இணைய இதழ்இணைய இதழ் 53சிறுகதைகள்

அளை – தேவி லிங்கம்

சிறுகதை | வாசகசாலை

1.

ன்று காலை ஒன்பது மணிக்கு அவனுக்கு அந்த பெரிய மாநகராட்சி அலுவலகத்தில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவனோடு, அவளையும் அழைத்துப் போக வேண்டும். இரண்டு பேருக்கும் அன்றுதான் நேர்முகத்தேர்வு இருந்தது. அவனுக்கு ஆதி என அழகான பெயரும், அவளுக்கு மேகா என மெலிதான பெயரும் இருந்தது.

அது ஒரு வைகாசி மாத பௌர்ணமி இரவு. கண்ணாடிகள் பொருத்தப்பட்ட சன்னல்கள் நிரம்பிய அறையை மேகாவை சந்திப்பதற்காக தேர்ந்தெடுத்திருந்தான் ஆதி.ஏற்கனவே இருமுறை பொது இடத்தில் சந்தித்திருந்தார்கள் இருவரும். இருவருக்கும் பரஸ்பரம் மிகப் பிடித்திருந்ததால், இறுதியாக ஒரு முடிவை எடுப்பதற்காக இந்த தனிமை இரவை அவன் ஏற்பாடு செய்திருந்தான்.எத்தனை வண்ணவிளக்குகள் இருந்தாலும், நிலவின் வெளிச்சத்தில் ஒரு பெண் தரும் அழகு பெரும் போதை.அதுவும் ஒதுக்கப்பட்ட தீரைச்சீலைகளின் கண்ணாடி சன்னல் வழியே கலைக்கப்பட்ட பெண் உடலின் பாகங்களின் மீது, பக்கவாட்டு பால் நிலவொளியின் கதிர்கள் விழுந்து காமத்தை தூண்டுவதெல்லாம் உச்சக்கட்ட ரசனை.அத்தனை அழகையும் அப்படியே சிறிது சிறிதாக விழுங்கிக்கொண்டிருந்தார்கள் ஆதியும்,மேகாவும். நிலவின் வெளிச்சத்தூடே விரல்களால் பாகம் குறித்துக் கொண்டிருந்த ஆதியிடம், “என்னை ஏன் பிடித்திருக்கிறது ஆதி? என் அழகா? நான் திறமையானவள் என்பதாலா? சொல் ஆதி” என்றாள் மேகா.

“ஆம். இவையெல்லாமும் காரணங்கள் தான். எல்லாவற்றையும் விட என்னில் நான் பிறந்ததிலிருந்து நிரப்பப்படாத பாகம் ஒன்று இருக்கிறது.அது அதன் மீதி பாகத்தை தேடிக்கொண்டே இருந்தது. உன்னைப் பார்த்த நொடியே, கொஞ்சம் தீர்மானித்துவிட்டேன் நீ என்னவளாய் தான் இருப்பாய் என. நேற்றிரவு அந்த பாகம் முழுமையை எட்டி விட்டது.மேகாக்குட்டி, நான் உன்னை இப்படி அழைக்கலாம் இல்லையா!

மேகாக்குட்டி நீ எனக்காகப் பிறந்தவள்.ஆனால், சிரிப்பாக வருகிறது.கிட்டத்தட்ட 2020-ல் இப்படிதான் ஆண்களும்,பெண்களும் கொஞ்சிக் கொண்டிருந்திருக்கிறார்களாம்.நிறைய நூல்களில் படித்திருக்கிறேன்.ஆனால், நானே இப்படிதான் ஆவேன் என நினைக்கவில்லை.இது உண்மை மேகா,

