கட்டுரைகள்

”குழந்தைகளுக்கான அற்புதம்” -ஆலிஸின் அற்புத உலகம்- மொழிபெயர்ப்பு நாவல் விமர்சனம்.

க.விக்னேஷ்வரன்

‘ஆலிஸின் அற்புத உலகம்’ என்ற குழந்தைகளுக்கான நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு மேலாகிறது. இதை எழுதியவர் ‘லூயி கரோல்’ என்ற புனைப்பெயர் கொண்ட சார்லஸ் லூட்விக் டாட்ஜன்.

லூயி கரோல் இயல்பில் ஒரு கணித ஆசிரியர். ஆனால் அதைவிட அவருக்கு விருப்பமான ஒன்று இருந்தது. அது தன்னைச் சுற்றி இருந்த குழந்தைகளுக்குக் கதை சொல்வது. தான் பணிபுரிந்த கல்லூரியில் கல்லூரி முதல்வரின் இளைய மகளான ‘ஆலிஸ் விட்டாலுக்காக’ இவர் சொன்ன கதை தான் ஆலிஸின் அற்புத உலகம் என்கிற கதை…! பின்னாட்களில் அந்த கதையை இன்னும் விரிவாக எழுதி தனது நண்பர் மற்றும் ஓவியர் ‘ஜான் டேனியல்’ உதவியுடன் நிறைய சித்திரங்களோடு ஆலிஸின் அற்புத உலகம் என்ற நாவலை வெளியிட்டார்.

Lewis Carroll


‘ஆலிஸின் அற்புத உலகம்’ என்கிற இந்த நாவல் ஒரு வெப்பமான மதிய நேரத்தில் தொடங்குகிறது. ஆலிஸ் என்ற சின்ன பெண் தனது மூத்த சகோதரியுடன் ஒரு ஆற்றங்கரையில் உட்கார்ந்து இருக்கிறாள். தனது சகோதரி படித்து கொண்டிருக்கும் புத்தகத்தை எட்டிப் பார்க்கிறாள் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. காரணம் அந்த புத்தகத்தில் எந்த படங்களும் இல்லை இதை அவளுக்கு சலிப்பைத் தருகிறது.

அப்போது தனக்கு முன்பாக நடந்துபோய் கொண்டிருக்கும் முயல் ஒன்றை பார்க்கிறாள். முதல் பார்வையில் அவளுக்கு எதுவும் தெரியவில்லை. பின்பு கூர்ந்து பார்த்துபின்பு ஆச்சரியமடைகிறாள்.

ஆமாம்! அந்த முயல் தனக்குதானே பேசிக் கொண்டு வேகமாக போய் கொண்டிருக்கிறது. அதைவிட அது கோட் அணிந்திருக்கிறது அதில் இருக்கும் கடிகாரத்தை அடிக்கடி அடிக்கடி எடுத்து பார்த்துக் கொண்டே வேகமாக போகிறது. ஆலிஸிக்கு ஆச்சிரியம் தாங்க முடியவில்லை. அதை பின் தொடர்ந்து போகும் அவள் அந்த முயல் வலைக்குள் விழுந்து விடுகிறாள்.

லூயி கரோல் இந்த இடத்தில் சொல்ல வருவது என்ன என்று யோசித்தால், அவர் சொல்ல வருவது குழந்தைகள் இந்த உலகை எந்தவித முன் தீர்மானங்கள் இல்லாமல் எதிர் கொள்ளும் விதத்தை. அவர்கள் பெரியவர்கள் மாதிரி உலகை யோசித்து நிதானமாக எதிர்கொள்வதில்லை நன்மையோ, தீமையோ அவர்கள் அதை அதன் போக்கிலேயே எதிர் கொள்கிறார்கள்.

வலைக்குள் விழுந்து ஆலிஸ் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சாகசங்கள் தான் இந்த நாவல். முக்கியமாக அவளது உருவத்தை மாற்றும் வித்தியாசமான திரவங்கள், வித்தியாசமான பறவைகள், முயல் அதனது வீடு, எலி ஒன்று, குட்டிநாய், புகைபிடிக்கும் கம்பளிப்பூச்சி, சிரிக்கும் பூனை, மீன் மனிதர்கள், அபத்த சீமாட்டியும் அவரின் பன்றி முகம் கொண்ட குழந்தையும், குல்லாய்காரனும், முயலும், சீட்டுக்கட்டு ராணி, ராஜா மற்றும் சேவகர்களும், கடல் நண்டும் கடைசியாக சிடுமூஞ்சி ராணியின் அரசவை என்று நாவல் முழுவதும் வித்தியாசமான உயிரினங்கள் வருகிறது.
லூயி கரோல் இயற்கையின் அத்தனை விதிகளை இந்த நாவலின் வழியே மீறுகிறார். அவர் படைப்பது முற்றிலும் ஒரு கனவுலகம் அதுவும் உலகின் அத்தனை அடிப்படை விதிகளை கேள்வி கேட்கிறது. ஆலிஸூக்கும், பூனை ஒன்றுக்கும் உரையாடல் ஒன்று ஒரே இடத்தில் இருக்கும் அங்கு லூயி எழுப்பும் கேள்விகள் அன்றாட வாழ்வை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளே…!

