தொடர்கள்

காதலெனும் முடிவிலி – 2

ஷ்ருதி.ஆர்

1. கத்திப் பறித்து நீ பூவைத் திணிக்கிறாய் – தொழுதல் கலை

 

எனக்கொரு முரடனைத் தெரியும். அதிகம் பேசி பார்த்ததில்லை, சிறிதும் சிரித்து  பார்த்ததில்லை. தர்மத்திற்குக் கூட யாருக்கும் கனிந்து விடமாட்டேன் என்பான். அவனுக்கொரு காதலி இருந்தாள். ஊரெல்லாம் அவளை ஏதோ சபிக்கப்பட்டவளை போல் பார்க்க அவள் சலனமேதும் இல்லாமல் நிம்மதியாகவே தெரிந்தாள்.

“அவனோடு எப்படி வாழற நீ?  உன்கிட்டையும் இப்படி தான் நடந்துப்பானா?” என்று அக்கம் பக்கம் விசாரிக்கும் போது ஒரே பதில் தான் வரும்.

“அவர் குழந்தை மாதிரி! எனக்கு மட்டும்!!”

சில புலப்படாத உறவுகள் வெளிப்படுத்தும் உன்னதங்கள் அழகில்லையா?

மனித இனத்திற்கு மட்டும் காதலிக்க தெரிந்திருக்கவில்லையெனில் அவனது பலவீனங்கள் அவனை அழித்திருக்கும் . சராசரி பிழைகள் கூட அவனை சிறைப்படுத்தி புதை குழியில் தள்ளியிருக்கும் . மீட்க காதலென்று ஒன்று இருப்பதால், குறைகள் அலங்கரிக்கப்படுகிறது, தவறுகள் மன்னிக்கப்படுகிறது.

மனித இனத்திற்கு மட்டும் காதலிக்க தெரிந்திருக்கவில்லையெனில் அவனது பலவீனங்கள் அவனை அழித்திருக்கும் . சராசரி பிழைகள் கூட அவனைச் சிறைப்படுத்தி புதை குழியில் தள்ளியிருக்கும் . மீட்க காதலென்று ஒன்று இருப்பதால், குறைகள் அலங்கரிக்கப்படுகிறது, தவறுகள் மன்னிக்கப்படுகிறது.

முன்கோபங்களும் மூர்க்கங்களையும் தோற்கவல்ல இணை கிடைக்கும்வரை தான் இந்தச் சிறுமையில் உழல வேண்டி இருக்கும். அதை மீட்டெடுக்கும் புனித உயிரைக் கண்டடைந்த நேரம் நம்மில் புதைந்திருக்கும் புதியதோர் “நம்மை” நாமே வெளிப்படுத்துவோம். சிக்கலான குணங்களை கொண்ட மனிதர்களை, அவர்களுக்குள்ளே இருக்கும் மெல்லிய அன்பு பேணும் அதிசயங்களை எழுத்தில் உயிர்ப்பித்ததில் ‘ஜேன் ஆஸ்டென்’  மிக முக்கியமானவர்.  உலகளாவிய வாசகர்களில் ஜேன் ஆஸ்டெனின் டார்சி  பாத்திரத்திற்கு இருக்கும் வரவேற்புகள் நூற்றாண்டு கடந்தும் குறைந்ததாக இல்லை.அவரின் பாத்திரப் படைப்புகள் அதீத கோவக்காரர்களாகவும் பொதுச் சமூகத்தில் உழலாதவர்களாகவும் காட்டி இருப்பார். இருந்தும் தனது காதலுக்காக எவ்வகை தியாகங்களையும் செய்யும் மென்மையானவர்களாக சித்தரித்திருப்பார். நமது “பொன்னியின் செல்வன்” ஆதித்த கரிகாலன் போல். பல தலைகளை கொய்து ரத்தம் தோய்ந்த அதே கைகள் ஒரே ஒரு பெண்ணின் ஸ்பரிசம் பட நடுங்கித் துடிக்கும்.

இந்தக் காதல் சாதாரண மனிதனைக்கூட அசாதாரண செயல்களை செய்யவைத்து  விளையாடும். பலநாள் கடந்த சாலையே புதியதாய் தெரியவைக்கும். இதுவரை இல்லாத மென்மை, தெரியாத அழகும் கூடும். புரியாத கவிதை தெரியாத உணர்வுகள் கைசேரும். ஏனெனில் இங்கு கெட்டவர்களென்று யாருமில்லை, சரியான துணையில்லாமல் பாதைகளைத் தொலைத்தவர்கள் அதிகம். தன்னிடமிருக்கும் நன்மைகளை இனம்கண்டு அரவணைக்க அன்பைத் தேடும் ஜீவன்கள் அதிகம். அவ்வகை அன்பைக் கிடைக்கப்பெற்ற நொடி புது வாழ்க்கையை உணர்ந்த நொடி அதை விவரித்த கவிஞர்கள் ஆயிரமாயிரம் இருந்தும் மனதிற்கு நெருக்கமாகப் பதிவு செய்தவர்களில் முதன்மையானவர்களை பார்ப்போம்.

சமயங்களில் கவனித்திருக்கிறீர்களா? யாருடைய இருத்தலும் பிரிவும் பெரிதாக ஆட்டி வைக்க முடியாத மனமுடைவர் நாமென்ன தம்பட்டம் அடித்துக்கொண்டிருப்போம். என் மூளைக்குள் நுழைந்து என் நேரங்களைச் சுலபமாக எவரெல்லாம் கெடுத்துவிட முடியாதென்ற மமதை கொண்டிருப்போம். சரியாக அதில் கை வைக்கவென ஒரு ஜீவன் வரும்.