உனது அருகாமை எனக்கு வேண்டும்.உனது அணைப்பு, உனது அங்கங்கள்.உனது முழுமையும் எனக்கு வேண்டும். கிட்டதட்ட 100 வருடங்கள் கழித்து, இத்தனை மாற்றங்கள் வந்த பிறகும்,இவ்வளவு மாற்றங்கள் வந்த பிறகும், நான் பழமைவாதி போல், அதே முறையில் உன்னை நேசிக்கிறேன். உனக்கு சலிப்பாக இருக்கிறதா எனது செயல்கள்? சட்டென்று பார்த்து, சலனமடைந்து, உறவு கொண்டு மீண்டு விடும் இக்காலத்தில், உன்னை அணுஅணுவாக ரசித்து, நேசங்கொண்டு மெதுவாய் ஆட்கொள்வது அலுப்பூட்டுகிறதா மேகா? அந்த காலத்திலெல்லாம் காதல் என்று ஒரு உணர்வு இருந்ததாம். அந்த உணர்வு ஏற்படும் ஆண்,பெண்ணுக்குள் அப்படி ஒரு புரிதலும்,அன்பு என்ற ஒன்றும் பரிமாறப்பட்டதாம்.

தொலைவிலிருந்த ஆணும்,தொலைவிலிருந்த பெண்ணும் பார்த்துக்கொண்டாலே மின்சாரம் போன்ற உணர்வு பற்றிக்கொள்ளுமாம்.இப்போது அதெல்லாம் ஹார்மோன் மாற்றங்கள் என எளிதாக புரிந்துகொள்ளப்பட்டாலும், உன்னை இரண்டாவது தடவை கடற்கரையில் பார்த்த பொழுது,ஒரு பார்வை பார்வை பார்த்தாயே!! சத்தியமாய் என்னுள் மின்சாரம் பாய்ந்தது மேகா.என்னை நம்புகிறாயா? இதெல்லாம் உனக்கு பழமையாகத் தோணுகிறதா?”

“இல்லை ஆதி உண்மையை சொல்லப்போனால் நீ சொல்லது நிஜம் ,நானும் இந்த கட்டுப்பாடுகள், இயந்திரத்தனமான வாழ்க்கையை வெறுக்கிறேன்.உனது நேசம் எனக்கும் பிடித்திருக்கிறது ஆதி. ஆனால், சடாரென நான் ஆண்களை நம்பிவிடுவதில்லை. அவர்கள் சுயநலக்காரர்கள்,காமத்தின் உச்சத்தில் இருக்கும் போது உளறுவார்கள்.பின் வேலை முடிந்ததும் அனைத்தையும் மறந்து விடுவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.” – மேகா கூறிக்கொண்டு இருக்கும் போதே, “ஏழு மணி முப்பது நிமிடங்கள் ,நீங்கள் வெளியே செல்லுவதற்கு தயாராக வேண்டும்“ – என பதிவு செய்யப்பட்ட பெண்குரல் கேட்டது.

அந்தக்குரல் பத்ராவினுடையது.

2.

பத்ரா அந்த உலகத்தின் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவள்/ன். அதன் மூளை ‘Artificial Intelligence’ சுருக்கமாக AI-ஆல் செயல்படுகிறது. தமிழில் செயற்கை நுண்ணறிவு.இந்த உலகில் அனைத்துமே பத்ரா தலைமையில்தான். இது வரை உலகில் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள், கெட்ட மாற்றங்கள், புயல்கள், சுனாமி, வெள்ளம், தட்ப வெப்ப மாறுதல் ,காட்டுத் தீ ஆகிய சின்ன சின்ன நிகழ்வுகள் கூட தேர்ந்த பொறியியல் வல்லுநர்களால் ‘கோடிங் ‘ மூலம் அதில் தகவல்களாக பதியப்பட்டுள்ளது.அது மட்டும் அல்லாமல் மனிதர்களின் நிறம்,கண்கள்,வேலை செய்யும் திறன், அவர்களின் ஜீன் அமைப்பு, உடல் திறன், சூழ்நிலைக்கு தகவமைக்கும் தன்மை, ஆரோக்கியமான சிசுவை சுமக்கும் கருப்பை, நல்ல ஆரோக்கியமான குழந்தையை, அறிவான குழந்தையை உருவாக்கும் விந்து.அனைத்து தகவல்களும் அதில் பதியப்பட்டிருக்கும்.

