தொடர்கள்

அடையாளம் – உமா மோகன் 

 

வாழ்த்து சொல்ல இன்னும் ஒரு நாள்…!

கொண்டாட இன்னும் ஒருநாள்…!

வணிகம் பெருக்க இன்னும் ஒருநாள்..!

இது இல்லை…நிச்சயம் இல்லை….

மார்ச் எட்டு என்ற தேதிக்கு இந்த அடையாளம் கிடைத்ததற்குப் பின்னால் சர்வதேசப் பெண்களின் குருதியும் அதற்கு நிகரான வியர்வையும் படிந்த போராட்டத் தடமிருக்கிறது !

வணிகமயமான,சுயநலமான,பரபரப்பான வாழ்க்கையின் போக்கில் நாம் எத்தனையோ போராட்டங்களின் அர்த்தங்களை,அர்த்தமில்லாமல் தள்ளிக் கொண்டேயிருக்கிறோம்…

இந்தப் புறக்கணிப்புகள்,முன்னெடுக்க வேண்டிய செய்திகளை,விஷயங்களைப்

பொருளற்றதாக்கிவிட்டு பொருள்மயமான வாழ்க்கையை ஓடிமுடிக்கும் இயந்திரங்களாக நம்மை மாற்றிக் கொண்டிருக்கின்றன. பெண்ணுரிமைக்கான இந்த நாளையும் அப்படிக் கடந்து விடாதிருக்கக் கற்றுக் கொள்ளவும் ,கற்றுத் தரவும் வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம் .

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்

          மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே

வீட்டினில் எம்மிடங்காட்ட வந்தார் -அதை

          வெட்டி விட்டோமென்று கும்மியடி!

பாரதியின் இந்தப் பாடல் பிறந்ததும் ஒரு கற்பனைக் கொண்டாட்டம்தான்! அவ்வாறெனில் இதற்கு முந்தைய காலங்களை நினைத்துப் பாருங்கள் ..!

வீட்டுச் சிறைக்குள்ளிருந்து வெளிப்பட்டு தொழிலகங்கள் ,பணியிடங்கள் என்று புறப்பட்ட பெண்களுக்கு மேலும் கொடுமைகளே காத்திருந்தன.சம ஊதியமின்மை,வரைமுறையற்ற பணிநேரம் ,அடிமைகளாக நடத்தப் படுத்தல் என்றே வெளிஉலகம் அவளை மிரட்டியது.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை முதலில் கண்டன பாரிஸ் நகர வீதிகள்.

1789  ம் ஆண்டு ஜூன் 14 .ம்தேதி சுதந்திரம் ,சமத்துவம்,அரசனின் ஆலோசனைக் குழுக்களில் பிரதிநிதித் துவம் வேண்டிப் புறப்பட்ட பிரெஞ்சுப் புரட்சியில் உயர்ந்தது பெண்களின் போர்க்கொடி !

பூவையர் புயலானதையோ ,அவர்கள் வேகம் உணர்ந்த ஆண்களும் ஆதரிப்பதையோ உணராத அரசன் அடக்குமுறையைக் கையிலெடுக்க முனைந்தான்!

விளைவு….

கைது செய்வோம் என மிரட்டிய மெய்க்காப்பாளர்களை அரண்மனை வாயிலிலேயே தாக்கிக் கொன்றது போராளிக் கூட்டம்!

அதிர்ந்து,சமாதானம் பேசி,வாக்களித்துக் கலைக்க முற்பட்டதில் தோல்வியே கிட்டியது லூயி பிலிப்புக்கு!முடிதுறந்தான் மன்னன்…

வெகுண்டெழுந்த பெண்களின் வெஞ்சினம் வெற்றியைத் தரும் என்று உணர்ந்தனர் ஐரோப்பியப் பெண்கள்!

ஜெர்மனி,ஆஸ்திரியா,டென்மார்க் பிரதிநிதிகள் கிரீசில் தொடர் போராட்டங்களில் இறங்கினர்.

நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு இத்தாலியப் பெண்களும் முழங்கத் தொடங்கினர்.

 1848  மார்ச்சி ல் பிரான்சில் அமைந்த அரசு பெண்களுக்கு வாக்குரிமை தரவும்,பிரதிநிதித்துவம்  தரவும் ஒப்புதலளித்தது .

