கட்டுரைகள்

புன்னகையின் கடவுள்…!

க.விக்னேஷ்வரன்

சார்லி சாப்ளின் என்ற பெயரை எழுதியோ, உச்சரிப்பு செய்தோ பாருங்கள் உங்கள் உதடுகளுக்கிடையே சில நிமிடம் சின்ன புன்னகை ஒன்று மலர்ந்து விட்டுப்போகும் அதுதான் சார்லி சாப்ளின்…!

நாம் வாழும் இந்த நூற்றாண்டு வரை எத்தனையோ தத்துவ ஞானிகள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், படைப்பாளிகள், கலைஞர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள்.  ‎ஆனால் இவர்கள் அனைவரையும் விட சாப்ளினின் பெயர் கடைசி மனிதன் இந்தப் பூமியில் வாழும் வரை நினைவுக் கூறப்படும்.

உலகப் போர்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டங்கள் அவை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஏன் உலகம் எங்கும் வறுமை, பசி, நோய்கள், மரணங்கள்.. ! ‎இதன் காரணமாக உலகம் முழுவதுமே மக்கள் கடும் மனநெருக்கடிகளில் வாழ்ந்தார்கள். போர் காரணமாக அவர்கள் வாழ்வில் சிரிக்க கூட மறந்தார்கள். அந்த கால கட்டத்தில் தான் சாப்ளின் தனது சினிமாக்களை எடுக்க ஆரம்பிக்கிறார்.

ஆம் அதுவரைக்கும் போர்களால், வல்லரசுகளால் தங்கள் வாழ்வில் புன்னகை கூடச் செய்ய மறந்த பல லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் தங்கள் முகத்திலும் அடுத்தவர்கள் முகத்திலும் புன்னகை என்பதைப் பார்த்தார்கள்!

ஆமாம் பார்த்தார்கள் !.

சாப்ளின் என்ற அற்புதமான மனிதனின் மௌன சினிமாக்களின் வழியே தங்களது புன்னகையும் மகிழ்ச்சிகளையும் ஒருங்கே மீட்டெடுத்தார்கள்…!

சாப்ளின் இயல்பிலேயே நல்ல நடிகர். காரணம் அவரது தந்தையும், தாயும் மேடை நாடக நடிகர்கள் மற்றும் பாடகர்கள் அதனால் அவர் பிறவிலேயே நடிப்புக் கலைஞன்.  ஆனால் அதே மாதிரியான நடிப்பு முறைகளை அவர் முயற்சி செய்திருந்தால் அவர் கடைசி வரை சாதாரணமான நடிகராக வாழ்ந்தும் மறைந்தும் போய் இருப்பார்.  அவர் தேர்ந்தெடுத்தது முற்றிலும் வேறொரு பாதையை.

இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா சென்ற அவருக்குச் சிறிய வாய்ப்புகள் தான் முதலில் வந்தது ஆனால் அவை எதுவும் அவருக்குப் பெரிய புகழ்களைப் பெற்றுத்தரவில்லை. மீண்டும் இரண்டாவது முறை அமெரிக்க வந்த சாப்ளினுக்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் கீ ஸ்டோனில் (Keystone) நடிக்க அதன் புகழ்பெற்ற தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மேக் சென்னட் வாய்ப்பு தந்தார்.

இந்த வாய்ப்பு குறித்து சாப்ளின் கூறியது    ‎”நிறுவனத்தின் இரண்டாவது படத்தில் ஒரு காமெடி கதாப்பாத்திரம் அதற்கு கீ ஸ்டோன் என்னிடம் ‘உனக்கு ஐந்து நிமிடம் மட்டும் தருகிறேன், ஓடு எதாவது மேக்கப் போட்டு கொண்டு ஓடி வா நாங்கள் அனைவரும் சிரிக்க வேண்டும் உன் நடிப்பையும் பார்த்து’ என்று கட்டளையிட்டார் !.  உடனடியாக ஒரு அறைக்குள்ளே ஓடினேன் டக்கென்று அங்கிருந்து பெரிய சைஸ் ஷூவை போட்டுக் கொண்டு பெரிய பேண்ட் மற்றும் பழைய கோட் மற்றும் சின்ன தொப்பியை அணிந்து கொண்டேன் ஏற்கனவே என் மீசையை சிறியதாக மாற்றிவிட்டு இருந்தேன் காரணம் என் முகத்தில் எப்போதும் இருந்து அந்த குழந்தைத் தன்மையை மறைக்க. நான்கு நிமிடங்களில் தயாராகி விட்டேன் உடனடியாக அங்கு இருந்த மேடையில் ஒடிப் போய் நின்றேன். அப்படி மேக் சென்னட் மற்றும் அங்கிருந்து அனைவரும் சிரித்து விட்டனர்.  ஆமாம் அங்கு தான் சார்லி சாப்ளின் என்கிற நான் புது உருவத்தை அடைந்தேன். மேலும் அங்கு தான் என் வாழ்க்கையின் நோக்கத்தையும் நான் அறிந்து கொண்டேன். அது என்னவெனில், முடிந்தவரைக்கும் அனைத்து மனிதர்களின் முகத்திலும் புன்னகை என்ற கடவுளை வரவழைப்பது”