“ஓ! நீ உனது Al-க்கு பெண்குரல் பொருத்தி வைத்திருக்கிறாயா? என்னுடைய வீட்டில் ஆண்குரல் பொருத்தி வைத்திருக்கிறேன்.பெயர் கூட நீல்.”

“உனது Al பெயர் என்ன? அது மிகவும் அவசியமாகிற்றே” – என வினவினாள் மேகா.

“பத்ரா என்று பதிலளித்த ஆதி , “உடனே கிளம்பு மேகா ,உடைகளை அணிந்து கொள் .நமக்கு கீழ்தளத்தில் சாப்பாடு வந்துவிட்டதாம். பத்ராவிடமிருந்து தகவல் வந்துவிட்டது.இன்றைய மெனு கேழ்வரகு புட்டும் வாழைப்பழமும். இரண்டு துண்டுகள் மீனும், மொத்தமாக இந்த ஊருக்கே உணவு சமைக்கும் இடத்திலிருந்து வந்துவிட்டது.வா, மிகவும் பசிக்கிறது” என்றான் ஆதி. 

இருவரும் உண்டு முடித்து கிளம்பி வாசலுக்கு வந்ததும் கதவு தானாக மூடிக்கொண்டது. அவர்களை அழைத்துச் செல்ல பேருந்து வந்தது .இவர்களைப் போலவே நிறைய அலுவலங்களில் நேரம் ஒதுக்கப்பட்டவர்கள் அந்தப் பேருந்தில் நிறைந்திருந்தனர்.

இரண்டு பக்கங்களிலும் அத்தனை பசுமையாக, அவ்வளவு அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது ஊர்.சிறிது தூரம் சென்றதுமே வயல்கள் செழித்து அறுவடைக்கு தயாரான நிலையில் பொன்னிறமாய் நெற்கதிர்கள்.

ஊரே மாசில்லாமல் சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தது, அங்கங்கே ரோபோக்களும், மனிதர்களுமாய் கலந்து வேலை செய்து கொண்டிருந்தனர்.

அடிக்கடி அநாவசியமாக எல்லாம் வெளியே வரமுடியாது.மருத்துவ அவசரம், பிரசவம், விபத்துகள் தவிர ‘பத்ரா’ யாரையும் வெளியே அனுமதிப்பதில்லை.

சட்டென ஒரு பெரிய கோபுரம் வைத்த அமைப்பு முன்னாடி பேருந்து நின்றதும், அங்கே குட்டி குட்டியாய் ஹெலிகாப்டர்கள் மாதிரியான பறக்கும் பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன.தரையில் அதிகமாக போக்குவரத்து குறைக்கப்பட்டு வான் வழியாகத்தான் கொஞ்சம் பெரிய தொலைவுகள் கடக்கப்பட்டன, அதுவும் தேவை இல்லாமல் பயணிப்பது சட்டபடி குற்றம்.அனைத்துமே ஒரு ஒழுங்கின் கீழ் ,கடுமையான தண்டனைகள் வழக்கப்பட்டு பத்ராவால் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது.

அங்கே இருவரது பெயரும், ஆதார் எண்களும் சரிபார்க்கப்பட்டபின் ஆதியும் ,மேகாவும் ஏறிக்கொண்டார்கள்.

சீட் பெல்ட் அணிந்து சன்னல் ஓரமாக அமர்ந்த மேகா,ஆதியின் கையை பிடித்து இறுக்கிக்கொண்டாள். “உனக்கு தெரியுமா ஆதி, ஏன் இங்கே கோபுரம் வைத்திருக்காங்க?” 

“ம்ம்ம், அப்பொழுதெல்லாம் இதன் பெயர் கோவிலாம். இங்கு மனிதர்கள் கூடி தியானம் செய்வார்களாம், இப்பொழுது ஊரிலேயே அதுதான் பெரிய இடமாக இருப்பதால் விமான ஓடுதளமாக உபயோகப்படுத்துகிறார்கள்” என்றான் ஆதி.

