சிறுகதைகள்
Trending

அலைகள் ஓய்வதில்லை

ஸ்ரீதர் பாரதி

அனந்தராமன் மகன் வேணுகோபாலும் அவன் கூட்டாளிகளும் சிவன் கோயில் தெருவிலிருந்து கிளம்பி சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தனர் சைக்கிளில்.

“வேகமாப் போடா! படம் போட்றப் போறான்…இது சைக்கிளா? இசக்கிக் கோனார் வீட்டு எருமையா? வௌங்காதவனே!” வேணுகோபால் மனோகரங்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கும்போதே செயின் கழண்டுருச்சு.

“ஸ்…ஸ்… சனியம் புடிச்ச சைக்கிளு! சும்மா செயின் கழன்டுகிட்டே இருக்கு! உருட்றதுக்குத்தான் லாயக்கு. ஓட்ட லாயக்கில்லை!” வாத்தியார் மகன் மனோகரன் சலிச்சுக்கிட்டே கழண்ட செயினை மாட்டினான். திருப்பரங்குன்றம் லட்சுமி டாக்கீஸில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் போட்டிருந்தார்கள். கூட்டம்ன்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம் திருவிழா கணக்கா.

பெல்பாட்டம் பேன்ட் போட்டுக்கிட்டு ஸ்டெப் கட்டிங் வெட்டுன பசங்களும், குஞ்சம் வச்சி ஜடை போட்டு, பாவாடை தாவணி கட்டுன பொண்ணுகளும் படத்தை ரொம்பவே விரும்பிப் பார்த்தாங்க. பாரதிராஜா & இளையராஜா கூட்டணியில மறுபடி ஒரு சூப்பர் டூப்பர் ஹிட். பாட்டுகள் ஒவ்வொன்னும் பட்டையக் கௌப்புச்சு. கல்யாண வீடு, காதுகுத்து வீடு, டீக்கடை பஸ்ஸ்டாண்டு, சலூன்கடை, எல்லா எடத்துலயும் அலைகள் ஓய்வதில்லை பாட்டுகள்தான்.

“ஆயிரம் தாமரை மொட்டுக்களே…ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே..!” பாட்டைக் கேட்கும்போதே ஆகாசத்துல மிதக்குற மாதிரி இருந்தது. “வாடியேன் கப்பக்கிழங்கே..! எங்கக்காப் பெத்த முக்காத்துட்டே..!”பாட்டை பள்ளிக்கூடத்துலப் படிக்கிற நண்டு சிண்டுக கூடப் பாடிக்கிட்டுத் திரிஞ்சதுக. “காதல் ஓவியம் பேசும் காவியம்…தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்..!” பாட்டை சிலோன் ரேடியோவுல அடிக்கடி ஒலிபரப்புனாங்க. பெரியவங்களுக்கு இந்தப் பாட்டையெல்லாம் சுத்தமா பிடிக்கல. படத்தையுந்தான். படிக்கிற புள்ளைகளுக்கு காதல்… கத்திரிக்காலாம் என்னத்துக்கு?ன்னு விமர்சனம் பண்ணாங்க.

வேணுகோபாலு பன்னெண்டாப்பு பெயிலாகி வீட்டோட இருந்தான். இப்போதைக்கு அவனுக்கு முக்கியமான வேலைகள் ரெண்டு. ஒண்ணு & தேவசகாயம் மகள் சில்வியா ராணியை சைட் அடிப்பது ரெண்டு & லட்சுமி டாக்கீஸ்ல விடாம சினிமா பார்க்குறது. சில்வியா ராணி அப்பதான் பத்தாவது படிச்சிக்கிட்டு இருந்தா. நல்ல சிவப்பு ரோசாப்பூ கணக்கா. ரெட்டை சடை போட்டு, மல்லிப்பூ வச்சி, தாவணி கட்டி, கொலுசு சிணுங்க

நோட்டுப் புத்தகத்தை அவ நெஞ்சோட அணைச்சுக்கிட்டுப் போறப்ப கிழங் கட்டை கூட வச்ச கண்ணு வாங்காமப் பார்க்குங்க. அம்புட்டு லட்சணம். காலையில அழகர் டீக்கடை வாசல்லயும் சாயங்காலம் பிள்ளையார் கோயில் முக்குலயும் அவளை பார்த்தாத்தான் ராத்திரிக்குத் தூக்கம் வரும் வேணுகோபாலுக்கு.