“வீசிப்போன புயலில் என் வேர்கள் சாயவில்லை
ஒரு பட்டாம்பூச்சி மோத அது பட்டென சாய்ந்ததடி”

என்ற உவமையில் அதை காதலன் வெளிப்படுத்துவதை எத்தனை கவித்துவம் ? மெல்லினமே  பாடல் (ஷாஜகான்) முழுவதும் இவ்வகை உவமைகள் நிறைந்து வழிந்திருக்கும் .

“வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்”

என்று கவிஞர் வைரமுத்து எழுதியதில் புது மாற்றத்தையும் உள்ளூர புதைந்திருந்த மென் குணங்கள் ஆட்கொண்டதையும் உணருகிறோம் இல்லையா?

வைரத்தின் நாயகனுக்கு பூக்களை பறிக்க நடுக்கமெனில், தாமரையின் நாயகனுக்குத் தான் பார்க்கும் அழகிய பொருளையெல்லாம் தன்னவள் வசம் கொண்டு சேர்க்கும் முனைப்பு.  பெண் கவியல்லவா? தன்னை உயர்வாகக் கொண்டாடும் காதலை விரும்பும் பிற பெண்கள் போலவே எழுதுகிறாள்.

“வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை.
இன்று மட்டும் கொஞ்சம் நின்று ஒரு பூவை கிள்ளிக்கொண்டு
சிரிப்புடன் செல்வேன் என்று நினைத்ததில்லை”

என்பவனை உருவாக்குகிறார் (என்னைக் கொஞ்சம் மாற்றி – காக்க காக்க).  நேற்று வரை அழகுகளை ரசிக்கத் தெரியாத கவிதைகளை கொண்டாடத் தெரியாத அடங்கா மிருகம் தான். இன்று அவள் பேச்சை தட்டாமல்  செய்யும் செல்ல நாய்க்குட்டி அவன். கண்ணில் படும் அழகிய கல்லையும் கனியையும் கூட அவள் காலடி சேர்க்கும் கர்வச்சட்டை உதிர்த்த இளஞ்சிங்கம்.

சரி இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும் ? இத்தனை நாள்  ‘இது தான் நான்!’ என்ற பிம்பம் களைந்து சுயமிழந்து ஒருவளிடமோ ஒருவனிடமோ ஏன் மண்டியிட்டுப் பணிந்து கிடைக்க வேண்டும்? இணைக்காகவா? காதலுக்காகவா ? நிச்சயமாக இல்லை. இவை எல்லாமுமே நமக்காக. நாம் கொண்ட காதலுக்காக. நம் இத்தனை வருடத் தேடல் கிடைக்கும்போது அதை இறுகப்பற்றிப் பத்திரப்படுத்தும் சிரத்தை இந்த சுயமிழத்தல். ஒரு வகையில் காதலே சுயநலத்தின் தேவதை வடிவம் தான். நமக்கு மட்டும் நன்மை செய்யாத சுயநலம். நானே கண்டடைந்த ஒரு உயிர் உருவத்திடம் மட்டுமே என் வேஷங்கள் துறப்பேன் என்ற பவித்திரம் தோய்ந்த திமிர்.

பா.விஜய்க்கு இதை இலகுவாகச் சொல்லி கடந்திருப்பார். மன்மதன்  படத்தில் வரும் ‘மன்மதனே நீ கவிஞன்தான்’   என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல். எதிர்பாலின ஈர்ப்பென்று ஒன்றை இதுவரை தவறென  பழகி இருந்தவளை அதில் மூழ்கடித்த வல்லவனிடம் அடிமை சாசனம் எழுதித்தர எத்தனிக்கிறாள் காதலி. “உன்னை நான் பார்த்தபின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்”  என்று தனது புதிய மாற்றங்களை அடுக்குவாள். கண்ணாடி சொல்வது பொய்தானோ என்று சந்தேகப்பட்டு “உனக்கேதும் தெரிகிறதா?” என்று வினவுவாள்.

கவிஞர் வாலி மொழியில் ஒரு எளிமை இருக்கும். ஆழ்மன உணர்ச்சிகளைக் கூட அழகியல் குறையாமல் வார்த்தைகளில் விவரிக்கும் வல்லவர் அவர். பல நாள் கேட்ட பாடல் புதியதாய் ஒருநாள் வேறொரு அர்த்தம் கொடுக்கும். தேடிப்பிடித்துப் பாருங்கள் அது வாலியின் பாடலாக இருக்கும். கவிதைகளில் உணர்வுகளின் அடுக்குமுக்கால் பொதிந்து எழுதும் மாயாவி . சரணடைதலை இவ்வாறு உயிர்ப்பிக்கிறார்.பெண்ணின் மனதைத் தொட்டு

     “நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..

உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே..”

(கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் – பெண்ணின் மனதைத் தொட்டு)

நேசம் என்பது இன்பம் சார்ந்த நிகழ்வு மட்டுமென்ன சொல்வது எவ்வளவு மேலோட்டமான பார்வையாக இருக்கும்? கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத உயர் பண்புகளையும் நம்முள் கடத்தும் வித்தையல்லவா காதல்?


  • முந்தைய பகுதி
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close