தொடர்கள்
Trending

அடையாளம்:5- தோழர் பாலபாரதி- உமா மோகன்

பெண்கள் அரசியல் பதவிகளில் முப்பத்துமூன்று சதவீத இட ஒதுக்கீடு கூடப் பெற முடியாமல் போராடும் தேசம் இது. கிடைத்த உள்ளாட்சி இட ஒதுக்கீட்டிலும் முழுமையாக அதிகாரத்தைத் தாமே கையாள முடியாத சூழல்தான் இன்னும் நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் ஆண்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளவே  பெண்களுக்கு வாய்ப்பும் பதவியும் கிடைக்கிறது. வெகு சிலரே இவற்றைப் புறந்தள்ளி தன் அரசியல் அடையாளத்தை வென்றெடுக்கின்றனர். 

உள்ளடங்கிய ஒரு தென்மாவட்ட(திண்டுக்கல்) கிராமத்தின் காங்கிரஸ் ஊராட்சித் தலைவர் தன் மகள் பொதுவுடைமைக் கட்சியின் ஊழியராகி, சட்டமன்ற உறுப்பினரும் ஆவார் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார். கதிரியப்பன்-மதவானை தம்பதியரின் இளையமகளாக  1963 மார்ச் முப்பதில் பிறந்த பாலபாரதியும் கூட இதை நினைத்தே பார்த்ததில்லை.

பக்கத்துக் கிராமம் கே.புதுக்கோட்டைப் பள்ளிக்கு எத்தனையோ கிராமத்துச் சிறார் படிக்க வந்தனர். அங்கு பணியாற்றிவந்த ஆசிரியர் ஆ.சுப்ரமணியன் ஏழு, எட்டு வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் விழிப்புணர்வுக் கருத்துகளைத் தொடர்ந்து எடுத்துரைத்து வந்தார். அறிவியல் செய்திகளைப் பகிர்வது, போட்டிகள் நடத்தி மாணவர்களின் பங்கேற்பைத் தூண்டுவது, வாசிக்க வைப்பது எனத் தொடர்ந்து செயல்பட்டார். மாணவர்களின் பங்களிப்பில் கையெழுத்துப் பத்திரிகையும் நடத்தினார்.

“எச்சரிக்கை நோட்டீஸ் “என்ற பெயரில் தான் எடுத்துரைத்த கருத்துகளின் எதிரொலியாக சிறுகதை எழுதித் தந்த பாலபாரதி ஆசிரியரின் கவனத்தை ஈர்த்தார். ‘ஆகஸ்ட் 15’ பற்றி கிராமங்களில் கேட்டறியச் சொன்ன களப்பயிற்சி முக்கியமானது. கிராமவாசிகளுக்கு சுதந்திரம் பற்றி ஏதும் தெரியவில்லை என்பதை உணர வைத்து, உண்மையான சுதந்திரம் நமக்கு வர வேண்டுமென்றால் அதைநோக்கிய செயற்பாடுகள் வேண்டும் என்ற எண்ணம் விழுந்தது. கேரள மாணவர் ராஜன் மரணத்தை அடிப்படையாகக் கொண்ட “பிணந்தின்னிகள்”, தணிகைச் செல்வனின் “சமூக சேவகி சேரிக்கு வந்தாள்” போன்ற புத்தகங்களை ஆசிரியர் வாசிக்கக் கொடுத்தார்.

அறிவியல் மேதைகளைப் பற்றிய பேச்சுப் போட்டியில் இவருக்கு வந்த தலைப்பு பெஞ்சமின் பிராங்க்ளின். அண்ணன் முத்துவடிவேல் பாடப்புத்தகமே குறிப்புக்கு உதவ தடபுடலாகப் பேசி இரண்டாம் பரிசு பெற்றார் பாலபாரதி.  “இவர்தான் லெனின்”என்ற புத்தகம் பரிசாகக் கிடைக்க, மீண்டும் மீண்டும் வாசித்து பிரமிக்க வாய்ப்பானது.

   திருக்குறள் போட்டிகள், அறிவியல் கழகம், கணிதக் கழகம் என விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்த எட்டாம் வகுப்பு பருவம். நெருக்கடி நிலை காலகட்டம். கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருபது அம்சத் திட்டத்தின் சிறப்புகள் குறித்து உரையாற்றச் சொன்னார்கள். நெருக்கடி நிலையின் சீரழிவுகள் குறித்து ஆசிரியர் அவ்வப்போது எடுத்துரைத்ததே அந்த மாணவியின் மனதில் சுழல, மண்ணாங்கட்டிக்குத் தங்கமுலாம் பூசவேண்டிய அவசியமென்ன எனத் தன் மனதில் உள்ளதெல்லாம் கொட்டிக் குமுறிவிட்டாள்.

என்ன நடக்கிறது, யார் இந்தப் பெண் எனப் பள்ளி ஆசிரியர்கள் முதல் காங்கிரஸ் சார்பில் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த தந்தை வரை நெருக்கடி நீண்டது.

“இப்படித்தான் அடித்தளம் இருந்தது. அரசியல் என்பது வேறொன்றுமில்லை, நம்மைச் சுற்றிய நிகழ்வுகளே…” என்ற ஆசிரியர் சுப்ரமணியனின் கருத்துக்களால் உருவான அடித்தளம். 

கண்ணெதிரே கொடும் பஞ்சத்தில் சோறு தண்ணியில்லாது அலைவுற்ற ஊர்மக்களின் வாழ்வு, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது,  மக்களுக்காக, ஆசிரியரோடு மாணவர்களும் இணைந்து துணி சேகரித்தது என பள்ளிப் பருவ அனுபவங்கள் தன்னைச் சுற்றியுள்ள அவலங்களை கவனித்துக்கொண்டே இருக்க வைத்தது.