சாப்ளின்  தனிப்பட்ட வாழ்வு என்பது தனிமை, சோகம், வலிகளாலானது. அவர் பிறந்த போது அவரின் தந்தையும் தாயும் பிரிந்துவிட்டார்கள். அவர் தாய் வேறு ஒரு மணம் செய்து கொண்டார் அதன் மூலம் அவருக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. ஆனால், அந்தத் திருமணமும் அவருக்குத் தோல்வியாகவே முடிந்தது. இதனால் மனம் உடைந்து போன அவரது தாயார் நரம்பியல் மற்றும் மனநோய்களால் பாதிக்கப்பட்ட மனநோய் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இதனால் இளம் வயதிலேயே சாப்ளினுக்கு தனது தாய் மற்றும் தம்பி இருவரையும் சேர்த்து தனது வயிற்றையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தன்னாலே வந்த சேர்ந்தது. ‎முதலில் நிறையச் சின்ன சின்ன  வேலைகள் பார்த்த அவர் கடைசியில் வந்து ஒதுங்கியது தன் தாய் நடித்து ஓய்ந்துபோன அதே நாடக மேடைகளில்தான். சாப்ளின் அப்படியாகத்தான் நடிப்பு தொழிலுக்கு வந்தார் !

‎”என்னால் ஒரு கிறிஸ்துமஸ் தினத்தை மறக்க முடியாது அந்தத் தினத்தில் நான் எனது தம்பியும் ஒரு காப்பகத்திலும் என் தாய் வேறு காப்பகத்திலும் இருந்தோம். நாளைக்கு கிறிஸ்துமஸ் என்று நினைக்கும் போது மனது முழுவதும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தது காரணம் நாளைக்குச் சாப்பிட நிறைய இனிப்புகள் மற்றும் பழங்கள் கிடைக்கும். ஆனால் அன்று இரவு நடந்த சம்பவம் அனைத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. ‎ தெரியாமல் என் கைப்பட்டு தட்டு ஒன்று உடைத்து விட்டது. இதைப் பார்த்த அந்த விடுதிக் காப்பாளர் எதுவும் சொல்லாமல் போய்விட்டார். ஆனால் என் மனம் மட்டும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது. மறுநாள் அனைவரும் வரிசையாகப் போய் இனிப்புகளையும், பழங்களை வாங்க வேண்டும். அந்த வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது ஆனால் என் மனம் மட்டும் நடுங்கிக் கொண்டிருந்தது. காரணம் அங்கு அவற்றைத் தந்து கொண்டிருந்தது அதே விடுதி காப்பாளர் தான். என் முறை வந்ததும் அமைதியாக என்னை உற்றுப்பார்த்தவர்  “என்னை மன்னித்து விடுப் பையா நேற்று நீ செய்த தவற்றுக்கு தண்டனை இதுதான் இன்று உனக்கு எதுவும் கிடையாது போய் வா” என்று அமைதியாகச் சொன்னார். அங்கிருந்து அழுது கொண்டே ஓடிய  நான் அறையை அடைந்து அன்று இரவு முழுவதும் அப்படியே அழுது கொண்டே தூங்கி விட்டேன். இன்று என்னால் எத்தனையோ இனிப்புகளையும், பழங்களையும் வாங்க முடியும் ஆனால் அன்று இரவு நான் இழந்த அந்த மகிழ்ச்சியை என்னால் திரும்ப பெறவே முடியாது”

‎இது அவர் தனது சுய சரிதையில் எழுதியது.

இப்படி தான் அவரது தனிப்பட்ட வாழ்வு கடைசி வரை வலிகள் நிறைந்தாகவேயிருந்தது. முக்கியமாக அவரது காதல் மற்றும் மண வாழ்க்கை, அவருக்கு மூன்று முறை (காதல்) திருமணம் நடந்தது. எல்லாமே தோல்வியாகவே முடிந்தது.  முதல் திருமணம் கிட்டத்தட்ட அவர் ஏமாற்றப்பட்ட திருமண வாழ்வு…