“ஆபிசர் கேட்கும் கேள்விகளுக்கு உனக்கு தோன்றியதை நீ சொல்லலாம் மேகா. உனக்குப் பிடித்தது, பிரியமானது, உனது விருப்பம்தான் எனதும்.என் வாழ்க்கையை உன் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்ள நான் பிரியப்படுகிறேன். உன்னை மணந்து கொள்ள, உன்னை மாதிரி ஒரு பெண்குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.உனக்கும் சம்மதம் எனக்கூறிவிட்டாய். இருப்பினும் உனது விருப்பத்தை நீ மாற்றிக் கொள்ளலாம். உனக்கு ஆபிசரை சந்திக்கும் வரை நேரம் இருக்கிறது.நான் உன் வாழ்க்கைக்கு வர விருப்பமா உனக்கு?”

சற்று நேரம் அவனையே உற்றுப்பார்த்த மேகா, “என்னை உனக்கு இன்னுமா புரியவில்லை?” என்று தன்னை மறந்து சிரித்தாள்.

அப்படியே அவளை அணைத்துக்கொண்டான் ஆதி.

“அத்தனை அழகியது உனது சிரிப்பு மேகா குட்டி” – என அவளை உச்சிமுகர்ந்தான்.

ஆபிசர் அழைப்பதாக தகவல் வர இருவரும் உள்ளே சென்றார்கள்.

ஆபிசர் அவரை முறையாக அறிமுகப்படுத்திக்கொண்டு, கேள்வி நேரத்தைத் தொடங்கினார்.

“மிஸ்டர் ஆதி, நீங்கள் மின்சாரத்துறையில் இளநிலை பொறியாளராக வேலைப்பார்க்கிறீர்கள் அப்படிதானே?”

“ஆம் சார்.”

“மிஸ், மேகா நீங்கள் தோட்டக்கலையில் இளநிலைப் பொறியாளர் .உங்கள் இருவரின் தகவலும் ‘Al ‘ – ஆல் சரிபார்க்கப்பட்டு என்னிடம் வந்தாகிற்று.நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள் அதற்கான விதிமுறைகளை உங்களிடம் விளக்கிச் சொல்வது எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை.உங்களுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்கலாம். எனினும் மீண்டும் இதை நான் சொல்லியே ஆகவேண்டும்.உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம். அதை விளக்குவதே என் பணி” என்ற ஆபிசர் இளமாநிறத்தில் களையாக இருந்தார்.

“எங்களுக்கான நேர் ஆய்வே அதற்காகத்தானே. சொல்லுங்கள் சார்” என்றாள் மேகா,

“சரி, சொல்கிறேன், நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால், உங்கள் இருவரின் பெற்றோரிடமிருந்து முதலில் நீங்கள் வெளிவர வேண்டும்.உங்களுக்கு ஒரு வீடு வழங்கப்படும்.இந்த நாட்டில் உள்ள எல்லா வீடுகளும், அவற்றின் வசதிகளும் ஒரேமாதிரியானவை தான். அனைத்துமே தரத்திலும், வசதியிலும் சிறந்தவை. அதனால் வீடு வழங்குதலில் யாருக்கும் எந்த பாகுபாடும் கிடையாது.வீட்டின் முகப்பில் செயற்கை நுண்ணறிவு கருவி அதாவது ஆர்டிபீசியல் இன்டெலிஜென்ஸ் என்றழைக்கப்படும் கருவி பொருத்தப்பட்டுவிடும்.அந்த நொடியிலிருந்து உங்களுடைய அனைத்து செயல்களும் Al-ஆல் தொடந்து கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.உங்களுடைய உடல் வெப்பநிலை, உடல் நலச்சீர்கேடு, பெண்களுக்கு மாதவிலக்கு, எப்பொழுது கரு முட்டைகள் கரு உருவாக்கத் தயாராகின்றன.கர்ப்பம் தரிக்க எந்த நாளில் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.கர்ப்பம் தேவையில்லை யெனில் எந்த நாட்களை தவிர்க்கலாம் என எல்லாமே உங்களுக்கு ‘AI ‘ஆல் குரல் பதிவாக தெரிவிக்கப்பட்டுவிடும்.”