ப்ளஸ் டூ தேர்வு சமயம்…தேர்தல் கால விரோதத்தில் தந்தை கொல்லப்பட்டார். அப்போதும் அரசியல் வேண்டாம் எனத் தோன்றவில்லை. அப்பாவின் அரசியல் தவறு என்றுதான் தோன்றியது. ஆறுதல் சொல்லவந்த ஆசிரியர் சுப்பிரமணியன் இந்த சமூக அமைப்பு இப்படியே நீடித்தால் இவற்றைத் தடுக்க இயலாது எனப் புரிய வைத்து ஆனாலும் கல்லூரிப் படிப்பை முடிப்பதே முதற்கடமை என வலியுறுத்திச் சென்றார்.

  கல்லூரிப்படிப்பை முடித்து தட்டச்சு பயிலச் சென்றுவந்த நாட்களில், எழுத்தார்வம் மீண்டும் உந்தியது. பள்ளி நாட்களில் ஆசிரியர் நடத்தியது போலத் தாமும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தலாமே என யோசனை வந்தது. நண்பர்களிடம், கதை, கவிதை, துணுக்குகள் வாங்கி, “கனல்” என்ற பெயரில் தொடங்கினார். தெரிந்த ஆசிரியர் ராமையாவை வடிவமைத்துத் தரச் சொல்லித் தயாரித்த இதழை, திண்டுக்கல் வந்து நூலகத்தில் வைத்துச் செல்வார்.த.மு.எ.ச தோழர்கள் அதை வாசித்துப் பாராட்டினர்.

82-83 இலங்கைத் தமிழர் பிரச்சனை உச்சத்தில் இருந்தது. அது தொடர்பான புத்தகங்கள் திண்டுக்கல்லில் கிடைக்கும். அதற்காகவே வந்து வாங்கிச் செல்வது வழக்கமானது. வாசிப்பு, எழுத்தில் இருந்த ஆர்வம் கண்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்கள் கவியரங்கில் பங்கேற்க அழைத்தனர். பின்னாளில் திரைப்பட இயக்குநரான பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட இளைஞர்கள் கவிதை வாசித்த முதல் கூட்டத்தில் பாலபாரதியின் கவிதை சோபிக்கவில்லை. பலத்த கைதட்டல் மற்றவர்களைப்போல் தனக்கு வரவில்லையே என யோசித்தபடி நகர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு, கவியரங்க சூட்சுமத்தைச் சொல்லிச் சென்றார் அங்கு வந்த தோழர் ஒருவர்.

அடுத்த நிகழ்ச்சி செயின்ட் மேரிஸ் பள்ளியில், நவகவி தலைமையில் .பெண்ணியம் பேச முடிவு செய்தார். பாராட்டுகள் பொழிந்தன. 

மல்லிகை என்றான் 

மயங்கி நின்றேன் 

ரோஜா என்றான் 

சிவந்து நின்றேன் 

தாமரை என்றான் 

தலைகுனிந்து நின்றேன் 

வர்ணித்தபின், வரதட்சிணை வேண்டுமென்றான் 

வாடி நின்றேன்.”

கவிதைப் பயிற்சி முகாமில் எழுத்தாளரும் கவிஞருமான கந்தர்வனிடம் பாராட்டு பெற்ற இக்கவிதை பின்னர் செம்மலரில் வந்தது.

DYFI ஜனநாயக வாலிபர் சங்கத்தில் சேர அழைத்தனர். அண்ணன் அங்கு ஏற்கனவே உறுப்பினர் என்பதால் வீட்டில் பிரச்னையில்லை. பெண்ணுக்கு பொதுவுடைமை அமைப்புகள் தரும் மரியாதையும் அங்கீகாரமும் எளிய கிராமத்துப் பெண்ணான பாலபாரதிக்கு வியப்பையும் பெருமையையும் தந்தன. 85 ல் அங்கன்வாடி ஆசிரியர். சத்துணவுத் திட்டத்தோடு இணைந்த வேலை. சைக்கிளில் வேலைக்குச் சென்றுவருவார்.

மதியம் வீடு திரும்பியபின் இயக்க வேலைகள் தொடரும். வாலிபர் சங்கம், எழுத்தாளர் சங்கம் என்று கூட்டங்களுக்குப் பேருந்தில் தனியாகச் செல்வது, காத்திருக்கும் நேரத்திலும், பயணத்திலும் புத்தக வாசிப்பு….இறங்கியதும் ஒரு தோழர் அழைத்துச் செல்ல வந்திருப்பார்… அவர் தேநீர் உபசரித்து அழைத்துச் செல்லும் பாங்கு, கூட்டம் முடிந்து நள்ளிரவில் பேருந்து பிடித்து பயணிப்பது, தங்க நேர்ந்தால் ஏழ்மையிலும் இயக்கத்தை நேசிக்கும் தோழர்களின் அன்பில் திளைத்தபடி அவர்களின் எளிய குடியிருப்பில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் புத்தகங்கள் வாசித்தபடி உறங்கிப்போவது இப்படியான நாட்களை மின்னும் கண்களோடு இப்போதும் விவரிக்கிறார்.

 அப்போதெல்லாம் வாலிபர் சங்கப் போராட்டங்களே உற்சாகத்தோடு ஈடுபட வைத்தன. மகளிர் பிரச்னைகளில் அவ்வளவு ஆர்வம் கிடையாது எனச் சிரிக்கிறார்.பெரும்பாலும் வீட்டு சண்டைகளை, சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே, இதெல்லாம் ஒரு பிரச்சினையா…நாலு பேருக்கு நல்லது செய்வதுபோல் இதிலென்ன இருக்கு என்றெல்லாம் தோன்றும். சில ஆண்டுகள் ஆன பின்னர்தான் பெண்ணடிமைச் சிக்கல்கள் புரிந்தன.

  சூசைமேரி என்ற பெண்ணைத் திருமணம் செய்து நாற்பத்து மூன்று நாட்களில் தீர்த்துவிட்டபோது அவருக்கு நியாயம் கிட்டவில்லை. அவருக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் என்று முடிவானது. அந்த நிகழ்வுக்கான நிதி உட்பட ‘உன் பொறுப்பு’ என்று இயக்கம் சொன்னபோது ரிக்ஷாவில் அமர்ந்து ஒலிவாங்கியில் பிரச்சாரம் செய்து வசூல் மேற்கொண்டது, போராடியது புதிய அனுபவம். தனக்காக நியாயம் கேட்ட மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த சூசைமேரி இப்போது பொறுப்பில் உள்ளார்.

