சிறுகதைகள்
Trending

நிழற்படம்

கி.ச.திலீபன்

05-பெருநகர வாழ்க்கைச்சூழலில் அவ்வப்போது எழும் சலிப்புக்கு ஆளாகியிருந்த ஓர் கணத்தில்தான் சக்தி அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசியே வெகுநாட்களாகிப் போயிருந்த நிலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எங்களது உரையாடல் நீண்டது. எங்கிருந்தோ ஒலிக்கும் ஓர் பாடல் தரும் ஆசுவாசத்தினைப் போல இருந்தது அந்த உரையாடல். காலம் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது என்பதை சக்தி அண்ணனின் உற்சாகமான பேச்சின் வழியே உணர்ந்தேன். ஆம் இங்கே எதுவும் மாறும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சக்தி அண்ணனை கடைசியாகச் சந்தித்தை நினைத்துப் பார்க்கையில் இப்போதும் மனம் கனக்கிறது.    

சித்தத்தெளிவற்று சாலையோரங்களில் சுற்றித்திரிகிறவனைப் போலதான் காட்சியளித்தார் சக்தி அண்ணன். கோபிச்செட்டிப்பாளையம் போய் இறங்கியதுமே அவருக்குத்தான் போன் அடித்தேன். எப்போது சென்னையிலிருந்து ஊருக்கு வந்தாலும் கோபியில் அண்ணனைச் சந்தித்து விட்டுத்தான் வீட்டுக்கே போவேன். இரண்டு நாட்கள் விடுமுறையில் வந்தேனென்றால் ஒரு நாள் அண்ணனுடனும், ஒரு நாள் என் குடும்பத்தாருடனும் கழியும். எங்கள் சந்திப்பில் குடி முக்கிய இடம் பெற்றிருக்கும். மதுப்புட்டிகளும், நொறுவைகளும் சகிதமாய் தடப்பள்ளி வாய்க்காலுக்குப் போனோமென்றால் இருட்டு கட்டும் வரை மதுவோடு முரண்டு பிடித்துக் கொண்டிருப்போம். அன்றைக்கும் நான் அப்படியான திட்டத்தோடுதான் அண்ணனைக் கூப்பிட்டேன். ஜி.ஹெச்க்கு வந்து விடும்படி அவர் சொன்ன போது சிறு ஏமாற்றம். பெரும் கொண்டாட்டட்டத்துக்கான மனத்தயாரிப்புடன் வந்திருந்தவனுக்கு துயரும், வலியும் கலந்த வாசனை மேலெலும்பும் மருத்துவமனைக்குச் செல்வது உவப்பானதாக இருக்கவில்லை.

இருந்தும், யாருக்கு உடல்நலக் குறைவு என்கிற கேள்வியோடுதான் கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். நுழைவு வாயிலை ஒட்டியிருந்த வேப்ப மர நிழலில் அண்ணனுக்காக காத்திருந்தேன். அவ்வளாகத்தின் முன்பகுதியில் சுற்றுச்சுவரை ஒட்டி வரிசையாக நான்கைந்து மரங்கள் குடையென விரிந்து நின்றிருந்தன. அந்நிழலைச் சொந்தம் கொண்டாடும்படி இருசக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. புறநோயாளிகள் பிரிவுக்கு வருபவர்களின் கூட்டம் மிகுந்து, அவ்வளாகமே, அரசு மருத்துவமனைகள் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் காலை நேரப் பரபரப்புக்கு ஆட்பட்டிருந்தது. மருத்துவமனைகளுக்கே உரித்தான மருந்து நெடி நாசியைத் தொட்டது. ஒரு வார்டிலிருந்து இன்னொரு வார்டுக்கு ட்ரேயுடன் செல்லும் செவிலிகள், சக்கர நாற்காலிகளில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் கம்பவுண்டர்கள், கையில் துடைப்பமும் வாலியும் சகிதமாய் ஸ்வீப்பர்கள் தென்பட்டனர். ஊசிக்கு பயந்து அழும் ஏதேனும் ஓர் குழந்தையின் அழுகையைக் கேட்டு விட்டால் முழுவதுமாக மருத்துவமனைச் சூழலுக்குள் என்னைப் பிணைத்துக் கொள்ள முடியும் எனத் தோன்றியது.

அப்போது சற்றும் எதிர்பார்த்திராத தருணமாய், பெருந்துயரின் குறிகளை தன் தோற்றத்தின் வழியே வெளிக்காட்டியபடி சக்தி அண்ணன் வந்து கொண்டிருந்தார். பிடிமானமற்றுத் தளர்ந்திருந்த நடை அத்துயரின் சமிக்ஞை போலப்பட்டது. கருநிற புற்களைப் போல் முகத்தின் பாதியை நிரைக்கும்படியாக தாடி வளர்ந்திருந்தது. நீராடாத சருமத்தின் எண்ணெய்ப் பிசுபிசுப்பு,  வாறாத கேசம் புயலில் அடிபட்ட வாழைமரங்களைப் போல முன்பக்கமாய் சரிந்திருந்தது. அரைக்கை சட்டை அணிந்து, லுங்கி கட்டியிருந்தார். காலில் ரப்பர் செருப்பு. பேரிடரில் சிக்கி உயிர்பிழைத்து வந்தவர் போல் இருந்தார். மெல்லிய அதிர்ச்சி மேலிட அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

முன்பு நாங்கள் ஒன்றாக பணிபுரிந்த போது, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் சவரம் செய்து கொள்வார். முழுக்கை சட்டை அணிந்து அதனை முழங்கை வரைக்கும் மடித்து விட்டிருப்பார். சட்டைக்குப் பொருத்தமான நிறத்தில் காட்டன் பேண்ட் அணிந்து சட்டைப் பொத்தான் வரிசை பேண்ட் பொத்தானின் நேர்கோட்டில் இருக்கும்படி டக் இன் செய்திருப்பார். நான்கைந்து பக்கிள்கள் வைத்திருப்பார். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பக்கிளை இணைத்து பெல்ட் அணிவார். இடது கை மணிக்கட்டில் டைட்டன் வாட்ச். நீள்வட்ட பாக்கெட் சீப்பையும், கைக்குட்டையையும் அவர் எடுத்து வரத் தவறியதே இல்லை. கருப்பு நிறத்தில் அவர் அணியும் ஷூ எந்த நிற உடைக்கும் பொருந்தும்படி இருக்கும்.

