கட்டுரைகள்

யார் ஹீரோ? யார் வில்லன்? – ‘அய்யப்பனும் கோசியும்’ மலையாளத் திரைப்பட விமர்சனம்

புகழின் செல்வன்

 

மீண்டும் மீண்டும் தங்களை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள் மலையாளத்து திரையசுரர்கள். ஒரு காலத்தில்… ஒரு காலத்திலென்ன ஒரு காலத்தில்? இப்பொழுதும் வயதேறியவர்களுக்கு மலையாளப் படமென்றால் சட்டென நினைவடுக்கின் தாழ்வாரத்திலிருந்து மேல்மட்ட எண்ண அலைக்குள் வெளிப்படும் எண்ணம் வேறு மாதிரியானதாகத்தான் இருக்கும். அதிலொன்றும் தவறில்லை. கலையின் ஒரு வடிவம்தான் காமம். காமமில்லையேல் நீங்களோ நானோ அவ்வளவு ஏன் பொய்களாலும் புரட்டுகளாலும் நிரம்பி வழிகிற  இதிகாசங்களும் கூட இருந்திருக்க முடியாது. காமம்தான் இவ்வுலகில் பிரதானம். காமத்தில் காதல் கொண்டு அக்காலத்தில் பல இருட்டறைப் படங்களை கொடுத்து மகிழ்வித்திருக்கிறார்கள். பின் காலத்திற்கேற்ப பரிணாம வளர்ச்சியடைந்து தற்பொழுது கலை மீது காதல் கொண்டு வரிசையாக அற்புதங்களைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 காதலுக்கு நேர்மையாகயிருந்தால் அதற்கேற்ற பலனை ஓர் அழகிய அட்சயபாத்திரமாக மாறி காதல் இவ்வுலகிற்கு கொடுத்துக் கொண்டேயிருக்கும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் மலையாளப் படைப்பாளிகள் சினிமாவின் மேல் கொண்டுள்ள காதல்தான். ஒவ்வொரு இந்திய பிராந்தியத்திலும்  கதை சொல்லிகளை தேடிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலே மலையாளத்தியல்  மட்டும் தேர்ந்த கதை சொல்லிகள் ஊற்றெடுத்து வந்து கொண்டேயிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு கதையா என்று நாம் புறந்தள்ளக் கூடிய வகையிலிருக்கும் கதையைக்கூட நேர்த்தியாகப் படைத்து நம்மை கொண்டாடச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

  பல சமயம் யோசித்திருக்கிறேன், எல்லாமிருந்து அதை வைத்து சாதிப்பதில் என்ன சுவாரஸ்யம் வந்து விட போகிறதென்று. திடமான கதையை வைத்துக் கொண்டு படமெடுப்பதைவிட ஒன்றுமே இல்லாததை வைத்து தரமான படத்தைக் கொடுப்பதில்தான் சவாலும் சுவாரஸ்யமுமிருக்கும். கதையிருக்கக் கூடாது என்று கூறிவிட்டதால் உடனே வெங்கட்பிரபு படம் போல் அல்லது சுந்தர்.சி படம் போலென்று  எண்ண வேண்டாம்.

தினந்தோறும் நாம் கவனிக்க மறந்து அல்லது உதாசீனப்படுத்தப்படும் ஏதோ ஒரு நிகழ்வை மட்டும் வைத்து கதையைப் படைக்க வேண்டும். வெறும் கதை மட்டுமிருந்தால் போதாது, அதை ரசிக்க வைக்க ஈர்க்கும்படியான திரைக்கதையை திரைமொழியை சற்றும் தொய்வில்லாமல் தொடுத்து ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதைத்தான் சமீப வருடங்களாக மலையாளத்து சினிமாக்காரர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். 

தற்போது மனதிற்கு நெருக்கமான சினிமாக்களைப் பட்டியலிட்டால் அதில் பெரும்பாலும் வேற்று மொழிப் படங்கள்தான் இடம்பிடித்திருக்கின்றன அதிலும் குறிப்பாக மலையாளத்துப் படங்கள்.

 ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப சமாச்சாரங்களை ஒதுக்கி விட்டு வெறும் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் அமெரிக்க டாலர் போல மலையாள சினிமாவும் இந்திய ரூபாய் போல தமிழ் சினிமாவுமிருக்கிறது. அதற்காக மலையாள சினிமாக்கள் தொழில்நுட்பத்தில் பலவீனமென்று சொல்லவில்லை. முன்பை விட அதில் மிக அற்புதமாக மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

   மற்ற மொழிப் படங்களை பார்த்து விட்டு யாரிடமாவது கூற வேண்டுமென்றால் குறைந்தது 3 அல்லது 5 நிமிடம் அப்படத்தின் கதையைக் கூற வழி செய்திருப்பார்கள் அப்படக்குழுவினர். ஆனால், மலையாள சினிமாவை பொருத்தமட்டில் கதை திருக்குறளை விடவும் குறைவாகத் தான் இருக்கும். அதை வைத்துத்தான் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் மல்லூஸ்.

   சரி இப்பொழுது படத்திற்கு வருவோம்.

 டைட்டிலை பார்த்தமட்டில் மகேஷ்-சரண்யா மற்றும் பலர் போன்று எடை போட வேண்டாம் மக்களே, தலைப்பு மட்டும் தான் சற்று திராபை. படத்தைப் பற்றி மேலுள்ள பல பத்திகளில் இடப்பட்ட பீடிகைகளை வைத்தே இந்நேரம் முடிவு செய்திருப்பீர்கள்.

    ஸ்பாய்லர்ஸென்று இதில் பெரிதாக எதுவும் இடம் பிடிக்க வாய்ப்பில்லை. முன்பு கூறியது போல்  இந்தப் படத்தின் கதை என்று பார்த்தால் பழிவாங்கும் கதைதான். யார் யாரைப் பழி வாங்குகிறார்கள்? ஹீரோ யார் வில்லன் யார்? சிலருக்கு இருவரும் ஹீரோக்களாக இருக்கலாம். சிலருக்கு இருவரும் வில்லன்களாக இருக்கலாம். அல்லது வேறு சில மாற்றுக் கருத்துகளுமிருக்கலாம். அதுவே படத்தின் வெற்றிக்கு பலத்தைத் தந்திருக்கிறது என்றும் சொல்லலாம்.

    மாஸ் ஹீரோக்களுள் ஒருவரான பிரித்விராஜ் இக்கதையை தேர்வு செய்ததில் மிக்க மகிழ்ச்சி. அங்கிருக்கும் கதைசொல்லிகளுக்கு மாஸ் ஹீரோக்களை பார்த்தால் பயமில்லை போல்தான் தெரிகிறது. தைரியமாகத் தங்கள் கதைகளை சொல்லி விடுவதோடு நில்லாமல், அவர்களை நடிக்கவும் வைத்துவிடுகின்றனர். அவ்வகையில் உண்மையில் அவர்கள் தான் மாஸ் ஹீரோக்கள்.

   நம்மூரில் நம்பப்படும் ஹீரோக்களான அஜீத், விஜய் இது போன்ற களத்தில் நடித்தால் மாஸ் ஹீரோவாக வலம் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் வாய்ப்பில்லை. அவர்களைப்  பிடித்த வரம் அப்படி செய்ய அவர்களை என்றைக்கும் அனுமதிக்கப் போவதில்லை. 

பிரித்வி ராஜின் நடிப்பை பல படங்களுக்கு பின் இதில் உணர்ந்திடலாம். கடைசியாக காவியத்தலைவன் என்று (எழுதும் இந்நொடி)நினைவு வருகிறது. பிஜு  மேனன் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். இப்படியும் தன் தோரணையைக் காட்டலாம் என்று சாட்சியாக விளங்கியுள்ளார். இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். விக்ரம் வேதாவை விடவும் அற்புதமான நடிப்பு இந்த கூட்டணியுடையது.