இதனிடையே அங்கன்வாடி பணியில் ஒரு சிக்கல். குடும்பக் கட்டுப்பாட்டுக்கு பிரச்சாரம் செய்து ஆள்பிடிக்க வேண்டிய கட்டாயம் அந்த ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டது. இலக்கை எட்டவில்லை என்றால் தொந்தரவு வரும். இதை எதிர்த்து அதிகாரிகள் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அதன் தொடர்ச்சியாக பாலபாரதியின் மேல் பெண் ஊழியர்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டது. சத்துணவு ஊழியர் சங்கம் உருவாக்க முனைந்தார். மாதம் 135 ரூபாய் சம்பளத்தில் உத்தரவாதமில்லா வேலை என்பதோடு பணியில் நிலவி வந்த  பல சிக்கல்கள் தீர்க்க அதுவே வழி என உறுதியானது. 

 

அரசு ஊழியர் சங்கம் நடத்திவந்த இதழுக்கு இதுகுறித்த ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அப்போது அந்த இதழ் ஆசிரியராக இருந்த தோழர் கங்காதரன் உடனே ஆக்கபூர்வ மறுமொழி அனுப்பியதோடு இவர் மடலை இதழில் பிரசுரிக்கவும் செய்தார். மாநில அளவில் சங்கம் அமைக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊழியர்களைத் திரட்ட வேண்டும் என்ற திட்டம் பிறந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஊழியர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு பாலபாரதியுடையது.

மாநில அளவிலான சங்கம் உருவாக்க முன்னோட்ட மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. சட்டவிதிகள் குழு உறுப்பினர் பொறுப்பு வந்தது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க முதல் மாநாடு கோவையில் நடைபெற்றது. மாநாட்டு அழைப்பிதழின் பின் அட்டை பாலபாரதியின் கவிதையைத் தாங்கி வந்தது. மாதர் சங்க முன்னோடி மைதிலி சிவராமன் மாநாட்டில் பேசும்போது அக்கவிதையைக் குறிப்பிட்டுப் பேசினார். இத்தகைய செயற்பாட்டாளர்களைச் சந்திக்கவும், கவனம் பெறவுமான சந்தர்ப்பமாக இம்மாநாடு அமைந்தது. கோரிக்கைகளை முன்வைத்துப் போராட முடிவானது.

 இதனிடையே, வாலிபர் சங்க மாவட்டக் குழுவில் இடம் பெற்றார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணையும் வாய்ப்பு வந்தது. 

அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பு-ஜாக்டீ போராட்டம் சென்னையில் நடைபெற்றது. மாவட்டங்களிலிருந்து அங்கு சென்று கலந்துகொள்ள முடிவானது. சத்துணவு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளோடு சென்னை சென்று போராட்டக் களத்தில் அமர்ந்தார். கைதானவர்களுக்கு, அவர்கள் குடும்பங்களுக்கு சிறு உதவிகள் செய்வது, மீண்டும் போராட்டக் களத்தில் இணைவது என்று தங்கள் இருப்பைப் பதிவு செய்தனர் இவர்தம் குழுவினர். 1985ல் பணியிடை நீக்கம் பரிசாகக் கிடைத்தது. வலுவான அமைப்பைக் கட்டமைக்க முயற்சித்த ஊழியர்களுக்கும், பழிவாங்கப்பட்ட ஊழியர்களைப் பாதுகாக்க முற்பட்ட ஊழியர்களுக்கும் அப்போதைய சத்துணவுத்துறை அமைச்சர் சௌந்தரராஜன் தந்த பரிசு பணியிடை நீக்கம்.

    அப்போதுதான் ஜனநாயக மாதர் சங்கத்தில் இணைந்து செயல்பட இயக்கம் அழைத்தது. “நாம் வாலிபர் சங்கத்து ஆள்…மாதர் சங்கத்தில் என்ன செய்வோம்…” என்றே நினைத்ததாகச் சிரிக்கிறார். அதுதான் பெண்களை நோக்கிச் சென்ற காலகட்டம். ”அப்போதும் புத்தகங்களில் நான் வாசித்த அமெரிக்க ஏகாதிபத்தியம், ரஷ்யப் புரட்சி, என்று எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பேன். எதுவும் சலனமில்லாமல் அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தால் இவர்களுக்கு எப்படி இதையெல்லாம் புரியவைப்பது என்று கவலை வேறு படுவேன் “ என்று தன்னையே கேலி செய்து இப்போது சிரிக்கிறார் தோழர் பாலபாரதி.

மூத்த பெண்களான அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த பிரச்சனைகள் எல்லாம் ரேஷனில் பொருள் கிடைக்கவில்லை, தண்ணீர் வரவில்லை, தெருவிளக்கு எரியவில்லை, குடும்ப வன்முறை என்று…. நிஜம் சுடும்போதுதான் தன் வேலை என்ன என்று களநிலவரம் புரியத் தொடங்கியது. தொடர்ந்த கூட்டங்கள் ..கிராமங்கள்தோறும்…இரவு நேரங்களில் கூட்டங்கள் நடத்தி அங்கேயே தங்குவதும் உண்டு.

 இதனிடையே 88ல் பழனியில் நடைபெற்ற மாநாட்டில் மாதர்சங்க மாவட்ட செயலாளர்  பொறுப்பு அளிக்கப்பட்டது. குற்றாலத்தில் மாதர்சங்க மாநிலக்குழு கூட்டம். இரண்டு பிரதிநிதிகளை அழைத்துப்போகிறார். சாப்பாடு வாங்கித்தரக்கூட சிக்கனம் பார்க்கும் இவரைப்பற்றி முணுமுணுத்தபடி இருவரும் வந்தார்களாம். கட்சிப்பணம் என்றாலும் சிக்கனமாகத்தானே செலவு செய்ய வேண்டும் என்பது இவர் வாதம். வந்திருக்கும் எல்லோரும் அருவியில் நீராடச் சென்றபோது அதற்கும் கூச்சப்பட்டுக்கொண்டு உள்ளேயே இருந்த அந்த கிராமத்துப்பெண் ஆற்றிய தீவிர உரை எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. ஆற்காடு மாவட்டத்திலிருந்து வந்திருந்த அஞ்சல்துறையைச் சேர்ந்தவரும் மாதர் சங்கத்தில் குறிப்பிடத் தக்கவருமான சாவித்திரி அம்மாள் பாராட்டியது பெரும் உற்சாகம் தந்தது. குற்றாலம் கூட்டத்தில்தான் மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்பு கிடைத்தது.