அலுவலக நாட்களைத் தவிர விடுமுறை நாட்களில் பெரும்பாலும் டிசர்டும், ஜூன்ஸும் அணிந்திருப்பார். தடப்பள்ளி வாய்க்கால் கரையில் நடந்தேறும் குடிவைபவத்தின் போது கூட பேண்ட் அழுக்காகி விடக்கூடாது என்பதற்காகவே விரிக்க செய்தித்தாளோடு வருவார். தோற்றத்தின் வழியாக தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில் ஆழ்ந்த பிரக்ஞை கொண்ட சக்தி அண்ணனாக அவர் அப்போது இருக்கவில்லை.

வாழ்ந்து கெட்ட அல்லது வாழத்தெரியாது வாழ்ந்த மனிதர்களைப் பற்றி விளிக்கும்போதெல்லாம் “எப்படியிருந்த மனுசன்?” என்று அப்பா குறிப்பிடுவதுதான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. எப்படி இருந்த மனுசன்? என எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன்.

என்னை நெருங்கியதும் எனது தோள் பற்றி “எப்படி இருக்கம்மா” என்றார்…

“நல்லாருக்கண்ணா… நீங்க?”

“இருக்கேன் கண்ணு… “

“இப்படி உங்களைப் பார்த்ததே இல்ல… ஏண்ணா இப்படி?”

“என்ன பண்றதுமா… சோறுதண்ணியப் பத்திக்கூட யோசிக்காம ஓடிகிட்டிருக்கேன்… நல்லாத்தூங்கியே வாரம் ஆகுதுமா”

“என்னாச்சுண்ணா”

“பாப்பாவுக்கு பையன் பொறந்திருக்கான் கண்ணு… நாலு நாளாவது:”

“நல்ல விசயம்ணா”

“நல்ல விசயமாத்தான் ஆயிருக்கணும்… ஆனா எங்கத்த போயி… ஏழு மாசங்கூட முழுசா ஆவல கண்ணு… அப்படி என்ன அவசரம்னு முந்திக்கிட்டுப் பெத்தாளோ”

“கொறைப் பிரசவமாண்ணா”

“ஆமாங்கண்ணு… இன்குபேட்டர்ல வெச்சிருக்காங்க…”

“ஒன்னும் பிரச்சனை இல்லதான?”:

“ ஏழு மாசத்துக்கு அப்புறம்னா கூட காப்பாத்துறதுக்கு நிறைய வாய்ப்பிருக்காம்… இது கஷ்டம்னுதான் சொல்றாங்க”

எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை… ஆறுதல் வார்த்தைகள் மூலம் மனதைத் தேற்ற வேண்டும் என்கையில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றுபட்டது.

“ஒன்னும் பயப்படத் தேவையில்லண்ணா… எப்படியும் காப்பாத்திடுவாங்க” என்று மட்டும் சொன்னேன்.

“எனக்கு அந்தத் தைரியம் கொஞ்சம் ஒட்டிக்கிட்டிருக்கு கண்ணு… ஆனா பாப்பாதான் ரொம்ப உறுதியா நம்பிக்கிட்டிருக்கா… பாரியூர் கோவிலுக்குப் போயி வேண்டுதலைப் போட்டுதான் வந்திருக்கேன். அவளுக்காகவாச்சும் அது பொழச்சு வந்தே தீரணும்…”

“அதெல்லாம் வந்துரும்ணா… இது மாதிரி இருந்து பொழச்சு வந்ததுக நெறைய இருக்கு” என்றேன்.

சக்தி அண்ணன் தனது தங்கை விமலாவை பாப்பா என்றுதான் எப்போதும் அழைப்பார். சீதா கல்யாண மண்டபத்தில்தான் கடந்த ஆண்டு விமலாவுக்குத் திருமணமானது. அவளது திருமணத்துக்கென இரண்டு நாட்கள் விடுமுறையில் வந்திருந்தேன். அண்ணனுக்கு துணையாக திருமண வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டதில் அவரது குடும்பத்தினருடன் அணுக்கமாக முடிந்தது. மணக்கோலத்தில்தான் முதல்முறையாக விமலாவைப் பார்த்தேன். மூங்கில்தடிக்கு புடவையைச் சுற்றியது போல, வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாளா? என்று கேட்கும்படியாக மெலிந்திருந்தாள். மாப்பிள்ளை சேகர் பெருங்கூட்டுக்காரன். உருவப் பொருத்தமற்ற இணையாய் மணமேடையில் நின்று கொண்டிருந்தார்கள். நான் பார்த்த பெரும்பான்மையான தம்பதிகள் அப்படியாகத்தான் இருந்தார்கள். பந்தியில் பரிமாறப்படும் ஊறுகாயைப் போன்றதுதான் உருவப்பொருத்தமும் என்று நினைத்துக் கொண்டேன்.

