந்தமே அவர்களுக்கு முக்கியம். மகிழ் ஆதனும் தொகுப்பில் வரைதல் குறித்து நிறைய்ய கவிதைகளைச் சொல்லியுள்ளார்.

“என் கண்ணில் இருந்து
கண்ணீர் வழிந்து வரும்
அதைப் பார்த்து
நான் ஓவியம்மாரி வரைவேன்
அது என்னைப் பட்டப்பகல் போல்
வரையும்.”

பறந்துபோன ஒளி சூரியனாகத் திரும்புதல், ஒலி இசையாதல், காற்று மழையாகப் பூத்தல், மழை வானமாக மாறுதல், மனதை நட்சத்திரமாகப் பார்த்தல், சூரியனைத் திரியாக மாற்றுதல், பழங்களாகும் மழைச் சொட்டு, தண்ணீரை வீடாகக் கொண்டு வரும் யானை என சூரியனால் வரையப்பட்ட மகிழ் ஆதன் வாசிப்பவர்களை சர்க்கஸ் கூடாரத்தில் அமரவைத்து அழகு பார்க்கிறார்.

கவிதை சொல்லிக்கொண்டிருக்கும் மகிழ் ஆதன் கவிதை எழுதுபவராகவும் பரிணாமம் அடைந்து செறிவுமிக்க படைப்புகளை நமக்குத் தருவார் எனும் நம்பிக்கையைத் தருகிறது ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’.

நூல்; நான்தான் உலகத்தை வரைந்தேன்
ஆசிரியர்; மகிழ் ஆதன் 
விலை; ரூ.50
வெளியீடு; வானம் பதிப்பகம் 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button