“ஏன் சார் இதெல்லாம் பரவாயில்லை. ஆனால், படுக்கை அறையில் இந்த கண்காணிப்புத் தேவையா?” என்றாள் மேகா.

“மிக அவசியம். மனிதன் எப்பொழுதுமே தன் ஒழுக்கத்தை விட மற்றவர்கள் கவனிக்கிறார்களே என்றுதான் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் .அவனது ஜீனில் அவ்வாறுதான் பதியப்பட்டிருக்கிறது. படுக்கை அறையில் உணர்வுகளின் உச்சத்தில் அவன் பெண்ணை துன்புறுத்திவிடக்கூடும். அதை தவிர்ப்பதற்காகத்தான் இந்தக்கண்காணிப்பு .இதற்காக நீங்கள் உங்கள் சந்தோஷத்தின் உச்சத்தை குறைத்துக்கொள்ள வேண்டியது இல்லை .உடலுறவில் வன்முறையின் அளவு AI-ஆல் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக கண்காணிக்கப்பட்டு பதியப்பட்டுள்ளது .அதை மீறினால் எச்சரிக்கப்படுவீர்கள்.அதைப் பொருட்படுத்தவில்லையெனில் உடனடியாக யார் வன்முறையில் ஈடுபட்டார்களோ அவர்கள் கைது செய்யப்படுவர்.கடுமையாக தண்டிக்க படுவர்.இங்கு ஆண் ,பெண் மட்டும் தான் பிரிவு ,நிறத்தை வைத்தோ, செய்யும் தொழிலை வைத்தோ பிரிவுகள் கிடையாது.ஆண் ,பெண் பிரிவு ஏனென்றால் எப்பொழுதுமே ஆணை விட பெண் சக்தி அளவும், உடல் அளவும் வேறு என்பதால். மற்றபடி பெண்களுக்கு பிரசவம், மாதவிலக்கு சமயங்களில் சிறிது சலுகைகள் உண்டு.

மேகா, உனக்கு தெரிந்தது தான். ஒரு ஊரில் அனைவருக்கும் பொதுவாக ஓரிடத்தில் மட்டுமே உணவு தயாரித்து வழங்கப்படும்.அதுவும் ரேஷன் முறையில். உணவை அநாவசியமாக வீணாக்குவதோ,கண்டதை சாப்பிட்டு உடலை சிதைப்பதோ கட்டாயமா கூடாது. முதியோர்களுக்கும், சிறுவர்களுக்கும்,கர்ப்பிணிகளுக்கும்,சில சலுகைகள் உண்டு.அதை வீட்டிலிருக்கும் ‘AI’ கண்காணித்து தெரியப்படுத்திவிடும்.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் உடற் பயிற்சி செய்தே ஆகவேண்டும்.இது கட்டளை” என ஆபிசர் சொல்லிக்கொண்டிருக்கும் போது அவரிடமிருந்து. ‘எனர்ஜி லெவல் குறைந்து கொண்டே வருகிறது. சார்ஜ் செய்யவும்’ – என AI ன் அலர்ட் ஒலி கேட்டது.

உடனே ஆபிசர் சட்டென, “மன்னியுங்கள். சார்ஜ் போட்டுவிட்டு வந்து விடுகிறேன்” என கையை அங்கிருக்கும் ஸ்விட்ச் போட்டில் நுழைத்து அமைதி நிலைக்கு மாறினார்.

3.

உடனே அங்கிருக்கும் இன்னொரு ‘AI’, “இருவருக்கும் ஏற்பட்ட சிரம்மத்திற்கு மன்னிக்கவும். உங்களுக்கு பத்து நிமிடங்கள் வெளியே உலவி வர வாய்ப்பு உள்ளது.விருப்பப்பட்டால் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுகிறீர்கள்” என குரல் எழுப்பியது.

உடனே இருவரும் பின் பக்கமாக வெளியே வந்தனர். அது ஒரு அழகான பூங்கா மாதியான சின்னத் தோட்டம்.