விமலாவின் திருமணத்தை வெகு நேர்த்தியாக நடத்தி முடித்து விட்டதில் சக்தி அண்ணனுக்கு அளவற்ற மகிழ்ச்சி. அன்றைய இரவில் மூன்றாவது பியரை கவிழ்த்து விட்டு பாட்டிலை விட்டெறிந்தபடியே சொன்னார்.

“அடுத்ததா வீட்ட மட்டும் கட்டிட்டேன்னா லைஃப் செட்டில்டா” என்று.

அடுத்த நான்கு மாதங்களிலேயே நஞ்சகவுண்டம்பாளையத்தில் அவருக்கென இருந்த மூன்று செண்ட் இடத்தில் வீட்டைக் கட்டி முடித்தார். இரண்டு பெட்ரூம்கள், ஹால், கிச்சன், இரண்டு பாத்ரூம்கள் என விரிந்திருந்த வீட்டின் புகைப்படங்களை எனக்கு அனுப்பியிருந்தார். வீடு புண்ணியேஜனைக்கு அவர் அழைத்திருந்தும் வர முடியாத சூழலில் இருந்தேன். “உங்க கல்யாண சாப்பாடு சாப்பிட அவசியம் வந்துடுறேண்ணா” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். “ஆறு மாசம் போகட்டும் கண்ணு… முடிச்சிடலாம்” என்று பதில் தந்திருந்தார். அடுத்த சில நாட்கள் கழிந்து பேசுகையில் கூட திருமணப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறியிருந்தார்.

துடுப்புகள் கொண்டு செலுத்தப்படும் படகினைப் போல சக்தி அண்ணனது வாழ்வும் சீரான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால், சில நேரங்களில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாமல் அமைதியாக நகர்ந்து போவதை இந்த வாழ்வே விரும்புவதில்லை போல.

எனது அண்மையை, பற்றுதலை அண்ணனுக்கு உணர்த்தும்படி அவரது வலது கையை இரு கைகளாலும் பிணைத்துக் கொண்டேன்.

“பாப்பாவ நெனைச்சாந்தாம்மா கஷ்டமா இருக்கு… எதுவும் வேணாம் எம்புள்ளைய எங்கிட்டக் கொடுத்துடுங்க… எப்படியுங் காப்பத்திடுறேன்னு அழுவுறா… அவளே கொழந்த மாதிரிதான் எனக்கு… அவளுக்கு ஒரு கொழந்தையான்னு கேட்டேன். இப்ப அதுவும் இல்லாம போயிருமோனுதான்…”

“வேண்டுதலைப் போட்டிருக்கீங்கல்ல… தைரியமா இருங்கண்ணா… ”

“மருமகனைப் பார்த்தேன் கண்ணு… இன்குபேட்டர்ல இருக்கிற கொழந்தைய ஸ்க்ரீன்ல காட்டுனாங்க… அவன் கண்ணே தொறக்கல… இதோ இந்தக் கைச்சோடுதான் இருக்கான். வெரல் நுனியளவுக்குதான் மூக்கு இருக்கும் அதுல ட்யூப் போட்டு… கொடுமைம்மா இதெல்லாம்… இப்படியொரு பொறப்பா வேணும் அவனுக்கு”

நான் எதுவும் சொல்லாமல் அதனை ஆமோதிப்பது போல லேசாகத் தலையசைத்தேன். பற்றியிருந்த கைகளில் வியர்வையின் நீர்மத்தை உணர்ந்ததும், விடுவித்துக் கொண்டேன்.

“எல்லாமே நல்லாத்தான் போச்சு கண்ணு… அந்தத் தெள்ளவாரிக் குடும்பத்துக்குப் பொண்ணக் கொடுத்தது ஒன்னுதான் நாம்பண்ணப் பெரிய தப்பு… அன்னைக்கே எங்காயாகாரிகிட்ட சொன்னேன்… அந்த தரித்திரம் புடிச்ச குடும்பத்து கூட சம்மந்தம் வேணாம்னு… சொந்தம் வுட்டுப் போகக்கூடாது… மயிறு… மட்டைன்னு எடுத்து நீட்டினா பாரு…”

”ஏதும் பிரச்சனையாண்ணா”

“கட்டிக் கொடுத்ததுல இருந்தே பிரச்சனைதான் கண்ணு… பையனோட அம்மா இருக்காளே அந்தத் தொண்டுமுண்டை பணத்துக்குப் பறப்பெடுக்குறவ… பீக்குள்ள எட்டணா இருந்துச்சுன்னாலும் கைய விட்டு எடுத்து கழுவி வெச்சுக்குவா… சீதனத் தொகை பாக்கி தர வேண்டியிருந்துச்சு…அதுக்குள்ளதான் வீடு கட்ட ஆரம்பிச்சுட்டனே… அதுக்கே காசு பத்தாம கடன் வாங்க வேண்டீதா போயிடுச்சு… கொஞ்சம் சிரமம் எப்படியுங்கொடுத்துடுறேன்னு அவகிட்ட  சொல்லிட்டேன்… ஆனா அந்தக் கண்டாரோலி இதை மனசுல வெச்சுக்கிட்டே பாப்பாவ பாடாய்ப்படுத்தியிருக்கா”

“எத்தனைண்ணா தரணும்”

“பதினைஞ்சு பவுனும் ஒரு லட்சம் ரொக்கமும்னு பேசுனது… கல்யாணத்தப்பவே பத்து பவுனும், ரொக்கமும் கொடுத்தாச்சு… பாக்கி அஞ்சு பவுனுக்குத்தான் இத்தனையும். இங்கயே இவ எல்லா வேலையும் இழுத்து போட்டுக்கிட்டு செய்வா… அங்க போய் பண்ணாம இருப்பாளா… இவ என்ன பண்ணாலும் நொட்டை சொல்லிக்கிட்டே இருக்கிறது… எதுக்கெடுத்தாலும் கரிச்சுக்கொட்டுறது.”