1991ல் அரசுப்பணியை விட்டுவிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர் ஆனார் பாலபாரதி.  “எங்காவது பயிற்சி வகுப்புகள் நடந்துகொண்டே இருக்கும். சில பெண்கள் மட்டும்தான் இருப்பார்கள். எடுக்கப்படும் வகுப்புகளில் எல்லாம் உட்கார்ந்து எழுது எழுது என்று எழுதிக்கொண்டிருப்பேன். எல்லாம் புரிந்ததா என்றுகூடத் தெரியாது அமைப்பும், நிகழ்வுகளும் ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதலைத் தந்துகொண்டே இருக்கும். மதுரை மாநாட்டில்தான் கே.பி.ஜானகி அம்மாளைப் பார்த்தேன். பசுமலையில் ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சி வகுப்பு .நேரமாகிவிட்டதே என அவசரமாக நுழைகிறேன். பயணத்தில் கலைந்திருந்த என் நெற்றி முடியைப் பரிவாக அருகில் வந்து ஒதுக்கி ஆசுவாசப்படுத்திய அந்தக் காட்சி….” சொல்லும்போதே நெகிழ்கிறார் பாலபாரதி. தம்மைப் பீடத்தில் அமர்த்திக்கொள்ளாத  பாப்பா உமாநாத், என்.வரதராஜன், அப்போதைய மாநிலத் தலைவர் நல்லசிவன் போன்ற எளிய குருமார்களிடம் கற்ற பாடங்கள்தான் எத்தனை….

92 -93 பயிற்சிகளின் காலம் என்றால், 92-96 போராட்டங்களின் காலம்.

கன்னிவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவந்த Dr.பவானி என்பவர் வீட்டில் திடீரென இறந்துகிடந்தார். மருத்துவரான அவர் கணவரே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தபோதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. உடலைப் பரிசோதனை செய்ய வேண்டும், கணவர் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்களைத் திரட்டி இரவில் நடத்திய போராட்டம் பெரும் திருப்பமானது. சயனைடு தந்து  மனைவியைக் கொன்றதை அவர் ஒப்புக்கொள்ள, கைது செய்யப்பட்டார்.

இதேபோல் கொடைக்கானலில் மெஹருன்னிசா மரணத்தின்போது நீதிக்கான போராட்டம். 

செம்பட்டியில் கௌசல்யா என்பவர் கைதாகி காவல் நிலைய லாக்கப்பில் இருந்தபோது வன்புணர்வுக்கு ஆளாகிய சூழலில் காவல்துறை தொடர்பானது என்றாலும் தயங்காது விசாரணை கோரிய போராட்டம்…. இப்படி எங்கு அநீதி நேர்ந்தாலும் அங்கு பாலபாரதியின் குரல் ஓங்கி ஒலித்தது.தோழர்களோடு  விரைந்து களம் சேர்ந்தார் .

அந்த காலகட்டத்தில்தான் மதுரை தோழர் லீலாவதி கொலையுண்டார். மிகப்பெரிய அதிர்ச்சி. இயக்கப் பணிகளிலும், பொறுப்பிலும் இணைந்து இயங்கிய தோழி. அவர் குடும்ப பாதுகாப்புக்கு நிதி வசூல் செய்யும் துயர்மிகு பொறுப்பும் ஏற்க வேண்டி வந்தது.

ம தி மு க, ஜனதா, மார்க்சிஸ்ட் கூட்டணி  மூன்றாவது அணியாக  96ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் உருவானது. ஆத்தூர் தொகுதி மார்க்சிஸ்ட் இயக்கத்துக்கு வர முப்பத்து மூன்று வயது பாலபாரதியை வேட்பாளராக்கியது  கட்சி.  முதலில் மிரண்டு மறுக்கவும் செய்திருக்கிறார். பிறகு தோழர்கள் புரியவைத்தனர். கிராமங்களில் இப்படி இப்படி ஒரு இளம்பெண் கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்று போய் நின்றால் பெண்களெல்லாம் ஆச்சரியமாகப் பார்த்தனர்.  தி.மு.க-த.மா.க கூட்டணி வென்ற அத்தேர்தலில் இவருக்கு தோல்வியே கிடைத்தது.

மீண்டும் இயக்கப்பணி, மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்கள் என்று தொடர்ந்தார். 1999-2000த்தில் கட்சி சென்னையில் உள்ள மாநில மையத்தில் பணியாற்ற அனுப்பியது. சென்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. அங்கு இயங்குவதில் ஒரு தயக்கமும் இருந்தது. எலைட் பகுதியில் நாம் என்ன செய்ய என்பதுபோல் ஒரு சுணக்கம் இருந்தது. அப்போது ஊரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவி மேனகா அவரது அலுவலகத்திலேயே வைத்து சமூகவிரோத சக்திகளால் வெட்டிக்கொல்லப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. மனம் வெம்பியது. பின்னணியில் இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற சத்திய ஆவேசத்துடன் ஒரு கட்டுரையை எழுதி தீக்கதிரில் வெளியிட்டார். அப்போதைய எதிர்க்கட்சியான அ தி மு க வின் நாளேடான “நமது எம்ஜியார்”  அதை மறுநாளே எடுத்துப் பிரசுரித்தது. முதல்வர் கலைஞரின் கவனம் வரை சென்றது அக்கட்டுரை. பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர சென்னையில் இயங்குவது நல்வாய்ப்பாகும் எனப் புரிந்தது.

