கட்டுரைகள்
Trending

96 – தனிப்பெருங்காதலின் ஓராண்டு

மித்ரா

சென்ற வருடம் சமீபத்திய தமிழ் திரையுலகின்  மகத்தான வருடம் என்று தயங்காமல் சொல்லலாம். வித்தியாசமான முயற்சிகள், வித்தியாசமான கதைகள், வித்தியாசமான கோணங்கள் எனத் தொடர்ந்து வெளியாகி நம்மை மகிழ்வித்தன. ”இப்போல்லாம் யாருப்பா தியேட்டருக்கு போய் படம் பாக்குறாங்க?” என்ற  கூற்றை, ”அதெல்லாம் நல்ல படமா இருந்தா நாங்க போய் பாப்போம்” எனக் கூறி தவறென்று நிரூபித்தனர் ரசிகர்கள்.

அந்த வரிசையில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் தான் 96. இசையும், காட்சிகளும், காதலும் மக்களைப் பித்துப் பிடிக்க வைத்தன. படம் குறித்த ஏராளமான உரையாடல்கள், சிலாகிப்புகள், தங்கள் முன்கதைகளின் நினைவுகள், விமர்சனங்கள் இவை அனைத்தையும் தாண்டி காதல், காதல், காதல் என காதலால் நிரம்பி, ரசிகர்களைக் காதலால் நிரப்பி அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர் ராமும், ஜானுவும். சந்தேகத்திற்கு இடமின்றி 96 ஒரு மகத்தான காதல் காவியம். இன்று தமிழ்கூறும் நல்லுலகம் 96 திரைப்படத்தின் முதல் ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. உண்மையில் இப்போது யாரும் 96 திரைப்படத்தைக் கொண்டாடவில்லை. தங்களின் பிரிந்த காதலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுசரி, எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கின்றன. வந்து கொண்டிருக்கின்றன. காலம் மாறியிருக்கிறது. காதலுக்கு இருந்த பெரிய புனித பிம்பமெல்லாம் இப்போது கிடையாது. இப்போதும் ஏன் 96 திரைப்படம் இப்படி சிலிர்க்க வைக்கிறது? எப்படி இத்தனை ஆண்களின் விருப்பத்திற்குரிய திரைப்படமாக 96 அவர்களை ஆட்கொண்டது? பெண்கள் பெரிதாக எதுவுமே பேசியது போல தெரியவில்லையே. ஒருவேளை அவர்களுக்கு பிடிக்கவில்லையா? ஏன் பிடிக்கவில்லை? இப்படி ஏராளமான கேள்விகள் அந்தத் திரைப்படத்தின் கொண்டாட்டங்களைப் பார்ப்பவர்களுக்குத் தோன்றலாம்.

உலகின் மற்ற பகுதிகளில் காதலுக்கு என்ன அர்த்தம் வேண்டுமானாலும் இருக்கலாம், அவர்கள் எப்படியும் காதலிக்கலாம். ஆனால், நம்மைப் பொறுத்தவரை காதல் என்பது வேறு. பார்வையாலேயே அணுகி, பார்வையாலேயே காதலித்து, பார்வையாலேயே சண்டையிட்டு, பின் பார்வையாலேயே பிரிந்த எத்தனையோ காதல்களை நம் சமூகம் கண்டிருக்கிறது. ராமைப் போல எத்தனையோ காதலர்கள் தங்கள் காதலியின் திருமணத்திற்கு சென்று வந்திருப்பார்கள். ராமைப் போலவே பின்னாளில் அவர்களைக் காண நேரும்போது விக்கித்துப் போய் நின்றிருப்பார்கள். இதெல்லாம் புனைவு கிடையாது. நம் சமூகச்சூழல் அப்படித் தான் இருந்திருக்கிறது. இங்கு ஒரு ஆண் அவ்வளவு எளிதாக ஒரு பெண்ணின் அருகில் செல்லவே முடியாது. இன்றைய நவீன காலகட்டத்திலும், சமூகவலைத்தளங்கள் கோலோச்சும் நிலையிலும் சிங்கிள்களாக எஞ்சியிருக்கும் 90’s Kids தான் அந்த சமூகத்தின் சாட்சிகள்.