“வீட்டுக்காரு எதுவும் கேட்க மாட்டாரா?”

“அவன் ஆளுதான் கெடாயாட்டம்.… சரியான  ஊமக்கொட்டான்…  எதுவும் பேச மட்டான்… முணுக்கு முணுக்குன்னே இருப்பான்… பாப்பா உண்டானதும் அவங்கிட்ட ஆசையா சொல்லிருக்கு… அதுக்கு அவன் எவங்கோடயோ படுத்து உண்டான மாதிரி பிடிப்பே இல்லாம பேசிட்டுப் போனானாம்… பாசம் வேணும் கண்ணு… நாளைக்கு நமக்கு ஏதாச்சும்னா பொண்டாட்டிதான் கடைசி வரைக்கும் இருப்பான்ற நெனைப்பு வேணும் மனுசனுக்கு… இதுவரைக்கும் ஒரு படத்துக்குக் கூட்டிட்டுப் போயிருப்பானா அவன்… மாசமா இருக்குற புள்ளைக்கு எதாச்சும் வாங்கிக் கொடுப்பமேன்னு…. எதுவுங்கெடையாது… நாந்தான் ஜி.ஹெச்சுக்கு செக்கப்புக்குக் கூட்டிட்டு வருவேன்… எல்லாம் பண்ணுவேன்… நம்ம தங்கச்சிக்கு நம்ம பண்ணாம யாரு பண்ணுவாங்குறது வேற விசயம்… இவன் பொண்டாட்டிக்காக என்ன பண்ணான்றது வேணும்ல“

“அது ரொம்ப முக்கியம்ணா”

“அவங்காயாகாரி… அவ குடும்ப வாரிசுதான வயித்துல வளருது… அனுசரணையா நாலு வார்த்த பேசிருப்பாளா? எப்பப்பாரு “என்னத்த பெருசா கொண்டு வந்துட்டாளாம்னு” சாடை பேசிட்டே இருப்பாளாம். நிம்மதி இருக்கணும் கண்ணு… அப்படி இல்லைன்னா எதுவும் வெளங்காது. இன்னைக்கு கொழந்த பொழைக்குமான்னு தெரியாம கெடக்குது… அவங்காயாகாரி ஒரு எட்டு வந்து பார்த்திருப்பாளா?”

“வீட்டுக்காரராச்சும் வந்தாப்லயா?”

“ஒரே ஒரு நாள்தான் வந்தான் அவன்… சாணிப்பொணமாட்டம் மொகத்துல எதையுங்காட்டல… என்ன மச்சான் நொன்ன மச்சான்னு நாலு வார்த்த பேசிட்டு அவம்பாட்டுல கெளம்பிட்டான்”

“கொடுமைய…”

“எவனும் தேவை மயிரு கெடையாது… எந்தங்கச்சிய நான் பார்த்துப்பேன்… வலி புடிச்சதும் எனக்குதான் போன் பண்டுனா… கார் வெச்சு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு வந்ததுல இருந்து எல்லாத்துக்கும் நாந்தான் ஓடுறேன்… அம்மாதான் அவகூட ஒத்தாசைக்கு இருக்கு… அதுக்கும் பிரசரு… எல்லாத்தையும் சமாளிக்க வேண்டியிருக்கு கண்ணு” என்றார்.

சில நொடிகள் எங்களுக்குள் நிசப்தம் நிலவியது. ஆற்றுப்படுத்துவதைப் போல  வேப்பமரக் காற்று எங்கள் மேல் படர்ந்து விலகியது. இலைகளின் சலசலப்பினை மட்டும் கேட்டபடி நின்றிருந்தேன். இந்நேரத்தில் அண்ணனுக்கு ஊன்றுகோலாய் இருந்தாக வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தேன். மகிழ்ச்சியான தருணங்களின் போது மட்டும் உடனிருப்பேன் என்று சொல்வது குரூரத்தின் உச்ச நிலை. நடுங்க வைக்கும் குளிர்கணத்தில் அருந்தும் தேநீரைப் போல நெருக்கடியான சூழலில் உடனிருந்து கதகதப்பை வழங்க வேண்டும். நான் ஆறுதலாய் அவரது தோள் பற்றினேன். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதைப் போல் பெருமூச்சு விட்டார்.

மருத்துவமனையில் புதிதாக எழுப்பப்பட்ட கட்டடங்களுக்கு நடுவே பழைய கட்டடங்களும் இருந்தன. புறநோயாளிகள் பிரிவுக்குப் பின்புறத்தில் பிரசவ வார்டு இருந்தது. பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் அந்த வார்டின் முன்பகுதியில் நின்றிருந்தோம். வார்டினுள்ளிருந்து சக்தி அண்ணனின் அம்மா வெளிவந்தார். எப்போது வந்தேன் என வினவுவதைப் போல என்னைப் பார்த்தவர்

“எப்படி இருக்கப்பா” என்றார்.