வீட்டு வேலைகளுக்குள் மூழ்கிக் கிடந்த பெண்களையே பதினெட்டாம் நூற்றாண்டு கண்டிருந்தது.கல்வி,சுதந்திரம்,வேலை …அவர்களறியாச் சொற்கள்!

ஆனால் 1857  ல் நடந்த போர் ஏராளமான ஆண்களின் உயிரைப் பறித்தது!பலரைப் படுகாயமுற்று நடமாட முடியாதவர்களாக்கியது !பெருகிவந்த சுரங்கங்கள் ,தொழிலகங்கள்,நிறுவனங்களில் பணியாற்ற ஆள் வேண்டுமே….

இந்த,காலத்தின் கட்டாயமே பெண்களின் கைப் பிடித்து வெளியுலகுக்கு அழைத்து வந்திருக்கிறது !

ஆனாலும்,பெண்களுக்கு அநீதி தொடர்ந்தது!

ஆணைவிட அதிகநேரம் வேலைபார்க்கும் கட்டாயம்;குறைவான கூலி பெறும் அவலம் (இன்னும் பல இடங்களில் தொடரும் வேதனை) என்ற ஏற்றத் தாழ்வினால் அல்லலுற்ற பெண் குமுறி எழுந்த சமயமும் வந்தது!

பதினாறு மணி நேர வேலையும்,பஞ்சம் போக்கா சொற்பக் கூலியும்,பாலியல் தொந்தரவுகளும்  சேர்ந்து வதைத்ததைத் தாள முடியாமல் 1908ஆம் ஆண்டு நியூயார்க் நகர வீதிகளில் நெசவாலைப் பெண்கள் திரண்டனர்.பெண்கள் அமைப்புகள் உருவாகிப் போராட்டத்தை முன்னெடுக்க ,அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர் கிளர்ச்சி பரவியது!அரசின் துணைகொண்டு அடக்கப்பட்ட கிளர்ச்சி ,1908 ல் பெரிதாக வெடித்தது.  

  1910 ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகனில் கூடியது உழைக்கும் பெண்கள்  மாநாடு .இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் வைத்த ஒற்றைத் தீர்மானம் ,சர்வதேச ரீதியாக மகளிர் தினம் கொண்டாடப் படவேண்டும் என்பதே!

அங்கே ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் மார்ச் 19!

ஏன் மார்ச் 19  ?

 1848 ல் ஐரோப்பாவில் புரட்சி அலை வீசியபோது ,ஜெர்மனியின் ஒருபகுதியாக இருந்த பிரஷ்யாவின் மன்னன் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பதாக வாக்குறுதி தந்த நாள் மார்ச் …அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படாவிட்டாலும் அப்படி ஒரு சொல் கிடைத்ததே பெரிய விஷயமாகக் கருதப் பட்டது போலும் ! 

 கிளாரா ஜெட்கின் தீர்மானத்தின்படி 1911   அதாவது கோபன்ஹெகன் மாநாட்டின் மறுவருடம் மார்ச்19 ம் தேதி ஆஸ்திரியா,டென்மார்க்,ஜெர்மனி,சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் முதல்முறையாக மகளிர் தினம் கொண்டாடப் பட்டது.

அதற்கு முன்பாகவே அமெரிக்காவில் மகளிர் தினம் கொண்டாடப் பட்டு வந்தது.அதாவது,நியூயார்க் போராட்டத்துக்குப்பின்1909 ம் ஆண்டு அமெரிக்காவின் சோஷலிசக் கட்சி பிப்ரவரி 28 ம்தேதியை தேசிய மகளிர் தினமாக அறிவித்தது.1913ம்.ஆண்டுவரை பிப்ரவரி  கடைசி ஞாயிறு

தேசிய மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.

இதனிடையே 1911 மாண்டின் முதலாவது மகளிர் தினம் தோற்றுவித்த எழுச்சியால் பெண் தொழிலாளர்களின் உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.மார்ச்25..அன்றுநியூயார்க்கில்  ஒரு துணி ஆலையில் வைக்கப்பட்ட தீயில் 140.உழைக்கும் பெண்கள் கருகி உயிர்நீத்த அவலம் அரங்கேறியது…….. 

  பாதுகாப்பு குறைவென்ற நாடகத்தைத் தொடர்ந்து அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டது.தொழிற்சங்கம் கலைக்கப் பட்டது.தொடர்ந்து சமஉரிமைக்காகப் போராடிய மகளிர் அமைப்புகள்1912 ல் அதாவது மறுஆண்டு மார்ச்8 ல் வேலைநிறுத்தம் செய்து மகளிர்தினத்தை அனுசரித்தன.