நாவல் முழுவதும் ஒருவித அபத்த நகைச்சுவை வருகிறது. இதில் குழந்தைகளுக்கான எந்த நீதி கதைகளும் இல்லை. முழுக்க முழுக்க சாகசங்கள் மட்டும் வருகிறது அதுவும் புற உலகில் வாழும் உயிர்கள் வருவதில்லை. முழுக்கமுழுக்க குழந்தைகள் ஒரு கனவு கண்டால் அந்த கனவில் ஒரு மாய உலகை அவர்கள் படைத்தால் எப்படி இருக்கும் அப்படி தான் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

குழந்தைகள் இயல்பிலேயே சாகச விரும்பிகள். அவர்கள் எப்போதும் தங்களுக்கு எந்தவிதமான எல்லைகளையும் வகுத்து கொள்வதில்லை அதைதான் ஆலிஸ் கதாபாத்திரம் வழியாக லூயி கரோல் நமக்கு சொல்கிறார்.


ஒரே வாசிப்பில் இந்த நாவலை உங்களால் உள்வாங்க முடியாது. காரணம் இந்த நாவலில் அடிப்படையில் மறைத்திருக்கும் குழந்தைகளின் மனம் சார்ந்த உளவியல், ஆபத்தகளுக்குக்கிடையே வாழ்வை குழந்தைகள் எதிர்கொள்ளும் விதம். தங்கள் கற்பனைச் சிறகுளை குழந்தைகள் எப்படி கட்டமைப்பு செய்கிறார்கள் என்ற உளவியலும், திரவங்களின் மாறிக் கொண்டிருக்கும் இயல்பும் இப்படி நிறைய சொல்லலாம். இத்தனை வருடங்களுக்கு பிறகும் இந்த நாவல் படிக்கும் போது நிறைய புதுப்புது தகவல்களை நமக்கு தந்து கொண்டே தான் இருக்கிறது.

நாவலின் கடைசியில் ஆலிஸ் தனது கனவிலிருந்து முழித்து கொள்வாள். அப்போது அவள் சகோதரி சொல்லும் வரிகள் ஒன்று வரும்.

“ஆலிஸூம் ஒருநாள் பெரிய பெண்ணாகி விடுவாள். இதுபோன்ற வசந்தகாலம் மறைந்து போகக் கூடும். பிள்ளை பருவ ஞாபகங்கள் நிச்சயம் அவள் இதயத்துள் புதைந்து போய்விடும். எப்போதாவது பல வருடத்திற்கு பிறகு அவள் தன் பிள்ளைகளுடன் உட்கார்ந்து கொண்டு, ஆர்வம் பொங்கும் கண்களோடு அதிசயமான இந்த கனவை, விந்தை உலகின் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பாள். மெல்லிய சோகத்தோடு, சின்னச்சின்ன சந்தோஷகள் தெளிக்க, தன் பிள்ளைப்பிராய நாட்களை, சந்தோஷமாகக் கடந்துபோன கோடை காலத்துப் பகலை, நினைவு கொண்டபடி மற்றவர் சந்தோஷ்ங்களிலும் தன் பால்ய நாட்களை நினைத்து நிச்சயம் சந்தோஷம் கொள்வாள் ஆலிஸ்.”  இந்த வரிகள் நிச்சயமாக இந்தவுலகில் வாழும் அத்தனை மனிதர்களுக்கும் பொருந்தும்.


உங்கள் குழந்தைகளுக்கு பத்து வயதாகும் போது ஒரு புத்தகத்தை பரிசளிக்க விரும்பினால், கண்டிப்பாக இந்த புத்தகத்தை அன்பளிப்பாக தந்து மகிழுங்கள் காரணம் இது அவர்களின் கற்பனை வளத்தை மட்டுமல்ல அவர்களின் உலகத்தை அதன் போக்கிலேயே அவர்கள் புரிந்து கொள்ள உதவும்.


நூல் : ஆலிஸின் அற்புத உலகம் (மொழிபெயர்ப்பு நாவல்)

ஆசிரியர் : லூயிஸ் கரோல் 

தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன்

பதிப்பகம்: வம்சி பதிப்பகம்

விலை: ரூ 120 /-

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. ஆலிஸின் அற்புத உலகம் பற்றிய இந்தப் பதிவு மிகவும் சிறப்பு! படிக்கத்தூண்டும் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close