“நல்லா இருக்கணுங்…” என்று மட்டும் சொன்னேன். பதிலுக்கு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்பது அந்த சூழலுக்கு ஒவ்வாதது என்பதை உணர்ந்து அதுமேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

“தூங்குறாளா” சக்தி அண்ணன் கேட்டார்…

“சும்மாதான் படுத்திருக்கா… சாப்பிட வெச்சேன்… நாலு இட்லியக் கூட முழுசா திங்க மாட்றாடா… ரொம்ப வீக்கா இருக்கான்னு நர்ஸ்லாம் திட்றாங்க…”

“அவ என்னைக்கு நல்லாத் தின்னிருக்கா… திங்காம போயிதான் இப்படித் தட்டுக் குச்சியாட்டம் கெடக்குறா…”

“இப்பத்தான் நர்ஸு வந்து உன்னைக் கேட்டுப் போச்சு…. பெரிய டாக்டர் உன்ன பாக்கனும்னு சொன்னாங்களாம்”

“எதுக்குன்னு ஏதாச்சும் சொன்னாங்களா”

“அதெல்லாம் எதுவும் சொல்லல… மறுபடியும் ரத்தம் ஏத்தனும்னு பேசிட்டிருந்தாங்க… அதுக்காக கூப்புடுறாங்கன்னு நெனைக்குறேன்… போய் பார்த்துட்டு அப்படியே சாப்புட்டு வந்துருங்க…”என்றார்.

சக்தி அண்ணனைப் போலவே நானும் சிறு பதட்டத்துக்கு ஆளாகியிருந்தேன். தலைமை மருத்துவர் அறைக்குப் போகிற போதே சக்தி அண்ணன் கேட்டார்

“தம்பி… சீஃப் டாக்டர் பாக்கணும்னு கூப்பிடுறாங்கன்னா அப்படி ஒன்னும் இருக்காதுல்ல”

“அப்படியெல்லாம் இருக்காதுண்ணா… சும்மா ஜெனரலா எதாச்சும் கன்சல்ட் பண்ணுவாங்க”

“என்னன்னு தெரியல… இந்தக் குழந்த தங்காதோன்னு ஒரு பயம் இருந்துக்கிட்டே இருக்கு கண்ணு… இப்பக்கூட அப்படித்தான் மனசு அடிச்சுக்குது… இந்த ஒரு தடவை மட்டும் எப்படியாச்சும் இந்தக் கொழந்தய காப்பாத்தி விட்ரு… அதுக்கப்புறம் எந்தக் கொறையும் இல்லாம நான் பார்த்துக்குறேன்னு பாரியூர் கோயில்ல வேண்டுனேன்” என்றபோது அவர் நா தளுதளுத்தது.

நான் எதுவும் சொல்லாமல் பற்றுதலாய் அவர் தோள் மீது கைபோட்டபடியே நடந்தேன். பிரசவவார்டைத் தாண்டி வடக்கே இருந்த புதிய கட்டடத்துக்கு வந்தோம். அங்கே தலைமை மருத்துவர் அறையில் ஏற்கனவே ஒருவர் இருந்ததால் வெளியே காத்திருந்தோம்.

தைரியம் கொடுக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கையில் முரட்டுத்தனமான நம்பிக்கைக்கு ஆட்படுகிறோம் அல்லது அதனை வலிந்து நமக்குள் திணித்துக் கொள்கிறோம். தலைமை மருத்துவர் அறைக்குள் நுழையும் வரையிலுமே நான் அந்த முரட்டுத்தனமான நம்பிக்கைக்குள்தான் பீடிக்கப்பட்டிருந்தேன்.

மத்திம வயதில் இருந்த அந்தப் பெண் மருத்துவர் வெள்ளை கோட்டை தனது நாற்காலியின் பின்புறத்துக்கு அணிவித்து விட்டு புடவையில் அமர்ந்திருந்தார். விசயத்தை எப்படிச் சொல்வது என்கிற யோசனையும், சொல்லியாக வேண்டிய பொறுப்புணர்வும் ஒரு சேர அவர் பேசினார்.

“சொல்றத பதட்டப்படாம கேளுங்க” என்று அவர் சொன்னபோதே எனக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது.

“ஏற்கனவே சொன்னதுதான்… இது ஹை ரிஸ்க்னு… ஏன்னா ஏழு மாசத்துக்குள்ளயே பொறந்திருச்சு… எங்களோட பெஸ்ட்ட பண்ணோம்… முடிஞ்ச வரைக்கும் காப்பாத்த முயற்சி பண்ணோம்… .”

“கொழந்த…” பதட்டமும் பரிதவிப்புமாய் சக்தி அண்ணன் கேட்டார்.

“எஸ்… கொழந்த இறந்துடுச்சு… ஐ எம் சாரி…. ஐ அண்டர்ஸ்டுட்… பட் ப்ராக்டிக்கலி இது எங்களைத் தாண்டி நடந்த விசயம்”

ஒரு நுண்விநாடியில் உடலின் அடிப்பகுதியிலிருந்து மூளைக்கு மின்சாரப் பாய்ச்சல் நிகழ்ந்தது. இதயத்துடிப்பு அதிகரித்தது. சற்றே தலை சுற்றலை உணர்ந்தேன். கண்ணை மூடிக்கொண்டு உடலை சமநிலைக்குக் கொண்டு வர யத்தனித்தேன். சக்தி அண்ணனைப் பார்த்தேன்… அவர் கனத்த மௌனத்துடன் அமர்ந்திருந்தார். வெளிப்படுத்த முடியாமல் சொற்கள் தடுமாறுவதைப் போல் அவர் எதையோ சொல்ல வரும் தோரணை வெளிப்பட்டது. சற்றைக்கெல்லாம் கண்களிலிருந்து நீர் வழிந்தோட வாய் விட்டு அழ ஆரம்பித்து விட்டார்.

நான் அவரைத் தேற்றும் விதமாய் மீண்டும் அவர் தோள்பற்றினேன். அப்படியே என் மீது சாய்ந்து அழுதார். ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகள் சட்டையில் ஈரப்புள்ளி வைத்தன.