இப்படிப் பேசாமலேயோ  அல்லது பேசிய பிறகு புறச்சூழல்களாலோ பிரிந்த காதல் என்ன ஆகும்? எதுவும் ஆகாது. அப்படியே ஆழ்மனதில் கனன்று கொண்டே இருக்கும் ஒரு தீரா நெருப்புப் பிழம்பென. வெளியில் நாம் இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளலாம், ஆனால் அந்தக் காதல் வாய் பொத்தி நமைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கும். அதனிடமிருந்து தப்பித்து நாம் எங்கும் ஓடி விட முடியாது. பிரிந்த காதலின் சக்தி அது தான். எப்போதும் கிடைக்காத ஒன்றுக்கு தான் ஏங்க வைக்கும் சக்தி அதிகம். நம் ஆண்கள் அனைவருக்கும் அப்படி கிடைக்காமல் போன ஒரு காதல் இருக்கும். காதலி இருப்பாள். அப்படிப்பட்ட காதலியின் பிம்பமாகத் தான் ஜானு வருகிறாள். திரையில் யாரும் ஜானுவைப் பார்க்கவில்லை, தங்கள் காதலியைப் பார்க்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

சரி. பெண்களிடம் ஏன் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை? கண்டிப்பாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இங்கும் நம் சமூகச்சூழலின் பங்கு அதிகம். ஆண்கள் ஜானுவைக் கொண்டாடுவது போல, பெண்கள் ராமை கொண்டாடி விட முடியாது. அவர்களால் அமைதியாக அழ மட்டுமே முடியும். இது ராம்களின் சாபக்கேடு. 96 திரைப்படத்தை பார்த்துவிட்டு மனைவியை கணவர்கள் சந்தேகப்படுவது போல வெளியான மீம்களே அதற்கு சான்று. இன்னொருபுறம் யோசிக்கையில், பெண்களுக்கு பிரிந்து சென்ற காதலன்  மீது தீராத கோபம் இருக்கும். அவர்களுக்குள் கனன்று கொண்டிருக்கும் அந்தக் காதல் கோபத்தையும் ஒருசேர வளர்த்துக் கொண்டிருக்கும். வாழ்க்கையில் சின்னச்சின்னப் பிரச்சனை நடந்தாலும் அதற்கான பலியை பிரிந்த காதலன் தலையில் தான் போடுவார்கள் பெண்கள் . எப்படியாவது எதையாவது செய்து இவன் நம்முடன் சேர்ந்திருக்கலாமே என்ற ஏக்கம், கோபமாக மாறி, கைகூடாத காதலை சுமந்தலையும் அத்தனை பெண்களுக்கும் இருக்கும். பிறகெப்படிக் கொண்டாடுவார்கள்? அழ மட்டுமே செய்வார்கள்.

இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு இதையெல்லாம் கண்டால் சிரிப்பாக இருக்கலாம். ஏளனமாக இருக்கலாம். வியப்பாக இருக்கலாம். இவர்களின் வாழ்க்கை வேறு, காலம் வேறு, களம் வேறு. காதல் வேறு. இவர்களுக்கு ஆச்சரியம் தாளாத இன்னொரு விஷயம்….”அதெப்படி ராம் கடைசி வரை எந்தப் பெண்ணையும் தன் வாழ்வில் அனுமதிக்காமல் இருப்பான்?” என்பதே. ஏனென்றால் இவர்களுக்கு அதெல்லாம் சாத்தியமே இல்லை. உண்மையில் காதலென்பது உன்னைத் தவிர வேறெதுவும் வேண்டாம் என்னும் பிடிவாதம் தானே.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close