“கடைசியா ஆபிசரும் ரோபோதானா? யார் மனிதன், யார் ரோபோ எனக்கூட தெரியாத அளவுக்கு எப்படி வடிவமைத்திருக்கிறார்கள் பார் ஆதி”

‘என்ன இவர்கள்.சார்ஜ் கூடவா போட்டுவைக்கமாட்டார்கள், கட்டுப்பாடு,விதிகளைப் பத்தி மட்டும் வகுப்பு எடுக்கிறார்கள்’ என சலித்துக்கொண்டாள் மேகா.

சலித்துக்கொள்வது பெண்களுக்கு கூடவே இருக்கும் குணம் போல என மனதிலேயே நினைத்துக்கொண்டான் ஆதி.

“இங்கே வா! இந்தச்சூழலை பார்! உன்னுடன் நான் வெளியில் வந்திருக்கிறேன் முதல் முறையாக, அதில் தனித்திருக்க அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அனுபவிப்போம். சரியா?” – என்றவனின் இதழை அப்படியே கவ்வினாள் மேகா.

பெண்களை தூண்டி விடுதல்தான் சிரமம். அதைச் செய்து விட்டால் விளக்கென பிரகாசமாய் ஒளிர்வாள். ஒரு தொடுதலோ, மெல்லிய அணைப்போ,சின்ன சொல்லோ, ஏன் சின்ன சிரிப்புக்கூட இருக்கலாம்.அவளை பற்றியெறியச் செய்வது கவனம் முழுக்க குவித்து செய்யப்படும் வேலை. அதை ஒழுங்காக செய்து விட்டால் ஒரு முழுமையான தியானம் செய்த பலனை உடைய கலவி கிடைக்கும் . நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளை எப்படித் தூண்டிவிடலாம் என கற்கத் தொடங்கியிருந்தான் ஆதி.நெருப்பை எறிய விட்டு அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தான்.

“இது பொதுவான மனிதர்கள், சில நேரத்தில் குழந்தைகள் கூட வரும் இடம். கவனம்” – என பதிவு செய்யப்பட்ட குரல் கேட்டதும் சட்டென சுதாரித்து விலகினார்கள் இருவரும்.காதலில் மட்டும்தான் இடம், பொருள், காலம் , பற்றி கவனம் இழக்கிறார்கள் மனிதர்கள்.

அங்கிருந்த டேபிளில் அமர்ந்து கொண்டு தேநீரை “AI”யிடம் ஆர்டர் செய்தார்கள்.”சரி சொல் ஆதி. உன்னுடைய “AI” – க்கு ஏன் பத்ரா எனப்பெயரிட்டாய்?”

“மேகாகுட்டி, நான் வரலாறுகளை நேசிப்பவன். எனக்கு வாரத்தில் ஒதுக்கப்படும் நான்கு மணிநேரத்தில் எனக்கு விருப்பானதை செய்யலாம் அல்லவா? எனக்கு படிப்பதுதான் விருப்பமானது. அதை நாள் முழுவதும் செய்யச் சொன்னாலும் அலுப்பில்லாமல் என்னால் செய்ய முடியும்.இப்பொழுது புதிதாக உன்னையும்.!! அப்படி படித்த ஒரு நூலில் மிக அன்பான ஆனால், கோபம் வந்தால் அனைத்தையும் அழிக்கக் கூடிய ஒரு பெண் பாத்திரத்தின் பெயர் பத்ரா.இதை காளி என்ற கடவுளின் அவதாரம் எனவும் சொல்லலாம்.இதனால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் எனப் படித்தேன் ,பெண்கள் அனைவரும் அப்படித்தான். அவளை தேவதையாய் உணரச்செய்தால் அவளால் அத்தகைய குணங்களோடு இருக்க முடியும். அவளைக் காளியாய் கோபப்படுத்தினால் அப்படிதான் இருப்பாள்.எல்லாமே நம்மிடம்தான். எதைக் கொடுக்கிறோமோ அதைப் பெறலாம்.” என்றான் ஆதி.