“மருதமலை மாமணியே… முருகய்யா..!  தேவரின் குலம் காக்கும் வேலய்யா…ய்யா..!” மதுரை சோமு பாட ஆரம்பிச்சுட்டாலே. டிக்கெட்டு குடுக்கப் போறாங்கண்ணு அர்த்தம்.

சைக்கிள்களை நிறுத்திட்டு டிக்கெட் எடுத்து உள்ள போனானுங்க மேற்படியானுங்க. வாத்தியார் மகன் மனோகரனும், ராவுத்தர் மகன் அமானுல்லாவும் கணேசா பீடிய பத்த வச்சானுங்க. வேணுகோபாலு ரொம்ப நல்லவன். பீடியெல்லாம் புடிக்க மாட்டான். ஒன்லி பர்கலி சிகரெட்தான். சட்டைப் பையில இருந்த நீலக்கலர் பெட்டியிலருந்து ஒண்ண எடுத்து பத்தவைச்சு இழுத்தான். “மாப்ளை ரெண்டு இழுப்பு இழுத்துட்டு குடு மாப்ளை… சிகரெட் குடிச்சி ரொம்ப நாளாச்சி..!” அமானுல்லா ஆளாப் பறந்தான் ஓசி சிகரெட்டுக்கு. திரைக்கு முன்னாடி மணலைக் குவிச்சி மல்லாந்து கிடந்த விசிலடிச்சாங் குஞ்சுக எல்லாம் லாட்டரி டிக்கெட்டக் கிழிச்சி எறிஞ்சி ‘ஓ’ன்னு கத்துச்சுங்க.

வேணுகோபாலுக்கு படத்துல ராதாவப் பார்க்கும் பொழுதெல்லாம் சில்வியாராணி ஞாபகம் வந்துடும். ”காமாலை வந்தவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்”ங்குற மாதிரி, படத்துல வர்ற கதாநாயகி எல்லாருமே அவனுக்கு சில்வியாராணி தான்.

வேணுகோபாலு இந்தப் படத்தை இப்போ மூணாவது தடவையாப் பார்க்குறான். பொதுவா ஒரு படத்தை நாலஞ்சு தடவை பார்ப்பான். அதுவும் பாரதிராஜா படம்ன்னா பத்துதரம் பார்ப்பான். பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள்,  நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், நிழல்கள், டிக் டிக் டிக் இப்படி எல்லா படத்தையும் திருப்பரங்குன்றத்துல மட்டுமில்லாம மதுரை, திருமங்கலம், விருதுநகர்ன்னு எல்லா தியேட்டர்லயும் போயி பார்த்துட்டு வந்துருவான். படிக்கிற போதிருந்தே சினிமாக் கிறுக்கு புடிச்சிருச்சி. இப்ப அலைகள் ஓய்வதில்லை படத்தைப்  பார்த்ததுக்கப்புறம் அது முத்திப்போச்சு.

பாரதிராஜா படங்கள் என்றால் தனி ஈர்ப்பு. சினிமா பத்திரிகையில் வந்த கேள்வி & பதில் பக்கத்தில் பாரதிராஜா முகவரியைப்  பார்த்துவிட்டு அந்த முகவரிக்கு லெட்டரும் எழுதினான். ”நான் உங்க ரசிகன். உங்க படமெல்லாம் எனக்கு ரொம்பப் புடிக்கும். நானும் உங்கள மாதிரி டைரக்டராகணும் என்னை உங்கக்கிட்டச் சேர்த்துக்குவீங்களா?” அப்படின்னு கேள்வியோட ஒவ்வொரு படத்தைப் பத்தியும் பத்துப்பக்கத்துக்கு எழுதி அனுப்பினான். ரொம்ப நாள் கழிச்சி பாரதிராஜா அலுவலகத்திலிருந்து பதிலுக்கு ஒரு லெட்டர் வந்தது.”உங்கள் அன்புக்கு நன்றி” அப்படின்னு பாரதிராஜா கையெழுத்துப் போட்ட

கல்லுக்குள் ஈரம் படத்துல அவரு கேமராவோட  நிக்கிற போட்டோ மட்டும் வந்திருந்தது. அவனுக்கு அதுவே பெரிய சந்தோஷமாயிருந்தது. ஊர்ல எல்லாத்துக்கிட்டயும் காட்டி காட்டி உள்ளூர சந்தோஷப்பட்டான். தெரு நாய்க குஸ்தி போட்டுக்கிட்ருந்த நேரத்துல படம் முடிஞ்சி வீட்டுக்குப் போயி அவனவன் சோத்தைத் தின்னுட்டு கட்டையைச் சாச்சானுங்க.