அவரும் மில்டெர்ட் ஹாரிஸ் (Mildred Harris) என்ற நடிகையும் ஒன்றாகப் பழகினார்கள். இதனால் தான் கர்ப்பம் அடைந்ததாக Mildred Harris கூறினார். இதனால் பயந்து போன சாப்ளின் தனது நடிப்பு தொழில் பாதிப்பு அடையாமல் இருக்க அவரை அவசர அவசரமாகத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு மில்டெர்ட் ஹாரிஸ்(Mildred Harris) சொன்னது அனைத்தும் பொய் என சாப்பளினுக்கு தெரிய வந்தது. அது அவருக்குச் சற்று மனவருத்தம் தந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் அவருடன் குடும்பம் நடத்தினார். விரைவில் மில்டெர்ட் ஹாரிஸ் (Mildred Harris) கர்ப்பமுற்றார். சாப்ளின் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்கள் அவை.  வழக்கம் போல அவரைப் பின்தொடரும் சோகம் அவரது இறந்து பிறந்த குழந்தை வழியே மீண்டும் அவரைத் தாக்கியது. ஆமாம் அவரின் குழந்தை உடல் குறைபாடுகளுடன் பிறந்தது; பின்பு இறந்தது. இது சாப்ளினை மிக மிக அதிகமாகவே காயப்படுத்தியது. அந்தக் காயங்களுடன் சாப்ளின் The kid என்ற தனது உலகப்புகழ் பெற்ற சினிமாவை எடுக்கப் போய்விட்டார்.  அந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க தனது இறந்த போன குழந்தையின் நினைவிலேயே எடுத்த படம் என்று சாப்ளின் ஒரு நேர்காணில் கூறியிருந்தார்.

‎”ஒரு பக்கம் என் மனம் முழுவதும் காயங்களுடன் இருந்தாலும் அந்தப் படத்தின் சூட்டிங்கின் போது அதை நான் யாரிடமும் வெளிப்படுத்தவில்லை இன்றுவரை என் மனத்திற்கும் ரொம்ப நெருக்கமான படம் அது மட்டும் தான்! ‎”

இவ்வாறாக அடுத்தடுத்து வந்த மூன்று திருமணங்களும் சாப்ளினுக்கு தோல்வி மற்றும் பெரிய பண நஷ்டத்தைத் தந்தது. ஆனால் தனது சொந்த வாழ்வு பற்றி தனது கவலையை மற்றவர்களுக்குச் சொல்லாமலேயே சாப்ளின் தனது மௌன படங்களின் வழியே இந்த உலகத்தைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

கடைசியாக Oona O’Neill என்ற பெண்மணி மூலம் அவர் வாழ்வில் தேடிய நிம்மதி மற்றும் அன்பு அவருக்கு நிறையக் கிடைத்தது.  அப்போது சாப்பிளினுக்கு 53 வயது Oona O’Neill வெறும் 18 வயது ஆனால், இந்த வயது வித்தியாசம் எதுவும் கடைசி வரை அவர்களின் அன்பான வாழ்வைப் பாதிக்கவில்லை!

இந்தக் காலகட்டத்தில் தான் அமெரிக்க அரசாங்கம் சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் அவர் சோவியத் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.  முக்கியமாக, அமெரிக்காவின் FBI அவர் மீது வழக்குப் பதிவு செய்யததால்  மீண்டும் சாப்ளின் வாழ்வில் சிக்கல்கள். அவர் என்றுமே தான் ஒரு கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று வெளிப்படையாகச் சொன்னது கிடையாது. ஆனால் தன் படங்களில் மூலம் அவர் இயந்திரங்களால், போர்களால், சர்வாதிகாரிகளால் பாதிக்கப்படும் மனிதர்கள் பற்றி பேசினார்.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியை கிண்டல் செய்து The Great Dictator என்ற படம் எடுத்தார். இதில் அவரே ஹிட்லராக நடித்தார். படத்தின் முடிவில் சாப்ளின் ஒரு உரை நிகழ்த்துவார். அந்த உரை  நிச்சயமாக…மனிதக் குலம் என்றுமே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய உரை

இப்படி ஒவ்வொன்றும் இந்த மனிதக் குலத்தின் முன்னேற்றத்திற்காகத் தான் செய்தார்.  அமெரிக்கா அரசாங்கத்தின் சில குற்றச்சாட்டுகளால் அவரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைசியாக அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறி சிறிது காலம் இங்கிலாந்திலும் பின்பு தனது மரணம் வரை சுவிட்சர்லாந்திலும் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

‎காலங்கள் ஓடியது.

சாப்ளினுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளும்..வழக்குகளும் பதிவு செய்த அதே  அமெரிக்க அரசாங்கம் பின்னொரு காலத்தில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது  வழங்குமளவுக்கு மாறியது.  1972 ம் ஆண்டு விருது  வாங்க லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். மேடைக்குச் சென்ற அவருக்குச் சிறப்பு செய்ய  பார்வையாளர்கள், ரசிகர்கள் வழங்கிய   உற்சாக கைதட்டல்கள் மட்டும் கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள்.   விருது பெற்று பின்பு அவர் ஆற்றிய எளிய உரையில் “இன்று நான் மிக மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன் இதற்கு மொத்த அமெரிக்க மக்களுக்கு என் நன்றி”  என்றார்.

சாப்ளின் எப்போதும் சொல்வது  இதுதான்

“நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன் காரணம் இந்த மழை நான் அழும் போது வரும் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் மறைத்து விடும்”

சாப்ளினின் வாழ்ந்த மொத்த வாழ்வும் அப்படி தான் இருந்தது. என்றாலும் அவரின் வாழ்வு.. அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்கும், புன்னகைக்கும் என்றுமே தன்னை ஒரு கோமாளியாக மாற்றிக் கொண்டது.!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button