கட்டுரைகள்
Trending

கவிஞர் வெய்யிலுக்கு…

அகிலா ஸ்ரீதர்

“அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பிற்கு ஆத்மாநாம் விருது பெற்ற கவிஞர் வெய்யிலுக்கு வாழ்த்துகள்.!

கவிஞரின் “அக்காளின் எலும்புகள்” தொகுப்பிலிருந்து சில கவிதைகளை வாசகசாலையின் “மனதில் நின்ற கவிதைகள்” நிகழ்வில் தேவசீமா வாசித்த போதே.. மனதிற்குள் அதிர்ச்சியுடன் ஆழமாக இறங்கின.. கவிஞர் வெய்யிலின் முந்தைய தொகுப்புகள் படிமங்கள் நிறைந்து கடினமாய் இருந்ததால் சற்றே நிறுத்தி வைத்திருந்த என்னை “அக்காளின் எலும்புகள்” எளிதான வார்த்தைகளுடன், அழுத்தமான பின்னணியுடன் ஆட்கொண்டன.. தேவசீமாவும் அதையே எனக்குப் பரிசளிக்க.. கவிஞரின் அக்காள்கள் அனைவரும் என் வீட்டிற்குள் நிறைந்தனர்.

இங்குள்ள நகர வாழ்க்கையில் பெண்கள் ஓரளவு சுதந்திரத்துடன் இருப்பதாகத் தோன்றினாலும்., இன்றளவும் சாதியக் கொடுமைகளும், காதலை ஒப்புக் கொள்ளாத ஆணவப் படுகொலைகளும் நிறைந்த பாரதிராஜாவின் படங்களில் வருவது போல் சாதியை அரிவாளால் தூக்கிப் பிடித்து காட்டப்படுவதைப் போன்ற கிராமங்களில் பெண்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக, அக்குடும்ப ஆண்களின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் அடிமை வாழ்வாக மட்டுமே உள்ளது.


இந்த தொகுப்பை “இணையிழந்த அக்காள்களுக்கு” எனப் படையலிட்டிருந்த அவரின் வார்த்தைகளே என்னை மிகவும் ஈர்த்தது. நகரங்களில் விவாகரத்தும், மறுமணமும் எளிது போல் காட்டப்பட்டிருந்தாலும், சமூகக் கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமங்களில் கணவரின்றி வாழும் அக்காள்களின் மன உணர்வுகளை, தனிமையை, மறுமணத்திற்கு வழியில்லாமல் மருகுபவர்களை, தணிக்க வழியில்லாத அவர்களின் காமத்தை, சாதிக் கொடுமைகளின் உச்சத்தில் அவர்களின் மனம் கவர்ந்தவர்களைக் கொன்று இணையில்லாமல் தனியே அலைய விட்ட அவலத்தை, சமயங்களில் குடும்ப கௌரவத்தை நிலை நிறுத்த அக்காள்களையே பலி வாங்கிய குடும்பங்களை.. என சமூகத்தில் நிலவும் பெரும்பான்மையோரின் மனநிலையைத் தோலுரித்துக் காட்டி நம்மை விதிர்க்க வைக்கும் அத்தனை கவிதைகளையும் படித்தாலும், எதையும் மாற்ற முடியாத இயலாமையில் நம்மைப் பரிதவிக்கச் செய்கிறது.

வரிசை எண்களுக்குப் பதிலாக உயிரெழுத்துகளும், மெய்யெழுத்துகளுமாய் அக்காவின் இருப்பை, இறப்பை நிறைத்திருக்கும் தொகுப்பில் ஆரம்ப கவிதை இது:

“அக்கா எப்போதும்
மின்மினிகளாயிரம் சூழவே வருவாள்..
கொடுப்பினையற்ற நாம்
அவளை எப்போதும் பகலிலேயே பார்த்திருக்கிறோம்..”

நா.முத்துக்குமாரின் “அணிலாடும் முன்றில்” புத்தகத்தில் அம்மா, அப்பாவிற்கு அடுத்ததாக அக்காவைப் பற்றித் தான் எழுதியிருப்பார்.. காரணம்.. ஒரு வீட்டில் இன்னொரு அம்மாவாக இருப்பது அக்காள்களே..!

அவளின் அத்தனை தருணங்களிலும் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டே அலையும் தம்பிகளுக்குத் தான் தெரியும்.. அக்காள்களின் அந்தரங்கம் முழுமையும்.. அப்படியான அக்காவின் தம்பியாகவே கவிஞரும் இருந்திருக்க வேண்டும்.. அக்காளின் இருப்பையும், இன்மையையும் ஒருசேர உணர்த்தும் மற்றொரு கவிதை:

“அக்காவை
காக்கா தூக்கிச் சென்றுவிட்டது
அவ்வளவு தான்..”

கணவரின் இறப்பிற்குப் பின் முயலோடு நூற்றாண்டுக் கதைகள் பேச வேண்டிய கட்டாயத்திலிருக்கும் அக்கா, மண முறிவுக்குப் பின் குறிஞ்சிப் பூ சூட விரும்பி அறுபட்ட அக்காவின் தலை, கோழியின் கழுத்துப் போல் திருகி விடப்பட்ட அக்காவின் கழுத்து, சிறு செருமலில் பனம்பழங்களை விழ வைக்கும் வல்லமை பெற்றாலும், திடீரென காணாமல் போன அக்கா, புதைத்த பின்னும் சூலியாய் 6 காவு வாங்குகிற அக்கா, காணாமல் போகின்ற அக்காவின் எலும்பு, பிரேதமாய் போன அக்காவின் உடம்பில் குத்தியிருந்த பச்சை.. என அனைத்து அக்காள்களின் பின்னிருக்கும் கவிதைகள் உணர்த்தும் சமூக அவலங்கள் ஏராளம்.

அக்காளைப் புரிந்து கொள்ள, ஒரு தம்பியாகப் பிறந்தால் மட்டுமே சாத்தியம்.. அப்படியாக அக்காள்களின் நுண்ணுணர்வுகளை, மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பை செவ்வனே செய்து, ஆத்மாநாம் விருது பெற்றிருக்கும் கவிஞர்க்கு.. மனம் நிறைந்த வாழ்த்துகள்..!


நூல் : அக்காளின் எலும்புகள்(கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்: வெய்யில்
பதிப்பகம்: கொம்பு
விலை: ரூ 75 /-

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close