விடிஞ்சும் விடியாம வேணுகோபாலு வீட்டுல ஆரம்பமாச்சு கச்சேரி. வேணுகோபாலு அப்பன் பெரம்போட நின்னு சத்தம் போட்டுக்கிட்டிருந்தார்.”ஒண்ணுக்கும் ஆகாத ஒபயங்கெட்டவனே… நீ கெட்ட கேட்டுக்கு சினிமா கேக்குதா? சினிமா.. சினிமான்னு சுத்திக்கிட்டுத் திரிஞ்ச கையி கால ஒடச்சி ஒச்சமாக்கிருவேன்… படிப்பும் ஏறல… பத்துகாசு சம்பாதிக்கவும் துப்பு இல்ல… சினிமா கேக்குது… சினிமா..!”

“ஒழுங்கு மரியாதையா இருக்குறதுன்னா இரு. இல்ல, பொட்டியக்கட்டி பொறப்புடு… இப்படியாப்பிட்ட தறுதலைப்புள்ள எனக்கு தேவையே இல்ல..!” பிரம்பு தெறித்து விட்டது அன்னைக்கு முழுசுமே வேணுகோபால் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. உள்ளேயே முடங்கிக் கிடந்தான். அம்மா சாப்பிடக் கூப்பிட்டபோது கூட வராமல்  கண்ணை மூடிக் கிடந்தான். கண்ணீர்த் துளிகள் இறங்கி தாரையாய் தலையணையில் விழுந்திருந்தன. வீட்டு வாசலில் வைத்து அப்பன் அடித்த அடியை விட பேசிய வார்த்தைகள் நெஞ்சில் ஊசியாய் தைத்தன. அடியின் வலி மறைந்து விடும். அவமானத்தை எப்படி மறைப்பது?

அம்மா மளிகைக் கடைக்குப் போயிருந்தாள் வீட்டில் அப்பனுமில்லை. எழுந்து முகம் கழுவி, அம்மா சிறுவாட்டுக்காசு வைக்கும் அரிசிப் பானைக்குள் கைவிட்டான். பத்து ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுகளாக இருந்தன. எடுத்துக்கொண்டு வெரசாகக் கிளம்பினான்.

தூரத்தில் மதுரை சோமு பாடிக் கொண்டிருந்தார். மறுபடி இன்னைக்கு “அலைகள் ஓய்வதில்லை”.

விடிந்து வெகு நேரமாகியிருந்தது. இரவெல்லாம் கோபால் வீட்டுக்கு வரவே இல்லை. அப்பனும் ஆத்தாளும் ஊர் முச்சூடும் தேடித் திரிந்தார்கள். அவன் கூட்டாளிகளான மனோகரன், அமானுல்லா வீடுகளிலும் போய் விடியகாலமே விசாரித்துவிட்டு வந்துவிட்டார்கள். எல்லோரும் சொல்லிவைத்தாற்போல ”தெரியலையே!” என்ற பதிலை மட்டுமே சொன்னார்கள்.

இதற்கிடையில் வெயிலுகந்தம்மன் கோயில் ரயில்வே தண்டவாளத்தில் கொஞ்ச வயசுப் பையன் பிணம் கிடப்பதாகவும், ராத்திரியே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவும் அரசல் புரசலாய் செய்தி வர அனந்தராமன் பொஞ்சாதியிடம்  மூச்சு விடாமல் பதறிப் போய் வேர்க்க விறுவிறுக்க

வெயிலுகந்தா கோயிலுக்கு சைக்கிள் மிதித்தார். அம்சவேணி கண்கள் கலங்கி பித்துக்காரியைப் போல மந்தைக் கல்லில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள்

”அடேய்… கோவாலு… எங்கண்ணு…எங்கடா அய்யாப் போயிட்ட?” சரக்கு லாரியொன்றின் தார்ப்பாய் மீது தலைமுடி  காற்றில் அலைய செக்கச் சிவந்த விழிகளோடு வானம் பார்த்துக் கிடந்தான் வேணுகோபால்.

லாரி மெட்ராஸ் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close