அவரை அணைத்தபடியே பிரசவ வார்டின் முன்பகுதிக்குக் கூட்டி வந்தேன். நாங்கள் வந்த கதியைப் பார்த்ததும் ஏதோ ஒன்று புலனானது போல சக்தி அண்ணனின் அம்மா எங்களை நெருங்கி வந்தார். என்னிலிருந்து விலகி அம்மாவின் தோள் சாய்ந்தபடி வெறும் அழுகையை மட்டுமே தகவலாக சொன்னார் சக்தி அண்ணன். நிச்சயமாய் அவருக்கு அது புரிந்திருக்கும் என நம்பினேன்… அவரும் வெடித்து அழ ஆரம்பித்தார். இம்மருத்துவமனை பல நூறு கண்ணீர்களுக்குப் பழக்கப்பட்டிருந்தது. சுற்றியிருந்தவர்கள் அந்த துர்நிகழ்வின் வாடையை நுகர்ந்து விட்டவர்கள் போல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இருவரையும் ஆற்றுப்படுத்த வேண்டிய இடத்தில் நான் இருந்தேன். அந்த சூழலை எப்படிக் கையாள்வது என்பதில் எனக்கு முதிர்ச்சி இல்லாததால் அமைதியாக உடன் நின்றிருந்தேன். அப்போது வார்டினுள்ளிருந்து விமலா வெளியே வந்தாள். அநேகமாக இருவரின் அரற்றலையும் கேட்டுதான் வந்திருப்பாள் என நினைத்தேன். திருமணத்தின்போது நான் பார்த்ததைக் காட்டிலும் மேலும் மெலிந்திருந்தாள். நைட்டி அவளுக்குப் பொருத்தமற்ற உடையாக இருந்தது. இவர்களை நெருங்குவதற்குள்ளாகவே அவளும் அழத் தொடங்கியிருந்தாள்.

விமலாவை மார்போடு அணைத்து ஆசுவாசப்படுத்தினார்.

எப்படிப்பட்ட சொற்களாலும் தன்னை ஆற்றுப்படுத்திவிட முடியாது என்பது போல் விமலா தொண்டை அடைக்க அழுதாள். வார்த்தைகள் ஏதும் இல்லாமல் நிகழ்ந்திட்ட சம்பாஷணை ஒன்றின் சாட்சியமாய் நின்று கொண்டிருந்தேன்.

சக்தி அண்ணனின் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்து விமலாவின் கணவன் சேகருக்குக் கூப்பிட்டேன். அவன் அழைப்பை ஏற்கவில்லை. அடுத்து சக்தி அண்ணனின் சித்தப்பா மகன் செல்வக்குமாருக்குக் கூப்பிடுவதற்காக எண்ணைத் தேடினேன். விமலா திருமணத்துக்கு வந்திருந்த போது செல்வகுமாருக்கும் எனக்கும் மரியாதை உள்ளடங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது.

செல்வக்குமாருக்குத் தகவலைத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கும்போதே சேகரின் அழைப்பு காத்திருப்பில் வந்தது. அந்த இணைப்பைத் துண்டித்த பிறகு சேகருக்குக் கூப்பிட்டேன். ஆயுள் காபபீட்டுக் கழக முகவரின் பாலிசி கோரும் அழைப்பினைப் போல அலட்சியமான தோரணையில்தான் பதில் தந்தான். கோவைக்கு ஒரு வேலையாக சென்றிருப்பதாகவும், மாலையில் வந்து விடுவேன் என்றும் சொல்லி விட்டுத் துண்டித்தான்.

அந்த உரையாடலின் தொணியை என்னால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. இன்குபேட்டரின் கதகதப்பில் கிடந்து வாழ்தல் நிமித்தம் போராடி ஓய்ந்த உயிரின் பிரிவால் எவ்வித சலனத்துக்கும் ஆட்பட்டிராத அளவு இறுக்கமான மனிதர்கள் வாழ்கிறார்களா? என்கிற ஐயப்பாடு கொண்டேன்..

விமலாவை அம்மா வார்டுக்குள் கூட்டிச் சென்றார். சக்தி அண்ணனிடம் போனை நீட்டி செல்வகுமாருக்குத் தகவல் தெரிவித்து விட்டதைச் சொன்னேன். சற்று நேரத்துக்கெல்லாம் அப்பாவோடு, செல்வகுமார் ஆர்.எக்ஸ் 100 பைக்கில் வந்திருந்தார். சக்தி அண்ணனின் சித்தப்பா நரைத்த முடியுடனும், மழிக்கப்பட்ட, ஒடுக்கு விழுந்த முகமுமாய் வெள்ளை வேட்டி சட்டையில் வந்திருந்தார். சட்டைப் பாக்கெட்டில் அவர் சார்ந்திருக்கும் கட்சித்தலைவியின் புகைப்படம் சன்னமாய்த் தெரிந்தது. உடன் சில நூறுரூபாய்த் தாள்களும். அவர்தான் அடக்கத்தை முன்னின்று நடத்த வேண்டிய பொறுப்பில் இருந்தார்.

“நம்ம வீட்டுக் கொல்லையிலேயே பொதைச்சிடலாம்… பொறந்த கொழந்தைய சுடுகாட்டுக்குக் கொண்டு போறதெல்லாம் ஆகாது… பெரிசா சடங்குக ஏதும் பண்ணத் தேவையில்லை… எல்லா சொந்தத்துக்கும் தகவல் கொடுக்கணும்ங்கிற அவசியம்லாம் கெடையாது… காதும் காதும் வெச்ச மாதிரிதான் இதைய முடிக்கணும்… கொழந்தையோட அப்பனுக்கு மட்டும் மொட்டை போட்டு மீசையை செரைக்கலாம்…. அதுவும் கட்டாயமெல்லாங் கெடையாது….” என்றார்.

நான் சேகருக்குக் கூப்பிட்டுத் தகவல் சொல்லி விட்டதை அப்போதுதான் சொன்னேன்.