இவ்வாறு,வாக்குரிமை,சமவேலைக்கு சம ஊதியம்,எட்டுமணிநேர வேலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்த நீண்ட போராட்டங்கள் பலபகுதிகளிலும் பெண்கள் அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன.

1913 ல் ரஷ்யாவில் மார்ச்8 சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டது.ஜூலியன் காலண்டரின்(அப்போதைய  ரஷ்யாநாட்காட்டி)பிப்ரவரி கடைசி ஞாயிறு ,(இன்று உலகுபின்பற்றும்)கிரிகோரியன் நாட்காட்டிபடி மார்ச் 8!  — 

1917 ல் மகளிர் தினத்தன்று ஜார் மன்னனுக்கு எதிராக வாக்குரிமைக்காகவும்,உணவுக்காகவும் உழைக்கும் வர்க்கத்தினர் போராடத் தொடங்கியதே ரஷ்யபுரட்சியின்  ஆரம்பமானது.

பின்னர் எட்டு மாதங்களில் ரஷ்யபுரட்சியின் வெற்றிக்குப்பின் உருவான சோவியத் ரஷ்யாவில் பெண்கள் வாக்குரிமை பெற்றனர்.படிப்படியாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இவ்வுரிமைகள் கிடைக்கத் துவங்கின.

பிரெஞ்சுப்புரட்சியிலும் ,அமெரிக்க விடுதலைப் போரிலும்,கணிசமான பெண்கள் தங்கள் பங்களிப்பைத் தந்திருந்தபோதிலும் ,அங்கே உருவான மாற்றங்கள் முழுமையாகப் பெண்களுக்குத் தீர்வளிக்கவில்லை.!

ஆனால்,இப்போராட்டங்கள் பெண்களுக்கு நம்பிக்கையையும்,துணிவையும் தந்திருந்தன.

பெண்ணியச் சிந்தனையாளர்களின் எழுத்துக்கள்,பிரச்சாரங்களால் விழிப்புற்ற பெண்களைப் போராட்டக்காரர்களாக மாற்றியது புறக்கணிப்பும் அவமானங்களும்,துன்பங்களுமே!

கிளாரா ஜெட்கின்

 

1840 ம் ஆண்டு இலண்டனில் உலக அடிமைமுறை எதிர்ப்புப் பேரவை நிகழ்ந்தது. . அப்பேரவையில் கலந்துகொள்ளச் சென்ற அமெரிக்கப் பெண்ணுரிமைப் போராளி எலிசபெத் ஸ்டாண்டன் ,லுக்ரேசியா மோட் போன்றோருக்கு ,அவர்கள் பெண்கள் என்பதால் அப்பேரவையில் கலந்துகொள்ளும் வாய்ப்பு மறுக்கப் பட்டது.

இந்த புறக்கணிப்பால் பிறந்ததே பெண்கள் உரிமைகளுக்கான பேரவை !

 1848 ல் நியூயார்க்கில் நடந்த மாநாட்டில் பெண்களின் உரிமைப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபை உருவானபிறகு,பெண்கள் வாக்குரிமையை உலகளவில் விரிவுபடுத்தும் முயற்சியாக,பன்னாட்டுச் சட்ட அடிப்படையில்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்குழு விவாதத்துக்கு எடுத்தது ,.அக்குழுவின் பரிந்துரையை 1948ல் ஐ.நா.சபை

ஏற்று வெளியிட்டது.இதன்மூலம் பெண்கள் வாக்குரிமை உலக மனித உரிமைகள் சாற்றுரையின் பகுதியாக மாறியது.

பெண்களின் அரசியல்,சமூக,பொருளாதார,பண்பாட்டு சம உரிமையை அங்கீகரித்துள்ள ஐ.நா.சபை 1975 ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்தது .இதன்பிறகே சர்வதேச மகளிர் தினத்துக்கு ஐ.நாவின் அதிகாரபூர்வ அனுசரணை கிட்டியது.

ஒவ்வொரு ஆண்டின் மகளிர் தினத்துக்கும் ஒரு மையக் கருத்தை,குறிக்கோளை அறிவிக்கும் வழக்கத்தை ஐ.நா.சபை1996ல் தொடங்கியது.முழுமையில் நாமும் அங்கம் என்பது இவ்வாண்டுக்கான கரு.

