கட்டுரைகள்
Trending

ஆழியின் மீளாத் துயரங்கள்

மணி ஷங்கர்

மழையை தெய்வமாக வணங்கும் நாம், மழை நீரின் அமுத சுரபியான கடலுக்குக் கேடுவிளைவித்து வருகிறோம். மனித செயல்பாடுகளால் வெளியான கரியமில வாயுவில் சுமார் 30 சதவீதத்தை கடல்கள் ஈர்த்துள்ளன. வளிமண்டலத்திற்குச் செல்லும் பெரும் அளவிலான கரியமில வாயுவை கடல்கள் பெற்றுக் கொள்வதால், பருவநிலை மாற்றத்தின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆனால், இது மகிழ்ச்சிக்குரிய செய்தி அல்ல. பசியைப் போக்குவதற்குத் தன் கையை வெட்டித் தாமே உண்பது போன்ற செயலாகும். காற்றிலிருக்கும் கரியமில வாயுவை உட்கொள்ளும் தன்மை கடல்களுக்கு இயற்கையாகவே உள்ளது. அளவுக்கு மிஞ்சிய அமிர்தம் போல, தேவைக்கு அதிகமான அளவில் கரியமில வாயுவை கடல்கள் உட்கொள்ளத் தொடங்கிவிட்டதால், பூமியின் உயிர் திரவமான கடல்களும் அதில் வாழும் உயிரினங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இயற்கைச் சூழல் மாசுபாட்டை தலைமையேற்று நடத்திவரும் பசுமைக்குடில் வாயுவான கரி-ஈருயிரகம் மிதமிஞ்சிய அளவில் கடல் உட்கொள்ளும் போது, கார்பானிக் அமிலம் அதிகமாக சுரக்கிறது. இதன் விளைவாக, கடல் நீரின் புளித்தத் தன்மை அதிகமாகிறது. தொழிற்புரட்சி தொடங்கிய காலம் முதல், கடல்களின் புளித்த தன்மை 26 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதிகரிக்கும் கடல்களின் புளித்த தன்மையால், கார்பனேட் அயனிகள்(carbonate ions) குறைகின்றன. பெரும்பான்மையான கடல் வாழ் உயிரினங்களின் ஓடு மற்றும் எலும்புகள் உற்பத்திக்கு, கார்பனேட் அயனிகள் இன்றியமையாதவை. கார்பனேட் அயனிகளைப் பயன்படுத்தாத உயிர்களுக்கு, புளித்த நீரில் வாழத் தகவமைத்துக் கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. தன்னுடைய ஆற்றலைத் தகவமைத்துக் கொள்வதற்கு இவ்வுயிரினங்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளதால், உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளல் ஆகியவற்றுக்குப் போதிய சக்தி இல்லாமல் போய்விடுகிறது. கடற்புற்கள் மற்றும் நீல பச்சைப்பாசி போன்ற உயிர்களின் பெருக்கத்திற்கு, புளித்த கடல் நீர் பெரிதும் துணை புரிகிறது. இதனால், உணவுச் சங்கிலியில் ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன.

மீன்கள் மற்றும் கடல் உணவு வகைகளை வாழ்வாதாரமாக நம்பி வாழும் மக்கள் மூலை முடுக்கெங்கும் வசிக்கின்றனர். கடலோரப் பகுதிகள் மட்டுமன்றி கடல் இல்லாத நாடுகளிலும் கடல் உணவை விரும்பி உண்ணும் மக்கள் இருக்கின்றனர். இதிலிருந்து கடல், கடல் உணவு மற்றும் கடல் உயிர்களைச் சார்ந்துள்ள பொருளாதாரத்தை நாம் புரிந்து கொள்ள இயலும். மனிதர்களின் உணவோடு கலந்துவிட்ட கடல் உயிர்கள், ஒரு கலாச்சாரத்தின் குறியீடாகும். கடல்களின் புளித்தத் தன்மையால், மீன்பிடித்தலை மட்டுமே தொழிலாகக் கொண்டு வாழும் மீனவர்களின் வாழ்க்கை புளிக்கத் தொடங்கிவிட்டது. ஒரு புறம், பருவநிலை மாற்றம் கடல்களின் உயிர்ப்பன்மயத்தைப் பாதிக்க, மறுபுறம் புளித்தமாகும் கடல் நீரால், எஞ்சியிருக்கும் கடல் உயிர்களின் ஆயுளும் கேள்விக்குள்ளாகிறது.

