
காதலெனும் ஔி
கவிதை:1
மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகில் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே
குறுந்தொகை: 14
பாடியவர்: பேரெயின் முறுவலார்
திணை: குறிஞ்சி
தலைவன் கூற்று.
நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகையில் மடலேறுதல் குறித்த பாடல்கள் உள்ளன.
மடல் ஏறுதல் பெருந்திணைக்கு உரியது. பெண் மடலேறுதல் இல்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். ஒருதலைக் காதல் பொருந்தாக் காம வகையைச் சேர்ந்தது.
தலைவி தன் காதலை ஏற்காத நிலையிலோ அல்லது தலைவியின் இல்லத்தார் தன் காதலை ஏற்காத போதோ தலைவன் மடலேறுகிறான். என்றாலும், உடன்போக்கு என்ற வழக்கம் உள்ளதால் குடும்பத்தாரின் ஏற்புக்காக தலைவன் மடலேறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று நினைக்கிறேன்.
தலைவன் பனைமரத்தின் கருக்கு ஓலையால் செய்யப்பட்ட குதிரையில் ஊர் மன்றிற்கு வருகிறான். சிறுவர்கள் அந்தக் குதிரையை இழுத்து வருவது மடலேறுதலின் வழக்கம். தலைவன் தான் விரும்பும் தலைவி யார் என்று ஊருக்கு அறிவிக்கிறான். அவளை பழித்துக் கூறுகிறான். தலைவன் தான் விரும்பும் பெண்ணை எவ்வகையிலாவது அடைவதற்காகவே மடலேறுகிறான். இது இழிவிற்கு உரியது என்ற குறிப்பு சங்கப் பாடல்களிலேயே உள்ளது.
கவிதை: 2
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பரிவுதலை வரினே
குறுந்தொகை: 32
தலைவன் கூற்று.
தலைவனின் மனநிலையை அள்ளூர் நன்முல்லையார் இந்தப்பாடலில் கூறுகிறார். கையறு மாலையும் என்ற சொல் தலைவனின் தவிப்பை, எந்தக் காரணத்தாலோ கைகூடாத காதலின் துயரத்தை உணரச் செய்கிறது. காலையும் பகலும் கையறு மாலையும் நள்ளிரவும் விடியலும் மட்டுமல்ல எப்பொழுதும் காதலுக்கான பொழுதே என்கிறான் தலைவன். இந்த வரிகளை வாசிக்கும் போது எவ்வளவு ஆழமான மன அழுத்தம் [டிப்ரஷன்] என்று தோன்றியது. இது போன்ற மனநிலையில் தன்னை மாய்த்து கொள்ளும் எண்ணம் தோன்றுவது இயல்பு தான் இல்லையா? தலைவி அல்லது குடும்பத்தார் தலைவன் மடலேறியும் காதலை ஏற்கவில்லை என்றால் அடுத்ததாக வரைபாய்தலுக்குச் செல்கிறான். உயரமான இடத்திலிருந்து குதித்து தற்காலை செய்து கொள்ளுதல். வரை என்றால் மலை. மலையிலிருந்து கீழே விழுதல் அல்லது வரையாடு ஏறக்கூடிய மலையுச்சிக்குச் சென்று கீழே பாய்ந்து உயிரை விடுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.
இதில் உள்ள சுய வன்முறை நம்மை தொந்தரவிற்கு உள்ளாக்குவது. பனைமரக் கருக்கில் செய்த குதிரை மீது அமர்ந்து வருவதே உடலை புண்ணாக்கும் செயல்.
இந்த மனநிலை இன்னும் மாறவில்லை. இதை நான் எழுதும் இந்த நிமிஷத்தில் கூட எங்கோ ஒருவன் இரத்தத்தில் மடல் எழுதிக் கொண்டிருக்கலாம். காதல் தற்கொலைகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
எங்கள் பக்கத்துவீட்டு செல்வகுமாருக்கு உடற்பயிற்சிகள் மீது அபார ப்ரியம். நான் காலைச் சூரியனை காண்பதற்காகவோ, படிப்பதற்காகவோ, தேநீருடன் மாடிக்குச் செல்லும் போது அவர்களுடைய சிறிய மச்சில் அவன் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பான்.