“என்னை எவ்வாறு நடத்துவாய் ஆதி? உன்னுள் பாதியாய் வாழ சம்மதித்துவிட்டேன்.என்னிடம் கோபம் கொள்வாயா? நீ திட்டினாள் நானும் திட்டுவேன்.நீ கோபித்தால் நானும் கோபிப்பேன்.ஆனால், நான் கோபிக்கும் போது மட்டும் நீ சற்று நிதானமாக நடந்து கொள். தயவுசெய்து என்னிடம் தவறான வார்த்தைகளை வீசிவிடாதே.உன்னைப் பிரிந்தால் உன்னை விட அதிகம் வருத்தப்படப்போவது நான்தான். கோபம் குறைந்ததும் உன்னைத்தேடித்தான் வருவேன்.புரிந்ததா? அது என் இயல்பு” – என்ற மேகாவை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் ஆதி.

“சரி, நமக்கு வீடு அலர்ட் ஆகிவிட்டால் நமது “AI” க்கும் அதே பெயரை வைத்துக்கொள்ளலாம். எனக்கும் பிடித்திருக்கிறது” என்றாள் மேகா.

அப்பொழுது ‘டீ’ இயந்திரக் கைகளால் பரிமாறப்பட, இருவரும் பருகிமுடிக்கவும் ஆபிசரிடம் இருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

“சாப்பாடு பற்றிதானே பேசிக்கொண்டிருந்தோம். இதுவரை நான் உங்களுக்கு விளக்கியதில் எதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்” என்றார் ஆபிசர்.

“ஒன்றுமில்லை. தொடரலாம்” என்றார்கள் இருவரும்.

“அடுத்து நீங்கள் திருமணம் முடித்ததும், குழந்தை பெற்றுக்கொள்வது உங்கள் விருப்பம். இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், குழந்தை பிறந்தவுடன், அதற்கு திருமணமாகும் வரை உங்களோடு ஒரு குடும்ப அமைப்பாகத்தான் இருக்க வேண்டும்.இடையில் நீங்கள் விவாகரத்து வாங்க விரும்பினால், அதற்கான காரணங்கள் முறையாக இருக்க வேண்டும்.ஏனெனில், உங்களுக்கு திருமண வயது வந்தவுடனேயே உங்களது உடல் தகுதி, குணம், உங்களுக்கு பிடித்த வடிவம் ஆகியன ‘ AI ‘ ல் பதிவாகி இருப்பதால், அதற்குத் தகுதியான பெண்களின் பயோடேட்டாதான் உங்களது பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.அதிலிருந்துதான் நீங்கள் உங்களது பெண்ணைத் தேர்ந்தெடுத்து, பழகி முடிவு செய்கிறீர்கள்.அதனால் விவகாரத்துக்கு எந்த அவசியமும் ஏற்படாது.ஒருவேளை உயிரிழப்புகள் ஏற்படின் மறுமணம் பற்றிய ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அப்படியே இதையெல்லாம் மீறி உங்களுக்கு விவாகரத்து செய்யத்தோன்றினால், இருவரும் வாரத்தில் நான்கு நாட்கள் குழந்தையோடுதான் இருக்க வேண்டும்.குழந்தைக்கு ஆறு வயதுக்கு அப்பறம் கட்டாயமாக கல்வி கற்கும் இடத்தில் உள்ள விடுதியில் குழந்தைகள் மூன்று நாட்கள் தங்க வேண்டி வரும். அப்பொழுது வேண்டுமானால் நீங்கள் உங்கள் மறு இணைகளை சந்தித்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை இந்த விசயம் தெரியக்கூடாது.அவர்களுடைய மனநிலை பாதிக்கப்படுவதை “AI” அறவே விரும்புவதில்லை.இதை மீறினால் கடுமையான தண்டனை உண்டு.”

“இல்லை.இல்லை, நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம்” என்றாள் மேகா,

“எல்லாரும் ஆரம்பத்தில் அப்படித்தான் சொல்வார்கள். போகப் போகத்தான் நிஜங்கள் வேறு மாதிரி இருக்கும்” என்றார் ஆபிசர்.