நம் நாட்டில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை அனுசரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திய பெருமை  கேப்டன் லட்சுமியையே சாரும்.

நவீனச் சூழலில் பெண்கள் கல்வியறிவு பெறுவது உயர்ந்திருக்கிறது.

பொருளாதார சுயச் சார்பு ஓரளவு கிட்டியிருக்கிறது.

சொத்துரிமை சாத்தியமாகியிருக்கிறது.

இரவுப் பணி ,பாலியல் சுதந்திரம் எனப்பல தளங்கள் மாறியிருக்கின்றன.

பெண்ணுரிமைப் பேச்சின் தேவையென்ன என்ற கேள்வியினை நாம் சந்திக்கின்றோம்.  வேடிக்கை என்னவென்றால் ,சில உரிமைகள் பெண்கள் போராடிப் பெற்றவை. சில உரிமைகள் சமுதாயத்துக்கு வசதியாக இருப்பதால் அளிக்கப் பட்டவை.

உதாரணம் …பெண்கள் பணிபுரிவது.!

அவளுடைய அறிவுத் திறன்,பொருளாதாரச் சுயச்சார்பு போன்றவை தாண்டி அதுவும் அவளுக்கு சுமையாக மாறிவிடுகிறது பலசமயங்களில்…!

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை,ஞாயிற்றுக் கிழமையும் பெண்டிர்க்கில்லை என்றாரே கவிஞர் கந்தர்வன்…..எத்தனை சத்தியமான வார்த்தைகள்….

சமத்துவமின்மை என்பது பெண்ணின் பிறப்பு விகிதத்திலேயே தொடங்குகிறது. 2011 மார்ச்சில் வெளியான நிலவரப்படி ஆயிரம் ஆண்குழந்தைகளுக்கு 914பெண் குழந்தைகளே நம் நாட்டில் உள்ளனர்.விடுதலைக்குப் பின் இத்தனை ஆண்டுகளில் மிகக் குறைவான பெண்குழந்தைகள் விகிதம் இதுதான் !

பெண்சிசுக் கொலைக்கெதிரான தீவிர பிரசாரத்துக்குப்பின்னும் ஆண் குழந்தைக்கான முக்கியத்துவமே அதிகரித்திருக்கிறது

கல்வி,ஊட்டச்சத்து,வேலைவாய்ப்பு,அரசியல் விகிதாச்சாரம்,திருமணம்-குழந்தைப்பேறு குறித்து முடிவெடுக்கும்-மறுக்கும் சுதந்திரம்,சம வாய்ப்பு-சம கூலி ,குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பு,பாலியல் அத்துமீறல்களிலிருந்து பாதுகாப்பு,பெண் உடலுக்கான சுயமரியாதை …இப்படிப் பலவிஷயங்களில் இன்னும் போராட்டம்தான்.!

உண்மையில் இவற்றில் பெரும்பான்மையானவை சட்டபூர்வ உரிமைகள்!

ஆனால்,மனதளவில் பாலியல் சமத்துவம் என்பதை ஆண்களும் ஏன் பெண்களும் கூட முழுமையாகப் புரிந்து கொள்ளாததன் விளைவுகளே இந்த சிக்கல்கள்!

பொது அறிவை,மாற்று அறிவைப் பெண்கள் பெரும் வாய்ப்பு மிகக் குறைவே! பெண்கள் பெற்ற கல்வியும் அவளை ஆணின் பெண்ணாக,சமூகத்தின் பெண்ணாகவே உருவாக்கியிருக்கிறது எனலாம்!

தான் உண்மையில் யார் என்ற சுயத்தைக் கண்டடைந்த பெண்ணே இந்த நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவை வெற்றியாக்குவாள் !

அவள் தன்னையறிவாள் !

அறிவிப்பாள் ! 

 அவளை உணரும் வாய்ப்பு பெற்று வளரும் ஆண் பெண்ணைத் தாழ்த்தவோ,சீண்டவோ ,தாக்கவோ முற்பட மாட்டான்!

சமூக விடுதலைக்கு முக்கியப் பங்களிப்பு செய்யும் பெண்ணியச் சிந்தனையை வளர்ப்பதே இன்றைய தேவை!  

அவ்வாறு தங்களை உருவாக்கிக் கொண்ட பெண்கள் சிலரை இந்த அடையாளம் தொடரில் நாம் சந்திக்க இருக்கின்றோம் .

 

தொடரும்…

தொடர்புடைய அடையாளம் பதிவுகள்

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close