“அப்படியே கொஞ்ச நேரம் நடக்கனும்க்கா..இவ்வளவு சீக்கரம் எழுந்திருச்சாலும் ஒடம்ப மெயின்டெயின் பண்ண மாட்டிங்கிற,” என்று கைமுஷ்ட்டியை மடக்கிக் காண்பிப்பான். அவன் என்னை சரியான சோம்பேறி என்று நினைத்திருக்கக்கூடும். அவன் பேச்சில் அடிக்கடி அந்தக் கேலி வெளிப்படும். அவன் நடக்கும் குழந்தையாக இருக்கும்போது நான் ஏழாம் வகுப்பு படித்தேன். அப்போதே எங்களால் அவனைத் தூக்கி இடுப்பில் வைக்கமுடியாது. நல்ல எடையுள்ளவன். வளர வளர அந்த எடையை உடற்பயிற்சியால் வலுவாக மாற்றியிருந்தான்.
உடல் வலுவிற்குரிய முரட்டுத்தனம், அசட்டு தைரியம் அவனிடம் உண்டு. ஒரு முறை அவன் அம்மா திட்டியதற்காக மாடியில் இருந்து குதித்துவிட்டான். கீழே மணல் கொட்டப் பட்டிருந்ததால் உயிர்தப்பினான்.
பெரும்பாலானவர்களைப் போல அவனும் கல்லூரி வயதில் ஒரு பெண்ணைக் காதலித்தான். அவள் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தாள். ஊரில் வலுவான சொந்தங்களும், பணமும் படைத்த குடும்பம் அது. அந்தப் பெண்ணைப் பற்றி நண்பர்களிடம் இவன் பேசியது அவளின் அண்ணனின் காதுக்கு எட்டியதும் அவன், இவனை கடைவீதியில் வைத்து அடித்தான். அந்தப் பெண் வீட்டில் என்ன சொன்னாள், இவனிடம் அவளுடைய அண்ணன் என்ன சொன்னான் என்பதெல்லாம் புரளிகள். உண்மையில் நடந்தது என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.
இவன் யாருக்கும் தெரியாமல் இரவில் அரளிவிதையைத் தின்றுவிட்டு படுத்துவிட்டான். இப்படி எழுதும் போது இது அன்றாடமான விஷயமாகி விடுகிறது. ஆனால், உயிரை மாய்த்துக்கொள்வது அத்தனை எளிய விஷயமா ? அவன் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவனுடைய அம்மாவும், அத்தையும் அவன் உடலைத் தொட்டு தொட்டுப் பதறியதை மறக்கவே முடிவதில்லை. இளம் மகனின் உடலும், பேச்சும், சிரிப்பும் போல ஒரு தாய்க்கு அமுதம் வேறெதுவும் இல்லை. அண்டை வீடான எனக்கே கூட அவ்வப்போது சில காலைகளில் மாடியில் அவன் உடற்பயிற்சி செய்வது நினைவிற்கு வந்தால் அந்த நாளே சோர்வாகும். வளமான உடல் இயற்கையின் அரும் கொடை. அது தாய்க்கு உரியது. அதை அழிக்க உரியவருக்கே கூட உரிமையில்லை என்று சொல்வேன். ஆனால், இதை எல்லாம் பொருட்டில்லாமல் ஆக்கக்கூடிய ஒரு உயிரியல் மர்மம் காதலில் உள்ளது.
அவனுடைய மனநிலை சங்கத்தலைவனின் மடல் ஏறும் மனநிலையை ஒத்தது. அவள் அவனைக் காதலித்தாளா என்று தெரியவில்லை. ஒரு வேளை காதலிக்கலாம் என்ற எண்ணத்திலும் இருந்திருக்கலாம். ஒரு பெண் சாலையில் தன்னைக் கடந்து செல்வதைக்கூட காதல் என்றும், திரும்பிப்பார்ப்பதை [சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கழுத்து வலி வருவதற்கு இதுவும் ஒரு காரணம். ஊர்ப்பக்கங்களில் பேருந்தில் சென்று படிக்கும் பிள்ளைகள் ஒருபக்கமாகவே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது] தன்னை பார்ப்பது என்று புரிந்து கொள்வது, இயல்பாக சிரிப்பதையெல்லாம் இந்தப் பயல்கள் காதல் என்று பிழையாகப் புரிந்து கொண்டு, என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தற்கொலை கொள்கிறார்கள் அல்லது அந்தப் பெண்ணை பழி சொல்கிறார்கள். அவளின் படிப்பு பாதியில் நின்று போவது குறித்தோ,அவசர திருமணம் நடப்பது குறித்தோ காதலுக்கு எதற்கு அக்கறை?