“அப்புறம் குழந்தைகளின் வளரும் திறன், அறிவுத் திறன், பேச்சுத்திறன், கற்கும் திறன். ஆளுமைத்திறன்.அவர்களது பிறப்பிலிருந்தே கண்காணிக்கப்படும்.அதற்கேற்ற மாதிரியான படிப்பை “AI” அவர்களுக்கு பரிந்துரைக்கும்.இங்கு ஆசிரியப்பணி, விவசாயம், மருத்துவம் அனைத்திற்குமே ஒரே சம்பளம்தான். அதில் சிறிதளவும் வித்யாசம் இல்லை.அவர்களுடைய உடல் தகுதி, மூளையின் தகுதியை வைத்து மட்டுமே இது பாகுபடுத்தப்படும்.ஆண்கள், பெண்கள் அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப வேலை செய்தே ஆகவேண்டும்.சாலை போடும் வேலைகள், விவசாய வேலைகள்.துப்புரவு அனைத்திற்குமே இயந்திரங்கள் மட்டும். திருமணம் ஆன நொடியிலிருந்து நீங்கள் தனிக்குடும்பமாக அறிவிக்கப்பட்டுவிடுவீர்கள். என்ன, உங்கள் இருவருக்கும் புரிந்ததா?” என்று வினவினார் ஆபிசர்.

“ரொம்ப நன்றி சார். எல்லாம் எங்களுக்குத் தெரிந்ததுதான். இருந்தாலும் நீங்கள் தெளிவாக விளக்கியதற்கு நன்றி .இந்த அரசாங்கத்தில் யார் முதலமைச்சர் என்பது மட்டும்தான் எங்களுக்குத் தெரியும்.அது இந்த நாட்டில் உள்ள ஒட்டு மொத்த “A I”களின் முடிவு.யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது ஆளுமைத்திறன் மற்றும் நேர்மை மூலமே முடிவெடுக்கப்படும்.நாங்கள் அவர் பேரை மட்டும்தான் அறிவோம்.மற்றபடி அனைத்து மக்களையும் ஒழுங்கோடும், கட்டுப்பாடோடும் வைத்திருப்பது “AI” க்கள்தான். அவற்றை எங்கள் வீட்டில் பொருத்தினால் மட்டுமே என் குடும்பம், நான் குடும்பத் தலைவன். இவள் தலைவி என்கிற அங்கீகாரத்துக்குள் நாங்கள் வருவோம். நாங்கள் இரு குழந்தைகளை பெற்றுக் கொள்வோம். அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்குவோம்.அளை என்றால் குகை என்ற பழங்கால வீடுஅமைப்பின் பெயர். அந்தப் பெயரைத்தான் எங்கள் வீட்டுக்கு சூட்டப்போகிறோம்” என்றான் ஆதி.

“ஆமாம். இதை ஆமோதிக்கிறேன்” என்றாள் மேகா.

அதே மாதிரியான வைகாசி மாதம், பௌர்ணமி நிலவொளியில் ஆதிக்கு முதுகைக் காட்டியவாறு படுத்திருந்தாள் மேகா,

“திரும்பிப்படு மேகா. என் நெஞ்சில் சாய்ந்து கொள்” என்ற ஆதியிடம், “முடியல ஆதி. பாரு உன் குழந்தை வயித்துல பெருசாகிட்டு, திரும்பிப் படுத்தா வயித்துல இடிக்குது” என்ற மேகாவின் வயிறு பக்கவாட்டு வெளிச்சத்தில் பெரிதாகத் தெரிந்தது.

அப்போது, “இன்றிரவு பன்னிரண்டு மணி இருபது நொடிக்கு மேகாவிற்கு பிரசவ வலி ஏற்படும். தயாராகுங்கள்” என்று ஒலி எழுப்பியது ‘நீல் பத்ரா’ என்ற Artificial intelligence. 

******

vijideviram1979@gmail.com

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close