இவை அனைத்துக்கும் வலுசேர்க்கும் விதமாக கடல் வெப்பமயமாதலும் இவ்வுயிர்களை அச்சுறுத்தி வருகிறது. அதிகமான வெப்பமும், கரியமில வாயுவும், சிறிய மீன்களின் தொடக்க கால வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கின்றன. இம்மாதிரியான வெப்பநிலையில் இவை ஆரோக்கியமாக வளர முடியாததால் இவற்றால் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க முடிவதில்லை. இதன் விளைவாக, புரதச் சத்துக்கும், வைட்டமின்களுக்கும் கடல் உணவைச் சார்ந்திருக்கும் நம்மால், அவற்றைப் போதிய அளவில் பெற முடியாமல் போகிறது.

கடினமான பவளப்பாறைகளில் காணப்படும் கால்சியம் கார்பனேட், நத்தைகள் முதலான கடல் உயிர்களின் ஓடு உற்பத்திக்குத் தேவைப்படுகின்றன. பிற உயிர்கள் கால்சியத்துக்காக பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளன. ஆனால், பவளப்பாறைகளுக்குத் தேவையான கால்சியம், கடல் நீரிடமிருந்து பெறப்படுகிறது. புளித்த கடல்நீரில், போதிய கார்பனேட் அயனிகள் இல்லாததால், பல்லாயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களுக்கு இருப்பிடமாகவும் உயிர் ஆதாரமாகவும் விளங்கும் பவளப்பாறைகளுக்கு கால்சியத்தை உள்வாங்கும் தன்மை குறைகிறது.

பவளப்பாறைகளில் எலும்புச் சிதைவை ஏற்படுத்தும் புளித்த நீர், அவற்றுக்குத் தேவையான சூரிய ஒளியையும் தடுக்கிறது. கடலோரப் பகுதிகளை வெப்பமண்டலப் புயல்களிலிருந்து தடுக்கும் பவளப்பாறைகள், பல்வேறு மருந்துகளுக்கு மூலப் பொருளாகவும் விளங்குகின்றன. அவற்றின் அழிவு, மனிதகுல அழிவின் தொடக்கம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பவளப்பாறைகளின் அழிவுக்கு புளித்த கடல்கள் மட்டுமே காரணமல்ல. எனினும், பவளப்பாறைகளின் மீதான அதன் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடமுடியாது. அதிகரிக்கும் கடல்களின் வெப்பத்தால், பவளப்பாறைகள் வெளிறிப்போக(coral bleaching) ஆரம்பித்துவிட்டன.

ஞெகிழிக் குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வேளாண்மைப் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றால் பவளப்பாறைகளும் கடல்களின் உயிர்ச்சூழலும் மேலும் பாதிப்பைச் சந்திக்கின்றன. இயற்கைச் சீற்றங்களால் கூட பாதிப்புக்குள்ளாகும் மென்மையான தன்மையுடைய பவளப்பாறைகளுக்கு, புளித்த கடல்நீரால் வரும் விபரீதங்கள் அபரிதமானவை என்று சூழலியலாலர்கள் வருந்துகின்றனர்.

உலகின் பழமையான நாகரிகங்கள் பல கடலோரத்தில் தான் தோன்றின. நெருப்பைக் கூட கண்டுபிடிக்காத பழங்குடி மக்கள் இன்றும் அந்தமான் தீவுகளில் வசிக்கின்றனர். மனித குலத்திற்கும் கடலுக்குமான தொடர்பு வெறும் நாகரிகம், வாழ்வாதாரம் போன்ற கூறுகளால் சுருக்கிவிட இயலாது. மனிதர்கள் சுவாசிக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான உயிர்வளியை  கடல் பாசிகள் தான் உற்பத்தி செய்கின்றன. உணவாகி மட்டுமே உதவாமல், நோய்களுக்கு மருந்தாகவும் பல கடல்வாழ் உயிரினங்கள் விளங்குகின்றன.

மீன்வளங்கள், மீன்வளர்ப்பு மற்றும் சுற்றுலா போன்ற துறைகளும் புளித்த நீரால் பாதிக்கப்படுகின்றன. உருகும் பனிப்பாறைகளும், அதிகரிக்கும் கடல் மட்டமும், புயல், வெள்ளம், வறட்சி போன்ற கடுமையான சூழலியல் நிகழ்வுகளை உண்டாக்குகின்றன. இவையே, கடல்களையும் காலநிலை மாற்றத்தையும் இணைக்கும் விழுமியங்களாகவும் உள்ளன. கடல் புளித்தமாதலின் அறிவியலும் அரசியலும்

கட்டுப்பாடற்ற பசுமைக்குடில் வாயுக்களின் வெயீட்டிற்கும் காற்று மாசுபாட்டிற்கும் தலையாய காரணம், புதைபடிவ எரிபொருட்கள். அவை காலநிலை மாற்றத்தை மட்டும் ஊக்குவிக்காமல், கடல்களையும் புளித்தமடையச் செய்கின்றன.