ஆனால், சங்ககால பழக்க வழக்கம் நம்மைத் தொடர்வதை அன்றைய இறப்பு சடங்குகளில் கண்டேன். இறுதியாக செல்வகுமாருக்கு எருக்கம்பூ மாலை அணிவிக்கப்பட்டது. முன்னரே பையன்கள் வயல்காடுகளில் சேகரித்த எருக்கம் மலர்களை திண்ணையில் வைத்து சிறு குவியலாக குவித்தார்கள். பக்கத்துவீட்டு அத்தை ஊசிநூல் கொண்டு அதை மாலையாகத் தொடுத்திருந்தாள்.
ஆனால், இதையெல்லாம் கடந்து அன்றிலிருந்து இன்றுவரை ஒருத்தி நேசத்திற்காக உயிர்விடுதல் நடந்து கொண்டே இருக்கிறது. விரும்பாத பெண்ணை கட்டாயப்படுத்துவதற்கும், அதற்கு மேல் சென்று அவள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், அவளைத் தெருவில் தூற்றுவதும், சமூக அலருக்காக மிரட்டி பணிய வைப்பதற்கும் மடலேறுதலை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், மேற்குறிப்பிட்ட காலையும் பகலும் கையறுமாலையும் பாடலில் அள்ளூர் நன்முல்லையார் சொல்வது தலைவனின் உண்மையான காதல் துயரம்.
உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் எந்தவித உயர்வு தாழ்வும் இன்றி இயற்கை அளித்திருக்கும் அரிய உணர்வு காதல். அதே நேரத்தில் எளிய, மிக மிக இயல்பான உணர்வும் அதுதான். வைரங்கள் மலைகளில் புதைந்து கிடப்பதாலோ, மண்ணில் மனிதர் கைகளில் இருப்பதாலோ அதற்கு ஏற்றமும் இல்லை; இறக்கமும் இல்லை. வைரத்தின் உன்னதமும் மதிப்பும் அது கொண்ட ஔி தான். காதலும் கூட அப்படியானது தானே?
காதல் தீவிரமானால்,
பனைமட்டையை குதிரையாக்கி
அதில் ஏறி ஊருக்குள் செல்வார்கள்,
எருக்கம் பூவின் மொட்டுகளை
மலையாக்கி தலையில் சூடுவர்,
தெருவாசிகளின் கேலிகளுக்கு
கவலை கொள்ளமாட்டார்கள்,
நிறைவேறாத போது
இதற்கும் மேலும்
என்ன வேண்டுமானாலும் செய்வர்.
கவிதை: 2
காலை பகல்,
கைவிடப்பட்ட மாலை,
ஊர் தூங்கும் நள்ளிரவு,
விடியல்
என்று வேளை பார்த்து
வருவது காதல் இல்லை.
மடலேறி
தெருவிற்கு வந்து
அவளை பழித்தல்
எனக்கும் பழி.
அதே போன்று
அவளைப் பிரிந்து வாழ்தலும்
எனக்கு பழியே.
அகமும் புறமும் தொடரை இருபது கட்டுரைகளுடன் முடித்துக்கொள்கிறேன். காலம் அமையுமாயின் பின் ஒரு சந்தர்ப்பத்தில் அகமும் புறமும் இரண்டாவது பாகமாகத் தொடரலாம். இதுவரை இந்தத் தொடரை வாசித்தவர்களுக்கும், வாசித்து தங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் அன்பும் நன்றியும். இந்தத்தொடர் எனக்குப் பல புதிய வாசகர்களை பெற்று தந்தது குறித்து மகிழ்கிறேன். வாசகசாலை நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு.
(முற்றும்)