அதே சமயம், சரளா போன்ற தோழர்களால், கடற்கரையோர  மக்கள் பிரச்னைகள், வடசென்னை மக்களுக்கான போராட்டங்கள் எனப் பளபளப்பான சென்னையின் வெகுமுகத்துக்கு மாறுபட்ட தளங்களை உணர முடிந்தது. சென்னைக்கே உரித்தான வீடுகள், கலாச்சாரங்கள் எனப் பலவற்றை அறிந்துகொள்ள முடிந்தது.

2001 தேர்தலில் கட்சி அ தி மு க கூட்டணியில் இருந்தது. இம்முறை திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக்கியது மார்க்சிஸ்ட் கட்சி. எதிர்த்து நின்றவர் பதவியில் இருந்தவர். எப்போதும் மக்கள் நடுவே இருந்து தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். யாரும் அதிகம் அறியாத பெரிய செல்வாக்கில்லாத இந்தப் பெண்ணைப் போட்டிருக்கிறார்களே என்று கூட்டணிக்குள் கூட அதிருப்தியுடன் பார்த்தவர்கள் உண்டு. குறைந்த வாக்கு வித்தியாசம்தான் என்றாலும் இம்முறை வெற்றி பெற்றவர் என்ற தலைப்பின் கீழ் இடம் பிடித்தார் k நாகலட்சுமி(எ) பாலபாரதி.

அதன் பின்னர் அவர் செய்த வேலைகள்தான் மக்கள் மத்தியில் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. எம்எல்ஏவே மக்கள் பிரச்னைகளுக்காகப் போராட்டத்துக்கு வந்துவிடும் காட்சி அடிக்கடி அரங்கேறியது. காய்கறி விற்கும் சிறுவணிகப் பெண்களின் கடைகளை அகற்றினால் கூட நீதி கேட்டு அவர்களோடு நடுத்தெருவில் வந்து உட்கார்ந்துவிடும் சட்டமன்ற உறுப்பினரை அதிசயமாகப் பார்த்தார்கள்.

தன்னைத் தேடி வருகிறவர்களை மரியாதையுடன் நடத்துவது, முகம் கொடுத்து கவனிப்பது போன்ற இயல்பான விஷயங்களையே பெரிதாகக் கருதும் அளவுக்கு பதவியில் இருந்த பலரும் நடந்து கொண்டிருந்தனர். மனித உறவுகளை மதித்தலே முக்கியம் என்று  நம்பிய பாலபாரதியைக் கட்சி வேறுபாடின்றி “நம்ம வீட்டுப் பிள்ளை” என்று கொண்டாடும் நிலை வந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் பாலபாரதிக்கு ஆச்சர்யமாக இருந்ததெல்லாம், ”நான் எம்எல்ஏவோடு பேசினேன்.. எம்எல்ஏ வோடுதான் இருக்கிறேன், எம்எல்ஏவே வந்தார் “என்று மக்கள் அந்தப் பதவிக்குத் தரும் மரியாதைதான். அத்தகைய மரியாதைக்குத் தரக்கூடிய அங்கீகாரம் மக்கள் நலன் நாடும் செயல்கள்தான் என்பதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

மக்களின் கோரிக்கைகளை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் – அவ்வளவுதான் கனவு, நினைவு எல்லாம்.

மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சனை தீர்க்க காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை வலியுறுத்தி எல்லோரிடமும் அஞ்சலட்டைகளில் கையெழுத்துப் பெற்று அனுப்பும் கார்ட் இயக்கத்தை முன்னெடுத்தார். சட்டமன்றத்தில் பலமுறை பேசினார். 2003ல் 98கோடி மதிப்பில் அத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

வீட்டுவசதி வாரிய வீடுகளை உடைமையாளருக்கு உரிமையாக்கிய மாபெரும் பணி பாலபாரதி நிறைவேற்றியதில் முக்கியமானது. இருபத்து ஐந்து ஆண்டுகாலத் தொடர் பிரச்சனை அது.

திண்டுக்கல் வீட்டுவசதி வாரிய வீடுகளில் குடியிருந்த சிலர் ஒருநாள் இவரிடம் வந்து “திடீரென எங்கள் வீடுகளை மதுரையிலிருந்து போலீஸ் வந்து பூட்டிவிட்டது.”என முறையிட்டனர்.

திண்டுக்கல் ஆட்சி எல்லைக்குள் மதுரை காவல்துறை வந்திருப்பதை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு தற்காலிகமாக அவரவர் வீடுபுக வழி செய்தார். விரிவாக விசாரித்தால் சிக்கல்  நீண்டுகொண்டே போனது.

வருவாய்த்துறை நிலங்களைக் கையகப் படுத்தித்தர வீட்டுவசதி வாரியம் வீடுகளைக் கட்டியது. குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்படும். அவர்கள் தவணை முறையில் பணம் செலுத்தி வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம் .இதுதான் திட்டம். அதன் மிகப்பெரிய குறைபாடு வீட்டின் நில மதிப்பீடு அவ்வப்போதைய சந்தை விலைக்கேற்ப ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போகும் என்பதுதான். எனவே பயனாளிகள் தொடர்ந்து பணம் செலுத்தும் விகிதம் அதிகமாகிக் கொண்டே போனது. உதாரணத்துக்கு ஒரு லட்ச மதிப்பில் வாங்கியவர் இப்போது சுமார்  நான்கு லட்சம் செலுத்தவேண்டி வரும். அவர்களால் தவணைத் தொகையைத் தாள முடியவில்லை .

இதனிடையே இன்னொரு கொடுமையும் நடந்தது .நிலத்தைக் கையகப்படுத்தும்போது வருவாய்த்துறை நில உடைமையாளர்களிடம் சரியான ஒப்பந்தம் போடாமல், இடங்களின் உரிமையாளரை கண்டுபிடிக்காமல்,  சில சமயம் அரசின் வேறு பயன்பாட்டுக்கான இடங்களையே ஆக்கிரமித்து பல விதிமீறல்களைச் செய்திருந்தனர். காலப்போக்கில் நில உடைமையாளர்கள்  பலர் ஆங்காங்கே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளுக்காகும் செலவும் வீடுகளை வாங்கிய  பயனாளிகள் கட்டும் தவணைத் தொகையில் சேர்ந்தது. தங்களுக்கு சொல்லப்பட்டதைவிட. பன்மடங்கு ஏறிய தொகையால் அவர்கள் தவித்து கட்டமுடியாமல் நிற்கும்போதுதான் வீடு பூட்டும் நடவடிக்கை. வீட்டுவசதி வாரிய அலுவலகம் மதுரையில் இருந்ததால் மதுரை காவல்துறை நடவடிக்கை என்ற நீண்ட கதை புரிந்தபோது செய்ய வேண்டிய பணி ஏராளமாக இருந்தது.