   கண்ணம்மாவாக நடித்திருக்கும் கௌரி கதாபாத்திரத்திற்கேற்ற தோற்றத்தை நம் கண்முன் நிறுவுகிறார்.

    என்ன தான் நல்ல படைப்பாளிகளாக இருந்தாலும் தங்கள் சைக்கோத் தனத்தை தங்கள் படங்களில் மலையாளிகள் காட்ட தவறியதேயில்லை. தமிழர்களை ஏதோ ஒரு இடத்தில் சிறிய எள்ளலுக்கு உட்படுத்தவில்லையென்றால் அவர்களது மனம் சாந்தமாகாது போல. இதிலும் மலைவாழ் தமிழரான கண்ணம்மாவை மாவோயிஸ்ட் தீவிரவாதி என்று காட்டியுள்ளனர். அக்கதாபாத்திரத்தை தைரியமிக்கவராக காட்டியதில் மகிழ்ச்சி. அதே நேரத்தில் எந்த தீங்கும் இடம்பெறவில்லை என்பதில் பெரும் ஆறுதல்.

   பிரித்விராஜிற்கு மனைவி என்பதால் மட்டும் இதில் நடிக்க ஒத்துக் கொண்டது போல் தெரிகிறது ரேஸ்மாவின் நடிப்பு. அங்கமாலி டைரீஸில் ஈர்த்த ரேஷ்மா இதில் ஆங்காங்கே வந்தும், அழுதும், பயந்தும் மட்டுமே போகிறார்.

  ஏனோ தெரியவில்லை குறியனாக நடித்திருக்கும் கதாபாத்திரத்தைப் பார்க்கும் போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது. இறுதியில் அதற்கேற்றார் போல்தான் அவரது நிலையுமிருந்தது படத்தில்.

    மற்ற பாத்திரங்களனைவரும் தங்களது நடிப்பை சிறப்பாகக் கொடுத்து படத்திற்கு உறுதுணையாக விளங்கியுள்ளனர்.

   இப்படத்தில்  குறிப்பாக இசையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். மலையகப் பாடலொன்று படத்தில் மட்டுமல்ல நிச்சயம் அனைவரது மனதிலும் இடம்பெறுமளவில் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். இரவில் கேட்கும் பாடலுக்கேயுரிய வசீகரத்தைக் கொண்டிருக்கிறது மலைவாழ் மக்கள் சார்பில் வரும் அப்பாடல். நிச்சயம் கேட்டுய்யவும்.

   கேமரா தம் பங்கைக் கச்சிதமாக செய்திருக்கிறது. அதற்கு ஒரு வகையில் லொக்கேஷன் தேர்வுகளும் காரணமென்று சொல்லலாம்.

    சண்டைக் காட்சிகளை படத்தைப் போலவே மிக யதார்த்தமாகவும், இயல்பாகவும் வடிவமைத்திருக்கிறார்கள். அடித்தால் பத்து தெரு தள்ளிப் போய் விழுந்து வாராமல் அடி வாங்கிய இடத்திலே தான் விழுகிறார்கள் அடிவாங்கியவர்கள். இரு நாயகர்களும் சண்டைக்காக எவ்வளவு மெனெக்கெட்டிருக்கிறார்கள் என்பதை நன்றாக உணர முடிந்தது. இப்படிப்பட்ட ஸ்டன்ட் டைரக்டர்களால்தான் ராம்-லக்ஷ்மன் களிடமிருந்து நம்மை காப்பாற்றக் முடியும்.

    திரைக்கதையைப் பொருத்தவரையில் முதல் பாதியிலிருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லையென்றுதான் கூற வேண்டும். இரண்டாம் பாதியின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். குறையிருந்த போதிலும் சுவாரஸ்யம் குன்றாமல் ரசிகர்களின் 120 ருபாய்க்கு பங்கமில்லாமல் காப்பாற்றியிருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

   ஆக மொத்தத்தில் தரமான எண்டர்டெய்ன்மென்ட் படம் அய்யப்பனும் கோசியும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button