கடல், காலநிலை மாற்றம் குறித்தான அறிவியல் உண்மைகளும், தரவுகளும் சமூக-பொருளாதார, அரசியல் தளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவை குறித்த விவாதங்களும் விழிப்புணர்வும் மனித சமூகத்தை நிச்சயம் சிந்திக்க வைக்கும். உலகம் தழுவிய காலநிலை மாற்றத்தைத் தனிமனிதர் நுட்பமாக உணர்வதில் உள்ள சிக்கல்களும், ஆழ்கடலோடு நேரடித் தொடர்பற்ற நவநாகரிக வாழ்வியலும், கடல் மாசுபாடு போன்ற சூழலியல் பிரச்சனைகளை அரசியல் களத்திற்கு நகர்த்துவதில்லை.

நிலையான வாழ்வியல் மற்றும் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் சமூக மாற்றங்கள் தேவைப்படுகின்றன. வளரும் நாடுகளிலுள்ள, நுகர்வு மற்றும் முதலாண்மைப் பொருளாதாரக் கொள்கைகளை உடைத்து, பசுமைத் தற்சார்பு பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும். அனைத்திற்கும் விலை நிர்ணயம் செய்யும் முதலாண்மைப் பூதக் கண்ணாடியால் பார்த்தாலும், 1 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருள் இழப்பை புளித்த கடல்நீர் ஏற்படுத்துவதாக உயிர்ப்பன்மயப் பாதுகாப்பிற்கான ஐ. நா மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடல்கள் புளித்தமாதலைத் தடுக்கும் கொள்கைகளை, அரசியல் மற்றும் பொருளாதார வலிமைகளைக் கடந்து உலகின் அனைத்து நாடுகளும் கருத்தில் கொள்ளவேண்டும். ஆலைமயமாக்கப்பட்ட வேளாண்மை, கச்சா எண்ணெயைப் பயன்படுத்தும் போக்குவரத்து, நிலக்கரி மின்சாரம் ஆகியவற்றால் நாம் அடைந்துள்ள வளர்ச்சி நிலையற்றது. உயிர்களின் அடிப்படை ஆதாரமான காற்று, நீரை மாசுபடுத்தி, ஆடம்பரமான வாழ்வியலுக்கு அடித்தளமிடும் கொடிய விலங்குகளாய் நாம் மாறியுள்ளோம்.

அதிகார வர்க்கங்களால் புறக்கணிக்கப்பட்டு வரும் சூழலியல் சிக்கல்களில், கடல்கள் புளித்தமாதல் காலநிலை மாற்றத்தைவிடவும் தற்போதைய அதிதீவிரமான சிக்கலாகும். கரியமில தடத்தை(carbon footprint) அளவிடும் தொழில்நுட்பம், அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டும். பதிவான கரியமில தடத்திற்குத் தகுந்தவாறு கார்பன் வரியை அரசுகள் வகுக்க வேண்டும். பெருங்கடல்களின் பயன்களையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டால், அதற்கென பிரத்யேக அமைச்சரவையை உருவாக்குவதே சிறந்ததாகத் தெரிகிறது. கடல் நீர் மேலாண்மையை, கடலோர வாசிகளும், கப்பற் படைகளும், அரசாங்கமும் முறைபடுத்தவதோடு ஒவ்வொரு தனிமனிதரும் கடல் நீரைத் தம் குருதிக்கு நிகராக எண்ண வேண்டும்.

மீன்தொட்டிகளில் இருக்கும் சின்னஞ்சிறு மீன்களுக்குக் கிடைக்கும் உணவும், வாழும் சூழலும், பெருங்கடல்களை ஆளும் சுறா மீன்களுக்குக் கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம். பழமையான நாகரிகங்கள் பலவற்றை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் கடல்களைப் பாதுகாக்க, பண்டையப் பசுமைத் தற்சார்பு வாழ்வியலை மனித இனம் மீட்டெடுக்குமா?

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close