2004ல் தொடங்கிய வேலையில் இவ்வளவு சிக்கல்களையும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கும்போது அடுத்த தேர்தல் வந்துவிட்டது. இம்முறை  திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட். பாலபாரதி திண்டுக்கல்லில் மீண்டும் வேட்பாளர். 

மீண்டும் முயற்சிகள் எடுத்து கலைஞர் முதல்வரான பின் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற உரிமையில் பாலபாரதி  நேரிலும் எடுத்துச் சொல்லி இதற்கு தீர்வு கண்டார். 1200 வீடுகள் கொண்ட ராணி மங்கம்மாள் காலனி மக்களின் பிரச்னைக்குரிய தீர்வாக மட்டும் அது அமையவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டுவசதி வாரியப் பயனாளிகளுக்கு பெரும் வரமானது. திமுக அரசு அவர்கள்மேல் விதிக்கப்பட்ட கூடுதல் தொகையைத் தள்ளுபடி செய்தது. நிர்ணயிக்கப்பட்ட விலையைக் குறிப்பிட்டு அவர்களுக்கு ஒப்பந்தம் தரப்பட்டது. வீடு வாங்கி இருபத்துஐந்துகள்  ஆண்டு கடந்தபின் தாங்களே இந்த வீட்டின் உரிமையாளர் என்ற உரிமையைப் பெற்றனர் அம்மக்கள்.

2009 ல் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் மற்றுமோர் வெற்றி.

பாலபாரதி வெற்றிகரமாகக் கையாண்ட இன்னொரு பிரச்சினை குடியிருப்போருக்கு பட்டா வழங்குவதில் இருந்த சிக்கலைத் தீர்த்தது. மதுரை ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்து நான்கு மாவட்டங்களாகப் பிரிந்தபோது, மாவட்டத் தலைநகரங்கள் புதிதாக உருவாகின. அப்போது அந்நகரங்களிளிருந்து பதினாறு கிலோ மீட்டருக்குள் யாருக்கும் பட்டா வழங்கக் கூடாது என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் அமைக்க இடம் தேவைப்படலாம்  என்பதே காரணம். இதன் காரணமாக கிட்டத்தட்ட நான்காயிரம் நகர்ப்புற ஏழைகள் பட்டா பெற இயலாமல் தவித்தனர். 2001-2006ல் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அணுகி விண்ணப்பித்தபோது பலன் கிட்டவில்லை. முதல்வர்தான் இதுபற்றிச் சொல்ல முடியும் என்று கூறிவிட்டார்.

2006 தேர்தலில் தி மு க கூட்டணி. பிரசாரக் கூட்டத்துக்குக் கலைஞர் வந்தபோது அவர் பேசிமுடித்தவுடன் பட்டா  பிரச்னை குறித்த மனுவைக் கலைஞரிடம் கொடுத்தார். நாம் இன்னும் ஆட்சிக்கே வரவில்லை அதற்குள் உங்கள்  எம் எல் ஏ கோரிக்கை மனு கொடுக்கிறாரே எனச் சிரித்துவிட்டார் கலைஞர்..

அம்முறை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.பெரியசாமிதான் வருவாய்த்துறை அமைச்சர். அவர் மூலம் முயற்சி செய்தார் பாலபாரதி. அமைச்சர் இது தொடர்பாக ஆய்வு செய்ய மேற்குவங்கத்துக்குச் சென்றுவந்தார்.அங்கு வருவாய்த்துறை இல்லாது பஞ்சாயத்தே இவற்றைக் கவனிப்பதைப் பகிர்ந்தார். பற்பல ஆலோசனைகளுக்குப் பிறகு 2007 ஆம் ஆண்டு, ஒரு வருட காலத்துக்கு மட்டும் அந்த குறிப்பிட்ட அரசாணையைத் தளர்த்தி உத்தரவு பிறப்பித்தது அரசு. ஐந்துவருட காலம் அப்பகுதிகளில் தொடர்ச்சியாகக் குடியிருந்தவர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டது. பயனாளிகளால் இதற்காக எடுக்கப்பட்ட விழா ஊர்வலத்தில் பலரும் திமுக, அதிமுக கரைவேட்டிகளோடு கலந்துகொண்டவர்கள்தாம். ஆம்! கட்சி வேறுபாடின்றி எளிய மக்களின் நலனையே முன்வைத்து பாலபாரதி போராடியதற்கு சான்று அக்காட்சி.

2004 ஆம் ஆண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல இயலாத காலத்தில் மீனவர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்குவது குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. பாலபாரதி, மீனவப் பெண்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். வேறொரு  உறுப்பினர் உடனே பெண்கள் என்ன மீன்பிடிக்கப் போகிறார்களா என்று வினவ கற்றுக்கொண்டால் செய்துவிடுவார்கள் என இவர் பதிலளித்தார். அத்தோடு மீன்களை பதப்படுத்துவது, விற்பனை எனப் பெண்களும் ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.  இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த அன்றைய முதல்வர் ஜெயலலிலதா, பெண்களுக்கு மீன்பிடி பயிற்சி மையம் ஒன்று அமைக்கவும், ஏற்கனவே விற்பனை போன்றவை செய்யும் மீனவப் பெண்களுக்கும் உதவித் தொகையை வழங்கவும் உத்தரவிட்டார்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மருத்துவப்படி பத்து ரூபாய் என்று இருப்பதைச் சுட்டிக்காட்டி, உயர்த்தும்படி சட்டப்பேரவையில் பாலபாரதி வேண்டினார்.., நூறு ரூபாயாக அதை உயர்த்தி அரசாணை பிறப்பித்துவிட்டு சட்டசபைக்கு வெளியில் இவரைப் பார்த்ததும், இவரிடம் வந்து  முதல்வர் ஜெயலலிதா விஷயத்தைச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

அதேபோல் திண்டுக்கல் வரலாற்றோடு தொடர்புடைய ஹைதர் அலி, திப்பு சுல்தான் இருவருக்கும் அங்கு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டிய இவர் கோரிக்கையை ஜெயலலிதா ஏற்று, இருவருக்கும் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டார்.பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, திண்டுக்கல்லின் பிரதான இடத்தில் இன்று இம்மண்டபம் காட்சியளிக்கிறது. 