“வேலையெல்லாம் அவன் முடிச்சுட்டு அப்புறமேட்டு வரட்டும்… எவனும் தேவையில்லை எனக்கு” என்றார் சக்தி அண்ணன்.

“இது தப்பாகிப் போயிடும் சக்தி… ஆவேசத்துல முடிவு பண்ணாத எதையும்” என்றார் சித்தப்பா.

“அப்பனுக்கு வதுலா தாய்மாமன் நான் மொட்டை போட்டுக்கட்டா…. எதுக்கும் வராதவன் இதுக்கொன்னும் வரத்தேவையில்ல… நம்ம பண்றோம் சித்தப்பா… அவ்ளோதான்”

சித்தப்பா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சக்தி அண்ணனின் தீர்க்கத்தின் முன் அவை எடையிழந்த வார்த்தைகளாயின.

அடக்கம் செய்வதற்கான வேலைகளுக்கு செல்வக்குமாரைப் பணித்தார். ஏற்பாடுகளின் நிமித்தம் ஃபோனை காதில் வைத்துப் பேசியபடியே, வண்டியை முறுக்கிக் கிளம்பிப் போனார் செல்வக்குமார்.

விமலா அதுவரையிலும் அழுகையை நிறுத்தியிருக்கவில்லை. வார்டினுள்ளிருந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மகவை ஈன்றெடுத்த தாயார் எல்லாம் அவளை அனுதாபத்தோடு பார்த்திருக்கக்கூடும். சிலர் தனக்கு நேர்ந்து விட்ட துயரெனக் கருதி அழுதிருக்க வாய்ப்புகள் இருப்பதாக நம்பினேன்.

தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டு குழந்தை எடுத்து வரப்பட்டது. வாழ்வின் ருசிகரம், நிலையாமை பற்றிய பரிதவிப்பு, உறவுகளின் மேன்மை என எதனையும் அனுபவிக்க விரும்பாமல் நான்கே நாட்களில் தனது இருப்பை நிறைவு செய்த கொண்ட அந்த அவசரக்குடுக்கையின் முகம் மட்டும் வெளியே தெரியும்படி துணியால் சூழப்பட்டிருந்தது. பரவசத்தோடு அப்பிஞ்சை கையில் ஏந்த வேண்டிய சக்தி அண்ணனோ பறிகொடுத்துவிட்ட ஏக்கத்தில் குழந்தையைத் தாங்கிப் பெற்ற காட்சியை பார்க்க பெரும் சங்கடத்துக்கு ஆளானேன்.

உண்ட மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருப்பதைப் போல் இருந்த அந்தப் பிஞ்சின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டார். தாய்மாமனின் வழியனுப்புதலாக அதனை நினைத்துக் கொண்டேன். விமலாவின் இறுதி ஸ்பரிசத்துக்காக குழந்தை வார்டுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எழவிருந்த அழுகையின் பேரோசையை எதிர்பார்த்தே நின்றிருந்தேன். சக்தி அண்ணன் அதனைக் கேட்கும் திராணியிழந்து நகர்ந்து போனார்.

செல்வகுமாரின் ஏற்பாட்டில் ஆம்னி கொண்டு வரப்பட்டது. குழந்தையை சக்தி அண்ணன் மடியில் தாங்கியபடி முன் சீட்டில் அமர்ந்து கொண்டார். நானும், சித்தப்பாவும் பின் சீட்டில் ஏறிக்கொண்டோம். விமலாவை டிஸ்சார்ஜ் செய்ய முடியாதபடியால் அம்மாவும், விமலாவும் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியானது. வீட்டுக்குப் போகும் வரையிலும் நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மௌனத்தின் வழியே உணர்கிற அமைதி ஒன்றே அப்போதைய தேவையாய் இருந்தது.

நஞ்சகவுண்டம்பாளையம் திருவிக தெருவினுள் ஆம்னி நுழையும்போதே சக்தி அண்ணனின் வீட்டின் முன் சனங்கள் குழுமியிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஆம்னி வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டதும் நான் இறங்கி சக்தி அண்ணனுக்கு கதவைத் திறந்து விட்டேன். இப்படியொரு சூழலிலா இந்த வீட்டில் எனது வரவு இருக்க வேண்டும் என்று சங்கடமாயிருந்தது. சக்தி அண்ணன் வீட்டுக்குள் நுழைந்ததுமே சலசலப்புகள் ஓய்ந்து விட்டிருந்தன. எல்லோரும் குழந்தையின் மீதான கரிசனப் பார்வையைப் படர விட்டிருந்தனர். வீட்டின் கொல்லையில் குழி வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு குறைவான அளவிலேயே ஆட்கள் நிற்க முடியும் என்பதால் பாதிப்பேர் பக்கவாட்டில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தனர்.

குழிக்குப் பக்கத்தில் வெள்ளைத் துணியொன்று விரிக்கப்பட்டு அதில் குழந்தை கிடத்தப்பட்டது. அதற்கு அண்மையில் நானும் சக்தி அண்ணனும் நின்றிருந்தோம். சித்தப்பாவும், செல்வக்குமாரும் கொஞ்சம் தள்ளி இடப்புறமாக நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது சக்தி அண்ணன் தனது சோனி எரிக்ஸன் மொபைலை என்னிடம் தந்த போது அதனை சம்மந்தமே அற்ற செய்கையாக உணர்ந்தேன். சில நொடிகள் கழிந்த பிறகுதான் சொன்னார்.

“தம்பி… அவன நல்லா மொகம் தெரியுற மாதிரி ஒரு ஃபோட்டோ எடேன்” என்றார்.

