கவிதைகள்

கவிதைகள் – ஏ.நஸ்புள்ளாஹ்

கவிதை | வாசகசாலை

எனது கனவுகளுக்குள்
வருவதற்கும் போவதற்குமாய்
பாதைகள் இருக்கின்றன
பேசிப்பழக விருப்பமானவர்கள்
தங்கள் கவிதைகளின்
சிறகுகளில் ஏறியமர்ந்து வாருங்கள்
பேசலாம் பழகலாம்
மிடறு மிடறாய் கவிதை
அருந்தலாம் வாருங்கள்
காற்றின் அசைவில்
கனவின் கதவு திறந்து கிடக்கிறது
காற்றின் கைகள் தாழ்ப்பாள் இடுவதற்கு
முன்னம் வாருங்கள்
பேசலாம் பழகலாம் .

*****

இரவு தனிமையால்
துரத்தப்பட்டேன்
தனிமை சிறியதும் பெரியதுமாக
வளரத் தொடங்கியது.
ஆரம்பத்தில்
பீ வண்டை ஒத்த வடிவத்தில் இருந்தது.
இரண்டம் ஜாமத்தின் முதல் பகுதியில்
அது வளர்ந்து
ஓநாயின் சாயலில் என்னைத் துரத்தத் தொடங்கியது.
ஓடினேன் ஓடினேன்
முடிவற்று வளர்ந்து கொண்டிருந்தது இரவு.

*****

பிரதியை எழுதத் தொடங்கும் போதெல்லாம்
சொற்களின் நடுவே வெயில் வந்து உட்கார்ந்து கொள்கிறது
அதன் அடிப்படையில்
புதிய வானத்தை வரையத் தொடங்குகிறேன்
ஆங்காங்கே மேகங்களைப் பரப்பி
ஒரு கணப் பொழுதினுள்
மழை பெய்யத் தொடங்குகிறது
எனவே இன்றிலிருந்து
வழியும் நீரைக் குடித்த பூமி
வெகுநாட்களின் பின்
புற்களும் மரங்களும் உயர்வதைப் பார்த்து
மழை வேண்டிய தனது தியானத்தை
மெல்ல அழிக்கத் தொடங்குகிறது
தியானத்தின் அடையாளம் அழியும் இறுதிப் பகுதியில்
பிரதி இப்படி முடிகிறது.

வெயில் தனக்கான இடங்களை
மீண்டும் கைப்பற்ற பகலை அழைக்கின்றது.

*****

சில வாசனைகள்
ஒரு காற்றை விட்டு மற்றொரு காற்றுக்கு
இடம்பெயர்வது போல்
நேற்றைய இரவை விட்டும்
இன்றைய இரவிற்குள்
தாவுகிறது ஒரு கனவு
அக்கனவைத் துரத்திச் செல்லுகிறான்
ஒருவன்
அவன் அக்கனவைத் துரத்திச் செல்வதற்கு
ஒன்றுக்கு மேற்பட்ட
காரணங்கள் இருக்கவில்லை
அப்படியெனில்
ஒரே ஒரு காரணம்தான்
அவனுக்கு இருக்க முடியும்
கனவு கருப்புக் குதிரை
ஒன்றின் மேல் அமர்ந்து வேகமாகவே ஓடுகிறது
அவன் வெள்ளைக் குதிரை
ஒன்றின் மேல் அமர்ந்து
கனவைத் துரத்துகிறான்
சற்று நேரத்தில்
கருப்புக் குதிரை நின்றுவிட்டது
அவன் லாவகமாக
கனவைப் பிடித்துவிட்டான்
அவன் கனவைத் துரத்துவதற்கு
ஒரே ஒரு காரணமிருந்தது
அக்கனவிற்குள்தான்
அவன் எழுதிய இந்தப் பிரதியிருந்தது
கனவைச் சுமந்து சென்ற
கருப்புக் குதிரை நின்றதற்கும்
ஒரே ஒரு காரணமிருந்தது
அவன் துரத்திய கனவு
வளர்வதற்கு நாளைய இரவு தேவையாக இருந்தது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close