கலைஞர் முதல்வராக இருந்தபோது, இஸ்லாமிய மாணவிகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளைத் தனியாக உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து சட்டப்பேரவையில் பாலபாரதி எடுத்துரைத்தார். இதை ஏற்றுக் கொண்டு திண்டுக்கல் உட்பட ஐந்து மாவட்டங்களில் அவற்றை அமைப்பதாக அறிவித்தார் .

தமிழ்நாட்டில் மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தபோதும், சட்ட அங்கீகாரம் இல்லாதிருப்பதைச் சுட்டிக்காட்டி இவர் பேசியதும், கலைஞர் அதை ஏற்று மகளிர் ஆணையத்துக்கு சட்ட உரிமைகளை வழங்கினார்.

மாற்று இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஆனாலும், எதிர்மறையாக அரசியல் நோக்கில் அணுகுவதோ, பரபரப்பு விளம்பரத்தைக் குறிவைப்பதோ இல்லாது ஆக்கபூர்வமாகப் பேசி மக்களின் தேவைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுவதே இயக்கம் தனக்குக் கற்றுத்தந்த பயிற்சி என்கிறார்.

சற்று மாறினாலும் என்ன நிகழும் என்பதற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார். “ஆண்களைப் பொதுவாக மணமானவர், ஆகாதவர் என்ற வேறுபாடு தெரியும்படி இல்லாது பொதுவாக ‘திரு’ என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு மட்டும் ஏன் ‘செல்வி’, ‘திருமதி’ என்ற வேறுபாடுகள்…?” என்று பேசிய பாலபாரதி சொல்ல வந்தது, ‘திருமிகு’ என்ற பொது அடையாளத்தால்  சுட்டலாம் என்பதுதான். ஆனால் பேசும்போது “உதாரணமாக ‘செல்வன்.வாஜ்பாய்’ என்று யாரும் சொல்வதில்லையே“ எனக் குறிப்பிட, உடனே ஹெச் .ராஜா எழுந்து “செல்வியா, திருமதியா?” என இவரைக் கேட்க, மற்றவர்கள் தலையிட, செல்வி ஜெயலலிதாவின் முன்னிலையிலேயே இந்தப் பரபரப்பு அரங்கேறியது. ஊடக கவனமும் பெற்ற இந்த உரையாடலைக் கண்டித்தார் மார்க்சிஸ்ட் உறுப்பினர்களின் வழிகாட்டியாக விளங்கிய தோழர் என்.வி.

“இதுகுறித்த கவனம் சிறக்க முதல்வரிடம் தனியாகக் கடிதம் அளித்திருந்தால் போதும். மதிப்புமிக்க சட்டமன்ற நேரத்தை தனிநபர் திசைதிருப்பல்களுக்கு இடந்தரும்படி செலவழிக்கக்கூடாது. மக்கள் பிரச்னைகளைப் பேசுவதற்கே அதைப் பயன்படுத்தவேண்டும்” என்ற தோழர் என் .வி யின் அறிவுரை தனக்கு எப்போதும் தெளிவு தந்தது எனக் குறிப்பிடுகிறார்.

எழுத்துதானே பாலபாரதியின் முதல் அடையாளம்..

இயக்கக் கூட்டங்களுக்கு ஊரூராய்ப் பேருந்தில் பயணித்த காலத்தில் எழுதிக் குவித்த கவிதைகள் 2004ல் “பொய்களும் சில உண்மைகளும்”என்ற தொகுப்பாக வந்தது.”அவர்களும் அவர்களும் “என்பது இன்னொரு தொகுப்பு.

மாதர்சங்க கூட்டங்களுக்குப் பயணித்தபோது தோழர் பாப்பா உமாநாத் அவர் வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லியபடியே வருவார்.இவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆவலில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினார் பாலபாரதி. அது பாப்பா உமாநாத் போராடி வளர்ந்த கதை. அவரைப் பற்றி பல நெருக்கமான நினைவுகள் இருந்தபோதும் மிகு மரியாதையோடு சொல்லத்தக்க ஒன்று மகளிர் சிந்தனை குறித்து…

ஜனநாயக மாதர் சங்க மாத இதழான “மகளிர் சிந்தனை“ ஆசிரியர் குழு ஒன்றால் நடத்தப்பட்டது. இருப்பினும் தலையங்கத்தின் கீழ் பாப்பா உமாநாத் என்று போடுவது வழக்கமாக இருந்தது. ஒருமுறை பாலபாரதி இதைச் சுட்டிக்காட்டி கேட்டார். பாப்பா உமாநாத் கோபிக்கவில்லை. மறு இதழிலிருந்து ஆசிரியர் குழு என அச்சிட்டு வந்தது. “அதைப் பெரிய விஷயமாக ஏன் கேட்டோம் என்று நான்தான் நினைத்தேன்.ஆனால் அம்மா எப்போதும்போல்தான் இருந்தார். வாச்சாத்தி சம்பவம் குறித்து என்னை விரிவாக எழுதத் தூண்டியவரும் அவர்தான்” என்கிறார்.