விநோதமும், அதிர்ச்சியும் மேலிட அவரைப் பார்த்தேன். ஏன் என்று வினவுகிற தொணி அப்பார்வையில் வெளிப்பட்டிருக்கக் கூடும்.

“எடு… எல்லாம் ஒரு ஞாபகத்துக்குத்தான்” என அதற்கு பதிலுரைத்தார்.

மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமேதான் மனிதர்கள் திரும்பத் திரும்ப நினைவு கூற விரும்புவார்கள் என்று உறுதியாக நம்பியிருந்த எனக்கு அது முரணாய்த் தெரிந்தது. இருந்தும் சக்தி அண்ணனின் விண்ணப்பத்தை நிராகரிக்க இயலாத சூழலில் இருந்தேன். கொஞ்சம் முன் சென்று குனிந்தவாக்கில் குழந்தையின் முகத்தை முதலில் படமெடுத்தேன். அடுத்ததாக வேறு வேறு கோணங்களில் நான்கைந்து புகைப்படங்கள் எடுத்தேன். அச்செய்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் கூட்டத்தில் சலசலப்புகள் எழுந்தன.

“இதெல்லாம் பண்ணக்கூடாது சக்தி” என்று சித்தப்பா கண்டிப்போடு சொன்னார்.

“இருக்கட்டும்… அதனால ஒன்னும் தப்பில்ல” என்று சக்தி அண்ணன் அவரை அமர்த்தினார்.

சலசலப்புகள் ஓய்ந்த பிறகு, எடுத்த புகைப்படங்களைப் பார்த்தேன். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை தொட்டிலின் திரை விலக்கிப் பார்த்தது போல் இருந்தது. இந்த உயிர் இங்கு வந்து மறைந்ததற்கான ஓர் அத்தாட்சி என்றாலும் இவற்றைப் பார்க்கையில் துயரின் கனம் கூடும் என்றேபட்டது. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான் மொபைலை அவரிடம் கொடுத்தேன். சட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.

குழி வெட்டி முடிக்கப்பட்டதும் வெட்டியவரே குழிக்குள் இறங்கி நின்று கொண்டார். சக்தி அண்ணன் குழந்தையைத் தாங்கி எடுத்து அவரிடம் கொடுத்தார். இரண்டடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த அக்குழியில் குழந்தை இறக்கப்பட்டது. அதனைக் கிடத்தியதுமே அவர் மேலேறி விட்டார். சக்தி அண்ணன் குந்த வைத்து உட்கார்ந்தபடி சில நொடிகள் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரது விசும்பல் ஒலி செவியை எட்டியது. மூன்று முறை மண்ணள்ளிப்போட்டு விட்டு சித்தப்பாவிடம் சென்று அவரைக் கட்டியணைத்தபடியே கதறித் துடித்தார்.

“எம் மருமவன் சித்தப்பா” என உடைந்து போன குரலில் அவர் சொன்னது கேட்டது. சித்தப்பாவும் அவரைத் தேற்றும் விதமாய் முதுகில் மெல்லத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். குழந்தையின் உறவு முறையில் குறிப்பிட்ட சிலர் மண்ணள்ளிப் போட குழி மூடப்பட்டு நிரவப்பட்டது.  கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்து சென்றது.

இரண்டு நாட்கள் கழிந்து காரியத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவான பிறகு அன்றைக்கு இரவே நான் என் வீட்டுக்குக் கிளம்பினேன்.

“ஏண்ணா அந்த ஃபோட்டோவ ப்ரிண்ட் போடப்போறீங்களா?” என்று மட்டும் கேட்டேன்.

“இல்ல கண்ணு… அப்படி யாரும் பண்ண மாட்டாங்க… ஒட்டுமொத்தமா இல்லாம போய்ட்டானேன்னு ஆக வேணாம்னுதான்” என்றார்.

நான் மேற்படி எதுவும் கேட்கவில்லை. அதனைக் கேள்விக்குட்படுத்துவது அச்சூழலுக்கு பொருத்தமற்றது என்று மட்டும் பட்டது. துக்க வீட்டில் இருந்து கிளம்பும்போது போய் வருகிறேன் எனச் சொல்லக்கூடாது என்கிற சம்பிரதாயத்தின்படி யாருக்கும் சொல்லாமல் கிளம்பினேன்.

அதற்குப் பிறகான இந்த இரண்டாண்டுகளில் பணியிட மாற்றம், காதல் முறிவு என எனது அன்றாடம் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரியின் போக்கில் கழிந்து கொண்டிருந்த படியால் பலரது தொடர்புகளில் இருந்து விலகியிருந்தேன். அது தற்செயலானதுதான். சீதனத்தில் தர வேண்டியிருந்த 5 பவுனை ஏற்பாடு செய்து கொடுத்ததில் விமலாவின் வாழ்க்கை எவ்வித நிலைகுழைவும் இல்லாமற் போய்க்கொண்டிருப்பதாகவும், சமீபத்தில்தான் அவள் ஓர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்றும் சொன்னார். மகிழ்ச்சியான செய்தி என்றேன். பெருந்துறை அருகே பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள உறவுக்காரப் பெண்ணோடு தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அவசியம் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்துவிடுவதாகச் சொன்னேன். உரையாடலின் இறுதிக் கணத்தில் கேட்டேன் “அந்த சோனி எரிக்சன்லயா இப்ப பேசிக்கிட்டிருக்கீங்க” என்று… சில விநாடிகள் எங்களுக்குள் அமைதி நிலை கொண்டிருந்தது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. வாழ்த்துக்கள் திலீபன் ,உணர்சிகளை தூண்டும் கதை உங்களின் மொழி நடை அருமை !தொடர்க !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close