பாலபாரதி எழுதிய இன்னொரு வாழ்க்கை வரலாறு தோழர் என்.வரதராஜனுடையது. சட்டமன்ற உறுப்பினராக, கட்சியின் திண்டுக்கல் மாவட்டத் தலைவராக, இவரைப் போன்ற புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் வழிகாட்டியாக விளங்கியவர். கூர்ந்து கவனிக்கும், அமைதியான சுபாவமுள்ள வித்தியாசமான தலைவர்.”உன் கறிக்குழம்பு கவிதை சிறப்பு மா “என்று அவர் சொல்லும்போதுதான் இலக்கிய நாட்டமுள்ளவர் என்பதே தெரிந்தது. “மிச்சம்” என்ற அந்தக் கவிதை, 

அம்மாவின் கைப்பக்குவத்தில் கறிக்குழம்பு வாசம் 

எங்கள் வீதிமுழுக்க வீசும் 

எப்போதோ ஒருதரம்தான் எங்க வீட்டில் நடக்கும்

இந்த விசேஷம் 

பொசுக்கப் பொசுக்க சோறுபோட்டு 

கொதிக்கும்போதே குழம்பு ஊத்தி 

ஒருகறி எடுத்து ஊத்தி ஊதித் தின்னும்போது 

 இந்த உலகமே மறக்கும் 

அண்ணனுக்கும் எனக்கும் அன்று மட்டும் 

அடிக்கடி பசிக்கும் 

காரம் சேராதென்றாலும் கண்ணில் நீர்கசிய 

அப்பா சாப்பிடுற அழகே தனிதான்

வாசனையறிந்து வந்துசேரும் எதிர்வீட்டு அத்தைக்கும் 

இல்லையென்று சொல்லாமல் விருந்தோம்பல் நடக்கும்

 எல்லாம் முடிந்து 

சட்டியைத் துழாவும் அம்மாவுக்கு மட்டும் 

எங்களால் கடிக்க முடியாமல் ஒதுக்கி வைக்கப்பட்ட 

எச்சில் எலும்புகளே மிச்சம் இருக்கும்.”

என்.வி தோழரின் வாழ்க்கை வரலாறென்பது சொந்த விஷயங்கள் மட்டுமல்லாது, இயக்கம் பிரிந்தது, கூட்டணி வைத்த சூழ்நிலைகள் என இயக்கத்தின் வரலாறாகவும் வளர்ந்தது. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் சொந்தவீடு கூட இல்லாது, மனைவி தன்முயற்சியில் கடன் வாங்கிக் கட்டினால்கூட தவறு என்று சொன்னவர். பெரிதும் வெளியில் சொல்லிக்கொள்ளாது ஆசிரியரான தன் மனைவிக்கு வீட்டு வேலைகளில் பங்கெடுத்து உதவும் வழக்கமுள்ளவர். பாலபாரதி இவர் வரலாற்றை எழுதும்போது மனைவியைக் காதலித்தார் என்று குறிப்பிட அவர் மனைவியோ, “என்ன இது…” என்று வருந்தினாராம் கிராமத்து வெள்ளந்தி இயல்பால். தோழர் என்.வி.யோ, “நாம் இவ்வளவு இயங்கியும் இந்த வார்த்தைக்கே  அஞ்சுமளவுதான் நம் ஊரில் பெண் சுதந்திரம் வந்திருக்கிறது” என்று சிரித்தாராம்.  

சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் எழுத நேரமில்லை. குமுதம் ரிப்போர்டர் பத்திரிகையில் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து எழுதிய கட்டுரைகள் “எரிக்கும் பூ” என்ற தலைப்பில் வந்தன. 

மக்கள்பணி செய்யும்போது உகந்த ஒரு கருத்தை நேரடியாகச் சொல்ல முடியாதபோது புனைவுகளை நாடுவது சரியாக இருந்தது. இலக்கியம் பற்றிய பார்வையும் இந்தக் கால இடைவெளியில் மாறியிருக்கலாம்.எனினும் சொல்லவேண்டியவற்றை விரைவில் எழுத நினைக்கிறேன் என்கிறார்.

பதவி அரசியலிலிருந்து விலகி மக்கள் சேவையைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும்போதும் அன்றைய பணிகளால் கிடைத்த அங்கீகாரம் தொடர்கிறது.இப்போதும் பிரச்னைகளுக்காகப் போராடத் தயங்குவதில்லை.தொடர்ந்த கூட்டங்கள், விழிப்புணர்வுக் கருத்துப் பரிமாறல்கள், இளையசக்தி  இடதுசாரி அரசியலில் நம்பிக்கை கொள்ளவேண்டியத்தின் கட்டாயம் என எப்போதும் அரசியலோடு இணைந்திருக்கிறார் பாலபாரதி. உழைக்கும் மக்களுக்கு,பெண்விடுதலைக்கு தீர்வு பொதுவுடைமை இயக்கங்கள்தான் தரமுடியும் என்ற நம்பிக்கையை முன்னெடுக்க விரும்புகிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாநில துணைத் தலைவர். ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர்.மக்கள் ஒற்றுமை மேடையின் குழு உறுப்பினர் எனக் கட்சிப்பணிகள் தொடர்கின்றன.

எப்போதும் வாசிப்பே பிடித்தம்.சென்னை சென்றால் மட்டும் திரைப்படங்கள் பார்ப்பதுண்டு. பெரிய ஈர்ப்பில்லை. பயணங்களில் பாடல் கேட்கப் பிடிக்கும். இயக்கச் சூழல் நிறைந்த இடங்களுக்குச் சென்றால் ஒன்றிணைந்துவிடுவது பிடிக்கும். மதம் சாதி, இனம் சார்ந்த பிரிவினை உணர்வுகள் முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்திருக்கிறது.இந்நிலை மாற்ற ஆசிரியர்களால்தான் முடியும். அவர்கள் தாமும் விழிப்புணர்வு பெற்று, எதிர்காலத் தலைமுறையையும் வழிநடத்த வேண்டும் என்கிறார் தன் ஆசிரியரின் நினைவுகளோடு.

 

தொடரும்…..

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. தங்களின் முயற்சியை வரவேற்பதில் மகிழ்கிறேன். தங்களின் படைப்புகள் மேலும் வளர்க வாழ்க.
    -இரா.இராமஜெயம் கும்பகோணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close